சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 14
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 14
மலையகேது அரசவையில் பெரும் இடம் பெற்றான் ராஷசன்.
அவனின் அறிவுக் கூர்மையும், அவன் சொன்ன வியூகங்களும், எடுத்துரைத்த நீதிகளும், இன்னும் பலவும் நிச்சயம் அவன் ஒரு மாபெரும் ராஜதந்திரி என்பதைச் சொன்னது.
உண்மையில் அவன் மாபெரும் அறிவாளியாக இருந்தான். அந்த அறிவினை எல்லாம் வஞ்சகம் எனும் விஷம் பாழாக்கியிருந்தது. அந்த வஞ்சகம் சந்திரகுப்தனுக்கு எதிரான விஷமாய் இறுகியிருந்தது. சந்திரகுப்தனைக் கொன்று சாணக்கியனைத் தனிமைப்படுத்தி விரட்டிவிட்டு மீண்டும் மகதநாட்டை கைப்பற்றுவதிலே அவன் கவனமாய் இருந்தான்.
அவனின் பெரும் அறிவிலும் அனுபவத்திலும் அசந்துபோன மலையகேது அவனைத் தலைமை அமைச்சனாக்கி அருகே வைத்துக் கொண்டான்.
ராஷசனும் பலமானவர்களும் எந்த நிலையினையும் சமாளிப்பவர்களுமான சிற்றரசர்கள் ஐவரைத் தன் கூட்டாளியாக்கிக் கொண்டான்.
கௌலுபன், சித்திரவர்மன், மலையாதிபன், சிம்மநாதன், புஷ்கராஷன் என ஐவரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். பெரும் சக்திவாய்ந்த படையாக தன்னை மெல்ல மெல்ல விரிவாக்கிக் கொண்டே இருந்தான்.
அதே நேரம் குஸ்மபுரம் எனும் பாடலிபுத்திரத்தில் தன் கூட்டாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் மிக மிக கவனமாய் இருந்தான். விராதகுப்தன் என்பவன் அவனின் நம்பிக்கைகுரியவனாக இருந்து அங்கு நடக்கும் காரியங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
விராதகுப்தன் முன்பே சாணக்கியன் ஏற்பாடு செய்திருந்த தாருவர்மனோடு ரகசிய சதிகளைச் செய்தான். சந்திரகுப்தனைக் கொல்வதே அவர்கள் இலக்காய் இருந்தது.
பர்வதேஸ்வரன் சாவுக்குச் சந்திரகுப்தன் தலையினை எடுத்துப் பழிதீர்ப்பேன் என மலையகேதுவிடம் அவன் சபதம் செய்திருந்தான்.
வைரோகதன் என்பவன் சாணக்கியன் தனக்குப் பாதிராஜ்ஜியம் தருவான் எனும் நம்பிக்கையில் இங்கே காவலாய் இருந்தான், மலையகேது அவனுடன் தொடர்பில் இருந்தாலும் இருவருக்கிடையில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன.
வைரோகதனை சாணக்கியன் முழுக்க நம்பவில்லை, அவன் இயல்பு அது. அரசியலில் இருக்கும் ராஜதந்திரி இன்னொரு தேசத்தவனை கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்து. காரணம், அவனவனுக்கு அவன் நலம், அவன் நாடு மக்கள் நலமே முக்கியம். அரசியலில் முழு நல்லவர்கள், உயிர் நண்பர்கள் என எதுவுமே இருக்கமுடியாது, அங்குச் சந்தேகம் எப்போதும் இருந்தாக வேண்டும்.
அதனால் வைரோகதனை ஓரக்கண்ணால் கவனமாக பார்த்துக்கொண்டே இருந்தான். அவனும் ஒருவகையான ராஜதந்திர அணுகுமுறையே செய்து கொண்டிருந்தான்.
சாணக்கியனுக்கு ஒரு நெருக்கடி உண்டாயிற்று, அது சந்திரகுப்தனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று முடிசூட்டுவது, அதை இன்னும் தாமதிக்கமுடியாது.
இதனால் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான்.
