சரஸ்வதி அந்தாதி : 17

சரஸ்வதி அந்தாதி : 17

“கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள்
அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத்
தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில்
பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே “

இந்தப் பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“கருந்தாமரை மலர் கண் தாமரைமலர் காமரு தாள்
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர் ஆலயமாத்
அருந்த தாமரைமலர் வெண் தாமரை மலர் தாவிழலில்
பெரும் தாமரை மணக்கும் கலை கூட்ட பிணை தனக்கே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“கருந்தாமரை மலர் கண் தாமரைமலர்” எனப் பாடல் தொடங்குகின்றது, அன்னையின் கண்கள் கருப்புத் தாமரை போல் விளங்குகின்றதாம். தாமரை கருப்பு நிறத்தில் கிடையாது. ஆனால் அப்படி ஒரு தாமரை இருந்தால் அவை அன்னையின் கண்விழிகள் போலவே இருக்குமாம்.

அன்னையின் விழிகளை கண்மலர் எனச் சொல்வது இந்துமரபு. கம்பன் அதை கருப்புத் தாமரை மலர் என்கின்றான்.

அடுத்து “காமரு தாள் அருந்தாமரை மலர் செந்தாமரை மலர்” என்கின்றான். காமம் என்றால் விருப்பம். எல்லோரும் விரும்பிப் பணியும் அவளின் கால்கள் செந்தாமரை மலர் என்கின்றான்.

அடுத்து “ஆலயமாத் அருந்த தாமரைமலர் வெண் தாமரை மலர்”. அதாவது அன்னை வெண்ணிறத் தாமரையில் அமர்ந்திருக்கின்றாள் என்கின்றான்.

அடுத்து “தாவி எழில் பெரும் தாமரை மணக்கும் கலை கூட்ட பிணை தனக்கே” என்கின்றான்

அதாவது எல்லா கலை தொகுப்புக்கும் அதிபதியானவளும் பெண்மானின் சாயல் (பிணை) கொண்டவளுமான அன்னை குற்றமில்லாததும் மிகுந்த மணம் வீசுவதுமான‌ தாமரையில் வசிக்கின்றாள் என்பது பொருள்.

ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“மிகுந்த அழகானதும், நறுமணம் வீசும் தாமரையில் வசிக்கும் பெண்மான் போன்ற சாயல் கொண்ட அன்னையே, நீ கலைகளுக்கெல்லாம், கலைதொகுப்புக்கெல்லாம் அதிபதி. அப்படியான உன் கண்கள் கருந்தாமரை, உன் கால்கள் திருவடி செந்தாமரை, நீ அமர்ந்திருப்பதோ வெண் தாமரை.”

இந்தப் பாடல் மிகுந்த கவித்துவமாக கம்பனால் பாடப்பட்டாலும் அடிப்படையில் முக்குணங்களை குறிக்கும் பாடல்.

இந்துக்கள் மரபில் ரஜோ குணம், தாமஸ குணம், சத்வ குணம் என மூன்று முக்கிய குணங்களைப் பற்றிய போதனை உண்டு.

உலகத்தை பிரபஞ்சத்தை உயிர்களை மானிடரை கவனமாக ஆழ கவனித்த இந்துமதம் இந்த முக்குணங்கலும் எல்லா இடத்திலும் எல்லா பொருளிலும் கலந்திருப்பதை அவதானித்தது.

ரஜஸ் என்றால் எல்லாவற்றையும் ஆளத் துடிப்பது, ஆசைமயமான ஆக்ரோஷ கோலம்.

தாமஸம் என்றால் அறியாமை, தயக்கம், முடக்கம் என ஒருவன் செயலற்றே வீழ்ந்து போவது.

சத்வம் என்றால் நல்ல தூய்மையான எண்ணங்களைக் கொண்ட சாத்வீகம்.

இந்த முக்குணங்கள் மானிடரில் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு அசைவிலும் உண்டு. தேவர் அசுரர் ரிஷிகள் என உண்டு.

இரவு பகல் என தாமஸ, ரஜோ குணம் உண்டு. சந்திப் பொழுது என சத்வம் உண்டு.

