சரஸ்வதி அந்தாதி : 30
சரஸ்வதி அந்தாதி : 30
“பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே”
இப்பாடல் இப்படி பிரிந்து வரும்.
“பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேத பொருள் அருளும்
திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்” என்றால் மகா லட்சுமியின் வடிவமும், வெற்றி தரும் ஜய லட்சுமியின் வடிவமுமான அவள், ஒன்றும் அறியாத மடமையான என் பேதை நெஞ்சில் எனப் பொருள்.
அடுத்து “இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி” என் நெஞ்சில் இருந்து எல்லா கவியும் சொல்லும் அருளும் அந்த அம்மனை போற்றுகின்றேன், எல்லா உயிர்க்கும் எனப் பொருள்.
அடுத்து “எல்லா உயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும்” எல்லா உயிர்களை அதனதன் தன்மையில் ஒவ்வொரு ஞானத்தில் இயக்கும் அன்னை என்னையும் ஒரு ஞானத்தில் இயக்குகின்றாள்.
கடைசியாக “இன்ப வேத பொருள் அருளும் திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே” அதாவது வேதங்கள் சொல்லும் ஞானம் தரும், உலக வாழ்க்கைக்கு நல்ல செல்வம் தரும் தெய்வம் அவள் எனப் பொருள்.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
அன்னை இந்த உலகாளும் மகாலஷ்மி எல்லா ஞானமும் அறிவும் செல்வமும் தைரியமும் அவளிடமிருந்தே வருகின்றன. அப்படியான அன்னை என் மனதில் இருந்து கவியும் பாடலும் நல்ல சொல்லும் தைரியமும் தருகின்றாள்.
அவள் எல்லா உயிர்களையும் அதனதன் ஞானத்தில் இயக்குவது போல அதனதன் தனித்தன்மையில் இயக்குவது போல என்னை அவள் ஞானத்தில் இயக்குகின்றாள்.
அவள்தான் எனக்கு அழியாத ஞானமும் மோட்ச பாக்கியமும் தருவாள். அவளே இந்த பூமியில் எனக்கு செல்வாக்கும் செல்வமும் தந்து வாழ வைக்கின்றாள்.”
இப்பாடல் சரஸ்வதி அந்தாதியின் கடைசி பாடல்.
இந்த சரஸ்வதி அந்தாதி பிறந்த கதையினை தொடக்கத்தில் கண்டோம். சேர நாட்டின் அவையில் கம்பன் பெரிய செல்வாக்கில் இருந்தபோது அவன்பால் பொறாமை கொண்டவர்கள், அவன் குல அடையாளமில்லாதவன், அவன் கீழான பரம்பரை கொண்டவன், அவனுக்கோர் தம்பி உண்டு அவனே சாட்சி என அனுப்பினர்.
இந்த சதியினை கம்பன் தன் சரஸ்வதி தேவியிடம் சொல்லி புலம்பிய போது அவள் தானே வந்து ஒரு சிலம்பை கொடுத்து மறைந்தாள்.
கம்பன் அந்தச் சிலம்போடு அரசவைக்குச் சென்று “அரசே இவன் என் தம்பி என்றால் என் தாய் கொடுத்த ஒரு சிலம்பு மூத்தவனான என்னிடம் உண்டு, இரண்டாம் சிலம்பு இவனிடம் உண்டு அதைக் காட்டட்டும்” எனக் கோரினான்.
தம்பி என வந்தவனிடம் சிலம்பு இல்லை, அரசன் அவனை மிரட்ட அவனோ சதிகாரர்களை காட்டி விட்டான்.
சதிகாரக் கும்பல் அப்போதும் “அரசே இவன் கையில் ஒரு சிலம்பை வைத்திருக்கின்றான். அதைக் கொடுத்த அன்னை யார்? எங்கிருக்கின்றாள் எனக் கேளுங்கள்” எனத் தூண்டி விட்டனர்.
அரசனும் அப்படியே கேட்க, கம்பன் நிலை சிக்கலாயிற்று. அரசனை ஏமாற்றினால் அது கொலைவரை தண்டனைக்குச் செல்லும்.
கம்பன் தன் தலையினைக் காக்க அன்னையினை நோக்கி அழைத்துப் பாடினான். அப்போது பாடப்பட்டதுதான் சரஸ்வதி அந்தாதி.
