சரஸ்வதி அந்தாதி : 27

சரஸ்வதி அந்தாதி : 27

“பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே”

இப்பாடல் இப்படி பிரிந்து வரும்.

“பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோ
மருளாத சொற்கலை வான் பொருளோ பொருள் வந்துவந்தித்(து)
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியா‍யாய் அறியாதவருக்(கு)
இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ” என்பது ஒரு ஆழ்ந்த தத்துவம்

அறம், பொருள், இன்பம் என உலகில் மூன்று விஷயங்கள் உண்டு. பொருட்செல்வம் இருந்தால் அறம் செய்யலாம், இன்பத்தை அனுபவிக்கலாம். அப்படியான பொருட்செல்வம் பெரிய பொருளா? என்கின்றான் கம்பன்.

அடுத்த வரி “மருளாத சொற்கலை வான் பொருளோ பொருள் வந்து வந்தித்(து)” என வருகின்றது. அதாவது குற்றமில்லா சொல்லைக் கொண்டிருக்கும் கல்வி மிகப்பெரிய பொருள் அல்லவா? அதனைத் தந்து வணங்க வைத்து எனப் பொருள்.

அடுத்து “அருளாய் விளங்குமவர்க்கு ஒளியா‍யாய் அறியாதவர்க்கு” அதாவது அப்படி கல்வியருள் பெற்று விளங்கும் அவருக்கு ஒளியாகவும், அறியாதவர்க்கு எனப் பொருள்.

கடைசி வரி “இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே” அதாவது அறியாதவர்க்கு இருளாய் விளங்ககுபவளே. ஜொலிக்கும் மேனி கொண்ட அன்னையே என்பது பொருள்.

ஆக பாடலின் பொருள் இதுதான்

“இந்த உலகில் எந்த இரு பொருளைக் கொண்டு இன்னும் இரு பொருட்களை வாங்க முடியுமோ, அந்த செல்வம் என்ன பெரிய செல்வமா?
இல்லை.
எச்செல்வம் குற்றமில்லா சொற்களைக் கொண்ட கல்வியோ, தெளிந்த அறிவைக் கொண்ட கல்வியோ அதுதான் வானளவு பெரும் செல்வம், அந்த செல்வத்தை தருபவள் அன்னை.

அவள் அறிவு கொண்டோருக்கு நல்ல ஒளியாக நிற்கின்றாள். அறியாத பதர்களுக்கோ அவள் தென்பட மாட்டாள் அந்த ஜொலிக்கும் மேனி கொண்ட அன்னை என்பது பாடலின் பொருள்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் அவள்

அந்தர்முக சமாராத்யா அதாவது உள்முகமாக த்யானிக்கும் ஆத்மஞானிகளால் ஆராதிக்கப்படுவாள் என்றும்

பஹிர்முக சுதுர்லபா அதாவது உலகாய செயற்பாடுகளை உடையவருக்கு அவள் எளிதில் விளங்கமாட்டாள் என்றும் போற்றப்படுகிறாள்.

இந்தப் பாடல் கடந்த பாடலின் தொடர்ச்சியாக வருவது.

உலகில் பொருள் செல்வமே பெரும் செல்வம், அதை கொண்டு எல்லா இன்பங்களை வாங்கலாம் தர்ம காரியங்கள் அனைத்தும் செய்யலாம், உலகுக்கு பொருளே பிரதானம் என்பது உலக வழக்கு.

கம்பன் அதை மறுத்துச் சொல்லி அன்னை வழங்கும் அறிவே, கல்வி செல்வமே மிகப்பெரிய செல்வம் அந்த அருளை அன்னை தருவாள் என்கின்றான்.
அதுவும் இன்னும் நுணுக்கமாக பொருள் பெற்றவன் தெய்வத்தை காணமுடியுமா? பல விஷயங்களை அறியமுடியுமா? முடியாது.

மாறாக அறிவுள்ளவன், தெளிந்த ஞானமும் கல்வியும் கொண்டவனுக்கே அன்னை தெரிவாள். அவள் அருளாலேதான் அவளைக் காணமுடியும். பொருளுள்ளவன் என்றாலும் அறிவில்லா மனதில் அவள் தோன்ற மாட்டாள் என்கின்றான்.

ஆம், அன்னையின் அருளாலே அறிவு கிடைக்கும். கல்வி கிடைக்கும், நல்ல அறிவும் ஞானமும் தெய்வத்தை உணர வைக்கும், தனி செல்வாக்கைத் தரும்.

உலகில் பொருளைக் கொண்டு மற்ற இன்பங்களை, பெருமைகளை வாங்கலாம். ஆனால் கல்வி அறிவினை வாங்க முடியாது.

