சப்த விடங்கர் ஆலயங்கள் 01 / 08 : திருவாரூர்
சப்தவிடங்கர் ஆலயம் 01 : திருவாரூர் ஸ்ரீ வன்மீகநாதர், புற்றிடைநாதர்
இந்திய சைவதலங்களில் தனி இடம் அல்லது முதல் இடம் பெற்ற ஆலயம் ஆரூர் எனும் திருவாரூர். அது காலத்தால் மிக மிக தொன்மையானது, எப்போது உருவான ஆலயம் என அறியமுடியா அளவு பழமையானது
வன்மீகநாதர் எனும் புற்றிடைநாதர் சன்னதியில் இருந்து அது தொடங்குகின்றது அதன் பின்புதான் தியாகேஸ்வரர் சன்னதி வந்தது, சிவனுக்கு இரட்டை சன்னதி இருக்கும் முதல் ஆலயம் அதுதான்.
அதன் பெருமையும் சிறப்பும் எல்லோரும் அறிந்தது, அது அல்லாமல் சைவ வரலாற்றை இந்துஸ்தானில் சொல்ல முடியாது அதிலும் தமிழக சைவ மரபு என்பதே அந்த ஆலயம் இல்லாமல் இல்லை
அப்படி பண்டைய சோழர்கள் முதல் பின்னாளைய நாயன்மார் வரை கலந்து வந்த ஆலயம் அது. இன்று உலகளவில் பெரிய வழிபாட்டு தலங்களில் அதுவும் ஒன்று அவ்வளவு பெரிய ஆலயம் அது
அங்கே சிவனடியார்கள் வந்தார்கள், ஏன் கையாலயத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் வந்தார்கள், திருமால் வந்தார் இன்னும் எல்லா தேவர்களும் வந்து வணங்கினார்கள்
தேவலோகம் மட்டுமல்ல, ரிஷிகள் மகான்கள் ஞானியர் என யாரும் அங்கு கால்வைக்காமல் சென்றதில்லை, அந்த அளவு தனிபெரும் சக்தி மையமாக கொண்டாடபட்ட தலம் அது
“திருவாரூரில் பிறந்தாலே முக்தி” எனும் அளவு அதன் பிரதான சிறப்பு வகைபடுத்தபட்டது
அங்கு ஒவ்வொரு சன்னதிக்கும் வரலாறு உண்டு, ஒவ்வொரு சிலைக்கும் பின்னால் பெரும் வரலாறு உண்டு, கமலாலய குளத்துக்கே தனி பெருமை உண்டு
அது எத்தனையோ சோதனைகளை சந்தித்து தன்னை மெய்பித்த ஆலயம் அது, பவுத்த சமண காலம் இன்னும் பல அந்நிய படையெடுப்பு காலங்களையும் கடந்து மீண்ட சக்திமிக்க ஆலயம் திருவாரூர் அலயம்
மதுரையில் நடந்த திருவிளையாடல் போல திருவாரூரிலும் ஏகபட்ட லீலைகளை சிவன் நடத்தியதுண்டு, “தியாகேஸ்வர லீலை” அதனை தெளிவாக சொல்கின்றது.
