சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்யம் : 21

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்யம் : 21

சாணக்கியன் எப்படிப்பட்ட திட்டத்தை வகுத்திருந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. அலை அலையாக பலரை மலையகேதுவினை நோக்கி அனுப்பினான். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அனுப்பியிருந்தான்.

அங்கே ராஷசன், மலையகேது என அவர்களைச் சுற்றி தன் ஆட்களை வைத்துவிட்டு, தான் இங்கே சந்திரகுப்தனுடன் சண்டையிடுவது போல் நாடகமாடினான்.

சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் மோதல் என்பது எல்லாம் அவன் மலையகேது அரண்மனையினையும் எட்டிற்று. ராஷசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தபடியே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான்.

அதே நேரம் சாணக்கியன் போட்டு வைத்த திட்டப்படி காட்சிகள் அழகாக நடந்தன‌.

சாணக்கியனின் திட்டம் மிக மிக நுணுக்கமானது. யாருக்கும் எளிதில் புரியாதது. அப்படி ராஷசனை மலையகேதுவிடம் இருந்து பிரிக்கும் திட்டத்தை அவன் மனதில் கொண்டே தன் ஆட்களை அங்கே குவித்திருந்தான்.

சாணக்கியனும், சந்திரகுப்தனும் பிரிந்து மோதுகின்றார்கள் என எல்லோர் கவனமும் குவியும் நேரம் அவன் ஓசைப்படாமல் மலையகேதுவுக்கும் ராஷசனுக்கும் இடையே வெடிப்புக்களை உண்டாக்கத் தொடங்கினான்.

பாகுராயன் மூலம் ஆட்டத்தை தொடங்கினான் சாணக்கியன். ஏற்கனவே சாணக்கியனால் பெரிய ஆசைக்காட்டி வளைக்கப்பட்டிருந்த பாகுராயன் உரிய நேரம், அதாவது சாணாக்கியனிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும் காரியத்தைத் தொடங்கினான்.

மலையகேது அரசன் எனும் வகையில் எப்போதும் சில சந்தேகங்களைக் கொண்டிருப்பான், அது அரசர்களின் இயல்பு.

அப்படியானவன் கேட்டான், “பாகுராயா, ராஷசனுக்கு நாம் பெரும் பொறுப்பு கொடுத்துள்ளோம். அந்நிலையிலும் பத்ரபடன் போன்ற மகதநாட்டுக்கார தளபதிகள் அவனை நம்பாமல் நம் தளபதி சிகரவன் மூலமாக நம்மிடம் வந்தது ஏன்?” எனக் கேட்டான்.

பத்ரபடன் ஒரு தளபதி என்பதால் அரசனுக்கு இந்தச் சந்தேகம் எழுந்தது.

அதற்குப் பாகுராயன் சொன்னான், “மன்னா, சாணக்கியன் மீதுதான் ராஷசனுக்கு கோபமே தவிர சந்திரகுப்தன் மேல் அல்ல, நான் அறிந்தவரை இனி அங்கே சாணக்கியன் இல்லாவிட்டால் இவன் அங்கே சென்றுவிடுவான்.

அப்போது தங்களுக்கும் சிக்கல் என்பதால் ராஷசனின் தந்திரத்தினை அறிந்த பத்ரபடன் போன்றோர் அவனுடன் இருந்தால் ஆபத்து, அவன் நாளையே சந்திரகுப்தனுடன் சென்றுவிடுவான் என அஞ்சி அவனோடு ஒட்டாமல் நம்மோடு இருக்கின்றார்கள்” என்றான்.

மலையகேதுவின் மனதில் ராஷசன் பற்றிச் சந்தேக விதைகள் விழத் தொடங்கின‌. எனினும், வெளிக்காட்டவில்லை

அதை மனதில் கொண்டபடி ராஷசனை காணப் பாகுராயனுடன் சென்றான் மலையகேது, சற்றுக் காய்ச்சலினால் படுத்திருந்தது போல் படுத்திருந்தான் ராஷசன்.

