சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 22
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 22
சந்திரகுப்தனுக்கும், சாணக்கியனுக்கும் பிளவு வந்துவிட்டது என மகிழ்ந்து ராஷசன் பாடலிபுத்திரம் கிளம்பிக்கொண்டிருந்தான். அதே நேரம் மலையகேதுவுக்கு ராஷசன் மேல் சந்தேகம் ஏற்படுத்தி அதற்கேற்றபடி காட்சிகளை நடத்திக் கொண்டிருந்தான் சாணக்கியன்.
இதற்கெல்லாம் திட்டம் போட்டு கொடுத்துவிட்டு தான் போட்ட முடிச்சு ஒவ்வொன்றும் எப்படி வேலை செய்யும் என மனக்கண்ணால் ஓடவிட்டபடி அமர்ந்திருந்தான் சாணக்கியன்.
சந்திரகுப்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நிச்சயம் அவன் பெரும் வீரன்; அறிவாளி. ஆனால், சாணக்கியன் மனதை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை, சாணக்கியன் மனம் அவ்வளவு ஆழமான ஒன்று.
அவன் என்ன நினைக்கின்றான் என்பதையே அறியமுடியாது, அவசியமில்லாமல் வாய் திறக்கமாட்டான், அவசியமில்லாக் கேள்விகள், எரிச்சலை ஏற்படுத்தும் கேள்விகளை அவன்பொருட்படுத்துவதில்லை.
சாணக்கியனை ஓரளவுதான் சந்திரகுப்தனால் புரிந்துகொள்ள முடிந்தது, அவன் என்ன செய்கின்றான் எனத் தெரியாது, எதை யோசிக்கின்றான் எனத் தெரியாது, அந்த அளவு யாருக்கும் தெரியாமல் புரியாமல் வலை பின்னுவான்.
கடைசியில் எங்கு எது எப்படி அடிபடும், யார் அடிக்கின்றார்கள் எனத் தெரியாது. வலையில் இரை விழுந்து கிடக்கும்.
யாராலும் ஊகிக்கமுடியாதவனும் மனதில் என்ன எண்ணுகின்றான் எனக் கண்டறியமுடியாதவனுமான சாணக்கியனை எப்படி அணுகுவது என்பது அவனுக்கும் தெரியவில்லை.
ஆனால், வரும் உளவு னத்தகவல்கள் நிலைமை மோசமாக இருந்தது.
மலையகேது சாதாரணம் அன்று . அவன் பெரும் படையுடன் மகத நாட்டை தாக்க இருக்கின்றான், அவனுக்கு வலுசேர்க்கும் விதமாக ராஷசன் பெரும் திட்டங்களை வகுத்துக் கொடுக்கின்றான்.
அதன்படி குலூத தேசத்து சித்திரவர்மன், மலப தேசத்து சிம்மநாதன், காஷ்மீர தேசத்தவன் புஷ்கராசன், சிந்து தேசாதிபன் சிந்து சேனன், பாரசீக மன்னன் மேகாஷன் என ஐந்துபேருடன் சேர்ந்து மகதத்தினைச் சூறையாட தயாராகும் செய்தி அது.
இந்த ஐந்து நாடுகளும் பலமானவைகள் , இந்தப் படை சேர்ந்துவந்தால் நிச்சயம் மகதத்தால் தாக்குப்பிடிக்க முடியாது.
இந்த ஐந்து அரசர்களும் ஒரு முடிவோடு மலையகேது நாட்டுக்கே வந்து அவனுக்கு மெய்காப்பளர் போல் நின்றிருந்தார்கள்.
பெரும் போர் வெடிக்கத் காத்திருந்த நேரமது.
ஆனால். சாணக்கியன் எந்த எதிரிவினையும் ஆற்றவில்லை. மாறாக, மகத அரசில் சாணக்கியனுக்கும் சந்திரகுப்தனுக்கும் சண்டை என ஒரு செய்தியினைகா கிளப்பிவிட்டு அவன்போக்கில் இருக்கின்றான் என்பதையும் நினைத்துக் குழம்பினான்.
