சரஸ்வதி அந்தாதி : 07
சரஸ்வதி அந்தாதி : 07
“பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரி தாவ எனக்கினியே”
இந்த பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“பாத அம்புயத்தில் பணிவார் தமக்கு பல கலையும்
வேதாந்த முக்தியும் தந்தருள் பாரதி வெள்ளி இதழ் பூ
சீத அம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறல் அரிது ஆவது எனக்கு இனியே”
பாடலின் பொருளைக் காணலாம்.
“பாத அம்புயத்தில் பணிவார் தமக்கு பல கலையும்” என முதல் வரி வரும். அம்புயம் என்றால் தாமரை எனப் பொருள். அன்னை தாமரை போன்ற தன் பாதங்களில் பணிவோர்க்கு, தாமரையில் இருக்கும் தன்னை பணிவோர்க்கு பல கலைகளை அருளுகின்றாள் என்பது பொருள்.
அடுத்த வரி “வேதாந்த முக்தியும் தந்தருள் பாரதி” என வரும், அன்னை வேதாந்தம் அருளுகின்றாள், அது கொடுக்கும் முக்தியும் அருள்கின்றாள் என்பது பொருள்.
மூன்றாம் வரி “வெள்ளி இதழ் பூ சீத அம்புயத்தில் இருப்பாய்” என வரும், வெள்ளி இதழ் போன்ற வெண்மையான குளிர்ந்த தாமரையில் இருப்பவளே எனப் பொருள்.
நான்காம் வரி “என் சிந்தையுள்ளே ஏதாம் புவியில் பெறல் அரிது ஆவது எனக்கு இனியே” என வரும். இந்த பெரும் சக்திகொண்டவள் என் சிந்தனையில் என் மனதில் அமர்ந்திருக்கும் போது இந்த பூமியில் எனக்கு கிடைக்காத அரிய பொருள் என்ன? எல்லாமே எனக்கு வாய்க்கும் என்பது பொருள்.
ஆகப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“தாமரை போன்ற பாதங்களில் பணிவோர்க்கு பல கலைகளும் தருபவள் அன்னை, அவர்களுக்கு வேதாந்த தத்துவங்கள், முக்தி என எல்லாமும் தருபவள் அன்னை. அந்த கலைமகள், வெள்ளிபோன்ற வெண் தாமரையில் இருக்கும் அன்னை என் சிந்தையில் இருக்கின்றாள், அவள் என்னோடு இருக்கும் போது எனக்கு இந்த உலகில் எது கிடைக்காமல் போகும்? எல்லா அரிய பொருளும் எனக்கு வாய்க்கும்”
அன்னை கலைகளின் மூலம், 64 கலைகளும் அருளும் கலைவாணி, அவள் அருளாலே ஒருவன் எல்லா கலைகளையும் கற்க முடியும்.
அவள் கலை வடிவம் என்பதா “கலா”, அவள் கலைகளின் ஆத்மா என்பதால் “கலாத்மிகா”, அவள் கலைகளின் அதிபதி என்பதால் “கலா நாதா” என்கின்றது லலிதா சஹஸ்ர நாமம்.
அவள் காவியம், கவிதைகளால் புகழப்படுபவள் என்பதால் “காவ்யாலாப வினோதினீ”
அவள் “கலா மாலா” கலா வடிவங்களையே மாலைகளாக தரிப்பவள்.
அவள் “சதுஷ்ஷஷ்டி கலா மயீ” அதாவது 64 கலை வடிவங்களால் துதிக்கப்படுபவள்.
சவுந்தர்ய லஹரி ஒரு பாடலைச் சொல்லும்.
அன்னையே!, நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள். அந்த சக்தி தேவிகள் நவ ரஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள். உடைந்த சந்திரகாந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள். (“ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர் | வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:”)
இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எட்டு பேர்.
அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கௌலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் தேவியர்.
இவர்கள்தான் சந்திரகாந்த கல்லின் உட்புறம் போன்ற வெண்மை நிறம் கொண்டவர்கள் என்பது நம்பிக்கை.
