சப்த விடங்கர் ஆலயங்கள் 06 / 08 : திருவாய்மூர்
ஸ்ரீ பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர் நாதர்
சப்த விடங்கர் தலங்களில் ஆறாம் தலம் திருவாய்மூர் தலம். இங்கே சிவன் வாய்மூர் நாதர், அன்னையின் பெயர் பாலினும் நன்மொழியாள்
இத்தலம் திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் இருகின்றது, தேவாரம் பாடபட்ட தலம் இது
இங்கே சிவபெருமான் சுயம்புவாக எழுந்தார், சூரியன் தன் சாபம் தீர இங்கு வந்து வழிபாடு நடத்தினார் எனும் அளவு இது சிறப்பு வாய்ந்த தலம்
சூரியனின் சாபம் தீர்ந்த இடம் இது , இன்றும் பங்குனி 12 , 13 தேதிகளில் அதாவது சூரியன் உச்சம்பெறும் நாட்களில் இந்த சிவன் மேல் சூரியகதிர் விழும், அவ்வளவு நுணுக்கமாக கட்டபட்ட ஆலயம் இது
ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்டதாக கருதப்படும் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது.
மேலும் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தீர்த்தம் சகல பாவத்தினையும் போக்க வல்லது.. பிரம்மா முதலான தேவர்கள் தாரகாசுரனுக்கு பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்ற பெருமையுடையது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார் என பலர் வழிபட்ட ஆலயம்
வாய்மை ஊர், என்பது வாய்மூர் என்றாகி, திருவாய்மூர் என மருவி விட்டதாக இதன் வரலாறு சொல்கின்றது
இங்கு அப்பர் சம்பந்தர் சுந்தரர் என மூவரும் பாடியிருக்கின்றார்கள்
“கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே”
என பாடுகின்றார் சுந்தரர் பெருமான்.
“மணியமரும் மாமாட” என தொடங்கும் தன் இரட்டை மணிமாலையில் இந்த தலத்தின் சிறப்பை பாடுகின்றார் கபிலதேவநாயனார்
இந்த ஆலயம் அப்பர் சுவாமிகள், சம்பந்தர் வாழ்வில் மகா முக்கியமான ஆலயம், அதுபற்றிய வரலாறு மிக மிக உருக்கமானது
வேதாரண்யம் ஆலயத்தின் திறக்காத கதவை அப்பர் சுவாமிகள் 10 பதிகம் பாடி திறக்கவைத்தார், ஆனால் திறந்த கதவு அதன்பின் மூடவில்லை
அந்த கதவை தன் ஒரே ஒரு பாடலில் அசையவைத்தார் சம்பந்த பெருமான்
அந்த ஆச்சரியம் நடந்த அன்று இரவில் தூக்கம் வராமல் தவித்தபடி நடந்ததையே சிந்தித்து கொண்டிருந்தார், மிக கஷ்டபட்டு தான் திறந்த கதவு ஏன் அடைக்கவில்லை, சம்பந்தர் பாடியதும் எளிதில் எப்படி அடங்கிற்று என்றெல்லாம் அவரின் சிந்தனைகள் நீண்டன
ஒருவேளை தான் பாடி கதவை திறந்ததில் குற்றமாகிவிட்டதோ, நாம் தவறு செய்துவிட்டோமோ, சம்பந்தர் பாடி அதை சரிசெய்துவிட்டாரோ ஏன் இப்படி நடந்தது என குழம்பி நின்றார் திருநாவுக்கரசர்
அப்பொழுது அவருக்கு ஒரு அடியார் வடிவில் தரிசனமான சிவன், தரிசனமாகி அவரை திருவாய்மூர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்
ஏதோ கலக்கத்தில் அவர் பின்னால் சென்றார் அப்பர் சாமிகள், ஆலயத்தை அடைந்ததும் உள்சென்று அந்த அடியார் மறைய தன்னை அழைத்து வந்தது சிவன் என உணர்ந்து அப்படியே சிலிர்ந்து நின்றார்
இந்நிலையில் வேதாரண்யம் மடத்தில் அப்பரை காணாமல் துடித்த சம்பந்தர், அவரை தேடி தேடி அலைந்து ஒருவாரு திருவாய்மூர் ஆலயம் அடைந்து அப்பரை சந்தித்தார்
தான் சிவனை கண்டது போல் சம்பந்தரும் காணட்டும் என , சிவனே “நான் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக” என வேண்டினார்
என் தவறை சரிசெய்த சம்பந்தர் எனும் பொருளும் அதில் இருந்தது.