அதைச் சாணக்கியனிடம் கேட்க அவனுக்குத் துணிவில்லை, மனம் ஒருமாதிரி திகைக்கத் தொடங்கிற்று.
சாணக்கியனோ தன் போக்கில் இருந்தான், ஒரே நேரத்தில் அவனால் பல விஷயங்களைச் சிந்திக்கமுடியும், பேசமடியும். ஐந்து புலன்களையும் ஐந்து பணிக்குச் செலுத்தவும் முடியும்.
சந்திரகுப்தனின் கவலை எல்லாம் அந்த ஐந்து அரசர்களைப் பற்றி இருந்தது. காஷ்மீரம்,பாரசீகம், சிந்து, பாஞ்சாலம் என இருந்த தேசங்கள் அவை, அதற்கு அப்பால் கிரேக்க அரசு வலுத்து வந்து கொண்டிருந்தது.
மலையகேதுவுக்கு மகத அரசின் மேல் பகை எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை, பர்வதேஸ்வரனைக் கொன்றுபோட்டது முதல் பாதிராஜ்யம் தருவோமென சொல்லி நந்தர்களை அகற்றிவிட்டு தங்களைக் குழப்பி விரட்டியடித்தது வரை எல்லாமே ஆத்திரம்.
இப்படியான நிலையில் மலையகேது இந்த ஐந்து அரசர்களோடு படையெடுத்து வருவான் எனச் சந்திரகுப்தன் கனத்த யோசனையில் இருந்தான். ஆனால், இதை முன்பே ஊகித்துத்தான் ஏகப்பட்ட ஆட்களைச் சாணக்கியன் மலையகேதுவிடம் அனுப்பியிருக்கின்றான் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை.
சாணக்கியன் மர்மச் சிரிப்போடு வெற்றிலையினை மென்றுகொண்டிருந்தான்.
அதே நேரம் அங்கே மலையகேதுவின் ஆட்கள் சித்தார்த்தனை தலைகீழாக போட்டு விசாரித்துக் கொண்டிருந்தார்கள், இந்தக் கடிதம் ராஷசன் சந்திரகுப்தனுக்கு எழுதியது என்பதையும், அப்படியே ஐந்து அரசர்களோடு அவன் மலையகேதுவுக்கு எதிராக சதி செய்கின்றான் என்பதையும் சொல்லிவிட்டான்.
ஏற்கனவே ராஷசன் மேல் கடுமையான கோபத்தில் இருந்த மலையகேது, அதுவும் பர்வதேஸ்வரனை நாக கன்னி கொண்டு ராஷசனே கொன்றான் என ஜீவசித்தி சொல்லக்கேட்ட மலையகேது ராஷசனை இனியும் விட்டுவைக்கக் கூடாது என முடிவெடுத்தான்.
ஒரு அரசன் எளிதில் எதையும் நம்பக் கூடாது என்பதும் எல்லாவற்றையும் தீவிரமாக ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்பதும் விதி.
ஆனால், சாணக்கியன் வகுத்த பன்முனை குழப்பங்களில் எல்லாமே ராஷசனுக்கு எதிரான அம்புகள் என்பதால் மலையகேது நிதானமிழந்தான்.
அந்நேரம் மகதநாட்டுக்குச் செல்லும்படியாக கிளம்பினான் ராஷசன், அவன் செய்த அடுத்தப் பெரும் தவறு விஸ்வாஸிடம் இருந்து வாங்கிய நகைகள்.
பர்வதேஸ்வரனின் நகைகள் மூன்றைச் சாணக்கியன் அந்தணருக்குத் தானமாக கொடுத்தது போல் கொடுத்து பின் விஸ்வாஸ் என்பவன் மூலம் ராஷசனுக்கே நல்ல விலைக்கு விற்றான் அல்லவா? அந்த நகைகள்.