அன்னை இப்படியான தன்மைகளைக் கொண்டவள். தன்னில் எட்டு வகையான வெண் தேவதைகள், வசினி தேவதைகளைக் கொண்டவள் என்பதைத்தான் வெண் தாமரை என்கின்றான் கம்பன்.
அப்படியே அன்னையினை பாரதி என்கின்றான்.
அன்னையினை “கமலா பாரதி ஸேவ்யா கல்பிதாஸேஷ ஸம்ஸ்க்ருதி ” என்கின்றது ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம் எனும் நூல்.
லலிதா சகஸ்ரநாமம் போல இதுவும் மகா பிரசித்தியானது, சிவனே காமாட்சியம்மனுக்கு இதை கொடுத்ததாக பரசுராமர் கதையில் தாந்த்ரேயர் சொல்கின்றார்.
அது அன்னையினை பாரதி என்கின்றது.
பாரதி என்பதற்கு கலைமகளின் தனி அருள் நிலை எனப் பொருள், ஞான அறிவில் சிறந்தோரை பாரதி எனப் பட்டம் கொடுத்து அழைப்பது இதனால் மரபாயிற்று.
பாரதி என்பதற்கு அன்னையின் அருளால் ஞானத்தில் தேர்ந்தவன் எனப் பொருள்
பாரதம் என இத்தேசம் பொருள்பட ஞானியர், பாரதியர் வாழும் பூமி எனும் பெயரும் காரணமாயிற்று, இந்துஸ்தானம் பாரதம் என அழைக்கபட பாரதி எனும் பட்டம் பெற்றோர் அதாவது ஞானியர் மேதைகள் பெரும் கவிமான்கள் இருந்த இடம் என்பதும் காரணம்.
பலவகை கலைகளிலும் பூரண ஞானத்திலும் தேர்ந்தவனின் பெயர் பாரதி, அது ஒரு பட்டம்.
அன்னை அந்த நிலைக்கு ஒருவனை தன் அருளால் உயர்த்துகின்றாள் என்பதை சொல்கின்றான் கம்பன்.
இந்தப் பாடலின் முக்கியத்துவமே “வேதாந்த முக்தி தரும் பாரதி” என கம்பன் அன்னையினை நோக்கி உருகுவதில்தான் இருக்கின்றது.
வேதங்களே உலகை இயக்குபவை. அந்த வேத ரகசியங்களை அறிந்தால் இறைவனை அறியலாம், இறைவனை அடைவதுதான் முக்தி நிலை.
ஆனால் வேதம் எல்லோருக்கும் புரியாது. அதற்குத் தனி ஞானமும், அறிவும், திறனும், தெளிவும் வேண்டும். அன்னை அதனைத் தருவாள். அவளாலே மட்டுமே அதனைத் தரமுடியும் என்கின்றான் கம்பன்.
அதாவது அன்னையின் அருளால் உண்டாகும் கலையும் அறிவும் தெளிவும் ஞானம் அளிக்கும். அந்த ஞானமே வேதங்களை உணரவைக்கும். அதுவே முக்திக்கு வழிவகுக்கும் என்கின்றான் கம்பன்.
நல்ல கலைஞன், நல்ல கவிஞன், நல்ல அறிவுள்ளவன், தன் கலைகளிலும் கவிதையிலும் சிந்தையிலும் இறைவனைத் தேடுவான். தன் கலை மூலமே வேதங்களை உணர்ந்து முக்தி அடைவான் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அன்னையின் அருளானது வெறும் புகழுக்கு அல்ல, பொருள் சேர்க்க அல்ல, ஊரும் உலகமும் கொண்டாட அல்ல. நல்ல கலையினை அன்னையின் அருளால் பெற்றவன் அதில் மயங்க மாட்டான், அங்கே சிக்கி நிற்க மாட்டான்.
அவன் அதைத் தாண்டி ஞானம் தேடுவான், இறைவனைத் தேடுவான். அப்படியே முக்தி அடைவான்.
