சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 25

சந்திரகுப்தன் தயக்கதோடு கேட்டான், “இந்த ராஷசனை வைத்து என்ன திட்ட்ம் வைத்திருக்கின்றீர்கள்?”

சாணக்கியன் வாயில் குதம்பிய தாம்பூலத்தைத் துப்பிவிட்டு தன் வழக்கமான இயல்பின்படி கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு சொன்னான்.

“சந்திரகுப்தா, நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது, நீயும் ஆட்சியின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றும் கொண்டாய், உனக்காக சில ஏடுகளை ஆலோசனைகளாக எழுதியிருக்கின்றேன், அதனைத் தரும் நேரமும் வந்தாயிற்று.

இனி மகதத்தை அசைப்பார் இல்லை, பரத கண்டத்தின் மகா வலிமையான இந்த மகதம் இனி பெரும் இடம் அடையும், கிரேக்கர்களை நினைந்து அச்சப்பட ஒன்றுமில்லை.

அவர்கள் எப்போதும் சிறிய சிறிய அரசுகளை முறியடித்தே பெரிதானார்கள், எந்தப் பெரிய பேரரசோடும் வலிமையான அரசோடும் அவர்கள் மோதியதில்லை, கிழக்கே சீன தேசம் பக்கமெல்லாம் செல்லமாட்டார்கள்.

இந்துஸ்தானில் வலிமையான அரசு அமையாமல் பாரதகண்டம் சனாதனபூமியாய் நிலைக்க முடியாது, சனாதனம் காக்க வலுவான அரசு தேவை, கிரேக்கர்களின் ஆட்சி சிக்கல் அல்ல, அவர்களின் வரியோ ஆட்சிமுறையோ விஷயம் அல்ல‌.

அவர்களைக் கவனி, செல்லுமிடமெல்லாம் கிரேக்கமதம், கிரேக்க கலாச்சாரம் என மாற்றுவார்கள், அவர்கள் கால்வைத்த இடமெல்லாம் பண்டைய மதங்கள் அழியும், கலாச்சாரம் அழியும் எல்லாம் கிரேக்க மயமாகும்.

போர்கள் அரசர்களுக்கு இடையே எழுவது இயல்பு, எக்காலமும் மானுட இனம் இருக்கும் வரை போர் என்பதும் சண்டை என்பதும் ஏதோ ஒரு காரணத்துக்கு நடந்துகொண்டேதான் இருக்கும். அதை எந்தக் கொம்பனாலும் எந்த மகானாலும் தடுக்க முடியாது, அது மானுட விதி.

அந்தப் போரின் முடிவு என்ன என்பதுதான் விஷயம், பாரத கண்டத்தில் நடக்கும் போர்களில் ஆட்சி மாறுமே அன்றி மதம் மாறாது, மகதம் பாரதம் முழுக்க விரிந்தாலும் சரி தென்னக பாண்டிநாட்டு மன்னர்கள் சோழ மன்னர்கள் இமயம் வரை வந்தாலும் சரி, இந்த மதம் இந்தச் சனாதனம் அழியாது.
ஆனால், அந்நியர்கள் அப்படி அல்ல, ஒரு அரசன் இன்னொரு நாட்டைப் பிடிக்கும் போது அவர்களின் அடிப்படையான மதம், பண்பாடு வாழ்வியல் எல்லாம் அகற்றித் தங்களை அவர்கள்மேல் திணிப்பார்கள், அது காலமெல்லாம் இந்த மக்களை அடிமையாக வைக்க, தாங்கள் யார் எனத் தெரியாமல் குழப்பத்தில் வைக்க ஆளவந்த நாங்களே பெரியவர்கள் நீங்களெல்லாம் ஒன்றுமில்லாதவர்கள் என நம்ப வைத்து யானையினைப் பாகன் ஏமாற்றுவது போல் அடக்கி ஆள்வார்கள்.

எகிப்து தேசத்தில் இருந்த மதம் எங்கே? அராபியாவில் இருந்த பண்டைய மதமும் வாழ்வும் எங்கே? எல்லாம் அழித்துப்போட்டுவிட்டார்கள், எல்லாமே கிரேக்க மயமாகிவிட்டது.

