சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து.

சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து.

எல்லாப் பாடலிலும் தெய்வத்தை வாழ்த்திப் பாடுதல் மரபு. ஆனால் கம்பன் திருவாழும்கோடு மகாராஜா எனும் சேர மன்னனிடம் உயிராபத்தில் சிக்கிவிட்ட நேரத்தில் பாடும் பாடல் என்பதால், இங்கு வழமையான வாழ்த்து இல்லை.

கம்பன் எப்படியான ஆபத்தில் இருந்தான் என்பதையும், அவன் அன்னையிடம் தன்னைக் காக்கச் சொல்லி வேண்டிப் பாடினான் என்பதையும் கடவுள் வாழ்த்தே சொல்லிவிடுகின்றது.

இனிப் பாடலை காணலாம்.

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா இடர்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி ”

பாடலின் முதல் வரியினைக் காணலாம் “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்” எனத் தொடங்குகின்றான் கம்பன். 64 வகையான கலைகள் உலகில் உண்டு என்பது இந்துக்கள் சொன்னது.

இந்த 64 கலைகளையும் கற்றவனாகக் கிருஷ்ண பரமாத்மா அறியப்படுகின்றான். சாந்தீபனி முனியிடம் அவனும் பலராமனும் இக்கலைகளை கற்றார்கள் என்கின்றது ஸ்ரீமத் பாகவதம்.

கலைகள் யாவும் அன்னை சக்தி எனும் மூல தேவியிடம் இருந்தே வருபவை. வித்தைக்கு அவளே அதிபதி. அவ்வகையில் கண்ணனும் காளியின் அம்சம் கொண்டிருந்ததால் வெகு இயல்பாக அதனைக் கற்றான்.

அப்படிபட்ட அந்த 64 கலைகள் எதுவென்றும் இந்துமதம் பட்டியலிட்டது.

எழுத்திலக்கணம், எழுத்தாற்றல் (லிகிதம்), கணிதம், மறை நூல் (வேதம்), தொன்மம் (புராணம்)
இலக்கணம் (வியாகரணம்), நயனூல் (நீதி சாஸ்திரம்), கணியம் ( ஜோதிட சாஸ்திரம்),அற நூல் (தர்ம சாஸ்திரம்), ஓக நூல் (யோக சாஸ்திரம்), மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்), நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்)

கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்), ருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்), உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம்)
மறவனப்பு (இதிகாசம்), வனப்பு சாஸ்திரம், அணி நூல் (அலங்காரம்), மதுர மொழிவு (மதுரபாடணம்)

நாடகம், நடனம், ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்), யாழ் (வீணை), குழல், மதங்கம் (மிருதங்கம்)

தாளம், விற் பயிற்சி (அஸ்திர வித்தை), பொன் நோட்டம் (கனகப் பரீட்சை), தேர்ப் பயிற்சி (ரதப் பரீட்சை), யானையேற்றம் (கஜப் பரீட்சை), குதிரையேற்றம் (அசுவப் பரீட்சை), மணி நோட்டம் (ரத்தினப் பரீட்சை), நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை), போர்ப் பயிற்சி (சங்கிராமவிலக்கணம்),

மல்லம் (மல்ல யுத்தம்), கவர்ச்சி (ஆகர்ஷணம்), ஓட்டுகை (உச்சாடனம்), நட்புப் பிரிப்பு (வித்வேஷணம்), காம நூல் (மதன சாஸ்திரம்), மயக்கு நூல் (மோகனம்)
வ‌சியம் (வசீகரணம்), இதளியம் (ரசவாதம்),

இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வேதம்), பிறவுயிர், மொழியறிகை (பைபீல வாதம்), மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்), நாடிப் பயிற்சி (தாது வாதம்), கலுழம் (காருடம்), இழப்பறிகை (நஷ்டம்), மறைத்ததை அறிதல் (முஷ்டி), வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

