சரஸ்வதி அந்தாதி : 21

சரஸ்வதி அந்தாதி : 21

“அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே”

இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவள முளரிமின்னே முடியா இரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே”

பாடலின் பொருளை இனி காணலாம்.

“அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த”, அதாவது “அடிவேதம் நாறும் சிறப்பு ஆர்ந்த” எனப் பிரியும்.

அதாவது வேதங்கள் மணக்கும் சிறப்பான பாதங்களைக் கொண்டவள் என்கின்றான் கம்பன்.

அடுத்து “வேதம் அனைத்தினுக்கும் முடிவே” அதாவது வேதங்களின் ஆதியும் அந்தமுமான அன்னையே என்கின்றான்.

அடுத்து “தவளமுளரி மின்னே” என்கின்றான். இது “தவளம் முளறி முன்னே” எனப் பிரிந்து வரும். அதாவது தவளம் என்றால் வெண்தாமரை. வெண் தாமரையில் வீற்றிருக்கும் மின்னல் கொடி போன்றவளே.

அடுத்து “முடியா இரத்தின வடிவே” என்கின்றான். முடிவில்லாமல் பிரகாசிக்கும் ரத்தினம் போல ஜொலித்துக் கொண்டே இருப்பவளே.

அடுத்து “மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் விடிவே”. அன்னையே உன்னை விரும்பிப் பணியும் அடியாரின் அறியாமை அருளை அகற்றும் ஞானச்சூரியனே எனப் பொருள்.

கடைசியாக “அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே”. தாயே என் நிலை அறிந்து என்னை ஆட்கொண்டு வழி நடத்துவார் இந்த உலகில் உன்னையன்றி வேறு இல்லையே எனப் பொருள்.

ஆக, பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“வேதங்கள் மணக்கும் பாதங்களைக் கொண்டவளே, வேதங்களின் ஆதி அந்தம் ஆனவளே, வெண் தாமரையில் பிரகாசிக்கும் மின்னல் கொடியே, முடிவில்லாமல் எப்போதும் ஜொலிக்கும் ரத்தினமே.

அன்னையே! நீயே உன்னை அண்டி வரும் அடியாரின் மன இருள் நீக்கும் ஞானச் சூரியனாய் ஞான விளக்காய் திகழ்கின்றாய். இந்த உலகில் உன்னை விட்டால் என் நிலை அறிந்து என்னை ஆதரித்து வழி நடத்துவோர் யாரும் இல்லையே.”

அன்னையினை மின்னல் என வர்ணிக்கின்றான் கம்பன்.

மின்னல் என்பதே மழையின் அறிகுறி. மின்னல் இன்றி மழை இல்லை. மின்னலின்றி மழைக்கான தூண்டுதல் இல்லை. பூமியில் பலத்த மாற்றங்களைக் கொடுப்பது மின்னல்.

அப்படி அன்னை பெரும் அருள்மழை பொழிபவள். இருளில் வெளிச்சம் தருபவள். ஞானப் பயிருக்கு மூலமாய் இருப்பவள் என்பதைக் கவிநயமாகச் சொல்கின்றான்.

அன்னைக்கு “தடில்லதா ஸமருசிஹி” அதாவது “மின்னல் கிரணங்களுக்கு சம்மான ஜோதி ஸ்வரூபமானவள்” என்ற நாமம் லலிதா சஹஸ்ர நாமத்தில் உண்டு.

அன்னை முடிவில்லாமல் ஜொலிக்கும் ரத்தினம் என்கின்றான். அதாவது ரத்தினம் இரவிலும் ஒளிரும் ஆற்றல் உடையது. எந்த ஒளி இல்லை என்றாலும் அது ஜொலித்துக் கொண்டிருக்கும்.

அப்படி மின்னல் போல், ரத்தினம் போல் தனி ஒளி கொண்டவள். இருளிலும் ஒளிர்பவள் என அன்னையினை ஏன் சொல்கின்றான் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

அன்னைக்கு “அந்தர்முக ஸமராத்யா”, “பஹிர்முக ஸுதுர்லபா” என இரு நாமங்கள் சகஸ்ரநாமத்தில் உண்டு. இதற்கு அன்னை அகக்கண்களில் தெரிபவள் எனப் பொருள். அன்னை அடியாரின் உள்ளத்தில் எழுந்தருள்வதால் அவளுக்கு “ஹிருத்யா” “ஹ்ருதியஸ்தா” என இன்னும் இரு பெயர்கள் உண்டு. அன்னை “ஸ்வப்ரகாசா” அதாவது தானே உள்ளொளியாக ஜ்வலிப்பவள், ஸ்வயம் ப்ரகாசமானவள்.

“அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி” என்கின்றார். அதாவது அன்னை ஆனந்தமானவள் அடியார்க்கு மிகப்பெரும் ஆனந்தம் தருபவள் எனப் பொருள்.

“பரமானந்தா” என்பது அன்னைக்குரிய திருநாமங்களில் ஒன்று. அன்னை தன் அடியாருக்கு மிகப் பெரிய நிரந்தரமான ஆனந்தத்தை தருபவள் எனப் பொருள்.

இதனால் தான் அன்னையின் அடியார்களெல்லாம் அன்னையினை உணர்ந்தவர்களெல்லாம் கவலையுற்றோ, வாடியோ காணப் படுவதில்லை. அன்னை உள்ளே வந்த மனம் ஆனந்தமாகும். அந்த ஆனந்தம் முகத்தில் பிரகாசிக்கும்.

அதனைப் பாடும் கம்பன் இன்னும் சொல்கின்றான்.

அன்னை வேதங்களின் வடிவானவள். வேதமே அவள் தான் அந்த வேதங்கள் அவளிடமிருந்தே தோன்றுகின்றன. அவளிடமே முடிகின்றன. வேதத்தின் தொடக்கமும் முடிவும் அவளே.

சஹஸ்ரநாமம் “ஷ்ருதி சமஸ்துத வைபவா” அதாவது வேதங்கள் கொண்டாடும் மகத்துவம் பொருந்தியவள் என்று துதிக்கிறது.

அன்னைக்கு வேதவல்லி என்றும் இன்னும் பலவகையான பெயர்களும் உண்டு. அன்னையே வேதம். வேதமே அன்னை என்பது ஆன்றோர் அறிந்தது.

அப்படி அந்த வேதத்தின் தொடக்கமும் நடுவும் முடிவுமாய் நிற்பவள் என அன்னையின் புகழைப் பாடும் கம்பன் கடைசி வரிக்கு வருகின்றான்.

இப்படியான அன்னை ஒருத்தி இல்லாவிட்டால் தனக்கு யாருமில்லை, எதுவுமில்லை. அன்னையால் வாழ்கின்றேன் எனப் போற்றி முடிக்கின்றார்.

இப்பாடல் தியானத்தின் வலிமையினை, பலனைக் குறிக்கும் ஒரு பாடல்.

அன்னையினை புறக்கண்களால் காண முடியாது. அமைதியான ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டால் அன்னை ஆயிரம் மின்னல்களைக் கொண்ட பிரகாசமான வடிவாக நெஞ்சில் எழுந்தருள்வாள். அவளை அந்த அகக்கண்களால் ஞானக்கண்களால் காணலாம்.

லலிதா சஹஸ்ர நாமம் அவள் “த்யான கம்யா” த்யானத்தின் மூலம் அடையப்படுபவள் என்கிறது.
மேலும் “த்யான த்யாத்ரு த்யேய ரூபா” அதாவது தியானமாகவும், தியானிப்பவராகவும், தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்.

அன்னை வேதங்களின் தொடக்கமும் முடிவுமானவள் என்பதால் அன்னை வரும் நெஞ்சம் வேதங்களின் இல்லமாகின்றது. அவள் குடியிருக்கும் மனம் எல்லா வேதங்களையும் அறிகின்றது. ஓதாமலே எல்லா ஞானமும் அங்கு குடி வருகின்றது.

அப்பொழுது அந்த மனம் நித்திய ஆனந்தத்தில் மகிழ்கின்றது. அந்த ஆனந்தம் எக்காலமும் குறைவதுமில்லை கூடுவதுமில்லை.

அன்னை போலவே அந்த ஆனந்தம் எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது.

