சரஸ்வதி அந்தாதி : 25
சரஸ்வதி அந்தாதி : 25
“தொழுவார் வலம்வரு வார்துதிப் பார்தம் தொழில்மறந்து
விழுவார் அருமறை மெய்தெரி வார்இன்ப மெய்புளகித்(து)
அழுவார் இனுங்கண்ணீர் மல்குவார் என்கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகி
அழுவார் இன்னும் கண்ணீர் மல்குவார் என் கணாவது என்னை
வழுவாத செம் சொல் கலையமங்கை பால் அன்பு வைத்தவரே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் வரி “தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து” என வரும். அதாவது வணங்கித் தொழுவார்கள். சுற்றி வந்து வணங்குவார்கள், துதிப்பார்கள். தன் தொழில் நிலை எல்லாம் மறந்து நிற்பார்கள் எனப் பொருள்.
இரண்டாம் வரி “விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகி” என வரும். அதாவது வணங்கி வீழ்வார்கள், மறைபொருளை அறிவார்கள். இறையின்பம் பெறுவார்கள். மிகுந்த ஆனந்தத்தில் புளகாங்கிதம் அடைவார்கள் என்பது பொருள்.
மூன்றாம் வரி “அழுவார் இன்னும் கண்ணீர் மல்குவார் என் கணாவது என்னை” அதாவது அழுவார்கள் கண்ணீர் மல்க நிற்பார்கள், அப்படிப்பட்ட நிலை எனக்கும் வாய்க்குமோ?
நான்காம் வரி “வழுவாத செம் சொல் கலையமங்கை பால் அன்பு வைத்தவரே” குறையற்ற சொல் அல்லது தவறாகாத பொய்க்காத சொல்லைச் சொல்லும் அன்னை கலைவாணி மேல் அன்பு வைத்தவர்கள் என்பது பொருள்.
ஆக பாடலின் பொருள் இதுதான்.
“அன்னை மேல் அன்பு வைத்தவர்கள் அவளைச் சுற்றி சுற்றி வந்து வணங்குவார்கள். வீழ்ந்து தொழுவார்கள். உண்மையினை உணர்வார்கள். உச்ச ஆனந்த நிலைக்குச் சென்று அழுவார்கள். உணர்ச்சிப்பெருக்கில் ஆனந்த நிலையில் பரவச நிலையில் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட நிலையினை எனக்கும் தந்தாள் என் அன்னை”
இப்பாடல் பரவசநிலை, ஆனந்த நிலை, உச்சநிலை பரவசம் எனும் முழு ஞான நிலை, முழுக்க பக்தியில் கரைந்திருக்கும் முழு யோக நிலை.
அந்நிலையில் முழு பரவசம் ஒன்றே அவர்களிடம் நிறைந்திருக்கும். முழுவதும் இறைசக்தி ஆட்கொண்ட நிலையில் ஒருவித பித்துப்பிடித்த நிலையில் இருப்பார்கள்.
அந்த தெய்வீக பரவச நிலையினை அன்னை அருள்வாள் என்கின்றான் கம்பன்.
“உடல் குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்”, “ஊற்றென வெதும்பி யூற்ற”, “அன்பில்லை உருகி விழிநீர் ஆருக” என்பார் தாயுமானவர்.
பொதுவாக அடியார்கள் பக்தியின் உச்சியில் நெகிழ்ச்சியில், மனத்தின் கண் கொண்ட பக்தியினைக் கண்களில் நீராகக் காட்டுவார்கள். அந்த நீர் அவர்களின் பக்திக்கு அடையாளம்.
உடலெல்லாம் ஒருவித ஆனந்தப் பரவசம் பாய, நாடி நரம்பெல்லாம் அந்த பரவசம் பாய உடலெல்லாம் பரவசமான கோலத்தில் இருப்பார்கள். ஒரு மயிர்க்கூச்செறியும் பரவசத்தில் அன்னையினை வணங்கி நிற்பார்கள்.
“‘மெய்சிலிர்த்து இருகை கூப்பி” என்பார் தாயுமானவர்.
