சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06

அங்கே என்ன நடந்தது என சந்திரகுப்தனும் அந்த அந்தணனும் மெல்ல விசாரித்தார்கள், அங்கே நடந்ததை கூடியிருந்தோர் சாட்சியாக சொன்னார்கள்.

சந்திரகுப்தனிடம் பெற்றுக் கொண்ட சீட்டின் பிரகாரம் சாணக்கியன் அரசர்களோடு மகா வித்வான் அமரும் இடத்தில் அமர்ந்தான், அமர்ந்தவன் உணவு உண்ணுமுன் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி சாங்கியத்தை ஒரு பிராமணன் செய்யவேண்டுமோ அனைத்தும் செய்தான்.

அப்போது நவநந்தர்களும் வந்தார்கள், பந்தி ஆரம்பிக்கப்பட இருந்தது.

பெரும் ஞானவான்களும், பெரும் ஞானபண்டிதரும் அமரவேண்டிய இடத்தில் ஒல்லியான தேகத்துடன் இளம் வயதுடன் கொஞ்சம் கர்வத்துடன் ஒருவன் அமர்ந்திருப்பதை பார்த்து அவர்கள் எரிச்சல் அடைந்தார்கள்.

அங்கே விசாரணை தொடங்கி அது பெரும் சர்ச்சை நோக்கிச் சென்றது.

“யார் நீ?

நான் சாணக்கியன்.

எங்களுக்குத் தெரியாது, அது பிரச்சினை அல்ல. நீ ஏன் மகா வித்வான் இருக்கும் இடத்தில் அமர்ந்திருக்கின்றாய்?

என் விதைக்கு என்ன குறை?

வித்தைக்கு குறையா? இது பார்த்தாலே கை எடுத்து வணங்கதக்க மாமேதைகளும் சாஸ்திர மேதைகளும் அமரும் இடம், உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை, நீ அந்த நூறுபேரில் ஒருவனாக இருந்திருக்க வேண்டியவன், இடம்மாறி வந்துவிட்டாய் என நினைக்கின்றோம்.

இல்லை, சந்திரகுப்தன் கொடுத்த சீட்டு இதோ…

அவன் கொடுத்துவிட்டால் நீ சாஸ்திரமேதை, ஞானபண்டிதன் ஆகிவிடுவாயா, எழும்பிச் செல்”

சாணக்கியன் இங்கேதான் சீறினான்.

“என் உருவம் கண்டா இகழ்கின்றீர்கள்? தட்சசீலம் முதல் சாரதா பீடம் தொடங்கி, காஞ்சிபுரம் வரை எல்லாப் பல்கலைகைகழகங்களிலும் படித்தவன் நான், மலையாள தேசத்தின் அதர்வணம் கூட எனக்கு விரல் நுனியில் உண்டு.

தர்க்கம், சாஸ்திர்ம, வானவியல், நிர்வாகம், வேதம், தவம், ராஜதந்திரம் அரசியல் என எந்த வித்தை உங்களுக்கு வேண்டும் சொல்லுங்கள், ம்.. எனும் முன்பே அள்ளி அள்ளி வீசுகின்றேன்.

எனக்கு நிகராக இந்தக் கூட்டத்தில் ஒருவனை வாதிடச் சொல்லுங்கள், இல்லை உங்கள் நாட்டில் இருந்து ஒருவனை வரவழைத்து வாதிடுங்கள், அதன் பின் முடிவு செய்யுங்கள்” எனச் சீறினான்.

நந்தர்கள் அவனை ஏளனமாகப் பார்த்தார்கள், பார்வையிலே அர்த்தம் காணும் சாணக்கியனுக்கு அது அவமானமாயிற்று.

“ஏ நந்தர்களே, என்னையா இகழ்கின்றீர்கள், ஒரு தவசியினை மதிக்கா தேசம் அழிவைத் தேடும் என்பதை அறியாதவர்களா நீங்கள், உங்களுக்குக் கடைசி வாய்ப்பை தருகின்றேன்” எனச் சீறினான்.