வான்செலவு (ஆகாய கமனம்),கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்), தன்னுருக் கரத்தல் (அதிருசியம்), மாயச்செய்கை (இந்திரஜாலம்), பெருமாயச்செய்கை (மகேந்திரஜாலம்), அழற் கட்டு (அக்கினி ஸ்தம்பனம்), நீர்க் கட்டு (ஜல ஸ்தம்பனம்), வளிக் கட்டு (வாயு ஸ்தம்பனம்), கண் கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்), நாவுக் கட்டு (வாக்கு ஸ்தம்பனம்), விந்துக் கட்டு (சுக்கில ஸ்தம்பனம்), புதையற் கட்டு (கனன ஸ்தம்பனம்), வாட் கட்டு (கட்க ஸ்தம்பனம்), சூனியம் (அவஸ்தைப் பிரயோகம்)

இப்படி 64 கலைகள் உண்டு. இதை எல்லோரும் அறிந்துவிட முடியாது. இதனை அறிந்தவர்களே அக்கால ராஜகுருக்களாக துரோணார், பீஷ்மர், விஸ்வாமித்திரர் போல ராஜகுருக்களாக விளங்கினார்கள்.

இவை எளிதில் எல்லோருக்கும் கிடைக்காது. பெரும் குடிப்பிறப்பு வேண்டும். மாபெரும் ஞானி குருவாக அமைய வேண்டும். அப்பொழுதும் முழுக்க 64 கலைகளையும் கற்றுவிட முடியாது. இதெல்லாம் அக்காலத்தில் அரசனுக்கும் அரச குடும்பத்துக்கும் ஆட்சிக்காக போதிக்கப்பட்ட கலைகள்.

மிக அரிதானவை என்பதை விட மிகக் கடினமானவை.

இவைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் சாமானியர் படிக்கமுடியும். குலவழியாக, ஆசான் வழியாக கற்கமுடியும். எல்லா கலைகளும் கற்பது சாமானியனுக்கு முடியாது.

கம்பன் இங்கே ஆகிய (ஆய) கலைகள் 64 கலைகள் அனைத்தையும், எனக்கு தந்தவள் அன்னை என்கின்றார்.

“ஏய உணர்விக்கும் என்னம்மை” என்பதன் பொருள் அதுதான்.

அதாவது இந்த 64 கலைகளையும் எனக்கு தந்தவள் என் அன்னை எனப் பாடுகின்றார். இங்கே ஒரு சூட்சுமத்தையும் மறைமுகமாகச் சொல்கின்றார்.

அதாவது மற்ற கலைஞனுக்கும் கவிஞனுக்கும் அல்லது எழுத்தாளனுக்கும் வித்தியாசம் உண்டு, எல்லா துறையிலும் ஒரு அறிவும் தெளிவும் கொண்டவனே நல்ல படைப்பைத் தரமுடியும்.

எல்லா துறை அறிவும் கொண்டவனே சிறந்த காவியங்களைத் தரமுடியும். அதனால் தான் பல அறிவுகளைக் கொண்டிருந்த காளிதாசனும், கம்பனும், இளங்கோவும், வள்ளுவனும், பாரதியும் அழியாக் காவியங்களைத் தந்தார்கள்.

இன்றுவரை அவர்கள் நிலைத்திருக்க இந்த பல களங்களின் ஆழ்ந்த அறிவுதான் மகா முக்கிய காரணம்.

அதைத்தான் இங்கு பாடிச் சொல்கின்றான் கம்பன். தனக்கு அப்படி 64 கலைகளையும் அன்னை உணர்த்தினாள், மனதில் இருந்தே உணர்த்தினாள் என்கின்றான், அதனையும் “ஏய” உணர்த்தினாள் என்கின்றான்.

ஏய என்றால் தகுதியான எனப் பொருள்.

அனைத்து கலைகளும் கற்க நான் தகுதியானவன் என இந்த எளியவனையும் தேர்ந்து வந்து, தன் மனதில் அமர்ந்து, எல்லா கலைகளும் உணர்த்தினாள் என் அம்மை என்கின்றான். அவள் தாயாக வந்து தனக்கு எல்லாம் அருளினாள் என மருகுகின்றான்.

அடுத்தவரியில் “தூய உருப்பளிங்கு போல்வாள்” என்கின்றான். அதாவது “தூய உரு பளிங்கு போலிருப்பாள்” என்பது பொருள். சுத்தமான பளிங்கு போன்றவள் என்பது பொருள்.

