சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 15

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 15

இரவில் அந்த யானையில் சென்றது சந்திரகுப்தன் அல்ல. மாறாக, வைரோதகன்.

சாணக்கியன் ஏதோ நடக்க இருப்பதை ஊகித்து அதைப் பரிசோதிக்க சந்திரகுப்தன் அரண்மனைக்கு வருகின்றான் என அறிவித்த ஊர்வலத்தில் பட்டத்து யானையில் வைரோதகனை அமர வைத்திருந்தான்.

முன்பே “ஐயா வைரோதகா, நாம் இப்போது அரண்மனைக்குள் செல்ல இருக்கின்றோம், இந்த மகத நாட்டில் இனி பாதி ராஜ்ஜியம் உன்னுடையது அல்லவா? அதனால் நீயும் இந்நாட்டின் அரசன் அல்லவா? அதனால் நீயும் பட்டத்து யானையில் வரவேண்டும்.

அதுதான் சரியான அங்கீகாரமாக அமையும். அதனால் நீதான் முதல் பட்டத்து யானையில் வர ஏற்பாடு செய்துள்ளேன்” எனச் சொல்லி அவனைப் பவனிவர ஏற்பாடு செய்திருந்தான் சாணக்கியன்.

இது யாரும் அறியாதவாறு பார்த்துக் கொண்டான். எல்லோருக்கும் அது சந்திரகுப்தன் என்பது போல தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிதான் அந்தப் பவனி நடந்தது.

எல்லோருக்கும் சந்திரகுப்தன் பவனி வருவதாக நினைத்திருக்க அங்கே இருந்ததோ வைரோகதன்.

இது அறியாத தாருவர்மன் தங்கள் திட்டப்படி அந்த இரவில் அவனை கொல்லத் தயாரானான். அதன்படி, சரியாக காத்திருந்தான்.

அந்தப் பவனி கோட்டை வாசலை அடைந்தது, எல்லோரும் சந்திரகுப்தன் வாழ்க எனச் சொன்னபோது அது பின்னால் வரும் சந்திரகுப்தனுக்காக என நினைத்துக் கொண்டான் வைரோதகன்.

ஆனால், பின்னால் சந்திரகுப்தன் வராமல் இருந்தது அவனுக்குத் தெரியாது. தாருவர்மனுக்கு அருகில் நெருக்கமாக வந்தது பட்டத்து யானை.

தாருவர்மன் பரபரப்பானான். சரியான இடம்வரும் போது தன் ஆட்களுக்கு கண்ணைக் காட்டினான், அவர்கள் தீப்பந்தத்தை மெல்ல அசைத்தார்கள்.

தாருவர்மனின் ஆட்கள் பதற்றத்தில் கல்சிலையினை அசைத்தார்கள், சரியாக வீசத் தயாரானார்கள். அப்போதுதான் அந்தத் தவறு நடந்தது.

யானையில் அமர்ந்திருந்த பார்ப்பாரகன் அந்தத் தங்கக் குழாயில் இருந்து ஈட்டியினை உருவினான். அப்போது ஒரு ஓசை எழுந்தது.

பொதுவாக யானைகள் உணர்வுப்பூர்வமானவை, அதுவும் காதோரம் எழும் ஓசைகள் அதற்கு மிரட்சியினை கொடுக்கும், அப்படி அந்த ஒசை கேட்டு மிரண்டது யானை.

அப்போது அதை அறியாத தாருவர்மன் ஆட்கள் மேலிருந்து அந்தச் சிலையினை வீசினார்கள். அது யானை மிரண்டதால் குறிதவறி பார்ப்பாரகன் தலையில் விழுந்து அவன் இறந்தான்.

தாருவர்மன் தன் திட்டம் பாழானாதல் இடிவிழுந்தது போலானான். இனி, தாமதிப்பதில்லை என்றவன் சந்திரகுப்தனை விடமாட்டேன் என மறைத்து வைத்திருந்த கோடாரியினை எடுத்துக் கொண்டு முன் திட்டமிட்டப்படி தயாராக இருந்த‌ ஒரு கயிறை பற்றிக் கொண்டு வேகமாக ஏறி யானை மேல் இருந்த வைரோதகனை வெட்டிக் கொன்றான்.

