சப்த விடங்கர் ஆலயங்கள் 07 / 08 : வேதாரண்யம் எனும் திருமறைக்காடு
ஸ்ரீ வீணாவாத விதூஷணி சமேத திருமறைக்காடர்
சைவதலங்களில் மகா முக்கியமானது வேதாரண்யம் ஆலயம், வேதாரண்யம் என்றால் வேதம்+ஆரண்யம் என பொருள்
வேதங்கள் இருந்த காடு, அதாவது தமிழில் சொன்னால் மறைகள் இருந்த காடு என்பதால் அந்த பெயர் வந்தது
இது அப்பர் சுந்தரர் காலத்தில் முக்கியமான ஆலயமாக வந்ததே தவிர அதன் வரலாறும் சிறப்பும் மகா தொன்மையானது, எவ்வளவு தொன்மையானது என்றால் யுகங்களை தாண்டியது
கலியுகத்துக்கு முன்பே அந்த ஆலயம் உண்டு, வேதங்களே வந்து பாடி வழிபட்ட ஆலயம் அது
அங்கேதான் ராமபிரான் வந்து வழிபட்டார், அங்கேதான் விசுவாமித்திரரும் வந்து தவமிருந்தார், அவர் பிரம்மரிஷி அதாவது வேதஞானி என அங்கேதான் உருவானார்
அது இன்னும் தொன்மையான வரலாற்றை கொண்டது, அங்கே திரிந்த எலி ஒன்று இரவில் அந்த ஆலயவிலள்ளின் திரி அணையும் தருவாயில் தன்னையறியாமல் ஏற்றிவைத்தது
அதுதான் அடுத்தபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்து விஷ்ணுவின் பாதத்தை தலைக்கு வாங்கி நித்திய சஞ்சீவி வரம் அடைந்தது
அகத்தியர், முசுகுந்தன், கௌதமர், விசுவாமித்திரர், வசிட்டர், நாரதர், பிரமன், மாந்தாதா முதலியோர் வழிபட்ட தலமும் இதுதான்
நசிகேது, சுவேதகேது ஆகியோர் இத்தலத்தில்தான் தவஞ்செய்தனர்
மறைவனம், வேதவனம், சத்யகிரி, ஆதிசேது, தென்கயிலாயம் என இதற்கு பல பெயர்கள் உண்டு, அவ்வலவு சிறப்பானது
சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரோடு வந்து இங்கு தரிசித்தார்
அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலம் காட்டிய தலம் இது
தாயுமானவர் ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்கு இத்தலத்தில்தான் அருளுபதேசம் செய்தார் என்பது வரலாறு
இப்படியான பிரசித்தியான ஆலயத்தின் கதவு கலிகாலம் தொடங்குவதை அறிந்து வேதங்களால் மூடபட்டது அதை யாரும் திறக்கமுடியாதபடி தாழிடபட்டிருந்தது
மக்கள் பக்கவாட்டு பக்கமாக சென்றுவந்தார்கள்
சம்பந்தருடன் அங்கே வந்த அப்பர்சுவாமிகள் தன் பாடலால் அதை பாடி திறந்தார், பின் சம்பந்தர் அதை மறுபடி மூடி திறக்கும்படி கதவுகளுக்கு அசைவுகளை கொடுத்தார்
“குரவம் குருக்கத்திகள் புன்னைகண் ஞாழல்
மருவும் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
சிரமமும் மலருந் திகழ் செஞ்சடை தன்மேல்
அரவம் மதியோடடை வித்தலழகே”
என சம்பந்தர் இதனை பாடினார்
“விண்ணினார் விண்ணின்மிக்கார் வேதங்கள் விரும்பியோதப்
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடியாடக்
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணனரில் வலங்கொண் டேத்துமாமறைக் காடனாரே”
என அப்பர் சுவாமிகளும் பாடினார்
தேவாரத்தின் ஏழு பதிகங்களில் பாடபட்ட ஆலயம் என இதற்கு பெருமை உண்டு
