சரஸ்வதி அந்தாதி – முன்னுரை.
சரஸ்வதி அந்தாதி – முன்னுரை.
இந்துக்களின் தனிச் சிறப்புவாய்ந்த மொழி தமிழ், அது சிவபெருமானால் உருவாக்கப்பட்டு அகத்தியனாலும் தொல்காப்பியனாலும் முறையாக வகுக்கபட்டு மதுரையில் சிவனைத் தலைவனாகக் கொண்ட தமிழ்ச்சங்கத்தில் வளர்ந்த மொழி.
அது உருவான நோக்கமே பரம்பொருளை இனிமையாகவும், அழகாகவும், உருக்கமாகவும் பாடவேண்டும் என்பதே.
தெய்வமும் தனக்குரிய புலவர்களை அப்படித் தேர்ந்தெடுத்து உருவாக்கியே வந்தது.
விநாயகப் பெருமானுக்கு ஒளவை வாய்த்தாள், முருகனுக்கு நக்கீரர் முதல் பலர் வந்தார்கள், கண்ணகி எனும் பகவதி இளங்கோவினை ஈர்த்துக்கொண்டாள்.
சிவபெருமான் சைவக்குரவர் நால்வரை ஈர்த்துத் தேவாரமும் திருவாசகமுமாகப் பெற்றுகொண்டார்.
கண்ணன் ஆண்டாளை ஈர்த்துக்கொண்டான், அன்னை சக்தி காளமேகம் உள்ளிட்ட யார் யாரையோ ஈர்த்துக்கொண்டாள்.
வள்ளுவன் ஒரு வைஷ்ணவனாக இருக்க வாய்ப்பு உண்டு.
இங்குத் தெய்வங்கள் தங்களுக்குரிய புலவனைத் தானே ஈர்த்துத் தன்பால் அழியாக் காவியங்களைப் பெற்றுக்கொள்ளும்.
இது தமிழில் மட்டுமல்ல இந்துஸ்தானம் முழுக்க ஒரு வழமையாய் இருந்தது, தமிழில் நாம் சில ஆதாரங்களைச் சொல்லமுடிந்தது, இவை எல்லா இந்துஸ்தான மொழியிலும் உண்டு.
அப்படியான இந்துஸ்தானத்தில் வடக்கே காளிதாசனும் தமிழ்மொழியில் கம்பனும் அழியா இடம் பிடித்தவர்கள். இருவரைப் போல எழுதியவன் எந்த மொழியிலும் எக்காலத்திலுமில்லை.
அதற்கு ஒரே காரணம் அன்னை காளியின் அருள்.
இருவர் வாழ்வும் ஒரே சாயலானது, ஒரே மாதிரியானது, ஒரே மாதிரி பல பொருத்தங்களைக் காணமுடியும், ஆச்சரியங்களைக் காணமுடியும், பெரும் அதிசயமும் அற்புதமும் காணமுடியும்.
கம்பனின் வாழ்வினை இப்போது பார்க்கலாம்.
சோழ நாட்டின் தேரழுந்தூர் பக்கம் பிறந்த அவன் பிறப்பும் குலமும் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தது அல்ல, இளம் வயதிலே அனாதையாக அலைந்திருக்கின்றான், சடையப்ப வள்ளல் எனும் செட்டியாரிடம் வேலைக்குசா சேர்ந்திருக்கின்றான்.
அந்தச் சடையப்பன் கண்முன் இவனுக்கோர் தயவு கிடைத்திருக்கின்றது, அவன் இவனை ஆதரித்திருக்கின்றான்.
அப்படி அவன் ஆதரவில் வாழ்ந்தவன் பல வேலைகளையும் செய்திருக்கின்றான், அதில் ஒன்று கம்பு வயலுக்குக் காவல் இருப்பது.
அங்கு காவலுக்குச் செல்லும்போதெல்லாம் தாய் தந்தை இல்லாத் தனக்கு அன்னை காளியே தாய் எனக் கருதி அருகிருக்கும் காளியினை வணங்கி விளக்கேற்றி வைப்பது அவனுக்குப் பிடித்தமானது.
