சரஸ்வதி அந்தாதி : 11

சரஸ்வதி அந்தாதி : 11

“ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே”

இந்தப் பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திருப்பாளை எண் எண் கலைதோய்
கருத்தியை ஐம்புல னுங்கலங் காமல் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே”

இனி பாடல் பொருளைக் காணலாம்.

“ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்து தன்னை” எனப் பாடலை தொடங்குகின்றான் கம்பன்.

இது எப்படி பொருள் வருமென்றால் “ஒன்றும் இலா என் மனதில் உவந்து வந்த ஒருத்தி” என வரும்.

அதாவது, தன் மனம் சூனியம் என்றும், எதுவுமே இல்லாத வெற்று மனம் என்றும், அந்த மனதில் தானாகவே வந்து அவள் அமர்ந்து கொண்டாள். விரும்பி வந்து அமர்ந்துகொண்டாள் என் அன்னை என்கின்றார்.

தன் மனம் ஒன்றுமில்லாதது. தரிசுபோல பயனற்று கிடந்தது. அங்கே அந்த அன்னை வந்து அமர்ந்து அருள்பாலித்தாள் எனத் தொடங்கும் கம்பன் அடுத்து பாடுகின்றான்.

“தன்னை இருத்தியை வெண்கமலத்து இருப்பாளை” என்கின்றான். அதாவது தன் மனதில் அமர்ந்திருக்கும் தேவி வெண்கமலம் எனும் வெள்ளை தாமரையிலும் இருப்பாள் என்கின்றான்.

அடுத்து “எண் எண் கலைதோய் கருத்தியை” என்கின்றான்.

அதாவது எண் எண் என்றால் 64, ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தன் மனதில் கருத்தாய் பதிய வைத்தவள் அன்னை என்கின்றான்.

அடுத்து “ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம் திருத்தியை” என்கின்றான். அதாவது என் ஐம்புலனையும் ஆக்கிரமித்து ஒரே புள்ளியில் வைத்திருக்கும் அவளை, என்னை திருத்தி சரியாக இயக்கும் அவளை என்கின்றான்.

கடைசியாக “யான் மறவேன்திசை நான்முகன் தேவியையே” என்கின்றான்.

நான்கு திசைகளிலும் நான்கு முகங்களுடன் வீற்றிருக்கும் பிரம்மனின் தேவியினை நான் மறக்கமாட்டேன் எனப் பாடி முடிக்கின்றான் கம்பன்.

ஆகப் பாடலின் சுருக்கம் இதுதான்.

“அன்னை ஒன்றுமில்லா என் மனதில் குடி வந்தாள். வெண்தாமரையில் இருப்பவள் என் மனதிலும் வந்தாள். பூஜ்ஜியமாக இருந்த என்னை 64 கலைகளுக்கும் அதிபதியாக்கினாள். எல்லா கலைகளையும் என்னில் தோன்றச் செய்தாள். ஐந்து புலன்களையும் ஒரே கருத்தில் இருக்குமாறு என்னை திருத்தி வழி செய்தாள்.

நான்கு திசைகளையும் நோக்கியிருக்கும் பிரம்மனின் துணைவியான அவளை நான் மறக்கமாட்டேன். அவளைத் தவிர எதையும் சிந்திக்க மாட்டேன்”.

மிக எளிமையான இப்பாடல் ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டது.

ஒன்றுமில்லாதவன் தான் எனப் பாடலை தொடங்குகின்றான் கம்பன். தான் வெறும் சூனியமாக இருந்ததையும், தரிசுபோல தன் மனம் பயனற்று, பலனற்று கிடந்ததையும் சொல்கின்றான்.

அப்படிப்பட்டவனை தேடி அன்னை தானே வந்து தன் மனதில் அமர்ந்தாள். தேவலோக வெண் தாமரையில் இருக்கும் அவள் இந்த ஒன்றுமே இல்லாத சூனியமான இடம் தேடி வந்து அமர்ந்தாள்.

