சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16

சாணக்கியன் அந்த “சுபேதன்” எனும் வைத்தியன் விஷ குளிகைகளுடன் வந்திருப்பதை அறிந்தும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. மெல்லப் புன்னகைத்தவன் சந்திரகுப்தனை நோக்கிச் சொன்னான்.

“சந்திரகுப்தா, நீ நெடுநாள் வாழும் மூலிகை குளிகையினைக் கொண்டு வந்திருக்கின்றான் இந்த வைத்தியன், இப்படிப்பட்ட நல்லவர்கள் கிடைப்பார்களா?

நீ இன்னும் நீண்டநாள் வாழ இவர்களைப் போன்ற நல்லவர்கள் வாழ்ந்தால்தானே நல்லது, அதனால் அவர்களும் வாழட்டும் அவனையும் உண்ணச்சொல்” என்றான்.

சந்திரகுப்தனும் “ஆம், ஐயா நீங்களும் சிறிது உண்டுவிட்டு எமக்குக் கொடுங்கள்” என்றான்.

சுபேதனுக்கு வியர்த்துவிட்டது. தான் அகப்பட்டுக் கொண்டதை அறிந்தவன் வேறு வழியின்றி அந்தக் குளிகையில் ஒன்றை விழுங்கினான். அந்தக் கொடிய விஷம் அவனை வாயில் நுரை தள்ளிக் கொன்றது.

சாணக்கியன் புன்னகைத்தான், சந்திரகுப்தன் அரண்டான்.

சந்திரகுப்தனைக் கொல்லும் இந்த முயற்சியும் தோற்றது. சாணக்கியன் இன்னும் பரபரப்பானான். ஏதோ இன்னும் பெரிய திட்டம் இருக்கும் என்பது அவனுக்குத் தோன்றிற்று.

அரண்மனையில் சில அசாதாரண காரியங்களைக் கண்டான். சில முகங்களில் தடுமாற்றம் இருந்ததையும், எங்கோ ஏதோ நடப்பதையும் அவன் உள்ளுணர்வு சொல்லிற்று.

ஆனால், ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. சாணக்கியன் இது பற்றி தீவிரமாக யாருக்கும் அறியாமல் சோதித்து வந்தான். எல்லா இடங்களிலும் தன் சோதனையினைச் செய்தவன் மன்னன் சயனிக்கும் அறையிலும் அவ்வப்போது சோதனைகள் செய்தான்.

அப்போது எறும்புகள் தீவிரமாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அது மழைக்கான காலம் அல்ல. எறும்புகள் முட்டை கடத்தவும் வாய்ப்பில்லை.

அவை என்ன கடத்துகின்றன எனக் கூர்ந்து கவனித்தவனுக்கு அது உணவு துகள்கள் என்பது தெரிந்தது. யாருமற்ற இடத்தில் அதுவும் அரசன் உறங்கும் பாதுகாப்பான இடத்தில் எப்படி உணவுப்பொருளும், எறும்பும் வந்தது என அவன் சிந்தனை கூர்மையாயிற்று.

எறும்புகளைத் தொடர்ந்தவனுக்குச் சுவற்றின் மூலையில் இருந்து அது வருவது தெரிந்தது. ஆழ யோசித்தவன் ஆட்களை அழைத்து அந்த மண்டபத்தையே நெருப்பிடச் சொன்னான்.

அப்போது ‘ஐயோ அம்மா’ என்ற குரல் கேட்கத் தொடங்கியது, சிலர் நெருப்பின் நடுவே ஓடிவந்து கருகிக் கிடந்தார்கள், சிலர் காயம்பட்டு விழுந்தார்கள்.

அவர்களை விசாரித்ததில் இவர்கள் “பீபத்ஸகன்” தலைமையில் பாதாள அறையில் இருந்த 100 பேர் என்பதும், சந்திர்குப்தனைக் கொல்ல தயார்நிலையில் இருந்ததையும் சொன்னார்கள்.

சாணக்கியன் அந்த மண்டபத்தில் இன்னும் பாதாள அறைகள் இருக்கலாம் என யோசித்து அதைக் கைவிட்டு மூடிவிட சொல்லிவிட்டு மன்னன் தங்க புது மண்டபம் கட்ட உத்தரவிட்டு அவனே மேற்பார்வையும் செய்தான்.

சாணக்கியனுக்கு இதெல்லாம் ராஷசனின் வேலை என்பது தெரியும். ராஷசன் தன் எஜமானர்களான நந்தர்களையும், புதிய எஜமானான பர்வதேஸ்வரனுக்காகவும் இப்படிப் பெரும்பாடுபடுகின்றான் எனச் சொல்லிக்கொண்டவன், இனி அவன் வெளியில் இருக்கும்வரை இந்த ஆபத்து தொடரும் எனச் சொல்லிக்கொண்டான்.

