சப்த விடங்கர் ஆலயங்கள் : 03 / 08 திருநாகை
நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத சுந்தர விடங்கர்
சோழநாட்டின் கடற்கரையின் நாகப்பட்டினத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிவனுக்கு பெயர் காயாரோகணேசுவரர், அந்த ஆலயம் மிக மிகப் பழமையான ஒன்று.
அன்னையின் பெயர் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.
நாகப்பட்டினத்திற்கு பல பெயர்கள் உண்டு. காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என அக்காலத்தில் இருந்தே பலவகையான பெயர்கள் கொண்டு அந்த தலம் அழைக்கப்பட்டது.
நாகர்கள் அங்கே வழிபாடு செய்த இடம் ஆகையால் நாகப்பட்டினம் எனப் பெயர் வந்தது என்றொரு காரணமும் உண்டு.
அந்த சிவனுக்கு காயாரோகணேசுவரர் எனப் பெயர் வர முக்கிய வரலாறும் உண்டு. புண்டரீக முனிவர் என்றொரு முனிவர் இருந்தார், புண்டரீகம் என்றால் தாமரை எனப் பொருள்.
அந்த முனிவருக்கு உடலோடு கயிலாயம் செல்லும் ஆசை இருந்தது, அதற்காக தவமிருந்தார். மானிட உடல் என்பது வெறும் கூடு, அங்கே ஆத்மா தங்கியிருந்து கர்மம் கழிக்கும், உரியநேரம் வரும்போது ஆத்மா பிரியும் உடல் இந்த மண்ணில் அழியும்.
இதுதான் விதி. இதனை யாரும் மீறமுடியாது. அவதாரங்களே தப்பமுடியாது.
சில மகான்கள் இந்தக் காயம் எனும் மேனியினை காற்றில் எரித்து சுடராகி கலந்தார்கள். ஆண்டாள், மாணிக்கவாசகர், நந்தனார் போன்றொரெல்லாம் அப்படியானவர்கள்.
ஆனால், உடலோடுதான் முக்தி அடைவேன் என தவமிருந்தார் புண்டரீக முனிவர். அவரின் தவத்துக்கு இறங்கி வந்த சிவன் அவர் உடலை தன்னோடு எடுத்துக்கொண்டு அவருக்கு முக்தி வழங்கினார்.
சிவன் தன் உடலில் முனிவர் உடலை ஏற்றதால், காயத்தை ஏற்றதால் காயரோகணேஸ்வரர் என்றானார். காயத்தை அதாவது உடலை இறைவன் ஆரோகணம் செய்ததால் அந்த இடம் காரோணம் என்றாயிற்று.
இந்த தலம் தேவாரம் பாடப்பட்ட தலம், சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர் என மூவர் பாடிய தலம் இது.
சந்தரர் இத்தலத்தை பற்றி இப்படி பாடுகின்றார்,
“பத்தூர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடிப்
பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர்
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை
அவை பூணத் தந்து அருளி மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும்
கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே”
இந்த தலத்தில்தான் அதிபத்த நாயனார் வழிபட்டு பெரும் சோதனையிலும் வெற்றிகரமாக மீண்டு முக்தி அடைந்து நாயனார் எனும் நிலையினை அடைந்தார்.
இந்த ஆலயம் பற்றி இன்னொரு பெரும் சிறப்பு உண்டு. சனீஸ்வரன் ரோகிணி நட்சத்திரத்துக்கு வரும்போது “ரோகிணி சகடபேதம்” எனும் பஞ்சம் உண்டாகும்.
தன் நாட்டு மக்களை காக்க தசரதன் இங்கே வந்து சிவனை வழிபட்டு மன்றாடினார், அதனால் சிவன் இறங்கி சனிபாதிப்பினை நீங்கித் தந்தார்.
அதனால் இங்கு நவகிரகங்கள் அனைத்தும் சிவனை நோக்கி அமர்ந்திருக்கின்றன.
இங்கேதான் அழுகுணி சித்தரின் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது. இன்னும் பல சிறப்புகள் உண்டு.