அதை உடனே அவனால் செய்யமுடியாது. காரணம், முன்பே சொன்னபடி பாதுகாப்பு சிக்கல்கள் அதிகம் இருந்தன. ஒரு அரசு அந்நியரிடம் இருந்து பறிக்கப்படும் போது அங்கே எல்லாமும் அடிமட்டம் வரை மாற்றவேண்டும்.
சாணக்கியன் அதை தன் ஆட்களால் நிரப்பியிருந்தான். ஆனால், அங்கே அவன் அறியா ஆபத்து தாருவர்மன் வடிவில் வந்திருந்தது.
தாருவர்மன் சாணக்கியன் ஆளாக தன்னைக் காட்டிக்கொண்டான். போரினால் இடிந்திருந்த பல இடங்களைக் கோட்டைகளை மதில்களை மீளக்கட்டும் பொறுப்பில் இருந்தான்.
சாணக்கியன் இவன்மேல் சந்தேகம் கொள்ளவில்லை, அந்த அளவு மிக நேர்த்தியான உளவாளியாக இருந்தான் தாருவர்மன்.
சாணக்கியன் சந்திரகுப்தனை நகருக்குள் அழைத்துச் செல்ல நாள் குறிக்கத் தொடங்கினான். இம்மாதிரி விஷயங்கள் ராஜரீகமானது. அவன் மட்டும் முடிவெடுப்பதை விட சாஸ்திரிகளைக் கலந்து முடிவெடுப்பதே சாலச்சிறந்தது.
அதனால் நாட்டில் இருந்த தேர்ந்த சாஸ்திரிகள், ஜோதிட விற்பன்னர்கள் எல்லோரையும் வரவழைத்து ஆலோசித்தான்.
அவர்கள் சகல நாட்களையும் ஜாதகரீதியாக அதன் தாத்பரியங்களையும் அலசி ஆராய்ந்தனர்.
அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு சரியான தேர்வாக எல்லா அம்சமும் பொருந்திய பொழுதாக இருந்தது.
சாஸ்திரப்படி ஷத்திரியனுக்கு ராவுமில்லை, பகலுமில்லை என்பார்கள். ஒரு பிராமணன் தொழில், ஒரு விவசாயின் தொழில் சூரியன் முன்னால் நடக்கவேண்டும். அவர்களுக்கான நல்ல நேரமெல்லாம் சூரியன் இருக்கும் போது என்பது அடிப்படை சாஸ்திரம்.
ஆனால், ஷத்திரிய தர்மம் அப்படி அல்ல. அவர்கள் காவலர்கள் இரவு பகலாக கண்விழித்து காவல் பணி செய்யவேண்டியவர்கள். அதனால் நடுநிசி என்பது அவர்களுக்கு ஜாதகரீதியாக அனுமதிக்கப்பட்டது.
ஷத்திரியனான சந்திரகுப்தன் நள்ளிரவில் நகரப் பிரவேசம் செய்வதில் ஜோதிடர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றபின் அதற்கான திட்டங்களில் இறங்கினான் சாணக்கியன்.
அதே நேரம் திட்டத்தை சரியாக உளவெடுத்து விஷயத்தை ராஷசனுக்கு அனுப்பினான் விராதகுப்தன்.
ராஷசன் அவசரமானான். நள்ளிரவில் சந்திரகுப்தன் வருவது அபாரமான வாய்ப்பு, அவனைச் சரித்துப் போட அற்புதமான வாய்ப்பு எனத் தாருவர்மனுக்குத் தகவல் அனுப்பினான்.
தாருவர்மன் இந்த வாய்ப்பை விடுவதில்லை எனப் பதில் அனுப்பிவிட்டு ஊர்வலம் வரும் சந்திரகுப்தனை எப்படிக் கொல்வது என ஆலோசிக்கத் தொடங்கினான்.
இந்தச் சதி மிக மிக ரகசியமாக இருந்தது.
சாணக்கியன் தன் இயல்பான எச்சரிக்கையுடன் சில நாட்கள் அமைதியாக இருந்து நடப்பதை கவனித்துக்கொண்டே இருந்தான்.
அங்கே தாருவர்மன் மிகத் தீவிரமாக கோட்டை சிற்பங்களை அலங்காரம் செய்வதும், கோட்டையின் மேற்புறம் பல நிலைகளை எழுப்புவதுமாக ஒருமாதிரி சுற்றி சுற்றி திரிந்தான்.
