சரஸ்வதி அந்தாதி : 29
சரஸ்வதி அந்தாதி : 29
கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே.
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்ய
சரியார் கரமும் பதமும் இதழ் அந்தவள் நறும்
புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்
பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே.
பாடலை இனி கொஞ்சம் ஆழமாகக் காணலாம்.
“கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்ய” எனத் தொடங்குகின்றது. கரியார் அகளம் என்றால் கருநிறம் பொருந்திய முன் நெற்றிக் கூந்தல் எனப் பொருள். நெற்றியில் ஆடும் கருத்த கூந்தல் என்பது பொருள்.
“கண்” என்றால் அன்னையின் கண்கள்.
“கதிர்முலை கண்ணும்” என்றால் அழகான திருமார்பு எனப் பொருள்.
அடுத்து “செய்ய சரியார் கரமும் பதமும் இதழ்” என வரி வருகின்றது. இது கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்க வேண்டியது.
செய்ய சரியார் கரமும் என்பது அழகான வார்த்தை. செய்ய என்றால் செம்மையான சிகப்பான எனப் பொருள்.
சரி+ஆர் என்பது அழகான வளையல் எனப் பொருள் கொண்டது. அழகான வளையல்களை அணிந்த கரமும் என்பது பொருள்.
பதமும் என்றால் திருவடிகள். இதழ் என்றால் உதடுகள்.
அடுத்த வரி “நறும் புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்” அன்னை அமரும் அந்த மணமிக்க வெண் தாமரையும், அவளின் திருமேனியும் அவள் பூண்டிருக்கும் பல வகை அணிகலன்களும் எனப் பொருள்.
கடைசியாக “பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே” பெரிய தெய்வமான கலைமகளே, உன் அழகிய உருவம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும், நாவினால் அதை பாடிக்கொண்டே இருப்பேன் என்பது பொருள்.
பாடலின் பொருள் இதுதான்.
தெய்வங்களில் பெரியவளான கலைமகளே! உன் அழகான கருத்த கூந்தலும், கருணை மிக்க கண்களும், இரக்கம் மிகுந்த தாய்மை நிரம்பிய மார்பும், செம்மையான வளையல்களை அணிந்த அக்கரமும், பாதங்களும், சிவந்த உதடும், அழகான உன் தோற்றமும், நீ அணிந்த அழகான அணிகலன்களும், இந்த அழகான திருக்கோலத்தில் நீ அமர்ந்திருக்கும் தாமரையும் எப்போதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும், நாவிலும் நிலைத்திருக்கும்.
கம்பன் பெரும் தத்துவத்தை போதிக்கின்றார். தியானம் செய்யும் பெரும் வழியினைச் சொல்கின்றான்.
அன்னையின் திருவுருவத்தை தியானிப்பதை அதுவும் எக்காலமும் தியானிப்பதைச் சொல்லி அழகான தியான தத்துவத்தை இந்தப் பாடலில் பாடுகின்றான் கம்பன்.
அதாவது அன்னைக்கு உருவமில்லை, அவள் மகா சக்தி. இந்தப் பிரபஞ்சமே அவள் வடிவம் அவள் அதையும் தாண்டிய விஸ்வரூபம் கொண்டவள். ஆனால் பக்தருக்காக ஒரு விக்ரஹ வடிவில் அமர்ந்திருக்கின்றாள். அந்த அழகான திருமேனியினைத்தான் தியானிக்கின்றான் கம்பன்.
மனதை ஒரு புள்ளியில் நிறுத்தி அவளையே தியானிக்க அந்தத் திருமேனி வடிவம் உதவுகின்றது. அதாவது உருவ வழிபாட்டில் இருந்து உன்னத யோகத்திற்குச் செல்லும் தத்துவத்தைச் சொல்கின்றான்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிகளில் அவள் விக்ரஹ திருமேனிக்கு அலங்காரம் செய்தல் சரியை என்றும், அவள் விக்ரஹத்திற்கு வழிபாடு செய்வது கிரியை என்றும், அவள் உருவை தியானித்தல் யோகம் என்றும், அதனால் வரும் பலன் ஞானம் என்றும் தெளிவாகச் சொல்கின்றான்.
