சரஸ்வதி அந்தாதி : 23

சரஸ்வதி அந்தாதி : 23

“சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.

“சேதிக்க லாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாம்முத்தி தானெய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லிபொற் றாளை அடைந்தவரே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ் எவர் சிந்தனையும்” என முதல் வரி பிரிந்து பொருள் தரும். சேதித்தல் என்றால் சேதம் செய்தல், உடைத்தல் எனப் பொருள்படும். யாருடைய சிந்தனையும் அவர்கள் செய்யும் வாதத்தையும் உடைக்கலாம் எனப் பொருள்

அடுத்த வரி “சோதிக்கலாம் உற போதிக்கலாம் சொன்னதே துணிந்து” என வரும். ஒருவரின் அறிவை அவரின் கருத்தை வாதத்தை சோதிக்கலாம், அவருக்கே போதிக்கலாம், நாம் சொன்னதை துணிந்து எனப் பொருள்.

அடுத்த வரி “சாதிக்கலாம் மிக பேதிக்கலாம் முக்தி தான் எய்தலாம்” என்பது அடுத்த வரி. அதாவது நாம் சொன்னதை சரியென சாதிக்கலாம். அவர்களை அச்சமடையச் செய்து குழப்பி மாற்றலாம். ஸ்தம்பிக்கச் செய்யலாம் (பேதித்தல்). அப்படியே முக்தி நிலை எய்தலாம் என்பது பொருள்.

கடைசியாக “ஆதிக் கலாமயில் வல்லிபொற் றாளை அடைந்தவரே” மிக மிக மூத்தவளும் மூலமானவளும் கலை மயில் போன்றவளுமான அன்னையின் பாதங்களை அடைந்தவர்க்கே என்பது பாடலின் பொருள்.

சேதித்தல், சோதித்தல், சாதித்தல், பேதித்தல் என வார்த்தைகளில் விளையாடுகின்றான் கவிச் சக்கரவர்த்தி.

ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“அன்னையே! ஆதிசக்தியே! உன் பாதம் பணிந்தவர்கள், மாற்று மார்க்கம் பேசுபவரை பல வித குழப்பமான தத்துவங்களின் கருத்துக்களை உடைப்பார்கள், யாருக்கும் போதிப்பார்கள். தாங்கள் சொன்னது உண்மை என சாதித்துக் காட்டுவார்கள். இன்னொருவர் சிந்தனையினை வாதத்தை தடுத்து அவர்களை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்கொள்வார்கள். அப்படியே முக்தி நிலையும் அடைவார்கள்” என்பது பாடலின் பொருள்.

ஆம், அன்னையின் அருள் பெற்றோர் ஞானத்தில் நிறைந்து வாதத்தில் பலரை வென்று பல தவறான சிந்தனைகளை உடைத்தெறிந்து, குழப்பவாதிகளை மாறச் செய்து, உலகுக்கே தர்ம வழி காட்டி பின் முக்திபேறும் அடைவார்கள். அன்னை அந்த வரத்தை தருவாள் என்கின்றான் கம்பன்.

இங்கே பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கலாம்.

இந்தப் பாடலுக்கு இருவர் மிகப் பெரிய உதாரணம். ஒருவர் ஆதிசங்கரர், இன்னொருவர் திருஞானசம்பந்தர்.

ஆதிசங்கரப் பெருமான் அன்னையின் அருளால் பெரும் ஞானம் பெற்றார். அந்த ஞானத்திலே பெரும் வாதங்களை செய்து பௌத்தர்கள் இதர குழப்பவாதிகளை வென்று, அவர்களை தர்ம வழிக்கு திருப்பினார்.

ஆதிசங்கரப் பெருமானை கடைசி வரை வாதத்தில் வென்றவர் யாருமில்லை. ஞானத்தில் அவரை விடத் தெளிந்தவர் எவருமில்லை. அன்னையின் தனிப்பெரும் கருணையின் மகனாக ஞானக் குழந்தையாக அவர் ப்ரகாசித்து இன்றும் புகழுடன் வீற்றிருக்கின்றார்.

திருஞான சம்பந்தருக்கு அன்னையே ஞானப்பால் கொடுத்த சம்பவம் உலகறிந்தது. அந்த ஞானத்தில் தான் அவர் சமணர்களிடமிருந்து சனாதனத்தை மீட்டெடுத்தார்.