அப்போது அரண்மனை முன் ஒருவன் பாடிச் சென்றான், “எமனை வணங்குங்கள், எமனை வணங்குங்கள். எந்தத் தெய்வத்தை பகைத்தாலும் சிலகாலம் வாழ்வோரே, என்னைப் பகைத்து வாழத்தகுமோ, நம்மை வாழவிடுபவன் அவனே” எனப் பொருள்பட சித்தர்கோலத்தில் ஒரு பரதேசி பாடிச் சென்றான்.

அந்தப் பாடலைக் கேட்டு அரண்மனை வாசல் சேவகன் சிரித்தான், “என்ன சிரிக்கின்றாய், உள்ளே இருப்பவனை விட நீர் பெரியவனோ?” என்றான் பரதேசி.

“உள்ளே இருப்பவன் அரசன். அவன் உன்னை விட, என்னை விடப் பெரியவன்” என்றான் சேவகன்.

“உள்ளே என்றால் அரண்மனைக்குள் அல்ல, உனக்குள்ளும் எனக்குள்ளும் இருப்பவன் அரசனைவிட பெரியவன்,” என்றான் பரதேசி. சொல்லிவிட்டு உரக்கப் பாடினான்.

“பரதேசியே இது அரண்மனை, தள்ளிச் சென்று பாட்டுப்பாடு” என்றான் சேவகன்.

“என்னைத் தள்ளிப்போ எனச் சொல்லலாம், என் எஜமான் எமன் வரும்போது தள்ளிச் செல்ல சொல்வாயோ. உன்னால் முடியுமா?” என்றான் பரதேசி.

“என்னையா சபிக்கின்றாய்” எனச் சீறினான் சேவகன்.

“சாபமில்லை வாழ்த்துமில்லை, எமன் வந்துவிட்டால் என்ன செய்வாய் என்றேன், அவன் என்ன உன்னிடம் சொல்லிக்கொண்டா வருவான், இப்போது கூட வரலாம்” எனச் சிரித்தான் பரதேசி.

சேவகன் அவனை நோக்கி கத்த, அவன் பதிலுக்கு மிரட்ட பெரும் களபேரம் உண்டாயிற்று. சாளரத்தில் இருந்து அதனைக் கவனித்த சாணக்கியன் வாசலுக்கு விரைந்தான்.

நடந்ததைச் சொன்னான் சேவகன், “அமைதியாகு சிப்பாயே, யாரிடம் என்ன விஷயம் உண்டு என்பது தெரியாமல் பேசிவிடக் கூடாது, நான் இவனிடம் கேட்கின்றேன்” என்றவன் கேட்டான்.

“மானுடர்க்குப் பகைவன் எமன் என்பவனே, தாமரைக்குப் பகைவன் யார்?” என்றான் சாணக்கியன், “தாமரைக்குப் பகைவன் சந்திரன்” என்றான் பரதேசி.

சூரியனைக் கண்டால் மலரும் தாமரை சந்திரன் வரும் இரவில் வாடிவிடும் என்பது எல்லோரும் அறிந்தது.‌ ஆனால்,
சந்திரன் என்றால் மயக்கம், தாமரை என்றால் ஞானம் எனப் பொருள். அறிவு மங்கிய இடத்தில் ஞானமில்லை என்பது ஞானியர் மொழி.

“அடடே. விஷயமுள்ளவனப்பா நீ, வா உள்ளே சென்று பேசலாம்” என அழைத்துச் சென்றான் சாணக்கியன். அந்தப் பைரவ கோலத்தின் ஆண்டி சாணக்கியனின் உளவாளி.

சாணக்கியன் யாருமற்ற இடத்தில் கேட்டான், “சொல், ராஷசன் இருக்குமிடம் தெரிந்ததா? அவனைத் தொடர்புகொள்ள முடிந்ததா? அவனால் இங்கு இன்னும் அச்சுறுத்தல் தீரவில்லை” என்றான்.

“சாணக்கியரே, ஜீவசித்தி எனும் புத்த துறவியும் சகடதாஸன் என்பவனும், சந்தனதாஸ் என்பவனும் அவனின் ஆட்கள். ஜீவசித்தி ஆங்காங்கே சுற்றுகின்றான், சகடதாஸனும் சந்தனதாஸனும் இங்கிருந்தே ராஷசனுக்கு உழைக்கின்றார்கள்” என்றான்.

