சரஸ்வதி அந்தாதி : 18
சரஸ்வதி அந்தாதி : 18
“தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“தனக்கே துணி பொருள் எனும் தொல்வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என இமையவர் தாம்
மனகேதம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் வரி “தனக்கே துணி பொருள் எனும் தொல்வேதம் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த அபிடேகம்” எனத் தொடங்கும்.
துணிபொருள் என்றால் நிச்சயிக்கப்பட்ட சொந்தமான பொருள் என அர்த்தம், சதுர்முகத்தோன் என்றால் பிரம்மன், தொல்வேதம் என்றால் பழமையான வேதங்கள்.
அபிடேகம் என்பது அபிஷேகம் என்பதன் மருபு, அதாவது பட்டாபிஷேகம் எனும் முடி சூட்டலைச் சொல்லும் வார்த்தை.
ஆக தொன்மையான வேதம் ஓதும் பிரம்மன் இது தனக்கு மட்டும் சொந்தமான கிரீடம் எனச் சொல்வது எனப் பொருள்.
தொன்மையான வேதங்களை ஓதும் பிரம்மன் இது தனக்கானது என்பது பொருள்.
இரண்டாம் வரி “எனக்கே சமைந்த அபிடேகம் என இமையவர் தாம் மனகேதம் மாற்றும் மருந்தென்ப “
இமையவர் என்றால் வானலோக தேவர்கள், அவர்கள் இது தங்கள் மனக்கவலை எல்லாம் போற்றும் மருந்து என்பார்கள் என்பது பொருள்.
மூன்றாம் வரி “சூடுமலர் என்பன்யான்”
அதாவது நானோ அது நான் தலையில் சூடும் மலர் என்பேன் என்பது பொருள்.
நான்காம் வரி “கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.” அதாவது கனத்த கூந்தலை நெருக்கமான வரிசையாகக் கொண்ட கலைமகளின் பாதத் தாமரைகளே” எனப் பொருள்.
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“கனத்த கூந்தலை அணி அணியாகக் கொண்ட கலைமகளின் பாதத் தாமரைகளை பிரம்மன் தனக்கு மட்டுமே உரித்தானது என தலையில் கிரீடம் போல் அணிகின்றான். தேவர்கள் அன்னையின் பாதத்தை தங்கள் மனக்கவலை போக்கும் மருந்து எனக் கொண்டாடுகின்றனர்.
நானோ அந்தப் பாதங்களை என் தலையில் சூடும் மலர்போல் சூடிக் கொள்கின்றேன்” என்கின்றான் கம்பன்.
இந்தப் பாடல் சௌந்தர்ய லஹரியின் தழுவல். ஆதிசங்கரர் அருளிய அந்த ஸ்லோகத்தினை கண்டால் இந்தப் பாடலை புரிந்து கொள்வது எளிது.
முதல் ஸ்லோகம் இதோ.
“ச்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ |
யயோஹோ பாத்யம் பாதஹ பசுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி || “
அதன் பொருள் என்னவென்றால் “தாயே, உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ, அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயைகூர்ந்து வைத்தருள்வாயாக. அவற்றிற்கு பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் பரமசிவனுடைய சடையில் இருக்கும் கங்கையாகிறது. அவற்றிற்கு பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கின்றது.
அன்னையின் பாதங்களே வேதங்கள், மும்மூர்த்திகளும் அதை தாங்க ஏங்கி நிற்கின்றார்கள், அப்படியான பாதங்கள் அவை என்கின்றார் ஆதிசங்கரர்.
“பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி தவமிதி யஹ |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நிராஜித பதாம் ||
தாயே ! உன்னுடைய பக்தன் உன்னைப் பார்த்து “பவானி! உன்னுடைய கடைக்கண் பார்வை இந்த அடியவன் மீது படட்டும்” என்று நினைத்து, ‘பவானி நீ’ (பவானி – த்வம்) என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே, நீயோ அவன் சொன்னதை (பவானித்வம்) ப்ரஹ்மவாக்கியமாக எடுத்துக்கொண்டு, அவன் மீது மிகுந்த கருணை ஏற்பட்டு, மும்மூர்த்திகளால் வணங்கப்பட்ட பாதாரவிந்தத்துடன் கூடிய உன் சாயுஜ்ய பதவியான மோக்ஷத்தைத் தருகின்றாய் என்பது பொருள்.
