சப்த விடங்கர் ஆலயங்கள் முன்னுரை 00 / 08
முன்னுரை
தமிழக சிவாலயங்களில் மகா முக்கியமானது சப்த விடங்கர் ஆலயங்கள், திருவாரூர் தொடங்கி அதை சுற்றி ஆறு ஆலயங்கள் இந்த வரிசையில் உண்டு
“விடங்க” என்றால் உளியால் செதுக்கபடாதது என பொருள், சப்தம் என்றால் ஏழு. உளியால் செதுக்கபடாத ஏழு சிவலிங்கங்களை கொண்ட ஆலயங்கள் என அதற்கு பெயர்
உளியால் செதுக்கபடாதவை என்றால் மானிடரால் செய்யபடாத , விண்ணில் இருந்து கொடுக்கபட்ட லிங்கங்கள் என அர்த்தம்
ஆம், இந்த ஏழு லிங்கங்களும் விண்ணில் இருந்து வந்தவை அதற்கு ஒரு வரலாறும் உண்டு
முசுகுந்த சக்கரவர்த்தி என்றொரு சோழமன்னன் முன்னொரு காலத்தில் சோழநாட்டை ஆட்சிசெய்து கொண்டிருந்தான், அவனுக்கும் தேவலோகத்துக்கும் நல்ல தொடர்பு இருந்தது
இது கட்டுகதையா, பகுத்தறிவிற்கு ஒவ்வாதது என்பதல்ல விஷயம். அக்காலத்தில் தேவர்களுக்கும் மானுடருக்கும் பெரிய தொடர்பு இருந்தது, அது சேரர் பாண்டியர் என பலர் வரலாற்றில் உண்டு
அப்படி சோழர்களுக்கும் சொர்க்கத்துக்கும் தொடர்பு இருந்தது, அப்போது வலன் எனும் அசுரனால் இந்திரலோகத்துக்கு மேல் படையெடுத்து வந்தான், அவனை ஒழிக்க முசுகுந்த சக்கரவர்த்தி உதவியினை கேட்டான் இந்திரன்
முசுகுந்தனும் சென்று உதவினான், அந்த போரில் இந்திரன் வெற்றிபெற்று மகிழ்ச்சியடைந்து என்ன வரம் என கேட்டான், சிவனடியாரான முசுகுந்தன் இந்திரனின் மிக அபிமானத்துக்கும் சிறப்புக்கும் உரிய லிங்கத்தை கேட்டான்
அது திருமால் தன் நெஞ்சில் வைத்து தியானித்த லிங்கம், சிவனை முழுக்க தியானித்த வரத்துக்காக அவனுக்கு அது கிடைத்திருந்தது
அந்த லிங்கத்தை திருமால் இந்திரனுக்கு கொடுத்திருந்தான், அதை மிக விஷேஷமாக பூஜித்து வந்தான் இந்திரன்
அந்த லிங்கத்தைத்தான் கேட்டான் முசுகுந்தன், அதை கொடுக்க மனமில்லாத இந்திரன் அவனை மறுநாள் வரசொன்னான்
முசுகுந்தனை குழப்ப ஒரு தந்திரம் செய்தான் , மயனை அழைத்து அதனைபோலவே ஆறு லிங்கங்களை செய்ய சொன்னான், அப்படி செய்தால் தன் அபிமான லிங்கத்தை விட்டுவிட்டு வேறு லிங்கத்தை எடுத்து சென்றுவிடுவான் என திட்டமிட்டான் இந்திரன்
அதன்படி மயன் ஆறு லிங்கம் செய்து, இந்த முதல் லிங்கத்தையும் அதோடு வைத்தான்
மறுநாள் வந்த முசுகுந்தனிடம் அந்த லிங்கங்களை காட்டி அவனுக்கு பிடித்தமான லிங்கத்தை எடுத்து கொள்ள சொன்னான் இந்திரன், மனமார சிவனை வேண்டினான் முசுகுந்தன்
சிவபெருமான் முசுகுந்தனின் மனதில் குரலாய் ஒலித்து சரியான லிங்கத்தை காட்டினார், இந்திரன் அதிர்ந்தான்
பின் தன் அபிமான லிங்கத்தையே அவன் கைகாட்டிவிட்ட நிலையில் மீதி ஆறு லிங்கங்களையும் அவனிடமே கொடுத்து அனுப்பினான்
அந்த பிரதான லிங்கத்தை அதாவது திருமால் பூஜித்த லிங்கத்தை திருவாரூரில் வைத்த முசுகுந்தன் மீதி ஆறு லிங்கங்களையும் திருநள்ளாறு, நாகப்ட்டினம், திருகுவளை, திருகாரவாசல், திருவாய்முர், திருமறைக்காடு என ஆறு ஆலயங்களிலும் ஸ்தாபித்தான்
இதுதான் சப்த விடங்கர் ஆலயங்கள், இந்த ஆலயங்களைத்தான் ஒவ்வொன்றாக காணபோகின்றோம், அந்த ஆலயங்கள் எல்லோரும் அறிந்தது என்றாலும் இந்த லிங்கங்களின் வரலாற்றினை சிறப்பினை தெரிந்து கொள்ளல் நன்று
இது வெறும் வரலாறு அல்ல, புராணம் அல்ல, ஏழு லிங்கம் இந்திரலோகத்தில் இருந்து கிடைத்தது அதனால் வணங்கவேண்டும் என வெறும் போதனை அல்ல
இந்த லிங்கங்களின் சிறப்புக்கள் மகத்தானவை, சூட்சுமம் பல நிறைந்தவை