அவை பர்வதேஸ்வரனின் நகைகள் என அறியாத ராஷசன் அவைகளை அணிந்து கொண்டு தான் மகதம் செல்லும் காரியத்தைச் சொல்ல வந்தான்.
“மலையகேதுவே, உமக்கு துணையாக ஐந்து அரசர்களை நியமித்துள்ளேன், இன்னமும் சந்திரகுப்தனுக்கும் சாணக்கியனுக்கும் பிரிவு என்பது நமக்கு மகிழ்ச்சியான செய்தி.
நான் இந்நேரம் சென்று என் குடும்பத்தாரை சந்தித்து அப்படியே சிறையில் இருக்கும் என் நண்பனையும் விடுவிக்க ஏற்பாடுசெய்வேன்” எனச் சொன்னான்.
ராஷசன் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த மலையகேது அதனை வெளிக்காட்டாமலே விசாரித்தான்.
“ராஷசரே, மகதம் செல்ல நம்மில் ஆட்கள் யாரேனும் உண்டா?” எனப் பூடகமாக வினவினான்.
அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் “இன்னும் சில நாட்களில் நானே செல்லலாம் என இருக்கின்றேன், அது பற்றித்தான் பேசவந்தேன்” என்றான் ராஷசன்.
“தெரியும் ராஷசரே, நீர் சந்திரகுப்தனுடன் சேர்ந்து என்னைக் கொல்ல திட்டமிட்டிருப்பதும் தெரியும், எல்லாம் சித்தார்த்தன் சொல்லிவிட்டான்” எனச் சொல்லி முகத்தை இறுக்கினான், அவன் மூச்சுக்காற்று நாகமாய்ச் சீறிற்று.
ராஷசன் நிதானம் இழக்கவில்லை.
“மன்னரே, ஒரு அரசன் எல்லோர் மேலும் சந்தேகப்பட வேண்டும், அது ராஜநீதி, என் மேல் குற்றமில்லாததால் என் தரப்பில் உங்கள் சந்தேகத்தைப் போக்கமுடியும்” என இயல்பாய்ச் சொன்னான் ராஷசன்.
“அப்படியா?” என்றவன் பாகுராயனை அழைத்து வரச்சொன்னான், பாகுராயன் அந்தச் சித்தார்த்தனோடு வந்தான்.
“பாகுராயா, அவன் சொன்னதைச் சொல்ல சொல்” என உறுமினான் மலையகேது.
“ராஷசரே என்னை மன்னியும், அடி தாங்கமுடியாமல் உண்மையினைச் சொல்லிவிட்டேன்” என்றான் சித்தார்த்தன்.
“என்ன உண்மை?” என மிக அரண்டு போய் கேட்டான் ராஷசன்,
சித்தார்த்தன் தலையினைக் குனிந்து நின்றான், பாராகுணன் முன்வந்து சொன்னான் “அவன் எப்படி உங்கள் முன் சொல்வான், அச்சம் இருக்குமல்லவா?” என்றான்.
ராஷசனுக்கு ஒன்றும் புரியவில்லை, வித்தியாசமாக நோக்கினான்.
மலையகேது சொன்னான், “ராஷசரே இந்த அரசை காப்பதுதான் உமது வேலை , நடிப்பது நாடகக்காரனின் வேலை அதை நீர் செய்யவேண்டாம்.
சந்திரகுப்தனுக்கு ஓலை அனுப்பினீர், ஐந்து அரசர்களோடு சேர்ந்து என்னைக் கொல்ல சதி செய்தீர். அதைத்தான் அவன் சொல்லிவிட்டான்” எனக் கொதித்தான்.
“மன்னர், ஆதாரமில்லாமல் பேசுவது பொருத்தமானது அன்று” என்றான் ராஷசன்.
“இதோ நான் உமக்களித்த முத்துமாலை, அது எப்படி இந்த வேலைக்காரனிடம் சென்றது, நீர் கொடுத்த வெகுமதியன்றோ?” என்றான்.
“இதை அவன் கேட்டான், நான் கொடுத்தேன் இதில் என்ன சூது?” என்றான் ராஷசன்.