இந்த இயல்பு மும்மூர்த்திகளில் உண்டு. இன்னும் பிரபஞ்ச அசைவில் இருளாக ஒளியாக நடுநிலையாக என பல வகையில் உண்டு.

உணவு, தாவரம், விலங்கு என எல்லாவற்றிலும் இந்த முக்குணங்கள் உண்டு.

ஒவ்வொரு இயக்கத்திலும் இருப்பது இந்த முக்குணங்கள்.

கீதையின் 14ம் அத்தியாயத்தில் இதனை முழுக்க விளக்கிச் சொலகின்றான் பகவான் கண்ணன். அவன் மொழிகளிலே அதற்கான விளக்கத்தை காணலாம்.

“ஸத்த்வம் ரஜஸ்-தம இதி குணா: ப்ரக்ருதிசம்பவா: |
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹினமவ்யயம்” ||

“இயற்கையானது, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களால் ஆனது. அர்ஜுனா, ஒரு ஆன்மா, இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால் கட்டுப்படுத்தப் படுகின்றான்.

மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப் படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் தொடர்புள்ளவர்கள்.

எல்லையற்ற ஆசையாலும் ஏக்கத்தாலும் பிறந்த ரஜோ குணத்தின் காரணத்தினால், உடலையுடைய உயிர், லவுகீக பலனை எதிர்பார்த்து செயல்களால் தொடர்புள்ளவனாகின்றான்.

அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்களையும் மயக்குகின்றது. கட்டுண்ட ஆத்மாவை தொடர்புபடுத்த கூடிய, மடைமை, சோம்பல், உறக்கம் ஆகியவை இந்த குணத்தின் விளைவுகளாகும்.

ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும் கட்டுப்படுத்துகின்றன; ஞானத்தை மறைக்கும் தமோ குணம், மடைமையால் பந்தப்படுத்துகின்றது.

ஸத்வ குணம், சில சமயங்களில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்றகடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம், ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர்நிலைக்கான போட்டி எப்போதும் நிலவுகின்றது.

உடலின் எல்லாக் கதவுகளும் ஞானத்தால் பிரகாசிக்கும்போது ஸத்வ குணத்தின் தோற்றத்தை அனுபவிக்க முடியும்.

ரஜோ குணம் அதிகரிக்கும்போது, பெரும் பற்றுதல், பலன்நோக்குச் செயல்கள், தீவிர முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை மற்றும் ஏக்கத்தின் அறிகுறிகள் வளர்கின்றன.

தமோ குணம் அதிகரிக்கும்போது, இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம் மற்றும் மயக்கமும் தோன்றுகின்றன.

புண்ணியச் செயல்களின் விளைவுகள் தூய்மையானவை, அவை ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துக்கத்திலும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் முட்டாள்தனத்திலும் முடிகின்றன.

ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம் மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.

“ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: |
ஜகன்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:” ||

ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்களுக்கு மேல் நோக்கிச் செல்கின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர்; மேலும், வெறுக்கத்தக்கதான தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ்நோக்கிச் செல்கின்றனர்.

“நான்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபஶ்யதி |
குணேப்யஶ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோதிகச்சதி” ||

எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், தெய்வ நிலையினர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான்.

உடலை உடையவன், உடலுடன் தொடர்புடைய இந்த மூன்று குணங்களிலிருந்து உயர்வு பெற முயலும்போது, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் இவற்றின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, இந்த வாழ்விலேயே ஞானத்தை சுவைக்க முடியும்” என்பது கண்ணன் வாக்கு.

இந்த முக்கணங்களை மூன்று நிறங்களோடு ஒப்பிட்டுச் சொன்னார்கள் இந்துக்கள். அது ரஜோ குணத்துக்கு சிகப்பு என்றும், சத்வ குணத்துக்கு வெள்ளை என்றும், தாமஸ குணத்துக்கு கருப்பு நிறத்தையும் சொன்னார்கள்.

சிகப்பு என்பது இந்த பூமியினை ரத்த வெறியில் ரத்தத் துடிப்பில் ஆளத்துடிக்கும் ரஜோ குணம், கருப்பு என்பது அறியாமையில் சிக்கி மனம் இருண்டு, சிந்தை இருண்டு, குழம்பும் தாமஸ குணம், வெண்மை என்பது சாத்வீக குணம், தூய மனம்.

