சப்த விடங்கர் ஆலயங்கள் : 02 / 08 திருநள்ளாறு
ஸ்ரீ நாகவிடங்கர்
திருநள்ளாறு நாகவிடங்கர் நள தமயந்தி
சைவ தலங்களில் மிக முக்கியமான தலமான இந்த திருநள்ளாறு தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் பெயருடன் சிவன் வீற்றிருக்கின்றார், அவரோடு வீற்றிருக்கும் அன்னைக்கு பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் எனப் பல பெயர்கள் உண்டு.
இந்த ஆலயம் காலப்போக்கில் திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கானது என மாறிப்போனதெல்லாம் மிக தவறான நம்பிக்கை அல்லது பிரச்சாரம். அது மிக மிக சக்திவாய்ந்த சிவதலம். சிவனும் அன்னையும் அருள் வழங்கும் பெரும் சக்திமிக்க தலம்.
சனீஸ்வரனின் பார்வையால் ஏற்படும் தாக்கத்தை அங்கே சிவபெருமானேதான் குறைக்கின்றார் தடுக்கின்றார். ஆக, அங்கே முழு சக்தியாய் வீற்றிருப்பவர் சிவபெருமானன்றி சனியல்ல.
சனியால் பெரும் துன்பமுறுவோர் அங்கிருக்கும் சிவனை தரிசித்தால் சனி பார்வையில் இருந்து விடுபடுவார்கள். அங்கே பக்தர்களை செல்ல வைக்கும் காரியக்காரன் சனி என்பது மாறி அத்தலமே சனிக்கானது என காலப்போக்கில் மாற்றிவிட்டார்கள், அது திருத்தப்பட வேண்டும்.
இங்கே தர்ப்பாரேண்ஸ்வரராக எழுந்தருளியிருக்கின்றார் சிவன். தர்ப்பை புல் மிகுந்த இந்த இடத்தில் சுயம்புவாய் அவரு உருவாகி நின்றார்.
ஆரண்யம் என்றால் காடு.
தர்ப்பை நிறைந்த காட்டின் ஈஸ்வரன் என்பது தர்ப்பாரண்யேஸ்வரர் என பெயராயிற்று, இது எந்த அளவு சனியின் தாக்கதை போக்கும் என்பதற்கே நளன் வரலாறு இங்கு நடந்தேறியது.
சனி என்பவர் கர்மத்தை செய்யவைக்கும் கிரகஹம், கர்மத்தால் ஒருவன் என்னென்ன பாடுகளை படவேண்டுமோ அதை தயவு தாட்சண்யனின்றி செய்யவைப்பார், உணர்வுகள் மூலம் அதை செய்யவைப்பார்.
அப்படி நளனின் வாழ்வு அவன் உணர்வுகளால் நடத்தப்பட்டது, தமயந்தி மேல் காதல் , சூதாட்டம் என எல்லாமே அவன் உணர்ச்சி வழி கர்மா செயலாற்றியது.
உணர்வு வழியாக அவன் கர்மாவினை செய்யவைத்து அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார் சனி, அந்த நளன் தன் தாங்கமுடியா கொடுஞ்சூழலில் மிகப் பெரிய அவலத்தினில் தன் கர்மவினையினை சுமந்தபடி இந்த திருநள்ளாற்று தர்ப்பாரண்யேஸ்வரரை சரணடைந்தான்.
அங்கே அவனுக்கு விடுதலை கிடைத்தது, அதை சிவன் வழங்கினாரே தவிர சனி அல்ல. அங்கே அவன் கர்மா தீர்ந்து அவன் இழந்ததையெல்லாம் பெற்றான்.
இதுதான் இந்த ஆலயத்தின் தாத்பர்யம், கர்ம வினைகள் உணர்ச்சி வழி விளையாடி அதனால் பெறும் அவல வாழ்வினை தீர்த்து இழந்ததையெல்லாம் தரும் ஆலயத்து சிவன் இந்த தர்ப்பாரண்யேஸ்வரர்.