அந்த ஆலாய்த்தின் சிறப்பை சொல்ல தனி புத்த்கமே பல எழுதலாம் எனும் அளவு பெரும் வரலாறுகள் உண்டு, இங்கே சப்தவிடங்கர் பற்றி பார்ப்பதால் அதை மட்டும் காணலாம்
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் இருந்து பெற்ற அந்த முக்கிய விடங்கரை அதாவது இந்திரன் திருமாலிடமிருந்து பெற்ற, திருமால் தன் நெஞ்சில் தாங்கி வழிபட்ட சிவலிங்கத்தை, அந்த மகா சிறப்பும் பிரசித்தியுமான லிங்கத்தை இங்கே நிறுத்தினான்
அந்த லிங்கமே இன்றைய மரகத லிங்கமாக போற்றபடுகின்றது, இதுதான் அங்கிருக்கும் வீதி விடங்கர்
இந்த வீதிவிடங்கர் லிங்கம் ஒவ்வொரு நாளும் தியாகேஸ்வரார் சன்னதிக்கு கொண்டுவந்து வழிபாடுகள் செய்யபட்டு பின் பத்திரபடுத்தபடும் உரியநேரத்தில் அனுதினமும் வழிபாடுகள் உண்டு
இந்த விடங்கர்தான் முதன்மையான விடங்கர், இந்த சிவன் சிலைதான் இந்திரனிடம் இருந்து தரபட்டது
இதற்கு வீதி விடங்கர் என்றொரு பெயரும் உண்டு
இந்த பெயரில் இருந்துதான் இந்த சப்த விடங்க தலத்தின் முக்கியத்துவம் புரியும், ஏன் இது அதி மகத்துவமானது என்பதையும் அறியமுடியும்
விடங்கம் என்றால் உளியால் செய்யபடாதது என பொருள்,அவ்வகையில் கல்லில் உளிபடாமல் உருவாக்கபட்ட லிங்கம் என்றால் மானிடரால் செய்யபடாத தெய்வீக சக்தியால் உருவான லிங்கம் என பொருள்
பொதுவாக லிங்கம் என்பதன் அடிப்படை சக்தி குவியல், இந்த பிரபஞ்சம் என்பதன் வடிவம் எதுவோ, இந்த பெரும் பிரபசத்தில் சக்தி எப்படி குவிந்து கிடக்கின்றதோ அந்த வடிவில் லிங்கத்தை ஸ்தாபித்து மொத்த சக்தியினையும் அதில் குவித்து வைப்பதுதான் லிங்க தத்துவம்
அவ்வகையில் தேவலோக சக்திகளே தங்களை பதித்து கொண்ட இடமே இந்த சப்த லிங்கங்கள், பிரபஞ்ச சக்திகளின் குவியல்தான், ஏழு வகையான சக்திகளின் குவியல் இன்னும் அழுத்தமாக சொன்னால் சப்த ரிஷி மண்டலம் எனும் ஏழு பெரும் சக்திகளின் குவியல்தான் இந்த ஏழு லிங்கங்கள்
அவ்வகையில் முதல் லிங்கம் இந்த வீதிவிடங்கர், இந்த வீதி விடங்கர் எனும் பெயர் ஏன் வந்தது என்பதற்கு இங்கு சிவன் ஆடும் நடனம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்
திருவாரூரில் சப்த விடங்கராக சிவன் நிற்கும்போது அஜபா நடனம் ஆடுகின்றார் என்பது புராண செய்தி
சிவபிரானுக்கு பலவகை நடனங்கள் உண்டு, அது ஐந்து சபையில் ஐந்து வகை நடனம் அது போக தாண்டவ நடனம், ஊழிதாண்டனம், சிதம்பரத்தில் சிவநடனம் , திருவாலங்காட்டி நடனம் என பல வகை உண்டு
அவை எல்லாம் பல வகை குறியீடுகள், பிரபஞ்ச இயக்கத்தை சொல்லும் தத்துவங்கள், நடராஜ கோலம் என்பது இந்த பிரபஞ்சம் சீராக வேகமாக இயங்கும் தத்துவம் அன்றி வேறல்ல
இந்த ஏழு சப்த விடங்க தலங்களிலும் சிவனுக்கு ஏழு நடனங்கள் உண்டு, அதில் ஒன்றுதான் அஜபா அல்லது அசபா நடனம்.