ஆனால் சிவனோ சம்பந்தருக்கு மட்டும் தன்னை காண்பித்தார், அப்பரின் கண்களுக்கு அவர் தெரியவில்லை
சம்பந்தர் சிவனை நினைந்து அந்த பதிகம் பாட இறை தரிசனம் அப்பருக்கும் கிடைத்தது, ஆம் இந்த பதிகம் பாடி அந்த அதிசயத்தை செய்தார் சம்பந்தர்
“தளிரிள வளரென உமைபாடத் தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.”
எனும் பதிகம் அது
திருநாவுக்கரசரிடம் சம்பந்த பெருமான் சாதாரண குழந்தை அல்ல அது அவதார குழந்தை என சிவன் சுட்டிகாட்டிய இடம் அது
“பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன் கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன் வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே”
என சம்பந்தர் பாடிய தலம் இதுதான்.
திருவாய்மூரில் சிவனை நேரடியாக தரிசனம் செய்த இருவரும் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள். அப்படி இரு அடியார்க்கு ஒரே நேரத்தில் சிவன் தரிசனமான இடம் இந்த ஆலயம்தான்
அவ்வளவுக்கு சிறப்பானது இந்த ஆலயம்
திருமண தடைநீக்கும் ஆலயம் இது, இங்கு வேண்டினால் எல்லா தடைகளும் நீங்கி மங்கல காரியமெல்லாம் நடக்கும்
காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் ஸ்தாபிக்கபட்டிஉர்க்கின்றார்கள்
திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
இங்கு பைரவ வழிபாடும் பிரசித்தியானது , பைரவ வழிபாடு அச்சம் அகற்றும் மிகுந்த மனவலிமை கொடுக்கும் நினைத்த காரியத்தை நடத்திவைக்கும் என்பதால் அந்த வழிபாடு உங்கு பிரசித்தி
ஆலயத்தில் ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஈசான பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். இதில் நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர்.
சூரியன் வழிபட்டது போலவே இங்கு இந்திரனின் மகன் ஜெயந்தன் இங்கே வழிபட்டிருக்கின்றான், பைரவரால் நலம் பெற்ற அவன் “யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும்” என்று வேண்டினான். இ
றைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.
அவ்வளவுக்கு மகா சிறப்பான ஆலயம் இது
இந்த ஆலயத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி கொண்டர்ந்த 6ம் சப்தவிடங்கர் லிங்கம் வைக்கபட்டிருக்கின்றது, இந்த விடங்கரின் பெயர் நீல விடங்கம்
இங்கு சிவன் தாமரை நடனம் ஆடுகின்றார்
இந்த திருவாய்மூர் தலம் ஆக்னா சக்கரத்தோடு தொடர்புபட்டது, ஆறு சக்கரங்களில் முக்கியமானது அது ஆறாம் சக்கரம்
இந்த ஆக்ஞா சக்கரம் பற்றி கொஞ்சம் பார்த்துவிட்டால் அதன் இயக்கம் தாத்பரியமெல்லாம் அறிந்து கொண்டால் இந்த ஆலயத்தின் சிறப்பும், நீல விடங்கரின் அளப்பரிய ஆற்றலும் தெரியவரும்
நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
மூலாதாரம் முதல் விஷுதி வரையிலான ஐந்து சக்கரங்களும் இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆறாவது சக்கரமான ஆக்ஞையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
விசுக்திக்கு மேல் பதினோரு அங்குலம் மேலே உள்ள தலம் ஆக்ஞா சக்கரம்
“ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல் பதினாறங்குலந்தான் பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும் இதனடுவில் யகார மாக்கினை வீடாமே”
என்பது அகத்தியர் பாடல்.
