சரஸ்வதி அந்தாதி : 10
சரஸ்வதி அந்தாதி : 10
“புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே”
இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து வரும்.
“புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ
அந்தியில் தோன்றிய தீபமென் கோ-நல் அருமறையோர்
சந்தியில் தோன்றும் தபனனென் கோ-மணித் தாமமென்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே”
இனி பாடலை விளக்கமாகக் காணலாம்.
“புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ”. அதாவது “புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியம் என்கோ” என இன்னும் பிரியும்.
புந்தி என்றால் சிந்தை, மனம் எனப் பொருள். கூரிருள் என்றால் கடுமையான இருள், புதிய மதியம் என்றால் சந்திரன், புதிய மதியம் என்றால் புதுநிலவு எனப் பொருள். என்கோ என்றால் என்பேன், என்பேனோ எனும் பொருள்.
அன்னையினை மனஇருளை போக்கும் புதிய நிலவு என்பேனோ என்பது பொருள். உதயநிலவு என்பதை புதிய நிலவு என ஒரு இலக்கிய நயமாக, ஒவ்வொரு நாளும் வரும் நிலவை புதுநிலவு எனச் சொல்கின்றார் கம்பர்.
அடுத்து “அந்தியில் தோன்றிய தீப-மென் கோ- நல் அருமறையோர்” அதாவது “அந்தியில் தோன்றிய தீபம் என்கோ, நல் அருமறையர்” என இன்னும் பிரியும்.
அந்தி மாலையில் ஏற்றப்படும் அழகான தீபம் என்பேனோ எனப் பொருள், நல் அருமறையோர் என்றால் வேதம் அறிந்தவர், மறையும் சம்பிரதாயமும் அறிந்தவர் எனப் பொருள்.
அவளை மாலையில் எரியும் தீபம் என்பேனோ என்கின்றான் கம்பன்.
அடுத்து “சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ”, அதாவது “சந்தியில் தோன்றும் தபனம் என்கோ மணி தாமம் என்கோ” என மேலும் பிரியும்.
தபனம் என்றால் வெப்பம் எனப் பொருள்.
அந்தனர்கள், மறைவேதாந்திகள் காலையில் மாலையில் வழிபடும் போது வரும் இதமான சூரியன் என்பேனா.
மணி என்றால் ரத்தினங்கள், தாமம் என்றால் கயிறு அல்லது நூல். அப்படி நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினமாலை என்பேனோ என்கின்றார்.
அடுத்து “உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே” என்கின்றார். உந்தி என்றால் தொப்புள், புயம் என்றால் தோள்.
திருமாலில் தொப்புளில் இருந்து உதித்த பிரம்மனின் தோளில் சாயும் ஒருத்தியினை எனப் பொருள்.
ஆகப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“திருமாலின் தொப்புளில் இருந்து உதித்த பிரம்மனின் தோளில் சாய்ந்திருக்கும் சரஸ்வதியினை, நான் மன இருளைப் போக்கும் புதிய நிலவு என்பேனோ, மாலையில் ஏற்றும் தீபம் என்பேனா, அந்தணர்கள் காலையிலும் மாலையிலும் வழிபடும் போது சந்திப்பொழுதில் வரும் மென்மையான வெப்பம் தரும் சூரியன் என்பேனோ, இரத்தின மாலை என்பேனோ, என்ன சொல்வேன்?”
அன்னையினை, அவள் தோற்றத்தினை அவளின் ஜொலிப்பினை வியந்து புகழ்ந்து பாடுகின்றான் கம்பன்.
திருமாலின் தொப்பூளில் உதித்தவன் பிரம்மதேவன். அவன் தோளில் சாய்ந்திருக்கின்றாள் அன்னை எனப் பாடலை தொடங்குகின்றான்.
அதாவது படைப்புக்கு அதிபதியான பிரம்மனுடன் அவன் தோள் உரசும் அளவுக்கு சரிக்கு சமம் அமர்ந்திருப்பவள் என் தேவி. பிரம்மனின் இயக்கம் அவள், அந்த தேவியினை, பிரம்மனுடன் அமர்ந்து படைப்பு தொழில் செய்பவளை எப்படி புகழ்வேன் எனப் பாடலை தொடங்குகின்றான்.
அவள், மன இருளைப் போக்கும் நிலவோ என்கின்றார். இங்கு ஒரு அழகான உண்மையினை சொல்கின்றான். சந்திரனின் ஜொலிப்பு அழகானது அதுவும் உதிக்கும் நிலாவின் அழகு அவ்வளவு வசீகரமானது.
அன்னை நிலவின் ஒளியாக ஜொலிக்கின்றாள் என்பவன், அவள் மன இருளை அகற்றும் நிலா என்கின்றான்.