அப்படி அமர்ந்தவள் அறுபத்தி நான்கு கலைகளையும் தந்தாள் என்கின்றான்.

அதாவது அன்னை வந்து அமர்ந்த மனம் எல்லா நலமும், வளமும் பெறும். எல்லா வகை கலையும் அந்த மனதில் வாய்க்கும் என்கின்றான்.

சுப்பிரமணிய புஜங்கத்தில் ஒரு பாடல் உண்டு.

“ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |
சித்-ஏகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோத-தே மே
முகாந்-நிஸ்ஸரந்தே கிரஸ்-சா-(அ)பி சித்ரம் ||”

அதன் பொருள் இப்படி வரும்.

“நான் ஒரு வார்த்தை அறியேன், அதன் ஒரு அர்த்தம் அறியேன்; உரைநடையும் எனக்கு தெரியாது; கவி பாடவும் தெரியாது. என் மனத்தில் ஆறுமுக உருவம் தோன்றி, அந்த சித் ப்ரகாசத்தின் அருளாளே தானாகவே என் வாயிலிருந்து பாடல் பிறந்தது”

இதைத்தான் கம்பனும் பாடுகின்றான். அன்னையினை நினைத்த மாத்திரத்தில் ஏதும் அறியாத அவன் மனம், எல்லாம் அறிந்த கவிஞன் மனமாக பாடுகின்றது என்பதைச் சொல்கின்றான்.

இன்னும் சூசகமாக ஒன்றைச் சொல்கின்றான், அது வேதங்கள் சொல்வது.

இந்த உலகமும் பிரபஞ்சமும் சூனியத்தில், அதாவது ஒன்றுமே இல்லா நிலையில் இருந்து உருவானது என்பது ஐதீகம். அதை இங்கே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றான் கம்பன்.

அன்னை எப்படிபட்டவள் என்றால் மகா ஆச்சரியத்தை செய்பவள் என்கின்றான்.

அதாவது இங்கு ஒரு விஷயத்தை உருவாக்க ஒரு மூல விஷயம் அல்லது மூலப்பொருள் வேண்டும்.
அவள் “மூலப்ரக்ருதி” அதாவது பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள்; தோற்ற-நிலையின் சாரம் என லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது.

நிலமும் நீருமில்லாமல் விவசாயமில்லை, இரும்புதாது இல்லாமல் இரும்பு பொருட்கள் இல்லை, உளியும் பாறையுமில்லாமல் சிற்பம் இல்லை.

அப்படி கலைகள் உருவாக நல்ல கலைஞானமிக்க குரு வேண்டும், நூல்கள் வேண்டும், இன்னும் பலவும் வேண்டும்.

ஆனால் அன்னை அசாத்தியமானவள் அல்லவா? அவளால் ஒன்றுமே இல்லாத இடத்தில் மூலமே இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் கொண்டு வரமுடியும்.

லலிதா சஹஸ்ர நாமம் அவளை பற்றிச் சொல்கின்றது.

அவள் “சர்வ சக்திமயீ”, அதாவது சகல ஆற்றலும் நிறைந்தவள். அவள் “சர்வமயீ” அதாவது அவள் எங்கும் நீக்கமற வ்யாபித்திருப்பவள்.

அவள் “சர்வ மந்த்ர ஸ்வரூபிணீ” அதாவது, அவள் அனைத்து மந்திரங்களின் உருவடிவானவள்.

அவள் “சர்வ யந்த்ரதாத்மிகா” அதாவது, அவள் அனைத்து யந்த்ரங்களின் சக்தியாக நிறைந்திருப்பவள்.

அவள் “சர்வ தந்த்ர ரூபா” அதாவது, அவள் அனைத்து தந்த்ர முறைகளின் சாரமாக விளங்குபவள் எனப் போற்றுகின்றது.

