சரஸ்வதி அந்தாதி : 28

சரஸ்வதி அந்தாதி : 28

“இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே
துலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும்” முகம் பிரகாசிக்கின்றது ஒளிர்கின்றது அவர்கள் மேனி பரவசத்தால் நிறைந்திருக்கின்றது, கண்களில் நீர் வழிகின்றது.

“பழுதற்ற வாக்கும் பலிக்கும்” அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் குற்றமற்றதும் பலிக்கும் தன்மை கொண்ட அருள்வாக்காக அமையும்.

“மனமிகவே துலங்கும் முறுவல் செயக்களி கூரும்” அவர்கள் மனம் மகிழ்ச்சியால் நிரம்பும், அறிவும் தெளிவும் கிடைக்கும். ஆனந்த நிலையில் இருக்கும்.

“சுழல்புனல்போல் கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே” பெரிய வெள்ளமும் சுழலும் வந்த பின்னர் தெளியும் நீர் போல் அவர்கள் மனம் தெளிவடையும். சொல்லுக்கு அதிபதியான அன்னையினை தொழுவார்க்கே என்பது பொருள்.

ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“சொற்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் அருளை பெற்றோர்க்கு முகம் மலர்ந்து நிற்கும், உடலெல்லாம் ஆனந்த பரவசம் வரும், கண்களில் நீர் ஆனந்தமாய் வழியும், அவர்கள் சொன்ன சொல் பலிக்கும், அருள்வாக்காய் நடக்கும். காட்டாற்று வெள்ளம் ஓய்ந்தபின் தெளிவடையும் நதிபோல் அவர்கள் மனம் தெளிந்த நீரோடையாகும். அவர்கள் எப்போதும் மகிழ்விலும் ஆனந்த சிரிப்பிலும் இருப்பார்கள்.”

ஞானியர் நிலை என்ன என்பதை சொல்கின்றான் கம்பன். ஞானம் கைக்கூடியோர் எது மாயை எது நிரந்தரமானது எது சரி எது தவறு என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

அவர்கள் பிரபஞ்சத்துடன் இணைந்திருப்பதால் எப்போதும் மகிழ்வாய் ஆனந்தமாய் தெளிவாய் இருப்பார்கள். முழு பரவச நிலையில் இருப்பார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் நடக்கும், அவர்கள் வாயில் இருந்துவரும் வார்த்தைகள் பொய்க்காது.

இந்த வரம் அன்னை தருவாள் என்கின்றான். தனக்கும் அப்படி ஒரு வரம் அன்னை தந்தாள். அவளாலே நானும் ஆனந்த பரவசத்தில் முழு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றேன். அன்னையாலே என் வார்த்தைகளும் பலிக்கின்றன, சொற்குற்றம் இல்லாதவனாக விளங்குகின்றேன். என் தெளிவுக்கும் அறிவுக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லா ஞானத்துக்கும் அவளே காரணம் என்கின்றான் கம்பன்.

ஆம் அன்னையால் ஆட்கொள்ளப்பட்ட அடியார்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்கின்றான் கம்பன்.

ஞான யோகத்தின் உச்ச நிலையில் என்னென்ன தோன்றுமோ, யோகி எந்நிலையில் இருப்பானோ அந்நிலையினை சொல்கின்றான்.

உண்மையில் மானிட மனமும் ஆத்மாவும் ஒரு நிலைத்த மகிழ்ச்சியினை தேடுகின்றது. ஆனால் அந்த உண்மையான ஆனந்தம் எது என அதற்கு தெரியவில்லை. எதுவும் நிறைவினை கொடுக்காதபொழுது மனம் தேடும் அந்த சந்தோஷத்தை தேடி பல வகை சிற்றின்பங்களில் மானிட மனம் வீழ்ந்து கிடக்கும்.

இலுப்பைப்பூ சர்க்கரையிலே தேன் என்றும் மது என்றும் உணர்ந்து, ஒரு துளி நீரிலே இதுதான் கடல் என மயங்கிக் கிடக்கும் மானிட மனம்.

ஆனால் உண்மையான ஆத்ம நிறைவு, பேரின்ப நிறைவு நிலை என்பது யோகத்திலும் இறையருளில்தான் கிடைக்கும்.

இதனாலே பெரும் ஞானம் அடைந்த யோகிகள் எப்பொழுதும் கவலையற்ற பெரும் மகிழ்விலும் ஒரு பரவசமும் நிறைவும் நிறைந்த நிலையிலே இருப்பார்கள். இதற்குமேல் ஏதும் தேவையில்லை எனும் ஒரு நிறைவு அவர்களிடம் வந்துவிடும்.