ஜாதக விதிகளின்படி மனதை ஆட்டிவைக்கும் கிரஹம் சந்திரன். சந்திரனின் அமைவிடம் மற்றும் இயக்கத்தை பொறுத்தே ஒருவனின் சிந்தனையும் மனவோட்டமும் அமையும்.
இன்றும் மனதினால் சிக்கல் கொண்டவர்கள், தெளிவற்ற சிந்தனை கொண்டவர்களின் சிக்கல் அமாவாசை பவுர்ணமிகளில் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம்.
மனத்தெளிவுக்கான கிரஹம் சந்திரன். இதனாலேயே ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தனி வழிபாடானது, அந்த பவுர்ணமியோடு கூடும் நட்சத்திர நாள் மிக விசேஷமானதாகக் கருதப்பட்டது.
அன்று நல்ல பலன் மனதிற்கு கிடைக்கும் என்பது இந்து நம்பிக்கை.
அதைத்தான் இங்கே மனதில் தெளிவும் நல்லறிவும் கொடுப்பவளே அன்னையே, மனதின் இருளை அகற்றுபவளே என்கின்றான் கம்பன்.
அடுத்து மாலைப்பொழுதில் ஏற்றப்படும் தீபம் என்பேனோ என்கின்றான். மாலையில் இருள் அண்டும் நேரம் தீபம் ஏற்றி வைத்து வணங்குவது இந்துமரபு.
இருள்சூழும் நேரம் அந்த விளக்கே ஒளிகொடுக்கும். அது காணவும் பிரகாசமாகவும், எங்கிருந்து பார்த்தாலும் தனித்துத் தெரியும் படியும் வழிகாட்டும்படியும் ஜொலிக்கும்.
அன்னை அந்த விளக்கு போல ஜொலிப்பவள், வழிகாட்டுபவள், ஒளியாய் நிற்பவள் என்கின்றான்.
அடுத்து சந்திவேளையில் வரும் சூரியன் என்கின்றான்.
காலையும் மாலையும் வரும் சந்திப்பொழுதுகள் வழிபாட்டுக்கு முக்கியமானவை. அந்நேரம் சூரியனும் அதிக வெப்பமின்றி செந்நிறத்தில் இதமான வெப்பத்துடன் பிரகாசிக்கும்.
அந்த இதமான வெப்பம் தரும் சூரியனோ என்கின்றான்.
அடுத்து ஜொலித்து மின்னும் அழகான ரத்தின மாலையோ என்கின்றான். அதன் மின்னும் பேரொளியோ என்கின்றான்.
இங்கே கம்பன் சொல்ல வருவது இதுதான்.
பிரம்மனின் தோளோடு அன்னை உரசுகின்றாள். அவ்வகையில் பிரம்மனின் உடல் வெப்பமாக அவளே நிற்கின்றாள். அவளாலேயே படைப்புத் தொழில் நடக்கின்றது.
(சவுந்த்ய லஹரி பாடலின் வரி ஒன்று உண்டு.
“சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் ந சே-தேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமப” என்பது அது.”
அதாவது, தாயே, சக்தியாகிய உன்னுடன் சம்பந்தம் இல்லாது போனால் சகல உலகங்களையும் படைக்கும் ஈசனுக்கு, இந்த உலகத்தை படைக்க சாமர்த்யம் ஏற்படுவதில்லை என்பது அதன் பொருள். )
பாற்கடலில் படுத்திருக்கும் திருமாலின் தொப்புள் கொடி என்பது குளிர்ச்சியானது. அதன் மேல் பிரம்மன் அமர்ந்திருககின்றான் என்பது இன்னும் குளிர் கொடுக்கும் விஷயம்.
அங்கே அன்னைதான் அவனை வாழவைக்கும் வெப்பமாக இருக்கின்றாள் என அழகிய உவமையினைச் சொல்கின்றான் கம்பன்.
அவள் சந்திரனின் ஒளி, சூரியனின் ஒளி, தீபத்தின் ஒளி என மூன்று ஒளியாக அதாவது மூன்று அக்னியும் அவளாகவே இருக்கின்றாள் என்கின்றான்
சௌந்தர்ய லஹரியில் ஒரு பாடல் உண்டு.
“அஹ ஸூதே ஸவ்யம் தவ நயனம் அர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி தரதலித-ஹேமாம்புஜ-ருசி
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-நிசயோ-அந்தரசரீம்”
அதாவது தாயே, உன் வலது கண் சூரியன் ஆனபடியால் பகலையும், உன் இடது கண் சந்திரன் ஆனபடியால் இரவையும் உண்டாக்குகின்றன.
உனது மூன்றாவது கண் (நெற்றிக்கண்), சற்றே மலர்ந்த தங்கத் தாமரை போன்று சிவந்து, இராப்பகலுடைய நடுவில் இருக்கிற காலை, மாலை சந்தியாக் காலங்களை உண்டாக்குகின்றது.
