சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 20
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 20
சாணக்கியன் கர்ஜித்த பின்னும் சந்திரகுப்தனிடம் பதிலே இல்லை. அவன் தன் போக்கில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“சந்திரகுப்தா, என்னை மீறி இந்தப் பரிசினை அவனுக்குக் கொடுத்தால் அதன் பின் நான் ராஜகாரியங்களில் தலையிடமாட்டேன், மதியாத இடத்தில் அறிவாளி இருக்கமாட்டான்” எனச் சீறினான்.
‘அரசன் விருப்பமே இங்கு இறுதியானது, உங்களிடம் கேட்ட கேள்வி ஏன் அந்தப் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது, அதற்கு முதலில் விடை அளித்தால் நல்லது” என்றான் சந்திரகுப்தன்.
“நான் அர்த்தமில்லாமல் ஏதும் செய்யவில்லை; வெறிகொண்ட சிங்கமாக மலையகேது உறுமிக் கொண்டிருக்கின்றான்; அவனோடு ராஷசன் இன்னும் நம்மிடமிருந்து சென்ற பலரும் இருக்கின்றார்கள்.
இப்போது நாம் பண்டிகை கொண்டாட்டம் என இறங்கினால் எதிரிகள் உள்ளே வர வழி செய்ததாகிவிடும், நாம் இன்னும் முழுக்க வலுவாகவில்லை; ஆபத்து இன்னும் நீடிக்கின்றது; அந்நிலையில் என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கின்றது.
பகைவன் காத்திருக்க இங்கே விழா எடுப்பது பகை பாய வழிசெய்யும் அறிவீனம், அதனால் அதனை நான் அனுமதிக்கவில்லை”
சொன்ன சாணக்கியன் மேலே போர்த்தியிருந்த மேலாடையினை உதறி மீண்டும் போர்த்திக் கொண்டான்.
சந்திரகுப்தன் திருப்பிக் கேட்டான், “எல்லாப் பிரச்சினைக்கும் காரணமான அந்த மலையகேதுவினை ஏன் பிரச்சினை தீராமல் செல்ல வைத்தீர்கள்?
சாணக்கியன் திருப்பிச் சொன்னான், “காரணம் இல்லாமல் இல்லை, இங்கே அவன் இருந்திருந்தால் பாதி ராஜ்ஜியம் கொடுத்திருக்க வேண்டும், முன்பு அப்படி கொடுக்காமல் இருக்கத்தான் பர்வதேஸ்வரனை நாமே அழித்தோம்.
இவனையும் அழித்துவிட்டால் பர்வதேஸ்வரனையும் நாம் இதற்காகக் கொன்றோம் என்பது வெளிப்படையாகிவிடும், அது மர்ம மரணமாக இருப்பதே சரி.
அதனால் அவனைக் கொன்றாலும் சிக்கல், அவன் இங்கே இருந்தாலும் சிக்கல் எனப் போக விட்டோம்” என்றான்.
“சரி அப்படியானால் இந்த ராஷசனை எப்படித் தப்ப விடலாம், அவன் மலையகேதுவிடம் இருப்பதுதானே இப்போது பெரிய ஆபத்து?” என்றான் சந்திரகுப்தன்.
“ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை, ராஷசன் உங்களுக்கும் எனக்குமே எதிரி. மற்றபடி அவனின் நந்த வம்ச விசுவாசத்தில் குறையேதுமில்லை, இந்நாட்டு மக்களிடம் அவனுக்கென ஒரு பெயர் இருக்கின்றது. மதிக்கின்றார்கள்.
அவன் இங்கே இருந்திருந்தால் அவர்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்வான், அவனால் குழப்பம் வரும் என யோசித்துத்தான் தப்ப விட்டேன்.
அவனைக் கொன்றாலும் மக்களிடம் அதிருப்தி வரும், அவன் இருந்தாலும் சிக்கல் வரும், எனும்போது என்ன செய்ய சொல்லுகின்றீர்கள்?”
சொன்னவன் கைகளை உரசிக் கொண்டு முகத்தை தடவினான்.
அதைக் கண்ட சந்திரகுப்தன் சொன்னான், “வார்த்தை ஜாலம் உம்மிடம் நிறைந்திருக்கின்ற்து, என்ன செய்வது உமக்குப் பதில் சொல்ல ராஷசன் இங்கு இல்லையே, அவர்தான் உமக்குச் சரி”
தன் குடுமியினை கட்டியபடி கர்ஜித்தான் சாணக்கியன் “என்ன சொன்னீர்? ராஷசன் இங்கு இருந்திருக்க வேண்டுமா? எல்லாம் மறந்துவிட்டீரா? இல்லை அரியணையின் மந்திரத்தில் கட்டுப்பட்டு மாறிவிட்டீரா?
பலமிக்க நந்தர்களை அழித்து, இன்னும் பலவகை ஆபத்துக்களைக் கடந்து உம்மை அரசனாக்கினவன் நான், அந்த ராஷசன் உமக்குச் செய்தது என்ன? அவன் இருந்திருந்தால் இந்த அரியணையில் நீர் இருந்திருக்க முடியுமா? விடுவானா? அதையெல்லாம் மறந்தா என் முன் பேசுகின்றீர்?”