“மேலேறி ரண்டு புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடுபோலே வளையமொன்று ரண்டிதழ்தான்வாகும்
ஆளேறி அங்கென்ற அச்சரந்தான்டுவே ஆகாச பூதமாம் பூத பீசம்
மாலேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின் வீடுமாமே”
இந்த சக்கரம் ஆறாம் சக்கரம், இது ஆகாய தத்துவத்தை குறிப்பது, இந்த நெற்றி சக்கரம் புருவ மத்தியில் இருக்கும் சக்கரம் துலங்கும் பட்சத்தில் ஒருவன் முழு ஞான நிலையினை அடைவான்
உலக பந்தங்களை ஆசாபாசங்களை மீறிய பெரும் ஞானநிலையினை அடைவான், ரிஷிகள் ஞானியரெல்லாம் இந்நிலை அடைந்தவர்களே
ஞானக்கண் என்பதும், மூன்றாம் கண் என்பதும் இதுதான்
இது மகா சூட்சுமமானது என்பதால் இந்துக்கள் திலகமிட்டு மறைக்குமிடமும் இதுதான், குரு தன் கட்டைவிரலால் அழுத்தி தீட்சை கொடுக்குமிடமும் இதுதான்
இது ஆகாய தத்துவசக்கரம், இந்த சக்கரம் ஊடாகத்தான் மானுட மனம் பிரபஞ்சத்தோடு கலந்துவிடும், பிரபஞ்சம் மனதோடு கலக்குமிடம் இதுதான்
இது துலங்கினால் ஒருவனுக்கு பிரபஞ்சத்தின் முழு சக்தியும் புரியும், பிரபஞ்சம் அவனோடு பேசும் முக்காலமும் உணரும் திறன் வாய்க்கும்
ரிஷிகள், ஞானியரெல்லாம் ஞானக்கண்ணினால் காட்சிகளை காணும் வித்தையினை இந்த சக்கரம்தான் செய்கின்றது
இந்த சக்கரம் பற்றி இந்து வேதங்கள் சொல்கின்றன, வேத நூல்கள் சூட்சுமமானவை அதில் ஒரு வரி இப்படி வரும்
“இரு நதிகள் இடையே தீவில் கன்னிபெண்ணொருத்தி நிற்கின்றாள், பலவந்தமாக அவளை அடைவாயாக”
இது திராவிட மொழிபெயர்ப்பில் கற்பழிப்பு என மாறிவிடும், உண்மை அது அல்ல, இரு கண்களிடையே நிற்கும் இந்த ஆக்ஞா சக்கரத்தை துலக்கினால் பெரும் நித்திய பரவசம், பேரின்ப நிலை வாய்க்கும் என்பது
இதையே கீதையில் கண்ணபிரானும் சொல்கின்றார்
“ஸ்பர்சான்-க்ருத்வா பஹிர்-பாஹ்யான்-(ஶ்)சக்ஷுஶ்-சைவான்தரே ப்ருவோ: |
ப்ராணா-(அ)பானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யன்தர-சாரிணௌ ||
யதேன்த்ரிய-மனோ-புத்திர்-முனிர்-மோக்ஷ-பராயண: |
விகதேச்சா-பய-க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: || “
அதாவது புற இன்பம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் அடைத்து, புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பார்வையை நிலைநிறுத்தி, மூக்கின் உள்வரும் மற்றும் வெளியேறும் மூச்சின் ஓட்டத்தை சமப்படுத்தி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை மற்றும் பயத்திலிருந்து விடுபடும் ஞானி சுதந்திரமாக வாழ்கிறார் என்பது பொருள்.