நடனம் என்றால் சீரான அசைவு , ஒழுங்கான முறையான இயக்கம் என பொருள். முறையான அசைவினை நடனம் என்பார்கள்
அப்படி ஏழு வகையான அசைவுகளை இயக்கங்களை இந்த ஏழு தலங்களும் அருள்கின்றன , அதில் முதலாவதும் முக்கியமானதுமான அசபா நடனம் இங்கே நிகழ்கின்றது
அந்த அசபா நடனம் ஆடும் சிவனை , அந்த அருளை தரும் லிங்கத்தை வீதிவிடங்கர் என்பார்கள், வீதி என்றால் வழி, பாதை, சீரான பாதை என பொருள்
எங்கிருந்து எங்கே செல்வதற்கு சீரான பாதையினை இந்த சிவன் விடங்கராக இருந்து அருள்கின்றார் என்பதில்தா வீதிவிடங்கர் எனும் பெயருக்கும், அசபா நடனத்துக்கும் பொருள் விளங்குகின்றது
திருவாரூர் கோவிலின் சிறப்பும் பெருமையும் அதிசூட்சும ஆற்றலும் அங்கேதான் புரிகின்றது
இந்த சப்த விடங்கர் தலங்கள் முழுக்க உடலின் ஏழு சக்கரங்களை துலங்க வைப்பவை, “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு” எனும் ரிஷிகளின் தத்துவபடி ஏழு சப்த மண்டல ஆற்றலும் , ஏழு தாதுக்களால் ஆன உடலில் சக்தி மையங்களை தொடர்பு கொள்ளும்படி இந்த உடல் அமைக்கபட்டிருக்கின்றது
மானிட உடல் வெறும் சதைபிண்டம் அல்ல, இது ஆத்மா வெளியுலகுடன் தொடர்புகொள்ளும் சாதனம் அதன் கண்கள் காட்சிகளை காட்டும், அதன் செவிகள் சப்தங்களை கேட்கும் அதன் நாசி மணத்தினை சொல்லும் அதன் வாய் சொற்களை பேசி உரையாடும்
அது காரியம் செய்ய கைகள், நகர்ந்து செல்ல கால்கள் எனவும் அது ஜீவிக்க உணவுமண்டலம் நரம்பு மண்டலம் அதை கட்டுபடுத்த மூளை , அங்கே நினைவுகளை சேமிக்க வசதி என மிக மிக நுணுக்கமாக படைக்கட்ட உடல் இது
இந்த உடலில் 72 ஆயிரம் நாடிகள் உண்டு ,இந்த நாடிகள் சந்திக்கும் முக்கிய சக்கரங்களே சக்தி மையங்கள்
மானுட உடலின் உறுப்புக்கள் இந்த உலகோடு தொடர்பு கொள்வது போல, லவுகீக தொடர்புகளை கொள்வது போல இந்த சக்தி மையங்களால் பிரபஞ்ச தொடர்பினை பெறமுடியும்
எப்படி வானொலி, இணையம், இன்னும் தொலைகாட்சி போன்றவயெல்லாம் கண்ணுக்கு தெரியா அலைவரிசையினை பெற்று இயங்குகின்றதோ, இதே போன்ற சக்தி அலைகளை மானிட உடலும் பிரபஞ்சத்தில் இருந்து பெறமுடியும்
மானுடனால் உருவாக்கபடும் மின்காந்த அலைகளே வானொலி இணையம் கைபேசி என சரியான இடங்களை அலைவடிவில் தொடர்புகொள்ள முடியும் எனும் போது ஏன் இறைவன் படைப்பில் அது முடியாது
முடியும், மானுடன் உருவாக்கிய கருவிகளெல்லாம் மின்சாரத்தில் இயங்கு நிலைக்கு வருபவை, அப்படி அவை வரும்போது உரிய அலைவரிசையில் உரிய செய்திகளை தொடர்புகளை கிரகித்து ஒளிவடிவம் ஒலிவடிவம் என கொடுக்க முடிகின்றது
இதனையே சக்கரங்கள் துலங்கிய மனிதனால் பிரபஞ்சத்தை தொடர்புகொள்ள முடியும், அந்த அதிர்வுகளை உள்ளே வாங்கி மனதால் புரிந்துகொள்ள முடியும்