அவனோடு சில காரியங்களைப் பற்றி விவாதித்தான் மலையகேது, ராஷசன் மேல் சந்தேகத்தோடே அவன் பேசிக்கொண்டிருந்தபோது , ராஷசனின் ஆள் ஒருவன் வந்து செய்திச் சொன்னான்.

அவன் பாகுராயனின் ஆள் என்பதை மன்னன் அறிந்திருக்கவில்லை.

“சாணக்கியன் அவைக்கு வருவதில்லையாம். இனி அவன் வேறு தேசம் செல்லப்போகின்றானாம், சந்திரகுப்தன் எல்லோரிடமும் ராஷசன் போல் வருமா, அவன் இருந்தால் நாட்டுக்குச் சிக்கல் வருமா? எனச் சொல்லி வருத்தப்படுகின்றானாம்” எனச் செய்தியினைச் சொன்னான்.

ராஷசன் அதைக் கேட்டு மலையகேதுவினை நோக்கினான். மலையகேது வில்லங்கமாகத் தலையாட்டினான். ராஷசன் நம்பமுடியாதவன், இனி அவன் சந்திரகுப்தன் அவைக்கு ஓடிவிடுவான், இவன் ஏதோ சதிதிட்டத்தோடு வந்திருக்கின்றான் என அவன் நம்பத் தொடங்கினான்.

அந்த நம்பிக்கை பெரிதாக வளரவும், நெருப்பென எரியவும் பாகுராயன் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருந்தான்.

ராஷசனை சிறையிடும் அளவு மலையகேதுவுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால், பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விட்டுவைத்தவன் ஒரு அறிவிப்பினைச் செய்தான்.

எல்லையில் ராஷசனின் தொடர்புடைய ஆட்கள் சென்றுவரும் போது அவர்களைக் கவனிக்க உத்தரவிட்டான். அதன்படி உரிய அனுமதியின்றி தங்கள் நகரில் யாரும் சுங்கச்சாவடியினை கடக்க முடியாது என்றும், ராஷசனின் ஆட்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும் என்றும், அனுமதி இல்லாவிட்டால் உள்ளேயோ வெளியேயோ செல்லமுடியாது என்றும் உத்தரவிட்டான்.

ராஷசனுக்கு இதுபற்றி கேள்வி எழுந்தபோது அங்கே சாணக்கியனும் சந்திரகுப்தனும் பிரிந்துவிட்டதால் சில காவல்கள் அவசியம் எனச் சொல்லப்பட்டது. ராஷசன் அதை ஏற்றும் கொண்டான்.

யாரையும் நம்பாத மலையகேது பாகுராயனை நம்பினான். பாகுராயன் பட்டணத்து நுழைவாயிலில் சுங்கச்சாவடியில் தானே பொறுப்பாளனாக அமர்ந்து கொண்டான்.

சாணக்கியனின் தந்திரம் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது.

சாணக்கியனின் நண்பனான இந்து சர்மா முன்பு ஜீவசித்தி எனும் பெயரில் மகதநாட்டில் இருந்து சாணக்கியனுக்கு ஆதரவாக பௌத்த துறவிபோல் அமர்ந்து பல காரியங்களைச் செய்தான் அல்லவா? அவன் காட்சிக்குள் வந்தான்.

அவன் மிக வேகமாக நகரைவிட்டு வெளியேறுவது போல் அவசரமாக வந்தவன் பாகுராயனிடம் வெளியூர் செல்ல அனுமதி சீட்டு கோரினான்.

பாகுராயன் அவனை அடையாளம் கண்டு “நீர் ஜீவசித்தி அல்லவா? என்ன அவசரமாக வெளியூர் செல்கின்றீர்? அதுவும் ராஷசன் இங்கே இருக்கும் போது நீர் செல்லும் அவசியம் என்ன?

