சரஸ்வதி அந்தாதி : 20

சரஸ்வதி அந்தாதி : 20

‘காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே”

இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்
நாரணன் அகம் அகலாத் திருவும் ஓர் நான்மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தர்க்கு உற்ற ஏவல் அடியவரே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்” என்பது முதல் வரி.

இங்கே காரணன் எனச் சொல்லப்படுவது சிவபெருமானைக் குறிப்பது. அவரே எல்லா காரியங்களுக்கும் காரணகர்த்தா என்பதாக காரணன் எனச் சொல்லப் படுகின்றார்.

இன்னும் சைவ ஆகம விதி நுல்கள் இருபத்தி எட்டு உண்டு. இந்த இருபத்தி எட்டு ஆகமங்களில் “காரண ஆகமம்” என்பது சிவபெருமான் புகழைப் போற்றுகின்றது.

அந்த சிவனே “காரணன்”. அந்த காரணைன் பாகத்தில் அதாவது இடபாகத்தில் இருப்பவள் பார்வதி அதைத்தான் சொல்கின்றான் கம்பன்.

அதுவும் வெறும் நெஞ்சின் இடபாகம் மட்டுமல்ல, அடி முதல் தலை வரை அன்னை ஆக்கிரமித்திருக்கின்றாள். சிவனின் இடபாகத்தை சென்னி வரை, தலை உச்சிவரை பிடித்து அமர்ந்திருக்கின்றாள் என்பதைச் சொல்லும் கம்பன் அடுத்து சொல்கின்றான்.

“சேர்தரும் கன்னியரும்” என்கின்றான் கம்பன்.

அதாவது முறையே சேர்ந்திருக்கின்ற கன்னியர் என்கின்றான். அது சிவன் தலையில் இருக்கும் கங்கையினைக் குறிக்கின்றது.

அடுத்த வரி “நாரணன் அகம் அகலாத் திருவும்” என்றாகின்றது.

அதாவது நாராணன் என்றால் நாராயணன். அந்த நாராயணனின் அகத்தில் இருக்கும் திருமகள், நெஞ்சில் இருக்கும் திருமகளைக் குறிப்பது, மாகாலட்சுமியும் எனப் பொருள்.

அடுத்து “ஓர் நான் மருப்பு வாரணன் தேவியும்” என்ற வரி.

மருப்பு என்றால் கொம்பு. நான் என்றால் நான்கு எனப் பொருள். வாரணம் என்றால் யானை. அதாவது நான்கு தந்தத்தை உடைய ஐராவதம் எனும் யானையினைக் கொண்டிருக்கும் இந்திரனின் மனைவியான இந்திராணியும் எனப் பொருள்.

அடுத்த வரி “மற்றுள்ள தெய்வ மடந்தையரும்” என வருகின்றது.

அதாவது பார்வதியும், கங்கையும், லட்சுமியும், இந்திராணியும் இன்னும் பல தெய்வப் பெண்களும் எனப் பொருள்.

அடுத்து “ஆரணப் பாவை பணித்தர்க்கு உற்ற ஏவல் அடியவரே” என வந்து முடிகின்றது. அதாவது
வேதவடிவான அன்னையின் வேலைக்கார பணியார்களே எனப் பாடல் முடிகின்றது.

ஆகப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“வேத வடிவான அன்னைக்கு சிவனில் பாதி கொண்ட பார்வதியும், திருமால் நெஞ்சில் இருக்கும் லட்சுமியும், இந்திரனின் மனைவியான இந்திராணியும் இன்னும் பல தேவேதைகளும் தெய்வங்களும் வேலைக்காரப் பெண்களாக பணியாற்றுகின்றார்கள்.”

இந்தப் பாடலின் பொருள் கொஞ்சம் ஆழமானது. வேதங்களின் சக்தியினை அதைத் தாங்கி நிற்கும் அன்னையின் பெருமையினைச் சொல்கின்றான் கம்பன்.

சிவபெருமான் மாபெரும் வல்லமை கொண்டவர். சர்வேஸ்வரன் என அழைக்கப்படும் வல்லமையானவர். அக்னி வடிவமான அவரின் அடி முடிகளைத் திருமாலால் பிரம்மனால் கூட காண முடியவில்லை. அவ்வளவுக்கு அளவிடமுடியா சக்தி கொண்டவர்.

அந்த சிவனிடமே பாதி உடல் வாங்கி அமர்ந்தாள் என்றால் அந்த பார்வதியின் சக்தி என்ன? அவளே அன்னைக்கு வேலையாள் என்கின்றான்.

பார்வதி வீரத்துக்கு பெயர் பெற்றவள். அடங்காத அசுரர்களையெல்லாம் அழித்துப் போட்டவள். அப்படியாவள் அன்னை சொன்ன வேலையினைச் செய்கின்றாள் என்கின்றான் கம்பன்.