அப்படி கண்களெல்லாம் நீராக, உடலெல்லாம் பரவசமாகி மயிர் கூச்செறியும் நிலையில் அடியார்கள் நிற்பார்கள் அல்லவா? அந்தக் கோலத்தினை சொல்கின்றான் கம்பன்.
அப்படி அவர்கள் மருகி உருகி பரவச மயக்கத்தில் இருக்கும் போது தன் நிலை இழப்பார்கள். அங்கே தன்னை மறந்த நிலையில் இருப்பார்கள். தன் அறிவு என்பது அப்போது அகன்றிருக்கும். அவர்கள் அன்னை நினைவிலே உருகி நிறைந்து நிற்பார்கள் என்கின்றான்.
“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
பார்கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி
வெதும்பியுள்ளம்” என்பது மாணிக்கவாசகர் வாக்கு, அந்தப் பரவச நிலையினைச் சொல்கின்றான்.
அந்த நிலையில் அவர்கள் பேச்சு மறக்குமாம். அது எப்படியான நிலையில் என்றால், ஆர்ப்பரித்து பறந்துவரும் வண்டு அப்படியே மலரின் தேனை உறிஞ்சிவிட்டு தன்னிலை மறந்து மயங்கிக் கிடக்கும் அல்லவா? அப்படி மயங்கிக் கிடக்கும் மனநிலையில் இருப்பார்கள்.
இப்படி கண்ணீரோடும் பரவசத்தோடும் மதிமயங்கிய நிலையில் சரியாக பேசக்கூட முடியாத பித்து நிலையில் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் உன் அடியார்கள். ஆனால் அந்த பித்து நிலைகூட நீ தரும் நல்வழியே என்கின்றார்.
இப்பாடல் அன்னையின் மேல் பக்தி கொண்ட ஒருவன் முழுவதும் எப்படி அவள் நினைவிலே யோகியாகிவிடுவான் என்பதைச் சொல்கின்றது.
யோகிகள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் யோகத்தில் அமர்ந்திருக்கும் போது தன்னிலை மறப்பார்கள். அவர்களின் அதிபரவச நிலையில் கண்கள் திறக்கக் கூட முடியா அளவு அறிவிழந்து மானிட உணர்வுக்கு அப்பால் இருப்பார்கள்.
அந்த ஆனந்த நிலையில் அவர்கள் அந்த ஞானப் பரம்பொருளின் சுடரொளியினை தரிசிப்பார்கள். அப்போது அமிர்தம் அருந்திய மகிழ்வில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் ஆன்மா அந்தப் பிரபஞ்சப் பெரும் சக்தியுடன் கலக்கும். அந்த நேரம் பெரும் மவுனமும் மகிழ்வும் பரவசமும் அவர்களை ஆட்கொள்ளும்.
எதைத் தேடி இந்த ஆன்மா இத்தனை காலம் ஏங்கியதோ, எதை அடைந்தால் இதற்கு மேல் எதுவுமில்லை; எதையும் தேட இனி இல்லை. இதைத் தாண்டி எதுவுமில்லை என முழு மகிழ்வு கொள்ளுமோ அந்நிலைதான், அந்த இரண்டறக் கலக்கும் நிலை அது.
இந்த இரண்டறக் கலக்கும் நிலையினைத்தான் பித்து நிலை என்கின்றார். சிவனோடு இப்படி அடியார்கள் கலந்து விடுவது உண்டு, அதனாலே அவருக்கு “பித்தன்” என்ற பெயரும் உண்டு.
இன்னும் ஆழமாக இப்பாடலைச் சொல்ல யோகத்தின் சூட்சுமங்களை சொல்லலாம். யோகத்தில் யோகிக்கு ஆறு சக்கரங்களும் துலங்கினால் என்னென்ன பரவசம் ஏற்படுமோ அவன் எந்த நிலையினை அடைவானோ அதுதான் இப்பாடல் சொல்லும் அடையாளங்கள்.