இந்த நிறங்கள் அடிப்படையில் முக்குணங்களைக் கொண்டு ஞானியர் மறைபொருளாக பாடுவார்கள். ஆதிசங்கரர் பாடிய சௌந்தர்ய லஹரியில் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு.

முதல் பாடல் இதோ

“விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலா(அ)ஞ்ஜனதயா
விபாதி த்வன்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே |
புனஹ ச்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி-ருத்ரானுபரதான்
ரஜஹ ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ || “

அதாவது ஈசனின் அனுசரையானவளே தாயே ! கருப்பு மை தீட்டிய (அஞ்சனம்) உன் அழகிய கண்களில் வெண்மை (கண்ணின் குவளங்கள்), சிவப்பு (மெல்லிய ரேகை), கறுப்பு (அலங்காரமாக தரித்துக் கொண்டிருக்கும் மை) நிறங்கள் உள்ளன. மூன்று வர்ணங்களும் மூன்று குணங்களுக்கு அடையாளம்.

சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா, ரஜோகுணத்தைப் (சிகப்பு, பொன் நிறம்) பிரதானமாகக் கொண்டவர். ஸ்திதி கர்த்தாவான விஷ்ணு ச‌த்துவகுணத்தைப் (வெள்ளை நிறம்) பிரதானமாகக் கொண்டவர். ஸம்ஹார கர்த்தாவான ருத்திரர் தாமஸ குணத்தைப் (கறுப்பு நிறம்) பிரதானமாகக் கொண்டவர். தன்னிடம் லயம் அடைந்த உலகைப் பரதேவதை மீண்டும் தோற்றுவிக்க விரும்பும்போது மும்மூர்த்திகளையும் முதலில் தன்னிடமிருந்து தோற்றுவிக்கிறாள்.

மஹாப்ரளய காலத்தில் உலகமே தேவியினுடைய ரூபத்தில் ஒன்றாகப் போனதினால், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கிற பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான தேவர்களுக்கும் வேலையில்லாமலாகி, அவர்களும் தேவியினுடைய ஸ்வரூபத்திலேயே அடங்கி விடுகிறார்கள்.

மறுபடியும் ஸ்ருஷ்டி காலம் வரும் பொழுது ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான தேவதைகளை அம்பாள் தன் பார்வையினாலேயே ஸ்ருஷ்டிக்கிறாள் எனப் பொருள்.

அடுத்த பாடல் இதோ.

“பவித்ரீகர்தும் நஹ பசுபதி-பராதீன-ஹ்ருதயே
தயாமித்ரைஹி நேத்ரைஹி-அருண-தவல-ச்யாம ருசிபிஹி |
நதஹ சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமும்
த்ரயாணாம் தீர்த்தானாம்-உபனயஸி சம்பேத-மனகம் ||”

பசுபதியின் மனம் போல்வே நடக்கும் அன்னையே, தேவியின் கண்ணில் உள்ள மூன்று வர்ண ரேகைகளும் மூன்று புண்ணிய நதிகளோ என்று தோன்றுகிறது. சோணபத்ரா சிவப்பு, கங்கை வெளுப்பு, சூரியனின் மகளான யமுனை கருப்பு இந்த மூன்றின் சங்கமம் ஏற்பட்டால்போல் உள்ளது. இதனால் உன் கடாக்ஷத்தால் பாவங்கள் பல செய்த பக்தர்கள் புனிதமாவது நிச்சயம். சந்தேகமில்லை.

இந்த முதல் பாடல் மும்மூர்த்திகளும், எல்லா படைப்புக்களும் இந்த மூன்று குணங்களையும் கொண்டிருக்கின்றது என்பதைச் சொல்கின்றது. இரண்டாம் பாடல் அழகான ஞான விளக்கத்தை கொடுக்கின்றது.

கங்கையினை சத்வ குணத்துக்கும், யமுனையினை தாமஸ குணத்துக்கும், சோனா நதி எனும் நதியினை ரஜோ குணத்துக்கும் சொல்கின்றார் சங்கரர்

கங்கை வெண்ணிறமானது, யமுனை கருப்பு நிறமுடையது, சோனா நதி பொன்னிறமுடையது.

