சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 19
சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் சண்டை மூட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட திட்டம் தீட்டினான் ராஷசன்.
சந்திரகுப்தன் அரசன் எனும் உச்சப்பதவியில் இருப்பவன், சாணக்கியனோ அவனை அமரவைத்தவன் எனப் பெரும் நிலையில் இருப்பவன். மக்கள் அரசனைத்தான் கொண்டாடுவார்கள், ஒரு அறிவாளி எவ்வளவு அறிவு படைத்திருந்தாலும் மன்னனையே இயக்கினாலும், மக்களும் அதிகாரிகளும் அரசனைத்தான் கொண்டாடுவார்கள்.
காரணம், அதிகாரம் அவனிடமேதான் உண்டு. எங்கு அதிகாரம் குவிந்து கிடக்குமோ அங்கே மக்கள் குவிந்து கிடப்பார்கள். ஆனால், அதை ராஜகுருவினால் அனுமதிக்க முடியாது.
சாணக்கியனுக்கும், சந்திரகுப்தனுக்கும் ரத்த உறவு இல்லை; இருவரும் ஒரே குலமுமில்லை; ஒரே சொந்தம் ஒரே குலம் ஒரே ரத்தம் என்றாலும் அதிகாரத்தின் உச்சத்தில் ஒருவர்தான் இருக்கமுடியும்.
அதிகாரத்தைக் கைப்பற்ற பலர் இணையலாம். இருவர் இணையலாம். ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்த ஒருவர்தான் இருக்கமுடியும். இல்லையேல் மோதல் வரும்.
பீஷ்மரும், துரோணருமே துரியோதனனுக்கு அடங்கிப்போகும் கட்டம் இருந்தது. அதுதான் ராஜரீகம்.
ஆனால், இங்குச் சாணக்கியன் அப்படி ஒதுங்கமாட்டான். சந்திரகுப்தனும் விட்டுக் கொடுக்கமாட்டான். காரணம், அவன் இப்போது அரசன்.
இங்கே இடம்பார்த்து அடிக்க வேண்டும். ஏதாவது ஒரு கட்டத்தில் எங்கிருந்தோ வந்த ஒற்றைப் பிராமணன், ஊர் பேர் தெரியாத பிராமணன் மகத அரசை கட்டுப்படுத்துவதா எனச் சந்திரகுப்தனின் சுய கௌரவத்தை சீண்ட வேண்டும எனத் திட்டமிட்டான்.
மிகத் தேர்ந்த ஒருவனை அங்கே அனுப்பினான். அவன் சந்திரகுப்தன் அவையில் ஒரு அமைச்சராக சென்று அமர்ந்து கொண்டான்.
அதே நேரம் சாணக்கியனும் சில விஷயங்களை ஊகித்தான். நிச்சயம் ராஷசன் ஏதாவது செய்வான், அவன் சும்மா இருக்கும் ரகம் அல்ல. ஏதாவது செய்து குழப்புவான், அவன் உளவாளிகள் இங்கும் இருப்பார்கள். அவர்களை நாம் குழப்ப வேண்டும் என முந்திக்கொள்ள விரும்பினான்.
அதாவது மகத அரசில் ஒரு குழப்பம் என்றால் ராஷசனின் பதில்வினை எப்படி இருக்கும் எனச் சோதிக்க விரும்பினான். அது மிக முக்கியமான ஒன்று.
அதன்படி சந்திரகுப்தனை அழைத்தான், “சந்திரகுப்தா, எதிரி அமைதியாக இருக்கின்றான் என அப்படியே விட்டுவிடக் கூடாது, அவனைக் கண்காணிக்க அவனின் திட்டம் அறிய, இல்லை நமக்குள் யாரும் ஊடுருவியிருக்கின்றார்களா என்பதை அறிய சில காரியங்களைச் செய்யவேண்டும்.
இப்போது ராஷசனிடம் நாம் நிறைய பேரை நம்பிக்கைகுரியவர்களை அனுப்பியிருக்கின்றேன். அவர்கள் அவனைச் சுற்றி இருக்கின்றார்கள், அவனின் ஒவ்வொரு நகர்வும் நமக்குத் தெரியவரும்.
அதனால் நீ அவனைக் குறித்து அஞ்சவேண்டாம். ஆனால், அந்த நாகம் எவ்வளவு சீரும் எனத் தெரிய நாம் ஒரு வாய்ப்பினை உருவாக்க வேண்டும், அதனால் நாம் இருவரும் சண்டையிடுவது போல் ஒரு நாடகம் நடத்த வேண்டும்” என்றான்.