இந்த சக்கரம் துலங்கினால் ஞான நிலை வாய்க்கும் என்பது கண்ணனே சொன்ன போதனை
உடல் ரீதியாக இந்த சக்கரம் சரியில்லை என்றால் பலவிதமான சிக்கல்கள் ஏற்படும்
தலைவலி, மறதி, உடல் எடையில் மாற்றம், கண் கோளாறு, உறவில் நாட்டமின்மை, மலட்டுதன்மை, பலவகை நோய்கள் என சிக்கல்கள் வரும், மூளை தண்டுவட நோயெல்லாம் வரும், நரம்பு கோளாறு முக்கியமான அறிகுறி
தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் என வரும் சிக்கலெல்லாம் இதனை சார்ந்தது
இன்னும் மனரீதியாக பதட்டம் பயம், கோபம் மன அழுத்தம், எரிச்சல், முன்கோபம், நம்பகதன்மை இல்லாமை, மூர்க்கம், தனிமை என பல குழப்பங்கள் வரும்
இனி இந்த ஆலயத்தோடு இச்சக்கரம் பொருந்துவதையும், இந்த ஆலாய்த்தின் நீல விடங்கரையும் அங்கு சிவன் ஆடும் தாமரை நடனம் எனும் கமல நடனத்தையும் காணலாம்
கவனியுங்கள், இந்த ஆலயத்தின் விடங்கர் பெயர் நீல விடங்கர். நீலம் என்றால் ஆகாயம் ஆகாய வெளி
நீலவேணி என்பது அன்னை ஆகாயமாக இருக்கின்றாள் என்பதை சொல்வது, கண்ணனுக்கும் நீல நீறம் என சொல்வதும் அப்படியே
கடலும் வானமும் பிரமாணமான வெளிகள், அந்த வெளியின் நிறம் மானிட கண்களுக்கு நீலம்
அந்த ஆகாய தத்துவத்தைத்தான், பிரபஞ்ச பெருசக்தியில் ஒருவன் கலந்து ஆகாயம் போல எல்லாம் காணும் பெரும் விரிந்த பார்வை கொண்ட ஞானகண்ணை பெறுகின்றான் என்பதைத்தான் நீல விடங்கராக சொன்னார்கள்
அந்த தலத்தில் அந்த நீல விடங்கர் பிரபஞ்ச ஞானத்தை தரும் அதிர்வுகளை ஈர்த்து வைக்கின்றார், அந்த ஈர்ப்பு ஞானக்கண்ணை திறக்க உதவுகின்றது
ஆக்ஞா சக்கரம் அங்கே துலங்கும், ஞானக்கண் திறக்கும், அந்நிலையில் முக்காலமும் உணரும் பரிபூரண ஞான நிலை வாய்க்கும்
ஆக்ஞா சக்கரம் துலங்கும் போது முதலில் அந்த நீல சுடர்தான் ஒளிரும், வானம் கடல் போல நிர்மலமான நீல நிறம்தான் தெரியும்
அதனால் அந்த அடையாளம் காட்டி பிரபஞ்ச பெருவெளியுடன் தன் பக்தனை இணைத்து அருள்புரிவர்தான் நீல விடங்கர்
இதுதான் நீல விடங்கர் எனும் ஆகாய விடங்கரின் தத்துவம்
எல்லையில்லா ஞானத்தை வழங்குவது என்றால் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நம்பிக்கை, ஒரு வரையறை, ஒரு எல்லைக்குள்ளான சில அசைக்கமுடியா பிடிவாதம் இருக்கும்
அதை உடைத்து ஆகாயம் போல் மிகபரந்த மனதை சிந்தனையினை இன்னும் ஆழமாக சொன்னால் ஒரு பெரிய ஒன்றுமில்லா மனநிலைக்க்கு கொண்டு செல்லும் நிலை
அந்நிலையில் ஒருவனுக்கு பூலொக மானிட குணமெல்லாம் அற்றுபோகும், உலகம் நிலையற்றது உலகம் ஒரு மாயை என்பது தெரியவரும், அதுவரை தான் நம்பியதெல்லாம் அர்த்தமற்றது எனும் ஞானம் உருவாகும்
அந்த ஞானம் மோட்சம் நோக்கி, பிறவா நிலை நோக்கி, பேரின்ப நிலை நோக்கி ஒளி நோக்கி அழைத்து செல்லும்
