சரஸ்வதி அந்தாதி : 12

சரஸ்வதி அந்தாதி : 12

“தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.”

பாடலின் பொருளை வரி பிரித்துக் காணலாம்.

“தேவரும் தெய்வ பெருமானும் நான் மறை செப்புகின்ற” என முதல் வரி வருகின்றது.

தேவரும் என்றால் தேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற பெரும் கூட்டமாகின்றது, வானலோகத்து தேவர்கள் எல்லோரும் எனப்பொருள்.

தெய்வ பெருமானும் என்றால் தேவர்களின் தலைவனான இந்திரனும் எனப் பொருள். தேவர்கள் தங்கள் அரசனுடன் வந்து எனப் பொருள்.

அடுத்த வரி “நான்மறை செப்புகின்ற மூவரும்” என வரும். நான்மறை என்றால் நான்கு வகையான வேதம், அந்த வேதங்கள் போற்றும் பிரம்மன், சிவன், விஷ்ணு எனும் அந்த மூவரும் எனப் பொருள்.

அடுத்து “தானவரா கியுள் ளோருமுனி வரரும்” என வரி வரும். அது “தானவர் ஆகி உள்ளோர், முனிவரரும்” எனப் பிரிந்து பொருள்தரும்.

தானவர் என்றால் அசுரர்கள் எனப் பொருள். ஆக அசுரர்களும் மானிட நிலையில் இருந்து மேம்பட்டு இறைநிலை அடைந்த முனிவர்களும் எனப் பொருள்.

அடுத்து “யாவரு மேனையவெல் லாவுயிரும்” என மூன்றாம் வரி வருகின்றது. “அது யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த” எனப் பிரிந்து பொருள் தரும்.

அப்படி பெரும் தெய்வங்களும், தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும், இன்னும் மானிடர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் எனப் பொருள்.

அடுத்து “இதழ் வெளுத்த பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே” என வரும., இது “இதழ் வெளுத்த பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே” எனப் பொருள் தரும்.

இதழ் வெளுத்த என்றால் வெண்மையான, வெண் தாமரையில் இருக்கும் மாது என்றால் அன்னை, அந்த அன்னையின் அருளால் எல்லோருக்கும் ஞானம் வாய்கின்றது என்பது பொருள்.

ஆகப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு என சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றது.”

இந்தப் பாடலை பெரும் உயரத்தில் உள்ள பெரும் சக்திகள், இடைப்பட்ட சக்திகள், அடிமட்ட சக்திகள் என எல்லா சக்திகளையும் பிரித்து, அவற்றின் ஆற்றலைப் பிரித்து எல்லாவற்றிலும் இருப்பது அன்னையின் அருளே, அன்னையின் இயக்கமே எனச் சொல்லிப் பாடுகின்றான் கம்பன்.

பிரம்மா, சிவன்,விஷ்ணு எனும் முப்பெரும் தெய்வங்களின் சக்தி மகா பெரிது. காத்தல், படைத்தல், அழித்தல் என பெரும் தொழிலை செய்யும் தெய்வங்கள் அவை. பிரபஞ்ச மகா சக்திகள்.

அந்த மகாசக்திகளின் ஞானம், அவற்றின் ஆற்றல் அன்னை என்கின்றான் கம்பன்.

அகத்தியர் தன் சரஸ்வதி ஸ்தோத்திரத்தில் பாடுகின்றார்

“ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம: |
ஸம்பன்னாயை குமார்யை ச ஸர்வஜ்ஞே நமோ நம: || “

அனைத்து உயிர்களின் ஞானமுமானவளே (அறிவும் ஆற்றலும்), எப்போதும் ஆனந்தமாக, எல்லா வடிவங்களையும் தாங்கி நிற்கும் அன்னைக்கு வணக்கங்கள். அனைத்தும் அறிந்தவளே, தீர்க்கமான குறைவற்ற துல்லிய ஞானமும் உடைய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
என்கிறார்.