சந்திரகுப்தன் மிரண்டு நடுநடுங்கினான், “எனக்குக் குருவும், ஆசானும், தெய்வமும் எல்லாமும் நீங்கள், உங்களிடம் நான் சண்டையிடுவதா?” என அரற்றினான்.
“சந்திரகுப்தா, போர்க்கலை பயிலும் போது, வாள் வீசும்போது உன் குருவிடம் வாள் வீசினாயே அது என்ன சண்டையா? அது உனக்கான பயிற்சி அல்லவா?
அப்படி இதுவும் நம் அரசுக்கான, அதன் காவலுக்கான ஒரு பயிற்சி அன்றி வேறென்ன. அதனால் நமக்குள் சண்டையிடுவது போல் காட்சி செய்யலாம், அதற்கு ராஷசன் என்ன செய்கின்றான் எனப் பார்க்கலாம்” என்றான்.
தன் குருவான சாணக்கியன் எது செய்தாலும் சரியாக இருக்கும், அவன் வாளெடுத்துத் தன் கழுத்துக்குக் குறி வைத்தாலும் அதில் தனக்குச் சரியான நல்லது உண்டு எனும் அளவு நம்பும் சந்திரகுப்தன் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.
சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தான் சாணக்கியன்.
சரத் பருவம் எனும் இலையுதிர்காலம் வரும் பருவத்தின் அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அது சித்திரையினை ஒட்டிவரும் காலம்.
அப்போது ஏரிகள், குளங்கள் வற்றத் தொடங்கி அங்கே வெள்ளை நிறக் கொக்குகள், இன்னும் நாரைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன. அவற்றைப் பார்க்கும் போது வானத்தின் நட்சத்திரங்கள் போலவே இருந்தன.
ஆற்றங்கரையில் மணல் திட்டுகள் தெரிய ஆரம்பித்தன.
ஆர்ப்பரித்து ஓடிய ஆறு இப்போது பெட்டியில் பாம்பு போல் சுருங்கிக் சுருண்டு கிடந்தது. நெற்பயிற்கள் தலை சாய்ந்து கோவிலில் பக்தர் கூட்டம் போல் கிடந்தது.
சாணக்கியன் மெல்லப் புன்னகைத்தான். இது கோடைக்கால விழா ஒன்றின் காலம் என்பதை உணர்ந்தான். அதற்கு “கௌதீமஹோத்ஸவம்” எனப் பெயர்.
இது தமிழக தைமாதப் பண்டிகை போன்ற சாயல், அப்போது வீடெல்லாம் சுண்ணாம்பு அடித்து அலங்கரித்துப் பெரிய விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
அத்தோடு குளம், ஏரிகள் கால்வாய்களெல்லாம் அடுத்தப் பருவமழைக்குத் தயாராகும்படி மராமத்துச் செய்வார்கள்.
இந்தப் பண்டிகையும், அதைத் தொடர்ந்த காரியங்களும் வெகுப்பிரசித்தி.
அன்று அரசப்பிரதிநிதி ஒருவன் சிலருடன் ஊருக்குள் வலம் வந்து இந்த ஏற்பாட்டை கவனித்தல் உண்டு. முதலில் இதெல்லாம் தொடங்குகின்றது எனச் சொல்லி அறிவித்து வரவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் எல்லாம் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்துவரவேண்டும்.
பின் எல்லாம் உறுதி என அரசுக்குச் சொல்ல வேண்டும். சூரியனுக்கும், ஆறுக்கும் நன்றி சொல்லும் அப்பண்டிகை வெகுப் பிரசித்தியாக நாடெங்கும் கொண்டாடப்பட வேண்டும்.
இராஜபிரதிநிதியின் கடமை அது, அவனேதான் பொறுப்பு.
சாணக்கியன் இதைக் கொண்டு ஆட ஆரம்பித்தான். அவன் சந்திரகுப்தனிடம் சொன்னான், “சந்திரகுப்தா, இந்தப் பண்டிகைக்கான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு, நான் சொதப்புகின்றேன், நீ என்னிடம் சபையில் சண்டையிடு, நம் மோதல் இங்கிருந்து தொடங்கட்டும்” என்றான்.
“மோதல் நாடகம் எனச் சொல்லுங்கள் குருவே” எனக் கலங்கிய விழிகளுடன் கேட்டான் சந்திரகுப்தன், சாணக்கியன் புன்னகைத்தான்.
அதன்படி அந்த நாடகம் தொடங்கிற்று. சாணக்கியன் அவையில் இருந்தான். எல்லாமும் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்த சாணக்கியன் தன் கைவிரல் மோதிரத்தை உருட்டினான்.
அதைக்கண்ட சந்திரகுப்தன் இறுக்கமான முகத்துடன் பேச தொடங்கினான்.