அங்கே சிவன் ஆடும் நடனம் கமலநடனம் எனும் தாமரை நடனம், அதாவது தாமரை நீரோடு ஒட்டாது என்பது போல இந்த மனம் லவுகீகத்தினை கடந்து நிற்கின்றது என்பதை சொல்லும் தத்துவம்
நீரின் மேல் தாமரை மூழ்காமல் தனித்து நிற்பது போல தன் இலைகளில் நீர் ஒட்டாமல் இருப்பது போல, அதாவது நீரிலே வாழ்ந்தாலும் அதன் மேல் நீர் ஒட்டாதது போல உலகில் வாழ்ந்தாலும் லவுகீக ஆசை ஒட்டாமல் இருக்கும் ஞானத்தை தருவது இந்த நிலை
அதைத்தான், உலகோடு ஒட்டாத ஞான்நிலையினை தரும் வரத்தை சிவன் தருகின்றார் என்பதுதான் தாமரை நடனம்
இந்திய ஞானமரபில் தாமரை முக்கியமானது, தாமரை ஞானத்தின் மலர் என கொண்டாடபட்டது
அந்த் ஞானநிலையினை சிவன் அருளும் தலம் இது என்பதுதான் இந்த தலத்தின் சிறப்பு, கமல நடனம் என சொல்வது அதுதான்
சூரியன் இத்தலத்தில் வழிபட்டான் என்பது அந்த ஒளி நிலை, அதவாது ஒளியினை நோக்கி அழைத்து செல்லுதல் ஞான ஒளியினை வேண்டி நிற்றல் எனும் பொருளாகின்றது
ஒளி என்றால் அறிவு, ஒளி என்றால் ஞானம், ஆத்ம ஞானம் ஆத்ம சுடர் எனும் தெய்வீக ஞான நிலையினை அருளும் தலம் இது என்பதை குறிப்பால் சொன்னார்கள்
அஷ்ட பைரவர்கள் என்பது இங்கு அஷ்ட்டமா சித்துக்களை வழங்குபவர்கள்
ருத்திரர் என்றால் அழிவுக்குரிய கடவுள்கள் அல்ல, நம்மிடமுள்ள ஆகாத குணங்களை மாய மயக்கங்களை உண்மையினை அறியாத தன்மையினை அழிப்பவர்கள் ருத்திரர்கள்
மும்மலங்கள் உள்ளிட்டவற்றை துர்குணங்களை அழித்து உயிர்கள் உண்மையினை அறிய வழி செய்பவர்கள் ருத்திரர்கள், மானிட ஆன்மா மேல் அவர்கள் கொண்ட அன்பு அப்படி
ருத்திரவடிவம் என்பது அதுதான், தீமையினை தீயகுணங்களை அழிப்பது ருத்திரவடிவம்
பைரவ வடிவம் என்பது இன்னொரு படிநிலைக்கு நம்மை அழைத்து செல்வது, துறவிகளில் பைராகி அல்லது பைரவ கோலம் என்பது ஆன்மா இன்னொரு படிநிலைக்கு உயர்ந்துவிட்டதை சொல்லும் வடிவம்
அவர்கள் மானிடரிலிருந்து மேம்பட்ட ஞானவடிவில் தெளிவில் இருப்பார்கள், எது உண்மை எது மாயை என்பதை அறிந்து மாயையில் இருந்து விலகி நிற்பார்கள்
இப்படிபட்டவர்கள் சுடுகாட்டில் இருப்பதை அவதானிக்கலாம், அது அங்கே மானிட உடல் அழிந்து ஆத்மா அடுத்த நிலைக்கு செல்லுமிடம்
அந்த உருமாற்றமே அந்த உருமாற்ற இன்னொரு படிநிலைக்கு ஒருவனை உயர்த்துபவர்களே பைரவர்கள்
இந்த ஆலயத்தில் எட்டு பைரவர்கள் உண்டு, இந்த எட்டு பைர்வார்களும் காசிவாழ் பைரவர்கள் போல் எட்டுவிதமான சக்தியில் ஒருவனை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வார்கள்
“அனி மாதி சித்திகளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே”
என்பது அந்த சக்திகள் பற்றி திருமூலரின் பாடல்.
