சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 04

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 04

சந்திரகுப்தன் அந்த மூடப்பட்ட நிலவறையில் வைராக்கியமாக அமர்ந்திருந்தான். தன் தந்தை சாகும் போது அவன் கண் கலங்கியது. அடிக்கடி அவன் சிந்தனையினைக் கலைத்தது, அவர் சொன்ன வார்த்தைகளை நினைந்து கண்ணை மூடி மனதை கல்லாக்கி வைராக்கியமாக இருந்தான்.

“மகனே, எங்களை நினைத்துக் கலங்காதே, இதெல்லாம் தெய்வத்தின் விருப்பம், இங்கு நாம் பெறும் நன்மை தீமைக்கெல்லாம் அவரவர் செய்த வினைகளன்றி வேறேன்ன, தெய்வத்தின் கதியால் இது நேர்ந்தது என மனதை தேற்றிக் கொள்.

நீ சிவனை நம்பு, அவர் உன்னை எப்படியும் வெளிக்கொண்டு செல்வார், அங்கு இந்நாட்டுக்கும் மதத்துக்கும் செய்யும் கடமையினை மறவாதே, தெய்வம் எப்போதும் சோதிக்காது, நாம் குழியில் தள்ளப்பட ஒரு காலம் உண்டென்றால் மேலேழுந்து வரவும் ஒரு காலம் உண்டு.
அதனால் நம்பிக்கையாய் இரு” எனச் சொன்ன வார்த்தைகளே அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன‌.

இறுகிய முகத்துடன் உள்ளம் நிறைந்த வலியுடன் இருந்த சந்திரகுப்தன், “இந்த நந்த வம்சத்தை ஒழிப்பேன், இந்த ராஜ்ஜியத்தை ஆள்வேன்” எனத் திரும்ப திரும்ப மனதில் வைராக்கியமாகச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவன் இங்கே இப்படித் தவித்துக் கிடக்க வெளியே மவுரியர்கள் காணாமல் போன விஷயம் பரபரப்பானது, ராஷசனும் நந்தர்களும் அங்கே தேடுகின்றோம், இங்கே தேடுகின்றோம் என விஷயத்தை திசைதிருப்பிவிட்டு ஒன்றுமறியாதவர்கள் போல இருந்தார்கள்.

சந்திரகுப்தனைக் காணவில்லை எனும் செய்தி அக்கம் பக்கம் தேசத்துக்கு ஒற்றர்கள் மூலம் கசிந்தது, அதில் முக்கியமான தேசமான அண்டை நாட்டு மன்னன் பர்வதேஸ்வரன் உற்சாகமானான்.
காரணம், அவன் ஓரளவு பலமானவன். நந்தர்களுக்குக் கப்பம் கட்டி வாழ அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சந்திரகுப்தன் எனும் மகா புத்திசாலி இருப்பதால் போர் தொடுக்க அஞ்சினான்.

சந்திரகுப்தன் காணாமல் போனான். மௌரியர்கள் மொத்தமாக காணாமல் போனார்கள் எனும் செய்தி அறிந்து அவன் தன் அவையினைக் கூட்டினான்.

“அவையோரே, இதுகாலம் நாம் நந்தர்களுக்குக் கப்பம் கட்டிவர சந்திரகுப்தனே காரணமாய் இருந்தான், அவனுக்கும் மௌரியர்களுக்கும் அஞ்சிதான் நாம் கட்டுப்பட்டோம்.

இனி போர் என வந்தால் நம்மால் சமாளிக்கமுடியும். அந்த முரட்டு நந்தர்களை முடக்க முடியும். ராஷசன் ஒரு நரிதான், புலி அன்று. இதனால் இனியும் நாம் ஏன் கப்பம் கட்டவேண்டும்?” என வினவினான்.

அந்தப் பர்வதேஸ்வரன் அவையில் ஒரு வயதான அமைச்சர் இருந்தான். அவன் தன் தாடியினை உருவிக் கொண்டு கண்களைச் சுருக்கிச் சொன்னான்.