இனி எகிப்தியரின் பண்பாடு எழும்? சிரியர்களின் அராபியர்களின் மதமும் கலாச்சாரமும் திரும்ப வரும்? வராது, அங்கே இனிக் காலமெல்லாம் குழப்பமே மிஞ்சும்.

சந்திரகுப்தா, மதம் என்பது சொர்க்கம் காட்டும் வழி மட்டும் அன்று. அது ஆன்மீகம் மட்டுமன்று. அதுதான் மக்களை மக்களாக மண்ணோடும் இந்தப் பாரம்பரியத்தோடும் கலந்திருக்கச் செய்யும், இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கடமையினை மதமேதான் சொல்லித் தரும்.

அதனால்தான் இந்தச் சனாதன பூமியில் ஆயிரமாயிரம் குருக்கள் வந்தார்கள். ஏகப்பட்ட போதனைகளைப் பிரபஞ்ச ஞானத்தைத் தந்தார்கள்.

இந்த நாட்டின் அமைப்பினைப் பார், காந்தாரம் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சிவலிங்கம், ஒரே ராமன் ஒரே கண்ணன், இது மதம் அன்று. இதுதான் பாரத கண்டத்தின் ஒற்றுமை, இந்த ஒற்றுமையில்தான் இந்தத் தேசமும் மதமும் நிமிர்ந்து நிற்கின்றது.

இதை அறுத்துவிட்டால் இந்தச் சங்கிலி உடைந்துவிட்டால் பாரதகண்டம் சிதறிப்போகும், மேற்குபக்கம் நடந்த அழிவுகள் இப்பக்கம் நடக்கும்.

நமக்கு வலுவான அரசு தேவை, அதை அமைத்துவிட்டேன், எனக்கு இந்நாட்டிற்கும் மக்களுக்கும் மதத்துக்கும் செய்யவேண்டிய காரியம் நிறைய உண்டு, என்னை இங்கே முடக்க நினைக்காதே.

காற்றும் துறவியும் தேசபக்தனும் ஒரே இடத்தில் தங்க கூடாது, அவையினைக் கூட்டு. ராஷசன் வரட்டும்” எனச் சொல்லி அவசரமாகக் கிளம்பினான்.

அவை கூடிற்று.

சந்திரகுப்தன் அரசனாக அமர்ந்திருந்தான், சாணக்கியன் சில ஏடுகளுடன் அமர்ந்திருந்தான். வழக்கம் போல் அல்லாமல் அவன் முகம் மிகச் சாந்தமாக இருந்தது, நினைத்ததை முடித்த திருப்தி இருந்தது, முழுச் சந்திரன் போல ஒரு தேஜசுடன் அமர்ந்திருந்தான்.

சாணக்கியன் கை அசைத்தான், சந்திரகுப்தன் பேசத் தொடங்கினான்.

“அவையோர்களே, நந்தர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும் பின் நம்மைவிட்டு சென்றவருமான இந்த ராஷசர் இங்கே வந்திருகின்றார்.

அவர் தன் நண்பனை விடுவித்து தன்னைச் சிறையில் அடைக்குமாறு கோருகின்றார். இது பற்றி சாணக்கியரே தீர்ப்பிடும் உரிமை படைத்தவர். காரணம், முன்னாள் மந்திரியினை விசாரிக்கும் அளவு எனக்கு அனுபவமில்லை” எனச் சொல்லி அமர்ந்து கொண்டான்.

சாணக்கியன் இதழோரம் சிரிப்போடு தொடங்கினான்.

“ராஷசரே, சந்தன தாஸனை விடுவிக்க கோரினாரா?

ஆம்.

அவனுக்குப் பதிலாக நீர் சிறையிருப்பீரா?

ஆமாம், ஏற்றுக் கொள்கின்றேன்.

சிறையில் என்ன செய்வீர்?

என் விதி எதுவோ அதன்படி நடக்கட்டும்”

சாணக்கியன் புன்னகைத்துச் சொன்னான், விதி முடிவதாக இருந்திருந்தால் நந்தரோடு முடிந்திருக்கலாமே, இல்லை மலையகேதுவிடம் நீர் இருக்கும் போது முடிந்திருக்கலாம், ஏன் மலையகேதுவே உம்மைக் கொன்றிருக்கலாம், ஏன் நடக்கவில்லை.

சாணக்கியன் கையால் சாகவேண்டும் என விதி இருந்தால் அதுதானே நடக்கும், நடக்கட்டும்.