இரு சிங்கங்கள் கர்ஜிக்கும் போது காடே ஒடுங்கிக் கிடப்பது போல் அவை ஒடுங்கிக் கிடந்தது, இரு கிடாக்கள் மோதினால் தனக்கேதும் கிடைக்கும் என நரி காத்திருப்பது போல ராஷசன் ஆட்கள் மகிழ்வுடன் காத்திருந்தனர்.
சந்திரகுப்தன் சூடு ஆறாமல் சட்டெனச் சொன்னான், “நந்தர்கள் அழியவேண்டும் என்பது விதியின் முடிவு, நந்தர்கள் விதிமுன் தோற்றார்கள், அதற்கு நீர் எப்படி உரிமை கொண்டாட முடியும்? இதெல்லாம் உம்மால் முடிந்தது என்பதெல்லாம் வீண் தம்பட்டம்”
சாணக்கியன் கொந்தளித்துச் சொன்னான்.
“இதெல்லாம் கோழைகள், பம்மாத்துக்காரன் சொல்வது. விதிவசம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல் தான். நினைத்ததை நினைத்தபடி செய்பவனே ஆண்மை உள்ளவன்” என்றான்.
“சாணக்கியரே, அறிவாளிக்குத் தேவை அடக்கம், அது உம்மிடமில்லை. வெறும் தற்புகழ்ச்சியே செய்கின்றீர். நீர் அரச நிர்வாகத்துக்குச் சரியல்ல. மூச்சை அடக்கி தியானம் செய்ய நீர் சரி, வாயால் வாதமிடுவீரே தவிர செயலில் ஒன்றுமில்லை” என்றான் சந்திரகுப்தன்.
“சந்திரகுப்தா, சொல்லவருவதை நேரே சொல், சபையில் என்னை அவமானப்படுத்தாதே” என நாசிகள் புடைக்க முகம் சிவக்க நாகம் போல் சீறிச் சொன்னான்.
“சொல்வதென்ன? ராஷசன் இங்கே இருந்திருந்தால் இந்த நிர்வாகம் சரியாக இருந்திருக்கும், பண்டிகைகள் அதன் போக்கில் நடந்திருக்கும்” என்றான் சந்திரகுப்தன்.
“அப்படியானால் இனி அவனை வைத்தே சபை நடத்தும், உம்மைப் போல் ஆயிரம் அரசர்களை உருவாக்கும் வல்லமை இந்தச் சாணக்கியனுக்கு உண்டு” எனச் சொல்லி ஓங்கி ஆசனத்தை மிதித்துவிட்டு வெறி பிடித்த சிங்கம் போல் வெளியேறினான் சாணக்கியன்.
“அரசனை மதிக்காத யாரும் இங்கு அவசியமில்லை, அவர் போகட்டும். இனி சாணக்கியன் இல்லாமலே அவை இயங்கும் என மக்களுக்கு அறிவியுங்கள்” என்றான் சந்திரகுப்தன்.
சாணக்கியனும், சந்திரகுப்தனும் சண்டையிட்டுப் பிரிந்தார்கள்; அதுவும் அவையிலே பிரிந்தார்கள் எனும் செய்தி பெரிதாக வெடிக்க அது ராஷசனை எட்டிற்று.
மிகுந்த மகிழ்ச்சி கொண்ட ராஷசன் விதியெனும் காற்று இனித் தனக்குச் சாதகமாக வீசும் எனப் புன்னகைத்தான்.
அதே நேரம் சாணக்கியன் அனுப்பிய உளவாளிகள் மலையகேது பக்கம் சரியாக காய் நகர்த்தினார்கள்.
மலையகேது பாராகுணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சு சாணக்கியனால் அனுப்பப்பட்ட அந்தப் பத்ரபடன் பற்றி வந்தது. பாராகுணன் மிகச் சாமார்தியமாக ஒரு தூண்டிலை வார்த்தையாக வீசினான்.
“பத்ரபடன் சாதாரணமானவனா? அவன் ராஷசன் நம்மிடம் இருந்தும் அவனிடம் செல்லாமல் நம்முடைய தளபதி சிகரகன் மூலமாக நம்மிடம் வந்ததவன் அல்லவா” என இயல்பாய்ச் சொன்னான்.
அங்கே பொறி தட்டிற்று மலையகேதுவுக்கு.
“ஆமாம், ஆனால் அந்தப் பத்ரபடன் ஏன் ராஷசனை நம்பாமல் சித்திரகனை நம்பினான்? ஏதோ இருக்கின்றது அல்லவா?” எனக் குழம்பினான்.
அந்தக் குழப்பம்தான் பாராகுணனுக்கு அவசியம், அந்தக் குழப்பத்தில்தான் மலையகேதுவுக்கும் ராஷசனுக்கும் சிக்கல் வரும்படி பொடியினைத் தூவினான் பாராகுணன், சாணக்கியனால் செய்தி அனுப்பப்பட்ட பாராகுணன்.
சாணக்கியனின் திட்டத்தை கொஞ்சமும் புரிந்துகொள்ளமுடியாமல் அதில் சிக்கினான் மலையகேது.
தனக்கு எதிராக பெரும் சதி உருவாவதை அறியாமல் சாணக்கியன் இல்லாத சந்திரகுப்தனை எப்படிக் கவிழ்ப்பது எனச் சிந்தித்து கொண்டிருந்தான் ராஷசன்.
(தொடரும்)