இந்த 30ம் பாடலை பாடி முடித்ததும் அன்னையே வந்து இன்னொரு சிலம்பினை வீசி எறிந்து இவன் என் மகன் எனச் சொல்லி நின்றாள். சபை அதிர்ந்து கம்பனை வணங்கியது.
கம்பனை மன்னனே வணங்கிப் பணிந்தான்.
அபிராமி பட்டருக்கு வந்தது போல் கம்பனுக்கும் அன்னை சேர மன்னன் அவையில் தானே வந்து இவன் தன் மகன் எனச் சொல்லி அதிசயமாக அவனைக் காத்தாள்.
அப்படியான சூழ்நிலையின் கடைசி கட்டத்தில் கம்பன் பாடுகின்றான்.
இவ்வுலகில் வாழ செல்வம் அவசியம். பொருள் அவசியம். மானிட விதிப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு தேவைகள் இருப்பதால் இவ்வுலகில் செல்வம் அவசியம்.
இந்த உலகில் வாழ ஆதாரம் பொருள். ஏதோ ஒரு வகையில் பொருள் வந்து கொண்டே இல்லாவிட்டால் மானிடரால் வாழ முடியாது.
வாழ்வின் ஆதாரம் செல்வம். அதை வழங்குவது அன்னை. அன்னை வாழ்வின் ஆதாரத்தை அளிப்பவள்.
கல்வி ஒரு வரம். எல்லோருக்கும் அமையாது. எனினும் கல்வி பெற செல்வம் அவசியம். செல்வம் இல்லாமல் கல்விச் செல்வம் வாய்க்காது.
சதா காலம் பொருளுக்கு உழைப்பவனால் கல்வி பெற முடியாது. கல்வி பெற குறைந்தபட்ச உத்திரவாத செல்வம் அவசியம்.
ஆம், பயிருக்கு நீர் போல கல்விக்கு செல்வம் அவசியம் என்பதால் செல்வத்தை முதலில் சொல்லி பின் மகா அவசியமான கல்வி செல்வத்தையும் சொல்கின்றான்.
அன்னையினை வணங்கினால் பொருள் குவியும். அதனால் கல்விச் செல்வம் பெற வழி பிறக்கும். அன்னையின் அருளால் அதுவும் சாத்தியமாகும்.
பாழும் மனம் அடிக்கடி தளரும். அனுதினமும் ஏகப்பட்ட விஷயங்களை சந்திக்கும் மனம் பல இடங்களில் வீழும். தைரியமும் ஊக்கமும் இல்லா இடத்தில் பெற்ற கல்வியும் குவிந்த பொருளும் பலனளிக்காது.
தைரியம் இல்லா செல்வமும் கல்வியும் கொள்ளைப் போகும், பலமற்று போகும். இந்த இரண்டையும் காக்க மிக தைரியமும் வைராக்கியமுமான மனம் அவசியம்.
கல்விச் செல்வம் நிரம்பப் பெற்றோர் மற்றவரை அறியாமை மிக்கவராக கருதி ஞான செருக்குக் கொள்வர். வித்யா கர்வம் எனும் அகங்காரம் அவர்களிடம் குடிகொள்ளும். சாமான்யருக்கு இவர்களும் அன்னியராய் தோன்றுவர்.
தைரியம் நிரம்பியவர்கள் தங்கள் வீரமும் புஜபலமும் எல்லோரையும் அடக்கிவிடும் என நம்புவார்கள். மிரட்டலும் தங்கள் மேலான அச்சமும் பலரை தங்கள் மேலாண்மையினை ஏற்க வைத்துவிடும் எனச் செயல்களை செய்வார்கள்..
அவர்களைக் கண்டால் ஒரு அச்ச உணர்வே தோன்றும்.
ஆக கல்விச் செல்வம், பொருட் செல்வம், தைரியமான வீரம் என மூன்றும் பெற்றிருப்போர் அல்லது தனித் தனியாக பெற்றிருந்தாலும் அவர்களிடம் அகந்தை, மமதை, அகங்காரம் குடி கொண்டிருக்கும்.
இந்த நிலைகளைத் தாண்டி எல்லாச் செல்வமும் இறைவனின் கொடை என உணர்ந்து புன்னகை சிந்தும் முகமும், கருணை உள்ளமும் கொண்டவர்களாக அமைவது ஒரு வரம். அந்த வரத்தை அன்னை தருவாள் என்கின்றான் கம்பன்.