இன்னும் பாடுகின்றார்

“ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம: “

ஞான, விஞ்ஞான உருவானவளே, அறிவின் முழு உருவானவளே உனக்கு என் வந்தனங்கள். பலவித சாஸ்த்திரங்களின் சாரமானவளே, இவ்வுலகில், அண்டத்தில் பல்வேறு வடிவங்களாகவும் விளங்குபவளே உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

ஏன அன்னையே எல்லா உயிர்களின் அறிவாகவும் ஞானமாகவும் இருக்கின்றாள் என பாடுகின்றார்

லலிதா சஹஸ்ரநாமம் அவளின் பல் உயிர் ஞானத்தை சொல்கின்றது

அவள் ” விஞ்ஞானகன ரூபிணீ” அதாவது தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்

அவள் “ஜகதீகந்தா” அதாவது உலகத்தின் படைப்புக்கு வேரானவள்

அவள் “பராசக்தி” அதாவது ஒப்புயர்வற்றவள், உன்னத சக்தியாக விளங்குபவள்.

அவள் “ப்ரக்ஞான கணரூபினி” அதாவது சம்பூரண ஞானவடிவானவள்.

அவள் “விஞ்ஞாத்ரி” அதாவது சகலமும் அறிந்தவள், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி அதாவது சிந்தனை, செயல் மற்றும் ஞானமெனும் மூவகை ஆற்றலாக வெளிப்படுபவள் என வியந்து போற்றுகின்றது

இதைத்தான் கம்பனும் தன் பாடலில் சொல்கின்றான், கொஞ்சம் ஆழ கவனித்தால் அது உங்களுக்கே புரியும், இங்கு எல்லாமே அவளின் ஞானம் என்பது புரியும்

இந்த பிரபஞ்சம் அதி ரகசியமானது. சூட்சுமாமானது. யாராலும் முழுக்க புரிந்து கொள்ளமுடியா இயக்கம் கொண்டது. அது மாபெரும் ஞானம். அதி உன்னத ரகசியம். மிக சிறந்த சூட்சுமமான இயக்கம், அப்படி அதன் அழகும் இயக்கமும் பெரும் ஞானமும் கொண்டது.

அந்த மகா ஞானம் அன்னையின் அருள் என முப்பெரும் தேவர்க்கும் அறிவும் ஞானமும் கொடுப்பவள் அன்னை என்கின்றான் கம்பன்.

பின் தேவர்களுக்கு வருகின்றான். தேவர்கள் என்றால் சூரியன், சந்திரன், மழைகொடுக்கும் வருணன், வாயு என ஏகப்பட்ட தேவர்கள் உண்டு.

இவர்களின் சக்தியும் ஞானமும் அபாரமானது. மிக மிக ஒழுங்குடன், மிக மிகத் துல்லியமாகக் கடமை தவறாமல் செய்யும் இவர்களின் சக்தி அபாரமானது. அவர்கள்தான் முப்பெரும் தேவர்களுடன் இருந்து பிரபஞ்சத்தை இயக்குகின்றார்கள்.

அந்த தேவர்களின் சக்தியும் ஞானமும் அன்னை என்கின்றான் கம்பன். இங்கே தேவர்களின் குருவான பிரகஸ்பதியும் உண்டு.

அந்த தேவர்களே சக்தி மிக்கவர்கள் என்றால் அவர்களின் தலைவனான இந்திரன் எவ்வளவு சக்திவாய்ந்தவன்? தேவர்களையே ஆளும் அந்த ஞானமும் இந்திரனின் ஞானமும் அன்னை என்கின்றான்.

தேவர்களைப் போலவே மேம்பட்ட நிலை உடையவர்கள் அசுரர்கள். ஆனால் மிக மிக வைராக்கியமும் உறுதியும் கொண்டவர்கள். அதி சக்தி வாய்ந்தவர்கள். தேவர்களையே வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள்.

தேவர்களுக்கு சமமான சக்தி கொண்டு பிரபஞ்ச சமநிலையினை பேணுபவர்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் தெய்வங்களின் சக்தியினை நிரூபிக்க இடமே இல்லாமல் போயிருக்கும்.

அவர்களும் இறைவனின் கருவிகளே. அதி சக்தி வாய்ந்த அந்த அசுரரில் பெரும் பராக்கிரமசாலியரும் அவர்களின் குருவான சுக்கிராச்சாரி போன்ற ஞானவான்களும் உண்டு.

அப்படியான ஞானமும் அன்னை எனும் கம்பன், தொடர்கின்றான்.

தேவர்கள் அசுரர்களை விட கீழ்நிலையில் இருந்த மானுடரில் இருந்து தெய்வநிலைக்கு ஏகினோர் ரிஷிகள்.

