சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 13

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 13

சாணக்கியன் தீவிர ஆலோசனையில் இருந்தான். அடுத்துச் சந்திரகுப்தனுக்குப் பட்டாபிஷேகம் செய்தாக வேண்டிய நிலை, ஆனால் பகை முழுக்க அகன்றதா என்றால் இன்னும் இல்லை.

முழுக்கப் பகை முடியா இடத்தில் புதிய அரசு என்பது பெரும் ஆபத்து என்பதைச் சாணக்கியன் அறிவான். குழப்பமான காலகட்டத்தில் முழுவதும் பகை அகற்றாமல் பழைய கணக்கை முழுக்க முடிக்காமல் ஒரு அரசு அமைதல் கூடாது.

(இந்தியா தன் சுதந்திரத்தில் செய்த முழுப் பெரும் தவறு அதுதான். தன் வீட்டை எதிரி காலி செய்தபின் உடனே நுழைதல் தவறு. அங்கே அவன் பாம்புகள் தேள்கள் என விட்டுச் சென்றிருக்கலாம், அவன் ஆட்கள் பதுங்கியிருக்கலாம் என்பதை அறியாமல் உடனே அவன் விட்டுச் சென்ற அரச எந்திரத்தை அப்படியே இயக்கியது தவறு.

பிரிட்டிஷார் வெளியேறினார்களே தவிர அரசியல், சட்டம், பத்திரிகை, அரச ஊழியர், காவலர்கள், கல்வி என எல்லா இடத்திலும் அவன் நியமித்த ஆட்களே இருந்தார்கள்.

அந்த அமைப்பினை அப்படியே தொடர்ந்ததுதான் இந்தியா சந்தித்த அத்தனை துயரங்களுக்கும் காரணம்.)

எல்லாம் சரிசெய்து சுத்தமானபின், இனி எதுவும் ஆபத்து இல்லை என்றபின்பே புதிய அரசு அமைதல் வேண்டும், சாணக்கியன் இதனால் ஒவ்வொன்றாய், கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

பர்வதேஸ்வரனை அவன் சரியாக வீழ்த்தியிருந்தான். ஆனால், அவன் எதிர்பாரா விஷயம் ராஷசன் தப்பிச் சென்றது. இனி அவன் என்னென்ன செய்வான் என்பதை ஊகித்தான்.

ராஷசன் நிச்சயம் இனி மலையகேதுவுடன் சேர்ந்துதான் ஏதாவது செய்வான் என ஊகித்தான். அப்படிச் சேரும் போது என்னென்ன நடக்கும் என்பதையும் கணித்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவனுக்கு இருக்கும் சிக்கல் முன்பு உறுதியளித்தபடி இந்த மகத நாட்டைப் பாதியாக்கி ஒரு பாதியினைப் பர்வதேஸ்வரனுக்குக் கொடுக்கவேண்டும்.

ஏற்கனவே அதைச் சொல்லித்தான் அவன் உதவியினைப் பெற்றுவந்தான். ஆனால், வென்ற நிலையில் பர்வதேஸ்வரன் மொத்த மகதநாட்டுக்கும் ஆசைப்படுகின்றான் என்பதை அறிந்து போக்குக்காட்டி சரியான நேரம் சாய்த்தும்விட்டான்.
ஆனால், அத்தோடு விடமுடியாது. இனி மலையகேது வருவான். அதுவும் பர்வதேஸ்வரன் சாவுக்குப் பழிவாங்க மொத்த மகதமும் தனக்கே என வருவான்.

அவனை நம்பமுடியாது, ராஷசன் இனி அங்கேதான் செல்வான். அதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என நினைத்தவன் இருவரை கையில் எடுத்தான்.

முதலானமவன் அந்த மலையகேதுவின் தளபதியும் முக்கியமானவனுமான பாகுராயன், இரண்டாவது மலையகேதுவின் சகோதரன் வைரோகதன்.

பாகுராயனை மிகத் தந்திரமாக வளைத்திருந்தான் சாணக்கியன், மகதம் தாண்டி பெரும் அரசை தான் ஸ்தாபிக்க இருப்பதாகவும், பாதி ராஜ்ஜியம் பர்வதேஸ்வரனிடம் சென்றாலும் இன்னொரு பக்கம் மகதத்தை விஸ்தரிக்க போவதாகவும் அங்கே ஒரு குட்டிநாட்டுக்கு இவனை அரசனாக்குவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.