மூவகைச் செல்வம் கொட்டிக் கிடந்தும் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு எல்லாச் செல்வமும் அள்ளிக் கொடுக்கும் மனம் தெய்வம் வாழும் கோவில். அந்த மனமுடையோருக்கு தெய்வாம்சம் தானே கூடும். அப்படிப்பட்டோரிடம் உதவி பெறுவோரும் அதைக் காண்போரும் தெய்வ வடிவம் என்றே அவர்களை கொண்டாடுவார்கள்.
பொன்னும் பொருளும் கல்வியும் வாழும் வசதியும் நிரம்பிய இடத்தில் சுற்றத்தாரும் நண்பர்களும் நகைக் கடையில் பெண்கள் குவிவதைப் போல் குவிவார்கள். அவர்களில் வஞ்சகமும் கபடமும் கொண்டவர்களும் வாய்ப்பு கிடைத்தால் பழிகள் வந்தாலும் பரவாயில்லை எனக் கிடைத்ததை பஞ்சமா பாதகங்களுடன் சுருட்டும் மனம் கொண்ட ஆசைவயப் பட்டவர்களும் உண்டு.
செல்வமும் புகழும் சேர்வது பெரிதல்ல. அது சேர்ந்த நிலையில் வஞ்சகர்களும் துரோகிகளும் இல்லாத நல்லோர் கூட்டம் சுற்றி இருத்தல் அவசியம். இப்படி துதிபாடி வீழ்த்தும் வஞ்சகக் கூட்டத்தால் மாபெரும் மன்னர்கள் முதல் பெரும் சாம்ராஜ்ய அதிபர் வரை சரிந்தது வரலாறு.
செல்வம் வாய்ப்பது பெரிதல்ல. அது பதினாறு வகை செல்வத்தில் மக்கட் செல்வம் உள்ளிட்ட நல்ல வகையான செல்வங்களைத் தருவது முக்கியம்.
எல்லாம் சரியாக இருந்து பிள்ளைகள் தருதலையானால் செல்வத்தால் பலனில்லை. செல்வம் வாழ்வுக்கு அவசியம் சந்தேகமில்லை. ஆனால் செல்வத்தினை முறையாக அனுபவிக்கவும் செல்வத்தின் பயனை துய்க்கவும் சில நல்ல வரங்கள் அவசியம்.
ஆம், செல்வம் என்பது வாய்க்கப்பட்டாலும் அதை அனுபவிக்க ஒரு வரமும் காலமும் வேண்டும். வீடு நிறைய உணவிருந்தும் சர்க்கரை வியாதி கண்டவனால் அந்த உணவால் பிரயோசனமில்லை. கோடி கோடி செல்வமிருந்தும் நிம்மதி இல்லை என்றால் செல்வத்தால் பலனில்லை.
செல்வமும் கல்வியும் காவலும் குவிந்திருந்தாலும் ஒரே ஒரு நிம்மதி குறைவு அது உடலோ உள்ளமோ பகையோ நோயோ இல்லை எதுவோ ஒன்று வாய்த்துவிட்டாலும் செல்வம் பலனற்றுப் போகும்.
செல்வத்தை துய்க்கவும் செல்வத்தின் பலனை அனுபவிக்கவும் நல்ல விஷயங்களும் சூழலும் சுற்றி நன்மையானதும் அவசியம்.
கம்பன் ஒரு தேர்ந்த பொருளைச் சொல்லி தன்னிலை விளக்கம் கொடுக்கின்றான்.
அன்னை மகாலக்ஷ்மி, அவளே ஜய லக்ஷ்மி. அதாவது எல்லா வகை செல்வமும் ஞானமும் அறிவும் அதைக் காக்கும் வழியும் தைரியமும் அவளே கொடுப்பாள்.
அவள் எல்லா உயிர்க்கும் அதைக் கொடுப்பாள்.
தேனிக்களின் ஞானம், எறும்பின் ஞானம், சிங்கத்தின் பலம், சிப்பியின் முத்து, புலியின் பாய்ச்சல், குயிலின் கானம், மயிலின் நடனம், மானின் மருட்சி என எல்லாமும் அவள் கொடுத்த ஞானமே.
செடிகளின் மலர், மணம், கொடிகளின் அழகு, கனிகளின் வடிவம், சுவை என எல்லாமும் அவள் கொடுத்ததே.