இவர்கள் இயல்பான ஞானம் படைத்தவர்கள் அல்ல. தேவர்களைப் போல பிறப்பிலே சக்தி கொண்டோர் அல்ல. ஆனால் இடைவிடாத தேடல், தவம், ஞானம் எனத் தன்னை இறுத்து, ஒறுத்து தேடித் தேடி ஞானம் அடைந்தவர்கள்.

அப்படி செயற்கையாக அல்லது இயல்பாக அல்லாமல் தேடி அடைந்த ஞானமும் அன்னையின் அருள் என்கின்றான்.

கடைசியில் மானுடர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் அல்லது அஃதிணைகளும் அன்னையின் ஞானமே என்கின்றான்.

மானிடரையும் இதர அஃதிணைகளையும் அதாவது விலங்குகள், பறவைகள், பூச்சி புழுக்கள் என எல்லாவற்றையும் அன்னையின் ஞானம் என்கின்றான்.

ஏன் சொல்கின்றான் என்றால் அதுவும் கவனிக்கதக்கது.

அவள் “ஆப்ரஹ்மகீட ஜனனி” அதாவது பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா

காண்பவை காணாதாவை என எல்லாம் படைத்தவள் அவளே, மிக நுண்ணிய பாக்டீரியா முதல் பெரிய மலை வரை அவள் படைப்பன்றி வேறல்ல‌

இங்கு எல்லாமே அதனதன் கடமையினை, அதனதன் அறிவுக்கு உட்பட்டு அழகாகச் செய்கின்றன. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வகையில் ஞானமானது.

மானிடன் சிந்திக்கத் தெரிந்த நிலையில் மேம்பட்டவன். ஆனால் புலியும் சிம்மமும் யானையும் நரியும் அதனதன் இயல்பில் மேம்பட்டது.

மான் இல்லையென்றால் காடு பெருகும். சிம்மம், புலி இல்லாவிட்டால் மான் பெருகும். சிம்மும் புலியும் எலிபோல் மான்போல் பெருகினால் காடு தாங்காது.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த தவளை. அதைக் கட்டுப்படுத்த பாம்பு. பாம்பை கட்டுப்படுத்த கருடன் என ஒவ்வொன்றும் ஞானமாய் படைக்கபட்ட உலகிது.

கரையான் கூட பட்டுப்போன மரத்தை அழகாக அரிக்கின்றது. பூச்சிகள் அதனதன் கடமையினை ஞானமாய் செய்கின்றன‌.

நுண்ணுயிர்கள் இல்லையென்றால் உலகே இல்லை, பொருட்கள் மக்கிபோவதில்லை அழிந்து மண்ணாவதில்லை, அவை அதனை சரியாக செய்கின்றன‌

நோய்கள், கொள்ளை நோய்கள் என பலவாறு சொன்னாலும் அவை கூட மனிதன் எனும் பிராணி உலகில் பெருவாரி பரவி எல்லாம் அழித்துவிட கூடாது என பிரபஞ்சம் கையாளும் ஒரு விஷயமே அன்றி வேறல்ல, அதன் கைபொம்மைகளே வைரஸ்கள், பாக்டீரியாக்கள்

கண்ணுக்கே தெரியா அவற்றின் இயக்கம் கூட ஆச்சரியமானது, அறிவானது, கட்டுபட்ட நியதிக்கு உட்பட்டபடி அவை தங்கள் வேலைகளை சரியாக செய்துகொண்டிருக்கின்றன?

அவற்றுக்கு அந்த கட்டளையினை இட்டது யார்?

இது மனிதன், இது அவனின் அங்கம், இங்கே இப்படி தாக்கவேண்டும் என சொல்லிகொடுத்தது யா?, பரவ வழி செய்தது யார்?

நல்லது செய்யும் பாக்டீரியாக்களை உலகின் நலம் காக்க அனுப்பியது யார்?

ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனிபட்ட அறிவும் கலையும் ஞானமும் உண்டு, அவைகளால் மட்டுமே அதை செய்யமுடியும், இந்த பரந்த ஞானத்தை அருளியவர் யார்?

பறவையினை வண்ண வண்ண சிறகால் மூடியது யார்? அழகாக இசையொலிகளை கொடுத்து யார்?, அவை உண்ண கனியும், அந்த கனிகளால் மரமும் பரந்து வளர சங்கிலியினை போட்டு வைத்தது யார்?

தேனியின் தேன் கூடு என்ன? தூக்கணாங்குருவியின் அழகான கூடுகட்டும் கலை என்ன?