அப்படிக் காளியினை வழிபட்டு கம்பு வயலுக்குக் காவல் இருந்த ஒரு நாள் அவனை அறியாமல் தூங்கிவிட்டான், அப்போது சிற்றரசனான காளிங்கராயனின் குதிரை கம்பு வயலைமேயத் தொடங்கிவிட்டது.
சிற்றரசனின் குதிரை அது, அதை விரட்டினால் அடித்தால் அவன் விடமாட்டான், மேயவிட்டால் சடையப்பன் விடமாட்டான் என அஞ்சியவன் நேரே சென்று காளியிடமே “தாயே என்னைக் காப்பாற்று” என அழுது வீழ்ந்துவிட்டான், அப்போது அவனுக்குப் பதின்ம வயதிருக்கலாம்.
முற்பிறப்பின் தொடர்ச்சியாக காளி நேரில் வந்து , “மகனே, உன் நாவை நீட்டு” எனச் சொல்லி அவ்வண்ணமே அவன் நாவில் அட்சரத்தை எழுதி “இனிப் பாடு” எனச் சொல்லி மறைந்தாள்.
அப்போதும் குதிரை பற்றிய அச்சத்தில் இருந்தவன் பாடினான்.
“வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே
ஆய்த்த மணலி லணிவரையிற் – காயத்த
கதிரைமா ளத்தின்னுங் காளிங்க னேறும்
குதிரைமா ளக் கொண்டு போ”
எனக்கு அருள் செய்த வையிரபுரம் காளியே, நிலத்தில் விளைந்த கதிரை உண்ட இந்தக் காளிங்க ராயனின் குதிரையினை நீயே கொண்டுபோ எனப் பாடினான்.
அக்குதிரை உடனே வீழ்ந்ந்து இறந்தது.
அன்னையே என அலறியவன் மறுபடி “குதிரை மீளக் கொண்டுபோ” எனச் சொல்ல குதிரை எழுந்து ஓடிற்று.
அதன் பின் அவன் கவிஞனானான், ஒரு தெய்வீக சக்தி அவன் கவிக்கு இருந்தது, அவன் புகழ் பரவிற்று, சடையப்பன் அவனைத் தன் அதிகாரிபோல் வைத்துக்கொண்டான், மரியாதை கூடிற்று.
இவனின் கவித்திறமையினை அறிந்த குலோத்துங்க சோழன் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்து அவையில் வைத்துக்கொண்டான், ஒட்டகூத்தர் இருந்த சபையில் கம்பனும் இருந்தான்.
ராமபிரானுக்கு அழியா காவியம் இயற்றும் எண்ணம் குலோத்துங்கனுக்கு வந்தது, தன் அவையில் சிறந்தோர் அதை எழுத உத்தரவிட்டான்.
உண்மையில் எல்லோரும் ராமாயணம் பாடினார்கள், கம்பனும் எழுதினான். ஒட்டகூத்தரும் எழுதினான். பலரும் எழுதினார்கள்.
ஆனால், கம்பனின் வேகத்துக்கும் வார்த்தை ஜால உருவகத்துக்கும் ஆழ்ந்த பொருள்கொட்டும் வரிகளுக்கும் முன்னால் யாரும் நிற்கமுடியவில்லை.
குலோத்துங்க சோழன் அடிக்கடி எதுவரை பாடியிருக்கின்றார்கள் எனச் சோதிப்பது வழமை, உண்மையில் முதலில் பாடி முடித்தது ஒட்டகூத்தர்தான்.
ஆனால், கமபனின் பாடல்முன் தன் பாடல் நில்லாது என அறிந்தவர் உடனே தன் ஓலைகளைக் கிழிக்கத் தொடங்கினார், அதை அறிந்த கம்பன் அவரின் பாடல்கட்டை எடுத்து அதில் சிறந்த பாடல்களை தன் பாடலில் சேர்த்துக் கொண்டான்.
கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டம் அவன் பாடியது அல்ல, ஒட்டகூத்தருடையது, எனினும் கம்பன் பாடலாகவே அறியப்பட்டுவிட்டது.
சோழன் அவையில் அவனுக்குப் பெரும் புகழ் இருந்தது, “புவிசக்கரவர்த்திகள் போற்றும் கவிசக்கரவர்த்தி கம்பன்” எனும் பெயர் அப்படித்தான் உண்டாயிற்று.