இங்கிருக்கும் அன்னையும் மகா சக்திவாய்ந்தவள், எந்த அளவு என்றால் அனல் வாதம் நடக்கும் போது திருஞானசம்பந்தர் அவளைத்தான் அழைத்துப் பாடினார். தனக்கு பாலூட்டி ஞானம் கொடுத்து புண்ணிய கர்மத்தை கொடுத்த அன்னை தன்னை காக்க இந்த ஆலயத்தின் அன்னையினைத்தான் அழைத்தார்.
அதுதான் தேவார பாடலாகவும் இடம்பெற்றது, தனக்கு பாலூட்டியவள் இந்த ஆலயத்தில்தான் பூண்முலையாளாக அமர்ந்திருக்கின்றாள் என்பதை அறிந்து அவளை வேண்டிப் பாடினார்.
பின் அதே அழைப்புடன் திருநள்ளாற்றுக்கு வரும்போதும் பாடினார்.
“போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே”
ஆம். அவர் சிவனடியார் என்றாலும் அங்கே அன்னையின் சக்தி உணர்ந்து அவளை முன்னிலைப்படுத்தியே தன் அன்னையினைப் பாடினார்.
அப்படி சிவனும் அன்னையும் பெரும் அருள் வழங்கும் இந்த ஆலயத்தில்தான் இரண்டாம் சப்தவிடங்க லிங்கம் வைக்கப்பட்டிருக்கின்றது.
சிவன் உத்தரவில் முசுகுந்த சக்கரவர்த்தி இங்கேதான் இரண்டாம் லிங்கத்தை வைத்து பூஜை செய்யத் தொடங்கினான், அதிலிருந்து இது சப்த விடங்கர் தலத்தின் இரண்டாம் முக்கிய தலமாயிற்று.
இங்கே சிவன் உன்மத்த நடனமாடுகின்றார் என்பது ஐதீகம், இங்குள்ள விடங்கருக்கு நாக விடங்கர் எனப் பெயர்.
அதென்ன உன்மத்த நடனம்? அதை அறிந்துகொள்ள ஸ்வாதிஷ்டானம் எனும் இரண்டாம் சக்கரத்தை பற்றி அறிந்துகொள்ளல் வேண்டும்.
ஆம். இது ஸ்வாதிஷ்டான சக்கரத்தை துலங்க வைக்கும் தலம். அந்த சக்கரம் பற்றி ரிஷிகளும், மகா ஞானியரும் சொன்னதை கவனித்தால் அதன் முக்கியத்துவமும் இந்த நாகவிடங்கரின் தத்துவமும் புரியும்.
வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பது.
அதாவது, ‘ஸ்வ அல்லது சுவ’ என்றால் “ஒருவரின் சொந்த” என்றும் “ஆதிஷ்டான” என்றால் “வாழ்விடம்” அல்லது “வீடு” எனப் பொருள்.
ஒருவனின் வாழ்வை நிர்ணயிக்கும் சக்கரம் என இதற்குப் பெயர்.
மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது இந்த சுவாதிஷ்டானம்.
இதனை குறித்து தெளிவாக பாடுகின்றார் போகர்.
“துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால் துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல் ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால் பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே”
இதனை நான்கு கோணம் கொண்ட ஆறு இதழ் சக்கரம் என யோக சாஸ்திரம் சொல்கின்றது, இது பொன்னிறமானது என்பதும் ரிஷிகள் சொன்னது.
இந்த சக்கரம் ஒருவனின் வாழ்வை நிர்ணயிப்பது என்றார்கள் ஞானியர், எப்படி நிர்ணயிக்கும் என்பதை சூட்சும தத்துவங்களோடும் உடல் அமைப்போடும் காணலாம்.
இது இரண்டுக்கும் பொருந்திவருவதுதான் இந்துக்களின் ஞானம் எவ்வளவு பெரியது என்பதை சொல்லி வியக்க வைக்கும் விஷயம்.
இந்த சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது, இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம் அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.
இந்த சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்த சக்கரம் சரியாக துலங்கவில்லை என்றால் சிறுநீரக சிக்கல் முதல் எல்லா சிக்கலும் உருவாகும்.
குழந்தையின்மை, பெண்களுக்கு மாதாந்திர சிக்கல் எனப் பல விஷயங்களின் காரணம் இந்த சக்கரத்தின் தன்மைதான்.
