சரஸ்வதி அந்தாதி : 16
சரஸ்வதி அந்தாதி : 16
‘சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரை யான உரைமகட்கே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.
“சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஒங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஓரோருகம் ஈரரை மாத்திரையான உரைமகட்கே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“சரோருகமே திருக்கோவில்” எனப் பாடல் தொடங்குகின்றது. அன்னை தாமரையில் அமர்ந்திருக்கின்றாள், அவள் இருக்குமிடமே கோவில் என்பதால் தாமரையையே திருக்கோவில் என்கின்றார்.
“கைகளும் தாள் இணையும் உரோருகமும்” என்கின்றார். கைகளும் என்றால் திருக்கைகள். தாள் இணையும் என்றால் திருவடிகள். அன்னையின் திருக்கைகளும், திருவடிகளும் எனப் பொருள்.
அடுத்து “அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல் சிரோருகம்”. அல்குல் என்றால் கீழ் இடுப்பு, நாபி என்றால் கொப்புள், ஓங்கிருள் போல் சிரோருகம் என்றால் மிகக் கருத்த கூந்தல் எனப் பொருள்.
அடுத்து “சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்” என வரும். கரிய கூந்தல் சூழ்ந்த என்றால் வட்டமான எனப் பொருள். வட்டமான முகம். நாட்டமும் என்றால் கண்கள். சேயிதழ் என்றால் சிவந்த அதரம் எனும் உதடுகள் எனப் பொருள்.
கடைசியில் “ஓரோருகம் ஈரரை மாத்திரையான உரைமகட்கே”. அதாவது ஓர் ஓர் யுகம். ஈர் அரை மாத்திரையான உரை மகளுக்கே எனப் பொருள்.
ஈர் அரை என்றால் ஒன்று. அதனால் இங்கு ஈர் அரை என்பது ஒரு மாத்திரை அளவு எனப் பொருளாகின்றது.
ஆக, பாடலின் சுருக்கமான பொருள் இதுதான். சரோருகமே எல்லாமும் என்பதுதான் பாடலின் கருத்து.
சரோஜம் என்றால் வடமொழியில் தாமரை. அது தமிழில் சரோருகம் என்றாயிற்று, அதைச் சொல்லி பொருள் கொள்ள வேண்டும்.
ஒரு யுகம் என்பது ஒரு மாத்திரை எனும் கால அளவு கொண்ட அன்னைக்கு அவள் இருக்கும் கோவில், அவளின் கைகள், அவளின் மார்பு, அவளின் இணைந்த பாதங்கள், அவளின் இடுப்பு, தொப்புள், கண்கள், உதடு, கரிய முடிசூழ்ந்த முகம் என எல்லாமும் தாமரையே என்பது பாடலின் பொருள்.
இந்தப் பாடலில் கம்பன் தன் வார்த்தை ஜாலத்தால் விளையாடுகின்றான். சரோகம், உரோகம், சிரோகம், ஓரோகம் என தனக்கு மட்டுமே உரிய வார்த்தை ஜாலங்களில் அதிசயிக்க வைக்கின்றான்.
இலக்கண மரபுப்படி கொஞ்சம் பொருள் கொள்ள சிரமமான பாடல்.
பாடலின் நேரடிப் பொருள் அன்னையின் அழகினை வர்ணிப்பதாக அமைந்திருக்கின்றது. அவளின் முகம், உதடு, கைகள், கால்கள், மார்பு, கொப்புள் என எல்லாமும் தாமரை என்பதைக் கவித்துமாகச் சொல்கின்றான் கம்பன்.
குவிந்த கரங்கள், சிவந்த இதழ்கள், மொட்டு போன்ற மார்பகம், கூந்தல் கவிழ்ந்த தலை, இதழ்கொண்ட தாமரை போல் தொப்புள் மடிப்புகள், அடிபெருத்து நுனிக் குறுகிய தாமரை மொட்டுப்போல் இடை, விரிந்த தாமரைபோல் பாதங்கள் என கம்பனின் வர்ணனை அள்ளுகின்றது.
அதாவது விரிந்த தாமரை முகம், கொஞ்சம் விரிந்த தாமரை வாய், நட்டு வைத்த மொட்டு மார்பு, நேராக இருக்கும் மொட்டு இடை, பல இதழ்கள் கொண்ட தாமரைப் போல அடுக்கான வடிவங்களைக் கொண்ட தொப்புள், ஆடும் தாமரைக் கண்கள் என எல்லாமே தாமரையாகக் காட்டி அவன் மாபெரும் கவிஞன் என்பதை நிரூபிக்கின்றான்.