அந்த ஞானம் கடையில் கிடைக்காது. அதை யாரும் இன்னொருவருக்கு கொடுத்துவிட முடியாது, அடித்து மிரட்டி வாங்க முடியாது, அரசன் ஆணையிட்டாலும், கோடிகளைக் கொட்டினாலும் கிடைக்காது.

உலகில் விலை மதிப்பில்லா விஷயங்களில், அதிகாரத்தாலோ பொருளினாலோ வாங்கமுடியா விஷயங்களில் அது ஒன்று.

மழைபோல் காற்றுபோல் அது ஒரு வரம், தெய்வம் மட்டும் தரும் வரம்.

அந்த வரம் அன்னை தருகின்றாள். அவளால் அந்த வரம் கிட்டும். அந்த வரத்தால் அவளைக் காணலாம். அவள் அப்படியான தனி வரமும் சக்தியும் தருபவள். சக்திவாய்ந்த பொருட்செல்வம் நெருங்கமுடியா பெரும் வரமெல்லாம் அவள் தருவாள் என்கின்றான் கம்பன்.

கல்விச் செல்வமே பெரும் செல்வம். அந்த செல்வத்தை அன்னை மட்டுமே தருவாள். யாராலும் தர முடியாததும், வம்சவழி வராததும், களவாட முடியாததும், பெரும் பெரும் செல்வாக்கினை தருவதும், எல்லோரும் வணங்கத்தக்க நிலையினைத் தருவதும் அந்த பெரும் செல்வம் என்கின்றான்.

தனிவரமாக அன்னை அருளால் மட்டும் கிடைக்கும் பெரும் சக்தியின் வரம் அது.

“கேடில் விழுச் செல்வம் கல்வி” என்பது வள்ளுவன் வாக்கு.

பிற செல்வங்கள் நீராலும் நெருப்பாலும் அழியக் கூடியன. ஆனால், கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது. வெந்தழலால் வேகாது, கொள்ளையிட முடியாது, கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகிலுள்ள செல்வங்களில் பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ள முடியாத ஒரே செல்வம் இக் கல்விச் செல்வமாகும்.

“கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” அது மன்னனும் பெறாத பெரும் சிறப்பு.

பிற செல்வங்கள் ஒருவனிடம் சேர்ந்தால், அவனிடம் நிலைத்து நில்லாமல் அவனை விட்டு விலகி ஓடிப்போய் விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால் அவன் காலமட்டும் அவனோடே இருக்கும்.

பொருட் செல்வம் அனைத்தையும் அதை உடையவனே வழி நடத்துவான். கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே தன்னை உடையவனை வழி நடத்தும் அதிசயத்தைச் செய்யும்.

கல்வி செல்வம் இல்லா எந்த செல்வத்தின் பலனையும் முழுக்க அனுபவிக்க முடியாது, காவல் காக்கவும் முடியாது.

வயலில் மாடுகளின் முன்னே மக்களை வைத்து ஒப்பு நோக்குதலும் உண்டு. ஆனால் கல்லாதவன் முன்னே கற்றவரை வைத்து ஒப்பு நோக்குதல் எங்கும் எப்போதுமில்லை.

விதைக்காதபோது விளைவும், சமைக்காதபோது உணவும், உழைக்காதபோது பலனும் இல்லாததுபோல கல்லாதபோது சிறப்பும் இல்லை.

அன்னையின் அருள் இல்லாதவன் அறிவும் கல்வியும் மண்ணுக்குள் இருக்கும் நீர்போல் யாரும் அறியாதது.

அறிவு இல்லாதவர் என்று எவரும் எங்கும் இல்லை. ஆனால், அதை வளர்த்து ஒளிவீசச் செய்வது அன்னையின் அருளே.

லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும். அவள்

அஜ்ஞான த்வாந்ததீபிகா அதாவது அஞ்ஞானமெனும் இருளை அகற்றும் ஒளிவிளக்காக சுடர்விடுபவள்.

பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்.

ஞானதா என்றால் அறிவை அருள்பவள்.

இதைத்தான் பாடுகின்றான் கம்பன்.

ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் இதே அர்த்தத்தில் பாடுகின்றார்.

அவித்யானாம் அந்தஸ்திமிர-மிஹிர த்வீபந்கரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக மகரந்த ச்ருதிஜரீ |
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி||

(உன்னுடைய பாத தூளியானது)
அவித்யானாம் – அஞ்ஞானிகளுக்கு
அந்தஸ்திமிர-மிஹிர த்வீபந்கரீ – இருளை அகற்றும் சூரியன் போல் அறியாமை என்னும் இருள் அகற்றி
ஜடாநாம் – மந்தபுத்தியுள்ளவருக்கு
சைதன்ய-ஸ்தபக மகரந்த ச்ருதிஜரீ – ஞானமாகிய கற்பக மரத்தில் பூவிலிருந்து பெருகும் மகரந்த ரஸமாகவும்
தரித்ராணாம் – ஏழைகளுக்கு
சிந்தாமணி குணநிகா – சிந்தாமணிக் குவியலைப் போன்றதும்
ஜன்மஜலதௌ – பிறவிக்கடலை
நிமக்னானாம் – மூழ்கி மேலே வர இயலாது தவிப்பவர்க்கு
முரரிபு வராஹஸ்ய – விஷ்ணுவின் யக்ஞ வராஹ மூர்த்தியின்
தம்ஷ்ட்ரா – கோரைப் பற்களைப் போன்றும்
பவதி – விளங்குகின்றன.