இரத்த சோகை, மலச்சிக்கல், இடுப்புப் பிரச்சினைகள், மூட்டுப் பிரச்சினைகள், மண்ணீரல் கோளாறுகள்
பித்தப்பை பிரச்சினைகள் எல்லாம் இங்கிருந்தான் உருவாகும்.
இந்த சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும், அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.
இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும், இந்த சக்கரத்தின் வீச்சு அப்படியானது.
இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்பு உடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.
எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.
பயம், அச்ச உணர்வு, தன்னபிக்கையின்மை, பொறாமை, மூர்க்கதனம், கவனமின்மை, மன அழுத்தம் , சமூக உறவின்மை, மிகுந்த உணர்ச்சிவசம் இதெல்லாம் இந்த சக்கரத்தின் குறைந்த செயல்பாட்டால் வருபவை.
இங்கேதான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும், உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.
காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும், அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.
சுகத்தை தேடி செல்லும் வாழ்வு மானுடனுடையது அதற்கு நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களை சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.
இந்த சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழு திருப்தி கிடைக்கும், நிறைவு கிடைக்கும்.
மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்த சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்து செல்லும்.
இந்த சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு, அந்த சுகங்களை நோக்கி சக்தியினை கீழே இறக்கினால் அவன் போகி.
இதுதான் இன்ப போகம். இந்த சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.
இந்த சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.
ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்த சக்கர சக்தியினை பொறுத்தே.
ஆம், இந்த சக்கரத்தின் உணர்ச்சிதான் ஒருவனை நடத்தும், அந்த உணர்ச்சி கர்ம வினைப்படி வரும்.
இந்த ஆலயம் அந்த கர்ம வினையினை களையும் ஆலயம் எனக் கண்டோம், நளன் கதை அதனை சனியோடு சேர்த்து தெளிவாக சொல்கின்றது.
நளன் அவன் கர்மவினை காரணமாக உணர்ச்சிகளில் சிக்கிக் கிடந்தான், அவன் எல்லா வகை உணர்வுக்கும் ஆட்பட்டு கிடந்தான்.
அவன் சிறந்த சமையல்காரன், நளபாகம் சமைப்பான் என்பது ஒருவரியில் கடக்கும் விஷயம் அல்ல, அவன் இந்த சக்கரத்தின் சுக உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு கிடந்தான்.
ஆம். வயிற்றின் சுகத்துக்கு அடிமையாகியிருந்தான்.
அப்படியே தமயந்தியினை கண்டதும் உணர்ச்சியால் உந்தப்பட்டு அந்த சுகத்துக்கும் அடிமையானான்.
இன்னும் சூதாட்டம் எனும் உணர்வும் அவனிடம் இரூந்தது, இந்த உணர்வுகள் வழிதான் சனி அவனை பிடித்து படாதபாடுபடுத்தினார்.
அவன் கர்மவினை அப்படி. இந்த சக்கரம் வழியே புகுந்து அவனை ஆட்டுவித்து சனியிடம் அவன் பிடிபட வழி செய்தது, சனி எனும் எந்திரம் அவனை சரியாகப் பிழிந்தது.
அவன் ஆறுதல் தேடி இந்த தலம் வந்தபோது அவனின் கர்மவினை கழிந்தது, அவன் உணர்ச்சிகள் சீர்பட்டன, அவன் தெளிந்தான். அவன் கர்மவினை கழியவும் சனி அகன்றது.
அதாவது அவனின் சுவாதிஷ்டாதான சக்கரம் அவனின் “வாழ்விட” சக்கரம் சரியானதும் அவன் இழந்ததையெல்லாம் பெற்றான்.
நளன் கதை புராணத்தில் சொல்லப்பட்டதன் அர்த்தம் சனி பெருமைக்கு அல்ல, சனி பிடிக்காமல் இருக்க அல்ல. மாறாக உணர்ச்சிகளை கொடுக்கும் சுவாதிஷ்டான சக்கரம் மூலம் கர்மவினை என்னென்ன பாடுபடுத்தும் அதிலிருந்து மீள சிவ வழிபாடு எவ்வளவு அவசியம் என்பதை சொல்லவே அவன் கதையினை சொல்லி வைத்தார்கள்.