காலம் காலமாக ஒரு அரசனுக்கு அடியாளாக சண்டையிட்டே செத்துக்கொண்டிருந்த தளபதியின் வாரிசு நாடாள போகின்றது என்றால் எந்தத் தளபதி வளையமாட்டான்.

“வீரனே, நீ மாவீரன். உன் திறமையினை நான் களத்தில் கண்டேன். பர்வதேஸ்வரனின் பலமே நீதான்.‌ ஆனால், உனக்கு என்ன கிடைத்தது? என்ன பெருமை கிடைத்தது, ஆட்சியும் அதிகாரமும் அவர்களுக்கு, சாவின் எல்லை உனக்கா?

நான் உன்னை வைக்கவேண்டிய இடத்தில் வைப்பேன். அதுவரை நீ அங்கே இரு” என சாணக்கியனின் தேர்ந்த வார்த்தைகளில் சிக்கினான்.

அவனை வளைத்த சாணக்கியன் சொல்லிவிட்டான் “பாகுராயனே, இனி என்னென்ன குழப்பம் நடக்கும் என்பதை நீ அறிந்திருகின்றாயா?

அந்த மலையகேதுவுக்கு விஷம் கலந்த வார்த்தைகள் சொல்லப்படும், பர்வதேஸ்வரனை நாமேதான் கொன்றுவிட்டோம், பாதி ராஜ்ஜியம் கொடுக்க மறுத்து கொன்றுவிட்டோம்மென செய்திவரும்.

சில விஷயங்கள் நமக்கு அனுகூலமாக நடக்குமானால் நாம் சில செய்திகளை எதிர்க்காமல் அனுமதிக்கத்தான் வெண்டும்”

அவனை நிமிர்ந்துபார்த்தான் பாகுராயன்.

சாணக்கியன் புன்னகைத்தான். “உனக்கு புரியவில்லை அல்லவா?, இப்போது புரியாது, நீ சென்று நான் சொன்னதை சொல்.

மலையகேது மன்னா, மன்னர் பர்வதேஸ்வரனை நந்தர்கள் கொல்ல நியாயமே இல்லை, அவர்கள் முழுக்க அழிந்துவிட்டார்கள். ஒருவேளை மீள கைப்பற்றினால் கூட நாட்டை ஆள யாருமில்லை.

மந்திரி ராஸஷனோ நம்முடைய ஆதரவாளராக இருந்தார்.

அப்போது மன்னர் இறந்தால் யாருக்கு லாபம் சொல்லுங்கள், நிச்சயம் சாணக்கியனுக்கும் சந்திரகுப்தனுக்கும் அல்லவா பெரிய லாபம், முன் சொன்னபடி பாதிராஜ்ஜியம் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தை குழப்பத்தான் அல்லவா?

எங்கள் மண்ணில் பர்வதேஸ்வரனையே முடித்துவிட்டோம், இனி யார் வந்தாலும் முடிப்போம் என நமக்கு சொன்ன மிரட்டல் இல்லையா?

கவனியுங்கள் மன்னா இது புரியும், எனக்கென்னவோ இது அந்த சாணக்கியனின் வேலையாகத்தான் தெரிகின்றது மன்னா, அவனை விடக்கூடாது” எனச் சொல் என்றான்.

“இது தங்களுக்கு ஆபத்து அல்லவா?” எனக் கொஞ்சம் அஞ்சினான் பாகுராயன்.

“பாம்பின் விஷம் முறிக்கும் மருந்து இல்லாமலா பாம்பினை பிடிக்க கிளம்புவார்கள்” எனப் புன்னகைத்த சாணக்கியன் அவனை அனுப்பிவைத்தான்.

அவனை அனுப்பியபின் சாணக்கியன் கவனம் வைரோகதனிடம் வந்தது, அவனை மெல்ல வளைக்கத் தொடங்கினான்.

“வைரோதகா உங்கள் ராஜ்ஜியம் அப்படியே இருக்கின்றது. இனி முன்பு சொல்லப்பட்டபடி மகத ராஜ்ஜியத்தின் ஒரு பாதியினை நாங்கள் பர்வதேஸ்வரன் அரசுக்கு கொடுக்கவேண்டும், அதை நாங்கள் செய்துவிடுவோம்.