இந்துமத ஞானியர்கள் அக்காலத்தில் இருந்து ஆதிசங்கரரில் இருந்து பின்னாளைய ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காஞ்சி மகாபெரியவர் வரை அந்த ஞான வரிசையினைக் காணலாம்.

அன்னை முருகப்பெருமானுக்கு சக்தி வேலை ஞானவேலை கொடுத்தவள் என்பதில் தொடங்கி காஞ்சி மகா பெரியவர் வரை அந்த பரிபூரண ஞான மூலத்தை உணர முடியும்.

இந்த ஞானத்தை தருபவள் அறியாமையில் மாயையில் இருப்போர்க்கு தர்மம் உரைத்து திருத்துபவள் அன்னை. நல்வழி ஞானவழி காட்டுபவள் அன்னை.

இருளகற்றி எரியும் கற்பூரம் காற்றில் எரிந்து முடிந்து கரைவதைப் போல, அவள் அருள் கொண்டோரெல்லாம் நல்ல ஞானவழி காட்டி அஞ்ஞானியரை திருத்தி கடைசியில் முக்தி அடைவார்கள்.

சங்கரர், சம்பந்தர் முதல் இன்றும் பலருக்கு குருவாக நிலைத்திருக்கும் விவேகானந்தர், காஞ்சி பெரியவர் வரை அந்த வரிசை உண்டு.

கம்பன் இதையே அன்றே பாடினான்.

அன்னை கலைகளின் மூலம். ஞானத்தின் ஊற்று. அவள் அருளைப் பெற்றோர் அளவிடமுடியா ஞானத்துடன் எல்லா அவையிலும் முதலில் வீற்றிருப்பார்கள்.

மகாகவி காளிதாசன் அதற்கு உதாரணம். இன்னும் மூக கவி முதல் பலரை காட்டமுடியும்.

அன்னை இப்படியான வரங்களைத் தருவாள் என்பதை சவுந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் பாடுகின்றார்.

“தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார்: பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானாம் அஜநி கமநிய: கவயிதா ||”

தரணிதர கன்யே – மலையரசன் பெண்ணே; தவ – உன்னுடைய; ஸ்தந்யம் – முலைப்பால்; ஹ்ருதயத: – இருதயத்திலிருந்து உதித்த; பய: பாராவார: – அம்ருதப் பிரவாகம் போலும்; ஸாரஸ்வதம் இவ – வாக்தேவதையான சரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும்; ப்ரவஹதி – பெருகுகிறது என்று; மந்யே – நினைக்கிறேன். யத் – ஏனென்றால்; தயா வத்யா – கருணை ததும்பும் உன்னால்; தத்தம் – அளிக்கப்பட்ட; தவ – உன்னுடைய; ஸ்தந்யம் – முலைப்பாலை; ஆஸ்வாத்ய – அருந்தி; த்ரவிடசிசு – திரவிட குழந்தை; ப்ரௌடானாம் கவீனாம் – தலைசிறந்த கவிகளுக்குள்; கமநிய: – மனதைக் கவரும்; கவயிதா – கவிஞனாக; அஜநி – ஆகிவிட்டான் அன்றோ?

மலையரசன் பெண்ணே! உன்னுடைய ஞானம் மகா பெரியது. உன்னிலிருந்து பெருகும் அறிவின் ஒரு துளி பாலை உண்டதால் திரவிட (மூன்று பக்கமும் நீர்சூழ் பகுதி) குழந்தையான இந்தக் குழந்தையும் பெரிய கவிஞனாக ஆகிவிட்டது அன்றோ?

இப்பாடல் ஆதிசங்கரர் தன்னைப் பற்றி சொன்ன பாடல். அன்னை மாபெரும் தத்துவ வாதிடும் ஞானிகளை, தவறான கருத்துக்களை அகற்றும் உத்தமான ஞானியரை உருவாக்குகின்றாள் என்பது அவர் சொல்லும் தத்துவம்.

“கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலா-தப ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசித் அருணா மேவ பவதீம் |
விரிஞ்சி பிரேயஸ்யா: தருணதர ச்ருங்கார லஹரீ
கபீராபி: வாக்பி: விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ ||”

கவீந்த்ராணாம் – கவிகளின்; சேத: கமல வந – மனமாகிய தாமரை வனத்திற்கு; பால ஆதப ருசிம் – இளம் சூரியன் போல் ப்ரகாசிப்பவளும்; அருணா மேவ – அதனால் அருணா எனப் பெயர் பெற்றவளும் ஆகிய; பவதீம் – உன்னை; யே – எந்த; கதிசித் – சில; ஸந்த: – புண்ணியவான்கள்;

பஜந்தே – பூஜிக்கிறார்களோ; அமீ – அவர்கள்; விரிஞ்சி பிரேயஸ்யா: – ப்ரம்மாவின் ப்ரியமான சரஸ்வதியின்; தருண தர – செழிப்பு மிக்க; ச்ருங்கார லஹரீ- சிருங்கார ரஸத்தின் ப்ரவாகம் போன்ற; கபீராபி: – கம்பீரமான (ஆழமான); வாக்பி: – சொல் வன்மையால்; ஸதாம் – சாதுக்களுக்கு; ரஞ்ஜனம் – மகிழ்ச்சியை; விதததி – அளிக்கிறார்கள்.

அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும் எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யௌவன சிருங்கார ரஸத்தின் ப்ரவாகம் போன்ற கம்பீரமான சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள் என்பது பொருள்.

அன்னையின் அருளை பெற்றவர்கள் மிகுந்த வாக்கு வன்மையால் பெரும் விஷயங்களை சாதிப்பார்கள் என்கின்றது ஸ்லோகம்.

இன்னொரு ஸ்லோகம் உண்டு

“கதா காலே மாத꞉ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்ʼ வித்யார்த்தீ தவ சரண நிர்ணே ஜனஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் ||”

மாத꞉ – தாயே; கலித அலக்தக ரஸம் – செம்மையான ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும்; தவ – உனது; சரண நிர்ணேஜன ஜலம் – பாத ப்ரக்ஷாளன ஜலத்தை; வித்யார்த்தீ – ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் நான்; கதா காலே – எந்த காலத்தில் (எப்போது); பிபேயம் – பருகப் போகிறேன்; கதய – கூறியருளுங்கள். ப்ரக்ருத்யா – பிறவியிலேயே (இயற்கையிலேயே); மூகாநாமபி – ஊமையானவர்களுக்கும் கூட; கவிதா காரண தயா – கவிதா பாடும் சக்தியை உண்டாக்கும் காரணத்தால்; வாணீ முக கமல தாம்பூல ரஸதாம் – ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய பாத தீர்த்தம்; கதா – எப்போது; தத்தே – எனது வாயில் சேரும்?

தாயே! உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள். பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்? எனப் பொருள்.

அன்னையின் பாதத்தில் இருந்து வடியும் ஒரு துளி நீர் மகா கவிஞனை உருவாக்கும் என்கின்றது ஸ்லோகம்.

அன்னை ஞானமிக்க, சக்திமிக்க வாதத்திறமை மிக்கவர்களை உருவாக்குபவள் என்பதை அவளின் திருநாமங்களைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமமும் சொல்கின்றது.

அவள் “வாக்வதாதினீ” அதாவது சொல் அல்லது வாக்கின் ஆதாரமாகத் திகழ்பவள் (சொல்லின் மூலக் காரணம்) என்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.
மேலும் “வாகதீஸ்வரீ” – வாக்கின் / சொல்லின் அதிபதி அவள் என்கிறது.

வியாஹ்ருதி அதாவது தெய்வீக சொற்களின் ஆற்றலாகத் திகழ்பவள்,

ஸூதாஸ்ருதி அதாவது அமருதத்தை தேனாக சொரிபவள். என்பது அன்னைக்கான நாமங்களாகும்.

ஷ்ருதி சீமந்த சிந்தூர க்ருத பாதாப்ஜ தூலிகா என்றால் தனது பாதத்தாமரைத் தூசியால் வேதமாதாவின் உச்சி வகிட்டில் சிந்தூரமாக அலங்கரிப்பவள் (அதாவது, உபநிஷதமாக இருக்கிறாள் அன்னை).
தாம்பூலபூரிதமுகி அதாவது தாம்பூலம் தரித்த வாய் உடையவள் / தாம்பூலத்தின் நறுமணம் கமழும் சிவந்த வாய்.
கலாலாபா அதாவது மனதுக்கு ரம்யமாக கலைநயத்துடன் உரையாடுபவள்,
காவ்ய கலா அதாவது கவி-காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்,
வாக்வாதிநீ அதாவது சொல் அல்லது வாக்கின் ஆதாரமாகத் திகழ்பவள் (சொல்லின் மூலக் காரணம்),
ப்ரஹ்மாணீ அதாவது பிரஹ்ம தத்துவத்தின் பெண் அம்சம்,