அவளே “மகாமாயா” என எல்லா மாயங்களுக்கும் மூலம் என்கின்றது.

சூனியத்தில் இருந்து உலகை படைத்த அன்னை, மூலம் எதுவுமே இன்றி தன் சுட்டுவிரல் அசைவில் உலகைப் படைத்த அன்னை, அந்த அதிசயத்தையே தன் மனதிலும் செய்தாள்.

எனக்கு குரு கிடையாது, பெரும் நூல்களை நான் கற்றவனும் அல்ல, கலைகளை கற்கும் பாக்கியமோ வாய்ப்போ இல்லை.

ஆனால் எனக்குள்ளும் 64 கலைகளும் வந்து குவிந்ததென்றால் எல்லா கலைகளையும் பற்றி பாட முடிகிறதென்றால், இது அன்னை வந்ததால் தானே சாத்தியம்?

வெள்ளை பூவில் இருப்பவள் என் மனதில் வந்ததால்தானே சாத்தியம்? அவளால்தான் இருளில் இருந்து ஒளி பிறப்பது போல என் மனம் ஞானம் பெற்று இக்கலைகளை பெற்று பிரகாசிக்கின்றது. அவள் அருளால் எல்லாமே சாத்தியம் என உற்சாகமாகப் பாடுகின்றான்.

அகஸ்தியர் தன் சரஸ்வதி ஸ்தோத்திரத்தில் சொல்கின்றார்.

“முக்தா-(அ)லங்க்ருத ஸர்வாங்க்யை மூலா-(ஆ)தாரே நமோ நம |
மூல-மந்த்ர-ஸ்வரூபாயை மூல-சக்த்யை நமோ நம ||”

அதாவது எல்லாவற்றிர்க்கும் மூல ஆதாரமாக இருப்பவளை, மூல மந்த்ர ரூபமானவளை, மூல ஆதி சக்தியை, உடல் முழுவதும் முத்து ஆபரணங்களால் அலங்கரித்தவளை வணங்குகிறேன் என்கின்றார்.

அதைத்தான் இங்கும் சொல்லிப்பாடும் கம்பன் தொடர்கின்றான்.

அவள் ஐந்து புலன்களும் கலங்காமல் கருத்தையெல்லாம் திருத்தினாள் என்கின்றான்.

ஐம்புலன்களையும் ஒரே புள்ளியில் செலுத்துதல் என்பது தவமிருத்தலை, தியானத்தை குறிக்கும். அன்னை அவளை நோக்கி தவமிருக்க வைத்திருக்கின்றாள். தான் ஒரு யோக நிலையில் இருக்க அவளே காரணம் என்கின்றான்.

லலிதா சஹஸ்ர நாமம் அவள் “த்யான கம்யா” த்யானத்தின் மூலம் அடையப்படுபவள் என்கிறது.

மேலும் “த்யான த்யாத்ரு த்யேய ரூபா” அதாவது தியானமாகவும், தியானிப்பவராகவும், தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள் என்கின்றது.

அவளை “பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி” என்கின்றது. அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள் எனப் பொருள்.

அவளை “பக்த சௌபாக்ய தாயினி” அதாவது, பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள் என்கின்றது.

இங்கே கம்பன் சொல்கின்றான், ஐம்புலன்களும் அவளால் நிறைந்துள்ளன என்கின்றான்.

கண் அவளை பார்க்கின்றது, வாய் அவளை பாடுகின்றது, சுவாசம் அவளுக்காக, அவன் கேட்பது அவள் புகழை, அவன் உடல் அன்னையினை பாடுவதற்காகவே வாழ்கின்றது.

சுப்ரமண்ய புஜங்கத்தில் இந்த யோக நிலையைத்தான் ஆதி சங்கரர் இப்படி பாடுகின்றார்.