“சாணக்கியரே, பண்டிகையின் தயாரிப்புக்களைச் செய்யவில்லையாமே, அர்த்தமில்லாக் காரியத்தை நீர் செய்யமாட்டீர், எதுவாக இருந்தாலும் சொல்லலாம்” எனக் குறைபட்டான் சந்திரகுப்தன்.
அமைதியாக எங்கோ பார்த்தபடி இருந்தான் சாணக்கியன்.
“சாணக்கியரே, உங்களைத்தான் அரசனாகிய நான் கேட்கின்றேன்” என உறுமினான் சந்திரகுப்தன்.
அரசவை அதிர்ந்தது. இதுதான் இப்படிச் சந்திரகுப்தன் பேசுவது முதல் தடவை, அதுவரை சாணக்கியன் அமைதியாக அமர்ந்திருப்பான், எல்லா விவகாரங்களையும் சந்திரகுப்தனே தீர்த்துவைப்பான்.
தேவையின்றி சாணக்கியன் வாய்திறப்பதில்லை. அதுவும் “ராஜகுருவே, இங்கே உங்கள் அபிப்ராயம் என்ன?” எனக் கேள்வி வந்தால் ஒழிய சாணக்கியன் வாய்திறப்பதில்லை.
அப்படியான அவையில் “அரசன் நான்” எனச் சந்திரகுப்தன் சொன்னதும் அதிர்ச்சி அலை ஓங்கி அடித்தது.
சாணக்கியன் திரும்பியிருந்த முகத்தை அவை நோக்கி திருப்பிச் சொன்னான்.
“மன்னா, ராஜரீகத்தில் மூன்று வகை உண்டு. முதலாவது, அரசனே எல்லாமும் எடுத்து ஆளும் முழு அதிகார ஆட்சி.
இரண்டாவது, மந்திரிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டு மன்னன் செய்யும் அரசாட்சி, மூன்றாவது, அமைச்சரும் அரசனும் ஆலோசித்து செய்யும் அரசாட்சி.
மன்னரே, இங்கு நடப்பது முழு அதிகாரம் கொண்ட மன்னராட்சி அல்ல, அப்படி நடக்க முடியாது. இது அமைச்சரும் அரசனும் சேர்ந்து செய்யும் ஆட்சி, இங்கு அமைச்சருக்கும் அதிகாரம் உண்டு. அதனால் எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்பது சரியல்ல” எனச் சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவை அப்படியே மௌனித்தது. ஒரே ஒரு குரல் மட்டும் எழுந்தது. அவன் சொன்னான்.
“மாமன்னரே, மகத நாட்டின் பெருமை நீங்கள், பாரினில் சிறந்தது இந்த மகத நாடு, உலகாளும் கிரேக்கரே தாக்கத் துணியாத மகத்தான யானைப்படை கொண்ட பலமான தேசம்.
கல்விக்கு நாளந்தா, படைக்கு யானைகள், செல்வதுக்கு வற்றாத கங்கை என அள்ளித் தரும் நாடு இது. இந்த நாட்டின் மன்னனாக நீங்கள் அமர்ந்திருப்பது கொழுத்த அரசர்களை அடக்குவதற்காக.
மாபெருமை பொருந்திய இந்த மகதத்துக்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் வழி இன்றி வந்தவரெல்லாம் அதிகாரம் செய்யமுடியாது, இது ராஜ துவேஷம்” என நேரடியாக பேசினான்.
சாணக்கியன் மனதில் புன்னகைத்தான். காரணம், ராஷசனின் ஆள் இங்கே இருப்பதை அவன் அப்போது உணர்ந்துகொண்டு ஒன்றும் அறியாதவன் போல் இருந்தவன். தன் குடுமியினை லேசாக கதைத்துக் கட்டினான்.
அதைக் கண்ட சந்திரகுப்தன் உரக்கச் சொன்னான் “ஏ அமைச்சரே, சரியாகச் சொன்னீர். உமக்கு ஆயிரம் பொற்காசுகள் சன்மானம்” எனக் கைநீட்டிச் சொன்னான்.
‘அரச பணம் வீணாக செலவழிக்கப்பட அனுமதியேன்” என்றான் சாணக்கியன், “அதைச் சொல்ல நீர் யார்?” என்றான் சந்திரகுப்தன்.
“சந்திரகுப்தா…….” என ஆத்திரத்தில் மதம் கொண்ட யானையினைப் போல் பிளிறினான் சாணக்கியன், அவை ஒடுங்கிக் கிடந்தது, ராஷசனின் ஆள் மட்டும் புன்னகைத்துத் தலையாட்டத் தொடங்கினான்.
(தொடரும்..)