சரஸ்வதி அந்தாதி : 05

சரஸ்வதி அந்தாதி : 05

“அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“அருக்கு உதயத்திலும் சந்திர உதயம் ஒத்து அழகு எறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ் பாவை திசைமுகத்தான்
இருக் ஓதும் நாதனும் தானும் எப்போதும் இனிது இருக்கும்
அரு(ட்)கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே”

இனிப் பாடலின் பொருளைக் காணலாம்.

முதல் வரி “அருக்கு உதயத்திலும் சந்திர உதயம் ஒத்து அழகு எறிக்கும்” என வரும்.

அருக்கு என்றால் சூரியன், அந்திமாலை பொருது கருக்கல் என்பது போல அதிகாலை வானுக்கு அருக்கு என்றொரு பெயர் உண்டு.

அதிகாலை உதயத்தைப்போல, சந்திரனின் பூரண உதயத்தினைப் போல அழகாக ஜொலிக்கும் நாயகியே எனப் பொருள், எறிக்கும் என்பது இங்கு அள்ளி வீசுவது எனப் பொருள்படும்.

அன்னை சூரிய உதயத்தினை போன்றும், சந்திர உதயத்தினை போன்றும் அழகிய ஒளிவீசும் கோலத்தினை கொண்டவள் என்பது வரியின் பொருள்.

அடுத்த வரி “திருக்கோல நாயகி செந்தமிழ் பாவை திசைமுகத்தான்” என வரும்.

அன்னை அப்படியான அழகான திருக்கோலத்தை கொண்டவள், அவளே செந்தமிழ் பாவை, நான்கு திசைகளிலும் நான்கு முகம் கொண்ட பிரம்மன் என இவ்வரிக்கு பொருள்.

அன்னையே செந்தமிழ் வடிவானவள், செந்தமிழின் வடிவமே அன்னை என்பதால் செந்தமிழ் பாவை என்றான் கம்பன்.

அடுத்து “இருக் ஓதும் நாதனும் தானும் எப்போதும் இனிது இருக்கும்” எனப் பொருள்.

இருக் என்பது ரிக் வேதத்தினை சொல்லும் வார்த்தை, வேதங்களை ஓதும் பிரம்மனை சொல்கின்றான் கம்பன், பிரம்மனும் அவளும் எப்போதும் மகிழ்ந்து இருக்கும் காட்சியினை சொல்கின்றான்.

அடுத்தவரி “அரு(ட்)கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே”” என வரும்.

பிரம்மனோடு இணைந்து அருள் தரும் நாயகி, மலர்மேல் அமர்ந்திருக்கும் நாயகி, அவள் அழகான மயில் போன்றவள் எனப் பொருள் வரும்.

மடமயில் என்பது அழகான மயில் எனும் பொருளில் வரும், மடக்கொடி என்றால் அழகான கொடி எனப் பொருள், அப்படி மடமயில் என்பதும் அழகான மயில் எனப் பொருள் தரும்.

ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“அதிகாலை சூரியன், மாலை சந்திரன் தோற்றத்தில் பிரகாசிக்கும் அன்னையே, அந்த ஒளியின் திருக்கோல நாயகியே, செம்மையான தமிழ்மொழியின் வடிவில் நிற்பவளே, நான்கு திசைகளையும் நோக்கும் பிரம்மனோடு, ரிக் வேதம் முதலான வேதங்களை ஓதும் அந்த பிரம்மனோடு இன்பத்தோடு காட்சி அளிக்கும் நாயகி, நாண் மேல் இருக்கும் தாமரைமேல் மேல் இருக்கும் அந்த நாயகி என்னை ஆள்கின்றாள், அவள் அழகான மயில் போன்றவள்.”

இந்தப் பாடலை கம்பன் இரு பொருள்பட பாடுகின்றான். நேரடியாக இப்பாடல் மேற்கண்ட பொருளை தந்தாலும் இன்னொரு சூசகமான செய்தியினையும் தரும்.

“அருக்கோ” என்பதற்கு அருவம், அருக்கோலம் என்றும் பொருள் உண்டு, அருவம் என்றால் உருவமற்றது எனப் பொருள், உருவமற்றது என்றால் வார்த்தை என்றாகின்றது; அதாவது ஒலிவடிவம்.