நாக ஆபரண விநாயகர் இங்கே பெரும் விசேஷம், அது நாகர்கள் வாழ்நத இடம், நாக வழிபாடு இருந்த இடம் என்பதன் அடையாளமாக விநாயகருக்கு அணிவிக்கப்படும் நாக அலங்காரங்கள் விசேஷம். நாகங்கள் வடிவ ஆபரணமிடுவதால் அவர் “நாக ஆபரண விநாயகர்”
இன்னும் இங்கு தலத்தில் சில மாறுபட்ட வழிபாடுகள் உண்டு, பிரதோஷம் அன்று மோகினி புறப்பாடுதான் நடக்கும். பாற்கடல் கடையும் போது வந்த அமிர்தத்தை மோகினி அவதார பெருமாள்தான் தேவர்கள் உண்ணும்படி அசுரர்களை திசை திருப்பித் தந்தார்.
அந்த மோகினிக்குத்தான் பிரதோஷத்தில் புறப்பாடு உண்டு.
இப்படி பல சிறப்புக்களை கொண்ட ஆலயத்தில்தான் மூன்றாம் சப்தலிங்க விடங்கர் இருக்கிறார். இந்த விடங்கர் மானிட உடலின் மணிப்பூரக சக்கரத்துக்கு ஆதாரமானவர்.
இந்த லிங்கம் அந்த சக்கரத்தோடு தொடர்புடையது, இந்த ஆலயத்தில் தொழுதால் அந்தச் சக்கரம் துலங்கும், அப்போது பல வகையான யோகங்கள் கைக்கூடும்.
யோகம் என்றால் ஒருங்கிணைதல் எனப் பொருள், அப்படி இந்தத் தலம் பிரபஞ்சத்தோடு மணிப்பூரக சக்கரத்தை ஒருங்கிணைக்க வைத்து பலன்களை ஈர்த்துத் தரும்.
“மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே
மாசற்ற பிறைபோலே கோட்டையாகும்
மாலினுட வளையம்போல் பத்திதழதான்
பத்தமு னச்சரத்தின் பயனைகேளு
தாலினுட ஜனகமா முனியின்தாகந்
தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும்
ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு
அதன் பீசம் வங்கென்று அறியலாமே”
என இந்த சக்கரத்தை போகர் பாடுகின்றார்.
இந்த சக்கரம் சுவாதிஷ்டான சக்கரத்தில் இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் அமைந்துள்ளது, இச்சக்கரம் மணிபோல் ஒளிரும் தன்மையுடையது என்பதால் இதனை மணிப்பூரகம் என்றார்கள் சித்தர்கள்.
நடுவில் சதுரம், அதைச் சுற்றி சக்கரம் என்ற வட்டம், சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை ,வட்டத்தை சுற்றி பத்து தாமரை இதழ்கள் வடிவம் கொண்டது இது என்பது சித்தர்கள் சொன்னது.
அதை ஒரு ஸ்லோகமும் சொல்கின்றது,
“தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்”
தாயே, நீலமேக ரூபமான,மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிப்பூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது என தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார் ஆதிசங்கரர்.
இந்த மணிப்பூரக சக்கரம்தான் மானிட சுபாவ உணர்ச்சிகளுக்கு ஆதாரமானது. அதாவது பந்தபாசம், நியா அநியாயம் , சுயநலம், பொதுநலம் என எல்லா உணர்வுகளும் இங்குதான் தீர்மானிக்கப்படும்.
அதாவது மாயைகள் இருக்குமிடம் உதித்து ஆடும் இடம் இதுதான். ஆத்மாவினை சிறைபிடிக்கும் உணர்ச்சிகள் வரும் இடமும் இதுதான்.
இந்த மணிப்பூரகம் சரியாக இருந்தால் மன உறுதி, விடா முயற்சி, தைரியம், புது புது படைப்புச் சிந்தனைகள், புத்தாக்கச் சிந்தனைகள் , எதற்கும் கலங்காத நிலை ஆகியது இங்கேதான் உதிக்கும்.