சரி, ராஷசன் அனுமதிகடிதம் எங்கே? அது இல்லாமல் உம்மை அனுப்பமுடியாது” என்றான்.

அதற்கு ஜீவசித்தி அடம் செய்தான், “எப்படியாவது என்னை அனுப்பிவிடுங்கள், என்னால் இங்கே இருக்க முடியாது” எனக் கெஞ்சினான்.

அவனைப் பாகுராயன் தனியே விசாரித்தான். அப்போது ஜீவசித்தி சொன்னான்.

“ஐயா, நான் ஒரு ரகசியம் சொல்கின்றேன், இந்த ராஷசன் நல்லவனோ, நம்பத்தகுந்தவனோ அன்று. இவனுக்கு நானேதான் நாக கன்னிகை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தேன். அதைக் கொண்டு சந்திரகுப்தனைக் கொல்வதாக சொன்னவன், இந்நாட்டு மன்னன் பர்வதேஸ்வரனைக் கொன்றுப்போட்டான்.

இப்போதோ மலையகேதுவிடமே நட்பு பாராட்டுகின்றான். என்னிடம் அவன் தொடர்புகொண்டு ஏதேதோ பேசுகின்றான். ஐயா, நான் சாணக்கியனுக்கு அஞ்சித்தான் தப்பி வந்தேன், இனி அவன் மகதநாட்டை விட்டுக் கிளம்புவான் போலிருக்கின்றது.

அதனால் நான் அங்கே செல்ல முடிவெடுத்துவிட்டேன். இந்த ராஷசன் ஒரு நாகப்பாம்பு, என்னைத் தப்பிக்க விடுங்கள்” என்றான்.

இதைக் கேட்ட பாகுராயன் அவனை நோக்கி, “இது ராஜதுரோக விவகாரம், உன்னைக் கைது செய்து அரசனிடம் நிறுத்துவேன்” எனச் சொல்லி அவனை விலங்கிட்டு அரசனிடம் அழைத்துச் சென்றான்.

மலையகேது நடந்ததை கேட்டு திகைத்தான். இப்போதே ஊர் நடுவில் ராஷசன் தலையினை வெட்டுவதாக கொந்தளித்தான். பர்வதேஸ்வரனின் மரணம் ராஷசனால் நடந்ததா? அந்தப் படுபாவிக்கா தன் அரண்மனையில் இடம் கொடுத்தோம், அப்படியானால் என்னென்ன திட்டமெல்லாம் வைத்திருப்பான் என மிகுந்த சீற்றமடைந்தான்.

பாகுராயன் அவனிடம் சொன்னான், “அரசே, ராஷசனை கொன்றுவிட்டால் நமக்குத்தான் நஷ்டம், அவன் திட்டமெல்லாம் நமக்குத் தெரியாமல் போய்விடும்.

இந்த ஜீவசித்தியினை எது செய்தாலும் அவன் சுதாரித்துக் கொள்வான். அதனால் இவனை நாம் சந்தேகம் வராதபடி போகவிட்டுவிடுவோம்.

நாம் இன்னும் பலமாகவே இருக்கின்றோம், நமக்கு நந்த ராஜ்ஜியத்தில் பாதி உரிமை உண்டு, அப்படிச் சொல்லித்தான் நாம் நந்தர்களை அகற்றி சந்திரகுப்தனை நியமித்தோம்.

இப்போது நாம் அதனைப் பெறவேண்டும், இந்த ராஷசன் அதைக் குழப்பியடிக்க வந்திருக்கலாம் அல்லவா? அதனால் விட்டுபிடிக்கலாம்” என்றான்.

மலையகேது அதுமுதல் மிகுந்த கவனமானான், ராஷசனோ ஏதும் அறியாமல் அவன் போக்கில் இருந்தான்.

சாணக்கியனின் திட்டங்கள் ஒவ்வொன்றாய்ச் சரியாக வேலை செய்தன‌.