அன்னை ஒலிவடிவமானவள், அதுவும் எப்படியான ஒலிவடிவமானவள் என்றால் சந்திர ஒளிபோல குளிர்நத மெல்லிய வார்த்தையின் வடிவம் என்பது பொருள்.

இன்னும் ஆழமாகத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், அன்னை சந்திர ஒளிபோன்ற அழகான குளிர்ந்த மொழிகளை, வார்த்தைகளை தன் உள்ளத்தில் இருந்து தருகின்றாள் எனச் சொல்கின்றான் கம்பன்.

கம்பன் ஒரு கவிஞன், அவனுக்கு சொல் அவசியம். அந்தச் சொல் சூரிய ஒளிபோல் வெம்மையாக இருந்துவிடக் கூடாது. நல்ல கவிஞனுக்கு அழகான சொற்கள் அவசியம், இனிமையான குளிர்ந்த சொற்கள் அவசியம்.

ஏன் அவன் சந்திர வெளிச்சத்தைப் போன்ற வார்த்தைகள் எனச் சொன்னான் என்றால் சந்திரனின் பொலிவு எல்லோரையும் ஈர்ப்பது, வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தும் சந்திரன் தன் ஒளியால் குளிர்ந்த ஒளியால் எல்லோரையும் வசீகரிக்கும்.

அப்படித் தன் மொழி, தன்னுள் இருந்து அன்னை தரும் மொழியானது, கவிதைகளும் அதன் வார்த்தைகளுமானது சந்திர ஒளிபோல குளிர்ந்தது, இனிமையானது, எல்லோரும் விரும்பும் ரசிக்கும் வார்த்தைகள் என மகிழ்ந்து சொல்கின்றான் கம்பன்.
அதாவது அன்னை தன் மனதில் இருந்து ஒலிவடிவில் வார்த்தைகளைத் தருகின்றாள் என பக்தனாய் பாடுகின்றான். அந்தத் திருக்கோல நாயகி தன் மனதில் இருந்துகொண்டு வார்த்தைகளைத் தருகின்றாள் என்கின்றான்.

அவள் “வாக்வதாதினீ” அதாவது சொல் அல்லது வாக்கின் ஆதாரமாகத் திகழ்பவள் (சொல்லின் மூலக் காரணம்) என்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.

மேலும் “வாகதீஸ்வரீ” – வாக்கின் / சொல்லின் அதிபதி அவள் என்கிறது.

அவள் “வைகரி ரூபா” அதாவது சப்த வடிவானவள், வார்த்தையாக வெளிப்படுபவள். (இறுதி நிலையில் எண்ணத்திலிருந்து சப்தமாக தன்னை வெளிப்படுத்துகிறாள்)

தொடர்ந்து “செந்தமிழ் பாவை” என்கின்றான், இது கொஞ்சம் கவனிக்கதக்கது.

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகும் சிறப்பும் கொண்டது. எனினும் பேசவும், எழுதவும், பாடவும் அற்புதமான மொழி தமிழ்.

அதனாலேயே அதை இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என மூவகையில் பிரித்துச் சொன்னார்கள். இது பெரும்பாலும் இன்னொரு மொழிக்கு இல்லை.

இந்த ஆகச்சிறந்த இனிமையான மொழி அன்னையின் வடிவம் என்கின்றான் கம்பன், தமிழிலே அவள் உருவைச் சொல்லி “செந்தமிழ் பாவை” எனப் பாடுகின்றான்.

கம்பன் தமிழ்கவிஞன். அவனின் அதி உன்னத படைப்பெல்லாம் தமிழில்தான் தந்தான். அந்த இனிமையான மொழி அன்னையின் சாயல். அவளே தமிழ் என்கின்றான்.
லலிதா சஹஸ்ரநாமம் அவளை பாஷாரூபா – அனைத்து மொழிகளின் வடிவமாகத் திகழ்பவள் எனப் போற்றுகிறது. மொழி வழியே ஞானமும் அறிவும் போதிக்கப்படுவதால், அவள் மொழி வடிவானவள்.