அவர்கள் மரத்தடியில் அரை உடையோடுதான் கிடப்பார்கள். கையில் திருவோடு கூட இருக்காது. ஆனால் அவர்கள் ஆன்மா எல்லா சாமான்யரின் ஆன்மாவினை விட பெரும் மகிழ்ச்சியில் பிரபஞ்ச மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

எல்லாம் கடந்த ஞானப் பெரு மகிழ்வில் அவர்கள் இருப்பதால் பூமியின் இன்பங்கள் எல்லாமே அவர்களுக்கு சாதாரணமாகவே தோன்றும்.

சக்கரவர்த்தியே வந்தாலும் தள்ளி நில் எனச் சொல்லும் அந்த ஞான கர்வம் அவர்களுக்குத்தான் வரும்.

காரணம் பூமியின் லவுகீக மயக்கங்கள் அவர்களை பாதிக்காது. எல்லா மாயைகளையும் கடந்த பெரு ஞான நிலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். எது உண்மையான நிலைத்த மகிழ்ச்சி என்பதை அவர்கள் அறிந்து விட்டவர்கள்.

அன்னையின் அருளால் யோகத்தின் மிகப்பெரும் பரவச நிலையில் இருக்கும் அடியார்கள் உலகில் எங்குமில்லா ஆனந்தம் கிடைக்கப் பெற்றவர்கள் .

ஒரு மனிதனின் மிகப்பெரிய பலவீனமே அடுத்த நொடி பற்றிய அச்சம், அடுத்து என்னாகுமோ எனும் குழப்பம், நடந்ததையும் நடப்பதையும் நடக்க இருப்பதையும் எண்ணி அவன் கொள்ளும் பெரும் அச்சம்.

அச்சம் இருக்குமிடம் நிம்மதி வராது. நிம்மதி இல்லா இடத்தில் மகிழ்ச்சி வராது.

அன்னையின் அருளில் தன் கவலை தீர்ந்து முழு மகிழ்ச்சி வந்துவிடும். வெளிச்சம் வரும் இடம் இருள் அகலும், ஞானம் வருமிடம் அறியாமை அகலும், அன்னை வருமிடம் கவலை அகலும்.

இங்கே கம்பன் சொல்லும் விஷயம் அஷ்டாங்க யோகம். திருமூலர் சொல்லும் அந்த எட்டு வகை யோகம்.

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே”

இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், பிரத்யகாரம், தாரணை, தியானம் சமாதி எனும் எட்டு வகை நிலையும் கைக்கூடி தான் சமாதி நிலை எனும் பெரும் நிலைக்கு சென்று விடுவார்கள்.

பிரபஞ்சத்தில் கலந்த யோகியர் உண்ண மாட்டார்கள், நீரும் சுவாசமும் இல்லாமல் கூட அவர்களால் வாழ முடியும். குளிரும் வெயிலும் அவர்களை அசைக்காது. இதனால்தான் பனிகொட்டும் கேதார்நாத்திலும் மேலாடை இன்றி தவமிருப்பார்கள், எந்த வெயிலும் அவர்களை வாட்டவும் செய்யாது.

சத்திய மொழிகள் அவருக்கு சாத்தியம் என்கின்றார். இது மந்திர பரிபாஷை எனும் வகையில் வரும். பிரபஞ்சத்தில் கலந்துவிட்ட அந்த ஞானிகளின் மொழிக்கு எல்லாமே மயங்கும், எல்லாமே கட்டுப்படும்.

உலகில் எதையுமே தன் கட்டுபாட்டில் கொண்டு வரும் சித்த நிலையினை, தன் மொழிக்கு சகலமும் கட்டுப்படும் அதைத்தான் சொல்கின்றான் கம்பன்.

யோகியர் செயலும் நிலையும் அவர்கள் அடைந்திருக்கும் ஞானமும் பலமுகம் கொண்டது, வினோதமான காரியங்களையும் ஞானத்தையும் காட்ட வல்லது.

தன்னை மறத்தல் என்பது சுகங்களிலெல்லாம் பெரும் சுகம். உறக்கம் முதல் மது மாது தரும் போதை எல்லாமே அந்த தன்னை மறத்தல், தன் மனதின் கவலை வேதனை ஏக்கம் என எல்லாம் மறந்து களித்துக் கிடத்தல் என்பது ஒவ்வொரு மனமும் ஏங்கும் விஷயம்.

சாதாரண போதை பொருள் கொடுக்கும் அந்த சிறிய நேர மகிழ்வை விட, பெண் கொடுக்கும் சில நொடி இன்பத்தை விட பல கோடி அல்லது ஒப்பிடமுடியா ஆனந்தம் கொடுப்பது யோகப் பெருநிலை.