சோனா நதியும், யமுனையும் செந்நிறமும் கருநிறமும் கொண்டிருந்தாலும் கங்கையுடன் இணைந்தபின் வென்ணிறமாகி கங்கையாகவே ஆகிவிடுகின்றது.

அப்படி ரஜோ குணமும் தாமஸ குணமும் சத்வ குணத்தில் கரையவேண்டும். கங்கை கடலில் கரைவது போல சத்வ குணமும் கடைசியில் பரம்பொருளிடம் கரையவேண்டும் அதுதான் முழு ஞானம். எல்லாம் கடந்த பெருஞானம் என்பது சங்கரர் பாடலின் பொருள்.

அப்படிபட்டவன் அதாவது ரஜோ குணம், தாமஸ குணத்தை சத்வ குணத்தால் கரைத்த ஞானி எபப்டி இருப்பான் அவன் எம்மாதிரி குண அடையாளங்களோடு ஞானியாக இருப்பான் என்பதை கீதையின் 14ம் அத்யாய ஸ்லோகத்திலே காணலாம்.

அந்த ஸ்லோகத்தில் அர்ஜூனன் கேட்கின்றான்.

“கண்ணா, இந்த மூன்று குணங்களைக் கடந்தவனை அறிவதற்கான அறிகுறிகள் யாவை? அவனது நடத்தைகள் யாவை?

இயற்கை குணங்களிலிருந்து அவன் உயர்வு பெறுவது எவ்வாறு?”

கண்ணன் சொல்கின்றான் “பிரகாசம், பற்றுதல், மயக்கம் ஆகியவை தோன்றியிருக்கும்போது அவற்றை வெறுக்காதவனும், அவை மறைந்திருக்கும்போது அவற்றிற்காக ஏக்கமடையாதவனும்; இயற்கை குணங்களின் விளைவுகளுக்கு மத்தியில் ஸ்திரமாக, சஞ்சலமின்றி, நடுநிலையில், அப்பாற்பட்டு இருப்பவனும், குணங்களே செயல்படுகின்றன என்பதை அறிபவனும்; தன்னில் நிலைபெற்று இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனும்; மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காண்பவனும்; பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை உடையவனும்;

திடமானவனும், புகழ்ச்சி இகழ்ச்சி, மானம் அவமானம் ஆகியவற்றில் சமமாக நிலை பெற்றவனும், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துபவனும்; எல்லா பலன்நோக்குச் செயல்களையும் துறந்தவனுமான மனிதன் இயற்கை குணங்களைக் கடந்தவனாகக் கூறப்படுகின்றான்.

புறக்கணித்தான் போலேயிருப்பான், குணங்களால் சலிப்படையான், “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன், தன்னிலையில் நிற்பான், ஓட்டையும் கல்லையும் பொன்னையும் நிகராகக் காண்பான், இனியவரிடத்தும் இன்னாதவரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்;

மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், நண்பரிடத்தும் பகைவரிடத்தும் நடுநிலைமை பூண்டான், எல்லாவிதத் தொழிலெடுப்புக்களையுந் துறந்தான் அவனே குணங்களைக் கடந்தவனென்றும் சொல்லப்படுகிறான்.

“மாம் ச யோ‌வ்ய-(அ)பிசாரேண பக்தியோகேன ஸேவதே |
ஸ குணான்-ஸமதீத்யைதான்ப்ரஹ்ம-பூயாய கல்பதே” ||

எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்ம நிலைக்கு வந்தடைகின்றான்.

மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே..”

கீதையின் இந்த வரிகளைத்தான், முக்குணங்களை வென்றவர் நிலை எப்படி இருக்கும் என்பதைத்தான், ஞானி என்பவன் இந்த மூன்று குணங்களை எல்லா வகையிலும் கடந்து ஆசை, விருப்பம், மயக்கம் எல்லாம் கடந்த நிலையில் இருப்பான் என்பதை பாடுகின்றான் கம்பன்.

அதை அன்னை அருள் என்கின்றான்.

