சரஸ்வதி அந்தாதி : 26
சரஸ்வதி அந்தாதி : 26
“வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே”
இப்பாடல் இப்படி பிரிந்து வரும்.
“வைக்கும் பொருளும் இல் வாழ்க்கைப் பொருளும் மற்ற எப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே”
இனி பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம்.
“வைக்கும் பொருளும் இல் வாழ்க்கைப் பொருளும் மற்ற எப்பொருளும்” , அதாவது உலகின் எல்லா செல்வமும் சங்கநிதி பதுமநிதி என எல்லா செல்வமும், பாதுகாப்பாக வைக்கபடும் எல்லா செல்வமும், இல் வாழ்க்கைக்கு பயன்படும் கால்நடை செல்வம், மனித செல்வம், இதர வகையான வீடு சொத்து போன்ற செல்வங்களும் எனப் பொருள்.
அடுத்து “பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்” அவை எல்லாம் இந்த உலகில் அழியகூடிய செல்வங்கள் அன்றி கால காலமாக இருக்கும் செல்வம் அல்ல என்பது பொருள்.
அடுத்து “மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்” எல்லோரும் விரும்புவதும் அழியாததும் சிறப்பானதுமான செல்வம் எது என்றால் எனப் பொருள்.
அடுத்து “உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே” அதாவது உய்வு எனும் உயர்வை கொடுப்பதும் முக்தி அடைய வழி செய்வதும் அன்னை கலைமகள் உரைக்கும் பொருள் செல்வமே அதாவது கல்விச் செல்வமே என்பது பொருள்.
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“அன்னையே உலகம் பூட்டி வைக்கும் செல்வம் அழியும், வீட்டில் குவித்து வைக்கும் செல்வம் அழியும், இவ்வுலகில் செல்வம் என கொண்டாடப்படும் எதுவும் நீண்டு வராது. அதுவும் அதை கொண்டிருப்போரும் அவர்களின் செல்வாக்கும் அழியும்.
ஆனால் உன் அருள் பெற்று பெரும் கல்வி செல்வம் பெற்றால் அச்செல்வம் அழியாது கால காலத்துக்கு அது நிலைத்திருக்கும். அன்னையே நீதான் அழியா செல்வம் தருபவள்” என மருகி பாடுகின்றான் கம்பன்.
இவ்வுலகில் பாடுபட்டு தேடும் செல்வமும், உறவும், அதிகாரமும் நிலைக்காது. சரஸ்வதியின் அருளில் கிடைக்கும் செல்வமே நிலைக்கும் என்கின்றான்.
அதனாலே வள்ளுவன் கல்வி எனும் ஒரு அதிகாரமே இயற்றிப் பாடினான்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
எனத் தெளிவாகச் சொன்னான்.
“கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என சொன்ன ஒளவையின் போதனையும் அதுதான்.
“மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு”
என ஒளவை சொன்னது அதைத்தான்.
ஆனால் இந்த கல்வி என்பது முயன்றோர்க்கு வாய்க்கும் என்றாலும் அதை ஞானத்தோடு பெறுவது கலைமகள் அருள்.
இந்த அருளைத்தான், அன்னை கொடுக்கும் ஞானமும் கலையும் கொண்ட கல்வினைத்தான் கம்பன் அழியாப் பொருள் என்கின்றான்.
அது முழுக்க உண்மை, முக்கால உண்மை.
பெரும் அரசுகள் இருந்த உலகமிது, பெரிய பெரிய பணக்காரரும் நிலச் சுவாந்தார்களும், பெரும் பெரும் அதிகாரமிக்கவர்களும் இருந்த, இருக்கும் உலகம் இது.
உலகையே ஆளும் அரசர்களும், உலகையே வாங்கும் செல்வம் கொண்ட தனவந்தர்களும் இருந்தார்கள், இன்னும் வருவார்கள்.