கர்மம் கழிக்கும் சக்தி சிவலிங்கத்துக்கே உண்டு என ராமனும், கண்ணனும், அர்ஜூனனும் செய்த சிவவழிபாட்டையும் சொல்லிவைத்தார்கள்.
கர்மவினை இல்லாமல் பூமியில் பிறப்பில்லை, கர்மவினை தீராமல் பிறவியில் இருந்தும் விடுதலை இல்லை.
அதைத்தான் வலியுறுத்தி அது தீர இந்த வழிபாடுகள் அவசியம் என்றார்கள். அதற்கு நளன் கதையினை பிரதானமாக வைத்து திருநள்ளாற்று தர்பராண்யேஸ்வரரை வணங்கச் சொன்னார்கள்.
சரி ஏன் தர்ப்பராண்யேஸ்வரரை வணங்க வேண்டும்?
அதுதான் தர்ப்பையின் சக்தி, இந்த ஆலயம் கர்மம் கழிக்கும் ஆலயம் என்பதால் தர்ப்பையின் மகத்துவத்தையும் சொல்கின்றது.
தர்ப்பை மகா புனிதமானது, அது இல்லாமல் இந்துக்களின் தர்ப்பணமில்லை, வழிபாடு இல்லை, யாகமில்லை, திதி என எதுவுமில்லை.
நல்ல கர்மாவோ, கெட்ட கர்மாவோ எது என்றாலும் தர்ப்பையோடுதான் கழிப்பது இந்துக்கள் வழமை, தர்ப்பை இன்றி எதுவுமில்லை.
யஜூர் வேதம் சொல்கின்றது
“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி, தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம”
அதாவது “இந்தப் புல்லானது தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறது மற்றும் இயற்கையால் வளர்கிறது. அறுப்பதற்கு கத்தியை வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைமற்றவனாகவே இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ இன்னும் அதிகமாக தளிர்களாய் தளிர்த்து இனிது தழைப்பாயாக”.
ஆம் அதன் புனிதமும் ஆற்றலும் அப்படியானது.
தர்ப்பைக்குக்கு குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.
இந்த தர்ப்பை மிக மிக சக்திவாய்ந்தது என்பதை காட்டத்தான் மகாபாரத யுத்தத்தில் அஸ்வத்தாமன் அதனை பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என வெகு சுருக்கமாக எளிதாக சொல்லப்பட்டது.
அவ்வளவுக்கு இது சக்தி கொடுப்பது என்பது அதன் தாத்பர்யம்.
இந்த தர்ப்பையின் பலன்கள் எராளம், சக்திகள் அதி சூட்சுமமானவை, நல்ல சக்திகளை தூண்டி ஈர்த்து, கெட்ட சக்திகளை வராமல் தடுப்பது.
மருத்துவரீதியாக தர்ப்பை அதனை செய்யும், பிரபஞ்ச ரீதியாகவும் செய்யும்.
இதனாலே தர்ப்பை பாயினில் முனிவர்கள் தவமிருப்பார்கள், தர்ப்பை அவ்வளவு சக்தியினை ஈர்த்துக் கொடுக்கும்.
கிரகண காலங்களில் நீரிலும், உணவின் மேலும் தர்ப்பை இடுவதன் அர்த்தம் அது கெட்ட கதிர்களை, ஆபத்தான கதிர்களை தடுக்கும் என்பது.
எவ்வளவோ சிறப்புகள் தர்ப்பைக்கு உண்டு என்றாலும் இங்கு சுருக்கமாக காணவேண்டியது அது கர்மாவினை கழிக்கும். இன்னொன்று, பிரபஞ்சத்தின் நல்ல சகதிகளை ஈர்த்து தரும்.
இந்த் அடிப்டையில்தான் திருநள்ளாற்றில் தர்ப்பைபுல் சூழ அமர்ந்திருக்கின்றார் சிவன், அங்கே கர்மம் கழியும் நல்ல சக்திகள் ஈர்த்து தரப்படும், சுருக்கமாக அந்த சுவாதிஷ்டாதான சக்கரம் சரியாகும், உணர்ச்சிகள் தெளிவடைந்து மேல் நோக்கி நகரும்.