அந்த யோகப் பெருநிலை எனும் பேராந்த நிலையில், உள்ளமெல்லாம் ஒரு புள்ளியில் குவிந்து, அதுவும் கரைந்த ஆனந்த நிலையின் உச்சியில் நின்று சொல்கின்றான் கம்பன்.

மனமெல்லாம் மகிழ்ச்சி, உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆனந்தம், ஆத்மா நிறைந்து மயங்கி கிடக்கும் களிப்பு, சொல்லமுடியா பரவசம், இதற்குமேல் இனி இல்லை எனும் அளவு நிறைவு. ஒரு அனுபூதியான நிலை.
அந்த மாபெரும் பரவச நிலையில் பேச்சு வராது. தன்னை மறந்து தான் எங்கிருக்கின்றோம் எந்நிலையில் இருக்கின்றோம் என்பதையே சொல்ல முடியாது.

யோகத்தின் உச்சியில் கண்கள் சொருகுவதும், பரவச நிலையில் நாக்கு வாய் உள்ளே மேலோடு ஒட்டிக் கொள்வதும் இயல்பு.

அந்த ஞானப் பரவச நிலையினை விளக்குதல் என்பது யாராலும் முடியாது. அதுவும் அதனில் மூழ்கி பெரும் பரவசத்தில் இருப்பவர் அதனை தன்னால் சொல்லவே முடியாது.

அரை கரண்டி அளவு தேனை சுவைக்கும் மனிதனுக்கே அதன் பூரண சுவையினை சொல்ல முடியாது அல்லது இயலாது எனும் பொழுது இந்த அதிபரவச நிலையினை எப்படி சொல்ல முடியும்?

ஒரு சூட்சுமமான விஷயத்தை சொல்கின்றான் கம்பன்.

அதாவது கதவை திறக்காமல் வீட்டுக்குள் நுழைய முடியாது, நீர் நிறைந்திருக்கும் பாத்திரத்தில் தேனை ஊற்ற முடியாது, ஒரு விஷயம் நிரப்பபட அங்கு வெற்றிடம் அவசியம்

அப்படி மனதின் அகங்காரம்,ஆசை, மாயை, ஏக்கம், ஆணவம், காமம் என எல்லாமும் துறந்த நிலையில் அப்படித் துறந்து மனம் வெற்றிடமான நிலையில் அன்னையின் அருள் வெள்ளமென வந்து இந்த பெரு நிலையினையும் ஞானப்பரவசத்தையும் கொடுக்கும் என்பதை சொல்கின்றான்.

அன்னைக்காக மனதை திறந்து வைத்தால் அந்த ஞானநிலையினை அவள் தருவாள் என்கின்றான்.

நான் எனும் உணர்வு, என் உடல் எனும் உணர்வு, இந்த உலகம் எனும் உணர்வு என எல்லாமும் கடந்த அதாவது வாக்கு, மனம், காயம் என எல்லாம் கடந்த நிலைக்கு வரும் பேரின்ப நிலையினை சொல்கின்றான்.

ஆத்மா உணர கூடிய ஞானப் பெருநிலையில் இந்த பரவசத்தின் உச்சியில் நிற்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது மானிட உலகை உணர்வை தாண்டிய பெரும் மகிழ்ச்சியான நிலை.

இந்த உலகம் எனும் சிறிய கிண்ணம் தரமுடியா மகிழ்வை ஞானக்கடலான அன்னை தருவாள். அது மிகப் பெரும் நீடித்த மகிழ்ச்சி, கவலையற்ற பரவசம், எல்லாவற்றையும் கடந்ததும் எல்லாவற்றையும் கட்டுப் படுத்துவதுமான சித்த நிலை. எல்லா சுகங்களையும் துன்பங்களையும் கடந்த இதமான பெருஞான நிலை, அது வினோதமானது. அது மயக்கமான மொழி கொண்ட பாஷை, அந்நிலை நம்பமுடியாத அதிசயங்களை செய்து அனுபவிக்கும் பெரும் உன்னத நிலை.

அந்த நிலையின் உச்சத்தையும் அது கொடுக்கும் நிறைவினையும் மானிடரால் சொல்ல முடியாது, காரணம் மானிடர் சுவைத்தறியாத அனுபவித்தறியாத மகிழ்ச்சி அது.

வாக்கு, மனம், காயம் எனும் மூன்றையும் கடந்து, நான் எனும் அகங்காரத்தையும் ஒழித்தால் இந்த ஞான நிலை கிட்டும். அகங்காரம் களைந்து அன்னையினை முழுக்க சரணடைந்தால் அவளே அந்த நிலையினைத் தருவாள் என்கின்றான்.