இங்கிருந்துதான் மதுரைக்கு சமணரிடம் வாதிட்டு பாண்டிய நாட்டையும் மீனாட்சி அம்மன் ஆலயத்தையும் காக்க சம்பந்தர் கிளம்பினார், அப்போது கிரகம் சரியில்லை என்ற அப்பரின் சொல்லுக்கு மதிப்பளித்து அவர் பாடியதுதான் “கோளறு பதிகம்”
ஆம் கோளறு பதிகம் இங்கேதான் பிறந்தது
இபப்டிபட்ட ஆலயத்தில் விளக்கு அழகு என்பார்கள், “வேதாரண்ய விளக்கு அழகு” என்பது பிரசித்தியான வரி, மகாபலி சக்கரவர்த்தி புராணம் அந்த விளக்கில் இருந்துதான் தொடங்குகின்றது
இங்கே அன்னை வீணாவாதவிதூஷணி, யாழைப்பழித்த மொழியம்மை. அதாவது வேத ஒலிகளை விட அழகான மொழிகளைக் கொண்டவள், வீணை யாழைவிட அழகான குரலை கொண்டவள் என பொருள்
வேதங்களின் வடிவம் அன்னை என்பதால் அந்த வேத ஒலியின் இயல்பிலே அவளுக்கு பெயர் வந்தது
சிவனுக்கு மறைக்காட்டீசுவரர், வேதாரண்யேசுவரர், வேதவனேசர், வேதாரண்யநாதர் என பெயர், இங்குள்ள தலவிருட்சம் வன்னிமரம், விசுவாமித்திர் தவமிருந்த அந்த மரம்
இன்னும் தேவ சபைகளில் முக்கியமான சபை இது
இப்படியான வெகு பிரசித்தியான அலயத்தில்தான் சப்த விடங்கரின் ஏழாம் விடங்கர் லிங்கம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது
இந்த ஆலயத்து விடங்கர் புவன விடங்கர், அவர் ஆடும் நடனம் ஹம்ச நடனம்
இந்த ஆலயம் சகஸ்ர சக்கரத்தோடு தொடர்புடையது, அந்த சக்கரத்தின் இயல்புகளை புரிந்து கொண்டால் இந்த ஆலயத்தின் தாத்பரியம் தெளிவாக விளங்கும்
“தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால் தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும் அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும் நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே”
என இதனை பற்றி பாடுகின்றார் போகர்.
இது ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே தலையின் உச்சியில் இந்த சக்கரம் இருக்கின்றது
இதுதான் துரிய சக்கரம் என அழைக்கபடும், இதுதான் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை எனவும் அழைக்கபடும்
இந்த சக்கரம்தான் இறைசக்தியுடன் சலனமற்ற நிலையில் கடலில் நதிபோல் கலக்க செய்கின்றது, எல்லாம் கடந்த எல்லா உணர்வு சுகதுக்கம் பாசபந்தம் விருப்பு வெறுப்பு கடந்த சமாதி நிலை எனும் அந்த கடைசி நிலை இங்கேதான் உருவாகும்
இந்த சக்கரம் துலங்கும் ஒளிதான் ஞான ஒளி, பெரும் மகான்கள் ஞானியர் தலையினை சுற்றி ஒளிரும் ஞானவட்டம் இதுதான்
இந்த ஞானபெரும் நிலையில்தான் அதி உன்னத ஞானம் வாய்க்கும், எல்லாம் கடந்த அந்த பெருஞான வெளியில்தான், வார்த்தைகளற்ற வாதங்களற்ற அந்த ஞான நிலையில்தான், துரிய சக்கரம் துலங்கிய அந்த நிலையில்தான் எல்லையில்லா பெரும் அன்பு எல்லா உயிர்மேலும் ஊற்றெடுக்கும்
ஆன்மீகத்தின் கடைசி உச்ச நிலை இது
இந்நிலையில்தான் எல்லா வடிவமும் தெய்வவடிமாக தோன்றும், காண்பவை காணாதவை எல்லாமே இறைவடிவம் என்பதும், மகா உயர்ந்த ஞான தத்துவங்களும் அப்போதுதான் புரியும்