மின்சாதனங்கள் மின் சக்தியினால் சக்திபெற்று தகவல் அலைகளை மின்காந்த அலைகளை ஈர்க்கமுடியும் என்றால், மூச்சில் இருந்து சக்திபெறும் சக்கரங்கள் பயிற்சிபெற்ற மூச்சினை சக்தியாக மின் சக்திபோல் பெறும் சக்கரங்களால் பிரபஞ்சத்தை தொடர்பு கொள்ள முடியும்
சப்தம் என்றால் ஏழு என்பதை விட சப்த என்றால் ஓசை என்பதுதான் சரியான பொருள். இந்த பிரபஞ்சம் ஒரு ஒலி அலையில் இயங்குகின்றது, அந்த ஒலிகள் மூலம் இயக்குபவர்களே சப்த ரிஷிகள்
அந்த சப்த சக்தியினை சபத ஆற்றலை இந்த உடலின் சக்கரமையங்கள் பெற்றுதரும், இந்த சக்தி மையங்களை சரியாக துலக்கி தருவதுதான் சப்த விடங்கர் சிவலிங்கங்கள்
இதிலிருந்துதான் இந்த சப்த விடங்கர் தலங்களை காணவேண்டும், அதன் முதல் தலம் திருவாரூர், அந்த திருவாரூர் தலம் எப்படி தலங்களில் பழமையானதும் முதன்மையானதோ அப்படி மூலாதார சக்கரத்துக்கும் அதுதான் ஆற்றல் மையம்
மானிட உடலில் மூலாதார சக்கரமே சக்தி குவிந்திருக்குமிடம், அதில் இருந்துதான் அங்கு சுருண்டிருக்கும் சக்திதான் மேலேறி பாம்புபோல் சுருண்டிருக்கும் சக்திதான் மேல் ஏறி எல்லா சக்கரங்களையும் துலங்க வைத்தல் வேண்டும்
இந்த மூலாதாரத்தில் இருந்து சக்தியினை அடுத்த சக்கரமான சுவாதிஷ்தானத்துக்கு செல்லும் வழியினை , பாதையினை, வீதியினை சரிபடுத்தி தரும் சக்தியின் பெயர் வீதிவிடங்கர்
ஆம், திருவாரூர் தலம் மூலாதார தலம், அதனாலே அதன் ஆரம்பம் புற்றிடை நாதர் வான்மிகி நாதர் எனும் பாம்புபுற்றில் இருந்து தொடங்குகின்றது
மூலாதாரத்தில் சக்தி பாம்புவடிவில் துலங்குகின்றது அதை துலக்கும் சக்தி கொண்ட தலம் என்பதாலே இது புற்றிடைநாதர், வன்மீகி நாதர் ஆலயம் என ஆதியில் வணங்கபட்டது
அதையேதான் சிவன் அங்கே அஜ்பா நடனம் ஆடுகின்றார் என்பதையும் சொல்கின்றது, அஜபா என்றால் என்ன?
அசபை என்பதுதான் அஜபா என மருவிற்று, அசபை என்றால் என்ன என்பதை ஒளவையார் தன் விநாயகர் அகவலில் சொல்கின்றார்
“குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே”
என தெளிவாக சொல்கின்றார், அதையே தன் ஞான குறளிலும் சொல்கின்றார்
“அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு”
அதாவது இக்குறள் “அசபை அறிந்துள்ளே அழல் எழ நோக்கில் இசையாது மண்ணில் பிறப்பு” என பொருள்படும்
அசபை என்பது வாயால் சொல்லாமல் மூச்சால் செய்யபடும் மந்திர பயிற்சி அது வார்த்தை அற்றது, அதை செய்ய செய்ய மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியான சக்தி மேலேழுந்து சிரசை அடையும், அப்பொழுது பெரும் ஞானம் வாய்க்கும்
வாய்திறந்து சொல்லபடும் மந்திரம் சபை, மூச்சுகாற்றிலே வார்த்தையின்றி சொல்லபடும் மந்திரம் அசபை, அது மந்திரம் என்பதை விட மூச்சுபயிற்சி என்பதே சரி