அன்னை கொடுக்கும் நிறைவான நிலை எனும் முழு பக்குவ நிறைவு நிலையினை மனிதனால் கொடுக்கவும் முடியாது. அதை சொல்லவும் முடியாது, அன்னை அந்த யோக நிலையினை ஞானப்பரவச நிலையினை தருவாள் என யோகியர்க்கும் வரமருள்பவள் அன்னை, யோகிகள் அவளாலே உருவாகின்றார்கள் எனப் பாடுகின்றான்.

தியானத்தில் நிலைக்கும் போது ஒவ்வொரு சக்கரமாக குண்டலினி சக்தி கீழிறிருந்து மேலேறி செல்லும் போது மனம் முழு தியானத்தில் அந்த பரம்பொருளுடன் பரமாத்வாவுடன் ஜீவாத்மா ஒன்றாய் கலக்கும் போது முழு பரவச நிலை ஏற்படும்.

அந்த சமாதி நிலையில் மனம் ஆத்மா எல்லாம் பரம்பொருளுடன் கலந்திருக்கும். உணர்ச்சிகள் அற்ற புலன்களெல்லாம் அடங்கிய உடலுக்கும் ஆத்மாவுக்கும் தொடர்பில்லா பெரும் ஞான நிலைவாய்க்கும்
மிக ஆழ்நிலை தியானம் அது.

சுவாமி சதாசிவ பிரம்மேந்த்ராள் உடல் வெட்டப்பட்ட நிலையிலும் தியானத்தில் இருந்தார். ரமண மகரிஷி அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து இல்லாமல் அவர் போக்கில் இருந்தார் என சொல்லப் படுவதெல்லாம் இந்த பெருஞான நிலையே.

அப்போது பேச்சிறாது, உணர்விராது எதுவும் இராது சமாதி நிலை என அதற்கு பெயர், பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்து நிற்கும் அந்த பரவச நிலை பேரானந்த நிலை.

உச்சி துரிய சக்கரம் துலங்கி நிற்கும் அந்த மகா பேரானந்த நிலை.

இதைத்தான் “சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான” என்பார் ஒளவையார்.

அவர் தன் ஞானகுறளில் சொல்வார்.

“ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம்”

குண்டலினி சக்தியை ஞான வெளிக்கு செலுத்த அதாவது துரியம் கடந்த பரவெளியுடன் கலக்கும்போது சுரக்கும் அமிர்தத்தினைப் பருகி சிவனுடன் கலந்து சிவ யோகியர் ஆகலாம் எனப் பொருள்.

“மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு”

மகத்தாகிய பரிசுத்தமாகிய பெருவெளியில் துரியம் கடந்த நிலையில் மனதை நிறுத்திச் தியானம் செய்துவர ஆன்மாவானது ஆதியுடன் கலந்து மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் என்பது பொருள்.

“நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்”

அதாவது குண்டலினியானது சந்திர மண்டலத்தில் அதாவது துரியத்தினை அடையும்போது சுரக்கும் அமிர்தத்தினையும் பருகி துரியம் கடந்த நிலையில் அந்தரத்தில் அதாவது பிரபஞ்ச வெளியில் சஞ்சரிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்பது பொருள்.

இதைத்தான் இந்த தவஞான நிலையினைத்தான் சொல்கின்றான் கம்பன்.

இந்த பாடலில் மகா முக்கியமான வரி “பழுதற்ற வாக்கும் பலிக்கும் ” என்பது

அதாவது தன் பக்தர்கள் ஒன்றை சொல்லிவிட்டால் அன்னை அந்த வாக்கினை காத்து தருவாள் என்பது

இதற்கு ஆதிசங்கரர் வாழ்வில் உதாரணம் உண்டு, இன்னும் பல ரிஷிகள் யோகியர் வாழ்வில் உதாரணம் உண்டு, அன்னை உபசாகர்கள் வாழ்வில் உண்டு, ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி மகாபெரியவர் வரை ஏகபட்ட உதாரணம் உண்டு என்றாலும் மிகபெரிய உதாரணம் அபிராமி பட்டர்

அவர் அமாவாசையினை பவுர்ணமி என சொன்னார் , தன் சீடனின் வாக்குக்காக அன்னை அதை மெய்பித்து காட்டினாள்

இங்கு கம்பன் சொல்வதும் அதுதன், பக்தர்கள் தன்னை நம்பி என்ன சொன்னாலும் அவள் அதை மெய்பித்துவிடுவாள், அப்படியான அன்னை இச்சபையில் எனக்கு வந்த இடரை நீக்க வருவாள், ஒரு கொலுசு அவளிடம் உண்டு, அவளே என் அன்னை நான் சொல்வதை மெய்பிக்க அவளே வருவாள் என்னை காப்பாள் என்கின்றான் கம்பன்.