பத்மாசனா அதாவது தாமரை மலரில் வீற்றிருப்பவள்,
மஹாபத்மாடவி-சமஸ்தா அதாவது தாமரை மலர்கள் நிறைந்த பரந்த வனத்தில் குடியிருப்பவள்,
சஹஸ்ரதள பத்மஸ்தா அதாவது ஆயிரம் இதழ் தாமரையில் வீற்றிருப்பவள்,
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா அதாவது தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளி பொருந்திய பாதங்களைக் கொண்டவள்,
ம்ருணால ம்ருதுதோர்லதா = தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள்,
தரஸ்மேர முகாம்புஜா அதாவது மலர்ந்த அழகிய தாமரைப் போன்ற புன்னகை முகத்தினாள்,
பத்ம நயனா, புஷ்கரேக்ஷணா & ராஜீவ லோசனா அதாவது தாமரை இதழைப் போன்ற அழகிய கண்களைக் கொண்டவள்,
என்றெல்லாம் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும்.
ஆனால் பாடலின் பொருள் அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை. அவன் சொல்ல வரும் தத்துவ மறை பொருள் வேறு.
ஒரு மாத்திரை அளவுக்கு ஒரு யுகத்தை தாண்டும் அன்னையின் ஒவ்வொரு அவயவமும் தாமரைப் போல் இருக்கின்றது என்பதுதான் பாடலின் ஒரு வரிப் பொருள் என்றாலும் சொல்லும் தத்துவம் ஆழமானது. இதிலிருந்து பொருளைத் தொடங்கலாம்.
சென்ற பாடலில் யோக சக்கரங்களின் விவரத்தைச் சொன்ன கம்பன் இந்தப் பாடலில் அந்த சக்கரங்கள் நம் உடலின் உள்ள இருப்பிடத்தை கூறி விளக்குகின்றான்.
அன்னையின் தியானத்தால், அன்னை மீதான தியானத்தால் குண்டலி சக்தி சித்தியாகி, அதனால் அழியாப் பெருநிலை வாய்க்கும். காலநேரத்தை கடந்து செல்லமுடியும். அதிலிருந்து விடுபடமுடியும் என பெரும் ஞானத்தை, யோகத்தை போதிக்கின்றான் கம்பன்.
அன்னை ஆறு ஆதார சக்கரத் தாமரைகளிலும் இருக்கின்றாள் என்பதை தன் பாடலில் மிக நுணுக்கமாகச் சொல்கின்றான் கம்பன்.
இரு பாதங்களும் கூடும் இடம் என அன்னையின் கீழ் இடுப்புப் பகுதியைச் சொல்வது என்பது மூலாதார சக்கரத்தை.
அவன் நேரான மொட்டுபோல் இருப்பது என்று அடிவயிற்றினைச் சொல்வது சுவாதிஷ்டான சக்கரத்தை.
அவளின் தாமரை வடிவ தொப்புளைச் சொல்வது மணிபூரக சக்கரத்தை.
அவளின் மொட்டுக்கள் போன்ற மார்பு என்பது அனாகத சக்கரத்தை.
அவளின் வாய் இதழ் தாமரை என்பது விஷுத்தி சக்கரத்தை.
அவள் கண்கள் தாமரை என்பது நெற்றிப்பொட்டின் ஆக்ஞா சக்கரத்தை.
விரிந்த தாமரை என தலைமுடியோடு சொல்வது சகஸ்ரார சக்கரத்தை.
ஆக, ஆறு சக்கரங்களும் துலங்கி உச்சந்தலைக்கு மேல் சூட்சும உடலின் மேல் இருக்கும் சகஸ்ரார சக்கரமும் துலங்கினால், அவன் கால நேரத்தில் இருந்து விடுபட்டு பெரும் யோக நிலையினை அடைவான். அன்னை அந்த அழியாப் பெருநிலையினை அவள் அருளால் கொடுப்பாள் என்பது கம்பன் சொல்லும் யோக தத்துவம்.
இதனை இன்னும் புரிந்துகொள்ள சவுந்தர்ய லஹரியின் இரு பாடல்களை காண வேண்டும்.