அன்னை எல்லா சக்கரங்களிலும் குடிகொண்டிருக்கின்றாள். அவளை வணங்கினால் அவள் நினைவிலே மூழ்கினால் அந்த சக்கரமெல்லாம் துலங்கி எல்லா வகை சக்தியும் ஞானமும் பெற்று பிரபஞ்சத்தில் கலந்து விடுவார்கள். பேரானந்தத்தில் திளைப்பார்கள் என்பது இந்த பாடலின் மறைபொருள்.
லலிதா சஹஸ்ர நாமம் அன்னையினை “குலாம்ருதைக ரஸிகாயை” என்கின்றது. அதற்கு ஸஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அம்ருதம் எனப் பொருள். அன்னை அழியாத ஆனந்தம் தரும் அமிர்தம் தருபவள் எனப் பொருள்.
இன்னும் அவளை “ஸுதாஸாராபி வர்ஷிண்யை” என்கின்றது. ‘ஸுதா’ எனும் அமிருதத்தை (ஸஹஸ்ராரத்திலிருந்து எல்லா நாடிகளிலும்) பெருகும்படி செய்பவள். 72 ஆயிரம் நாடி வழி ஓடி பரவசம் தரும் அமிர்தத்தை தருவாள் என்கின்றது.
ஸௌந்தர்ய லஹரியின் இரு பாடல்களைச் சொன்னால் இப்பாடல் புரியும். ஆதிசங்கரர் அருளிய அப்பாடலில் அன்னையின் அருளால் என்னென்ன யோகசக்தி கிடைக்கும், சக்கரங்கள் எப்படித் துலங்கும் என்பதைச் சொல்கின்றார். சௌந்தர்ய லஹரியின் ஒன்பதாம் பாடல் இதோ.
“மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோ(அ)பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே”
மூலாதாரே – மூலாதாரத்தில்
மஹீம் – பூமி (தத்துவத்தையும்)
மணிபூரே – மணிபூரத்தில்
கம் அபி – ஜல (தத்துவத்தையும்)
ஸ்வாதிஷ்ட்டானே – ஸ்வாதிஷ்ட்டானத்தில்
ஸ்திதம் – இருக்கும்
ஹுதவஹம் – அக்னி (தத்துவத்தையும்)
ஹ்ருதி – இருதயத்தில் (அநாகதத்தில்)
மருதம் – வாயு (தத்துவத்தையும்)
உபரி – அதற்கு மேல் (விசுத்தியில்)
ஆகாச – ஆகாச (தத்துவத்தையும்)
ப்ரூ மத்யே – புருவ மத்தியில் (ஆஜ்ஞா சக்ரத்தில்)
மனோ (அ)பி – மனஸ் (தத்துவத்தையும்)
ஸகலம் குல பதம் அபி – இவ்வாறாக (சுஷும்னா மார்க்கத்திலுள்ள) எல்லாச் சக்கரங்களையும்
பித்வா – பிளந்து கொண்டுபோய் (ஊடுருவிச் சென்று)
ஸஹஸ்ராரே பத்மே – ஆயிரம் தளங்களுள்ள கமலத்தில்
ரஹஸி – ரகசியமான இடத்தில்
பத்யா ஸஹ – (உனது) பதி (சதாசிவ) சகிதமாக
விஹரஸே – கூடி மகிழ்கிறாய்.
அதாவது தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலுள்ள ஜலதத்துவத்தையும், ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருக்கும் அக்னி தத்துவத்தையும், இருதயத்தில் அநாகத சக்ரத்திலுள்ள வாயு தத்துவத்தையும், விசுத்தி சக்ரத்திலுள்ள ஆகாச தத்துவத்தையும் புருவங்களிடையே ஆஜ்ஞாசக்ரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும் பிளந்து கொண்டுபோய், மேலே ஆயிரம் தளங்களுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் ரகசியமான இடத்தில் நீ உன் கணவனுடன் (ஸதாசிவன்) கூடி மகிழ்கிறாய் என்பது பொருள்.