இந்த ஸ்லோகத்தைத்தான் தன் பாணியில் பாடுகின்றான் கம்பன். இப்பாடல் சொன்னபடியே அன்னையின் கண்களாக சூரிய, சந்தர, அக்னியை வர்ணிக்கிறான்.
அடுத்து தீபத்தின் ஒளி அவளே, ரத்தின மாலையின் பிரகாசமான ஒளி அவளே என்றான்.
லலிதா சஹஸ்ர நாமம் அன்னைக்கு பல பெயர்களைச் சொல்கின்றது.
அவளை “த்ரிகண்டேஷி” என்கின்றது. அதாவது அன்னை சந்திர, சூரிய, அக்னி என்ற மூன்று கண்டங்களுக்கும் ஈஸ்வரி என்கின்றது.
“பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி” எனச் சொல்கின்றது. அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர்கள் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள் எனப் பொருள்.
அவளை “மித்ர ரூபிணி” என்கின்றது. அதாவது சூரிய வடிவானவள் அன்னை எனச் சொல்கின்றது.
அவளை “பகாராத்யா” என்கின்றது. அதாவது சூரிய மண்டலத்தில் ஆராதிக்கத்தக்கவள் எனப் பொருள்.
அந்த லலிதா சஹஸ்ர நாமம் இன்னும் சொல்கின்றது. அவளை “ரவிப்ரக்யா” என்கின்றது. அதாவது சூரியனைப் போன்ற பிரகாசமுள்ளவள் எனப் பொருள்.
இன்னும் அவள் சூரிய மண்டலம், சந்திரமண்டலத்தின் நடுவில் இருப்பவள் என்பதைச் சொல்ல “பானுமண்டல மத்யஸ்தா”, “சந்த்ர மண்டல மத்யகா” என இரு பெயர்கள் உண்டு.
இப்படி அன்னை ஒளிவடிவாக ஜொலிப்பதைத்தான் கம்பன் தன் பாடலில் சொல்கின்றான்.
சவுந்தர்ய லஹரியில் ஒரு அழகான, ஆழமான பாடல் உண்டு.
“தடில்லேகாதந்வீம் தபன சசி வைச்வாநர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மலமாயேன மனஸா
மஹாந்த: பச்யன்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்”
என்பது அப்பாடல். இதன் பொருள் இப்படி வரும்.
“தடித் லேகா தந்வீம்” அதாவது மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும்,
“தபன சசி வைச்வாநர மயீம்” அதாவது சூரியன், சந்த்ரன், அக்னி வடிவமாயும், “நிஷண்ணாம்” அதாவது நிலை பெறுவதுமான, “ஷண்ணாம்” அதாவது ஷண் எனும் ஆறு, “கமலானாம் அபி” ஆதார சக்கரங்களுக்கும், “உபரி” மேலே
“மஹாபத்மாடவ்யாம்” என்றால் ஆயிரம் தளங்களுடைய தாமரையில், “ம்ருதித” என்றால் நாசம் செய்யப்பட்ட, “மல மாயேன” என்றால் காமக்ரோதாதி மலங்கள், “மனஸா” என்றால் மனதால்
“மஹாந்த” என்றால் ஞானிகள், “பச்யன்தோ” என்றால் பார்ப்பவர்களாக, “தததி” என்றால் அனுபவிக்கிறார்கள், “பரமாஹ்லாத லஹரீம்” என்றால் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை எனப் பொருள்.
அதாவது, மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும், சூரியன், சந்த்ரன், அக்னி வடிவமாயும், ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே ஆயிரம் தளங்களுடைய தாமரையில் நிலை பெறுவதுமான, உன்னுடைய இந்த ‘சாதா’ என்ற கலையை, காமக்ரோதாதி மலங்களை மனதால் நாசம் செய்யப்பட்ட ஞானிகள் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை பார்ப்பவர்களாக அனுபவிக்கிறார்கள் எனப் பொருள்.
இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால், அன்னை ஒளியாக இருக்கின்றாள். அது ஞானத்தின் ஒளி, அந்த ஒளிதான் எல்லா உலக லவுகீக ஒளியாகவும், ஞான ஒளியாகவும் பிரகாசிக்கின்றது
அந்த ஒளிதான் உடலின் சக்கரங்களின் ஒளியாக மறைந்திருக்கின்றது. அதை தியானத்தில் துலக்கினால், ஆறு சக்கரங்களும் துலங்கி, உச்ச சக்கரம் துலங்கும். அப்போது தலையினைச் சுற்றி ஒளிவட்டம் வருவது போல் பெரும் ஞானம் வாய்க்கும்.