அந்நிலையில் பிறபில்லா பெரு நிலையினை, பெரு ஞான நிலையினை அடையமுடியும்
உடல்ரீதியாக இந்த சக்கரம் சரியாக துலங்காதவருக்கு தலைசார் நோய்கள், நரம்பு மண்டல பாதிப்பு, மறதி, மந்த செயல்பாடு போன்ற குழப்பம் வரும்
மனரீதியாக தெளிவற்ற மனம், மூர்க்கம், ஊசலாடும் மனம், சுழலும் மனம் என மனம் சம்பந்தமான எல்லா வகை சீர்கேடுகளும் வரும்
இந்த சக்கரம் ஞானிகளை உருவாக்கும், பேரின்ப நிலையில் அவர்களை வைத்திருக்கும், எல்லையற்ற ஆனந்தத்தை தரும்
மாயம்மா, சேஷாத்திரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார் போன்றோர் இந்த சக்கரம் துலங்கபட்டவர்கள், அதனால் எப்போதும் ஒரு ஆனந்த லயத்தில் இருப்பார்கள்
ரமணர், நேருர் பிரம்மானந்தர் போன்ற மகான்களெல்லாம் இச்சக்கரம் துலங்கி பெருஞான நிலைக்கு வந்தவர்கள் உடல்வேறு ஆத்மா வேறு எனும் உண்மையினை அறிந்தவர்கள், அதிசயங்களெல்லாம் அவர்களுக்கு எளிதானது
இந்த சகஸ்ர சக்கரத்தை துலங்க வைப்பது இந்த தலம், இதனை அந்த புவன விடங்கள் எனும் விடங்கர் செய்கின்றார்
புவனம் என்றால் பிரபஞ்சம், அண்ட சராசரம் என பொருள்
இந்த துரிய சக்கரம் துலங்கும் போது மனம் அண்டா சராசரத்தில் கரைந்துவிடுகின்றது, நான் தனது எனும் எண்ணெமெல்லாம் மறைந்து தான் இறைவனின் ஒரு துளி எனும் அந்த பெரும் ஞான நிலை வாய்க்கின்றது
“அகம் பிரம்மாஸ்மி” எனும் ஞான நிலை அதுதான்
அத்வைதம் என சங்கரர் போதித்த தத்துவம் அதுதான், தான் வேறு இறைவன் வேறு என எண்ணாமல் அந்த பெரும் சக்தியுடன் ஒன்றாக கலநதுவிடும் பெரும் தத்துவம்
எல்லையில்லா அன்பை , எல்லையில்லா பேரன்பை எல்லோர்மேலும் எல்லா உயிர்கள் மேலும் கொட்டும் பெரும்ஞான நிலை, தெய்வீக நிலை
அதை தரும் நிலைக்கு இந்த சக்கரத்தை இந்த புவன விடங்கர் துலங்க வைப்பார்
இங்கு சிவன் ஆடும் நடனம், ஹம்ச நடனம் என்றாகும், ஹம்சம் என்றால் அன்னபறவை
அன்னபறவை அதி சுத்தமானது, நல்ல நீரில் மட்டும் வாழகூடியது, பாலும் நீரும் தனிதனியே பகுக்க கூடியது, இன்னும் அதிமுக்கியம் அது நீந்தும் போதோ, பறக்கும் போதோ துளி சத்தம் சலனம் வராது
அவ்வளவு அமைதி
இந்த சக்கரம் துலங்கி ஒருவன் சமாதி நிலை எனும் முழு ஞான நிலைக்கு, வாக்கும் செயலுமற்ற பெருஞான நிலைக்கு செல்லும்போது அவன் இயக்கம் அன்னபறவை போலாகிவிடும்
அதாவது நன்மை தீமை பகுத்தறியமுடியும், சுத்தமானதை மட்டும் ஏற்றுகொள்ளமுடியும்
இன்னும் சலனமற்ற இயக்கத்தை, சத்தமே இல்லாத மனமோட்டத்தை அவனால் தொடரமுடியும், அந்த ஆரவாரமாற்ற அதே நேரம் புனிதமான தெய்வீக நிலையினைத்தான் அன்னபறவைக்கு ஒப்பீட்டார்கள்
மாபெரும் சாத்வீக நிலைக்கு அதனை ஒப்பாக கூறினார்கள்
இதுதான் ஹம்ச நடனத்தின் தத்துவம், இந்த ஆலயம் அப்படியான ஞான பேரோளியினை ஞான பெருநிலையினை சகஸ்ர சக்கரத்தை துலக்கி தரும்
பிரபஞ்சத்தின் சக்திகளை ஈர்த்திருக்கும் புவன் விடங்கர் அதை அருள்வார், அப்போது அன்னைபறவை போன்ற லயத்தில் அவனுக்குள் பெருமஞான இயக்கம் வரும்