அன்னை சக்தி உருவானவள், அந்த சக்திக்கு இப்படி ஒரு வடிவம் இல்லை, அவ்வகையில் உருவற்ற வழிபாடே இந்துக்களின் அடிப்படை.
ஆனால் அப்படி உருவகிக்க முடியாத சக்தியினை, யாரும் முழு வடிவில் காணமுடியா சக்தியினை, பார்த்தாலும் புரிந்துகொள்ள முடியாத அந்த ஒளி வடிவினை, மானிடர் மேல் கொண்ட அன்பால் அன்னை விக்ரஹத் திருமேனியாக வந்து வடிவம் காட்டுகின்றாள் என்பதே இங்கு கம்பனின் போதனை.
அந்த மகா சக்தியான அன்னை மானிடர் தன்னை அவர்களின் மிகக் குறைந்த அறிவில் புரிந்துகொள்ள இந்த வடிவில் வந்து அமர்ந்திருக்கின்றாள் என் அன்னை என்கின்றான்.
அப்படியே யோகம் செய்ய கண்களை மூடி அமரும் பொழுது மனம் அலைபாயும் பொழுது அதனை அடக்க முடியாமல் தவிக்கும் பொழுது அன்னையின் திருவுருவத்தை நினைத்துக் கொண்டாலே போதும் மனம் ஒருமுகமாகும்.
ஆம், அன்னையின் திருவுருவை மனதால் நினைந்து கொண்டே இருந்தால் காட்சிக்கு மறையாமல் அதனிலே மனம் நிலைத்திருந்தால் மனம் ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட மனதில் தியானம் கைகூடும்.
அன்னையின் உருவத்துக்கு அலங்காரமும் பூஜையும் மட்டும் அல்ல. அதைத் தாண்டி அந்த உருவை மனதால் தியானித்து அதனையே மனதில் காட்சியில் சிந்தையில் நிறுத்தினால் யோகம் கைகூடும், சித்தி உண்டாகும்.
தவம், தியானம் என்பதெல்லாம் சிரமமானது. கண்களை மூடி மனதை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துவது சிரமானது. ஆனால் அன்னையினை நினைந்து அவள் உருவை நினைந்தால் அது மிக எளிதானது.
அன்னை வெளிப்புற வழிபாட்டை விட மனதால் கொண்டாடும் வழிபாட்டை விரும்புகின்றவள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கின்றது.
அடியாரின் மனதினை பார்ப்பதால் அங்கு எழுந்து அருள் தருவதால் அவள் “அந்தர்முக சமாராத்யா” அதாவது உள்முகமாக த்யானிக்கும் ஆத்மஞானிகளால் ஆராதிக்கப்படுவாள், “பஹிர்முக சுதுர்லபா” அதாவது உலகாய செயற்பாடுகளை உடையவருக்கு அவள் எளிதில் விளங்கமாட்டாள் என அவளுக்கு நாமம் உண்டு.
யோக தியானத்தில் அன்னையின் உருவை தியானித்தால் எல்லா புலன்களும் தானாக ஒடுங்கும். தவக்கோலம் எளிதாகும். அன்னையின் அருளால் எளிதில் யோகியாகலாம் எனச் சொல்கின்றான்.
இந்தப் பாடல் அன்னையின் பக்தியினை அவள் தோற்றத்தை மனதில் நிறுத்தி தியானிக்கும் முறை. இடையறாது அவளை சிந்திக்கும் வகையினைச் சொல்கின்றது. கம்பனின் போதனை அதுவே.
கம்பன் அன்னையின் தோற்றத்தை ஒவ்வொரு அங்கமாகப் பாடுவது வெறும் அழகு பாராட்டல் அல்ல, அது தத்துவமானது.
அவள் கருத்த கூந்தலை கொண்டிருப்பவள் என்கின்றான். அதாவது அவள் எக்காலமும் இளமையானவள், முதிர்வோ அழிவோ இல்லாதவள். நித்திய காலமும் ஒரே இளமையில் நின்று ஆட்சி செய்பவள் என்பதைச் சொல்கின்றான்.