பளிங்கு என்பது நிறமற்றது அல்லது சூரிய ஒளிபோல் எல்லா நிறத்தையும் தன்னுள் கொண்டிருப்பது.

இதை புரிந்து கொள்ளுமுன் ஒரு தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் என மூன்றை பகவான் கண்ணன் கீதையில் சொல்கின்றான்.

அதில் ரஜோ குணம் அகங்காரமானது. தமஸ் என்பது சோம்பலானது.

சத்வ குணம் என்பது ஞானியருக்குரிய குணம். அதனைக் குறிக்கும் நிறம் வெண்மை

இங்கே ஒரு கலைஞனான கம்பன், கலைமகளின் மகனான கம்பன், ஏன் இந்த வெண்மை நிற உருவம் பற்றிப் பாட வேண்டும்?

அங்கேதான் இருக்கின்றது கலைகளின் ரகசியம்.

எல்லா கலைகளிலும் ஒரு உச்சம் உண்டு. நல்ல கலைஞன் அடுத்து என்ன, அடுத்து என்ன என அதில் ஏறிக்கொண்டே இருப்பான். அடுத்தடுத்து முயன்று உச்சம் அடைவான்.

அவனின் தொடர் முயற்சியில் தமோ குணம் ஒழியும், அவன் ரஜோ குணத்தில் போராடி உச்சம் தொடுவான்.

எல்லா கல்வியும் கலைகளும் உச்சம் தொடும் நேரம், அடுத்து ஏதும் இல்லை எனும் நேரம் அல்லது முடிவே இல்லாமல் இது நீளும் எனும் உண்மை தெரியும் நேரம், அவன் மனம் முதலில் சலிப்பில் வீழும். அடுத்து எதுவுமே தெரியவில்லை முடிவு தெரியவில்லை எனும் நிலை சூனியத்தில் வீழும்.

இது விஞ்ஞானி, கவிஞன், பாடகன், இசைக்கலைஞன் என எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் வரும்.

எதையோ அடைந்துவிட்டால் நிம்மதி என ஓடி ஓடித் தேடுபவன், எல்லாம் அடைந்த பின் அல்லது ஒரு கட்டத்தில் அதைத் தாண்ட முடியாமல் தவிக்கும்போது தெய்வம் இருப்பதை உணர்வான்.

ஒரு சூனிய நிலையில் எல்லாமே மாயை என்பதும், இதெல்லாம் ஏதோ பூலோக இயக்கங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மாயை என்பதும் புரியும்.

கலைகளில் அப்படி உச்சம் தொடும்போது இறை நிலை அடையமுடியும், அதுதான் சத்வ நிலை.

எல்லா கலைகளும் இறைவனிடம் மனிதனை எளிதாக இழுத்துச் செல்லும். ஆன்ம தவிப்பை அழகாகப் பயணிக்க வைக்கும். ஒரு கட்டத்தில் கலைகள் ஆன்மாவினை இறை சக்தியோடு சங்கமிக்க வைக்கும்.

கலை என்பது அகங்காரம் ஒழிக்கும். கலை என்பது இறைவனை அறிவிக்கும், கலை என்பது உடல், மனம், ஆன்மா என மூன்றையும் ஒன்றான யோகமாக்கி தெய்வ நிலைக்கு ஒருவனை உயர்த்தும்.

கலையின் பெரும் சக்தி அது, இதனாலே நல்ல கலைஞர்களிடம் எப்போதும் ஒரு தெய்வீக நிலையினை, தேஜஸைக் காணமுடியும்.

அப்படிக் கலைஞன் இறை சக்தியினை நெருங்கும் போது அவன் மனமே வெண்மையாகும்.

படிகம் வெள்ளை நிறத்தின் அருகில் வெண்மை நிறமாகவே தெரியும், அப்படி வெண்மை குடிகொண்ட மனதில் அன்னை வெள்ளை நிறமாகவே வருவாள் என்பது பொருள்.

இறை சக்தியினை நாம் என்ன வடிவில் வணங்குவோமோ அந்த வடிவிலே காணமுடியும். கீதையில் கண்ணன் சொல்வதும் அதுதான்.