அந்நிலையில் மூச்சு வெளியேறி உள்வாங்கும் ஒரே ஒரு ஒலிமட்டும் கேட்பதால் அது ஒரேழுத்து மந்திரம் எனவும் அழைக்கபடும்
வாசியோகம் என்பது அதுதான்
மூச்சுபயிற்சியால் குண்டலி யோகம் கைகூடும், அப்பொழுது தன்னுள் துலங்கும் ஜோதியினை அக்னி சுவாலையான பரம்பொருளை காணலாம் , அந்நிலை வாய்க்கபட்டால் கர்மவினையெல்லாம் தீரும், அந்நிலையில் மறுபடி பிறக்க அவசியமில்லை என்பது பொருள்
இந்த அசபையினை பட்டினத்தாரும் பாடுகின்றார்
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறுஒருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடித்துக்
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தின்உள்ளே
முட்டாத பூசைஅன்றோ குருநாதன் மொழிந்ததுவே”
அதாவது இடப்படாத கோலம், வாயைத் திறந்து சொல்லாத மந்திரம், வேறெவரும் பறிப்பதற்கு எட்டாமல் எனக்குள்ளே பூத்திருக்கும் பூ, வேறு ஒருவர் வாரி இறைக்காத வண்ணம் எனக்குள்ளே ஊறி நிறைந்திருக்கும் நீர், மஞ்சளோ சந்தனமோ சாணியோ கொண்டு திரட்டி யாரும் கூம்பாகப் பிடித்து வைக்காத இறை, தனியாகப் பொழுது ஒதுக்கி அந்த இறையைக் கருதிப் பார்க்காத நெஞ்சம், முடிவடைந்துவிடாத பூசை என்றல்லவா என் குருநாதர் எனக்குச் சொன்னார் என்கின்றார்
ஆழமாக சொன்னால் கோலமிட்டு, சந்தணமிட்டு, மலர்கள் சூட்டி , தூபமிட்டு, தீபமிட்டு மந்திரம் சொல்லி வழிபடுவதை விட அமைதியாக ஒரு வார்த்தை பேசாமல் வழிபடும் முறையினையும் தன் குருநாதனாகிய காசி விஸ்வநாதன் சொல்கின்றார் என்கின்றார் பட்டினத்தார்
திருமூலர் இதுபற்றி தன் நான்காம் தந்திரத்தில் பல பாடல்களை பாடியுள்ளார்
“போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன் அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.”
இது அந்த பாடல்தொகுப்பின் முக்கிய பாடல், அசபை எனும் ஓர் எழுத்து மந்திரம் பற்றியது
திருமூலரும் பட்டினத்தாரும் சொன்ன தத்துவங்களை இந்த குறளில் தருகின்றார் ஒளவையார்
இன்னும் ஒர் குறள் உண்டு
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்”
“பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறில் ஆசான் பரநந்தி யாம்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும்
பேசா எழுத்து என்றால் அசபை எனும் மந்திரம், அதாவது முழு அமைதி நிலையில் மூச்சு மட்டும் சென்று வரும் ஒரு ஒலி, இதனை அசபை என்பார்கள். ஹோ என ஒரே ஒரு ஓசை மட்டும் வரும், அந்த முழு அமைதி நிலையில் ஓடும் மூச்சினை இப்படி பேசா எழூத்து என்பார்கள்
பேசும் எழுத்து என்பது அ+உ+ம் என கலந்து வரும் ஓம் எனும் பிரணவ மந்திரம்