இங்கே சிவன் உன்மத்த நடனம் ஆடுகின்றார் என்பது வழமை, இந்த சப்த விடங்கரில் அவர் நாகவிடங்கமாக நிற்கின்றார் என்பதும் உண்டு.
நாக விடங்கம் என்றால் நாகம் போல் ஆடுவது , அதாவது நாகம் மகுடிக்கு கட்டுப்பட்டு நிற்கும் காட்சி.
மகுடி ஊதும்போது மெல்லிய அசைவுடன் நாகம் நிற்பதை அவதானிக்கலாம். அது ஓடாது, நகராது மாறாக தூக்கிய தலையுடன் அப்படியே நிற்கும்.
அந்த நிலைதான் அப்படி கட்டுப்பட்ட நிலையினைத்தான் இங்கே நாகவிடங்கர் என்கின்றார்கள். அது எப்படியான கட்டுப்படுத்தப்பட்ட நிலை என்றால் ஒருவித மோன நிலை, மயங்கிய நிலை, சொக்கிப் போன நிலை, ஏகாந்த நிலை.
இந்த நாக விடங்கர் ஆடும் ஆட்டத்தை உன்மத்த நிலை என்கின்றது புராணம்.
நாகம் கட்டுப்பட்டு நிற்பது போல் குண்டலினி சக்தி கட்டுப்பட்டு எழுந்து நிற்கும் நிலைதான் நாக விடங்கர் நிலை, குண்டலினி விழித்து கட்டுப்பட்டு நிற்கும் நிலை.
உன்மத்தம் என்றால் கட்டிப்போடுவது, அப்படியே ஒரே நிலையில் நிறுத்துவது, சொல், செயல், சிந்தை எல்லாம் மறந்து ஒரே புள்ளியில் லயிக்க வைப்பது, அதுதான் உன்மத்த நிலை.
இந்த உன்மத்த நிலையினை கொடுக்க அந்த உணர்வுகளை ஒடுக்கும் அல்லது ஒரே சிந்தையாக்கும் சுவாதிஷ்டாதான சக்கரத்தை துலக்குதல் அவசியம். அச்சக்கரம் துலங்கினால் ஒருவித மோன நிலை கிட்டும்.
இந்த நிலையினை விளக்க மோகினி அவதாரத்தை சொல்லலாம், ஒருவித மயக்க நிலைக்கு ஏகாந்த நிலைக்கு ஒருவன் மனதை உணர்வை கொண்டு செல்லும் அவதாரம் அது.
அந்த மோகினி கொடுக்கும் மயக்கம் அல்லது அப்படியே சிந்தையினை கட்டிப்போட்டு எல்லாம் மறந்து கிடக்கும் ஒரு நிலையினை உன்மத்தம் என்பார்கள்.
இங்கே சிவன் உன்மத்த நடனம் ஆடுகின்றார் என்பது, அந்த குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்து சுவாதிஷ்டாதானத்தை தொடும்போது அந்த உணர்ச்சிகள் எல்லாமே ஒருமுகமாகும், ஒருவித ஏகாந்த நிலை ஒரு பரவச மயக்க நிலை கிடைக்கும்.
அந்நிலையில் சிந்தை குழம்பாது, தெளியாது, கீழானவைகளை தேடாது மென்மேலும் மென்மேலும் மேல்நோக்கி சக்தியினை எழுப்பச் சொல்லும்.
இந்த மன ஒருமைப்பட்ட நிலையினை, மனம் கட்டுப்பட்ட , மொத்த உணர்வும் கட்டுப்பட்ட நிலையினை சிவன் அருள்வார் என்பதுதான் உன்மத்த நிலை.
உன்மத்த செடி என்பதுதான் ஊமத்தை எனவும் மருவிவிட்டது, ஊமத்தை செடியின் காயில் இருந்து எடுக்கப்படும் மருந்து ஒரு மயக்க நிலையினை கொடுக்கும், வைத்தியங்களில் பயன்படுத்துவார்கள்.