கல்லையோ, மண்ணையோ, தீபத்தையோ எதனையோ ஒன்றை அவனாக நினைத்து வணங்கினாலும், நான் அவ்வடிவில் வருவேன் என்கின்றான் கண்ணன்.

அப்படி எல்லா நிறங்களையும் காட்டும் அந்த பளிங்கு, வெண்மை நிறம் அருகே வெண்மையினை காட்டும் என்பதுபோல, தன் வெண்மனதில், தன் கனிந்த வெண்மனதில் அன்னை குடிகொண்டு வெண்மை நிறமாக அமர்ந்திருகின்றாள் என்கின்றான் கம்பன்..

அப்படியே படிகம் எல்லா ஒளியினையும் தன்னுள் கொண்டு எந்நிறம் அவசியமோ அதை பிரதிபலிக்கும் என்பது போல, அன்னை எல்லா கலைகளையும் கொண்டிருக்கின்றாள். எந்தக் கலை யாருக்கு வேண்டுமோ அதனை அவர் மனமறிந்து கொடுக்கின்றாள் என்பதையும் சொல்கின்றான் கம்பன்.

தன் மனம் கவியால் சத்வநிலை அடைந்து வெண்தன்மை அடைந்ததும், அங்கு வெண்மை நிறத்திலே வருகின்றாள் தேவி என்கின்றான்.

தன் கவித்திறனால் தெய்வத்தை சந்தித்துவிட்ட கம்பன், அன்னை தன் மனக்கோவிலில் வந்து அமர்ந்துவிட்டதைச் சொல்கின்றான்.

அப்படியே கடைசி வரி பாடுகின்றான் “என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாரா இடர்”, அதாவது “என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள் இங்கு வாரா இடர்”

அப்படியானவள் என் உள்ளத்தில் இருக்கின்றாள். அதனால் எனக்கு இடர் வராது எனப் பாடுகின்றான்.

முதல் பாடலிலே, என்னைத் தேர்ந்தெடுத்து, எல்லா கலைகளையும் எனக்குத் தந்து, என் மனதில் இறைவனை அறியச் செய்து, அந்த மனக்கோவிலிலே தானாக வந்து வெண்மை உருவாக அமர்ந்திருக்கின்றாள் என் அன்னை. அவள் என் மனதில் இருப்பதால் எனக்கு என்ன இடர் வரும்? எனத் தைரியமாகப் பாடுகின்றான் கம்பன்.

இனி அடுத்த வரியினைக் காணலாம். அன்னையின் தோற்றத்தைச் சொல்லும் பாடல் இது.

அப்பாடலின் முதல் வரி “படிகநிறமும் பவளச் செவ் வாயும்” என வரும். அதாவது “படிக நிறமும் பவளச் செவ்வாயும்” என்பது பொருள்.

அவன் மனம் சத்வ குணத்தில் கனிந்து வெண்மையான நிலையில் அன்னை அங்கே வெண்ணிறத்திலே பளிங்கு, வெண்மை நிறத்தை கிரகிப்பதுபோல் கிரகித்து வந்து நிற்கின்றாள் என்கின்றான்.

அவள் வாய் சிவந்து பவளம் போல் இருக்கின்றதாம்.

இது ஒரு தத்துவத்தைச் சொல்கின்றது. அன்னையின் எச்சிலில் இருந்தே கவிகள் தெறிக்கும், கலைகள் தெறிக்கும் என்பது சாஸ்திரம். அவள் அப்படிச் சக்தியானவள் என்பதைச் சொல்ல அப்படிச் சொன்னார்கள்.

அவளின் எச்சில் பட்டாலே பல கலைகள் வரும் என்றார்கள்.

தாம்பூலம் தரித்து நிற்கும் அன்னையின் வாயில் இருந்து சிவந்த எச்சில் பட்டாலே அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காளமேக புலவர் வாழ்வு இதை அனுபவப் பூர்வமாகச் சொல்கின்றது. அன்னையின் தாம்பூலம் தரித்த வாயில் இருந்து வந்த துளியே அவருக்கு கவிபாடும் ஆற்றலை வழங்கிற்று என்கின்றது.

அன்னைக்கு தாம்பூலம் காணிக்கையாக வைக்கும் தத்துவமும் இதுதான். வெற்றிலை பாக்கு இல்லாமல் இந்துக்கள் வழிபாடு ஏன் இல்லை என்றால் இதுதான் காரணம்.