சதுர்வக்த்ர மனோஹரா என்றால் அழகிய நான்கு முகங்கள் கொண்டவள்,
காவ்யாலாபவிமோதினி அதாவது காவியங்கள் உரைக்கப்படுவதைக் கேட்டு ஆனந்திப்பவள்,
ரசக்ஞா அதாவது கலைககளின் தன்மை அறிந்து அதனை தன் வயப்படுத்தியவள்,
ரஸசேவதி அதாவது கலைககளின் கருவூலம் என்றும் அவள் அழைக்கப் படுகின்றாள்.

அன்னை ஆசைகளை ஒழிப்பவள். மும்மலங்களை ஒழிப்பவள். பற்றினை அறுப்பவள். அந்த அன்னை தானும் பற்றறுத்து ஞானம் வல்லமை கொண்டவளாக இருந்தும், பாவங்களை பொசுக்குபவரும், தீமையினை சுட்டெரிப்பவருமான சிவனிலும் பாதியாக இருக்கின்றாள்.

அவளும் தூய்மையானவள் ஒளியானவள் ஞான வடிவானவள் மாசு மறுவற்ற பரிசுத்தமானவள். அவள் குடியிருக்கும் சிவனும் ஞான நெருப்பு. பாவங்களை ஒழிக்கும் அருள் நெருப்பு. அதனால் அன்னையினை வணங்கினால் எல்லா பாவமும் கர்மமும் ஒழியும். அகங்காரமும் மும்மலமும் அழியும். அதனால் முக்தி கிட்டும் என்பதே கம்பன் சொல்லும் சூட்சுமம்.

அன்னை எதிரணியினரின் வாதங்களை உடைக்க ஆற்றலைத் தருவாள். அவர்களைத் தகுந்த கேள்விகளால் சோதிக்கும் அறிவைத் தருவாள். தாங்கள் சொன்னதை நிரூபிக்கும் துணிவை அறிவைத் தருவாள். எதிரணியினர் அஞ்சி ஒடுங்கி நிற்கும்படி முடக்கும் ஞானம் தருவாள். அப்படியே முக்தியும் தருவாள். அவள் அப்படிப்பட்ட மாபெரும் ஞான ஒளி என வியந்து பாடுகின்றான் கம்பன்.

இந்தப் பாடலை கம்பன் சேர மன்னன் அவையில் பாடவும் காரணம் உண்டு.

அங்கே அவன் விசாரிக்கப் படுகின்றான். அவன் அரசனை ஏமாற்றி தன் அடையாளங்களை மறைத்து ஏமாற்றி வந்ததாகப் புகார் சொல்லியதை அடுத்து அவன் அன்னையினை வேண்டி தன்னைக் காக்க வேண்டி பாடுகின்றான்.

அப்போது அன்னையின் கருணையால் மகாகவி காளிதாஸன் ஆடு மேய்த்த மூடன் கவி காளிதாசனாக மன்னன் அவையில் அமர்ந்தான். பாலகன் சங்கரனும் சம்பந்தரும் அன்னை அருளால் வாதத்தில் வெல்பவராக மாறினார்கள். அன்னையின் அருளால் கொல்லூரில் ஊமை ஒருவன் பெரும் கவிஞனானான்.

அன்னை எல்லோருக்கும் ஞானத்தை அருள்பவள். வாக்கு வன்மையினை அருள்பவள். அப்படியே அவர்களுக்கு முக்தியும் அருள்பவள்.

அந்த அன்னை என்னையும் ஆட்கொண்டு என்னையும் கவிஞனாக்கி இந்த அவையில் அமரச் செய்தாள். அவளாலே நான் இந்த இடத்துக்கு வந்தேன். இங்கு என்னால் எந்த வாதத்திலும் அவள் அருளால் வெல்ல முடியும். எந்த சவாலிலும் வென்று நிற்க முடியும். ஒருவேளை அன்னையின் சித்தமானால் முக்தி நிலையே வாய்க்கும். பின் ஏன் நான் அஞ்ச வேண்டும் எனப் பாடி போதிக்கின்றான் கம்பன்.