அன்னையிடமிருந்தே எல்லாம் தோன்றி அன்னையிடமே முடிகின்றன. அவளிடமிருந்து தோன்றும் எல்லாவற்றிலும் இந்த மூன்று குணம் உண்டு, அவளாலே இந்த உலகம் இயங்குகின்றது.

அந்த மூன்று குணங்களும் அவளிடமே முடிகின்றன‌.

அன்னையே எல்லாவற்றையும் இயக்குகின்றாள், அன்னையே அனைத்து அறிவுத் தெளிவினையும் தருகின்றாள்.

அவளை அண்டினால் ரஜோ குணம் எனும் ஆசை குணம் மறையும், தாமஸம் எனும் அறியாமை முடங்கிக் கிடக்கும் குணம் மறையும், சத்வ குணம் மேலோங்கும் என்கின்றான் கம்பன்.

அன்னை இந்த மூன்று குணங்களுக்கும் அதிபதி மூன்றையும் கடந்தவள்.

ஒரு வகையில் அவள் திரிசூலம் வைத்திருக்கும் தத்துவமே அதுதான், மூன்று குணங்களைக் கடந்தவள். அந்த முக்குணங்களுக்கும் அதிபதியாக நின்று அதைக் கட்டுப்படுத்தும் சக்தியாக நிற்கின்றாள்.

இந்த சிந்தனையில்தான் பாடுகின்றான் கம்பன்.

அன்னையினை வழிபட்டு அவள் அருளைப் பெற்றால் ரஜோ குணம் அகலும். அதாவது பேராசை, ஆதிக்கம், வன்முறை போன்ற குணங்கள் அகலும். அப்படியே தாமச குணத்தின் செயல்களான மந்தநிலை, சோம்பல் முடங்கி கிடத்தல் ஆகியன எல்லாம் மறையும். அன்னை சத்வ குணத்தினை அருள்வாள், அந்த சத்வ குணம் ஞானத்தைக் கொடுக்கும், ஞானம் பெரும் சிறப்பினைக் கொடுக்கும்.

மானிட மூளையின் அமைப்புபடி இடதுபக்க மூளை நுண் கலைகள், ரசிப்புதன்மை, கூர்மதி இவற்றைக் கொடுப்பது. வலது பக்க மூளை செயல்களை கட்டுப்படுத்தும்.

இந்த இரண்டும் சமநிலையில் கட்டுப்பாடாக இருப்பவர்களே ஞானத்தினை அடையமுடியும்.

மந்த புத்தியும் எதையும் செய்யத் தெரியாதவனுமாக ஒரு பயனற்ற விலங்கு போல இருந்த தன்னை அன்னை ஆட்கொண்டு தன் சிந்தை புத்தியெல்லாம் கட்டுப்படுத்தி அதாவது ரஜோ குணம், தாமஸ குணம் என்ற இரண்டையும் கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டுவந்து தன்னை கவிஞனாக்கி பெரும் சிறப்படைய செய்திருக்கின்றாள்.

ஞானமாக நான் பாடுவதெல்லாம் தமோ குணம், ரஜோகுணம் கடந்த நிலை சத்வ நிலை. அந்த நிலைக்கு என்னை கொண்டு வந்தது அவளே, அவள் அருளே.

அந்த அன்னையே என்னை இயக்குகின்றாள். அவளே முக்குணங்களுக்கும் பிறப்பிடம், முக்குணங்கள் முடியும் இடம் அவளே, அவளை அண்டியோர் தாமஸ, ரஜோ குணங்களைக் கடந்து சத்வ குணத்தை அடைந்து அவளாலே அதையும் கடந்து நித்திய பிரம்ம நிலையினை அடைவார்கள்.

அன்னையினைப் பணிந்தால் அந்த இரு குணங்களைக் கடந்து சத்வ குணத்தை அடைந்து அப்படியே பிரம்ம நிலையினை அடையலாம், எல்லாம் கடந்த நிலையினை அடையலாம் எனப் பாடி வழிகாட்டுகின்றான் கம்பன்.

கீதையின் 14ம் அத்தியாயம், ஆதிசங்கரரின் வழியில் அந்த போதனையினை தன் வரிகளிலும் பாடி மகிழ்கின்றான்.