இந்த தாம்பூலத்தை ஏற்று எங்களுக்கு கலைகளைக் கொடு, ஞானத்தைக் கொடு என வழிபடுவது மரபாய் இருந்தது.

அன்னை தனக்கு அப்படித் தன் தாம்பூலம் சிவந்த வாயில் இருந்து ஞானம் கொடுத்தாள்; ஞான போதனை கொடுத்தாள். அவளின் தாம்பூலம் சிவந்த வாய் பவளம் போல் அழகு என்கின்றான்.

அடுத்த வரி “கடி கமழ்பூந் தாமரைபோற் கையும்” அதாவது “கடி கமழ் பூந்தாமரை போல் கையும்” எனப் பிரிந்து வரும் வரி.

கடி கமழ் என்றால் நல்ல வாசனை எனப் பொருள். வாசனை மிக்க தாமரை போல் அவளின் கைகள் உள்ளவனாம். இரு கைகளையும் குவித்து அவன் வேண்டும் வரத்தை தருவது போல, உள்ளங்கையினை உள்ளே குவித்து அவள் நிற்கும் கோலத்தைக் காணும்போது அக்கைகள் தாமரைப் போல் இருக்கின்றதாம்.

அப்படியே அவளின் துடி இடை பற்றி சொல்கின்றார். துடி என்றால் உடுக்கை வடிவம் எனப் பொருள். அன்னையின் இடை அவ்வளவு இடுங்கி இருக்கின்றதாம்.

உலக உயிர்களின், கலைகளின் தாயான அவளின் திருவயிற்றினையும் பாடுகின்றார் கம்பர்.

அப்படியே மூன்றாம் வரிக்கு வரலாம் “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்” என அது வரும். அனவரதம் என்றால் இடைவிடாமல் எனப் பொருள்.

அன்னையின் தோற்றம் கண்டு இரவும் பகலும் இடைவிடாமல் துதித்தால் என்னாகும் என்பதை அடுத்த பாடலில் சொல்கின்றார்.

“கல்லும்சொல் லாதோ கவி”

இது கல்நெஞ்சமும் உருகிக் கவிபாடாதோ எனப் பொருள் கொள்ளப்படும். பொதுவாக கல்போன்ற இறுகிய மனம் படைத்தவர்கள், இரக்கமில்லாதவர்கள் நல்ல கலைஞர்களாக முடியாது.

நல்ல கலை மலர, மனம் வெகு இளகிய மனமாக இருத்தல் அவசியம். அதைத்தான் இங்கே பாடுகின்றார் கம்பர்.

கல் நெஞ்சம் என்பது மூடரையும் குறிக்கும், மூடர் கூட அன்னையினை தியானித்தால் கவிபாடும் ஆற்றல் பெறுவார் என்பதைச் சொல்கின்றார்.

அன்னையே! உன் படிகம் போன்ற தன்மையினால் வெண்மை நிறம் பெற்ற மேனியினையும், தாம்பூலத்தால் சிவந்த வாயினையும், தாமரைப்போல் அழகான கரங்களையும், உடுக்குபோல் சிறுத்த இடையினையும் கண்டு இரவு பகலாக உன்னை இடைவிடாமல் துதித்தால் கல் நெஞ்சம் கூட உருகி கவிபாடுமே என்கின்றார்.

கம்பன் ஆழந்த தியானத்தில் தன் மனக்கண்ணில், தனக்கு வித்தை கொடுத்த காளியினை தியானித்து இப்பாடலை பாடுகின்றான். இரவு பகலாக நெஞ்சில் அவள் நினைவன்றி வேறு நினைவு இல்லை. அவளையே துதித்து வரும் தன் மனத்தின் ஆழத்தில் இருந்து பாடத் துவங்குகின்றான்.

மொத்தம் உள்ள 64 கலைகளையும் எனக்கு உணர்விலே தரும் என் அன்னை, என்னை பக்குவமடையச் செய்து இறை சக்தியினை உணரச் செய்து என் மனதுள்ளே வந்த அன்னை, மனக் கோவிலிலே எழுந்தருளியிருக்கும் அன்னை இருக்கும் போது எனக்கு என்ன இடர் வரும் எனத் தைரியமாகச் சொல்லி பாடலைப் பாட முனைகின்றான்.