ஆனால், மொத்த ராஜ்ஜியத்துடன் இந்த ராஜ்ஜியமும் மலையகேதுதான் ஆளவேண்டுமா? இந்தப் பாதி ராஜ்ஜியத்தை நீ அரசனாக இருந்து ஆண்டால்தான் என்ன?

பர்வதேஸ்வரன் இப்போது இல்லை. இனி இந்த ராஜ்ஜியமும் உங்களுக்கு கிடைத்தால் மொத்தமும் மலையகேது உன் ஆளுகைக்கு அல்லவா செல்லும்.

அதன் பின் அவன் மகன் அல்லவா இதனையும் ஆளத்தொடங்குவான், வைரோதகா நீ பரம்பரை நாட்டில் உரிமைகோரவில்லை, உங்களுக்கு கிடைத்த ஒரு நாட்டைத்தான் ஆளத் தொடங்குவாய்.

எங்களுக்கு ஒரு வலிமையான நண்பனாய் நீ பக்கத்துநாட்டு அரசனாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் யோசித்துபார்” என ஆசையினை தூண்டிவிட்டான்.

அந்த வலையில் வைரோகதனும் சிக்கினான்.

சாணக்கியனின் திட்டம் சரியாக வேலை செய்தது, பதவி ஆசை என்பது சாதாரணம் அல்ல. அதுவும் களத்தில் நின்றுபோராடுவோருக்கு, அரசமட்டத்தின் அருகிருப்போர்க்கு பதவி ஆசை என்பது எளிதில் பற்றிக்கொள்ளும்.

காரணம், இவர்கள் மனோரீதியாக மிக மிக நெருக்கமாக உணர்ச்சியாக நிற்பார்கள், என் கையில் அதிகாரம் இருந்தால் அப்படிசெய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் எனப் பல இடங்களில் புலம்பியிருப்பார்கள்.

பல இடங்களில் அவர்களுக்கு அவமானமிருக்கும், ஏக்கமிருக்கும். இவ்வளவு உழைத்தும் இப்படியா என ஒரு விரக்தி இருக்கும்.

அந்த இடத்தில் அடிப்பது என்பது உளரீதியான அடி, மனரீதியான அடி.

சாணக்கியன் அதில் கைதேந்திருந்தான். மிக மிக சாமார்த்தியமாக அவர்களின் பலவீனம் எதுவோ, எங்கே அடித்தால் அவர்கள் மீளமுடியாமல் தன் காலில் கிடப்பார்களோ அங்கே அடித்தான்.

அவர்கள் சாணக்கியன் வலையில் சரியாக விழுந்தார்கள்.

பாகுராயன் சாணக்கியன் சொன்னதை ஒருவரி விடாமல் மலையகேதுவிடம் சொன்னான், “மன்னா, எல்லாவற்றுக்கும் காரணம் சாணக்கியன் என்பதை இனியாவது நம்புங்கள, அவனே நம் மன்னரை கொன்றுவிட்டான்” என ஆத்திரம் காட்டினான்.

“ஆம். அந்த சாணக்கியனை அழித்து மொத்த மகதத்தையும் நான் அடையாமல் விடமாட்டேன்” எனக் கறுவத் தொடங்கிய மலையகேது சொன்னான்.

“பாகுராயா, பர்வதேஸ்வரன் சாவுக்கு பழிவாங்காமல் நான் ஈமகாரியம் செய்யமாட்டேன். நீ மகதத்திலே வைரோகதனோடு இரு, பாதிராஜ்ஜியமெல்லாம் நமக்கு அவசியமில்லை. நமக்கு தேவை சாணக்கியன் தலையும் மொத்த நாடும்” என உறுமினான்.

மலையகேதுவிடம் உத்தரவு பெற்று திரும்பினான் பாகுராயன்.

சாணக்கியன் இப்படி பல ஏற்பாடுகளை செய்துகொண்டே நிலவரங்களை பார்த்துக் கொண்டே இருந்தான். பட்டாபிஷேகம் செய்ய நாட்களை கடத்தியே வந்தான். ஏதோ ஒன்று நடக்கப்போவதை எதிர்பார்த்தான்.

அதே நேரம் தலைமறைவான ராஸஷன் மிகச் சிரமப்பட்டு மலையகேதுவினை சந்தித்தான். ஏற்கனவே சாணக்கியனால் பாகுராயன் மூலம் ஆத்திரமூட்டப்பட்ட மலையகேதுவுக்கு ராஸஷனின் வருகை பெரும் பலமானது.