ஆனால் யார் வரலாற்றில் நிலைத்தார்கள் என்றால் அன்னையின் அருளால் யார் அழியாக் காவியங்களை, கலைகளை அழியா நூல்களைத் தந்தார்களோ அவர்கள் நின்றார்கள்.
அது ஒரு வரம், அது நிச்சயம் அன்னையின் வரம், தெய்வத்தின் தனி வரம்.
அரசனின் மகன் அரசனாகலாம், பணமும் தனமும் வழி வழி வரலாம். ஆனால் கல்வியும் கலையும் அப்படி அல்ல.
அது அவளால் தேர்ந்து கொள்ளப் பட்டவருக்கே கிடைக்கும் தனிவரம், அந்த வரம் பெற்றோர் எக்காலமும் நிலைத்திருப்பர்.
மன்னர் அழிவர், அவர் அரசு அழியும் ஆனால் அங்கே நிலைத்த புலவரும் கவிஞரும் அழிவதில்லை.
வீரர் அழிவர், அவர் வீரம் அழியும், செல்வர் அழிவர் அவர் செல்வம் சிதறும், மாளிகை அழியும் அரசுகள் சரியும், தர்பார்கள் மாறும். ஆனால் நல்ல காவியம் ஒருகாலமும் மறைவதில்லை.
காளிதாசன் காலத்தில் இருந்த பணக்காரன் யார் எனத் தெரியாது, அவன் காலத்தில் ஆண்ட பெரும் அரசர்கள் என்ன ஆனார்கள் தெரியாது.
ஆனால் காளிதாசன் நிலைத்து நிற்கின்றான்.
அப்படி எண்ணற்ற தெய்வ அருள் பெற்ற தனி புலவர்களை காணமுடியும், அவர்கள் அரசன் அல்ல அவர்கள் பணக்காரன் அல்ல. மாறாக அன்னை அருளால் ஞானம் பெற்று அழியா இடம் பிடித்தார்கள்.
ஆதிசங்கரர் முதல் கம்பன் வரை இன்னும் ஆண்டாள் முதல் குமரகுருபரர் வரை எத்தனையோ பேரை சொல்ல முடியும்.
மகாகவி பாரதி அப்படி உருவாகி வந்தவன், “சுடர்மிகு அறிவுடன் என்னை படைத்து விட்டாய்” என ஒப்புக்கொண்டவன்.
அவன் இந்த பாரத தேசம் இருக்குமளவும் இருப்பான், வணங்கப்படுவான். வாழும் காலத்தில் அவன் எப்படி இருந்தான் என்பதல்ல, இன்றும் என்றும் வணங்கப்படுகின்றான் என்பதுதான் கவனிக்கத்தக்கது.
ஆம், அன்னையின் அருள் பெற்றவர்கள் காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள், அவர்கள் காவியம் வழி, அவர்கள் தந்த படைப்புகள் வழி நிலைத்திருப்பார்கள்.
அவர்கள் காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள், எந்த நிலையிலும் அவர்களுக்கோ அவர்கள் படைப்புக்கோ காவியங்களுக்கோ போதனைக்கோ அழிவே இல்லை.
ஆம், உலகில் எல்லாம் அழியும், அன்னையின் அருள் பெற்றோரும் அவரின் படைப்புக்களும் ஒருகாலமும் அழியாது, அதுதான் பெரும் செல்வம் அழியாத செல்வம் அதைத் தருபவள் அன்னை என்கின்றான்.
இதனாலேயே கல்விச் செல்வத்தை அதாவது ஞானமான கல்விச் செல்வத்தைக் கொடுக்கும் கலைமகளை முதலில் வைத்து வழிபாட்டார்கள் இந்துக்கள்.
ஞானமான அந்த கல்வி கொடுக்கும் அடையாளம்தான் அழியா செல்வம், அதுதான் ஒருவனையும் அவன் அறிவு செல்வத்தையும் காலமெல்லாம் நிறுத்தும். அன்னை அதனை தருவாள் என்றார்கள்.