அணிமா, மஹிமா, லஹிமா , கரிமா பிராத்தி , பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என எட்டு வகை சக்திகள்
அணிமா என்பது அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். மகிமா என்பது மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா என்பது காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா என்பது கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி என்பது எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் என்பது தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் என்பது நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் என்பது அனைத்தையும் வசப்படுத்தல்
புருவ சக்கரம் எனும் ஆத்ம சக்கரம் துலங்கினால் தெய்வ நிலை வாய்க்கும் அப்போது பைரவர்கள் அருள் எனும் உருமாற்ற நிலை சாத்தியமாகும்
இந்த அஷ்ட மகா சித்துக்களை பெற்றவர்களில் அனுமன் முக்கியமானவன், இன்னும் எவ்வளவோ மகா ரிஷிகள் ஞானியர்கள் யோகிகள் இவற்றில் சிறந்து விளங்கினார்கள்
இந்த வரம் பைரவர்கள் வழங்குவார்கள், ஆக்னா சக்கரம் துலங்கியவனுக்கு இதெல்லாம் எளிது
திருவாய்மூர் தலம் என்பது சக்திவாய்ந்த தலம், ஆக்னா சக்கரத்தை துலக்கும் தலம் முழு ஞானத்தை அருளும் தலம் உண்மையினை புரியவைக்கும் தலம்
அங்கே சம்பந்தருக்கும் அப்பருக்கும் நடந்த காட்சியினை பார்த்தால் அது விளங்கும்
திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் அப்பர் சுவாமிகளுக்கு ஒரு தெளிவிலலை தான் கொண்டிருந்த நம்பிக்கையில் மட்டும் பிடிவாதமாய் இருந்தார் சம்பந்தர் பற்றிய உண்மையினை அவரால் தெளிந்து நோக்க முடியவில்லை
அவரை இந்த தலத்துக்கு வர வைத்து அவருக்கு ஞானம் தெளியவைத்து , அவரின் ஆக்ஞா சக்கரத்தை துலக்க வைத்து மாயை நீக்கி உண்மையினை தெரியவைத்தார் சிவன்
அந்த ஞானகண்ணில்தான் அவர் சிவனை கண்டார், சம்பந்தர் யார் என்பதை புரிந்துகொண்டார்
இதன்பின்பே எல்லையற்ற பெரும் ஞானம் அபபருக்கு வாய்த்தது எந்த சோதனைக்கும் அவர் சிக்கி கொள்ளவில்லை
ஆம் அப்பர்பெருமான் முழு ஞானம் பெற்று அவரின் ஞானக்கண் திறந்த தலம் இது, அந்த அதிசயம் ஒவ்வொருவரும் பெற அந்த சப்தவிடங்கர் எனும் நீல விடங்கர் காத்திருக்கின்றார்
நீலவிடங்கர் ஒவ்வொருவரையும் அழைத்து ஞானக்கண்ணை திறக்க தயாராக சக்திகுவியலோடு இருக்கின்றார், யார் சென்றாலும் அந்த பலனை பெறலாம்
சூரியன் இந்த தலத்தில் வழிபட்டான் என்பது இந்த தலம் ஒளியினை ஞான வெளிச்சத்தை தரும் என்பது, காயத்ரி மந்திரத்தில் வேண்டி நிற்கும் அந்த ஒளியினை , ஞான வெளிச்சத்தை தரும் என்பது
அந்த ஞானவெளிச்சத்தை பெற்றுகொள்ள அங்கு சென்று வழிபடுதல் நலம்
அங்கிருக்கும் அஷ்ட பைரவர்கள் அஷ்ட்டமா வித்தைகளையும் அருளையும் தந்து உங்களை அடுத்த படிநிலைக்கு இயர்த்துவார்கள், பைரவம் எனும் உருமாற்ற அருளை உங்களுக்கு தருவார்கள்
இந்த ஆலயம் நரம்பு, கண்கள், காது, மூக்கு , மூளை, தண்டுவடம் என எல்லா பிரச்சினை கொண்டவர்க்கும நலம் தரும் ஆலயம், அந்த குறைகள் அங்கு நீங்கும்
திருவாய்மூர் ஆலயம் என்பது ஞானகண்ணை திறக்கும் ஆலயம், எல்லையில்லா ஞானத்தை தரும் ஆலயம், மாயை நீங்கி முழு தெளிவு தரும் ஆலயம்
ஞான ஒளிதரும் ஆலயம், பைரவர்கள் அருளில் உங்களை அடுத்த ஞானபடிநிலைக்கு கொண்டு செல்லும் ஆலயம்
அங்கே சென்றுவழிபட்டால் முழு ஞானநிலை வாய்க்கும், மாயை அகலும், பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் புகுந்துவிடும், முக்காலமும் அறியும் ஆற்ற்ல் வரும்
இன்னும் எல்லையற்ற ஞானத்தில் தெய்வீக நிலையில் எல்லா அதிசயங்களும் செய்யும் சக்தி கிடைக்கும் அங்கு சென்று வழிபட்டால் குறைந்தபட்டம் மனமும் சிந்தையும் அறிவும் அடுத்தபடி நிலைக்கு செல்லும் நீலவிடங்கரின் எல்லையற்ற ஆற்றல் அந்த அதிசயத்தை உங்கள் வாழ்வில் தரும், அடுத்தபடிநிலைக்கு ஞானத்தோடு உயர்வீர்கள் இது சத்தியம்.