எந்த அளவு செல்வாக்கு இருந்ததோ அந்த அளவு பொறாமையும் இருந்தது, காரணம் அவன் பிறந்த குலமும் குடிபிறப்பும் அப்படி.
ஒருவன் தன் திறமையால் உயரும்போது அவனின் பலகீனங்களைச் சொல்லி பரிகசிக்கும் உலகம் கம்பனை அப்படித்தான் பழித்தது.
அவனோ தன் காளியிடம் எல்லாம் சொல்லி கடந்துவந்தான், அவனுக்கு மணமாகி மகன் பிறந்தான், அம்பிகையின் அருளாக அவனுக்கு அம்பிகாபதி எனப் பெயருமிட்டான்.
வரலாற்றில் நிறைய மறைக்கப்பட்டுவிட்டன, அம்பிகாபதிக்கு முதல் விவாகம் முடிந்தது, அந்தத் திருமணத்துக்குத் தாமதமாக வந்த சடையப்பரை அவன் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவில்லை எனும் சலசலப்பு எழுந்தது.
“அவரை வைக்க வேண்டிய இடம் எனக்குத் தெரியும்” எனச் சொல்லித்தான் கம்பராமாயணத்தில் சடையப்பனுக்கு தனி இடம் கொடுத்தான் கம்பன்.
அம்பிகாபதியும் தனிப்பெரும் கவிஞன், அவன் கவியில் மயங்கினாள் இளவரசி. கம்பனைப் பழிவாங்க முடியாக் கூட்டம் அரசனைத் தூண்டிவிட்டு மகனைக் கொன்று கம்பனைத் தீரா புத்திரசோகத்தில் தள்ளிற்று.
அதன்பின் சோழநாட்டில் வாழவிரும்பா கம்பன், பாண்டிய நாட்டுக்குச் சென்றிருக்கின்றான். அப்போதைய பாண்டிய மன்னனுக்குப் பாண்டிய நாட்டின் தென் எல்லையான வள்ளியூரில் ஒரு கோட்டை இருந்திருக்கின்றது.
அங்கு தான் வணங்கிய காளி சிலையுடன் சென்றவன் சிலகாலம் தங்கியிருக்கின்றான், அவன் வணங்கிய காளியின் வடிவமே வள்ளியூரில் பழைய பாண்டிய மன்னர் கோட்டை இருந்த “மூன்று யுகம் கண்ட அம்மன்” ஆலயத்தில் உண்டு என்பது ஒரு செய்தி.
எனினும் பாண்டிய நாடு அவனுக்குப் பொருந்தவில்லை.
சக்திவழிபாடு மிகுந்ததும், காளியினைப் பகவதி எனச் சொல்லி வணங்கும் சேரதேசம் அவனை ஈர்த்தது. அது ஒரு வசீகரமான பூமி, கலைகள் அங்கேதான் செழித்திருந்தன.
ஒளவை, இளங்கோ என எல்லோரும் அங்கேதான் உருவானார்கள், சுந்தமூர்த்தி நாயனாரே அங்கிருந்துதான் கைலாயம் சென்றார்.
சேர நாட்டில் வழிபாடும், கவிஞர்களுக்கான மரியாதையும் தனி இடத்தில் இருந்தது, கலைகளும் பக்தியும் அங்கு வளர்க்கப்பட்டன.
நாலு பக்கமும் காளி எல்லையிட்டு நிற்கும் நாடு அது.
தெற்கே கன்னியாகுமரி பகவதி, வடக்கே கொல்லூர் மூகாம்பிகா, கிழக்கே ஹேமாம்பிகா, மேற்கே கொடுங்கல்லூர் பகவதி எனக் காளி எல்லையிட்டு நிற்கும் காளியின் பூமி அது.
அந்தக் காளி தேசத்துக்கே சென்றான் காளி மைந்தன்.
சேரமன்னன் அவனுக்குப் பெரும் இடம் அளித்தான், இன்றைய பத்மநாபபுரம் கோட்டையின் கிழக்கு பக்கம் அவன் வசித்திருகின்றான்.