மும்மூர்த்திகளும் வணங்கும் பாதார விந்தங்களை பணிவோர் பெரும் ஞானம்பெற்று மோட்சத்தை அடைவான் என்கின்றார்.
அன்னையின் பாத தாமரை எபப்டியானது என்பதை இன்னொரு பாடலிலும் சொல்கின்றார் சங்கரர்.
“த்வதன்யஹ பாணிப்யாம்(அ)பயவரதோ தைவதகணஹ
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்ய(அ)பிநயா .
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ”
மற்ற தேவர்களும், தெய்வங்களும் அபயம், வரம் தருவதை தங்கள் கைகளின் முத்திரைகளால் காட்டி தம் பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால் நீயோ அபிநயம் காட்டுவதில்லை. ஏனென்றால், மற்ற தெய்வங்கள் தங்கள் அபய-வர பிரதானத்தை கைகளால் காட்டி அருள்வதை விட அதிகமாக, உன் பக்தர்கள் வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு உன் பாத தாமரையே போதுமே.”
இப்படியான சிறப்பை மாபெரும் புனிதமான அன்னையின் பாதங்களை பிரம்மனும் மும்மூர்த்திகளும் வேத வடிவம் இது வேதமின்றி நாங்கள் இல்லை எனக் கொண்டாடுகின்றார்கள்.
தேவர்களை காக்கும் பாதம் என்பதால் தேவர்கள் கொண்டாடுகின்றார்கள்.
நானோ இது தலையில் சூடிக் கொள்கின்றேன் என்கின்றான் கம்பன், ஏன் தலையில் சூடுவதைப் பற்றி சொன்னான்?
எது உயர்ந்ததோ, எது சிறந்ததோ, எது அபூர்வமோ அதை தலையில் வைத்துக் கொண்டாடுவது மரபு. அப்படி அரசன் தனக்கு கீரீடத்தை சூட்டுவான், போரில் வாகையினைச் சூட்டிக் கொள்வான்.
தன்னிடம் இருப்பதில் எது உயர்வானதோ அதை உலகறிய தலையில் வைத்து கொண்டாடுவார்கள் இந்துக்கள்.
அப்படி அன்னைதான் தன் மிகப்பெரிய சிறப்பு, அன்னைதான் தன் பெரிய சொத்து என்பதைத் தன் தலையில் வைத்து அவள் பாதத்தை வைத்து கொண்டாடுகின்றேன் என்றான் கம்பன்.
ஏன் பாத “மலர்” எனச் சொன்னான்?
மலர்களுக்கு பூஜையில் தனி இடம் கொடுத்தவர்கள் இந்துக்கள். அது வெறும் மணத்துக்கோ அழகுக்கோ குளிர்ச்சிக்கோ மட்டுமானது அல்ல, வெறும் அலங்காரத்துக்கும் அல்ல.
அதில் சூட்சுமமான விஷயங்களும் உண்டு.
மனதின் அதிர்வுகளும் அலைகளும் யாராலும் காணமுடியாதவை. சூட்சுமமானவை. அதை சம்பந்தபட்ட ஒருவன் மட்டுமே உணரமுடியும்.
அப்படியே மலரின் வாசனையும் சூட்சுமமானது. உயிர்சக்தி கொண்ட நாசி மட்டுமே உணரமுடியும் ஒரு விதமான சக்தி வடிவம் அது.
அந்த மலரே பக்தனின் எண்ணத்தை தன்னில் எடுத்து கர்ப்பக்கிரகத்தில் சேர்க்கின்றது. இதனால்தான் மலர் கொண்டு ஆலயம் செல்லவேண்டும் என்றார்கள். மலர் தூவி இறைவனை வணங்க வேண்டும் என்றார்கள் மூதாதையரான ஞானியர்கள்.
அப்படியே கர்ப்பக்கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் மலர்கள் பிரபஞ்ச சக்தியினை திரும்பக் கொண்டுவரும்.
இதையே பிரசாதம் எனச் சொல்லி கண்களிலும் முகத்திலும் ஒற்றிக் கொள்ளச் செய்து தலையில் சூடச் சொன்னார்கள். ஆம் அதில் பல நற்சக்திகள் இறங்கிவரும்.
இதனாலேயே கோவிலில் தெய்வத்துக்கு சாற்றிய பூவை கீழே வீசக்கூடாது என்றார்கள், கோவிலின் பூ வீட்டில் வைக்கபட்டது இதனாலே.