“அப்படி ஒரு முடிவுக்கு உடனே வரவேண்டாம், அங்கே சந்திரகுப்தன் உள்வீட்டு சிக்கலால் விலகி இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு ஆபத்தென்றால் களத்துக்கு வருவான்.

அதனால் அவன் அங்குதான் இருக்கின்றானா இல்லையா? என்பதைச் சோதிப்போம்” என்றவன் ஒர் உபாயம் சொன்னான்..

“சந்திரகுப்தன் அளவு அங்கொரு அறிவாளி இல்லை, அவன் அங்குதான் இருக்கின்றன என்பதை நாம் ஒரு விஷயம் கொண்டு அதைச் சோதிப்போம்.

நாம் ஒரு போலி சிங்கம் செய்வோம். அரக்கிலும் மெழுகிலும் ஒரு சிங்கம் செய்து அதைச் சிங்கத்தின் ரோமத்தால் ஒட்டி அதனைக் கம்பளிகளில் கட்டி ஒரு சிங்கம் போல தோன்றச் செய்து கூண்டில் வைப்போம்.

அதில் சில தந்திரம் செய்து சிங்கம் போலவே நம்ப வைப்போம், அதனை மகத நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்கு அனுப்புவோம்.

இந்தச் சிங்கத்தை இந்த நாட்டில் யாராவது கூண்டை திறக்காமல் வெளிவரச் செய்தால் நாங்கள் மகத நாட்டுக்குக் கப்பம் கட்டுவோம், இல்லையேல் அப்படி யாராலும் முடியாவிட்டால் கப்பம் கட்டமாட்டோம் என அறிவிப்போம்.

சந்திரகுப்தனைத் தவிர யாராலும் இதனைச் செய்யமுடியாது, அவன் இருந்தால் இந்த வலையில் விழுவான்”

இந்தத் தந்திரத்தில் அப்படி ஒரு சிம்மம் செய்யப்பட்டது. அச்சு அசலாக நிஜ சிம்மம் போலவே இருந்தது, அதனைக் கண்டோரெல்லாம் அச்சப்படும் அளவு கம்பீரமாக இருந்தது.

அந்தச் சிங்கம் அசையும் வண்ணம் தந்திரங்களைச் செய்தார்கள், நிஜ சிம்மம் செய்யும் அத்தனையும் அந்தப் பொம்மை சிங்கமும் செய்தது.

இப்படி ஒரு சிம்மக் கூண்டு பாடலிபுத்திரம் வந்ததும் , இதனை யாரேனும் கூண்டை திறக்காமல் வெளிக்கொண்டுவராவிட்டால் கப்பம் நிறுத்தப்படும் எனச் சவால் வந்ததும் நந்தர்கள் அரண்மனை கலங்கிற்று.

ஒரு பெரும் அரசுக்கு அப்படி ஒரு அரசை உடனே விடமுடியாது. காரணம், எல்லாச் சிற்றரசுகளும் கவிழ்ந்துவிடும் அல்லது இன்னொரு அணி உருவாகி இவர்களைக் கவிழ்த்துவிடும்.

அதே நேரம் போர் எனத் தொடங்கி தோற்றுவிட்டால் எல்லாம் அழிந்தே விடும்.

இப்படிப் பல கோணங்களில் யோசித்த நந்தர்களும் ராஷசனும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றார்கள், வழமையாக இம்மாதிரி ஆபத்துக்களை மௌரியனும் அவனுக்குப் பின் சந்திரகுப்தனுமே கையாள்வார்கள்.

ஆபத்து வந்தால்தான் அறிவாளிகள் நினைவு முட்டாள்களுக்கு வரும். அப்படி நந்தர்களுக்கும் வந்து சந்திரகுப்தன் இருந்திருந்தால் இப்படி நிலைமை வந்திருக்காதே என வருந்தி சொல்லத் தொடங்கினார்கள்.

ராஷசன் மெல்லச் சொன்னான், “அவன் அவ்வளவு எளிதில் சாகக்கூடியவன் அல்ல, வேண்டுமானால் அறையினைத் திறந்து பார்க்கலாமா?”