க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாசஷ்டிஹி சதுரதிக பஞ்சாஸ-தநிலே |
திவி த்விஹி ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்சஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ||
அதாவது தேவியே, தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும், ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களும், அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும், வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும், ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும், மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும் இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது.
இந்த சக்கரங்களுக்கு கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.
இந்த கிரண கால அளவுகள் நுணுக்கமான கணக்கீடுகள், பூமியில் ஒருவன் வாழும் காலத்தை குறிப்பவை. அதன் மேல் உள்ள சஹஸ்ரார சக்கரம் என்பதுதான் அந்த சக்கரம் விரியப்பெற்றவன் கால நேரத்தை கடந்து நிற்பான் என்பதைச் சொல்கின்றது.
இன்னொரு பாடல் உண்டு. இது யோக நிலையை மேலிருந்து கீழாக, சஹஸ்ராரத்திலிருந்து குண்டலிணிக்கு அன்னை வருவதை குறிக்கின்றது.
ஸூதா-தாராஸாரைஹி சரணயுகலாந்தர்-விகலிதைஹி
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸஹ |
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி ||
அதாவது தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்கரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு, சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்கரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.
தாமரை வடிவ மூலாதார சக்கரத்தில் பாம்பு வடிவில் சக்தியாய் அன்னை சுருண்டிருகின்றாள். அந்த சக்தி எழும்பும் போது ஆறு சக்கரங்களும் துலங்குகின்றன. அந்த அமிர்தம் சுரந்து 72 ஆயிரம் நாடிகளை நனைக்கின்றது. அந்த சஹஸ்ர சக்கரம் எனும் ஞான சக்கரமும் துலங்குகின்றது.
லலிதா சகஸ்ர நாமத்தில் ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா அதாவது ஆறு சக்கரங்களுக்கு மேலே நிலை கொண்டிருப்பவள் என அன்னையை வர்ணிப்பர்.
அப்படி பெரும் நிலையினை பெற்றவன், கால நேரங்களைக் கடந்து வாழ்வான் என்பது பொருள்.
இந்தப் பாடல்வழி கம்பன் சொல்லும் தத்துவம் யோகம். முழு யோகம். அந்த யோகத்தால் காலநேரத்தில் இருந்து விடுபட்டு அழியாப் பெருநிலை அடையமுடியும் எனும் யோக தத்துவம்.
இந்துமதம் சிலை வழிபாட்டில் இருந்து உருவமில்லா வழிபாடு, பின் தியானம் யோகம் எனப் படிப்படியாக மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் மதம் என்பதை அறிவோம். அதன் ஆதாரம் சிலை வழிபாடு, சிலை அலங்காரமோ கொண்டாட்டமோ மட்டும் அல்ல.
அது மானிட மனதை ஒருமுகப்படுத்தும் பெரும் முயற்சியின் அடித்தளம். சிலை வழிபாடு அதற்கான பூஜை எனத் தொடங்கி சித்த சுத்தி அடையவைத்து, மெல்ல மெல்ல மனதை ஒருமுகப்படுத்தி உள்ளிழுக்கும் பயிற்சி.
பாடலில் கம்பர் சூட்சுமமாக மேலும் ஒன்றைச் சொல்கின்றார்.
மத்திரை என்பது கண் சிமிட்டும் நேரம். அன்னைக்கு அந்தக் கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு யுகமே கடந்து விடுகின்றது. அப்படியானவள் அன்னை என கம்பன் சொல்வதை மிக நுணுக்கமாக கவனித்தல் வேண்டும்.
லலிதா சகஸ்ர நாமம் அவளை
யுகாந்தரா அதாவது யுகங்களை ஆள்பவள் (சதுர் யுகங்களை),
தேச கால அபரிச்சின்னா அதாவது (வெளிக்கும்) இடத்திற்கும், காலத்திற்கும் உட்படாதவள்,
நித்யா & நிர்நாசா அதாவது நிரந்தரமானவள்,
வயோவஸ்தா விவர்ஜிதா அதாவது பருவ கால எல்லைகளை கடந்தவள்,
பாவா பாவ விவர்ஜிதா அதாவது இருத்தலுக்கும் இல்லாமைக்கும் அப்பாற்பட்டவள் / மேலானவள் என்றெல்லாம் வர்ணிக்கின்றது.
இந்துக்கள் சொல்லும் காலக்கணக்கு என்ன?