அவளே எல்லா உயிர்களையும் அதனதன் ஞானமாக இயக்குகின்றாள். எந்த அளவுக்கு ஞானம் ஒவ்வொரு உயிருக்கும் உண்டோ அவ்வகையில் தைரியமும் தன்னைக் காக்கப் போராடும் ஞானமும் பலமும் அவளே கொடுக்கின்றாள்.
தேனிக்கு கொடுக்கு, மலருக்கு முள் என எல்லா காவலும் அவள் கொடுப்பதே.
அப்படியான அன்னை எனக்கும் ஒரு ஞானம் தந்து அதனால் அறிவும் சொல்லும் தந்து அவையில் அமர வைத்த்தாள், செல்வமெல்லாம் தந்தாள்.
இனி அவள் முக்தியும் தருவாள்.
அன்னை என்னை வந்து காத்தால் நான் இவ்வாழ்வை தொடர்வேன். இல்லை பின்னாளில் செல்லும் மோட்சத்துக்கு இப்போதே செல்வேன். எல்லாம் அவள் விருப்பம் எனப் பாடிப் பணிகின்றான்.
ஒரு வகையில் இப்பாடல் பிரசித்தியான சமஸ்கிருத ஸ்லோகத்தின் தழுவலே. அன்னைக்கு போற்றப்படும் பிரசித்தியான துதியினைத் தழுவி இயற்றப்பட்ட பாடல்.
அந்த பாடல் இதோ.
“ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”
இதன் பொருள் என்னவென்றால் எல்லா மங்களங்களுக்கும் மங்களமாகத் திகழ்பவளே, சிவபெருமானின் நாயகியே, பக்தர்களின் எல்லா ஆசைகளையும் (இச்சைகள்) பூர்த்தி செய்யக்கூடியவளே, எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவளே, மூன்று கண்களை உடையவளே, குறைவில்லாத மேனி நிறமுடையவளே, தேவி உன்னை வணங்குகிறேன் என்பது.
இது பெரும்பாலும் எல்லா அம்மன் ஆலயங்களிலும் அர்ச்சனையின் பொழுது சொல்லி வணங்கும் துதி. இன்னும் எல்லா வழிபாட்டிலும் சொல்லப்படும் முக்கியமான ஸ்லோகம்.
இந்தப் பாடலின் பொருளைத்தான் அன்னை எல்லா மங்களங்களுக்கும் மங்களமாக எல்லா செல்வதுக்கும் செல்வமாக திகழ்பவள், பக்தரின் எல்லா ஆசைகளையூம் தீர்த்து வைப்பவள் என்பதைத்தான் மையமாகக் கொண்டு இந்த ஸ்லோகத்தை தமிழாக்கி இந்தப் பாடலை கொடுத்திருக்கின்றான் கம்பன்.
சரஸ்வதி அந்தாதி என்பது கம்பனின் அன்னை சரஸ்வதி என நிரூபிக்கப்பட பாடப்பட்ட பாடல் என்றாலும் ஒவ்வொருவரும் ஆபத்தில் இருக்கும்போது இதைப் பாடி அழைத்தால் பலன் உண்டு.
தேர்வுகள், மகா முக்கிய சிக்கல்கள், முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணம், பெரிய சவால்களை எதிர்கொள்ளும் முன் அன்னையினை நினைந்து இந்த 30 பாடல்களையும் படித்தால் பெரும் பலன் வாய்க்கும், தொட்டதெல்லாம் துலங்கும்.
நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் ஒவ்வொரு மாதமும் சொல்லி வர, ஒரு பௌர்ணமியில் தொடங்கி மறு பௌர்ணமி வரை ஒவ்வொரு பாடலாகப் பாடி அவளை வணங்க உங்களுக்கும் அற்புதம் நடக்கும்.
கம்பனுக்கு அற்புதம் செய்தவள் நம் ஒவ்வொருவரையும் காக்கவும் எல்லா வரங்களும் தரவும் தயாராக இருக்கின்றாள். அவளை இந்தப் பாடல் மூலம் துதித்தால் எல்லாம் ஜயமாகும். எல்லா சோதனையும் தாண்டி பெரும் வெற்றியும் நிம்மதியும் புகழும் தீர்க்கமான ஞானத் தெளிவும் கிடைக்கும். இது சத்தியம்.