அன்னை மிகப்பெரிய சக்தி. உலகை படைத்து இயக்கும் மாபெரும் சக்தி. அந்த சக்தியினை மனதால் தியானித்தால் அந்த அடியார்களுக்குத்தான் நன்மை. மாறாக அவளை யாரும் தேடாவிட்டால் அவளுக்கு ஏதும் குறைவதுமில்லை, கொஞ்சமும் இழப்புமில்லை.

ஆனாலும் அந்தப் பெருநிலையில் இருக்கும் அன்னை, தன் அடியார்கள் தேடினால் ஓடிவந்து மனதில் அமர்வாள். அந்த அளவு கருணை கொண்டவள் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.

அப்படியே தன் மனதிலும் அவள் வந்து பெரும் ஞானம் கொடுத்ததை போற்றிப் பாடுகின்றான்.

ஆக ஞானப்பிழம்பாக, வேத ஜோதியாக விளங்கும் அன்னையினை மனதார தரிசித்து பெரும் ஆனந்தத்தில் மூழ்கலாம், தன் அடியார்கள் அழைத்தால் ஓடிவந்து தன்னை வெளிப்படுத்துவாள், நித்திய ஆனந்தமும் ஞானமும் தருவாள் எனப் பாடுகின்றான் கம்பன்.

அன்னை அடியாரின் மனதில் மின்னலாய் எழுந்து ஞானமழை தருவாள். அவள் ரத்தினமாய் ஜொலித்து வழிகாட்டுவாள். அவள் ஞானச் சூரியனாய் அறியாமை இருள் அகற்றுவாள்.

லலிதா சஹஸ்ர நாமத்தில் பல நாமங்கள் உண்டு.

பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி: அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்.

மித்ர ரூபிணி அதாவது சூரிய வடிவானவள்.
பகாராத்யா அதாவது சூரிய மண்டலத்தில் ஆராதிக்கத்தக்கவள்.

ரவிப்ரக்யா அதாவது சூரியனைப் போன்ற காந்தியுள்ளவள்.

அப்படியான அன்னை என் மனதில் வந்து ஒளி தந்தாள். அவளால் வாழ்கின்றேன். அவள் இல்லாமல் இந்த உலகில் தனக்கு எதுவுமில்லை என மருகிப் பாடுகின்றான் கம்பன்.

இந்தப் பாடல் யோக சாஸ்திரம் ஒன்றையும் சொல்கின்றது. சூரியன், மின்னல், ரத்தினம் என்பதெல்லாம் யோகத்தில் துலங்கும் ஒளி வடிவங்கள்.

சவுந்தர்ய லஹரியில், “மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும் (கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலா-தப ருசிம் பஜந்தே யே ஸந்த: கதிசித் அருணா மேவ பவதீம்) என்றும்,

ஞானிகள் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை பார்ப்பவர்களாக அனுபவிக்கிறார்கள். (மஹாந்த: பச்யன்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்)

என யோகத்தின் மூலம் அன்னையை அடைந்தவர்களின் நிலையாக சங்கரர் போற்றுகின்றார்.

ரத்தினம் என்பது மூலாதாரத்தை குறிப்பது, சூரியன் என்பது ஆக்ஞா சக்கரத்தை குறிப்பது, மின்னல் என்பது சகஸ்ரார ஞானச் சக்கரத்தின் பிரகாசமான ஒளி வெள்ளத்தைக் குறிப்பது.

அதை சூசகமாகப் பகலில் ஒளி தரும் சூரியன், இரவில் ஒளிவிடும் ரத்தினம், மழை வழங்கும்; ஒளி தரும் மின்னல் என எல்லா வடிவினையும் ரம்மியமாக ஒப்பிட்டுக் காட்டித் தன் மனதில் இருளே இல்லை, அன்னை முப்பொழுதும் ஒளி கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள் என மருவிப் பாடுகின்றான் கம்பன்.

அன்னை தன் சக்கரங்களை எல்லாம் துலங்க வைத்தாள். ஞானியாக யோகியாக அப்படியே கலைகளைக் கொட்டும் கவிஞனாக தன்னை உருமாற்றி இயக்குகின்றாள். அவளாலேதான் சிறப்புற இயங்க முடிகின்றது. அவளின்றி தான் இல்லை என்பதைப் பாடி உருகி நிற்கின்றான்