நந்தர்கள் சொன்னார்கள் “அது எப்படி? அவன் ஆத்திரமாக வந்து நம்மேல் பாய்ந்துவிட்டால் என்ன செய்வது?”

“வெளியே நடப்பது நமக்குத்தான் தெரியும், உள்ளே அடைபட்டு கிடப்பவனுக்கு என்ன தெரியும், சில பல காரணங்களைச் சொல்லி நம்பவைத்துவிடலாம், ஒருமுறை முயற்சிப்போம்” என்றான்.

அதன்படி அந்த வாசல் சுவர் இடிபட்டது.

அதை இடிக்கும் ஓசை கேட்டதும் சந்திரகுப்தனுக்கு உள்ளே யாரோ வரமுயற்சிப்பது தெரிந்தது, மொத்த வன்மமும் அவன் மனதில் குடியேறி முதலில் வருபவனை அப்படியே அடித்தே கொல்லவேண்டும் எனும் வன்மம் பெருகத் தொடங்கிற்று.
ஆனால், அறிவாளிகள் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள், அதை மனதோடு வைத்து வாய்ப்பு கிடைக்கும் போதுதான் காட்டுவார்கள்.

சந்திரகுப்தன் மனதில் வன்மத்தை நாகம் மணியினை மறைப்பது போல மறைத்துக் கொண்டான்.

சுவர் இடிந்ததும் உள்ளே ஓடிவந்தான் ராஷசன், அவன் சந்திரகுப்தனை கண்டதும் தன் நாடகத்தை அரங்கேற்றினான்.

“மகதநாட்டு பெரும் சொத்தே சந்திரகுப்தா, ஐயகோ நடந்துவிட்ட பெரும் தவறை என்ன சொல்வேன், அந்த அண்டை நாட்டு மன்னன் பர்வதேஸ்வரன் படையெடுத்துவருவதாக அறிந்து சில ரகசிய அறைகளை, பொக்கிஷங்கள் இருந்த அறைகளை மூடச் சொன்னோம்.

அறிவுகெட்ட நம் ஆட்கள் இந்த அறையினையும் மூடிவிட்டார்கள், நாங்களும் போர் பரபரப்பில் ஆங்காங்கே சென்றுவிட்டோம், சில நாட்கள் பரபரப்பில் எல்லாம் மறந்துவிட்டோம், கடைசியில் உங்களைக் காணோம் என எங்கெல்லாமோ தேடி இப்போதுதான் சுவரை உடைத்து உன்னைக் கண்டோம்.

எங்கே மௌரியன்? எங்கே உன் உடன்பிறந்தோர்?

ஐயகோ எல்லோரும் இறந்துவிட்டார்களா, சந்திரகுப்தா” என அவனைக் கட்டிக்கொண்டு அழுதான்.

சந்திரகுப்தனும் கொஞ்சமும் தயங்காமல் “என் கண் முன்னே என் தாயும் சகோதரரும் செத்ததை, உடல் வலிக்க செத்ததை கண்டபின் நான் ஏன் உயிரோடு இருக்கவேண்டும், என்னையும் சாகவிடுங்கள்” என அலறினான்.

அதாவது தனக்கு வெளியில் வர விருப்பம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டான், தான் இங்கே கிடந்து சாகப் போகின்றேன் என அழுது புலம்பி அரற்றினான்.

தன் உள்மனதில் வெளியே செல்லும் பெரும் ஆசை இருந்தும் அதைக் காட்டாமல் ராஷசனே தன்னை வற்புறுத்தி அழைத்துச் செல்லவேண்டும் என்பது அவன் தந்திரமாய் இருந்தது.

ராஷசனும் “சந்திரகுப்தா எல்லாமே விதியின் செயல், அந்த விதியினை வெல்ல யாரால் முடியும், சாஸ்திரம் அறிந்தவன் கலங்கலாமா, வாடி நிற்கலாமா?