பறவைகள் கட்டும் கூடு, வளை தோண்டும் எலி, வேட்டையாடும் புலி, குஞ்சு வளர்க்கும் கோழி, நீரில் வளரும் மீன்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ஞானம். அரக்குக்கு ஒரு ஞானம் என்றால் எருக்கம்பூவுக்கு இன்னொரு ஞானம்

அந்த விலங்குகள், பறவைகள் அஃதினை என்றாலும் தேன் கட்டும் கலை, கூடுகட்டும் கலை, இன்னும் பல விலங்குகள், பறவைகள் பூச்சுகளின் ஞானம், சிலந்தியின் ஞானம் கூட மனிதனுக்கு வராது.

மின்மினிப் பூச்சியின் அழகை மனிதன் கொண்டு வரமுடியாது. எறும்பின் வேலையினை மனிதன் செய்யமுடியாது அவ்வளவு அழகாக அது வளைகட்டி இரை கொட்டி மழைகாலத்தில் இனிதே வாழ்கின்றது

யார் கொடுத்த அறிவு இது? பறவையின் கூடு இருக்கும் அழகென்ன? அலகை வளைத்து பறவை கட்டும் ஞானமென்ன? யார் இதனை அருளினார்?

அந்த ஞானம்தான் அன்னை என்கின்றான் கம்பன்.

இந்தப் பாடல் கொஞ்சம் நினைத்துப் பார்க்க சுகமானது. அழகானது. ஆழ்ந்த தத்துவமானது.

அழகான இந்த உலகம், பெரும் மலைகள், அதில் படர்ந்த காடுகள், அந்த காட்டின் விலங்குகள், பறவைகள், ஓடோடும் நதி, அது கொடுக்கும் வளம், ஆயிரமாயிரம் பறவைகள், பூச்சுகள், விலங்குகள் என ஒவ்வொன்றின் ஞானமும் வியக்க வைப்பது.

எரிமலை, நிலநடுக்கம், சுனாமி, பெரு வெள்ளமெல்லாம் அசுரரைப் போல ஒரு பலமான ஞானம், அகந்தை ஒழிக்கும் ஞானம்.

கம்பன் இயங்கும் மானிடரை, விலங்குகளை, பூச்சிக்களைப் பார்க்கின்றான். அதில் ஒரு ஞானம் இருப்பதை கவனிக்கின்றான். எறும்பிடம் கூட ஒரு ஞானம் உண்டு என்பதைப் பார்த்து புன்னகைக்கின்றான்.

இசை வண்டின் வாழ்க்கையில் கூட ஒரு ஞானமும் ஒழுங்கும் இருப்பதைக் காண்கின்றான், பூக்களை அழகாக உடுத்தியவர் யார் என அதிசயிக்கின்றான்

அழகான அழகழகாய் அதனை வடிவமைத்தவர் யா? சொட்டு தேனும் ஈர்க்கும் மணமும் கொடுத்தவர் யார்? என வியக்கின்றான்

மரம் செடி கொடிகளைப் பார்க்கின்றான். ஒரு விதை மண்ணோடு கூடி மரமாகி அழகான பூக்களும் மணமும் தேனும் கனியும் காயும் இன்னும் என்னவெல்லாமோ ஆவதைக் கவனிக்கின்றான்.

அவற்றுக்கும் ஒரு ஞானம் உண்டு. சந்தன மரத்துக்கு ஒரு ஞானம் உண்டென்றால், பனை மரத்துக்கும் ஞானம் உண்டு. அது எல்லா செடிகொடிக்கும் உண்டு என்பதை அறிகின்றான்.

பூக்களின் அழகு வடிவம், பறவைகளின் ஒலி, மலர்களின் மணம், காடுகளின் ஒழுங்கு, மரத்தின் அழகு, மலையின் நேர்த்தி,நதி அலையில் இருக்கும் அழகான வடிவமெல்லாம் பெரும் ஞானம்.

விதையில் இருந்து கிளம்பும் ம்ரம் செடியாகி பின் நீரைத் தேடி வேர்விட்டு தன்னை பரப்பி தன் கர்மாவினை மலரோ, மணமோ, கனியோ எனக் கொடுக்கும் அந்த ஞானத்தை கவனிக்கின்றான்.

கத்தும் கடலுக்கும் ஞானமிருப்பதையும் அது எல்லைக்கட்டி நின்று ஆர்ப்பரித்து எவ்வளவோ விஷயங்களை கரைக்குக் கொடுப்பதையும் பார்க்கின்றான்.