அதை சரஸ்வதி கையில் நூலைக் கொடுத்துச் சொன்னார்கள். கம்பன் அதை பாடுகின்றான், எல்லா வகை கலையும் கல்வியும் தருபவளே அழியாச் செல்வம் தருபவளே என்கின்றான்.
ஒரு அரசன் ராஜ்ஜியத்தை இன்னொருவன் அபகரிப்பான், செல்வந்தன் செல்வன் களவுபோகும். ஆனால் களவாட முடியாத செல்வம் அன்னை கொடுக்கும் அறிவுச் செல்வம்.
அந்த செல்வம் இருக்கும்போதும் ஒருவனுக்கு பெயரும் புகழும் செல்வாக்கும் கொடுக்கும், அவன் மறைந்த பின்னாலும் காலமெல்லாம் நிற்கும் பெரும் அடையாளத்தை அழிவே இல்லா பெரிய இடத்தை கொடுக்கும்.
சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் பாடுகின்றார்.
“கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலா-தப ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசித் அருணா மேவ பவதீம் |
விரிஞ்சி பிரேயஸ்யா: தருணதர ச்ருங்கார லஹரீ
கபீராபி: வாக்பி: விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ ||”
கவீந்த்ராணாம் – கவிகளின்;
சேத: கமல வந – மனமாகிய தாமரை வனத்திற்கு
பால ஆதப ருசிம் – இளம் சூரியன் போல் ப்ரகாசிப்பவளும்
அருணா மேவ – அதனால் அருணா எனப் பெயர் பெற்றவளும் ஆகிய
பவதீம் – உன்னை
யே – எந்த
கதிசித் – சில
ஸந்த: – புண்ணியவான்கள்
பஜந்தே – பூஜிக்கிறார்களோ
அமீ – அவர்கள்
விரிஞ்சி பிரேயஸ்யா: – ப்ரம்மாவின் ப்ரியமான சரஸ்வதியின்
தருண தர – செழிப்பு மிக்க
ச்ருங்கார லஹரீ- சிருங்கார ரஸத்தின் ப்ரவாகம் போன்ற
கபீராபி: – கம்பீரமான (ஆழமான)
வாக்பி: – சொல் வன்மையால்
ஸதாம் – சாதுக்களுக்கு
ரஞ்ஜனம் – மகிழ்ச்சியை
விதததி – அளிக்கிறார்கள்.
அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும் எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யௌவன சிருங்கார ரஸத்தின் ப்ரவாகம் போன்ற கம்பீரமான சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள் என்பது பொருள்.
அன்னையைப் போற்றும் லலிதா சஹஸ்ர நாமங்கள்.
கலாலாபா அதாவது மனதுக்கு ரம்யமாக கலைநயத்துடன் உரையாடுபவள்,
காவ்ய கலா அதாவது கவி-காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்,
வாக்வாதிநீ அதாவது சொல் அல்லது வாக்கின் ஆதாரமாகத் திகழ்பவள் (சொல்லின் மூலக் காரணம்),
ப்ரஹ்மாணீ அதாவது பிரஹ்ம தத்துவத்தின் பெண் அம்சம்,
சதுர்வக்த்ர மனோஹரா என்றால் அழகிய நான்கு முகங்கள் கொண்டவள்,
காவ்யாலாபவிமோதினி அதாவது காவியங்கள் உரைக்கப்படுவதைக் கேட்டு ஆனந்திப்பவள்,
ரசஜ்ஞா அதாவது கலைககளின் தன்மை அறிந்து அதனை தன் வயப்படுத்தியவள்,
ரஸசேவதி அதாவது கலைககளின் கருவூலம் என்றும் அவள் அழைக்கப் படுகின்றாள்.
காளிதாசன் தன் பிரசித்தியான சியாமளா தண்டகத்தில் பாடுகின்றான்.
“பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம்
ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்
பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே தஸ்ய
வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர்
பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா:
யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே. கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத”
தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம் செய்பவருக்கு எதுதான் கிட்டாது.
இன்னும் பாடுகின்றான்.
“தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ,
தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம் ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்
மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம்,
பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம”
சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள். அவருக்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!
எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.
குமரகுருபரர் தன் சகலகலாவல்லி மாலையில் சொல்கின்றார். மிக முக்கியமாக மொகலாய அவையில் சுல்தான் தாரா ஷிக்கோவிடம் காசி ஆலயத்தை மீட்க வாதிடும் வரத்தைக் கேட்டுப் பாடுகின்றார்.
அவையில் கல்வியும் ஞனமும் தைரியமும் கொண்டு வாதிடவும், காசிநாதனை மீட்கும் ஞானத்தை அறிவை தந்திடவும், அந்த அவையில் மன்னனுக்கு சரியாக அமர்ந்து பேசவும் வேண்டுகின்றார்.
“சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.
கலைமகளே, கல்வியாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவர்கள், மென்மையான தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகளுடைய அருள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஒரு போதும் வருந்த மாட்டார்கள், காரணம் ஞானமான கல்வி கிடைத்தால் எல்லாம் கிடைத்தது போன்றது அது அழியாதது.
அப்படிப்பட்ட கல்வியாகிய பெருஞ்செல்வத்தை வழங்குகின்ற பெருமாட்டியே, எனக்குச் சொல் வலிமையையும், அனைத்தையும் கவனித்து நினைவில் கொள்கின்ற ஆற்றலையும், பாடல்களைச் சொல்லவல்ல நல்ல திறனையும் வழங்கி, என்னைத் தங்களுடைய அடிமையாக்கிக் கொள்வாய்.
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறேன் என்கின்றார்.
இன்னும் பாடுகின்றார்.
“தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.”
கலைமகளே, கடல்போன்ற வடமொழி நூல்களையும், சிறந்த, செழுமையான தமிழ் நூல்களையும் தொண்டர்களுடைய சிறந்த நாவில் நிலைக்கச்செய்து காப்பவரே, கருணைக் கடலே, அனைவரும் விரும்புகின்ற வகையில் சிறந்த பாடல்களை இயற்றும் திறமையும், பல துறைகளில் தோய்ந்த கல்வியும், சுவையான சொற்களுடன் பேசுகின்ற திறமையும் எனக்குள் உன்னையன்றி யார் தரமுடியும்?
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
இன்னும் பாடுகின்றார், அன்னை அரசனுக்கு இணையான இடம் தருவாள் என உருகிப் பாடுகின்றார்.
“மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.
கலைமகளே, இவ்வுலகைப் படைக்கும் பிரம்மரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும் உன்னைப் போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?
மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக் குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப் பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருள்வாய்.
அப்படி ஆதிசங்கரரும் காளிதாசனும், குமரகுருபரரும் பாடியதை கம்பனும் பாடுகின்றான்.
ஆம், அன்னையே எல்லா கல்விக்கும் ஞானத்துக்கும் அடிப்படையான அருளைத் தருபவள். அவளாலேயே ஞானம் வாய்க்கும், அவளாலேயே அழியாப் படைப்புக்களை தரமுடியும்.
அந்த ஞானத்தாலே உலகில் அழியாத இடமும் அழியாச் செல்வமும் வாய்க்கும், பின் நித்திய செல்வமான முழு ஞான நிலையினையும் அந்த வரமே தரும்.
அன்னையின் அருளால் கல்வி வாய்க்கும், ஞானம் வாய்க்கும், காலம் கடந்து நிற்கும் புகழ் வாய்க்கும், அழியா நிலை கிடைக்கும், உச்சமாக முக்தி கிட்டும் மோட்ச பாக்கியம் கிட்டும் எனப் பாடி உருகுகின்றான் கம்பன்.