வா உன் அரசாங்க பதவியினைத் தொடங்கு, உன் வேலையினை வேறு யார் பார்க்கமுடியும்??” என அழைத்தான்.
ஆனால்! முடியாது என மறுத்து அடம்பிடித்தான் சந்திரகுப்தன். அவனை நீண்டநேரம் போராடி அழைத்துவந்தான் ராஷசன்.

சந்திரகுப்தன் உள்ளத்தில் பெரும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது, கடலுக்கு அடியில் வடவாக்கினி எனும் பெரும் நெருப்பு எரிவது போல் எரிந்தது, ஆனால் காட்டிக்கொள்ளாமல் வந்தான்.

வந்தவன் கொஞ்சம் தேறியது போல் காட்டிக்கொண்டான், அடிப்படையில் அவன் எப்போதோ மனதால் தயாராக இருந்தான்.

அவனிடம் வந்து சொன்னான் ராஷசன் “சந்திரகுப்தா, அந்தப் பர்வதேஸ்வரன் அனுப்பியிருக்கும் சிங்கத்தை பார், அந்தச் சவாலில் நாம் வெல்லாவிட்டால் அவ்வளவுதான்” என முகம் வாடி நின்றான்.

சந்திரகுப்தன் அந்தச் சிங்க கூண்டை நோக்கிச் சென்றான், அதை உற்று நோக்கினான், பின் சுற்றிவந்தான் சிங்கமும் சுற்றிற்று.

அவன் அதனைக் கூர்ந்து பார்த்தான். அது உணவு உண்ட அடையாளம் எதுவும் அதன் வாயில் இல்லை, இன்னும் சில வழிகளிலும் அதனிடம் மாற்றம் தெரிந்தது.

அவன் அருகே சென்று பார்த்தான். அந்தக் கூண்டில் வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, பின் எப்படி சிங்கம் உள்ளே சென்றது? எப்படி உணவிடுவார்கள் எனச் சிந்த்தித்தவன் அதன் கண்களை நோக்கினான்.

அதில் உயிர் இல்லை.

உடனே ஒரு தீபந்தம் கொண்டுவந்தவன் அந்தப் பந்தத்தை கூண்டுக்குள் செலுத்தினான், அரக்கும் மெழுகும் உருக ஆரம்பித்து சிங்கம் உருகுலைந்து வடியத் தொடங்கியது.

அதனைக் கொண்டுவந்த வீரர்கள் அஞ்சி ஓடினார்கள், செய்தி பர்வதேஸ்வரனை எட்டிற்று, சந்திரகுப்தன் அங்குதான் இருக்கின்றான் என அறிந்த பர்வதேஸ்வரன் கப்பத்தை ஒழுங்காக அனுப்பினான்.

இப்படிச் சந்திரகுப்தன் பெரும் காரியம் செய்தபின்னும் ராஷசனின் நரிமூளை வேலை செய்தது, ஆபத்து களைந்ததும் அறிவாளியினை அப்புறப்படுத்துதல் அவசியம் என்பதை அறிந்தவன், உணர்ந்தவன் அவனை கொல்லும் பொருட்டு ஒரு இடத்துக்கு அனுப்பினான். அது மன்னன் மதிய உணவு உண்ணும் அறை.

அக்கால மரபுபடி அக்ரபோஜன, தட்சன போஜனம் என இரண்டு உண்டு.

அதாவது அரசன் உணவருந்தும் போது ஒரு பிராமண இளைஞன் அவனோடு இருந்து உண்பான், அது அக்ரபோஜனம். அவனுக்கு மூன்று பொன் தட்சணையாக வழங்கப்படும்.

அந்த இளைஞன் பார்க்க வசீகரமும் அழகானவனும் நல்ல குலத்தவனுமாக இருத்தல் வேண்டும்.

அதைத் தாண்டி தொலைவில் 100 பிராமணர்கள் அமர்வார்கள், அவர்களுக்கு உணவும் ஒரு பொன்னும் வழங்கப்படும், அது தட்சண போதனை.