இந்த சக்கரம் சரியில்லை என்றால் மனக்குழப்பம் , தீராக் கவலை, மன உறுதியில்லாமை, புதிய முயற்சி இல்லாமை, தெளிவு இல்லாமை, மூர்க்கம், பதட்டம், முரட்டு வாதம் என எல்லா குழப்பமும் வரும்.
இந்த சக்கரம் சரியில்லை என்றால் உடல்சார்ந்த கோளாறுகளும் வரும். சீரண கோளாறு, மூச்சுக் கோளாறுகள்,
அல்சர், வயிற்று வலி, கீல்வாதம், நீரிழிவு, மண்ணீரல் சார்ந்த கோளாறுகள், கணையம் சார்ந்த பிரச்சினைகள் என எல்லாமும் இங்கிருந்தான் வரும்.
இந்த சக்கரத்தை சூரிய மையம் எனவும் அழைப்பார்கள், சூரியனுக்குரியது என்றால் அக்னி தத்துவம் என்றாகும்.
இந்த சக்கரம் வயிற்றில் இருப்பதை அவதானிக்கலாம், அவ்வகையில் ஒரு நெருப்புத்தான் உணவை செரிக்கவைக்கும், உணர்வுகளில் வயிறு எரிவதை சொல்லும். அவ்வகையில் இது வெப்பம் சார்ந்த சக்கரம்.
வயிற்றிலிருந்துதான் உணவு செரிக்கப் பட்டு சக்தி உடலெல்லாம் செல்வது என்பது உடலியல் அமைப்பு, அதேபோல இங்கிருந்துதான் நல்ல சக்திகள் உருவாகி நல்ல நாடிகள் உருவாகி சிந்தனைகளை வலுப்படுத்துகின்றன என்பது யோக சூட்சுமம்.
இதுதான் தன் கர்மத்தை தன் விதியினை நிர்ணயிக்கும் சக்கரம். இந்த சக்கரம் துலங்கியோர் தங்கள் கர்மத்தை உணர்வார்கள், விதியினை உணர்வார்கள்.
இந்த கர்மம் துலங்கியவருக்கு கர்மம் துலங்கும், அந்த பிறப்பின் நோக்கத்துக்கு செல்லும் வழிகள் துலங்கும். அதை நோக்கி இழுத்துச் செல்லும்.
ஆழ கவனித்தால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது தொப்புள் கொடிதான் குழந்தையின் தொடர்பாகின்றது. இந்த தொப்புள் கொடி இருக்குமிடம்தான் இந்த சக்கரமும் அமையும்.
அவ்வகையில் கர்ம வினை, குலவழி கர்மம் எல்லாம் இங்கேதான் பதிவு செய்யப்படுகின்றன.
“உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை” என திருமூலர் இதனைத்தான் பாடுகின்றார்.
இந்த சக்கரம்தான் இருவகை சக்திகளை கொடுக்கின்றது, ஒன்று உணவு செரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு அந்த வெப்பத்தில் உடலுக்கு தேவையான சக்தியினை கொடுப்பது.
அதே பகுதியில் இருக்கும் சக்தி மையம்தான் மனதுக்கு தேவையான எல்லாப் பலங்களையும் கர்ம வினைக்கான காரியங்களையும் கொடுப்பது.
இந்த சக்கரம் சரியாக துலங்கினால் அதிகம் உண்ணவேண்டி இராது. ஒருபொழுது உணவிலே சக்திபெற முடியும், அதுவும் இல்லை என்றால் உணவு இல்லாமல் நீரில், காற்றிலே சக்திப்பெற்று வாழமுடியும்.
யோகியர், ஞானியர் உணவில்லாமல் வாழும் ரகசியம் இதுதான். இந்த சக்கரம் துலங்கினால் எல்லாம் சரியாகும்.
சூரிய தத்துவம் என ஏன் சொல்வார்கள் என்றால் இதுதான். உடலுக்கு முக்கிய ஆதாரம், சூட்சும சக்திகளின் நாடி இயக்கத்தின் ரகசியம் இதுதான்.