அவள் கண்கள் கருணைக் கடல். அடியாரின் துன்பத்தைக் கண்டால் தன் பக்தனின் நிலை கண்டால் இரக்கம் கொள்ளும் கருணையும் இரக்கமும் மிக்க கண்கள் என்கின்றான்.
இங்கே அன்னையின் திருமேனித் தனங்களைக் காணும் கம்பன் ஞானப்பாலை எதிர்பார்க்கும் குழந்தையாக தன்னைக் கருதி அன்னையினை உலகத் தாயாக வணங்கிப் பாடுகின்றான்.
அன்னையின் தனங்கள் ஞானம் தருபவை. சம்பந்தப் பெருமானுக்கு அப்படித்தான் அன்னையே வந்து பாலூட்டினாள். அப்படி அன்னை ஞானப்பால் ஊட்டுபவள்.
வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருப்பவள். வரம் அருளும், காவல் அருளும் கைகளை உடையவள். சிறப்பான ஆபரணங்களை அதாவது மிகப் பெரிய தகுதியினை கொண்டிருப்பவள் என்பதை பாடுகின்றான்.
கம்பன் போதிக்கும் விஷயம் உருவமுள்ள இத்திருமேனியினை வழிபட்டு வழிபட்டு மெல்ல மேலேறி பின் உருவமில்லா அந்த ஆதிபராசக்தியுடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதே பாடலின் மையப் பொருள்.
அன்னையினை மனதில் நிறுத்தி தியானிக்க அவள் உருவத்தை மனதில் நிறுத்துவது மிகச் சுலபமான வழி. சரியான வழி.
“நவவித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா” என அன்னைக்கு ஒரு நாமத்தை லலிதா சஹஸ்ர நாமம் சொல்கின்றது. பவளம், கோவைக்கனி போன்ற ஒளிகொண்ட இதழ் கொண்டவள் என்பது அதன் பொருள்.
கம்பன் இப்பாடலை பாடும் போது அப்படியே அந்த மூக கவி மன நிலையில் இருந்து பாடுகின்றான்.
மூகர் என்றால் வடமொழியில் பேச்சிழந்தவர் எனப் பொருள்.
காளிதாசனின் மறுபிறப்பாக காஞ்சியில் அவதரித்தவர் என நம்பப்படும் அந்த மூகர் பிறப்பால் ஊமை. ஆனால் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்திலே அபிராமி பட்டரைப் போல மிக மிக பக்தியாக சேவைகள் செய்து வந்த ஊமை பணியாளர்.
ஒரு நாள் அன்னை ஒரு கன்னி வடிவத்தில் வந்து அங்கே இருந்த தன் அடியார் முன் நின்றாள். அந்த அடியாரோ யாரோ தவம் கலைக்க வந்தவள் என அவளை விரட்டினார். புன்னகைத்த அவள் அந்த அடியார் கண்முன்னே இந்த மூகர் வாயில் தன் வெற்றிலையினை உமிழ்ந்துவிட்டு சிரித்து மறைந்தாள்.
அப்பொழுது அம்மா எனப் பேசத் தொடங்கிய மூகர் கவிமழை பொழிந்தார்.
மூகருக்கு சாட்சி வைத்து பேச்சு அருளிய காமாட்சி அம்மன் மேல் அந்த மூகர் நிறைய பாடி வைத்தார்.
ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் என ஐநூறு ஸ்லோகங்களால் தேவியைத் துதித்தார்.
ஆர்யா சதகத்தில் அம்பாளின் உயர்ந்த பண்புகளைப் போற்றியும், பாதாரவிந்த சதகத்தில் அன்னையின் திருவடிகளைப் போற்றியும், ஸ்துதி சதகத்தில் பெருமைகளைப் புகழ்ந்தும், கடாக்ஷ சதகத்தில் கண்களையும் அந்த அருட்பார்வையையும் போற்றியும், மந்தஸ்மித சதகத்தில் அன்னையின் புன்சிரிப்பை துதித்தும் அன்னையின் ஒவ்வொரு அங்கத்தையும் த்யானிக்க ஹேதுவாகப் பாடியுள்ளார்.
ஆதிசங்கரரும் தனது சௌந்தர்யலஹரியில் அம்பாளின் முடி முதல் திருவடி வரை ஒவ்வொரு அங்கத்தின் பெருமைகளை வர்ணித்து 59 ஸ்லோகங்களில் த்யானம் செய்ய ஏதுவாகப் பாடியுள்ளார்.