ஜீவசித்தி தன் ஆளான இந்துசர்மா என்பது சாணக்கியனுக்குத் தெரியும். அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமலே சிந்தித்தான். சகடதாஸனை கண்காணிக்க சித்தார்தகன் என்பவனை ஏற்கனவே சாணக்கியன் அனுப்பியிருந்தான். அவனிடமிருந்து தகவல் ஏதும் இல்லா நிலையில் இவனிடம் ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்.

“சகடதாஸனா? அவன் மேல் என்ன சந்தேகம், அவன் கணக்குப்பிள்ளை அல்லவா? அவனை எப்படி சந்தேகிப்பது? என ஒன்றுமறியாமல் கேட்டான்.

உளவாளி ஒரு மோதிரத்தை எடுத்துக் கொடுத்து, “இதன் முத்திரையினை அதன் ரகசிய குறியீட்டை பாருங்கள், ராஜ முத்திரையினைப் பாருங்கள், இது எப்படி சகடதாஸன் வீட்டில் இருந்தது? அதைக் கொடுக்கத்தான் வந்தேன்” என்றான்.

சாணக்கியன் அதை வாங்கிப்பார்த்தான், அது ராஷசன் மோதிரம் என்பது புரிந்தது. அப்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ராஷசன் பெரிய புத்திசாலி, நம்மைத் திசைதிருப்ப பல நாடகங்களை நடத்துவான், நாம் ஏமாந்துவிடக் கூடாது, சரி இதனை அப்புறம் பார்க்கலாம். இந்த மோதிரத்தை எப்படிப் பெற்றாய்?” என்றான் சாணக்கியன்.

“சாணக்கியரே, நான் வழக்கம் போல் தத்துவப்பாடல்களைப் பாடியபடி தெருத் தெருவாக சென்றேன். அப்படி இந்த சகடதாஸன் தெருவுக்கும் சென்றேன். அப்போது ஒரு சிறிய குழந்தை வீட்டு வாசலை தாண்டியது, “போகாதே, போகாதே” என்றபடி ஒரு பெண் அக்குழந்தையினை உள்ளே இழுத்தாள்.

அப்போது அவள் மோதிரம் கீழே விழுந்ததை அவள் அறியவில்லை. நான் யாருமறியாதவாறு அதை எடுத்துப் பார்த்தேன். அது வித்தியாசமாக இருந்ததால் உங்களிடம் கொண்டுவந்துவிட்டேன்” என்றான்.

“நல்லது செய்தாய், உனக்கு நல்ல சன்மானம் வழங்கப்படும், வழக்கம் போல் சகடதாஸனைக் கண்காணிப்பில் வைத்திரு, நான் இந்த மோதிரம் பற்றி யோசிக்கின்றேன்” என்றவன் அவனுக்கு விடைகொடுத்தான்.

பரதேசி மறுபடியும் எமன் பாடல்கள், சுடுகாட்டுப் பாடல்கள் பாடியபடி தெருவோடு சென்றான்.

சாணக்கியன் யோசிக்க ஆரம்பித்தான். ஒருவேளை ராஷசன் சகடதாஸன் வீட்டில் மறைந்திருப்பானோ? அப்படி மறைந்திருந்தால் எப்படி உளவாளிகளை இயக்க முடியும்? நமது ஆளின் கண்காணிப்பில் அவன் சிக்கியிருப்பானே.

நம்மைத் திசைமாற்றுகின்றானோ? இல்லை ஏதோ திட்டமிடுகின்றானோ, எப்படியோ சகடதாஸனுக்கும் அவனுக்குமான தொடர்பு உறுதியாயிற்று.

“ஆ.. உளவாளி என்ன சொன்னான், ஒரு பெண் என்றானே, பெண் கையில் இருந்து மோதிரம் விழுந்தது என்றால் என்ன அர்த்தம், ஆக அவன் குடும்பம் இங்கே மறைந்திருக்கின்றது, ராஷசன் மோதிரத்தை கொடுத்துவிட்டு தப்பியிருக்கின்றான்.

டேய் ராஷசா, உன் குடும்பம் இப்போது என் கையில் சிக்கிவிட்டதடா.. இனி பார் என் ஆட்டத்தை..

கொழுத்த யானையின் மண்டையினை உடைத்துக் கொன்றுவிட்டு ஓய்வெடுக்கும் சிங்கத்தின் பல்லை பிடுங்கிப்பார்ப்பது போல் நீ எனக்கு ஆட்டம்காட்டுகின்றாயா, இனி பார் புற்றில் மறைந்திருக்கும் நாகத்தை வெளிவர வைப்பதைப் போல உன்னை வெளிவரச்செய்கின்றேன் பார்” எனச் சீறி சொன்னான்.

(தொடரும்..)