இச்சக்கரம் துலங்கினால் எல்லாம் ஒருவனுக்கு சரியாகும், அவனது கர்மா துலங்கும், துலங்குவதோடு மட்டுமல்ல அதனை செய்யும் வைராக்கியமும் வரும்.
இந்தத் தலம் அதற்கானது. இங்கே ஒருவன் வந்து வணங்கும்போது அவனின் மணிப்பூரக சக்கரம் துலங்கும். அந்தச் சக்கரம் துலங்குவதற்குரிய சக்திகளை பிரபஞ்சத்தில் இருந்து இந்த மூன்றாம் சப்த விடங்கர் ஈர்த்துத் தருகின்றார்.
அதனால் அந்த ஆலயம் முழுக்க சக்தி நிரம்பியிருக்கின்றது, அங்கு சென்றுவழிபடுவோர்க்கு தன் கர்மா புரிகின்றது, முக்கியமாக ஞானத்தெளிவு கிடைக்கின்றது.
வேண்டாத மாய எண்ணங்கள் அகலுகின்றன. எது உண்மை, எது மாயை என்பது விளங்குகின்றது.
இந்த தத்துவத்தைத்தான் அங்கே நடந்த புண்டரீகர் கதை, அதிபத்தர் வரலாறு, மோகினி அம்சம் என எல்லாமும் சொல்கின்றன.
காரணங்கள் இல்லாமல் காரியம் இல்லை. தத்துவ மார்க்க போதனைகள் இல்லாமல் எந்த வரலாறும், திருவிளையாடலும் இந்து ஆலயங்களில் இல்லை.
அங்கே சொல்லப்படும் எல்லா புராண சம்பவங்களும் ஒவ்வொரு தத்துவத்தை போதிப்பவை, அவ்வகையில் இவைகளெல்லாம் முழுக்க மணிப்பூரக தத்துவதின் தாத்பரியத்தை போதிப்பவை.
முதலில் அந்த புண்டரீக முனிவர் கதையினை காணலாம். அவர் உடலோடு கயிலாயம் செல்ல முனைந்தார் என்பது அவர் உடல்பால் கொண்ட தன்னலத்தை காட்டுகின்றது.
அவரால் உடல் மேலான ஆசையினை விட முடியவில்லை, இந்த உடலே எல்லா இன்பங்களுக்கு காரணம், கயிலாயத்தில் இந்தக் கண்ணால் காணவேண்டும், இந்தக் கையால் மலர்தூவ வேண்டும், இந்தக் கால்கள் அங்கே நடமாடவேண்டும், இந்த வாயால் சிவனை பாடவேண்டும் என நம்பிக்கொண்டிருந்தார்.
அதாவது என் உடல். என் கண் , என் கால் எனும் ஒரு தன்னல மாயை அவரிடம் இருந்தது, அந்த மாயை அவரை அலைகழித்தது.
உடல் அழியக்கூடியது. அதுதான் நியதி. விதி என்பதை மறுத்து அழியா உடல் வேண்டும் எனும் மாயையில் சிக்கி, அழியக்கூடியதை அழியாததாக மாற்றப் போராடினார்.
அவருக்கு இங்கேதான் சிவன் ஞானம் கொடுத்து உடலை தன்னோடு ஏற்றுக்கொண்டார்.
உடலோடு முனிவர் கயிலாயம் செல்ல விரும்பினார் என்பது பந்தபாச மயக்கத்தில் தன் உடல் மேலான பந்தத்தில் முனிவர் சிக்கியதைக் காட்டுகின்றது.
அதாவது இங்கேதான் அந்த முனிவருக்கு மணிப்பூரக சக்கரம் துலங்கி, தன் உடல் என்பது மாயை என்பதும், அது அழியக்கூடியது எனும் ஞானம் கிடைத்ததும், மணிப்பூரக சக்கரம் துலங்கியதால் அதனை அவர் பெற்று பின் முக்தி அடைந்தார்.
அவரின் பந்தபாசம் அறுபட்டது.