அந்த மூக பஞ்ச சதகம், சௌந்தர்ய லஹரி சொல்கின்றதை கம்பனும் இங்கே பாடினார் என்பதுதான் சுவாரஸ்யம்.
லலிதா சஹஸ்ரநாமத்திலும் அன்னையின் புன்னகையை போற்றும் நாமங்கள் உண்டு.
“மந்தஸ்மித ப்ரபாபூர” மஜ்ஜத் காமேச மானசா “அதாவது தன் அழகான ஒளி மிகுந்த மெல்லிய புன்னகையால் காமேஸ்வரனுடைய உள்ளத்தை லயிக்கச் செய்தவள் எனப் பொருள்
“சாருஹாசா” அதாவது மயக்கும் புன்னகை உடையவள் எனப் பொருள்.
“தரஸ்மேர முகாம்புஜா” அதாவது அழகிய மலர்ந்த தாமரைப் போன்ற புன்முறுவலைக் கொண்டவள் எனப் பொருள்.
இப்படி மிக மிக நுணுக்கமாக அன்னையின் கோலத்தை உற்றுப் பார்த்து கம்பன் பாடுகின்றான்.
இப்பாடல் இருவழிகளில் நமக்கு போதிக்கின்றது.
முதலாவது வழிபாட்டு தியானங்களில் மனதை அடக்குவது கடினம். ஆனால் ஒரு உருவத்தை நிறுத்தி தியானிக்கப் பழகினால் தியானம் கைகூடும்.
அவளின் அழகான திருமேனியினை கண்களில் நிறுத்தினால் அதையே கண்களிலும் மனதிலும் நிறுத்தினால் அதையே இடைவிடாது தியானித்துக் கவனித்துக் கொண்டிருத்தலே முழு தியானம் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அன்னையின் திருமேனியினை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும், அந்த விக்ரஹம் இல்லா நேரம் மனதால் அதனையே தரிசித்து அதிலே லயித்திருப்பதும் மனதை ஒருமுகப்படுத்தும் தியானமுறை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றான்.
இன்னொரு விஷயத்தை ஆழமாகச் சொல்கின்றார்.
ஆம், நெஞ்சத்தால் அன்னையினை நினைந்து கண்களால் அவளை மட்டுமே கண்டு, காதால் அவளை பற்றிய செய்திகளை மட்டுமே கேட்டு, வாயினால் அவள் புகழை மட்டுமே பாடி, இப்படி புலன்களையெல்லாம் அன்னைக்கே அர்ப்பணித்து, அவள் நினைவிலே வாழ்ந்து அவள் நினைவினையே தியானமாகக் கொண்டால் ஞானம் பெற்று முக்தி அடையலாம்.
அன்னையினை இடையறா நினைந்து அவள் புகழ் பாடி, பேசி, கேட்டு அவளின் அருட்பார்வை பெற்றால் ஞானம் பெருகும். அந்த ஞானம் நித்திய மோட்ச பாக்கியத்தை அருளும் எனப் பாடுகின்றான் கம்பன்.
‘சுப்ரமண்ய புஜங்கத்தில் இந்த த்யான நிலையைத்தான் ஆதிசங்கரர்
த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்த கீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா : ||
த்ருசி என்றால் கண்டு, ஸ்கந்த என்றால் கந்தனின், மூர்த்தி என்றால் உருவம், ச்ருதௌ என்றால் கேட்டு, ஸ்கந்த என்றால் கந்தனின், கீர்த்தி என்றால் புகழ்.
முகே என்றால் வாயில், மே என்றால் உன், பவித்ரம் என்றால் புண்ய, ஸதா என்றால் எப்பொழுதும், தத் சரித்ரம் என்றால் (உனது) அந்த சரித்திரம்.