கருகிவிட்ட மலர்களைக் கூட ஆற்றில்தான் போட வற்புறுத்தினார்கள், யார் காலிலும் அது மிதிபடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார்கள்.
தெய்வத்துகு மட்டுமா மாலையிட்டார்கள்?
அரசனையும் உயர்ந்தோரையும் காணும் பொழுதும் மாலையோடும் பூக்களோடும் சென்றார்கள். பூக்கள் உளவியல் ரீதியாகத் தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் என்ற தத்துவம் இருந்தது.
மணமக்களை மாலைமாற்றச் சொன்னார்களே ஏன்? ஆணும் பெண்ணும் தங்கள் மனதின் ஓட்டங்களை மாற்றி கொள்கின்றார்கள் என்பதைக் குறிப்பால் சொன்னார்கள். கையில் மலர் ஏந்தி தன் இணைக்கு மாலையிடுவது தன் மனதினைக் கொடுப்பது என்பதைச் செய்தார்கள்.
மணம் செய்விக்கப்பட்டது என அந்த மாலைமாற்றல் நிகழ்வே திருமணம் என்றாயிற்று. ஆம் மணம் மிக்க மலர்களைத் தங்கள் மனதின் சிந்தனையில் நனைத்து பரிமாறும் ஏற்பாடாகவே அது இருந்தது.
இன்றும் காதலை வெளிபடுத்த பூ கொடுப்பது இதன் தத்துவமே.
(அமங்கல காரியங்களில் கூட மலர் பயன்படும், துக்கத்தால் நிரம்பிய இதய வலிகளை, மனதின் குமுறலை அந்த மலர் ஏந்தி செல்லும் ஏற்பாடு)
எங்கெல்லாம் மனம் சம்பந்தபட்ட வாழ்த்தும் பிரார்த்தனையும் கோரிக்கையும் உண்டோ அங்கெல்லாம் மலரை முன்னிறுத்தினார்கள் முன்னோர்கள்.
இதனாலே வழிபாட்டில் பூ என்பது மிக மிக இன்றிமையாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது.
பூ என்பது முதிர்ச்சியினைக் குறிப்பது. வாசனை மிக்க மலர்களில் பூக்கள் காய்ப்பதில்லை. அந்தச் செடியின் அல்லது மலரின் ஆகச் சிறந்த முதிர்ச்சியே அந்த மலர்கள்.
இதனாலே அந்த பக்குவ நிலையே நம் ஆன்மாவும் அடைந்திருக்கின்றது என்பதாகவும் மலர்ந்த மலர்கள் இறைவனை அடைவது போல ஆன்மா இறைவனை அடையவேண்டும் எனும் தத்துவக் குறியீடும் அதில் இருந்தது.
பூ என்பது பக்குவப்பட்ட நிலை, பக்குவமான ஆன்மாவினை அது குறிப்பால் சொல்லிற்று.
இறைவனுக்கு பூஜைக்கு பயன்பட சில மலர்களை இந்துமதம் அனுமதித்தது. அவற்றின் தன்மை, மணம், சூட்சும சக்தியின் ஈர்ப்புத் தன்மை என்பதைக் கொண்டு அவை வகைபடுத்தப்பட்டன.
மலர்களைக் கொய்து சாற்றுவதில் உடல்நலமும் மனநலமும் இன்னும் பலவும் காக்கப்பட்டது.
மணம் என்பது கண்ணுக்குத் தெரியாதே அன்றி அதன் விளைவுகள் மானிட மனதிலும் குணத்திலும் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும்.
விஷக்காற்றும் மணமும் உயிரைக் கொல்லும் அளவு ஆபத்தானவை. சில வகை மணங்கள் எரிச்சலும் குழப்ப உணர்வையும் கொடுக்கக் கூடியவை.
சில உள்ளுறுப்புகளுக்கு ஆபத்தை விளைவிப்பவை. ரத்த ஓட்டத்தில் மாறுபாட்டை செய்து பல குழப்பங்களுக்கு வழி கோலுபவை.
இதனால் மனித மனதுக்கு புத்துணர்ச்சியும் நற்பயன்களும் நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மணங்களைக் கொடுக்கும் பூக்களையே அந்த ஞானச்சமூகமான இந்து சமூகம் அங்கீகரித்திருந்தது.