இது குண்டலினி சக்தியின் ஏறுமுகம் ஆரோஹணம் சொல்லப்படுகிறது. யோக நிலையை கீழிருந்து மேலாக, மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்திற்கு அன்னை சென்று பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தை பெருக்கி அதனால் உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் நனைக்கிறாள்.
அப்படியே 10ம் பாடலையும் காணலாம்.
ஸூதா-தாராஸாரைஹி சரணயுகலாந்தர்-விகலிதைஹி
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸஹ |
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி ||
சரண யுகள அந்தர் விகலிதைஹி – திருவடிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும்
ஸூதா தாரா ஆஸாரைஹி – அம்ருத தாரையின் பிரவாகத்தால்
ப்ரபஞ்சம் – (ஐம்பூதங்களால் ஆன) உடலிலுள்ள (நாடிகள் எல்லாவற்றையும்)
ஸிஞ்சந்தீ – நனைத்தவளாய்
ரஸ ஆம்னாய மஹஸஹ – அம்ருத கிரணங்களை பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து
ஸ்வாம் – உனது
பூமிம் – இயற்கையான இருப்பிடமான (மூலாதாரத்தை)
புனஹ அபி – மறுபடியும்
அவாப்ய – அடைந்து
புஜக நிபம் – புஜங்கத்தை (பாம்பைப்) போல
அத்யுஷ்ட வலயம் – வலய வடிவமாக (குண்டல வடிவாக)
ஸ்வம் – உன்னுடைய
ஆத்மானம் – உருவத்தை
க்ருத்வா – செய்து கொண்டு
குஹரிணி – சிறிய துவாரமுள்ள
குலகுண்டே – மூலாதார குண்டத்தில் (சக்கரத்தில்)
ஸ்வபிஷி – உறங்குகிறாய்.
தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள எழுபத்திரெண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு அம்ருத கிரணங்களை பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து உனது இயற்கையான இருப்பிடமான மூலாதாரத்தை மறுபடியும் அடைந்து உன்னுடைய உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக செய்து கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்கரத்தில் உறங்குகிறாய்.
இது யோக நிலையை மேலிருந்து கீழாக அவரோஹணமாக, சஹஸ்ராரத்திலிருந்து மூலாதாரத்திற்கு அன்னை வருவதையும், வந்து குண்டலினிசக்தியாக உறங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பாடல்களைத்தான் தழுவி கம்பன் பாடுகின்றார்.
அன்னையே உன் திருவடியில் இருந்து வரும் அமிர்தத்தால் உடலின் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளும் நனைகின்றன. அந்த பரவசத்தால் உடல் புளகாங்கிதம் அடைகின்றது. மனம் நிறைகின்றது, பெரும் பேரானந்தம் மனதையும் உடலையும் நிரப்புகின்றது.
அப்போது அந்த ஏகாந்த சூழலில் இந்த ஆத்மா பிரபஞ்சத்தில் கலக்கும். அந்த பேரானந்தத்தில் வார்த்தை வராது, உணர்வு வராது, பெரும் நிம்மதியும் நித்திய மகிழ்வும் மனமெல்லாம் சிந்தையெல்லாம் நிறையும். அந்த நிறைவு மனம், உடல், வாழ்வு, மனம், அறிவு, சிந்தை உலகம் என எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபஞ்சம் தரும் அந்த பெரும் ஆனந்தம் தீரா ஆனந்தம் என்பது அன்னையால் மட்டுமே சாத்தியமாகும்.
அன்னைதான் எல்லாமே அருள்பவள். அவளே ஒருவனை யோகி ஆக்குவாள். யோக ரகசியங்களை போதிப்பாள். அவள் அருளாலேயே அவள் குடியிருக்கும் சக்கரமெல்லாம் துலங்கி, சக்தி பெற்று அந்த சக்தி பிரபஞ்ச சக்தியுடன் ஆத்மாவினை இணைக்கும். அப்போது பெரும் ஞானநிலை பேரானந்தமாய் வாய்க்கும். அன்னை வழியாகவே அது சாத்தியம் என்கின்றான் கம்பன்.