கரே என்றால் கைகள், தஸ்ய க்ருத்யம் என்றால் உனக்கு தொண்டு செய்து, வபுஸ் தஸ்ய என்றால் உடல் உனது, ப்ருத்யம் என்றால் சேவகம் செய்து
குஹே என்றால் குஹனே, ஸந்து லீனா என்றால் ஆகட்டும் ஐக்கியம், மம என்றால் என், அசேஷ என்றால் எல்லா (ஒன்றும் மிச்சமில்லாமல்), பாவா: என்றால் நினைவுகளும்
கந்தனின் உருவமே என் கண்கள் கண்டு, கந்தனின் புகழே என் காதுகள் கேட்டு, எப்பொழுதும் உன் புண்ய சரித்திரங்களை என் வாயால் பேசி, பாடி, என் கைகள் உனக்கு தொண்டு செய்து, என் உடல் உனது சேவகம் செய்து, குஹனே! என் எல்லா நினைவுகளும் உன்னில் ஐக்கியம் ஒன்றாக ஆகட்டும்.
என்று உருகுகிறார்.
மேலும் சௌந்தர்ய லஹரியில்
“ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யா ஹுதி-விதி: |
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்பண-த்ருசா
ஸபர்யா பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ||”
ஜபோ ஜல்ப: – (நான்) பேசுவதெல்லாம் ஜபமாக
சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசனா – கை, கால்களுடய அசைவு உன்னுடைய பூஜை முத்திரைகளாகவும்
கதி: – (நான்) நடப்பது
ப்ராதக்ஷிண்ய-க்ரமண – ப்ரதக்ஷிணம் (உன்னை வலம்) வருவதாகவும்
மசன ஆதி ஆஹுதி-விதி: – (நான்) சாப்பிடுவது அனைத்தும் உன்னைக் குறித்துச் செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும்
ப்ரணாம: ஸம்வேச: – பூமியில் படுத்துக்கொள்வது உனக்கு ப்ரணாமமாக (விழுந்து வணங்குவதாகவும்)
ஸுகம் யன்மே விலஸிதம் – (நான்) முயற்சியின்றி செய்யும் மற்ற செயல்கள் அனைத்தும்
ஆத்ம அர்ப்பண த்ருசா – என் ஆத்மாவையே அர்ப்பணமாக உன்னுடன் இரண்டற கலந்ததால்
அகில ஸபர்யா பர்யாய(ஹ) – (இவை) யாவும் பூஜை விதிகள்
தவ – உனது
பவது – ஆகட்டும்.
தாயே ! நான் உலக விசயமாக பேசுவது எல்லாமும் உன் மந்திர ஜபமாகவும், என் கை, கால்களுடைய அசைவு உன்னுடைய பூஜை முத்திரைகளாகவும், நான் தற்செயலாக நடப்பது உன்னை வலம் வருவதாகவும், நான் சாப்பிடுவது அனைத்தும் உன்னைக் குறித்துச் செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும், பூமியில் படுத்துக்கொள்வது உன்னை விழுந்து வணங்குவதாகவும். இவ்வாறு நான் முயற்சியின்றி செய்யும் மற்ற செயல்கள் எல்லாம் உன்னுடைய பூஜையாக ஆகட்டும்.
என்றும் இறை த்யானத்தின் முதிர்ந்த மேல் நிலையை விவரித்து அன்னையிடம் வேண்டுகின்றார்.
அன்னை உருவமில்லாதவள். ஆனால் பக்தனுக்காக ஒரு அழகான உருவில் வந்து நம்முன் அமர்ந்திருக்கின்றாள். அவள் மிக அழகான கோலத்தில் நம் முன் அமர்ந்திருகின்றாள்.
அந்த கோலத்தை மனதால் தியானித்து அந்த அழகான சுத்த சத்வ உருவை எப்போதும் மனதால் துதித்து வார்த்தைகளால் போற்றிக் கொண்டே இருந்தால் அதுதான் யோக முக்தி நிலையினைக் கொடுக்கும் என்றும், அன்னையின் உருவை கண்களால் கண்டு அதை நெஞ்சினில் நிறுத்தி அவளை கையால் வணங்கி, வாயால் புகழ்ந்து பாடினால் அதை மட்டும் செய்துகொண்டே இருந்தால் அவள் அருளில் எல்லா நலமும் அருளும் தவமும் வாய்க்கும். அன்னை அந்தப் பெரும் வரத்தை அருள்வாள் எனப் பாடுகின்றான் கம்பன்.