எல்லா தாவரங்களும் பிரபஞ்ச சக்தியினை ஈர்ப்பவை என்றாலும் சில வகை பூக்களே மானிடனுக்கு நன்மை செய்வது என்பதையும் இறைவனின் கர்ப்பக்கிரகத்துக்கு பிரார்த்தனைகளை எடுத்துச் சென்று சக்தியினை திரும்ப எடுத்து வரும் சக்தி கொண்டது என்பதையும் கண்டார்கள்.
அந்த மலர்களின் இனிய மணத்தில் மனம் ஒருமைப்பட்டு இறை சன்னதியில் மானிட மனம் ஒரு வித தியான நிலைக்குச் செல்வதையும் உணர்ந்து மலர் கட்டாயம் எனச் சொல்லியிருந்தார்கள்.
இதனாலே மலர்கள் இன்றி இந்துக்கள் வழிபாடு ஒரு காலமும் இல்லை.
மலர்கள் குளிர்ச்சியானவை என்பதால் தலையில் சூடி, அதன் மணம் உடலுக்கு நல்லது என்பதால் மட்டும் மலர்கள் கட்டாயம் என்ற நிலை இல்லை.
அதிகாலை எழுந்து சுத்தமான காற்றினை சுவாசித்தால் நல்லது என்பதற்காக மட்டும் அதிகாலையில் மலர் பறித்து வழிபடும் வழக்கம் இல்லை.
ஆனால் அதுவும் ஒரு காரணமாய் இருந்தது, பல நன்மைகளை ஒருங்கிணைத்து ஒரே புள்ளியில் தருவது இந்துமதத்தின் ஞான ஏற்பாடு என்பதால் இப்படி பல விஷயங்கள் இருந்தன.
மலர் எனும் பூ ஆகாய தத்துவத்தை விரிந்து சொன்னது. ஆகாயம்போல் விரிந்த தத்துவ நிலைக்கு மலர்களை காட்டினார்கள் இந்துக்கள்.
பூ என்றால் முதிர்ச்சி, பூ என்றால் முதிர்ந்த நிலை.
இதனாலே பருவம் அடைந்த பெண்களை பூப்பு எய்தினாள் என்றார்கள், பயிர்தொழில் காலங்களை பூ என்றார்கள், மூன்று பூ விளையும் என்றார்கள்.
கம்பன் இங்கே அன்னையால் தான் முதிர்ந்த ஞானம் பெற்றேன், முதிர்ந்த அறிவைப் பெற்றேன். எனக்கு அந்த பெரும் நிலையினைக் கொடுத்தவள் அன்னை. அதனால் அவள் கால்களை தலையில் வைக்கின்றேன் எனப் பாடுகின்றான்.
இது சகஸ்ர சக்கரம் எனும் ஆயிரம் இதழ் விரிவதையும் சூசகமாகச் சொல்வது. தன் தலைமேல் உள்ள அச்சக்கரம் அன்னையின் அருளால் துலங்கிற்று. அதனால் தனக்கு பெருஞானம் கைகூடிற்று எனப் பாடித் தொழுகின்றான் கம்பன்.
அன்னைக்கு சஹஸ்ரநாமம் பல பெயர்களைச் சொல்கின்றது.
“ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா” அதாவது ப்ரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களாலும் போற்றப்படும் ஆற்றல் உடையவள் என்கின்றது.
அவள் “ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா” அதாவது ப்ரம்மா, விஷ்ணு, இந்திரனால் வணங்கப்படுபவள்.
அவளை “பவாநி” அதாவது சிவனின் பத்னி என்கின்றது.
அவளை “அனார்க்ய கைவல்ய பத தாயிநி” என்கின்றது. அதாவது ஒப்பற்ற கைவல்யபதம் அளிப்பவள்.
அவளை “க்ஷிப்ர ப்ரஸாதிநீ” என்கின்றது அதாவது எளிதில் அகமகிழ்பவள்.
இப்படியான அன்னை தன் பாதம் மூலம் தனக்கு ஞானம் வணங்கி உயர்த்தினாள். அப்படியானவள் பாதத்தை தலைமேல் வைத்து கொண்டாடுகின்றேன். எனக்கு முதிர்ச்சி அளித்த ஞானம் அளித்த, பக்குவநிலை அளித்த அந்தப் பாதங்களை தலைமேல் வைக்கின்றேன் எனச் சூடிக் கொள்கின்றான் கம்பன்.