சந்திரகுப்தன் பிரவேசம் செய்யுமுன் ஒவ்வொரு கல்லும் கூட பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருந்த சாணக்கியனுக்குத் தாருவர்மனின் அதீத அக்கறை மெல்லிய சலனத்தை கொடுத்தது, ஆனால் வெளிகாட்டவில்லை.
பின், எல்லாம் அலசியவன் கோட்டையில் வேறேதும் ஆபத்து இருக்கமுடியாது என நினைந்து தன் தலைமை அமைச்சரிடம் சொன்னான்.
“அமைச்சரே, இனியும் தாமதிக்க முடியாது, போர்முடிந்து நாட்கள் ஆயிற்று. இன்னும் மன்னர் இல்லாத தேசமாக நாடு இருக்கமுடியாது.
அதனால் இருவாரம் கழித்து வரும் புதன்கிழமை இரவில் மன்னர் சந்திரகுப்தன் பட்டிணப்பிரவேசமாக அரண்மனைக்கு வந்து முடிசூட்டிக் கொள்வார்.
நீங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்; அலங்கார வளைவுகள் மலர் பந்தல்களெல்லாம் ஏற்பாடு செய்யுங்கள்; தடாகங்களில் பூக்கள் இன்னும் எல்லா வரவேற்பும் அசத்தட்டும்.
ஆடல், பாடல் என எல்லாமும் ஏற்பாடு செய்யுங்கள்; இரவு என்பதால் தீப்பந்தங்கள் பெரிதாக எரியவேண்டும்; தொடர்ந்து எரியும்படியும் அவசரகாலம் என்றால் மாற்று ஏற்பாடும் தயாராக இருக்க வேண்டும்; எல்லா ஏற்பாடுகளும் நாளை முதல் ஆரம்பமாகட்டும்.
பூஜை சாஸ்திரங்கள் நான் தொடங்குகின்றேன். சந்திரகுப்தன் 11 நாள் பால் பழம் என விரதமிருப்பான், நானும் யாகத்தில் இறங்க இருக்கின்றேன். அதனால் எல்லா ஏற்பாடுகளையும் நீங்கள் செய்யுங்கள்”
அந்த அமைச்சர் சொன்னார், “சாணக்கியரே, அந்தக் கவலை வேண்டாம், இதெல்லாம் ஊகித்துத் தாருவர்மன் எலலா ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கிவிட்டார்”
ஒருகணம் மின்னலென சாணக்கியன் மனதில் எச்சரிக்கை வெட்டிற்று.
“நாம் குறிப்பிட்ட நாளில் சந்திரகுப்தனுக்குப் பட்டிணப் பிரவேசம் என்பது நமக்குள் வைத்திருந்த விஷயம், தாருவர்மன் எப்படி அதை ஊகித்தான்?
அவன் பழுதுபார்க்கும் பணி செய்தான் என நினைந்தால் வரவேற்பு வேலைகளும் செய்கின்றானா? ஏன் தொடங்கினான்? நாம் சொல்லாமலே எப்படித் தொடங்கினான்?”
சாணக்கியனின் இயல்பான எச்சரிக்கை நாகம் மெல்ல சீறத் தொடங்கிற்று, சாணக்கியனின் மூச்சு உஷ்ணமாயிற்று.
எங்கோ ஏதோ தவறு நடக்கின்றது, எங்கோ சரியில்லை.
ஆனால், இதனை உடனே வெளிச்சொல்லி பட்டிணப்பிரவேசத்தை நிறுத்தினால் சந்திரகுப்தனுக்கு ஆபத்து தொடருமே அன்றித் தீராது.
எதிரிகள் திட்டத்தைத் தள்ளி போடுவார்களே தவிர அவர்கள் யார் என்ன திட்டம் எனக் கண்டுபிடிக்க முடியாது.
இதனால் அவன் மனதார பெரும் திட்டம் தீட்டினான், ஒரே கல்லில் இரு விஷயங்களைக் களைந்துவிட முடிவெடுத்து புன்னகைத்து தன் கூந்தலை தடவி சிலிர்த்துக் கொண்டான்.