சாணக்கியன் உம்மைக் கொல்வதாக இருந்தால் என்றோ கொன்றிருக்கலாமே?

யார் கையில் சிக்கினாலும் உரிய நேரம் வராமல் எப்படி?

சரி, நான் சொல்வதைக் கேட்டால்தான் உம் நண்பனுக்கு விடுதலை.

என்ன நிபந்தனை?

நீர் இந்த மகத நாட்டின் அமைச்சராக அமரவேண்டும். இந்த மகதத்தை காப்பேன் என இந்த அவை முன்னால் சத்தியம் செய்யவேண்டும்”

ஆடிப்போனது அவை, சந்திரகுப்தனே அரண்டுபோனான், அவையோர் இதென்ன விபரீதம் எனக் குழம்பி நின்றார்கள்.

சாணக்கியன் சந்திரகுப்தனைக் கண்டான், அவையோரைக் கண்டான், பின் தனக்கே உரித்தான நிதானத்தோடு பேசினான்.

“அவையோர்களே, நீங்களெல்லாம் இந்த ராஷசன் நமக்கு எதிரான காரியங்களைச் செய்தவன், நம்மை அழிக்கப் பார்த்தவன் என்ற கோணத்திலே பார்க்கின்றீர்கள். ஆனால், அவனின் இன்னொரு பக்கத்தைக் காண மறுக்கின்றீர்கள்., அது அவனின் விசுவாசம்..”

சொன்னவன் சில அடி முன்னால் வந்து ராஷசனின் தோளைப் பற்றி உலுக்கினான், பின் சொன்னான்‌

“ராஷசா உன்னை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது, சிம்மம் சிம்மத்தோடு மட்டும்தான் மோதும். அது மானோடும் நரியோடும் மோதாது.

அப்படி என்னுடன் நீ மோதும்போதுதான் நான் உன்னைப் புரிந்துகொண்டேன், யாருக்கும் கிடைக்காத வரம் நீ” எனச் சொல்லித் தழுவிக் கொண்டான்.

ராஷசன் குழம்பினான், சாணக்கியன் ஏதோ தந்திரம் செய்கின்றான் எனக் குழம்பி நின்றான்.

சில அடி பின்னால் வந்த சாணக்கியன் சொன்னான்.

“அவையோரே, இந்த உலகம் சுயநலமானது. அதுவும் அரசனைச் சுற்றி துதிபாடிகள் நிரம்ப இருந்து உன்னைப்போல் உண்டா என அவனை அண்டி வேண்டியன பெற்று வாழ முயலும் உலகம் இது.

எல்லாருக்கும் ஒர் பணக்காரன் கிடைத்துவிட்டாலே அவனை வைத்து என்ன சாதிக்கலாம், அவனிடம் இருந்து என்ன நமக்குக் கிடைக்கும் என நாக்கை சுழற்றி வரும் உலகமிது.

இங்கு ஒருவனுக்கு உதவுவது கூட சுயநலத்தின் அடிப்படையில்தான் நடக்கும், இங்கு அன்பு பாசம் விசுவாசம் என்பதெல்லாம் அபூர்வம், அரசியலில் எல்லாமே சுயநலம் கலந்தது.

ஆனால், இந்த ராஷசன் தனித்து நின்றான், அவன் கடைசி வரை நந்தர்களின் விசுவாசியாக இருந்தான், அவன் மட்டும் பணத்துக்கும் அதிகாரத்துக்கும் செல்வத்துக்கும் ஆசைப்பட்டிருந்தால் அவன் நந்தர்கள் அழிந்தபின் எங்களோடு ஒட்டியிருக்கலாம்.

ஆனால் செய்தானா?

அவன் தன் எசமான் நந்தர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் எனச் சபதமிட்டான், ஒருவன் செத்தால் அவனைத் தூக்கிப்போட்டுவிட்டு இனிநாம் எப்படி வாழலாம் எனச் சிந்திக்கும் உலகில் அவன் விசுவாசத்துடன் இருந்தான்.

என் அரசர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என அவன் இறந்த எஜமானருக்காகப் போரைத் தொடங்கினான்.

இந்த விசுவாசத்தை எங்கே கண்டீர்கள்? யாரை இப்படிக் காட்டமுடியும் சொல்லுங்கள்?