“நகையினைக் கொடுக்கும் அளவு நீர் பெருந்தன்மையானவராக இருக்கலாம், ஆனால் இந்தக் கடிதம் நீர் எழுதியதுதானே? இந்த முத்திரை நீர் வைத்ததுதானே?” என அவன் முத்திரை மோதிரம் வைத்த கடிதத்தை காட்டினான் மலையகேது.
ராஷசன் அப்போதும் அசரவில்லை “மன்னா, யாரும் எதையும் எழுதலாம், அங்கே யாரோ என் முத்திரை மோதிரத்தையும் பிரதிபோல் செய்திருக்கலாம், இதெல்லாம் சந்தேகத்திற்குரியதல்லவா?” என்றான்.
பாராகுணன் குறுக்கிட்டான்.
“அரசே, நம் அரண்மனை எழுத்தன் யார்?
வேறு யார்? இவன் அமர்த்திய சகடதாஸன் என்பவனேதான்.
அப்படியானால் ஒன்று செய்வோம், அவனிடம் நீங்கள் சொன்னதாக ஒரு கடிதம் எழுதி வாங்கலாம், அந்தக் கையெழுத்தும் இந்தக் கையெழுத்தும் ஒன்று என்றால் கடிதத்தின் விஷயம் இவருடையது.
இதனை நாம் இப்போதே செய்யவேண்டும், காரணம் சகடதாஸன் இந்த விஷயம் அறிந்தால் வேறு வகையாக எழுதிக்காட்டுவான், இவரைத் தப்புவிக்க அவன் குழப்பும் சாத்தியம் உண்டு”
மலையகேது அப்படி ஒரு கடிதம் எழுதி வரச் சொன்னான், அப்படியே விவரம் அறியாமல் சகடதாஸன் தன் கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்க அது ராஷசனுக்கு எமனாயிற்று.
மலையகேது, “இப்போது என்ன சொல்கின்றீர்கள், நீங்கள் சொல்லமாலா சகடதாஸன் எழுதினான்” எனக் கத்தினான்.
ராஷசனிடம் இம்முறை பதில் இல்லை.
எங்கோ சதி நடந்திருக்கின்றது, தன்னைச்சுற்றி தன்னை அறியாமல் பெரும் வலை பின்னப்பட்டிருக்கின்றது என்பதை உணரத்தொடங்கினான்.
நடந்ததை கண்டறிவதா, சிங்கம்போல் எதிரில் நிற்கும் மலையகேதுவினைச் சமாளிப்பதா என மிகவும் குழம்பிப் போனான்.
அப்படிக் குழம்பியவனிடம் கேட்டான் மலையகேது “என் தந்தையின் நகைகள் உங்களிடம் எப்படி வந்தன?”
அப்படியே நொறுங்கிப் போனான் ராஷசன், தான் வெகு நேர்த்தியான மீளமுடியா சதியில் சிக்கிவிட்டதை உணர்ந்தான்.
தான் எவ்வளவு மோசமாக வளைக்கப்பட்டிருகின்றோம் என்பதையும் இனி என்ன சொன்னாலும் எடுபடாது என்பதையும் உணர்ந்த ராஷசன் சொன்னான்.
“நான் என்ன திட்டம் தீட்டி என்ன பலன், தெய்வபலம் எனக்கு இல்லையே, எல்லாமே எனக்கு எதிராக வாய்க்கும்படி தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டதே”
“ராஷசா, என் தந்தையினை நாகக் கன்னி கொண்டு கொன்றுபோட்ட நீ, இந்த ஐந்து ராஜாக்களையும் இங்கே அழைத்து வந்து என்னைக் கொன்றுபோட திட்டமிட்டாயா?
இதோ மலையகேது யார் எனக காட்டுகின்றேன்” என்றவன் வாளை உருவினான்.
இனித் தப்பமுடியாது எனத் தெரிந்த ராஷசன் கண்களை மூடிக்கொண்டான்.
(தொடரும்…)