360 நாள் கொண்டது ஒரு மானிட ஆண்டு (சந்திரனின் சுழற்சியின் படி) என கணக்கு. அது சாந்த்ரமான ஆண்டு எனவும் சொல்லப்படும். (365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி கொண்டது சௌர மானிட ஆண்டு (சூரிய சுழற்சியின் படி) )
இப்படி ஒரு மானிட ஆண்டு தேவர்களின் ஒரு நாள்.
360 மானிட (சாந்த்ரமான) ஆண்டுகள் என்பது ஒரு தேவ வருடம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலியுகம். கலியின் இரு மடங்கு அதாவது,
2400 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு துவாபர யுகம். கலியின் மூன்று மடங்கு,/ அதாவது
3600 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு திரேதாயுகம். கலியின் நான்கு மடங்கு, அதாவது
4800 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கிருத யுகம்.
ஆக மொத்தம் 12000 தேவ வருடங்கள், அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர் யுகம்.
இப்படி ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மனின் ஒரு பகல் பொழுது, ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்டது பிரம்மனின் ஒரு இரவு.
ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள். இதனை கீதையும் இன்னும் பல நூல்களும் சொல்கின்றன.
அது போல நூறு வருடங்கள் பிரம்மனின் ஆயுட்காலம்.
(ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 மானிட வருடங்கள்).
இந்த யுகங்கள், அதாவது மானிடர் கணக்கில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வரும் வருடங்கள் அன்னைக்கு கண்சிமிட்டுவது போல் வந்து மறைகின்றன என்றால் அவளின் சக்தி என்ன.
அன்னை கால நேரங்களைக் கடந்தவள். நித்தியமானவள் என்பது அவர் சொல்ல வரும் தத்துவம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கால நேரங்களுக்கு கட்டுப்பட்டது. ஆனால் இந்த பிரபஞ்சத்தை தாண்டி நிற்கும் சக்திக்கு அந்த கால நேரம் இல்லை.
அந்த மகா சக்திதான் அன்னை. அவள் காலவிதிகளுக்கு கட்டுப்பட மாட்டாள். அதனைக் கடந்தவள் என்பதைச் சொல்லி, அவளால் அவள் அடியார்களும் அந்நிலையினை எட்டலாம். கால நேரம் கட்டுப்படுத்தாத பெரும் சித்தர்கள் நிலையினை அடையலாம் என போதிக்கின்றார்.
அதாவது பிரம்மன் உட்பட மும்மூர்த்திகள் மறைவார்கள். தேவர் உலகம் மறைந்து தோன்றும். இப்படி எல்லாமே அழிந்து மறுபடி தோன்றும்.
ஆனால் அன்னை நித்தியமானவள். அவளே பரம்பொருள்; அவளே மூலம். எல்லாமே அவளில் இருந்து தோன்றி அவளிலே முடிகின்றன. அந்த அன்னையே இந்த உலகம், தேவர் உலகம் என எல்லாம் படைத்து உயிர்களை, தேவர்களைப் படைத்து, அவர்களின் தலைவர்களையும் படைக்கின்றாள்.
அப்படியான அன்னை தன்னை இடையறாது வணங்கும் பூமியில் இருப்போரை கால நேரம் தாண்டி தன்னோடு சேர்த்துக் கொள்கின்றாள் என்பது.
தன் அடியார்களை இந்தப் படைப்புச் சுழலில் இருந்து விடுவித்து, இந்த தோன்றி மறைதல் எனும் காலச் சுழலில் சிக்கவிடாமல் அதைத் தாண்டிய நிலைக்கு அழைத்துச் செல்கின்றாள் என்பது கம்பன் மறைமுகமாக சொல்லும் போதனை.
அன்னையை “பவநாசினி” அதாவது பிறவிச்சுழலை அறுப்பவள் என சகஸ்ர நாமம் போற்றும்.
தன்னை நம்பி நிற்போரை மண் ஆளும் அரசன் மிரட்டினாலும் அந்த பக்தனுக்கு இந்திர பலத்தை கொடுத்து அவனைக் காக்கின்றாள். அப்படிப்பட்டவள் அன்னை. அவள் கருணை அப்படியானது என உருகி மருகி பாடுகின்றார்.
சேர மன்னன் அவையில் ஆபத்தில் நின்ற கம்பனும் அதை அறிந்து அவளை பாடி அழைகின்றான்