அவை அமைதியானது, ராஷசன் இறுக்கமான முகத்துடன் சாணக்கியனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவன் விசுவாசம் நந்தர்கள் மேல் இருந்தது, அந்த நந்தர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என அவன் மலையகேதுவிடம் சேர்ந்தான்.

அந்தோ பரிதாபம் அவன் அங்கு முழு விசுவாசமாய் இருந்தான், ஒரு பழுதுவராமல் இருந்தான். ஆனால், நம் நகர்வுகளால் மலையகேதுதான் இவனைப் பகைத்து இன்று நம் சிறையில் கிடக்கின்றான்.

அவையோரே ஒருவனுக்கு எல்லா அறிவும் திறமையும் இருந்து அவனுக்கு விசுவாசம் இல்லாவிட்டால் ஆபத்தானவன்.

ஒருவனுக்கு விசுவாசம் மட்டும் இருந்து திறமை இல்லை என்றால் அவன் பயனில்லாதவன், கழுதைக்குச் சமானம்.

வெகுசிலரிடமே விசுவாசமும் திறமையும் ஒரு சேர இருக்கும் அது ராஷசனிடம் இருந்தது.

அவன் எந்த அரசனிடம் வேலை செய்வானோ அவனுக்கு முழு விசுவாசமாய் இருப்பான். தன் முழு அறிவையும் பயன்படுத்திக் காப்பான்.

அந்த விஷயத்தில் அவனை நான் முழுக்க உணர்ந்திருக்கின்றேன், அவன் அறிவுள்ளவன், தன் அரசன் மேல் விசுவாசம் வைத்துவிட்டால் உயிரைக் கொடுத்து காக்கும் அளவு விசுவாசி”

சாணக்கியன் சொல்லி முடிக்கும் போது விசும்பி அழ ஆரம்பித்து மண்டியிட்டு சாணக்கியனை நோக்கி தொழுது அழ ஆரம்பித்தான் ராஷசன்.

“ஐயா அறிவினை அறிவாளி மட்டுமே அறிவான், என்னை முழுக்கப் புரிந்துகொண்டிருக்கின்றீர், முரட்டு நந்தர்களுக்கும் நான் விசுவாசமாக இருந்தேன், பரமேஸ்வரனுக்கும் மலையகேதுவுக்கும் நான் முழு விசுவாசமாகவே இருந்தேன்.

என் எஜமானருக்கு யார் எதிரியோ அவர்களை நானும் எதிரியாக கருதுவேன். அது என் சுபாவம்.

நான் அரசன் ஆக முடியாது, எனக்கு நாடாளத் தெரியாது, போர்க்கலை தெரியாது, ஆனால் நாட்டுக்கு அவசியமான அறிவுரைகளைச் சொல்லத் தெரியும், எஜமானுக்கு என்னென்ன ஆபத்து வரும், அதைக் களைந்து அவன் பலத்தை பெருக்குவது எப்படி எனச் சிந்திக்கத் தெரியும்.

என் எஜமானை எப்பாடுபட்டேனும் காக்கவேண்டும் எனும் வைராக்கியம் தெரியும்.
ஆனால், இதை முழுக்க நந்தர்களும் உணரவில்லை, மலையகேதுவும் உணரவில்லை. நீர் என்னைச் சரியாக படித்திருக்கின்றீர்” எனக் கதறினான்.

சாணக்கியன் பதறினான், “ராஷசா அறிவுள்ளவன் அழக்கூடாது, அவன் கண்ணீரை உலகம் பார்க்கக் கூடாது.

என்னாயிற்று இப்போது, இங்குத் திட்டமிட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், நடத்திவைப்பது இறைவன் அல்லவா? நீ சந்திரகுப்தனுக்கு எதிராக ஆயிரம் திட்டம் இட்டாலும் என் உருவில் அவனை அன்னை காளி காத்திருக்கின்றாள் என்றால் அவளுக்கு ஏதோ அவனைக் கொண்டு திட்டம் இருக்கின்றது என்பது பொருள் அல்லவா?

ராஷசா, நீ உன் எஜமானைப் பற்றி மட்டும் யோசிக்கின்றாய், நான் இந்தப் பாரத கண்டம் பற்றி மட்டும் கவலைப்படுகின்றேன்.