இந்துக்கள் ஏழு வகையான சக்திகள் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதாக அறிந்திருந்தார்கள், அதற்கு சப்த ரிஷி மண்டலம் என வகைபடுத்தினார்கள், அந்த மண்டலங்களை ஆட்சி செய்வோர்களை சப்த ரிஷிகள் என்றார்கள்
சப்தகன்னியர் என் சக்திவடிவங்களை சொன்னார்கள்
இந்துக்களின் பல ஆதார சக்திகள் ஏழு என அமைந்திருபப்தை காணலாம், ஏழு கிரகங்கள் (ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்) ஏழு பிறவிகள் என பல விஷயங்கள் ஏழு எனும் எண்ணை அடிப்படையாக கொண்டது, ஏழு லோகங்கள் உள்பட
அந்த ஏழுதான் மானுட உடலிலும் உண்டு, ஏழு வகை தாதுக்களால் ஆனது இந்த உடல்
“தொக்கு உதிரம் தொடும் மூளை நிணம் என்பு
சுக்கிலம் தாது ஏழு” மற்றும் மூளை
தொக்கு என்றால் தோலால் போர்த்ததேகம், உதிரம் என்றால் குருதி, ஊண் என்றால் தசை, மூளை, நிணம் என்றால் கொழுப்பு, என்பு என்றால் எலும்பு, சுக்கிலம் அல்லது சுரோணிதம் என ஏழு விஷயம் சேர்ந்ததுதான் உடல்
அண்டம் ஏழு மண்டலங்களால் ஆனது, உடல் எனும் பிண்டமும் ஏழு தாதுக்களால் ஆனது எனும் வகையில் இரண்டுக்கும் தொடர்புகள் அதிகள்
சப்த நாடிகள் என்பது மானுட உடலுக்குள் சப்த நாடிகளாக அமைந்திருக்கின்றது, அவைதான் ஏழு சக்கரம் எனவும் சொல்லபடுகின்றது
இந்த ஏழு லிங்கம் என்பது ஏழுவகையான பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து வைத்திருக்கும் விஷயம், பொதுவாக லிங்கம் என்பது சக்தியூடபட்ட மையம், ரிஷிகள் ஞானிகள் ஏன் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பூஜை என செய்துகொண்டே இருந்தார்கள் என்றால் அதற்கு சக்தியூட்டினார்கள்
சித்தர்கள் சமாதிமேல் லிங்கம் வைக்கும் தத்துவம் அதுதான், அந்த சித்தர்களின் சக்திகள் இந்த லிங்கத்தின் மேல் இறங்கியிருக்கின்றது, லிங்கம் அதனை ஈர்த்து வைத்திருக்கின்றது என பொருள்
அப்படி பிரபஞ்சங்களின் ஏழு சக்திகளை ஈர்த்து வைத்திருப்பவை இந்த ஏழு லிங்கங்கள்
ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு இடத்தில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது, அங்கே சிவனின் ஏழுவகை நடனங்களும் உண்டு என்பது தலம் சொல்லும் செய்தி
அஜபா நடனம், குக்குட நடனம், தரங்க நடனம், பிருங்க நடனம்,கமல நடனம், ஹம்ச நடனம், உன்மத்த நடனம் என ஏழு நடனங்கள் உண்டு
நடனம் என்றால் அசைவு என பொருள், ஏழு சக்கரங்களும் அடைந்து துலங்கி இந்த பிரபஞ்சத்தோடு மானுடனை இணைக்கும் நடனமே எழு வகை நடனமாயிற்று
இந்த ஏழு ஆலயங்களின் லிங்கங்களும் ஏழு சக்கரங்களுக்கான மையங்கள், அந்த சக்கரத்தை துலக்கும் சக்திகள் இங்கேதான் குவிந்திருக்கின்றன, இந்த லிங்கங்களை தரிசிக்கும் போது அவற்றை வணங்கும்போது ஒவ்வொரு சக்கரங்களும் துலங்க துவங்குகின்றன
பெரிய சக்திவாய்ந்த வரத்தோடு ஏழு லிங்கங்களும் ஏழு சக்கரங்களை துலங்கவைத்து கொண்டிருக்கின்றன, உரிய சக்கரத்துகுரிய ஆலயங்களை சென்று தரிசிக்கும் போது ஒவ்வொரு சக்கரமும் துலங்கி பிரபஞ்ச சக்தியில் மனம் கரைந்துவிடும் அதுதான் பெரும் ஞான நிலையாகும்
இந்த ஏழு லிங்கங்களையும் அவை அமைந்திருக்கும் ஆலயங்களையும் அந்த லிங்கத்தின் சிறப்புக்களையும் அங்கே சிவன் ஆடும் நடனம் என சொல்லபடும் சக்கரம் துலங்கும் வகையினையும் அதன் தன்மையினையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.