சரஸ்வதி அந்தாதி : 24
சரஸ்வதி அந்தாதி :24
“அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்
“அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை ஒன்றுமிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளை பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே”
இனி பாடலின் பொருளை காணலாம்.
“அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் உடையாளை” என பாடல் தொடங்குகின்றது,.
அன்னையின் கை அன்றைய நாளில் பூத்த தாமரை மலர் போல் இருப்பது, அந்த நாள் மலர், புதிய தாமரை மலர் போன்ற கையில் அன்னை ஏடு தாங்குகின்றாள். இன்னொரு கரத்தில் ஸ்படிக மந்திர மாலையினைத் தாங்கி, மணிவடம் போன்ற மந்திர மாலையினைத் தாங்கி நிற்கின்றாள் என்பது பொருள்.
” நுண்ணிடை ஒன்றுமிலாளை உபநிடதப் படையாளை” என்பது அடுத்த வரி.
மிக நுண்ணிய இடை அல்லது இல்லை எனும் சொல்லும் அளவு இடை கொண்டவளை, உபநிடதங்கள் யாரிடம் இருந்து தோன்றுமோ அவளை.
அடுத்த வரி “எவ்வுயிரும் படைப்பாளை” எல்லா உயிருக்கும் தாயானவளை எனப் பொருள்.
அடுத்த வரி “பதும நறும் தொடையாளை” பதுமம் என்றால் தாமரை, தாமரை போன்ற தொடை கொண்டவளை, தாமரையில் கால் மடக்கி அமர்ந்திருப்பவளை.
கடைசியாக “அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே”. அவளைத் தவிர மற்றது இனி யாரை தொழ முடியும்?
ஆக பாடலின் பொருள் இதுதான்.
“அனறு மலர்ந்த தாமரை போன்ற பொலிவான கைகளில் ஏடும், மந்திர ஜபமாலையும் கொண்டிருக்கும் அன்னை மிக நுண்ணிய இடை கொண்டவள், அவளிடம் இருந்தே உபநிஷங்கள் தோன்றுகின்றன, அவளே எல்லா உயிருக்கும் படைப்புக்கும் தாய்.
தாமரையில் அமர்ந்திருக்கும் அப்படியான அன்னையினை அன்றி வேறு யாரை தொழுவேன்?”
இந்த பாடல் கொஞ்சம் ஆழமாக நோக்கதக்கது.
கம்பன் அன்னையின் சிறப்புகளை சூசகமாகச் சொல்கின்றான். அன்னை கையில் ஏடு ஏந்தி நிற்கின்றாள். ஏடு என்பது கல்விச் செல்வம்.
ஒருவனுக்கு கல்விதான் ஆதார செல்வம், அந்த கல்வியும் கூர்மதியும் இருந்தால் இதர செல்வமெல்லாம் தேடிவரும்.
ஒருவனுக்கு பொருட்செல்வம் இருந்து அதை காக்க தெரியாவிட்டால் அதை காக்க அறிவில்லாவிட்டால் அவன் அதை இழந்துவிடுவான்.
வீரனிடம் கல்வி இல்லாவிட்டால் அவன் முரடனாகிவிடுவான், அது அழிவில் நிறுத்தும்.
கல்வி இருந்தால் எல்லா சிறப்பும் தேடிவரும். அப்படியான வரத்தை அன்னை அருள்வாள், கல்வி அறிவு நிரம்ப பெற்றவன் மன்னனால் சரிக்கு சமமாக அமர வைக்கபடுவான்.
அப்படியான பெரும் அறிவை, பெரும் ஞானத்தை தருபவள் அன்னை.
“”மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”
என ஒளவை சொன்னதை இங்கே சூசகமாக சுட்டிக்காட்டி அந்னையின் அருளால் மிகப்பெரிய இடத்தை இவ்வாழ்வில் அடையலாம். அவள் அருளில் அடையலாம் என்கின்றான்.
சவுந்தர்ய லஹரியில் ஒரு பாடல் உண்டு.
இதோ அந்த ஸ்லோகம்.
“ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவன்னேவ க்ஷபித-பஶுபாஶ-வ்யதிகர:
பரானன்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜனவான்”
அம்மா! உன்னை பூஜிப்பவன் ப்ரம்மாவும் விஷ்ணுவும் கூட பொறாமை படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான்.
உன் பக்தன் சிரஞ்சீவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த சுகத்தை அனுபவிக்கிறான் என்பது அந்த ஸ்லோகத்தின் பொருள்.
அந்த சாயலில் பாடும் கம்பன் அன்னையின் இன்னொரு கரத்தை காண்கின்றான்.
அங்கே அவள் மந்திர மாலையினை வைத்திருக்கின்றாள், அது வேத மந்திரங்களைச் சொல்வது.
வேதங்களும் மந்திரங்களும் உபநிடதங்களும் மறுமை வாழ்வுக்கான வழி.
ஆக, அன்னை இம்மையில் கல்வி தந்து என்னை வாழவைப்பாள், மறுமையில் முக்தி அடைந்து நற்பேறு அடைய எனக்கு மந்திரங்களை உபதேசிப்பாள்.
இப்படி இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வு வழங்குபவள் என் அன்னை என வியக்கும் கம்பன் இந்த இரண்டும் ஒருவேளை விதியால் வாய்க்காமல் போனால் என்னாகும் என சிந்திக்கின்றான்.
அடுத்து சொல்கின்றான்.
அவள் இடை ஏன் மறைந்திருக்கின்றது, அது இருந்தும் இல்லாமல் இருப்பதுபோல் எப்படி இருக்கின்றது என்பதைச் சொல்லி அவளே மறைந்திருந்து எல்லா உயிர்களையும் படைக்கின்றாள் என்கின்றான்.
அவள் “விஞ்ஞானகன ரூபிணீ” அதாவது தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்.
அவள் “ஜகதீகந்தா” அதாவது உலகத்தின் படைப்புக்கு வேரானவள்.
அவள் “பராசக்தி” அதாவது ஒப்புயர்வற்றவள், உன்னத சக்தியாக விளங்குபவள்.
அவள் “ப்ரக்ஞான கணரூபினி” அதாவது சம்பூரண ஞானவடிவானவள்.
அவள் “விஞ்ஞாத்ரி” அதாவது சகலமும் அறிந்தவள், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி அதாவது சிந்தனை, செயல் மற்றும் ஞானமெனும் மூவகை ஆற்றலாக வெளிப்படுபவள் என லலிதா சஹஸ்ரநாமம் வியந்து போற்றுகின்றது.
அவள் “ஆப்ரஹ்மகீட ஜனனி” அதாவது பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா.
அப்படி அவள் தனக்கு இப்பிறப்பில் கல்வியும் வேதஞானமும் கொடுக்காவிட்டாலும் அடுத்த பிறப்பில் கொடுப்பாள். அவளே படைப்புக்கெல்லாம் அதிபதி என்பதால் அடுத்த பிறப்பில் தனக்கு வாழ்வும் வளமும் முக்தியும் கொடுப்பாள்.
இப்படி இந்த உலகம், மறுவுலகம், மறுஜென்மம் என எல்லாமும் அன்னையால் முடிவு செய்யப்படும் போது இந்த மகா சக்தியினை விட்டு இன்னொரு தெய்வத்தை வணங்கமுடியுமா? அது அவசியமில்லை அவளே எல்லாவற்றுக்கும் மூலம் அவள் ஒருத்தியினையே எக்காலமும் பணிவேன் என்கின்றான் கம்பன்.