தன் பின்னால் பார்ப்பாரகன் மேல் கல்சிலை விழுந்து அவன் சாவதைக் கண்டு அரண்ட வைரோதகன், என்ன நடக்கின்றது என சுதாரிக்குமுன் அவனை வெட்டிய தாருவர்மனை வைரோதகனின் மெய்க்காவலர்கள் கொன்றார்கள்.

பட்டத்து யானை மிக மிரண்டது, பாகன்கள் அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த இடம் ரத்தக் களறியாக கிடந்தது. வைரோதகன் பார்ப்பாரகன், தாருவர்மன் என மூவரும் செத்துக் கிடந்தனர். ரத்தம் தரையெல்லாம் பரவிக் கிடந்தது.

சாணக்கியன் ஓரமாக நின்று புன்னகைத்தான். எப்படிப்பட்ட ஆபத்தில் சந்திரகுப்தன் சிக்க இருந்தான் என்பதை எண்ணிப் பார்த்தவன் “சிவனே, உன் தேசத்தை நீ காத்துக் கொண்டாய்” எனச் சொல்லிக்கொண்டான்.

சந்திரகுப்த மன்னர் இறந்தான் எனும் செய்தி அந்த இரவில் பரவிற்று. எல்லோரும் பெரும் அதிர்ச்சிக் கொண்டார்கள். சாணக்கியன் அந்தச் செய்தியினைக் கேட்டு சந்திரகுப்தனோடு சிரித்துக் கொண்டான்.

சந்திரகுப்தனுக்கு வர இருந்த பெரும் ஆபத்து, கடைசிக்கட்ட ஆபத்து முறியடிக்கப்பட்டது. எனினும், சாணக்கியன் திருப்தி கொள்ளவில்லை.

இருவர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் அவ்வளவுதான். இன்னும் எத்தனைபேர் நாட்டுக்குள் உண்டு. அவர்கள் என்னென்ன திட்டமெல்லாமோ வைத்திருப்பார்கள் என்பதை ஊகித்தவன் காவலை, சோதனைகளை பலப்படுத்தினான்.

காசியில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு பல பூஜைகள் செய்யப்பட்டு அந்தக் கோட்டை வாசலில் பரிகாரம் தேடப்பட்டது.

“சந்திரகுப்தா கலங்காதே, சில காரியங்கள் தொடங்குமுன் பலிகொடுத்தல் அவசியம், பலி என்பது பல புரிந்துகொள்ளமுடியாச் சக்திகளை திருப்திபடுத்தும் விஷயம்.

இப்போது யார் செத்திருக்கின்றார்கள், இந்த நாட்டை பாதி வாங்க வந்த வைரோதகனும், உன்னைக் கொல்லத்தேடிய தாருவர்மனும் செத்திருக்கின்றார்கள், நம் கோட்டை வாசலில் நமக்கு சாதகமான விஷயம் நடந்திருக்கின்றது, எல்லாம் நன்மைக்கே.

எதிரிகள் வைத்த வலையில் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். நம் தெய்வம் நம்மோடு இருக்கின்றது” என அவனை உற்சாகப்படுத்தினான்.

தாருவர்மன் எனும் தன் நண்பன் இறந்துவிட்டான், அதுவும் வைரோதகனோடு இறந்துவிட்டான் எனும் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான் ராஷசன்.

வைரோதகன் தன் மிகப்பெரிய பலம், அவனையும் சாணக்கியன் தந்திரத்தால் ஒழித்தான் என அறிந்த மலையகேது சினம் கொண்ட நாகமாய் சீறிக் கொண்டிருந்தான். ஆனால், இனியும் சாணக்கியனை உரசினால் என்னென்ன இழப்போமோ எனும் கலக்கமும் இருந்தது.

பர்வதேஸ்வரன், வைரோதகன் என இருவரைப் பலிகொடுத்தவன் யோசிக்கத் தொடங்கினான. அவனின் அச்சத்தை கண்ட ராஷசன் சொன்னான்.