சந்திரகுப்தன் நடுநிசியில் கிரகப்பிரவேசம் செய்யப்போகின்றான் எனும் செய்தி எல்லா இடமும் பரவிற்று, பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சந்திரகுப்தனும் தயாரானான்.
தாருவர்மன் மிகப்பெரிய சதிக்குத் தயாரானான்.
அவன் திட்டம் அதிபயங்கரமானது, கோட்டை வாசலுக்குச் சற்று தள்ளி அவன் சதிதிட்டமிருந்தது, அவன் கோட்டை மதிலின் உட்புறத்தில் அலங்கார கற்சிலைகள் பல நிறுவியிருந்தான்.
அதில் ஒரு பெரிய பாரமுள்ள சிலையினைச் சாந்து போட்டு ஒட்டாமல் நிறுத்திவைத்தான். அதாவது சந்திரகுப்தன் வரும்போது அந்தச் சிலையினை அவன்மேல் தள்ளிக் கொல்ல ஏற்பாடு.
விசாரணை வந்தால் சரியாக நிறுவப்படாத சிலை சந்திரகுப்தன் மேல் விழுந்து கொன்றுவிட்டது என எளிதாக கவனத்தைத் திசை திருப்பலாம் என்ற வியூகம் அது.
ஒருவேளை அந்தக் கல்சிலை தவறிவிழுந்தால் எப்படிக் கொல்வது என மாற்று வியூகமும் அமைத்திருந்தான்.
அதன்படி சந்திரகுப்தன் வரும் யானையில் அம்பாரி அருகில் அமரும் இன்னொருவனை தயார் செய்தான். அவன் பார்ப்பாரகன் என்பவனைத் தேர்ந்தெடுத்தான்.
ஒரு பட்டத்து யானையில் ஒரு மாவுத்தனோடு இன்னொரு மெய்காப்பாளன் குதிரை வித்தை தெரிந்தவன் அரசனோடு பின்னால் அமர்ந்திருப்பான்.
பட்டத்து யானைக்கு ஏதும் ஆபத்து என்றால் அரசனைக் காப்பாற்றி மின்னல் வேகத்தில் தப்பிக்க வைக்கவேண்டும் எனும் பாதுகாப்பு ஏற்பாடு அது, இது இயல்பானது.
அம்பாரியினை ஒட்டி மன்னனுக்குப் பின்னால் காவலாக அமரும் அவனை வளைத்திருந்தான் தாருவர்மன்.
அவர்கள் சதிசெயல்படி பட்டத்துயானை அலங்கரிக்கப்படும் போது பெரிய பட்டுதுணி தன் மேல் போர்த்தப்பட்டிருக்க்கும், அதன் இருபுறமும் காற்றில் பறக்காதபடி தங்கக்குழாய்கள் கட்டப்பட்டிருக்கும்.
அந்தத் தங்க குழாய்களில் ஒன்றினுள் ஒரு விஷம் தடவிய ஈட்டியினை பதுக்கியிருந்தான் பார்பரகன், ஒருவேளை அந்தக் கல்சிலை விழுந்தும் சந்திரகுப்தன் தப்பினால் அவனை அந்தக் குழப்பத்தில் கொன்றுவிடும் ஏற்பாடு அது.
அதிலும் சந்திரகுப்தன் தப்பினால் அவனைக் கொல்ல ஒரு ஆயுதத்தை மறைத்தபடி நிற்பது தாருவர்மனின் திட்டம்.
இப்படி வெகுநேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது.
இரவில் இந்தச் சதி எளிதில் அரங்கேறிவிடும் ஆபத்து உண்டு, இதனால் சதிகாரர்கள் மிகுந்த கவனமாய் உற்சாகமாய் இருந்தார்கள்.
உரிய நாளும் வந்தது. சந்திரகுப்தன் விரதம் முடித்துத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனின் பட்டத்துயானை “சந்திரலேகை” எனும் சர்வலட்சணம் பொருந்திய யானையும் கம்பீரமாக தயாரானது.
அதன் தந்தங்களில் தங்கப்பூண் பூட்டப்பட்டது. அதன் தலைக்குத் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. அதன் மேல் பட்டுத் துகில் போர்த்தி அம்பாறை கட்டப்பட்டது.