பிறவிப் பெருங்கடலை விட்டு முக்தி பெற விரும்பும் முமுக்ஷுக்களுக்கு மட்டுமல்லாமல், மாந்தராய் பிறவி பெற்றவர்களுக்கும் தேவையான தெளிந்த ஞானம், கல்வி, என யாவற்றையும் அருளி, பின் செல்வம் அருளி இறுதியில் அவர்களுக்கு வீடுபேற்றினையும் அருள அம்பிகையாலேயே முடியும் அதுவும் அவள் பாத தூளிகளே போதுமானது.

காளிதாசன் தன் சியாமளா தண்டகத்தில் இதைச் சொல்வான்.

“பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே”

அதாவது அன்னையே நீ பக்தியுடன் பணிபவர்களுக்கு மேலான கல்வி செல்வத்தை அளிக்கிறாய். யோகிகளின் மனத்தில் ஒளிர்கிறாய்! உனது ஆற்றலால் வேதங்களுக்கு ஒளி கொடுக்கிறாய்! ஆடல், பாடல், கல்வி, குறும்பு இவற்றில் விருப்பம் கொண்ட கிருஷ்ணனால் சிறப்பாக வழிபடப்படுகிறாய்! பக்தி நிறைந்த மனத்துடன் பிரம்ம தேவனால் துதிக்கப்படுகிறாய்! உலகைக் களிக்கச் செய்கின்ற வாத்தியங்களை வாசித்து வித்யாதரர்களால் போற்றப்படுகிறாய்.

அன்னையே எல்லாவற்றுக்கும் மூலம் என்கின்றான் காளிதாசன்.

அன்னையின் அருள்தான் கம்பனை மன்னர்கள் அவையில் சேர்த்து எல்லோரும் அவனை வணங்கச் செய்தது.

அவளின் அருள்தான் காளிதாசனை போஜமன்னன் அவையில் எல்லோரையும் போற்ற வைத்தது.

அப்படி பலரை தன் அருளால் மன்னர்கள் அவையில் பெரும் செல்வாக்காய் வலம் வரச் செய்த அன்னை குமரகுருபரரையும் மொகலாய சுல்தான் தாரா ஷிக்கோ முன் சிங்கத்தின் மேல் அமர வைத்து பலமொழி பேச வைத்து மன்னனை அதிரச் செய்தவளும் அவள்தான்.

அப்போது குமரகுருபரர் பாடிய சகலகலாவல்லி மாலை பாடல் பிரசித்தியானது, அதன் வரிகள் சில‌.
“தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.”

அகஸ்தியர் தன் சரஸ்வதி ஸ்தோத்திரத்தில்

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

ஞான, விஞ்ஞான உருவானவளே, அறிவின் முழு உருவானவளே உனக்கு என் வந்தனங்கள். பலவித சாஸ்த்திரங்களின் சாரமானவளே, இவ்வுலகில், அண்டத்தில் பல்வேறு வடிவங்களாகவும் விளங்குபவளே உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

என்று அவள் தான் அனைத்து அறிவு, வடிவம் அவளே தன் பக்தர்களுக்கு அருளுகிறாள் என்கிறார்.

அன்னையே எனக்கு பெரும் கல்வியும் பெரும் அறிவும் தந்து என்னை பெரும் இடத்திற்கு உயர்த்தியவளே, பலப்பல அரிய விஷயங்களை, ஞான ரகசியங்களை எனக்கு போதித்து உயர்த்தியவளே.

மன்னரும் வியக்கும் வண்ணம் அவர்களே எனக்கு பணியும் வண்ணம் பெரும் வாழ்வும் செல்வாக்கும் தந்தவளே, உன்னைவிட பெரிய வல்ல தெய்வம் உலகில் உண்டோ என்கின்றார்.

அந்த மனநிலையில்தான் கம்பனும் பாடுகின்றான். தன் ஞானமெல்லாம் அன்னை கொடுத்து உயர்த்தியது, அவள் அருளாலே இந்த மன்னனின் அவையில் என்னால் நிற்க முடிந்தது, எல்லோரும் போற்ற பெயர் பெற முடிந்தது. எல்லாம் அவளின் கருணையால் விளைந்தது என்கின்றான் கம்பன்.