அப்போது திவ்யசதஸ் எனும் சிப்பாய் அனுமதி சீட்டு இல்லாமல் நகரை விட்டு வெளியேறமுயன்ற சித்தார்த்தகன் என்பவனை பிடித்து இழுத்து வந்து பாகுராயன் முன்னால் நிறுத்தினான்.

பாகுராயன் அவனிடம் விசாரித்தான், “அனுமதி சீட்டு வாங்கமுடியா அளவு என்ன அவசரம் உனக்கு? எங்கே செல்கின்றாய்?” என்றான்.

அவன் சொன்னான், “நான் ராஷசனின் ஆள் ஐயா, அவர் என்னை இந்தப்பெட்டியும் கடிதமும் கொண்டு குஸ்மபுரம் எனும் பாடலிபுத்திரத்துக்குப் போய் ஒருவனிடம் இதைக் கொடுக்கச் சொன்னார், அவரின் காரியம் என்பதால் அனுமதி சீட்டு அவசியமில்லை என நினைத்தேன்” என்றான்.

பாகுராயன் அவனைத் தடுத்துச் சொன்னான், “இங்கு எல்லாமே சோதனைக்கு உட்படுத்தப்படும், இதென்ன கடிதம்” என வாங்கி அதைப் பிரித்து படித்தான்.

அதில் சூசகமாக சில வரிகள் இருந்தன‌.

“எங்கோ இருந்து கொண்டு யாரோ யாருக்கோ எழுதும் கடிதம் இது.

சத்தியப்படி நடக்கும் நீங்கள் நம்மிடம் சொன்னபடி எதிரிகளை துவம்சம் செய்துவிட்டீர்கள், இப்போது நமது நண்பர்கள் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் இப்போது பதுங்கியிருக்கும் இடத்தை நாசம் செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

நண்பர்களில் சிலருக்கு நமது எதிரிகளின் நாடு மேல் விருப்பம், சிலருக்கு பொன் மேல் விருப்பம், சிலர் பெரிய யானைகளை விரும்புகின்றார்கள்.

ஐயன்மீர், இது குறித்து நாம் மேற்கொண்டு விவாதிக்கும்படி நீர் அனுப்பிய மூன்று நகைகளை பெற்றுக் கொண்டேன், உமக்கும் சந்தேகம் தீர்க்க ஒரு நகையினைக் கொடுத்திருக்கின்றேன், மீதியினை இந்தச் சித்தார்த்தகனிடம் பேசி அறிந்து கொள்க‌.

இப்படிக்கு, நான்”

என எழுதப்பட்டிருந்தது, அடியில் ராஷசனின் மோதிர முத்திரை இருந்தது.

பாகுராயன் துடித்தான். அந்தக் கடிதம் யாருக்குக் கொண்டு செல்லப்படுகின்றது என மிரட்டினான். ஆனால், சித்தார்த்தகன் தனக்குத் தெரியாது, இதனைக் கொண்டு சென்று ஒருவனிடம் ஒப்படைக்கத்தான் உத்தரவே தவிர அதன் காரணம் தனக்குத் தெரியாது என மறுத்தான்.

பாகுராயன் அவனை அள்ளிக் கொண்டு மலையகேதுவிடம் சென்றான்.

மலையகேது அவனிடம் சொன்னான்.

“சித்தார்த்தகா, நீ வெறும் அம்பு. உன்னை நாம் தண்டிக்கப்போவதில்லை உண்மையினைச் சொல்லிவிட்டால் பரிசுகளோடு அனுப்பி வைப்பேன், இல்லை என்றால் முதுகுத் தோலை உரித்துத் தொங்கவிடுவேன்” என்றான்.

பாகுராயனோ, “மன்னா, இந்தக் கடிதத்தில் சந்தேகம் தீர்க்க ஏதோ நகை இப்பெட்டியில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது, நாம் இதனைத் திறந்து பார்க்கலாம்” என்றான்.