“மன்னரே, எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் அந்தச் சந்திரகுப்தனை இங்கிருந்தே முடித்துவிடுகின்றேன், ஒவ்வொரு முறையும் அவன் அதிர்ஷ்டம் ஒன்றாலே தப்பிக் கொண்டிருக்கின்றான்.

ஆனால், அது எப்போதும் கைகொடுக்காது என்பதை அறிவீர்கள். நாம் நூறுமுறை தோற்றாலும் சிக்கல் இல்லை. ஆனால், ஒரு வெற்றி ஒரே ஒரு முயற்சியின் வெற்றி எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும், அவனை ஒழித்த அக்கணம் இதெல்லாம் மறந்தே போகும்.

அதனால் நாம் முயன்றுகொண்டே இருப்போம். நான் அவனை அழித்துக் காட்டுகின்றேன்” எனச் சவால்விட்டான்.

“அறிவில் சிறந்த ராஷசரே, உம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும், பர்வதேஸ்வரன் இழப்பில் இருந்து நான் எழும் முன் இந்த வைரோதகனின் மரணம் என்னை மனதளவில் பாதித்துவிட்டது.

இது யுத்தம் என்றால் நேருக்கு நேர் நின்றுவிடலாம். ஆனால், இது சூழ்ச்சி மகா நுணுக்கமான சூழ்ச்சி. அந்தக் கலையில் சாணக்கியன் கைதேர்ந்தவன். அவனுக்குச் சவால் கொடுக்க உம்மால்தான் முடியும், இனி அவன் சொன்னபடி பாதிராஜ்ஜியம் தரமாட்டான்.

அதை மோதிவாங்கவும் நாம் தயார் இல்லை. அதனால் நீர் ஏதாவது செய்யும். நாம் பின்னாளில் மோதலைக் கவனிக்கலாம்” என விட்டுவிட்டான்.

ராஷசன் அதி தீவிரமாமான். தன் உளவாளிகள் மூலம் அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டினான். தாருவர்மன் இறந்தால் என்ன ஏகப்பட்ட பேர் தனக்கு உண்டு எனச் சொல்லி பெரும் சதிகளில் இறங்கினான்.

சாணக்கியன் மறுபடி சந்திரகுப்தனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று பட்டாபிஷேகம் செய்வது எப்படி எனும் ஆலோசனையில் அமர்ந்தான். அவன் சிக்கல் சந்திரகுப்தனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது மட்டுமல்ல, அதை அடுத்தக் கடமைகள் இருந்தன‌.

அவன் பாரத கண்டம் முழுக்கச் சுற்றிவந்து சனாதன தர்மத்தை காக்கச் சபதமெடுத்தவன். பாரதகண்டத்தின் முக்கிய தேசம் மகதம். அங்கே நந்தர்கள் எனும் முரடர்கள் ஆள்கின்றார்கள், இவர்களை எளிதில் வசப்படுத்தி பௌத்தம் ஆட்சியினைப் பிடிக்கும், அப்படிச் செய்தால் அது பாரத கண்டத்தை பலவீனமாக்கும்.

அந்தப் பலவீனத்தில் யவணர் எனும் கிரேக்கர் நுழைந்துவிடுவர். இந்த மண் பௌத்தராலும், கிரேக்கராலும் சனாதனதர்மத்தை இழக்கும். அதனால் இந்தத் தேசத்தின் அரசுகள் முக்கியம் என்பதில் அவன் கவனமாய் இருந்தான்.

அவன் மகதத்தில் வலுவான இந்து அரசு அமையவேண்டும் எனச் சந்திரகுப்தனை உருவாக்கினானே தவிர அங்கே சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

அவன் பாரத கண்டம் முழுக்கச் செல்லவும், எல்லாப் பல்கலைகழகத்தினையும், வேதபாடசாலையும் கவனிக்கவும், தேவைப்படும் நெறிகளை வகுத்துத் கொடுக்கவும், புண்ணிய ஷேத்திரங்களின் நிலையினைக் காணவும், அங்கிருக்கும் அரசுகள் நிலை என்ன? எல்லாம் சரியாக இருக்கின்றதா, சரியில்லை என்றால் எப்படிப் பலப்படுத்துவது என்பதையும் கடமையாக கர்மமாகக் கொண்டவன்.