ஆக ஓம் எனும் பிரண்வ மந்திரத்தை முழு அமைதியின் இடையே அடிக்கடி சொல்லிகொண்டே இருந்தால் குண்டலி சக்தி நம்முள் தீ யாக எழும்பி, நமக்கே குருவாக வழிகாட்டும்
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சிவலிங்கத்தின் முன்னால் படுத்திருக்கும் காளையான நந்தி என்பது ஆன்ம வடிவம் என்பார்கள், அந்த ஆன்மாவே இந்த யோக நிலையில் தான் யார் என்பதை தான் ஜீவாத்மா என்பதை உணர்ந்து தானே பரமாத்மாவினை தேடி செல்லும் , தனக்கு தானே குருவாக அமையும் தெய்வமும் மானிடனும் வேறல்ல என்பதை உணரும் என்பது பாடலின் பொருள்
இதுதான் அசபை, அதாவது மூச்சுகாற்றை சரியாக பயிற்சி செய்து, யோக தத்துவம் படி அதனை சீர்படுத்தினால் மூலாதாரம் சரியாகும், துலங்கும் எனும் சூட்சுமம்
சிவபெருமான் பஞ்ச பூத வடிவினர் அல்லவா? ஐந்து பெரும் பூதங்களில் ஒன்றான காற்று வடிவில் அவர் மானுட உடலில் இப்படி சீரான பயிற்சி மூலம் , அசபை மூலம் குண்டலியினை மூலாதாரத்தில் இருந்து சுவாஷ்டிதானத்துக்கு ஏற்றும் விஷயமே இந்த “அசபா நடனம்”
ஆக மூலாதாரத்தினை துலக்கும் இடம் திருவாரூர், அங்கே அசபை நடனம் ஆடுகின்றார் சிவன் என்பது மூலாதாரத்தை துலக்குகின்றார் என்பதுதான் அங்கு போதிக்கபடும் தத்துவம்
அந்த குண்டலி சக்தியினை மேலே செல்லும் பாதையினை அமைத்து தருபவர் இந்த வீதிவிடங்கர்
திருவாரூர் தலத்தில் மூலாதாரத்தை துலக்கும் சக்தி உண்டு, அது சப்த விடங்கர் வடிவில் உண்டு என்பது
மூலாதாரம் என்பது என்ன என்பதை யோக சாஸ்திரம் சொல்கின்றது
“நாபிக்கு கீழே பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டீசன் குடி இருந்தானே
மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலியுள்லெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே”
என உட்லைல் மூலாதார சக்கரம் இருக்கும் இடத்தை தெளிவாக சொல்கின்றார் திருமூலர்
தொப்புளுக்கு நாள் விரல்கடை உள்ளேயும் அங்கு இருந்து 12 விரல் கடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது.
இந்த மூலாதாரத்தில் உறங்கி சுருண்டு கிடக்கும் சக்தியினை மூச்சுபயிற்சி மூலமும், ஒம் எனும் ஓரெழுத்து மந்திரம் மூலமும் துலக்கி மேலேற்றலாம்.
இந்த சக்கரம் யோகம், தியானம், முச்சுபயிற்சி என துலங்க கூடியது, அப்படி கடும் பயிற்சிகளால் வரகூடிய பலன் இந்த தலத்தில் சிவனருளில் தானாகவே கிடைக்கின்றது
மூலாதாரத்தை துலக்கும் சக்தி இந்த சப்தவிடங்கர் இருக்கும் இடத்தில் பரவி நிற்கின்றது, அதை தொழுதால் அங்கு சென்றுவழிபட்டால் எளிதில் மூலாதாரம் துலங்கும்நிலையினை அடையலாம்
மூலாதார சக்கரம் ஏன் துலங்கவேண்டும், ஆன்மீகம் தாண்டி அது துலங்காவிட்டால் என்னென்ன பாதிப்பு வரும், என்னென்ன சிக்கல்களை மானிட உடலும் மனமும் எதிர்கொள்ளும் என்பதை தெரிந்து கொள்ளல் வேண்டும்