விளக்கினில் இருந்து நெருப்பெடுத்து தெய்வத்துக்கு தீபம் காட்டுவது போல, கங்கையிலே நீரெடுத்து கங்கா தேவிக்கு அபிஷேகம் செய்வது போல, அன்னையே செந்தமிழ்பாவை; அவளுக்கு நான் அந்த செந்தமிழால் பாடுகின்றேன் எனச் சொல்கின்றான் கம்பன்.

அதவாது அவளே உணர்வுகளைத் தருகின்றாள். அவளே குளிர்ந்த வசீகரமான சொல் தருகின்றாள். அவளே அழகானத் தமிழ் வார்த்தைகளைத் தருகின்றாள். எல்லாம் அவளே, அவளே என்னை பாடவைக்கின்றாள்.

(உண்மையில் தமிழ்த்தாய் என யாரும் இந்து தமிழர் மரபில் கிடையாது, தமிழை சரஸ்வதியின் வடிவமாக வணங்கி வந்தவர்கள் தமிழக இந்துக்கள். சமஸ்கிருதம் தேவபாஷை என்றும், தமிழ் அமுதபாஷை என்றும் அழைக்கப்பட்டது. அந்த இனிமையான தமிழை சரஸ்வதியின் மொழிவடிவம் எனக் கொண்டாடினார்கள்.

அதுதான் பின்னாளில் தமிழ்த்தாய் என மாறி இன்று என்னவெல்லாமோ மாறிவிட்டது.

சரஸ்வதிதான் தமிழ்ப்பாவையாக அறியப்பட்டிருந்தாள். மொழி வாழ்த்து என்பது சரஸ்வதிக்கான வாழ்த்தாகத்தான் இங்கு இருந்தது.

ஒரு அவையில் கடவுளை வாழ்த்தி, பின் மொழியினை வாழ்த்தி தொடங்குதல் மரபு, அந்த மொழிக்கான தேவதையினை வணங்கித்தான் கலைப் படைப்பினை வைப்பார்கள்.

அப்படி தமிழை சரஸ்வதி வடிவமாகத்தான் இங்கு கொண்டாடினார்கள், கம்பன் அதைத்தான் பாடுகின்றான்.)

அடுத்து திசைமுகத்தான் என பிரம்மனை சுட்டிக் காட்டுகின்றான். பிரம்மன் நான்கு முகங்களை கொண்டவன், நான்கு திசைகளையும் அவன் நோக்கி கொண்டிருக்கின்றான்.

அவன் இருக் எனும் ரிக் வேதம் ஓதுகின்றான் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.

அதாவது வேதங்கள் பிரம்மனால் ஓதப்படுகின்றன. ரிக் முதலான நான்கு வேதங்களையும் நான்கு முகங்களிலும், நான்கு திசைகளிலும் ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கின்றான் பிரம்மன்.

இதைச் சொல்லும் கம்பன் ஒரு அழகான கற்பனையினையும் சொல்கின்றான்.

அதாவது பிரம்மனுக்கு நான்கு முகங்கள், அன்னை ஒரு முகத்தை கண்டால் மீதி முகங்கள் வாடிவிடாதா? இதனால் அவளும் நான்முக வடிவமாக அவனோடு இருந்து நால்வகை வேதங்களையும் சொல்ல வைத்து இன்புற்றிருகின்றாள்.

அன்னைக்கு சகஸ்ர நாமத்தில் பல பெயர்கள் உண்டு.

ஷ்ருதி அதாவது வேத ரூபிணி, வேதங்களில் இருப்பவள்
ஸ்மிருதி அதாவது வேதங்களை விவரித்து கொண்டாடும் சாரங்களில் இருப்பவள்.
ஷ்ருதி சமஸ்துத வைபவா அதாவது வேதங்கள் கொண்டாடும் மகத்துவம் பொருந்தியவள்.
ஸகலாகம ஸந்தோஹ சுக்தி ஸம்புட மௌக்திகா என்றால் வேத சமுதாயமாகிற சிப்பிக்குள் இருக்கும் நன்முத்து போன்றவள். (வேதங்களால் சூழப்பட்டவள்)

இக்கோலம் நிரந்தரமானது நித்தியமானது எப்போதும் இருப்பது. இதற்கு தொடக்கமும் இல்லை முடிவுமில்லை, அப்படியான திருக்கோல நாயகி பிரம்மனுடன் தாமரையில் அமர்ந்திருக்கும் நாயகி எனக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கின்றாள்.