இன்னும் கங்கையினைச் சொல்கின்றான். கங்கை புனிதமானது அதே நேரம் ஆவேசமும் ஆக்ரோஷமும் கொண்டது. மக்கள்தான் அதைத் தேடிச் செல்வார்கள். தேவர்கள் தேடிச் செல்வார்களே தவிர அது யாரையும் நாடும் அவசியமில்லாதது.

அந்த கங்கை சிவனின் தலையில் இருக்கும் அளவு சிறப்பானது. அப்படியான கங்கை அன்னைக்கு ஏவலாகின்றது.

அடுத்து திருமகளைச் சொல்கின்றான். எல்லோரும் ஏங்கி நிற்பது அவளின் அருட்பார்வைக்காக. அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டாலே பெரும் வாழ்வும் செல்வமும் அதிகாரமும் கிடைக்கும்.

அவள் திருமாலின் நெஞ்சில் குடியிருக்கும் பாக்கியம் பெற்றவள். அப்படியான திருமகள் அன்னை சொன்ன சொல்லைத்தான் செய்கின்றாள்.

அடுத்து இந்திரன் மனைவி முதலான தேவலோகப் பெண்களைப் பற்றி சொல்கின்றான். இந்திரன் தேவலோக அரசன். எல்லாக் காவலும் பலமும் செல்வமும் சுகமும் தீராமல் குவிந்திருக்கும் இடம் அது. தேவலோகம் என்பது இன்பமயமானது சுகமானது. அவர்கள் அருளைத்தான் எல்லோரும் வேண்டி நிற்பார்கள்.

அந்த தேவலோகப் பெண்களே அன்னைக்கு கட்டுப்பட்டு சேவகம் செய்யத் தயாராக நிற்கின்றார்கள் என்கின்றான்.

இதன் உட்பொருள் கொஞ்சம் கவனிக்க வேண்டியது.

பார்வதி தேவி பராக்கிரமசாலி. அவளே உலகில் அக்கிரமங்களை ஒழிப்பாள். அதாவது வீரம் மிகுந்தவள். அவள் அன்னை கட்டளையிட்டால் வீரமான காரியங்களைச் செய்யத் தயாராகின்றாள்.

திருமகள் என்பது லட்சுமி கடாட்சம் அவள் செல்வத்தை அருள்பவள், அவளின் பணி செல்வம் அளிப்பது. அன்னை கட்டளையிட்டால் செல்வத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராகின்றாள்.

கங்கை என்பது புனிதமானது. செல்லும் இடமெல்லாம் பசுமையாக வளப்படுத்தி பெரும் கூட்டத்தை சேர்க்க வல்லது.

அப்படி அன்னை கட்டளையிட்டால் பெரும் வளமையும் கூட்டமும் அது கொடுக்கும். இன்னும் அது புனிதமாக்கி சுத்தப்படுத்தும்.

இந்திரலோகம் என்பது சுகங்களின் லோகம். அன்னை கட்டளையிட்டால் சுகங்கள் அனைத்தும் கூடி வரும். .

ஆக இப்பாடல் மறைமுகமாகச் சொல்லும் தத்துவம் இதுதான்.

அன்னையின் ஆசியில் அவளின் கருணையில் ஒருவனுக்கு தைரியம், செல்வம், புனிதமான உயர்ந்த அடையாளம் இன்னும் எல்லா சுகங்களும் கிடைக்கும் என்கின்றான்.

அதாவது ராஜயோகம் தருபவள் அன்னை. அவளே எல்லாவற்றையும் இயக்குகின்றாள். வேதமே உலகை இயக்குகின்றது. அவ்வகையில் அன்னையே எல்லாவற்றையும் இயக்குகின்றாள். அவள் தன்னை அண்டியோர்க்கு ராஜ வாழ்வினைக் கொடுக்கின்றாள் என்கின்றான்.

சேரநாட்டு அவையில் அரசன் தன்னை குற்றம்சாட்டும் போது தன்னை பாட வைத்து கவிஞனாக்கிய அன்னைதான் அவனையும் ஆளவைத்து தன் முன் அமர்த்தியிருக்கின்றாள். அதனால் அவள் உத்தரவுபடி எல்லாம் நடப்பதால் தனக்கு அவன் ஏதும் இடையூறு செய்து விடமுடியாது என்பதை சூசகமாகப் பாடுகின்றான் கம்பன்.

பவானி தவம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி தவமிதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நிராஜிதபதாம் ||

தாயே ! உன்னுடைய பக்தன் உன்னைப் பார்த்து “பவானி! உன்னுடைய கடைக்கண் பார்வை இந்த அடியவன் மீது படட்டும்” என்று நினைத்து, ‘பவானி நீ’ (பவானி – த்வம்) என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே, நீயோ அவன் சொன்னதை (பவானித்வம்) ப்ரஹ்மவாக்கியமாக எடுத்துக்கொண்டு, அவன் மீது மிகுந்த கருணை ஏற்பட்டு, மும்மூர்த்திகளால் வணங்கப்பட்ட பாதாரவிந்தத்துடன் கூடிய உன் சாயுஜ்ய பதவியான மோக்ஷத்தைத் தருகின்றாய் என்பது பொருள்.

“ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா” அதாவது ப்ரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களாலும் போற்றப்படும் ஆற்றல் உடையவள் என்கின்றது.

அவள் “ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா” அதாவது ப்ரம்மா, விஷ்ணு, இந்திரனால் வணங்கப்படுபவள்.

அவளை “பவாநி” அதாவது சிவனின் பத்னி என்கின்றது.

அவளை “அனார்க்ய கைவல்ய பத தாயிநி” என்கின்றது. அதாவது ஒப்பற்ற கைவல்யபதம் அளிப்பவள்.

அவளை “க்ஷிப்ர ப்ரஸாதிநீ” என்கின்றது அதாவது எளிதில் அகமகிழ்பவள்.

அன்னை ஏகசக்தி எனும் தனிசக்தி, தனியாய் நின்று பல வடிவில் பிரிந்து செயலாற்றுபவள். இதனால் அவளுக்கு “ஏகாகிநி” என ஒரு பெயர் உண்டு, அவளுக்கு இணையான அல்லது இரண்டாம் நிலையில் கூட யாரும் இல்லாததால் அவளுக்கு “துவைத வர்ஜிதா” என இன்னொரு பெயரும் உண்டு.

அவள் எல்லாமுமாக விஸ்வரூபமெடுத்து நிற்பதால் அவள் “விஸ்வரூபா” என லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும். அவள் எல்லா உயிரின் உள்ளும் புறமும் பிரபஞ்சமுமாக வியாபித்து நிற்பதால் “வியாபிநீ” எனவும் சொல்லும்.

சர்வலோக வடிவானவள் என்பதால் அவள் “சர்வாந்தர்யாமினி”.

எங்கும் பரவி நிற்பதால் அவள் “விஸ்வாதிகா”, லோகமெல்லாம் பரவியிருப்பதால் “லோகதீதா”, சர்வமெல்லாம் நிறைந்ததால் “சர்வாதீதா” என்கின்றது சகஸ்ர நாமம்.

அவள் பல வடிவங்களில் செயலாற்றுவதால் அவளுக்கு “பஹூரூபா” என இன்னொரு பெயரும் உண்டு.

வைஷ்ணவீ என்றால் விஷ்ணுவின் ஆற்றல் சக்தியானவள்.

விஷ்ணுமாயா என்றால் விஷ்ணுவின் மாயா சக்தியாக விளங்குபவள்.

சிவப்ரியா என்றால் சிவனுக்குப் பிடித்தவள் / சிவனை நேசிப்பவள்.

சிவபரா என்றால் சிவனிடம் ஒருமித்த பரிபூரண பக்தியை செலுத்துபவள்.

உமா என்றால் சிவபெருமானின் மனைவி (உ – ம் – அ அதாவது உகார மகார அகாரத்தை குறிக்கும். படைத்தல் காத்தல் அழித்தலைக் குறிக்கும்).

சாஸ்த்ரமயீ என்றால் சாஸ்த்ரங்களினால் ஆனவள்.

வாகதீசவரி என்றால் வாக்கின் / சொல்லின் அதிபதி அவள் என்கிறது.

சதுர்வக்த்ர மனோஹரா என்றால் அழகிய நான்கு முகங்கள் கொண்டவள்.

மஹாமாயா என்றால் மஹா மாயையாக விளங்குபவள்.

துர்யா என்றால் நிகரற்ற துரிய நிலையில் அதாவது நான்காம் நிலையில் ஊடுவியிருப்பவள்.

விச்வப்ரமண காரிணீ என்றால் ப்ரபஞ்சத்தின் சுழற்சி சக்கரத்தை நடத்தக் காரணமானவள்.

இன்னொரு சவுந்தர்ய லஹரி ஸ்லோகம் உண்டு.

“கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே(ஹே) பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிதநயாம் |
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி ||”

அதாவது அம்பிகே! வேதங்களின் உட்பொருள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்தினியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்தினியான லக்ஷ்மியென்றும், சிவனின் இணையாளான பார்வதியென்றும் சொல்லுகிறார்கள்.

ஆனாலும் நீ இவர்களை தாண்டியவளாய், மனதுக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டவளாய், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மகிமையுடன் கூடியவளான மகாமாயா சர்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் ஆட்டி வைக்கும் பெரும் ஆதிசக்தியாய் நிற்கின்றாய் என்பது பொருள்.

அன்னையே எல்லாவற்றுக்கும் மூலம். அவள் இடும் உத்தரவில்தான் தேவியர்கள், தேவலோகப் பெண்கள் வேலை செய்கின்றனர். அன்னையின் அருள் பெற்றவருக்கு இவர்கள் மூலம் எல்லா நலனும் அருளும் வாய்க்கின்றது. அவன் உச்ச யோகம் பெறுகின்றான் எனப் பாடி வாழ்த்துகின்றான் கம்பன்.