நல்ல கலைஞன் தன் படைப்பில் இறைவனைக் காட்டுவான், தன்னை கவனிப்போருக்கு நல்வழி காட்டுவான், முக்தி செல்லும் வழியினைக் காட்டுவான்.
கலை ஒரு ஈர்ப்பை கொடுக்கும், அந்த ஈர்ப்பின் வழி நல்ல போதனைகளை, முக்தி அடையும் வழிகளைக் காட்டுவதே கலைஞன் கடமை.
அன்னை ஒருவனுக்கு வரமருள்வது, அவனும், அவனால் கூடும் கூட்டமும் முக்தி அடைவதற்கே என்பதை மிக மிகப் பெரும் தத்துவமாக இங்கே சுருங்கப் பாடுகின்றான் கம்பன்.
அதாவது, வேதம் அறியாமல் உலகை படைக்க,முடியாது, இயக்கமுடியாது. வேதங்களை பூரணமாக அறிந்தவர்களே உலகை படைக்கவும் இயக்கவும் முடியும்.
ஒருமுறை வேதங்களை பிரம்மன் மறந்தபோது தான் முருகப்பெருமான் அவருக்கு வேதம் உரைத்து பாலகுருசாமி எனும் பட்டம் பெற்றான் என்பது கவனிக்கதக்கது.
அந்த வேதங்களை அறிந்த பிரம்மனும், விஷ்ணுவும் எப்படி செயலாற்றுகின்றார்கள் என்பதையும், அங்கே அன்னையின் பெருமையினையும் இந்த சவுந்தர்ய லஹரி பாடல் சொல்கின்றது.
“தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கே-ருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்
வஹத்யேநம் ஸௌரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம் ஹர:
ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம்”
அதாவது தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூசித்துளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.
அன்னை வேதங்களின் வடிவம். அவளிடமிருந்தே வேதம் வருகின்றது, அந்த வேதம் ஞானத்தை கொடுக்கும்; ஞானம் மோட்சத்தை கொடுக்கும் என்பதைச் சவுந்தர்ய லஹரி சொல்கின்றது.
“அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி”
அதாவது அம்பிகையே! உன் திருவடித் துகள் அஞ்ஞானிகளின் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கும் கதிரவனின் உதயத் தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு ஞானம் என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப் போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத் கிளர்ந்தெடுத்துத் தாங்கிய விஷ்ணுவின் கோரைப் பல்லைப் போன்றும் விளங்குகிறது.
ஆம், அம்பிகையின் திருவடி துகளே வேதஞானம், அதை ஒரு துகள் பெற்றவனும் பெரும் இடம் அடைவான் என்பதைச் சொல்கின்றது பாடல்.
இதனை இன்னும் விளக்கவேண்டும் என்றால் லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு வரி உண்டு.
“ஸ்ருதி சீமந்த சிந்தூரி க்ருத பாதாப்ஜ தூளிகா” என்பது அந்த வரி.
அதாவது வேதங்கள் அவள் காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கிறது. அப்படி அவை விழுந்து விழுந்து வணங்குகின்றபொழுது அதன் தலை வகிட்டிலிருக்கும் சிந்தூரம், அந்த ராஜ ராஜேஸ்வரியின் பாதங்களில் பட்டு, அந்த ராஜ மாதங்கியின் காலடிகள் சிவந்து விடுகின்றது. அப்படி சிவந்து சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றன அன்னையின் கால்கள்.
வேத மங்கை என்பவள் தலைவகிட்டில் குங்குமம் சூடியிருக்கின்றாள், அந்த குங்குமம் படுமளவு அன்னையின் பாதங்களில் விழுந்து வணங்குகின்றாள். அந்த குங்குமச் சிகப்பு பட்டுபட்டு அன்னை பாதம் சிவந்துவிடுகின்றது என்பது லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது.
இதன் அடுத்த நிலையினைத்தான் சவுந்தர்ய லஹரி சொல்கின்றது.