அங்கும் ஒரு ஞானம் அவனுக்குத் தென்படுகின்றது.

பின் மெல்லப் பார்க்கின்றான். அழகான காற்று. அது கொண்டுவரும் மேகம். மேகம் கொட்டும் மழை. மழை கொடுக்கும் வளம். வெயில், குளிர் என ஒவ்வொரு கட்டத்தையும் ரசிக்கின்றான்.

இவை எல்லாம் தேவர்களின் செயல் என வானம் பார்க்கின்றான்.

சூரியன், நிலா, விண்மீன் என எல்லாமும், அதனதனை இயக்கும் தேவர்களை நினைக்கின்றான். எவ்வளவு பெரும் ஞானம் இருந்தால் தடமே இல்லாமல் தடயமே இல்லாமல் சூரியனோ சந்திரனோ காற்றோ மழையோ அதனதன் கடமையினை செய்கின்றது என வியக்கின்றான்.

ஒரு நாள், ஒரு நொடி தவறாமல் அதன் கடமையினைச் செய்யும் ஞானம் யார் கொடுத்தது என வியக்கின்றான்.

கவிஞரின் கவிதை, இசைக்கோர்ப்பவனின் இசை, ஆட்சியாளனின் திறமை, அறிஞனின் அறிவு, படைகளின் பலம், கலைஞர்களின் கலை, உழைப்பாளரின் உழைப்பு என எல்லாமும் அந்த ஞானம்.

அந்த தேவர்களே இப்படியென்றால், இவர்களை ஆளும் இந்திரன், அவர்களுக்கு மேலான முப்பெரும் தெய்வங்களின் மாபெரும் ஞானம் பற்றி வியக்கின்றான்.

அவன் சித்தர்களை, மகா ரிஷிகளைப் பார்க்கின்றான். மானிடராய் இருந்து தெய்வநிலை அடைந்தோரின் பெரும் ஞானம் கண்டு வியக்கின்றான்.

மானிட உடல் அதிசயம். அதன் இயக்கம் அதிசயம். அவன் சிந்தனை அதிசயம். அதனில் கடவுளை அறியும் சக்தி அதிசயம் என அவன் சிலிர்க்கின்றான்.

ஒவ்வொரு விலங்கின், பறவையின் உடல் முதல் தேவர்களின் சக்தி வரை அவன் பார்த்துப் பார்த்து அந்த ஞானத்தில் லயிக்கின்றான்.

மண், மலை, கடல், பாலை, பனிக்கட்டி என என்னவெல்லாமோ பார்த்துப் பார்த்து அதிசயிக்கின்றான். அவ்வளவு ஞானமான உலகிது என ஆர்ப்பரிக்கின்றான்.

ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு ஞானமும் ஒழுங்கும் உள்ளதையும், மாபெரும் சக்தி ஒன்றால் இது திட்டமிட்டு இயக்கப்படுவதையும் கண்டு மவுனித்து சிந்திக்கின்றான்.

ஆழ்ந்து சிந்திப்பவன் ஒரு முடிவுக்கு வந்து காண்பவை காணாதவை, அறிந்தவை அறியாதை, தெரிந்தவை தெரியாதவை எல்லாவற்றில் இருப்பதும்,

முப்பெரும் தெய்வம் முதல், புழு முதல் கண்ணுக்கு தெரியா கிருமி வரை இருப்பதும் அன்னையின் ஞானமே என முடிவுக்கு வருகின்றான்.

ஒவ்வொரு விஷயமும் இங்கு பயனில்லாமல் இல்லை. எல்லாமே அவள் ஞானம், அவளே மூலம். அவளில் இருந்தே ஞானங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அவரவர் கடமைப்படி பகிர்ந்தளிக்கபடுகின்றது. எல்லா ஞானங்களின் ஊற்றும் அவளே. அந்த ஞானமே இந்த அழகிய உலகையும் மகா பிரபஞ்சத்தையும் இயக்குகின்றது என மகிழ்ந்து பாடுகின்றான்.

எல்லா படைப்பிலும் எல்லா உயிரிலும் ஞானமாய் இருக்கும் அன்னை, எறும்புக்கும் ஞானமாய் ஈசனுக்கும் ஞானமாய் இருக்கும் அன்னையே தன்னிலும் ஞானமாய் நின்று இயக்குகின்றாள் என பெரும் உவகை கொண்டு அவளை பணிகின்றான்.