(அதன் அடையாளமாக அவன் வணங்கிய சரஸ்வதி சிலையும் அந்தத் தேவாரகட்டு ஆலயமும் இன்றும் அங்கு உண்டு)
அந்தச் சேர்நாட்டிலும் அவனுக்கு எதிரிகள் அமைந்தார்கள், சோழன் அவையில் நடந்த சதியெல்லாம் அங்கும் நடந்தது.
அவன் மூலம் எது என விசாரித்தவர்கள் அவன் அவையில் ஏற்ற கூடாத ஒரு குலம் எனச் சொல்லி மன்னனிடம் ஆத்திரமூட்டி அவனைத் தொலைக்கத் திட்டமிட்டார்கள்.
அப்படியே ஒருவனை அப்படியான குலத்தில் இருந்து பிடித்துவந்து அரசனிடம் அவன் தன் அண்ணன், தன் குடும்பம் எனச் சொல்லச் சொன்னார்கள்.
காசுக்கு ஆசைபட்டவன் அப்படியே வந்து அவையில் எல்லோரும் இருக்க “கம்பன் என் சகோதரன் நாங்களெல்லாம் இங்குவரக்கூடாத குலம், இவன் என்னைவிட்டு பிரிந்துவந்துவிட்டான், இவனை என்னோடு வரச்சொல்லுங்கள்” என முறையிட்டான்.
பிறப்பால் அனாதயானவனும் உறவென்று சொல்ல யாரும் இல்லாதவனுமான கம்பன் வசமாகச் சிக்கினான், அவன் வாதமெல்லாம் எடுபடவில்லை, அரசன் கம்பனைக் காக்க வேண்டி அவையினை ஒத்திவைத்தான்.
கம்பன் தன் அன்னை காளியிடம் அழுதான், அவளை வேண்டி அழுதான்.
“கம்பு வயலுக்கு காவல் இருந்தவனை ஆட்கொண்ட நீ , இந்த அவமானத்துக்கா அருள் தந்தாய்” என அழுதான்.
அந்தக் கண்ணீருக்கு இறங்கி வந்த காளி தன் வலதுகால் சிலம்பை கழற்றி கொடுத்துச் சொன்னாள்.
“என் மகனே அஞ்சாதே, அவையில் இதோ என் அன்னையின் ஒருகால் சிலம்பு, இதுபோல் இவனிடமும் ஒரு சிலம்பு இருந்தால் என் தம்பி என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்” என்றான்.
சதிகாரர்கள் அரண்டனர், சாட்சியாக வந்தவன் மிரண்டான்.
பின் அவன் ஏமாற்றுபேர்வழி என அறிந்து விரட்டப்பட்டான், கம்பன் தப்பினான்.
ஆனாலும், அந்தச் சிலம்பினைக் கொண்டு அடுத்த வலை விரிக்கப்பட்டது, மிக அழகான அந்தச் சிலம்பு ராஜவம்சத்திடமும் இல்லாதது என்றான் பொற்கொல்லன், அது ஏதோ கோவிலின் சிலம்பு இவன் திருடியிருக்கலாம் என அடுத்த பழி சுமத்தப்பட்டது.
“கவிஞரே இந்தச் சிலம்பு ஏது?” எனச் சீறினான் வேந்தன்.
“என் தாயுடையது அவளே தந்தாள்” என உண்மையினை சொன்னான் கம்பன், அவை நம்பவில்லை.
குலமில்லாதவனுக்கு ஏது தாய்? அதுவும் இந்த உயர்தரமான சிலம்பைக் கொண்டிருக்கும் தாய்? இவன் பொய்யன் இவன் திருடன் என ஆரவாரித்தது சதிகார கூட்டம்.
கம்பன் எழுந்தான், என் அன்னை வருவாள் என்னைக் காப்பாள், அவள் வராவிட்டால் நானே தீயிறங்கி செத்துப்போவேன் எனச் சபதமிட்டான்.
அன்னை காளியினை நினைந்துப்பாடினான், அவன் பாடி முடிக்கும் போது அந்தக் காளியே நேரில் அவைக்கு வந்தாள்.
அவனுக்கு அவள் முழுக்கோலம் தெரிந்தது. மற்றவர்க்கு அவளின் இரு கால்களே தெரிந்தது, ஒரு கால் சிலம்பு இல்லாக் கோலத்தில் தெரிந்தது.
