சரஸ்வதி அந்தாதி : 04
சரஸ்வதி அந்தாதி : 04
“இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“இயலானது கொண்டு நின் திரு நாமங்கள் ஏத்துவதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா(க) விடாமல் அடியேனனையும் உவந்து ஆண்டருளே”
இனிப் பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் வரி “இயலானது கொண்டு நின் திரு நாமங்கள் ஏத்துவதற்கு” எனத் தொடங்கும், இது இருவகை பொருளைத் தரும்.
ஏத்துதல் என்றால் போற்றிப் பாடுதல் எனப் பொருள்.
அன்னையே உன் இயல்பினை உணர்ந்து உன் நாமங்களை சொல்லிப் போற்றி பாடுவதற்கு என ஒரு பொருளும், அப்படியே என்னால் இயன்றவரையில் உன் நாமங்களைச் சொல்லி உன்னை பாடுவதற்கு எனவும் பொருள் வரும்.
இங்கே கம்பன், அன்னையே என்னால் இயன்றவரை உன் இயல்பை அறிந்து உன் பெயர்களைச் சொல்லி உன்னை புகழ்ந்து பாடுவதற்கு எனப் பொருளாகின்றது
அடுத்த வரி “முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்த மூவுலகும்” என வரும். அன்னையின் நாமங்களைச் சொல்லி அவளை போற்றிப் பாட வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகின்றேன் என்பது பொருள்
மூன்றாம் வரி “இந்த மூவுலகும் செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு” என வரும். இந்த மூன்று உலகையும் படைத்தவளே, கலைமகளே உன் அருளுக்கு என இந்த வரியின் பொருள் உண்டு.
நான்காம் வரி “அயலா(க) விடாமல் அடியேனனையும் உவந்து ஆண்டருளே”, அயல் என்றால் தொலைவு, உன் அருளுக்கு அப்பால் நான் செல்லாதபடி நீ என்னை மகிழ்ச்சியுடன் ஆட்கொண்டு ஆள்வாயாக எனப் பொருள்.
ஆகப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“அன்னையே நீ எல்லையற்ற சிறப்புகளை கொண்டவள், மனிதரால் உணர்ந்துகொள்ள முடியாத மாபெரும் சக்தி நீ, உன்னை என் சிறிய அறிவின் சொற்களால் முழுக்க புகழ்ந்து பாடிவிட முடியாது. என்னால் அது இயலாது, அதனால் தடுமாறுகின்றேன்.
இந்த மூவுலகையும் படைத்தவளே, நான் உன்னைவிட்டு அகன்று சென்றுவிடாதபடி உன் பார்வையிலே என்னை வைத்து என்னுள் இருந்து ஆட்சிசெய்”
இனிப் பாடலின் விளக்கத்தைக் காணலாம்.
கம்பராமாயணத்தை தொடங்கும்போது கம்பன் சொல்லும் வரி பிரசித்தமானது. “இது பாற்கடலை பூனை ஒன்று நக்கி குடிக்கும் முயற்சி” என்பான்.
பாற்கடலின் ஒரு துளியில் கோடியில் ஒரு அணு அளவு கூட பூனையால் குடிக்கமுடியாது, பூனையின் இயல்பு அவ்வளதுதான், அப்படி பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் கதையினை என்னால் முடிந்த அளவு பாடுகின்றேன் என ராமாயணம் பாடும்போது சொல்வான் கம்பன்.
அதே கருத்தைதான் இப்பாடலிலும் சொல்கின்றான்.
அன்னையின் சக்தி எல்லை இல்லாதது. அவள் அண்ட சராசரம் அதன் படைப்பு எல்லாவற்றுக்கும் அதிபதி, எல்லா வகை இயக்கமும் ஆக்கமும் அழிவும் செய்பவள் அவளே, அவள் இன்றி எதுவுமில்லை.
அவளின் சக்தியும் ஆற்றலும் யாராலும் முழுக்க அறியப்பட முடியாதது, தாய் தன் குழந்தையுடன் ஒரு குழந்தையாக விளையாடுவதுபோல் அவள் பக்தருக்கு மானிட தோற்றத்தில் காட்சி அளிக்கின்றாளே அன்றி, அவளின் ஆற்றலை முழுக்க அறிந்தவர் யாருமில்லை.
அவள் பிரபஞ்சத்தையே படைத்து ஆள்பவள், மானிடனோ அழியக் கூடியவன். அவன் பார்வை சிறிது, கேட்கும் திறனும் சிறிது, அவன் சிறிய மூளையில் முழுக்க அவளை அறிந்துகொள்ளவும் முடியாது.