அதிபத்தர் வரலாறு அதைத்தான் சொல்கின்றது. அத்தலத்தில் வணங்கித்தான் அதிபத்தருக்கு தன் கர்மா புரிந்தது, தன் விதி புரிந்தது, அந்த சக்கரம் துலங்கித்தான் எந்த வலியும், எந்த இழப்பும் ஏற்று தன் கொள்கையில், கர்மாவில் நிற்கும் சக்தியினைப் பெற்றார்.
அவரின் கதை எல்லோரும் அறிந்தது. மீனவரான அவர் தான் பிடிக்கும் முதல் மீனை சிவனுக்காக கடலில் விட்டுவரும் வழக்கம் வைத்திருந்தார்.
அவரை சோதிக்க நினைத்த சிவன் வறுமையினைக் கொடுத்தார், மீன்கள் பிடிபடுவதை குறைத்தார், அந்த வறுமையிலும் கிடைத்ததில் ஒன்றை சிவனுக்காக கடலில் இட்டார்.
ஒரு மீன் கிடைத்தாலும் அதையும் விட்டுவிட்டு வைராக்கியமாக நின்றார், அதனால் வறுமை வந்தது. குடும்பம் சிதைந்தது. உணவுக்கும் வழியின்றிப் போனது.
அந்நிலையிலும் அவர் தன் கர்மாவில் சரியாக இருந்தார். கடைசியில் தங்கமீன் ஒன்று முத்தும் பவளமும் கொண்டு ஜொலித்து, அவருக்கு கிடைத்தபோதும், அதை சிவனுக்காக கடலில் விட்டு வெறும் கையோடு கரையேறினார்.
அதாவது தங்கமீன் கிடைத்தாலும் தன் கர்மப்படி அது முதல்மீன் என்பதால் சிவனுக்கு என விட்டுவந்தார், அந்த பக்திக்கு சிவன் இறங்கி வந்து அவர் இழந்ததை எல்லாம் கொடுத்தார்.
(இன்றும் அங்கு மீனவர் இறந்தால் சிவனுக்கு சாத்திய மாலையும், வஸ்திரமும் அந்தப் பிணத்துக்கு சாத்தப்படும், அதிபத்த நாயனார் நினைவாக அக்குலத்துக்கு அம்மரியாதை உண்டு.
கடலில் தங்கமீன்விடும் வைபவம் அவர் குருபூஜையில் உண்டு)
எல்லாம் இழந்த நிலையில், தன் குலம், குடும்பம் செல்வாக்கு, சொத்து என எல்லாம் இழந்த நிலையிலும் அவர் தன் நிலையில் சரியாக வைராக்கியமாக இருந்தார்.
இந்த ஆலயம் துலக்கிய மணிப்பூரக சக்கரம் அவருக்கு அந்த வலிமையினை, வைராக்கியத்தை கொடுத்தது, முழு பலத்தை கொடுத்தது.
மோகினி கதை இன்னும் ஆழமாக அந்த தத்துவத்தை சொல்கின்றது, ஒருவன் கர்மவினைப்படி எது கிடைக்க வேண்டுமோ அதை பிரபஞ்சம் சரியாகத் தரும்.
மோகினி தத்துவம் நல்ல சக்தியினை நல்லோர்க்கு வழங்கியதை சொல்லும் குறியீடு. அமிர்தம் என்பது அசுரர்க்கு கிடைத்திருக்குமானால் பெரும் அழிவுகள் நடந்திருக்கும்.
அவர்களை ஒரு மாயையில் தள்ளிய பெருமாள், அந்த மாயையில் தேவர்கள் சிக்காமல் காத்து அமிர்தம் அருளினார்.
ஆம். அந்த மோகினிக்கு அசுரர்கள் மயங்கினார்களே தவிர் தேவர்கள் அதாவது பெருமாளை அண்டியோர் மயங்கவில்லை. அவர்கள் சரியாக பெறவேண்டியதை பெற்றார்கள், மோகினிக்கு மயங்காமல் அமிர்தம் உண்பதில் சரியாக இருந்தார்கள்.
மோகினி தத்துவம் சூட்சுமமாக இங்கே போதிப்பது அதைத்தான். இந்த சக்கரம் துலங்கப்பெற்றோருக்கு மாய மயக்கம் வராது.