நோயாளிகளின் வலி குறையவும், உணர்ச்சிகள் ஒடுங்கி கிடக்கவும் அந்த மருந்து பயன்படும்.
சிவன் அப்படியான வரத்தை வழங்குவார், உணர்ச்சிகளை ஒடுக்கி ஒருமுகப்பட்ட சிந்தனையினை அருள்வார் என்பதாலே சிவனுக்கு உன்மத்த பூக்கள் எனும் ஊமத்தை பூக்களை சூடி வழிபடுவது மரபாயிற்று.
பரமேஸ்வரனுக்கு உன்மத்தசேகரன் எனும் பெயரும் உண்டு.
ஊமத்த பூ கொண்டு சிவனை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும், பித்தம் தெளியும் என்பது மரபு. அதாவது உணர்ச்சக் குழப்பங்களை அவர் தீர்ப்பார் என்பது தாத்பர்யம்.
இந்த உன்மத்த அருளை அவர் கொடுப்பதுதான் உன்மத்த நடனம். அதாவது உணர்ச்சிகள் வழி குழம்பி கிடப்பவனை, பல உணர்ச்சிவழி குழம்பி செயலற்று அல்லது ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி இதர செயலை எல்லாம் செய்யாமல் குழம்பி நிற்பவனை அதிலிருந்து விடுவிப்பது.
இந்த சுவாதிஷ்டான சக்கரம் துலங்கினால் உணர்ச்சிகள் ஒடுங்கும், ஒருமித்த மனம் கொண்ட , சிந்தனை தெளிவு மிக்க மேலான சிந்தனைகள் வரும்.
அந்த வரத்தை கொடுப்பதுதான் சப்த விடங்கர் வழிபாடு.
இயற்கையிலே தர்ப்பை சூழ் புனிதமான இடமான அந்த ஆலயத்தில் இந்த சப்தவிடங்கர் தலம் மேலும் சக்தியினை கூட்டுகின்றது.
தர்ப்பைகள் நடுவில் அந்த சப்தவிடங்க லிங்கம் வைக்கப்படும்போது பெரும் அளவிலான நல்ல பிரபஞ்ச கக்திகள் ஈர்த்து குவிக்கப்படுகின்றன.
அந்த இடத்தில் ஒருவன் நிற்கும் போது அவன் கர்மா கழிகின்றது, தர்ப்பை அதை செய்கின்றது, கர்மா கழிந்துவிட்ட அல்லது அழிந்துவிட்ட நிலையில் சனியின் தாக்கம் நின்றுபோகின்றது.
அந்த பக்தனின் சுவாதிஷ்டாதான சக்கரம் உன்மத்த நாதன் எனும் சிவனால் தூண்டப்படும் போது உணர்ச்சிகள் கடந்த நிலையினை உணர்ச்சிக் குழப்பம் இல்லா நிலையினை அவன் அடைவான்.
உணர்ச்சியில் இருந்து விடுபட்ட மனம் மேல் நோக்கி சிந்திக்கும் அந்நேரம் அவன் குண்டலினியும் மேல் நோக்கி எழும், எல்லாம் நலமாகும்.
இவ்வளவு நலன்களை தரும் இடம் அந்த சப்தவிடங்கர் இருக்கும் திருநள்ளாற்று தலம், அங்கேதான் சப்த விடங்கர் இருந்து சக்தியினை இன்னும் குவித்து ஒருவனுக்கு சுவாதிஷ்டாதானத்தை துலங்கச் செய்கின்றது.
ஓம், நமசிவாய என்பது வெறும் பெயர் அல்ல, அது ஆறு சக்கரங்களையும் துலக்கும் மந்திரம்.
‘ஓம்’ என்பது மூலாதாரத்துக்குரியது.
‘ ந ம சி வா ய’ என்பது ஆறு சகக்ரங்களுக்குமான மந்திரம்
ந…ம…சி…வா…ய எனும்போது உடலின் ஒவ்வொரு பாகமும் மேல் நோக்கி அதிர்வுகளை கடத்துவதை அறியலாம்.
அதனால் ந என்பது இங்கே மூலாதாரத்தில் இருந்து சுவாதிஷ்டானத்துக்கு சக்தியினை எழுப்பும் பீஜ மந்திரமாகின்றது.