இந்த அடிப்படையில் அந்த ஆலயத்தின் சம்பவங்களை , தலபுராணங்களை நோக்குங்கள் பல உண்மைகள் தெரியும்
ராவணனை வதைத்தபின் ராமபிரான் அங்கே வந்து வணங்கினார், மாபெரும் தெளிவு அவருக்குள் வந்தது அதன் பின்பே அரியணை ஏறி பெரும் ஞானமான ஆட்சியினை , பாசபந்தத்துக்கு அப்பாற்பட்டு எல்லா உயிரையும் தன்னுயிராக கருதும் பெரும் ஆட்சியினை நடத்தி நின்றார்
பெரும் ஞான வெளிச்சம் அவருக்கு அங்கே கிடைத்தது
விஸ்வாமித்திரர் தன் மாபெரும் போராட்டத்தின் முடிவினை அங்கேதான் பெற்றார், அவருக்கு பிரம்ம சக்கரம், துரிய சக்கரம் துலங்கி பிரம்மரிஷி என பெயர் பெற்றார்
அதன்பின் அவர் எல்லாம் கடந்த ஞான நிலையில் நின்றார், உணச்சிக்கும் விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்ட பெரு ஞான நிலை சமாதி நிலை, பிரம்ம நிலையினை அவர் அங்குதான் அடைந்தான்
அந்த ஆலயம் ஞானசுடர் தரும் ஆலயம், ஞான வெளிச்சம் தரும் ஆலயம் என்பதை விளக்கிலே சொன்னார்கள்
வேதாரண்ய விளக்கு அழகு என்பது வெறும் ஒளி விளக்கு அல்ல, ஞான ஒளி விளக்கு
அதற்கு மிகபெரிய உதாரணம் மகாபலி சக்கரவர்த்தி, கர்மவினை தொடர்ச்சியாக எலியாக வந்து அந்த விளக்கை தூண்டியதன் பலன் மாவலி ஒரு மன்னனாக அசுர குலத்தில் வந்தார்
அந்த விளக்கினை ஒரு பிறவியில் ஏற்றிய பலன் மறுபிறவியில் பெரிதாக வந்தது, அப்போதும் அந்த ஆலயம் கொடுத்த வரம் ஆந்த ஆத்மாவோடு இருந்தது
அந்த சக்திதான் வாமணனுக்கு வரமருள சொன்னது, அந்த அன்பால்தான் பகவானும் அவர் தலையில் கால் வைத்தார்
வாமணன் மூன்றாம் அடியினை அவன் தலையில் வைத்தான் என்பது அகங்காரம் ஒழித்த நிகழ்வு மட்டுமல்ல, பரந்தாமனின் கால்பட்டு அவன் ஞான சக்கரமான துரிய சக்கரம் துலங்கியது என்பது
அந்த துரிய சக்கரம் துலங்கி அவன் அறியாமை அகன்றது, பெரும் ஞானமும் அன்பும் வாய்த்தது, அந்த அன்பில்தான் தன் மக்களை காண வருடாவருடம் வர வரம் வாங்கினான்
நித்திய சஞ்சீவியாக அவன் இன்றும் நிற்கின்றான், திருவோண பண்டிகைக்கு இப்போதும் வருகின்றான்
அவன் முழு ஞானம் பெற்றான், அந்த சக்கரம் துலங்கி ஞானியாகி அழியா நிலையினை அடைந்தான் என்பதுதான் அவன் வாழ்வின் சுருக்கம்
அந்த வரத்தை அருளியது இந்த ஆலயம், இந்த ஞானம் வழங்கி பெரும் தெய்வீக நிலையினை கொடுக்கும் ஆலயம்
வேதாராண்யத்தில் வணங்கினால் பிறவிகள் தோறும் பலன் உண்டு , ஜென்ம ஜென்மமாக பலன் உண்டு என்பதும் அவன் வாழ்வில் அறியவேண்டியது
அந்த வேதாரண்ய ஆலய விளக்கால் மாறிய அவன் வாழ்வு ஞானபிம்பமாய் இன்றும் நிற்கின்றது
வேதாரண்ய ஆலயத்தின் மறைபொருளை மிக மிக சூட்சுமமாக விளக்கியவர்கள் அப்பரும் சம்பந்தபெருமானும், ஒருவகையில் அவர்கள் நடத்தியது மகா மகா சூடசுமமான திருவிளையாடல்
வேதங்களால் மூடபட்ட கதவு என்பது சகஸ்ர சக்கரத்தை குறிக்கின்றது, அப்பர் அதை பாடி திறந்தார் என்பது வேதாரண்ய தலத்தில் மனமுருக வேண்டினால் அந்த சக்கரம் துலங்கும் என்பது