அதாவது நான்கு திசைகளில் இருந்தும் அவள் அருள்மழை தனக்கு பொழியப்படுகின்றது, நான் எங்கு சென்றாலும் எத்திசை சென்றாலும் அங்கெல்லாம் அவளே வந்து தன்னை காக்கின்றாள், கண்காணித்து நடத்துகின்றாள் அந்த அழகான மயில் போன்றவளால் நான் ஆண்டு வழி நடத்தப்படுகின்றேன் என மருவி பாடுகின்றான் கம்பன்.

இந்த பாடல் அவன் தன் தேசம் விட்டு வேறு தேசத்தில் வேறு திசையில் அவன் நிற்கும் போது அதாவது சேரநாட்டு அவையில் அவன் சிக்கலில் நிற்கும்போது பாடப்படும் பாடல்.

அவனின் குலம், குடும்பம், குரு யார் என விசாரிக்கப் படும்போது அவன் பாடும் பாடல் இது.

அன்னையே தன்னில் வார்த்தையாக இருக்கின்றாள், அவளே வசீகரிக்கும் வார்த்தைகளை நிலவொளி போல் தருகின்றாள், அவளே செந்தமிழ் என்பதால் அழகான தமிழ்ப்பாடல்களை தருகின்றாள், அவள் நான்கு திசைகளிலும் பிரம்மனோடு சேர்ந்து தன்னை கண்காணிப்பவள், தன்னை வழி நடத்துபவள், வேதங்கள் ஓதும் பிரம்மனோடு தாமரையில் அமர்ந்து என்னை ஆள்பவள்.

நான் அவள் ஆட்சிக்கு உட்பட்டவன். அதனால் அவளே எனக்கு முழு பொறுப்பு எனப் பாடுகின்றான்.

இங்கு அவன் இன்னும் மறைமுகமாகச் சொல்லும் விஷயம் ஒன்று உண்டு, அது சூட்சுமமானது.

இந்தப் பிரபஞ்சம் வேதங்களால் படைக்கப்பட்டு, வேதங்களால் இயங்குவது, வேதங்கள் வடிவமற்றவை அவை ஒலி வடிவமானவை.

அன்னை ஒலி வடிவமானவள் எனப் பாடலின் தொடக்கத்தில் சொல்லும் கம்பன் போதிக்கும் சூட்சமம் இதுதான், அன்னை வேதங்களின் நாதமாய் இருக்கின்றாள், வேதங்களாய் ஒலிவடிவில் இருக்கின்றாள்.

அந்த வேதங்களை கண்களால் காணமுடியாது, வரி வடிவம் இல்லை. ஆனால் அவைதான் உலகை இயக்குகின்றன, அப்படி அன்னை அரூபமாய் வேத ஒலியாய் இந்த பிரஞ்சத்தை இயக்குகின்றாள், அப்படியே தனக்கும் தன் மனதில் இருந்து ஒலித்து வார்த்தைகளைர்த் தருகின்றாள்.

வேதங்களாய் ஒலித்து எல்லாமும் இயக்கும் அன்னை, செந்தமிழ் வடிவமாகவும் நிற்கின்றாள், வேதங்களின் ஒலி அவளே, தமிழ் மொழியின் வடிவம் அவளே.

அத்தோடு கம்பன் விடவில்லை, தொடர்கின்றான்.

பிரபஞ்ச வேதமாகவும் என்னுள் ஒலியாகவும் மொழியாகவும் நிற்கும் அன்னை, ரிக் உள்பட எல்லா வேதங்களை ஓதும் பிரம்மனுடனும் இருக்கின்றாள்.

வேதமும் அவளே, அதை ஓதும் பிரம்மனின் சக்தியும் அவளே என்கின்றான்.
லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும். அவள்
“வேத ஜனனி” அதாவது வேதங்களைப் படைத்தவள்
“ப்ராஹ்மீ” அதாவது வாக்கின் அதிபதியானவள் / வாணி – படைப்புக்கடவுள் பிரம்மாவின் ஆற்றல் சக்தி
“த்ரயீ” அதாவது மூன்று வேதமானவள் (ரிக், யஜூர், சாம வேதங்கள்)

இப்படி எல்லா வகை ஒலியாகவும், வேதங்கள், தமிழ் மொழி, வேதம் ஓதும் மொழி என எல்லாமுமாக நிற்கும் அன்னை தன்னை ஆளும் மயிலாகவும் நிற்கின்றாள் எனப் பாடி தொழுகின்றான் கம்பன்.