“த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்-தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: ||”

கந்தனின் உருவமே என் கண்கள் கண்டு, கந்தனின் புகழே என் காதுகள் கேட்டு, எப்பொழுதும் உன் புண்ய சரித்திரங்களை என் வாயால் பேசி, பாடி, என் கைகள் உனக்கு தொண்டு செய்து, என் உடல் உனது சேவகம் / பணிவிடை செய்து, குஹனே! என் எல்லா நினைவுகளும் / உணர்வுகளும் உன்னில் ஐக்கியம் / ஒன்றாக ஆகட்டும் என்று உருகுகிறார்.

அப்படி தன் புத்தி, சிந்தை, செயல், வாழ்வு என எல்லாமும் அன்னை என ஒரு யோக நிலையில் தான் இருப்பதை சொல்கின்றான்.

அன்னை தன் சிந்தையில் நிரம்பி, தன் செயலை ஆகர்ஷித்து, எல்லாமும் அவளே, தன்னை முழுக்க ஆக்கிரமித்து தன்னை இயக்குபவள் அவளே என பாடுகின்றான்.

சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் பாடுவார்.

“ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யா ஹுதி-விதி: |
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்பண-த்ருசா
ஸபர்யா பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ||”

தாயே ! என் உடல், உயிர், ஆவி அனைத்தையும் உன்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, உன் ஸ்வரூபமாகவே நான் ஆகிறேன் என்ற பாவனையால், நான் உலக விசயமாக பேசுவது எல்லாம் கூட உன் மந்திர ஜபமாகவும், என் கை, கால்களுடய அசைவு உன்னுடைய பூஜை முத்திரைகளாகவும், நான் தற்செயலாக நடப்பது உன்னை வலம் வருவதாகவும், நான் சாப்பிடுவது அனைத்தும் உன்னைக் குறித்துச் செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும், பூமியில் படுத்துக்கொள்வது உன்னை விழுந்து வணங்குவதாகவும், இவ்வாறு நான் செய்யும் மற்ற செயல்கள் எல்லாம் உன்னுடைய பூஜையாக ஆகட்டும் என்கின்றார்.

அதே மனநிலையில்தான் அப்படி சங்கர ர் தன் சிந்தை, செயல், இயக்கம் என எல்லாமும் அவளாக மாறி நின்று பாடும் அந்த லயத்தில்தான் தானும் நிற்பதைச் சொல்லி பாடுகின்றான்.

கடைசியில் நான்கு பக்கமும் நோக்கும் பிரம்மனின் தேவியினை நான் மறவேன் என்கின்றான்.

இது அன்னை தனக்குள் மட்டும் அல்ல, தன் சிந்தையில் மட்டும் அல்ல, நான்கு திசையில் தான் காணும் எல்லாமும் தனக்கு அன்னை வடிவம் என உருக்கமாகப் பாடி முடிக்கின்றான்.

ஆம், அன்னையின் அருளை அவ்வளவு உருக்கமாக பாடுகின்றான் கம்பன். மிகப்பெரும் கவிஞனாக, பெரும் புகழும் செல்வாக்கும் கொண்ட கவிஞனாக அவன் நின்றாலும், தன் மனதினை அப்படியே இப்பாடலில் காட்டுகின்றான் கம்பன்.

நான் ஒன்றுமே இல்லை. என் மனமும் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருந்தது. வெற்றிடத்திலே பெரும் விஷயங்களை உருவாக்கும் என் தேவி என் மனதில் வந்ததால் 64 வகை கலைகளும் அதைப் பாடும் பெரும் ஆற்றலும் வந்தது.

அந்த கலையால் நான் அன்னை ஒருத்தியினையே தியானிக்கின்றேன். என் ஐம்புலன்களும் அவளையே பற்றி நிற்கின்றன. அன்னையானவள் என் சிந்தை, செயல், ஆத்மா, புத்தி, அறிவு என எல்லாமுமாக ஆகிவிட்டாள். அவளே என்னை இயக்குகின்றாள்.