இந்தப் பாரத கண்டத்துக்கு நெருப்பாய் அச்சுறுத்துவது கிரேக்க எழுச்சி, அவர்களிடம் சிக்கிவிட்டால் நாம், நம் தர்மம், நம் மதம், நம்கோவில் நம் வேதம், நம் பாரம்பரியம் என எல்லாமும் இழப்போம்.

நிச்சயம் சில நூறு ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் அளவு மேற்கே அவர்கள் பலத்தோடு எழும்பிவிட்டார்கள் ஆனால் நம் நிலைமை என்ன?

இங்கு வலிமையான அரசு சனாதன அரசு மகதம்தான், இங்கே ஒரு பக்கம் பௌத்தம் நம்மை மிரட்டுகின்றது, அது நோய்க்கிருமி போல கண்ணுக்குத் தெரியாமல் மிரட்டுகின்றது.

இன்னொரு பக்கம் வெறிபிடித்த சிம்மம் போல கிரேக்கக் குரல் கர்ஜிக்கின்றது.

இங்கே பெரிய அரசாக மகதமே, அது வலுவுடன் இருத்தல் அவசியம். ஆனால், நந்தர்கள் இந்த பூமிக்கே கேடு.

எண்ணிப்பார், அவர்கள் ஒன்பது பேரும் முரடர்கள். சில ஆண்டுகளில் அவர்கள் வம்சத்துக்குள் அடிதடி வந்தால் இந்த மகதம் ஒன்பது துண்டாய் சிதறாதா?

அப்படிப் பலவீனமாகிப் போனால் இங்கு அந்நியர் எளிதாகப் புகுந்துவிடமாட்டார்களா? இந்தப் பாரத கண்டத்தின் எதிர்காலம் என்னாகும்?

நந்தர்கள் முரடர்கள். அவர்களால் இந்தப் பாரதம் நாசமாகுமே தவிர பலவீனமாகுமே தவிர வாழாது, அந்த ஆபத்தை நான் நீக்கினேன்.

நீ அது புரியாமல் மலையகேது தரப்போடு சேர்ந்துகொண்டாய், உன்னைக் கொண்டே எதிரிகள் அனைவரையும் ஒன்று கூட வைத்து உன்னை வைத்தே அவர்களைக் கொல்லவும் வைத்து இப்போது மகதத்தினை எதிரிகளே இல்லாத தேசமாக மாற்றி அதனை மாபெரும் அரசாக ஸ்தாபித்திருக்கின்றேன்.

ராஷசா, நீ இல்லை என்றால் பர்வதேஸ்வரன், மலையகேது என நான் சாய்த்திருக்க முடியாது, உன் திட்டங்கள் அபாரமானவை, மகா கூர்மையானவை.

நீ மகதத்தின் எதிரிகளை ஓரணியில் அழகாகத் திரட்டினாய், நீ திரட்டியதை மொத்தமாக ஒழிக்கவைத்துவிட்டேன்.

இப்படிப்பட்ட உன்னை எப்படி விட்டுவைப்பது, அதனால் நானே திட்டமிட்டு உன்னை வரவழைத்தேன்.

இனி நீ செல்ல இடமுமில்லை, இனி நமக்கு எதிரியுமில்லை எனும்போது நீ இங்கே வருவதுதான் சரி.

ராஷசா, இனி நீ இந்த அரசின் அமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் , இந்த மகதத்துக்கு எக்காலமும் விசுவாசமாய் இருப்பேன் எனக் காளி ஆணையாகச் சத்தியம் செய்துவிட்டு பதவி ஏற்றுக்கொள்”

ராஷசன் மிக்க பணிவுடன் “மன்னர் சந்திரகுப்தனின் அமைச்சராக அமர சம்மதிக்கின்றேன், அன்னை காளி ஆணையாக மன்னருக்கும் இந்நாட்டுக்கும் விசுவாசமாக இருப்பேன்” என்றான்.

சாணாக்கியன் இப்போது மிகத் திருத்தமாகத் தன் குடுமியினை முடிந்து கொண்டான்.