இங்கே “நாண் மலர்” எனச் சொல்லும் வார்த்தையும் கவனிக்கத்தக்கது,

“வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்” என்பார் அபிராமி பட்டர்.

இன்னும் “எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே” என்பார்.

அதாவது வேதங்களை வடமொழியில் ஸ்ருதி என்றும் தமிழில் மறை, எழுதாக்கிளவி என்றும் கூறுவர். அவை எழுதப் படவில்லை. ஸ்ருதி என்பது ஸ்வர அமைப்புக்ள் மாறாமல் குரு வாயினால் ஓத அதை சிஷ்யன் தன் காதினால் கேட்டு மனதில் பதித்துக் கொண்டு பல காலம் ஓதிப் பயில்வது.

இதில் ஒலி தான் மிக முக்கியம். அன்னை அந்த ஒலியாக நிற்பவள் என்கின்றான் கம்பன்.

அன்னைக்கு “நாத ரூபா” அதாவது ஒலி வடிவானவள் என சகஸ்ர நாமத்தில் ஒரு பெயர் உண்டு, அந்தப் பெயரையும் இங்கே கொண்டு வருகின்றான் கம்பன்.
மேலும் அவள் “வேத வேத்யா” அதாவது வேதங்களால் அறியத்தக்கவள்.

அவள் “சந்த சாரா”, உயர்ந்த பாசுரங்கள், வேதம் கூறும் நல்வாக்கியங்களின் சாராம்ஸமாக விளங்குபவள்.

இந்தப் பாடல் சவுந்தர்ய லஹரியின் பாடலின் தழுவல், தான் எப்படி மிக அற்புதமான கவிஞனானேன் என்பதற்கு சவுந்தர்ய லஹரியின் பாடலை தழுவிப்பாடி சபைக்கு பதில் சொல்கின்றான் கம்பன்.

“கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலா-தப ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசித் அருணா மேவ பவதீம்
விரிஞ்சி பிரேயஸ்யா: தருணதர ச்ருங்கார லஹரீ
கபீராபி: வாக்பி: விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ “

தாமரை வனம் போன்ற மனதினை உடைய உலகின் புலவர்கள் இடையே சிறந்தவர்களுக்கு, அவள் ஒரு அதிகாலை நேரத்து ஊதா நிறத்தவளாக இருக்கின்றாள். இதனாலே அவளை அருணா, சிவப்பு நிறத்தவள் என்கிறோம். புனிதர்களின் மனதில் அன்பான, கருணையான வார்த்தைகளின் அலைகளால் ஆனந்தத்தை அளிக்கின்றாள் எனப் பொருள்.

பிரம்மாவின் துணை சரஸ்வதியின் அருளால் இவ்வார்த்தைகள் ராஜ கம்பீரத்தோடும், யௌவனத்தோடும் உள்ளன என்பது பொருள்.

அதாவது அம்பிகையே! கவிஞர்களின் உள்ளம் என்னும் தாமரை வனத்திற்கு சிவந்த கிரணங்களைப் பெய்யும் உதயசூரியனைப் போல் பிரகாசிப்பவளும், அதன் காரணமாக அருணா எனப் பெயர் பூண்டவளுமாகிய உன்னைப் பணிந்து தொழும் சான்றோர்க்கு, பிரம்மாவின் பத்தினியும், வாக்குக்குத் தெய்வமுமான சரஸ்வதி தேவியின் அருளுடன், சிருங்கார ரசத்தின் வெள்ளத்தைப் போன்ற கம்பீரமான வாக்குவன்மை உண்டாகி சாதுக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார்கள் என ஆழமான பொருள்படும்.

ஆதிசங்கரர் பாடிய அந்த சவுந்தர்ய லஹரியினைத்தான் இப்பாடலில் பாடி அன்னை சரஸ்வதியினை பணிந்து நிற்கின்றான் கம்பன்.