அப்படிப்பட்ட தன்னால் அன்னையினை புகழ்ந்து பாடுவதற்கு, முழுக்க முடியவில்லை. பூமியில் இருக்கும் எல்லா வார்த்தைகளாலும் அவளை முழுக்க துதித்துவிட முடியாது என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அப்படி ஒரு முழுமையான பாடலை, அன்னையின் முழு தோற்றத்தையும் சொல்லும் பாடலையும் தன்னால் எழுத முடியாது, பாடமுடியாது எனச் சொல்கின்றான் கம்பன்.
அதன் பொருள் என்னவென்றால் அன்னையே! “லலிதா சஹஸ்ர நாமம்” எனும் ஆயிரம் நாமங்கள் கூட உன் இயல்பினைச் சொல்லப் போதாது என்கின்றான்.
சவுந்தர்ய லஹரியிலும், ப்ரம்மா முதலிய தேவர்களாலேயே பராசக்தியினை ஒரு உபமானம் சொல்லி வர்ணிக்க இயலவில்லை, சக்தியில்லை; கஷ்டப்படுகிறார்கள் என வருகிறது. (த்வதீயம் சவுந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும், கவீந்த்ராஹா கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதயஹ|)
அன்னை அதற்கும் அப்பாற்பட்டவள் என்பது அவன் சொல்லவரும் விஷயம்.
பிரபஞ்சத்தின் எல்லை எது என இன்றுவரை விஞ்ஞானத்தால் விளக்கமுடியாதது போல, அன்னையின் பெருமை எல்லையற்றது, அதைத்தான் பாடுகின்றான் கம்பன்.
அப்படியே மூவுலகையும் படைத்தவளே என்கின்றான்.
இங்கே ஒரு சந்தேகம் எழலாம், உலகை படைப்பது பிரம்மன் அல்லவா? அங்கே அன்னை எப்படி படைத்தாள் என்பது.
அன்னை ஆதி அந்தம் இல்லாதவள், அப்படியே தோற்றமும் மறைவும் இல்லாதவள், ஆனால் மற்ற தெய்வமெல்லாம் ஒரு காலம் மட்டுமே கொண்டவை.
ஒரு யுகத்துக்கு ஒரு பிரம்மன் புதிதாக வருவார், அவர் யுகம் முடியும் போது மறைந்தும் விடுவார்.
ஆனால் அன்னை நிலையானவள், அவளில் இருந்தே பிரம்மா தோன்றி அவளிடமே மறைகின்றார். அந்த பிரம்மனின் சக்தியாக நின்று இந்த உலகைப் படைகின்றாள்.
பிரம்மன் அவளின் கருவியாகவே இங்கு செயலாற்றுகின்றான், அதை சொல்லித்தான் பாடுகின்றான் கம்பன், படைப்பின் மூல சக்தி அன்னை என்கின்றான்
அப்படியே, தன்னை கைவிட்டுவிடக் கூடாது எனக் கெஞ்சுகின்றான், அவன் இப்போது நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதால் அன்னையின் அருள் தன்னோடு இருக்கும்படி மன்றாடுகின்றான்.
அன்பு இருக்குமிடத்தில்தான் ஒருவரைக் காக்கும் கடமையும், உரிமையும் வரும், அன்பில்லா இடத்தில் எந்த பொறுப்புக்கும் அவசியமில்லை.
அதனால் அன்னையே என் மேல் அன்பு கொண்டு என்னை வந்து காப்பாய், என்னை ஆட்சிசெய்வாய், நான் அவமானப்பட்டு வீழும்படி என்னை வெளியே தள்ளிவிடாதே, என்னை விட்டு அகன்றுவிடாதே எனக் கெஞ்சுகின்றான்.
கவிஞனாக அவன் மனம் இப்படி அஞ்சி அலை பாய்கின்றது, தன் துயர நிலையில் கூட அழகான வாதத்தால் அவன் அன்னையிடம் வாதாடுகின்றான்.
பெரும் காவியங்களைப் படைத்தவன், கவிச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சொல்லப்படும் தன்னால் அன்னையின் முழு இயல்பையும் பாட முடியவில்லை. அந்த ஆற்றலும், சொல்லும் தன்னிடம் போதாது என ஒப்புக்கொள்ளும் அவன், அப்படிப் பாடாததால் அன்னை தள்ளிவிடுவாளோ, தன் மேல் கோபம் கொள்வாளோ என சிந்திக்கின்றான்.
கம்பன் கவிஞனாக பூலோக மன்னர்களைப் பாடியவன், அவன் ராமனை பாடினான், சோழ மன்னனை பாடினான், சடையப்ப வள்ளலை பாடினான், சேரனை பாடினான்.
இப்படி பூலோக மன்னர்களை பாடியவன் மூன்று உலகுக்கும் அதிபதியான அன்னையினை பாட வார்த்தை இல்லை எனத் தன் தோல்வியினை ஒப்புக் கொள்கின்றான்.