அந்தப் பட்டுத்துகிலின் இருபக்க தங்கக்குழாய் ஒன்றில் விஷம் தடவிய ஈட்டியினைச் சரியாக மறைத்துவைத்தான் பார்பரகன்.
சாணக்கியன் எதையும் வெளிகாட்டாமல் அடிக்கடி தாருவர்மனை அழைத்து எல்லா ஏற்பாடும் தயாரா என ஒன்றுமறியாதவன் போல் கேட்டுக் கொண்டிருந்தான்.
தாருவர்மனும் தன் சாமர்த்தியத்தை தனக்குள் புகழ்ந்தபடி எல்லாம் தயார் தயார் எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். சாணக்கியனும் ஒப்புக்கொண்டது போல் தலையாட்டினான்.
உரிய நாள் வந்தது. அன்று மாலை பெரிய காளிபூஜை இருந்தது. உரிய பூஜைகள் முடிந்ததும் பட்டிணப் பிரவேசம் தயாராகும் நேரம் வந்தது.
இனிச் சந்திரகுப்தன் வந்து யானையில் அமரவேண்டும், பெரும் ஊர்வலத்துடன் யானை கிளம்பிக் கோட்டை வாசலைக் கடந்து அரண்மனை நோக்கிச் செல்ல வேண்டும்.
பட்டாடை உடுத்தி பெரும் நகைகளெல்லாம் பூண்டு நெற்றியில் திருநீறும், குங்குமமும் ஜொலிக்க வாசனை திரவியமெல்லாம் பூசி இடுப்பில் வாள் மின்ன வந்த சந்திரகுப்தன் சாணக்கியன் காலை தொட்டு வணங்கினான்.
“நீண்டநாள் வாழ்ந்து பெரும் அரசைசெலுத்து. சனாதான தர்மத்துக்கும் இந்துஸ்தானத்துக்கும் நீ காவலாய் இருக்க அன்னை மாகாளி அருள்தரட்டும்” என வாழ்த்தி சில மந்திர உச்சாடனைகளைச் சொல்லி அவனை முழுக்க ஆசீர்வதித்தான் சாணக்கியன்.
அதே நேரம் தாருவர்மன் ஆட்கள் அந்தக் கற்சிலையின் பின் பதுங்கி இருந்தனர், உரிய இடம் வரும்போது ஒரு தீப்பந்தம் அணைக்கப்படும், அந்தச் சமிக்கையினை அறிந்து அவர்கள் கற்சிலையினைச் சந்திரகுப்தன் மேல் வீசவேண்டும்.
அவர்களும் தயாரானார்கள்.
அங்கே எப்போது செய்திவருமோ என மிகப் பதட்டத்த்தில் இருந்தான் ராஷசன்.
சாணக்கியனிடம் விடைபெற்று சந்திரகுப்தன் யானை நோக்கிச் செல்லும் போது சாணக்கியன் சொன்னான், “சந்திர குப்தா கொஞ்சம் பொறு இந்த யானையில் செல்லவேண்டியது நீ அல்ல, உனக்கான பொழுதும் இது அல்ல.
இந்த நேரம் சரியில்லாதது. இது இன்னும் சில நாழிகை நீடிக்கும், அதனால் சற்று ஓய்வில் இரு” என்றான்.
சாணக்கியன் சொல்லைக் கேட்டு சந்திரகுப்தன் திரும்பியபோது, மன்னர் வாழ்க, மாமன்னர் வாழ்க வாழ்க எனும் கோஷத்துடன் பட்டத்து யானை ஊர்வலமாக கிளம்பியது.
சந்திரகுப்தன் அதிர்ந்தான். அவன் முகத்தில் குழப்பங்கள் வந்தன. சாணக்கியன் புன்னகைத்துச் சொன்னான், “கொஞ்சம் ஓய்வாக இரு, இப்போது உன் வேலை அது மட்டும்தான்”
சொன்னவன் உரிய காவலோடு சற்றுத்தள்ளி ஊர்வலத்தில் யாருமறியாதபடி மாறுவேடத்தில் செல்ல ஆரம்பித்தான்.
(தொடரும்..)