சோர்வு, மலச்சிக்கல், குறைந்த இரத்த அழுத்தம், இரத்த சோகை, அடிமுதுகு வலி, இடது கை வலி, பாதங்களில் வலி இன்னும் குழந்தை பாக்கியமின்மை ஆகியன உடல்சார்ந்த அறிகுறிகளாகும்
இன்னும் மனம்சார்ந்த பாதிப்பும் உண்டு
மூலாதாரம் சரியாக செயல்படாவிட்டால் அமைதியற்ற மனநிலை வரும், தன்னம்பிக்கை வராது, அச்சமும் பதற்றமும் அதிகரிக்கும்
எப்போதும் கவலை, பாதுகாப்பின்மை, தான் யாரென தெரியா நிலை, தனக்கு என்ன கர்மா என புரியாதநிலை, பெரும் ஆசைகள், பதட்டம், மன அழுத்தம், பெரும் கோபம், யாருடனும் பழகமுடியாமை, ஒருவித தனிமை, செயலில் கவனகுறைவு என எல்லாமும் ஏற்படும்
இப்படியான நிலையில் உடலாலும் மனதாலும் ஒருவன் பாதிக்கபட்டால் அவனால் தன் கர்மாவினை உணரமுடியாது, செய்யமுடியாது, அவன் பிறப்பின் நோக்கமே பாழ்பட்டு போகும்
இதனை தங்கள் யோக சக்தியால் சரிசெய்து இந்த பாதிப்பில் இருந்து தப்பி தாங்கள் யார் தங்கள் கர்மா எது என உணர்ந்து தெளிந்து இறைபாதையில் சென்றவர்கள் சித்தர்கள் ஞானியர்
சாமானியர்களுக்கு அப்படி ஒரு தெளிவினை கொடுக்கத்தான் திருவாரூரில் சப்த விடங்கராக மூலாதார சக்கரத்தை துலங்க வைக்க காத்து கொண்டிருக்கின்றார் சிவபெருமான்
அந்த லிங்கம் அவ்வளவு சக்திவாய்ந்தது, நாள்தோறும் அது தியாகேசர் சன்னதியில் வைத்து பூஜிக்கபடுகின்றது அதன் சக்தி அந்த சன்னிதானமெங்கும் கருவறை எங்கும் பரவி நிற்கின்றது
அந்த ஆலயம் சென்று அந்த தியாகேஸர் சன்னதியில் பணிந்தால் மூலாதாரம் துலங்கும் , உங்கள் கர்மா எது என புரியும் உடல்சார்ந்த மனம்சார்ந்த சிகக்லெல்லாம் தீரும்
திருவாரூர் தலம் என்பது சாதாரணம் அல்ல, அது மூலாதாரத்தை துலங்க வைக்கும் அற்புத தலம்
இந்த தலத்தில்தான் அப்பர் சுவாமிகள் வாழ்ந்தார், கையில் ஒரு புல்செதுக்கும் வெட்டியினை வைத்து கொண்டு திருவாரூர் தலத்தை சுத்தபடுத்தி வாழ்ந்தார்
அது வெறும் ஆலய சுத்தம் மட்டுமன்று, வெறுங்காலோடு தோட்டவேலைகளில் ஈடுபடுதல் மூலாதார சக்கரத்தை துலக்கும் என்பது ரிஷிகள் வாக்கு
அதைத்தான் தத்துவரீதியாக தானே திருவாரூரில் செய்துகாட்டி இங்கே மூலாதார சக்கரம் துலங்கும் என குறிப்பால் சொன்னார் அப்பர் பிரான்
திருவாரூர் ஆலயத்துக்கு வந்து வணங்கிய பலர் பெரும் மன்னர்களாக, பெரும் நாயன்மார்களாக, பெரும் அடியார்களாக இன்னும் பல்வேறு துறையில் பெரும் முத்திரை பதித்தவர்களாக இருப்பதை காணமுடியும்
சோழ மன்னர்கள், பெரும் கவிஞர்கள், அழியாத பக்தி கொண்டவர்கள், ஞானியர், ரிஷிகள், நாயன்மார்கள் இன்னும் பற்பல அழியா சிறப்பை பெற்றவர்களெல்லாம் அந்த ஆலயத்தினில் அடிக்கடி வணங்கினார்கள், அதனால் மூலாதார சக்கரம் துலங்கபெற்றார்கள் என்பதே பெரும் சாட்சி