இது அக்காலத்தில் பிராமணர்களை ஆதரிக்கும் வழமையாக இருந்தது, பிராமணர்கள் வேதம் ஓதுபவர்கள் தானத்தில் வாழ்பவர்கள் என்பதால் அரசனே அவர்களைப் பராமரிக்க ஏற்பாடு செய்திருந்தான்.

இங்கே அதாவது இந்த 100 பிராமணர் உண்ணுமிடத்தில் ஒரு பிராமணன் மாதம் ஒருமுறைதான் அமரமுடியும் என்றாலும் கூட்டம் அலைமோதும். வாயிலில் சீட்டு கொடுப்பவன் வந்த பிராமணன் மீண்டும் வந்தால் தடுக்கும் போது பிராமணர் சாபம் அதிகமாகும்.

வேதம் ஓதுபவர், மந்திரம் சொல்வோர் சாபம் பொல்லாதது என்பதால் அந்த வேலை கொஞ்சம் அச்சமானது.

அப்படியான வேலைக்குச் சந்திரகுப்தனை அனுப்பி அவன் பிராமணர் சாபம் பெற்றுச் சாகட்டும் என அனுப்பினான் ராஷசன்.

இது அரசமுடிவு என்பதால் சந்திரகுப்தனுக்கும் வேறுவழி தெரியவில்லை, அவன் ராஷசன் தனக்குப் பெரும் ஆபத்து என்பதை மனதால் கணித்திருந்தான். இதனால் வாய்ப்புக்காக அந்த அக்ர போஷனம், தட்சணை போஷனம் ஆகியவற்றுக்கு வரும் பிராமணருக்குச் சீட்டு கொடுக்கும் வேலையினை ஏற்றான். ஆனால், எந்தப் பிராமணனும் சாபம் இடாதபடி சீட்டு கொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தான், பிராமணர்கள் அவனை வாழ்த்தத் தொடங்கினார்கள்.

அப்படி அவன் சீட்டுக் கொடுக்கும் போதுதான் ஒரு பிரமாணன் சுற்றிப் பார்த்தபடி ஆனால் தான் பார்ப்பதை யாரும் பார்க்காதபடி ஒவ்வொரு பார்வையிலும் ஓராயிரம் அனுமானங்களை உறிஞ்சியபடி ஒன்றுமே அறியாதவன் போல பந்திக்கு வந்து கொண்டிருந்தான்.

அவன் நோக்கம் பந்தி அல்ல என்பதை முதலிலே அறிந்து கொண்டான் சந்திரகுப்தன், அப்போது அந்தப் பிராமணனுக்கு அந்த மண்டபத்தில் இருந்த ஒரு முளை, தரையில் அறையப்பட்ட முளை காலில் தட்டியது.

அவ்வளவுதான், அந்த ஆத்திரத்தில் அவன் அதனை வேகமாக பிடுங்க முனைந்தான், அதைக் கவனித்த சந்திரகுப்தன் அங்கே வந்திருந்த மற்ற பிராமணர்களிடம் கேட்டான்.

இதுவரை யாரும் செய்யாத காரியத்தை அவன் செய்கின்றான், யார் அந்தப் பிராமணன்? அவன் கண்களிலும் முகத்திலும் ஒரு ஆவேசம் தெரிகின்றதே இவர் யார்?

அவர் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார், ஏதோ ஒன்றைக் குறியீடாக செய்கின்றார். அவர் ஆழபதிந்த முளையினை ஆட்டி ஆட்டி பிடுங்குவது ஏதோ ஒன்றைச் சொல்கின்றது. அது அவருக்குத்தான் தெரியும்.

அவர் பெயர் என்ன? எந்த ஊர்க்காரர்? எனக் கேட்டான் சந்திரகுப்தன்.

அவர் யார் என அவன் சொல்ல தொடங்கியபோது சந்திரகுப்தன் முகத்தில் ஒரு மின்னல் வெட்டியது, அந்த அந்தணன் அவரைப் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தான்.

(தொடரும்..)