“மலையகேதுவே, சாணக்கியனுக்கு எந்த வகையிலும் சளைத்தவனல்ல நான், அவனின் வழிகள் எல்லாமும் நானும் அறிவேன்.

நடந்ததை சொல்வேன் பொறுப்பீராக‌.

முழு மகததத்தையும் பர்வதேஸ்வரனிடம் கொடுக்க நானே திட்டமிட்டேன். அப்படித்தான் ஒரு நாக கன்னிகையினை அனுப்பி சந்திரகுப்தனை ஒழிக்கமுயன்றோம்.

சந்திரகுப்தன் இல்லா சாணக்கியன் பல் பிடுங்கிய பாம்பு என்பதால் அவனை சரித்துவிட்டு சாணக்கியனை விரட்டிவிடுவதுதான் திட்டம்.

ஆனால், எங்கோ எப்படியோ அது தவறாகி நம்மன்னர் இறந்துவிட்டார், நிச்சயம் இதை செய்தவன் சாணக்கியனே.

மன்னா, நான் உன்னோடு இருந்து பர்வதேஸ்வரன் இழப்புக்கு பழிவாங்குவேன், நான் இப்போது சாணக்கியனால் குலம் இழந்து குடும்பம் இழந்து தனித்து நிற்கின்றேன், அவனை ஒழிக்காமல் இனி ஓயமாட்டேன்” எனச் சூளுரைத்தான்.

“ராஸஷரே, நீர் இனி என் முதல் அமைச்சராக அமர்வீர், எங்களுடன் இருந்து சாணக்கியனை அழிக்க நடக்கும் இப்பெரும்போரில் வழிநடத்துவீர்” என அவரை அமைச்சராக்கினான்.

“ஏ சாணக்கியா, நந்தர்களை வீழ்த்த என்னை ஒழிக்க முயன்றாயா? இனி பார், இந்த மலையகேதுவுடன் சேர்ந்து உன்னை எப்படி ஓடவிட்டு அடிக்கின்றேன் எனப் பாரடா.

இனி நான் யாரென உனக்குத் தெரியும், உன் கடைசிநொடிகளின் என் முகம் நினையாமல் சாகமாட்டாய்” எனச் சபதம் செய்தான்.

மலையகேது பெரும் வியூகத்தில் இறங்கினான், மகதமெல்லாம் அவன் உளவாளிகள் களமிறங்கினார்கள்.

ராஸஷன் மலையகேதுவுடன் சேர்ந்துவிட்டான் எனும் செய்தி சாணக்கியனை எட்டிற்று. அவன் புன்னகைத்து சொன்னான்.

“நல்லது, எங்கோ ராஸஷன் மறைந்திருந்தால்தானே ஆபத்து, எதிரிகள் ஒன்றாய் சேர்ந்துவிட்டால் நமக்கு நல்லதுதானே, ஒரு கவலை ஒழிந்தது” என்றவன் சிரித்தபடி சொன்னான்.

“ஒற்றை பிராமணனாக கையில் ஒரு தர்ப்பை புல்லுடன் மகதம் வந்தவன் நான், இன்று என்னிடம் சந்திரகுப்தன் இருக்கின்றான், பெரும் சேனை இருக்கின்றது, வைரோகாதனும் பாகுராயனும் இருக்கின்றார்கள்.

அப்போதே கலங்காத நான் இனி விடுவேனா…”

இரு வீரர்கள் நேரில் மோதுவதை விட இரு அறிவாளிகள் பின்னால் இருந்து அவர்களை மோதவிடும் காட்சி எப்போதுமே சுவாரஸ்யமானது, அதே நேரம் அதிதீவிரமானது.

அப்படி ஒரு காட்சிக்கு மகதம் தயாராகிக் கொண்டிருந்தது, அதே நேரம் சந்திரகுப்தனை ரகசியமாக போட்டு தள்ளும் பொறுப்பை தன் நண்பர்களிடம் விட்டுவந்த ராஸஷன் அதை இன்னும் தூண்டிவிட்டான்.

ஆபத்துக்கள் சந்திரகுப்தனை சூழ ஆரம்பித்தன, சாணக்கியனை மடைமாற்றிவிட்டு அவனை கொல்லும் திட்டம் தயாரானது.

(தொடரும்..)