என் தவம் அவள், என் யோகம் அவள், ஒருமுகப்பட்ட மனமாக நான் தியானிக்கும் பரம்பொருள் அவள்.

அந்த அன்னையினை நான் எனக்குள் காண்கின்றேன். என் சிந்தையில் காண்கின்றேன். என் செயலில் காண்கின்றேன். என்னைச் சுற்றி நான்கு திசைகளிலும் காண்கின்றேன்.

என் மனதின் கலைகள், என் பாடல்கள், என் தியானம், நான் காண்பது, நான் காணாதது என எல்லாம் என் தேவியே. அவளை நான் உயிரெனக் கொண்டு பற்றி நிற்கின்றேன். அவளை நான் எப்படி நொடிப் பொழுதும் மறக்கமுடியும் எனப் பாடி உருகி மருகி நிற்கின்றான் கம்பன்.

இப்படி இப்பாடலின் விளக்கம் அமைந்தாலும், இங்கும் யோக ரகசியம் ஒன்று உண்டு, அது மகா சூட்சுமமானது.

தியானத்தால் சமாதி நிலை எனும் எல்லாம் கடந்த வெறுமை நிலையில், உணர்வை, உயிரை, மனதை, சிந்தையினை கடந்த அந்த பெருக்ஞான நிலையில், சமாதி நிலையில் பிரபஞ்சத்தோடு கலந்துவிடுவான் யோகி.

அந்த யோக உச்சியில் பிரபஞ்சத்தோடு அவன் கலக்கும் போது அவன் தெய்வநிலை அடைவான். அவனின் ஐம்புலன்களும் தெய்வநிலைக்கு ஒரே சிந்தனையான இறைநிலைக்கு சென்றுவிடும்.

சித்தர்கள், ஞானியர், ரிஷிகள் நிலை இதுதான்.

இந்த நிலையில்தான் ஒருவனுக்கு எல்லாமும் வாய்க்கும், 64 கலைகளும், பெரும் சக்தியும், பேரறிவும் வாய்க்கும்.

இந்நிலை வசிஷ்டர், வியாசர், விஸ்வாமித்திரர், அகத்தியர் போன்ற பெரும் ரிஷிகளுக்கு பல்லாண்டு கால தவத்தில் கிடைத்தது.

ஆதிசங்கரர் போன்ற ஞானியருக்கு அன்னையின் அருளால் இளமையிலேயே கிடைத்தது.

இப்படி தவமிருந்து மனதை ஒருமித்து பெரும் தியானத்தில், யோகத்தில் மூழ்கி ஒன்றுமில்லா சமாதி நிலைக்குச் சென்று பெறவேண்டிய ஞானத்தை, பெரும்பாடுபட்டு அறியவேண்டிய ஞானத்தை, அன்னை எனக்கு இந்த வெற்றுமனதில் தந்துவிட்டாள், அதனால் நான் பாடுகின்றேன்.

ஐம்புலனும் அடக்கி சமாதி நிலைக்கு சென்று பெறவேண்டியதை, அன்னை எனக்கு தானே அருளிவிட்டதால் நான் இப்போது ஐம்புலனும் அவளாக அவள் இயக்கமாக நின்று பாடுகின்றேன்.

என்னில் இருப்பதெல்லாம் அன்னை, நான் சமாதி நிலை அடைந்து விட்டேன். இந்த பிரபஞ்சத்தின் வடிவமான அன்னையுடன் மனதால் கலந்துவிட்டேன். எல்லா திசைகளையும், கால நேரத்தையும் கடந்தவனாகி விட்டேன். அவளால் தான் இதெல்லாம் சாத்தியம். யோகிகளுக்குரிய ஞானத்தை எனக்கும் தந்து, என்னை ஞானியாக்கியவள் அன்னை என மனமுருகப் பாடுகின்றான் கம்பன்.