கோவில் கதவு திறந்தது “தாழ் திறந்தது” என்பது அங்கே துரிய சக்கரம் துலங்கும் என்பதை சொல்கின்றது, சரி அது ஏன் மூடாமல் அப்பருக்கு சோதனை கொடுத்தது
அங்கேதான் அதி உச்ச சூட்சுமம் இருக்கின்றது
குண்டலின் சக்தி மேல் எழும்போது துரிய சக்கரத்தை அவ்வளவு எளிதாக எட்டாது, ஆக்கினை வரை மேலேழும் அச்சக்தி துரியத்தை எட்டும்போது பெரும் போராட்டம் கொடுக்கும்
அந்த சக்தி ஏறி இறங்கி ஏறும்
வேதாரண்யம் வந்த அப்பர் மறுபடி திருவாய்மூர் சென்றார் என்பது அதுதான், அங்கே சிவன் காட்சி கொடுத்து அவருக்கு தெளிவினை கொடுத்தார் என்பது அந்த பரம்பொருளே இறங்கிவந்து உச்ச சக்கரத்தை துலக்கும் என்பது
ஒரு குரு ஒருவனுக்கு ஞானம் கொடுக்கலாம், ஞானகண்ணை திறக்கலாம் ஆனால் சகஸ்ர சக்கரத்தை திறக்கும் சக்தி பாம்பொருளுக்கே உண்டு
ஆம், அந்த தலத்தில் சிவனே வந்து உங்களுக்கு அந்த துரிய சக்கரத்தை தெளிய வைப்பார், அப்போது முழு ஞான தெய்வீக நிலையினை நீங்கள் அடைவீர்கள் என்பதுதான் அந்த ஆலய தாத்பரியம்
இங்கே ஒரு கேள்வி எழலாம், வேதங்களுக்கும் துரிய சக்கரத்துக்கும் என்ன தொடர்பு என்பது
வேதங்கள்தான் இந்த உலகை இயக்குகின்றன,வேதம் சொல்லும் பெரும் தத்துவமும் ரகசியமும்தான் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை இயக்குகின்றன
அந்த வேத அதிர்வுகளை மனதால் உணர்ந்து அதை வடித்து தந்தவர்கள் ரிஷிகள்
ஒருவனுக்கு சகஸ்ர சக்கரம் தெளியும் போது வேதங்களின் முழு வடிவமும் புரியும் அதாவது இந்த மாபெரும் பிரபஞ்ச ரகசியம் இயக்கம் என எல்லாமே தெரியும், புரியும் அவன் உணர்ந்துகொள்வான் என்பதைத்தான் இங்கே வேதங்கள் வழிபட்ட ஆலயம் வேதாரண்யம் என்றார்கள்
இந்த ஆலயம் அவ்வளவு சிறப்பானது, அதனால்தான் சப்த விடங்கரின் உச்சலிங்கம் புவன விடங்கராக இங்கே ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது
இந்த ஆலயத்துக்கு சென்று வணங்கினால் தலை சம்பந்தமான , மூளை, நரம்பு இதர மனம் சம்பந்தமான சிக்கலெல்லாம் தீரும்
மனமும் சிந்தனையும் தெளிவடையும், சிந்தனைகள் நேர்த்தியாகும், குழப்பம்
மிக மிக நம்பிக்கையுடனும் தளரா மனமுடனும் அங்கு வேண்டினால் துரிய சக்கரம் துலங்கும் , அப்போது எதுவும் பாதிக்காத மாபெரும் உயர்ந்த ஞான நிலையினை அடைவீர்கள், எல்லாவற்றையும் தெய்வ அங்கமாக காணும் பெரும் மனமும், கட்டற்ற வரம்பற்ற தெய்வீக அன்பும் உங்களில் ஊற்றேடுக்கும், ஞான ஒளி உங்கள் சிரஸை சுற்றிலும் ஒளிரும்
தெய்வீக இயல்புபெற்று நீங்களும் அழியா சக்தியும் புகழும் பெற்று வாழ்வீர்கள், பலரை வாழவைப்பீர்கள், வேதாரண்யஸ்வரரும், புவன விடங்கரும் அதற்கு உதவி செய்வார்கள், அன்னபறவைபோல் அதி சுத்தமான சலனமில்லா வாழ்வினை வாழ்ந்து வழிகாட்டுவீர்கள் இது சத்தியம்
(சப்த விடங்கர் ஆலயங்கள் தொடர் இத்துடன் நிறைவடைந்தது.)