வேதங்களின் தலையாகக் கருதப்படுவது உபநிடதங்கள், இவைதான் பிரம்மம் எனும் பரம்பொருளை விளக்கி போதிக்கும் ஞான காண்டம்.
அவை அன்னையின் கால்களை தாங்கி நிற்பதாக சவுந்தர்ய லஹரி பாடுகின்றது/
அதாவது “தேவி, உனது எந்த பாதங்களை, வேதத்தின் தலை போன்றதான உபநிடதங்கள் தங்கள் தலையில் தரிக்கின்றனவோ, அந்த பாதங்களை என் தலையிலும் கூட தயவு கூர்ந்து வைத்தருள்வாய்” எனப் பொருள். (“ச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா
மம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ”)
அப்படிப்பட்ட அன்னையின் அருளால் வேதம் விளங்கும், ஞானம் பெருகும் என்கின்றான் கம்பன்.
இன்னும் ஒரு பாடல் உண்டு
“தடில்லேகா-தன்வீம் தபன ஶஶி வைஶ்வானர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம் |
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் ||”
அதாவது, தாயே ! ஆனந்தவல்லி ! ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே, தாமரைக்காடு போன்ற ஆயிரம் தளத் தாமரையில், மின்னல் கொடி போன்று, சூர்யா சந்திர அக்னி வடிவம் கொண்டவளே ! உன்னுடைய “சாதா” என்ற கலையை காமம், மாயை, அறியாமை விட்ட ஞானிகளும் தியானித்து ஆனந்தநிலை பெறுகிறார்கள்.
ஆம், அன்னையின் அருளால் ஆறு சக்கரங்களும் துலங்கி முக்தி நிலை வாய்க்கும். அப்போது மூன்று மலங்களும் அகன்று, முக்தி நிலை அடைவார்கள் என்பது பொருள்.
அதைத்தான் இந்தப் பாடலில் அன்னை வேதத்தின் ஆதி அந்த ரகசியங்களையும், முக்தி நிலையினையும் அறியத் தருவாள் எனப் பாடுகின்றான் கம்பன்.
இப்படியான அன்னையினை தன் உள்ளத்தில் வைத்து வணங்குவதால் என்னென்ன பலன் உண்டு என்பதை சவுந்தர்ய லஹரியில் சொன்னபடி சொல்கின்றான் கம்பன்.
சவுந்தர்ய லஹரி சொல்கின்றது.
“த்வதந்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ”
அதாவது, அம்பிகையே! உன்னைத் தவிர, மற்ற தேவர்களெல்லாம் அபயம், வரதம் என்னும் ஹஸ்த முத்திரைகளைக் காட்டுகிறார்கள். நீ ஒருவள் தான் அந்த அபிநயங்களைச் செய்வதில்லை. ஏனென்றால், உன்னுடைய திருவடிகளே அபயவர பிரதானத்தை விட, அவரவர் விரும்பியதற்கு அதிகமாகவே வரங்களை அளித்து விடுகின்றன.
கம்பன் இப்போது ஆபத்தில் இருக்கின்றான். பெரிய அச்சுறுத்தல் அவனுக்குச் சேரமன்னன் அவையில் முன்னால் நிற்கின்றது.
அங்கே அன்னையின் திருவடியின் பெருமையினை மேற்சொன்ன சவுந்தர்ய லஹரி பாடலின் பொருளைச் சொல்கின்றான்.
அப்படிபட்ட அன்னை என் சிந்தனையில், மனதில் இருக்கும் போது என்ன பயம் வரும்? அவளின் அபய முத்திரையிலே எல்லா அற்புதமும் நடக்கும், அதனால் தனக்கு பயம் ஒன்றுமில்லை, எந்த அச்சமுமில்லை. அவள் எனக்கு அபயமானவள் என்கின்றான் கம்பன்.
“அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே -இரங்கேல் உனக்கு என் குறையே?”
என அபிராமிபட்டர் பின்னாளில் பாடிய வரிகளுக்கு முன்னோடியாக, இந்தப் பாடலைப் பாடி அன்னையினை துதிக்கின்றான் கம்பன்.