இன்னும் தசரதன் கதை ஒரு தத்துவத்தை போதிக்கின்றது, நவகிரகங்கள் கர்மத்தை செய்யவைப்பவை, கர்ம பாதிப்பை தருபவை.
அதுவும் சனிபகவான் கர்மவினைக்கு ஏற்ப நியாய தர்மங்களை வழங்குவார்
ஒருவனின் பந்தபாசம், வைராக்கியம், மன உறுதி, மாய மயக்கமெல்லாம் கர்மவினை தொடர்பாக வருவது, அந்த தொப்புள்கொடி உறவை அந்தச் சக்கரம் அமைவிடத்தில் கண்டோம்.
இந்த தலம் நவகிரகங்கள் கர்மவினைப்படி பாதிக்கா வண்ணம் மணிப்பூரக சக்கரத்தை துலக்குகின்றன. இத்தலத்தில் வழிபட்டால் நவகிரக பாதிப்பு இல்லை என்பதையே சிவனை நோக்கி அமைந்திருக்கும் நவகிரகச்சிலைகள் காட்டுகின்றன.
அதாவது வழமையாக சூரியனை நோக்கித்தான் நவகிரகங்கள் இருக்கும். இங்கே எல்லா நவகிரகங்களும் சிவனை நோக்கி இருப்பது அவரே சூரியன், அவரே நாயகன் என்பதை காட்டுகின்றது.
அங்கே மணிப்பூரக சக்கரத்தை சூரிய சக்தி சக்கரம் என சொல்வது சரியாக பொருந்துவதை அவதானிக்கலாம்.
இங்கே சிவன் சூரியனுக்கு ஒப்பான சக்தியுடன் இருக்கின்றார். அதாவது சப்த விடங்கர் அருளுடன் அந்த மணிப்பூரக மையத்தை தூண்டும் சக்தியோடு இருக்கின்றார் என்பதை சூசகமாக இந்தக்காட்சி சொல்கின்றது.
இங்கே சிவனுக்கு சுந்தர விடங்கர் என்றும், அவர் ஆடும் நடனம் தாரங்க நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.
ஏன் சுந்தரரை சொல்கின்றார் என்றால், சுந்தரர் என்றால் அழகு , ஜொலிப்பது எனப் பொருள்.
தலையில் நிலவை தாங்கிய சிவனை சோமசுந்தரர் என்பார்கள். இந்த மணிப்பூரக சக்கரத்தின் அமைப்பு பற்றி நாம் முன்பே கண்டோம்.
அது பிறைநிலா இதழ்களை உடையது என்கின்றார்கள் போகர் முதலான சித்தர்கள். ஆதிசங்கரர் “இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது” என மணிப்பூரக சக்கரத்தை சொல்கின்றார்.
இந்த காட்சியினைத்தான் இங்கே சுந்தரர், சுந்தர விடங்கர், ஜொலிக்கும் பிறை சக்கரமான மணிப்பூரகத்துக்கு சக்தி கொடுக்கும் சுந்தர விடங்கர் எனப் போதிக்கின்றார்கள்.
அப்படியே தாரங்க நடனம் ஆடும் சிவன் என்றார்கள் ஏன்?
தாரங்ம் என்றால் கடல் அலை எனப பொருள், அலை போல் ஆடும் சிவன் எனப் பொருள்.
இந்துமதம் இன்றைய விஞ்ஞானம் சொல்லும் விஷயங்களை என்றோ சொன்னது, அவ்வகையில் ஆற்றல் அலைவடிவில் பரவுகின்றது என விஞ்ஞானம் சொல்வதை பாற்கடலில் படுத்திருக்கின்றார் பெருமாள், அவரிடம் இருந்து அலை அலையாக ச்கதி வருகின்றது என்பதை இந்துமதம் போதித்தது.
இன்று இதயத்துடிப்பு அலைகள் நுண் அலைகளை மிக மிக நுணுக்கமான எந்திரங்கள் பதிவு செய்வதை பார்த்தால் ஒரு அலைவடிவம் கிடைக்கும்.