அப்படியான நிலையில் சொல்கின்றான், தாயே என் இயாலமையினால், என்னால் முடியாததால், அந்த அளவு ஆற்றல் இல்லாததால், உன் பெருமையினை முழுக்க பாடமுடியவில்லை அது என் குறை, என் இயலாமை.
அதனை ஒரு குற்றமாக நீ கருதி என்னை கைவிட்டுவிடாதே, என்னை விட்டு அகன்றுவிடாதே, நீ மூவுலகையும் படைத்து ஆள்பவள், நானோ மானிடரை பாடி பொருள் தேடும் யாசக கவிஞன், நான் ரிஷி அல்ல, தேவர் அல்ல, நான் முனிவன் அல்ல, சித்தனும் அல்ல.
நான் யாசகத்துக்கு பாடும் கவிஞன் என்னிடம் மூவுலக தேவியினை முழுக்கப்பாடும் சக்தி ஏது? அக்குறைக்காக என்னை மன்னித்துவிடு, அது என் அகங்காரமல்ல என் இயலாமை என மண்டியிட்டு நிற்கின்றான்.
சவுந்தர்ய லஹரி பாடல் ஒன்று உண்டு.
“ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம்”
இப்பாடலின் பொருள் என்னவென்றால் வாக்கிற்கு பிறப்பிடமாகிய தாயே ! கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும், அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும், சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும், உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்.
சூரியனை நோக்கி கற்பூரம் காட்டுவது ஒரு மரியாதையன்றி சூரியனுக்கு ஒளிகொடுக்க அல்ல, சந்திரகாந்த கல்லின் நீர்துளிகளின் பொலிவினை சந்திரனுக்கு சமர்பிக்கலாமே அன்றி அதை கொண்டு சந்திரனுக்கு குளிர்ச்சி கொடுக்க முடியாது எனப் பொருள்.
அதாவது கடல் நீரை அள்ளி அதன் மேல் இடுவது ஒரு தர்ப்பணம் அன்றி அதை நிரப்ப அல்ல, அப்படி உன்னிடம் இருந்து பெற்ற வார்த்தைகளால் உன்னை வழிபடமுடியுமே அன்றி உன் இயல்பை முழுக்க சொல்ல முடியாது என்பது பொருள்.
அந்த மனநிலையில்தான் கம்பன் பாடுகின்றான்.
அன்னைக்கு “காவ்யாலாப விமோதினி” என்றொரு நாமம் சஹஸ்ர நாமத்தில் உண்டு.
அதன் பொருள் அவளைப் பற்றிய காவியங்களில் அவள் மகிழ்ச்சி அடைகின்றாள் என்பது.
கவிஞன் பாடும் கவிதைகள் காவியம் என்றாகும், பதினெட்டு பண்புகளை கொண்டதுதான் உன்னதமான காவியம், தமிழில் பதினெண் கீழ்கணக்கு, பதினெண் மேல்கணக்கு என்பன இவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான்.
இலக்கண அமைப்பு, வார்த்தைகள், சொல்லப்படும் விஷயம், அவற்றின் உவமை, வெளிப்படுத்தும் முறை, உண்மை தன்மை, விளக்கம், அடிகள், வர்ணனைகள் என அவை 18 பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
அதுதான் உண்மையான காவியம். அதுதான் உன்னதமான காவியம், வால்மிகி எழுதிய ராமாயணம் அப்படி ஆதி காவியம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது, இவை வெகுசில நூல்களே.
அப்படி ஒரு முழுமையான காவியத்தால் அன்னை மகிழ்ச்சி அடைபவள். அதனாலே அவல் “காவ்யகலா”, “காவ்யாலாப விமோதினி” என அழைக்கப் படுகின்றாள்.
இதையே ஆதிசங்கரரும் சவுந்தர்ய லஹரியில் பாடுகின்றார்.
“ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர்
வஶிந்யாத்யாபிஸ் த்வாம் ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய: |
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்
வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை :” ||
அதாவது தாயே வாக்கின் பிரவர்த்தகர்களும் சந்திரகாந்தக் கல்லைப் பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தியுடையவர்களும் வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக உன்னை எவன் சிந்திக்கிறானோ அவன் மகான்களுடைய காவியங்களைப்போல் பிரகாசிப்பனவும் ஸரஸ்வதி தேவியின் முக கமலத்தின் பரிமளம்போல் மதுரமானதுமான வாக்குகளால் காவியங்களுக்கு கர்த்தாவாக ஆகிறான்.
அன்னை மிக உன்னதமான காவியங்களால் மகிழ்கின்றாள், அப்படி தன்னை 18 பண்புகளுடன் பாடி காவியம் படைப்பவனிடம் தனி அன்பு கொள்கின்றாள் என்பது பாடலின் பொருள்.