“ந”ளன் என அவன் கதை சொல்லப்பட்ட தத்துவம் அதுதான்.
திருநள்ளாற்று கோவிலின் தாத்பரியத்தை, அதன் சூட்சும சக்தியினை நளன்கதையினை கொண்டு விளக்கினார்கள் முன்னோர்கள், அது வெறும் சனி பகவான் கதை அல்ல.
நளன் உணர்ச்சிகளுக்கு அடிமையானவன். ஆனால், நல்லவன். எனினும், அவன் உணர்ச்சி அவனை சுவாதிஷ்டானம் துலங்கா நிலையில் அந்த சக்கரம் கீழ்நிலைக்கு இழுத்து அடிமையாக்கியது.
அவன் உணவு, மாது என ஒருமாதிரியான சுகங்களில் அடிமைப்பட்டான் அது சூதாட்டம் வரை இழுத்தது.
அங்கே அந்த உணர்வுவழி சனி வந்து பிடித்து தன் கடமையினை செய்யும்படி அவனை பிழிந்தது, ஆடிமாத காற்றில் பஞ்சாய் எரியும் நெருப்பில் புழுவாய் துடித்தவன் திருநள்ளாற்றுக்கு வந்து வணங்கும் போது அவனின் உணர்ச்சிகள் சரியாயின.
அவன் கர்மம் கழிந்தது, சனி அகன்றார்.
உணரச்சி குழப்பம் தீர்ந்து அவன் ஏகாந்த நிலைக்கு ஒரே மனநிலைக்கு செல்லும்படி சிந்தை தெளிந்தது அவன் கீழான நிலையில் இருந்து மேலான நிலை அடைந்து இழந்ததை எல்லாம் மீட்டான்.
நாவுக்கு சுவையான உணவு, கண்ணுக்கு அழகான பெண் , செல்வங்களை குவிக்க சூதாட்டம் என்றிருந்தவன் உணர்ச்சி மூலம் சனி தன் கடமையினை அவன் கர்மப்படி செய்தது.
தர்ப்பைசூழ் திருநள்ளாற்றில் அவன் கர்மம் கழித்து தன் சுவாதிஷ்டாதான சக்கரம் தூண்டப்பட்டு பெருவாழ்வினை மீளப்பெற்றான்.
அந்த ஆலயம் எதெல்லாம் கர்மவினையால் நீங்கள் இழந்தீர்களோ அதையெல்லாம் திரும்ப தரும் ஆலயம்.
எதெல்லாம் உணர்ச்சி தடுமாற்றத்தால், உணர்ச்சி குழப்பத்தால் விதிவசத்தால் இழந்தீர்களோ அதையெல்லாம் மீண்டும் தரும் ஆலயம்.
அந்த ஆலயத்துக்கு சக்தியூட்டசப்த விடங்கர் அங்கே உண்டு. அங்கே பிரபஞ்ச சக்தி குவிந்து கிடக்கின்றது.
திருநள்ளாறு என்பது சனிக்குரியது அல்ல. அது முழுக்க சிவனுக்குரியது, அங்கே சென்று வணங்கினால் சப்த விடங்கரின் அருளில் எல்லா ஞானமும் அருளும் பலமும் கைக்கூடும்.
நீர்சிக்கல் கொண்ட நோயெல்லாம் குறிப்பாக வயிற்றுபகுதியின் நோயெல்லாம் காணாமல் போகும், நளன் கரிய நிறமுற்றான் என்பதற்கு அவனின் வயிற்றுப்பாகத்தை விஷம் தாக்கியதும் ஒரு காரணம், அந்த விஷம் அங்கேதான் முறிந்து அவன் பழைய நிலை அடைந்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
அங்கு சென்று வணங்கினால் உடல் நோய் அகலும் , மனநோய் அகலும், கர்மம் அழியும், கர்மம் அழிந்தபின் சனிதாக்கம் நீங்கும், இன்னும் சுவாதிஷ்டாதான சக்கரம் துலங்கி உணர்ச்சிகள் மேல் நோக்கி அழைத்துச் செல்லும், பெரும் பெரும் மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும். இது சத்தியம்.