அப்படியே பெட்டி திறக்கப்பட்டது, உள்ளே மலையகேது ராஷசனுக்குக் கொடுத்த முத்துமாலை இருந்தது.

வெடவெடத்து போன மலையகேது கத்திச் சொன்னான், “பாகுராயா, நாம் மோசம் போனோம். சாணாக்கியனை, சந்திரகுப்தனைக் காரணம் காட்டி நம் கண்களைக் கட்டிவைத்து, நம் காலடியில் குழிபறித்திருக்கின்றான் ராஷசன்.

இங்கே என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை, நான் யாரை நினைத்து சந்தேகப்படுவது என்பதில் குழப்பிக் கிடக்கின்றேன்.

சாணக்கியன் சந்திரகுப்தன் ஒரு கூட்டணி, இந்த ராஷசன் அவர்களை அழிக்கமுயன்று நம்மிடம் ஓடிவந்தவன்.

இப்போது இவனே எல்லாச் சூழ்ச்சிக்கும் காரணகர்த்தா என்பது புரியவருகின்றது.

நாம் இதுபோன்ற சூழலைச் சந்தித்ததே இல்லையே, இங்குச் சாணக்கியன் மேல் சந்தேகம் எனக்கில்லை, அவன் நம் எதிரி எனச் சந்திரகுப்தனோடு இருக்கின்றான்.

இந்த ராஷசனே எல்லாக் குழப்பத்துக்கும் காரணம், பர்வதேஸ்வரனைக் கொன்றுவிட்டு நம்மிடம் இருக்கின்றான் என்றால் ஏதோ பெரும் சதி அவனிடம் உண்டு.

சரி, இவனை விசாரி. கடிதம் யாருக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பதை விசாரி, அந்த “நண்பர்கள்” யார் என அறிவோம்” எனச் சீறினான்.

அதன்படி தலைகீழாகத் தூக்கிக் கட்டப்பட முயன்ற சித்தார்த்தகன் அலறிச் சொன்னான்.

“என்னை விட்டுவிடுங்கள், நான் உண்மையினைச் சொல்லிவிடுகின்றேன், அந்தக் கடிதம் சந்திரகுப்தனுக்கு எழுதப்பட்டது.

இன்னும் ஐந்துபேராக சேர்ந்து உங்களைத் தொலைத்து உங்கள் நாட்டை சூறையாட காத்திருக்கின்றார்கள், ராஷசன் அவர்கள் உளவாளி”

மலையகேது அரண்டே போனான். சந்திரகுப்தனே எதிரி என்றால் இன்னும் ஐந்துபேரா? அவர்கள் யார்? என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள்? என்றவன் வாள் நுனியினால் அவன் கழுத்தில் அழுத்திக் கேட்டான்.

சித்தார்த்தகன் சொல்லத் தொடங்கினான்.

இங்கே இப்படி ராஷசன் வசமாக சிக்கிக் கிடக்க, அவனை இவ்வளவு நுணுக்கமாக சிக்கவைத்த சாணக்கியன் வெற்றிலையினை மென்றபடி தன் மாளிகையின் மாடத்தில் நின்றபடி வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு நுணுக்கமான திட்டத்தின்படி பல உளவாளிகளைப் பல ரகசிய ஆதாரங்களுடன் மலையகேது அரண்மனைக்குள் அனுப்பியிருக்கின்றோம், இது எப்படியெல்லாம் வெடித்து இனி ராஷசனும், மலையகேதுவும் பிரிவார்கள் என்பதை மனக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வரும், விரைவில் செய்தி வரும், சரியாக வரும்” எனச் சொல்லிக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

அங்கே அந்த சித்தார்த்தகன் சொல்ல சொல்ல வியர்த்து விறுவிறுத்து வாளை கைவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான் மலையகேது.

(தொடரும்…)