ராஷசன் பவ்யமாக கேட்டான், “நீங்கள் இருக்குமிடத்தில் நான் எதற்கு அமைச்சராக என்பதுதான் புரியவில்லை”

“ராஷசா, என் நோக்கம் இந்த மகதத்தில் சிக்கிக் கிடப்பது அன்று. பாரத கண்டம் முழுக்கத் சுற்றித் திரிவதும், இந்த மாபெரும் சனாதன பூமிக்குக் காவல் ஓட்டை இருக்குமிடமெல்லாம் அதை அடைத்து வலுவாக்குவதும் நாடெங்கும் சனாதனத்தை காப்பதே என் வேலை.

நான் தட்சசீலம் தொடங்கி தமிழக மதுரை வரை சுற்றிக் கொண்டிருக்க வேண்டும், இங்கே எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும், பெரும் தவமும் ஆலய வழிபாடும் செய்யவேண்டும், அரசர்களுக்கும் ஆள்வோர்கும் நல்ல சிந்தனைகளை, விதிகளை வகுத்துக் கொடுக்க வேண்டும்.

என் கடமை அது, நான் அதற்காகவே படைக்கப்பட்டேன், இந்தப் பாரத கண்டத்தின் மிரட்டலாக இருந்த நந்தர்களை அகற்றி சந்திரகுப்தனை நியமித்துவிட்டேன்.

இனி என் வழியில் நான் செல்வேன்.

இதோ உங்களுக்காக நான் எழுதிய குறிப்புகள், நிர்வாக விஷ்யங்கள் எல்லாம் “அர்த்த சாஸ்திரம்” எனத் தந்துள்ளேன், இன்னும் பல விஷயங்களைத் தொகுத்து தந்துள்ளேன், நான் இல்லாவிட்டாலும் அவை உங்களை நடத்தும்.

இந்த நாட்டின் எதிர்காலம் குறித்தும் சனாதனத்தை நிறுத்தும் வழிகுறித்தும் அரசர்களின் மகா முக்கியம் குறித்தும் நான் நிறைய பயணம் மேற்கொள்ள வேண்டும். என்னைத் தடுக்காதீர்கள்.

பயணமும் புதுப்புது சந்திப்புமே ஒரு மனிதனைப் புதிதாக சிந்திக்க வைக்கும், நான் நிறைய பயணம் சென்று பாரத கண்டம் முழுக்கச் சென்று எல்லாமும் சரிசெய்தாக வேண்டும்.

இதோ ஒன்றுமில்லமால் மகதம் வந்தேன் என் கடமையினைச் செய்தேன், ஒன்றுமில்லாமல் கிளம்புகின்றேன்” என்றான்.

சந்திரகுப்தன் கலங்கினான், ராஷசன் அவன் கையினை ப் பிடித்து முத்தம் செய்து மண்டியிட்டான், அவையோர் அனைவரும் கலங்கி நின்றார்கள்.

சாணக்கியன் தன் மேலாடையினைச் சரி செய்தபடி கிளம்பினான், அரண்மனை வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினான் சந்திரகுப்தன்.

சாணக்கியன் இயல்பாக இருந்தான், அவன் எங்கும் ஒட்டுவதில்லை. பாசபந்தம் அவனுக்கில்லை, அவனுக்கு இந்த நாடே பிர்தானம், இந்த மதமே பிரதானம், அவன் சுத்தமான சனாதனி என்பதால் அவன் கலங்காமல் விடைப்பெற்றான்.

ஒரு மகா ராஜ்ஜியத்தையே உருவாக்கித் தந்துவிட்டு ஒன்றுமில்லாமல் அவன் செல்வதைப் பார்த்தவர்கள் அவன் காலடி மண்ணை எடுத்துப் பத்திரபடுத்திக் கொண்டார்கள்.

சில அடி நடந்த சாணக்கியன் திரும்பிப் பார்த்துச் சொன்னான், “ராஷசா.. இந்த அரசை நல்லபடியாக நடத்திக் கொடு, நான் இங்கு இல்லாவிட்டாலும்…” எனச் சொல்லி சுற்றி ஒரு பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையின் பொருளை அறிந்து புன்னகைத்தான் ராஷசன், பதிலுக்குப் புன்னகைத்தபடி தலையாட்டிவிட்டு தன் போக்கில் சென்றான் சாணக்கியன், அவனைப் பொறுத்தவரை அவன் தன் கடமையினைச் செய்தான், இன்னும் இன்னும் அந்தக் கடமையினைத் தொடரச் சென்று கொண்டிருக்கின்றான்.

(முற்றும்)