அதற்கு முதல் காரணம் இந்த சப்தவிடங்கர் சிவலிங்கம்
நீங்கள் யாராகவும் இருங்கள், எந்நிலையிலும் இருங்கள், உடலாலும் மனதாலும் மிக மிக மோசமான நிலையில் இருங்கள் அல்லது குழப்பமான் நிலையில் உள்ளவராக இருங்கள், எதுவாக இருந்தாலும் இந்த சப்த விடங்கரின் முதல் தலமான திருவாரூருக்கு வந்து தியேகசர் சன்னதியில் வணங்கினால் உங்கள் மூலாதார சக்கரம் துலங்கும்
பிரபஞ்ச அதிர்வுகளை அன்கே ஈர்த்து கொட்டும் சப்த விடங்கர் சிவலிங்கத்தின் சக்தியால் அங்கே குவிந்திருக்கும் பெரும் சக்தி உங்களை தொடும்
அந்த தியேகசர் சன்னதியில் விழுந்து வணங்கினால் உங்கள் உடல் தரையில் தண்டனிட்டு வணங்கினால் மூலாதாரத்தில் அந்த பகவானின் கருணை விழும், அங்கு சூழ்ந்திருக்கும் பெரும் சக்தி, சப்த விடங்கரால் ஈர்த்து குவிக்கபட்ட ச்கதி உங்கள் மூலாதார சக்கரத்தையும் தொடும்
அந்த நொடிமுதல் உங்கள் வாழ்வு மாறும்
அந்த ஆலயம் உங்கள் கர்மாவினை உணரவைக்கும் , பிறப்பின் நோக்கத்தை அறியவைக்கும், செய்யும் காரியமெல்லாம் துலங்க வைக்கும், இன்னும் மனதளவில் நல்ல தெளிவும் செயலில் சுத்தமும் உடலில் ஆரோக்கியமும் மேம்படுத்தி கொடுக்கும்
அக்காலத்தில் எப்படி மக்கள் அவ்வளவு ஞானமாக வாழ்ந்தார்கள், கொடிய நோயற்று வாழ்ந்தார்கள், பெரும் பெரும் சாதனைகளை எளிதாக செய்து வாழ்ந்தார்கள் என்றால் இப்படித்தான் ஆலயங்களில் தெளிவடைந்தார்கள்
ஆலயங்கள் எக்காலமும் சக்திமையங்கள், அந்த ஆலயங்கள் அன்னியபடையெடுப்பிலும் ஆட்சியிலும் பராமரிப்பின்றி போனதே இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கு பெரும் காரணம்
மறுபடி அதன் சிறப்புக்களை அறிந்து சரியான முறையான நம்பிக்கையுடன் அங்கே முன்னோர்கள் காட்டிய வழியில் பெறவேண்டிய பிரபஞ்ச சக்திகளை பெற்றுகொண்டால் வாழ்வு செழிக்கும், உடலும் நலமும் பரிபூரணமாகும்
அந்த வரத்தைத்தான் இந்த திருவாரூர் ஆலய தியாகேஸ்வரர் சன்னதி தருகின்றது, அங்கு அனுதினமும் சப்த விடங்கருக்கு ஆராதனை உண்டு, சிறிய பெட்டியில் இருக்கும் அந்த விடங்கருக்கு காலை மதியம் மாலை என மூன்றுநேரம் பூஜை உண்டு
அதில் பங்கேற்பது சிறப்பு, இல்லையென்றாலும் அந்த சன்னதி எப்போதும் பெரும் சக்தியோடு நிரம்பியிருக்கும் அது உங்கள் மூலாதார சக்கரத்தை பிரபஞ்சத்தோடு இணைத்து துலக்கும் அதன்பின் நீங்கள் செய்யும் காரியம் யாவும் வாய்க்கும் இது சத்தியம்
அஜபா நடனம் என்பதும் வீதிவிடங்கர் என்பதும் இதுதான், மூலாதாரத்தை துலக்கும் பெயர்கள்தான். அங்கே குடியிருக்கும் மகா சக்தி அந்த யோக சிகிச்சையினை மானுடர்க்கு வழங்கி கொண்டே இருக்கின்றது அதை பெற்று ஒவ்வொருவரும் பலனடையட்டும், அறிவும் தெளிவும் கொண்ட சமூகம் உருவாகட்டும்
(தொடரும்..)