ஆனால் ஒரு பெரும் காவியம் படைக்க சொல்லும், கவிபாடும் திறனும் மட்டும் போதாது, அவனுக்கு பாடவேண்டிய காவியத்தின் தலைவன் தலைவி அல்லது பொருள் பற்றி முழுக்க அறிந்திருக்க வேண்டும்.
அப்படி அறியாதவன் பாடமுடியாது.
அந்த இயலாமையினைத்தான் இங்குச் சொல்லி, என் அன்னையே உன் ஆற்றலை முழுக்க உணர்ந்தவர் யாருமில்லை, நானும் அப்படி உன்னை முழுக்க அறிய இயலாதவனாகி விட்டேன், நீயோ உன்னதமான காவியங்களில் மகிழ்பவள்.
நான் அப்படி காவியம் படைக்கவில்லை என்பதற்காக என்னை கைவிட்டு தள்ளிவிடுவாயோ எனக் கேட்கின்றார்.
அதன் பொருள் அன்னை அன்புமிக்கவள், அன்பு ஒன்றுக்கே கட்டுப்படுபவள். அவள் தன் மகனின் குறைகளைக் கருதி தள்ளி வைக்கமாட்டாள், இயலாமையில் தவிக்கும் மகனை கைவிடமாட்டாள், ஒதுக்கி வைக்கமாட்டாள் எனப் பொருள்.
அப்படியே, உலகை படைத்த அன்னையே எனும் கம்பனின் வரிகளிலும் ஆதிசங்கரரின் பாடலின் தழுவல் உண்டு.
“தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம் |
வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்” ||
“பிரம்மன் உன்னுடைய பாதங்களின் தூசியில் இருந்து, ஒரு தூசியினை எடுத்து பதிநான்கு உலகங்களை சிருஷ்டிக்கிறார்.
ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவான தேவியின் பாத தூசியினைத்தான் தாங்குகிறார்.
அந்த பரமேஸ்வரனும் இந்த பாத தூளியை பொடியாக்கி விபூதியாக பூசிக்கொள்ளும் முறையை அனுஷ்டிக்கிறார்” என்பது பொருள்.
அன்னையின் காலின் ஒரு தூசி ஒரே ஒரு தூசியில் இருந்துதான் இந்த உலகங்கள், பதிநான்கு உலகங்களும் படைக்கப்படுகின்றன, ஆதிசேஷன் அதைத்தாங்கி நிற்கின்றான் என்பது கவனிக்கதக்கது.
இந்தக் காட்சி இன்றைய விஞ்ஞானத்தோடும் பொருந்துகின்றது.
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பூமி ஒரு தூசுக்கு, ஒரு புள்ளிக்குச் சமம், இதனை என்றோ சங்கரர் கவித்துவமாக பாடியிருக்கின்றார்.
மிகப் பெரியது, சக்தி,வாய்ந்தது, ஆயிரம் தலைகளைக் கொண்டது என சொல்லப்படும் ஆதிஷேஷன் அவளின் கால் தூசியில் ஒன்றைத்தான் தாங்குகின்றது.
அப்படியானால் அன்னையின் சக்தி என்ன?
அவள் கால் தூசியில் உருவான உலகம் இது, அதைத்தான் மூவுலகையும் படைத்த அன்னையே என்கின்றான்.
இந்தப் பாடலின் பொருளில்தான் அஞ்சி தயங்கி பாடுகின்றான் கம்பன்.
இந்த உலகமே அன்னையின் கால் தூசி, அந்த உலகில் ஒரு தூசிக்கு சமமானவன் நான், ஆக அன்னையின் தூசிகளில் ஒரு புள்ளிக்கு கூட வராத தூசி நான்.
அப்படிபட்ட என்னை அன்னை புறம்தள்ளிவிடுவாளோ, என்னை கண்டுகொள்ளாமல் கைவிடுவாளோ மாட்டாள், என் அன்னையே உன் தூசிக்குத் தூசிக்குத் தூசியாக இருக்கும் என்னை கைவிட்டுவிடாதே, நான் உன் மகன், உன் அன்பில் என்னை ஆண்டு காப்பாற்று என மருவுகின்றான் அந்த கவிஞன்.
அன்னைக்கு இந்த உலகமே தூசு, நாம் அதிலும் தூசு போன்றவர்கள், அவ்வளவு பெரிய அன்னை தன் அன்புக்குரியவர்கள் எக்குறை கொண்டிருந்தாலும், எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இயலவில்லை என்றாலும், தாய் தன் பிள்ளையின் குறையினை கவனியாது அன்பு ஒன்றினாலே அரவணைப்பது போல நம்மையும் அரவணைப்பாள் அவள் கருணை அப்படியானது என அவள் அன்பின் பெருமையினை அவள் கருணையின் சிறப்பினை, பெரும் இடத்தில் இருந்தாலும் அவளின் இரக்கம் மிகுந்த மனதினைப் பற்றி பாடுகின்றான் கம்பன்.