அன்னை எல்லா ஒளிக்கும் அதிபதி. ஞானம் எனும் பேரொளி, ஞானச்சுடருக்கும், அறிவுச்சுடருக்கும் அவளே அதிபதி. அவளை வேண்டினால் ஒளி துலங்கும், ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அது எல்லா நலன்களையும் தரும் என்கின்றான் கம்பன்.
இந்தப் பாடல் கொஞ்சம் ஆழமான கருத்தைச் சொல்லும் பாடல். இந்துக்களின் பிரசித்தியான காயத்ரி மந்திரம் என்பது எல்லோரும் அறிந்தது.
காயத்ரி என்பது ஒரு அமைப்பே. பாடல் அமைப்பே தவிர முழு மந்திரம் அல்ல. உண்மையில் நாம் சொல்லும் காயத்ரி மந்திரத்தின் உண்மையான பெயர் “சாவித்ரி”.
அதாவது பிரம்மனின் துணையாக இருந்து உலகை ஆளும் ஒளியின் தெய்வமான சாவித்ரி.
அந்த மந்திரம் இதோ.
“ஓம் பூர் புவ ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்”
இதன் பொருள் இதுதான்.
“பூர் புவ ஸுவர்” என்றால் மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள (பரவியுள்ள), தத் என்றால் அது அல்லது அவர், ஸவிதுர் என்றால் ஒளி பொருந்திய சூரியனாகவும் எல்லா ஒளிமயமானதாகவும், வரேண்யம் என்றால் வணங்கதக்கவராயும்,
“பர்கோ” என்றால் அறியாமை மற்றும் குழப்பத்தை பஸ்மமாக்குபவரும், தேவஸ்ய என்றால் தெய்வம், “யோ ந” என்றால் அவர் நம், “தீமஹி” என்றால் த்யானிக்கிறேன், ‘தியோ” என்றால் முடிவெடுக்கும் திறனை, “ப்ரசோதயாத்” என்றால் பிரகாசப்படுத்தட்டும்.
அதாவது, மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள, ஒளி பொருந்திய, வணங்கத்தக்க அந்தத் தெய்வத்தை த்யானிக்கிறேன். அவர் நம் எல்லோருடைய அறியாமையை அகற்றி, அறிவைத் தூண்டி, முடிவெடுக்கும் திறனை பிரகாசப்படுத்தட்டும் என்பதுதான் சாவித்ரி மந்திரத்தின் பொருள்.
அன்னை பிரம்மனுடன் இந்த உலகை படைத்தவள். அவளே ஆதிபராசக்தி, அந்த மூலஒளியினை நோக்கி, சாவித்ரி எனும் ஒளிதெய்வத்தை நோக்கி சொல்லப்படும் மந்திரம் இது.
இந்த மந்திரத்தின் பொருளைத்தான், இந்த மந்திரத்தின் தழுவலைத்தான், தன் பாடலில் மறைமுகமாகச் சொல்கின்றான் கம்பன்.
நல்ல கவிதை என்பது சொல்லவரும் பொருளை மறைமுகமாக சொல்லவேண்டும். அதுதான் இலக்கண விதி.
அப்படி சாவித்ரி மந்திரமாக அன்னை இருக்கின்றாள் என்பதைச் சொல்லி, அவள் ஒளிவடிவாக நின்று ஞானம் தருகின்றாள் எனத் தன் பாடலில் பாடுகின்றான் கம்பன்.
சாவித்ரி என ஒளிவடிவமாக நிற்கும் அன்னையினை எல்லோரும் வணங்கி ஞான ஒளி பெற வேண்டிச் சொல்லும் சாவித்ரி மந்திரப் பொருளை இப்படி தன் பாணியில் பாடிச் சொல்கின்றான் கம்பன்.
தாயே, திருமாலின் தொப்புளில் இருந்து உதித்த பிரம்மனின் தோளில் சாய்ந்திருக்கும் நீ, உதயநிலவின் ஒளியாய் இருக்கின்றாய். மாலையில் ஏற்றும் தீபமாய் இருக்கின்றாய். அந்தணர்கள் காலையிலும், மாலையிலும் வழிபடும் போது சந்திப்பொழுதில் வரும் மென்மையான வெப்பம் தரும் இளம் சூரியனாய் இருக்கின்றாய். இரத்தின மாலையின் ஒளியாய் ஜொலிக்கின்றாய்.
தாயே, எல்லா வடிவ ஒளி நீ. சாவித்ரி என ஒளி வடிவமாய் இருந்து எல்லோரையும் நடத்தும் ஒளி நீ. ஞான ஒளி நீ. உன்னை வணங்குவோருக்கு நல்ல அறிவொளி, ஞான ஒளிதந்து உயர்த்துபவள் நீ. நீ என்னோடு இருக்கும் போது எனக்கென்ன கவலை எனப் பாடி வணங்குகின்றான் கம்பன்.