இதனால் மகதத்தில் அவன் சந்திரகுப்தன் பக்கம் அமர்ந்து அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. அதே நேரம் ஆபத்து மிகுந்த நேரம் சந்திரகுப்தனை விட்டு விலகவும் விரும்பவில்லை.

விரைவில் எல்லாம் சரிசெய்து சந்திரகுப்தனின் எதிரிகளை ஒழித்துவிட்டு, பாதுகாப்பான சூழலில் சந்திரகுப்தனை வைத்துவிட்டு, தன் கடமையினைத் தொடரவே விரைந்தான்.

அவனுக்குப் பாரத கண்டமும், அதன் சனாதன தர்மமும் அவ்வளவு முக்கியம், அவன் வாழ்வையே அதற்குத்தான் அர்ப்பணித்தான்.

அப்படியானவன் தொடரும் இந்த ஆபத்துக்களை எப்படிக் களைவது என யோசித்தபோது ஒரு வைத்தியன் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவன் பெயர் சுபேதன்.

அவன் சொன்னான், “மன்னரே , நான் உங்களுக்கு ஒரு விசேஷ மூலிகை கலவை செய்திருக்கின்றேன், பலவகை மூலிகளை பதம் செய்து அரைத்துச் செய்த குளிகை இது.

இதனைக் காலையும், மாலையும் நீங்கள் உண்டுவந்தால் நோய் அண்டாது, இளமை நீளும், ரத்தம் புஷ்டியாகும் ஆயுள் பெரியதாகும். மாமன்னர் நீண்டகாலம் வாழ இதனை நான் செய்துள்ளேன்” என்றான்.

சந்திரகுப்தன் அதனை மகிழ்ச்சியோடு வாங்கிப் பரிசு கொடுத்து அமரவைத்தவன், சாணக்கியனை வரச்சொன்னான். அவனுக்கு எல்லாமே சாணக்கியனாய் இருந்தான்.

அவன் வந்ததும் அந்தக் குளிகைகளைச் சாணக்கியனிடம் கொடுத்தான். சாணக்கியன் அதனைக் கையில் எடுத்துப் பார்த்தவன் வைத்தியன் முகத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தான்.

பின் தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவரச் சொன்னான். அந்தத் தங்கத் தட்டில் குளிகையினை இட்டு மெல்ல சுழற்றியபடியே புன்னகைத்தான்.

“என்ன செய்கின்றீர்கள்?” எனப் பதறிக் கேட்டான் வைத்தியன், “அரசன் வைத்தியனை விட முக்கியம் அல்லவா? அதனால் சில மந்திரங்களைச் சொல்லி குளிகையின் சக்தியினை அதிகரிக்கின்றேன்” என்றவன் சில மந்திரங்களைச் சொல்லி தட்டை அங்குமிங்கும் நன்றாக‌ சுழற்றியபின் குளிகைகளை ஓரம் கட்டி உள்ளே பார்த்தான்.

அங்கே கருப்பு நிற கோடு இருந்தது. சாணக்கியன் முகம் கறுத்தான்.

ஆம். அது விஷத்தின் அடையாளம். இவை விஷ குளிகைகள் என்பதன் அடையாளம், தங்கம் என்பது கொடிய விஷத்தை இப்படி காட்டிக் கொடுக்கும் சக்தி கொண்டது. ரசாயன விஷங்களை அது எளிதில் காட்டிக்கொடுக்கும்.

தங்கத்தட்டில் சாப்பாடு என்பது வெறும் அந்தஸ்தை சொல்வது அல்ல, அதுதான் விஷத்தை காட்டிக்கொடுக்கும், தங்கத்தின் சக்தி அது.

சாணக்கியன் அது விஷம் என அறிந்தான். ஆனால், காட்டிக் கொள்ளாமல் மெல்ல அந்த வைத்தியனைப் பற்றி விசாரித்தான்.

(தொடரும்..)