சூரியனில் இருந்துவரும் ஒளி ஒரு அலைவடிவம், பிரபஞ்ச கதிர்கள் ஒரு அலைவடிவம், என எல்லாமே இங்கு அலைகளென சக்திகள் கடத்தப்படுகின்றன.
மின்காந்த அலைகள் என விஞ்ஞானமும் தன் கண்டுபிடிப்பை சொல்கின்றது.
இந்த அலைவடிவத்தில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது, இந்த அலைவடிவத்தில்தான் உடலில் சக்தி பாய்கின்றது என்பதை என்றோ சொன்ன இந்துமதம், இந்த அலைவடிவில்தான் சூரிய சக்தி மையம் எனும் இந்த சக்கரமும் ஆற்றலை கடத்துகின்றது, இங்கிருந்து அலை அலையாக சக்தி உடலெங்கும் பாய்கின்றது என்பதை சொன்னது.
நாகப்பட்டினத்த்தில் இருக்கும் காயாரோகணேசுவரர் ஆலயம் இந்த சுந்தர சப்தவிடங்கரால் மணிப்பூரக சக்கரம் துலங்கும் எல்லா அருளையும் சக்தியினையும் பிரபஞ்சத்தில் இருந்து ஈர்த்துத் தருகின்றது.
அங்கு சென்று வணங்கினால் உடல்ரீதியாக வயிற்றில் இருக்கும் நோய்கள் எல்லாம் அகலும், உடல் ஆரோக்கியமாகும்.
அப்படியே மணிப்பூரக சக்கரம் துலங்கினால் ஒவ்வொருவரின் கர்மா தெளிவாகத் தெரியும், பிறப்பின் நோக்கம் தெரியவரும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வைராக்கிய மனம் கைக்கூடும்.
பந்தபாச மயக்கங்களில் மனம் சிககாது, மாய மயக்கங்களில் சிக்காது. எல்லாம் தெளிந்து மனம் கர்மம் ஒன்றை சரியாக செய்யும் வைராக்கியத்தை அடையும்.
புண்டரீக முனிவர் தன் பந்தபாசம் துறந்தார், அதிபத்தர் தன் வைராக்கியத்தில் கர்மத்தை சரியாகச் செய்தார்.
இங்கே நவக்கிரகங்களும் அருள்பாலிக்கின்றன, இங்கு வந்து வழிபடுவோர்க்கு கர்மம் சரியாக உணரப்படுவதால் நவக்கிரக பாதிப்புக்கள் ஒரு காலமுமில்லை.
வயிறு சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள் இங்கே வணங்கினால் பரிபூரண சுகம் கிடைக்கும், குழப்பமான மனநிலைக் கொண்டவர்கள், மயக்கத்தில் சிக்கியிருப்போர், கர்மம் புரியாதோர், விதியின் வழி புரியாதோர், வைராக்கியமில்லா பலவீனமான மனம் கொண்டோர், தன்னம்பிக்கையற்றோர் போன்றவர்கள் வழிபட்டால் எல்லாம் மாறும்.
அந்தச் சுந்தர விடங்கர் உங்களை எதிர்பார்த்து அங்கே அருள் அலைகளை அலை அலையாக வீசி காத்திருக்கின்றார், அங்கே சென்றுவழிபட்டால் உங்கள் மணிப்பூரக சக்கரம் துலங்கும், அது ஒளிவீச ஓளிவீச உங்கள் வாழ்வே ஒளிவீசும். இது சத்தியம்.
அந்தப் புண்டரீக முனி சிவனில் ஜோதியாக கலந்ததும் அந்த ஒளிதான். அதிபத்தருக்கு தங்கமீனாக வந்ததும் அந்த மணிப்பூரக ஒளிதான். தசரதனை காத்து நவக்கிரக பாதிப்பில் இருந்து மீட்டதும் அந்த ஒளிதான்.
அந்த ஒளிவெள்ளம் உங்களிலும் பிரகாசிக்கும் , நீங்களும் துலங்கி பலரை துலங்க வைப்பீர்கள், அந்த சுந்தர விடங்கர் அந்தத் தனி அருளை உங்களுக்கு அருள்வார். அது சர்வ நிச்சயம்.