வந்தவள் இடிபோல் முழங்கி சொன்னாள் “இவன் என் மகன், நான் பெற்ற மகன், என் கருணைக்கோர் மகன்.
அவனிடம் சிலம்பைக் கொடுத்தவள் நான், நானே கொடுத்தேன்.
என் அன்பான மகனே, அந்தச் சிலம்பை என் காலுக்குக் கொடு” எனக் காலை மெல்லத் தூக்கி நின்றாள்.
அவை அந்தச் சத்தம் கேட்டு அரண்டது, சிலம்பு அவள் காலுக்குச் சென்றது.
இரு கால்களும் சிலம்பணிந்த கோலத்தில் சொன்னாள் “இவன் என்மகன், இந்தக் காளியின் மகன், அவன் எங்கள் குலம்…”
சொல்லி மறைந்தாள் காளி.
அவை அரண்டது, சதிகாரர்கள் சிதறி ஓடினர், மன்னன் தெண்டனிட்டு கிடந்தான், உக்கிரமாகப் பாடி முடித்த கம்பன் ஆனந்த கண்ணீருடன் நின்றிருந்தான்.
இந்த மகா அதிசயம் சேர மன்னன் அவையிலே நடந்தது, கம்பன் தன் மகன் எனக் காளியே வந்து சொல்லி அவனை உலகறியச் செய்த ஆச்சரியம் அது.
குமரிமாவட்டம் பத்மநாபபுர அரண்மனை ஓரம் அமைந்திருக்கும் அந்தத் “தேவாரகட்டு சரஸ்வதி ஆலயம்” என்பதுதான் கம்பன் தங்கி வாழ்ந்த இடம்.
அவன் சிலம்பு பெற்றதும் அங்குதான்.
பத்மநாபபுரம் என்பது வெறும் அரண்மனை அல்ல, கலை அழகு கொண்ட மாளிகை அல்ல, இந்துக்கள் பக்தியின் பெரும் அடையாளம், மாபெரும் சாட்சி அங்கேதான் உண்டு.
திருக்கடையூர் அபிராமி அன்னை ஆலயம் போலவே சிறப்பானது. கம்பனுக்கு அதிசயம் செய்த தேவாரகட்டு சரஸ்வதி ஆலயம்.
ஆம், அபிராமிபட்டரின் வாழ்வில் நடந்த சோதனை கம்பன் வாழ்விலும் நடந்தது.
அங்கே அமாவாசை அன்று நிலாவினை வரவழைத்து சரபோஜி மன்னனிடம் இருந்து பட்டரைக் காத்த அன்னை, தன் கால் சிலம்பை கொடுத்து பின் தானே வந்து சேர மன்னனிடம் இருந்து காத்தாள்.
அப்போது கம்பன் பாடிய பாடல்தான் “சரஸ்வதி அந்தாதி”
அது வெறும் பாடல் அல்ல, நாலுவரிகள் கவித்துவமாக உருவகமாகச் சொல்லிவிட்டு சென்ற பாடல் அல்ல.
அது ஒரு கவசம் , அது சூட்சுமமும் ஆழமும் வேண்டுதலும் உருக்கமும் கொண்ட பாடல்.
ஒரு காலத்தில் கல்வி வேண்டியும், கலைகள் வேண்டியும் எல்லா மாணவர்களும் கவிஞர்களும் உருக்கமாகக் கோவிலில் அம்மன் சந்நிதி முன் பாடிய பாடல்.
அந்தச் சரஸ்வதி அந்தாதி பாடலைத்தான் அடுத்துப் பார்க்கப் போகின்றோம்.
ஒவ்வொரு பாடலாகப் பார்க்கலாம், வாய்ப்பு இருப்பின் அந்தத் தேவாரகட்டு சரஸ்வதி ஆலயம் செல்லுங்கள், அந்தச் சரஸ்வதி சந்நிதானத்தின் தரையினைத் தொட்டு உங்கள் குழந்தைகளின் நாவில் பூசுங்கள்.
கலைகளிலும் கல்வியிலும் உங்கள் குழந்தைகள் பெரும் ஞானம் பெற்று மிளிர்ந்து ஜொலிப்பார்கள், அதை நீங்களே உணர்வீர்கள்.Type / to choose a block