ஆம், அவன் மனதில் பெரும் கோவிலைக் கட்டியிருக்கின்றான். வெள்ளை பளிங்கு மாளிகையில் அன்னை வெண்ணிற நிறத்தில் வந்து அமர்கின்றாள். அவள் எல்லாக் கலைகளையும் உணர்விலே அவனுக்குக் கொடுப்பவள். மகா சக்தி வாய்ந்தவள்; எல்லா கலைக்கும் அவளே தெய்வம்.

அரசனும், அவன் அவையும் சில கலைகளை படித்திருக்கலாம். ராஜகுரு அவர்களுக்கு வழி வழியாகக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

ஆனால் எல்லா கலைகளின் தாயே என் மனதில் இருந்து எனக்கு எல்லாம் போதிக்கும் போது, இந்த அரசனாலும் அவன் அவையாலும் எனக்கு என்ன இடர் வந்து விடமுடியும் என முதல் பாடலில் சொல்கின்றான்.

அப்படியே அந்த மனக்கோவிலில் தெய்வமாய் வீற்றிருக்கும் அன்னையினைக் காண்கின்றான்.

அவள் தோற்றம் எல்லா நிறங்களையும் தன்னுள் கொண்ட படிகம் போல் இருக்கின்றது. தன் மனக்கண்ணில் வரும்போது வெண்ணிறமாகின்றது.

எல்லா நிறமும் கொண்டிருக்கும் படிகம் போல அவளே எல்லா கலைகளையும் தன்னுள் கொண்டிருக்கின்றாள். அவள் வாய் தாம்பூலச் சிவப்பில் மின்னுகின்றது. அவள் கைகள் மணம் வீசும் விரிந்த தாமரைபோல் சிவந்து ஜொலிக்கின்றது. உடுக்கு போல் இடையுடன் அவள் காட்சி தருகின்றாள்.

அந்த அன்னையின் திருக்கோலத்தை மனமார தியானித்துக்கொண்டே, அல்லும் பகலும் அவளை இடைவிடாது தியானித்தால், கல் நெஞ்சும் இளகி கவிமழைக் கொட்டும்.

அவளை நான் எக்காலமும் நினைவில் சுமப்பவன், அவள் நினைவிலே வாழ்பவன் அப்படிட்டவனுக்குக் கவிபாடுதல் சிரமமா?

இதோ கொட்டப் போகின்றேன் எனக் கவிமழைக் கொட்டி, தன் தேவியினைத் தொழுது வேண்டிக்கொள்ளத் தயாராகின்றான் கம்பன்.

இங்கே லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் அன்னையின் நாமங்கள் சிலவற்றைக் காணலாம் .

“சது ஷஷ்டி கலா மயீ” , அதாவது அறுபத்தி நான்கு கலைகளின் அம்சமாக வியாபித்திருப்பவள்.

“கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா”, அதாவது நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள்.

“லக்ஷ்யரோம லதாதாரதா ஸமுன்னேயமத்யமா” அதாவது கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள்.

“கலாவதீ” , அதாவது அவள் அனைத்துக் கலைகளின் சாரமானவள் – அனைத்துக் கலைகளையும் தன்னகத்தே கொண்டவள்.

“வரதா”, அதாவதுவரமருள்பவள்.

“ஸர்வவர்ணோபஷோபிதா”. அதாவது அனைத்து வர்ணங்களாக சோபிப்பவள்.

“வித்யா”, அதாவது ஞானமயமானவள்.

“தாம்பூலபூரிதமுகி” அதாவது தாம்பூலம் தரித்த வாய் உடையவள், தாம்பூலத்தின் நறுமணம் கமழும் சிவந்த வாய்.

“ம்ருணால ம்ருதுதோர்லதா” , அதாவது தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள்.

“ஆத்மவித்யா”, அவள் ஆத்ம ஞானமானவள்.

“மஹாவித்யா”, அவள் உன்னத ஞானமானவள் (ப்ரம்ம வித்யை)

“ஶ்ரீவித்யா” , அவள் ஸ்ரீ வித்யையின் வடிவானவள் .

“கலாத்மிகா” அவள் க‌லைகளின் ஜீவனாகியவள் / கலாம்சமானவள்.

கலா நாதா = கலைகளின் அதிபதி.

“காவ்யாலாபவினோதினி” அவள் காவியங்கள் உரைக்கப்படுவதைக் கேட்டு ஆனந்திப்பவள்.

“ப்ராஹ்மீ”, அவள் வாக்கின் அதிபதியானவள், வாணி – படைப்புக்கடவுள் பிரம்மாவின் ஆற்றல் சக்தி.

“முக்குணங்களின் சாரமாக விளங்குபவள்” அதாவது அன்னை சாத்வீகம், ராஜசம், தாமஸம் ஆகிய மூன்று குணங்களின் சாரம்.

“கலா மாலா” கலாவடிவங்களையே மாலைகளாகத் தரிப்பவள் .

“கலாநிதி”, அவள் கலைகளின் இருப்பிடமானவள் – ஊற்று (அனைத்து கலைகளின் ஆதாரம்)

“காவ்ய கலா”, அவள் கவி-காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்.

“த்ரிகுணா” முக்குணங்களாக பரிமளிப்பவள் (ராஜஸ, தாமஸ, சத்துவ குணங்கள்)

ஆம், இப்படி லலிதா சஹஸ்ர நாமம் சொல்வதைத்தான் கம்பனும் சொல்லி வாழ்த்துகின்றான்.

இப்பாடல் இரு முக்கிய பாடல்களின் தழுவல், அதைச் சொல்லித்தான் பாடலைத் தொடங்குகின்றான் கம்பன்.

சௌந்தர்ய லஹரியின் பாடல் ஒன்று உண்டு.

“கதா காலே மாத꞉ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்ʼ வித்யார்தீ தவ சரண நிர்ணே ஜனஜலம்
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் “

தாயே பிறவியிலேயே ஊமையாய் இருப்பவனுக்கும் கூட கவிதைகள் பாடும் திறமையைக் கொடுக்கக் கூடிய சரஸ்வதியின் சக்தியுடைய தாம்பூலரசம்.

அதற்குச் சமமானதான, மருதாணி பூசிய உன் பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது, ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது கிடைக்குமோ?

(மூக கவி என்பவருக்கும், காளமேகத்துக்கும் இன்னும் சிலருக்கும் அன்னை தன் தாம்பூல ரசம் மூலமே கவிபாடும் ஆற்றலைக் கொடுத்தாள் என்பது இங்கே கவனிக்க வேண்டியது)

அடுத்தப்பாடல் இதோ, இது ராமாயண த்யான ஸ்லோகம்.

“தோர்பிர்யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீ மக்ஷமாலாம் ததாநா
ஹஸ்தேனைகேந பத்மம் ஸிதமபி சஷுகம் புஸ்தகம் சாபரேண
பாஸா குன்தே ந்து ஷங்க ஸ்படிகமணி நிபா பாஸமாநாஸமாநா
ஸா மே வாக்தேவதேம் நிவஸது வதநே ஸர்வதா ஸுப்ரஸன்னா “

நான்கு கரங்கள் கொண்டவளும், ஸ்படிகத்தினால் ஆன பீஜமாலையையும் ஒரு கரத்தினால் தரித்து, மற்றொரு கரத்தினால் வெண் தாமரையும் மற்றும் இரு கரங்களில் கிளியையும் புஸ்தகத்தையும் தரித்து, மல்லிகை, சங்கு,ஸ்படிகம் இவைகளை ஒத்த ஒளியினால் பிரகாசிப்பவளும் தன்னிகரில்லாதவளும் ஆன அந்த வாக்தேவதையான சரஸ்வதி என் நாவில் எப்போதும் அருள் பாலிப்பவளாக வஸிக்கட்டும்.

இப்படி ஆதிசங்கரர் பாடிய ஸ்லோகத்தையே தழுவி தமிழில் பாடி, தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து தன்னை காக்கவேண்டி தான் வணங்கும் அன்னையினைத் தொழுது பாடலைத் தொடங்குகின்றான் கவிசக்கரவர்த்தி கம்பன்.