முட்டாள்களும் முரடர்களுமான நந்தர்கள் தங்கள் அழிவுகாலத்தை முன்னிட்டு அவனை ஒரு பொருட்டாக கருதாமல் அமர்ந்து சிரித்தார்கள்.

ஒரு நந்தன் சொன்னான், “யாரிடம் பேசுகின்றோம் எனத் தெரியாமலே பேசுகின்றாய், நாங்கள் நினைத்தால் இப்போதே உன் தலை சீவப்படும்”

சாணக்கியன் சீறிச் சொன்னான், “நல்ல சனாதனவாதி சாவுக்கு அஞ்சமாட்டான். அது ஆன்மா உடலுக்கு கொடுக்கும் விடுதலை, ஆன்மா அடுத்தப் பிறப்பெடுக்கும்.

விதிமுடிந்த இடத்தில் மரணம் என்பதனை அறியாதவனா நான்? விதி அதுவென்றால் முடியட்டும்.

ஆனால், உங்களைப் போன்ற அறிவாளிகளை மதிக்கத் தெரியாதவர்களுக்கு நான் ஏன் அஞ்சவேண்டும், உங்களிடம் அதிகாரம், நாடு இருக்கலாம், எனக்கு மாபெரும் வித்தை உண்டு, இந்தப் பாரத தேசம் மேலும் இந்தச் சனாதான தர்மம் மேலும் அவ்வளவு நேசம் உண்டு, நான் அதற்காக வாழும் தவசி

என்னைப் பொறுத்தவரை நான் சந்திக்கும் மன்னர்களில் ஒருவர் நீங்கள், நான் ஏன் உங்களுக்கு அஞ்ச வேண்டும்.

இங்குப் பிரச்சினை நான் இந்த ஆசனத்தில் அமர தகுதி உடையவனா இல்லையா என்பது, எனக்குச் சமமாக ஒருவனை வாதிட செய்யுங்கள், அதன் பின் இங்கே பந்தி தொடங்கினால் போதும்”

அவன் பாம்பாய் சீற நந்தர்கள் அலட்சியமாகச் சொன்னார்கள், “இவனை தூக்கி வெளியே எறியுங்கள்”

அவர்கள் சொன்னதும் காவலர்கள் சாணக்கியனை நெருங்கினார்கள், சாணக்கியன் ஒரு பார்வை பார்த்தான். காவலர்கள் ஒரு அடி பின்னால் நகர்ந்தார்கள்.

சாணக்கியன் சினம் கொண்ட சிம்மமாக கத்திச் சொன்னான், “நானே நடக்கின்றேன், ஆனால் சில சவால்களைச் சொல்லிச் செல்கின்றேன்.

ஏ மூடர்களே, ஒரு தவசி என்று கூட பாராமல் அவமரியாதை செய்தீர்கள், பசியோடு இருப்பவனை எழுப்பி விரட்டிய படுபாதகம் செய்தீர்கள்.

இதோ நான் இப்போது சொல்கின்றேன், உங்கள் அரசையே நான் அழித்துக்காட்டுவேன், இந்த மகத சாம்ராஜ்ஜிய ஆட்சியினை நான் மாற்றிக்காட்டுவேன்.

உங்களிடம் அதிகாரம் இருக்கும், ஆனால் சரியான அறிவாளி இல்லாவிட்டால் அதிகாரம் எப்படி அழியும் என்பதைக் காட்டுகின்றேன்.

கொழுத்த‌ யானையினை சிம்மம் மலை உச்சியில் இருந்து வேட்டையாடி இழுத்துச் சரிப்பது போல் உங்களைச் சரித்துக் காட்டுவேன்.

இந்த மகத அதிகாரத்தை அழிக்கும்வரை நான் என் குடுமியினை முடியேன்” எனச் சொல்லி அவிழ்த்துவிட்டான்.

அந்தக் காட்சியினைக் கண்டதும் சபை சலசலத்தது, காரணம் தலைவிரி கோலத்தின் விரியத்தை அவர்கள் அறிந்தவர்கள்.

நந்தர்கள் அதுபற்றி கவலைப்படாமல் ஏழை அந்தணன் தங்களை என்ன செய்யமுடியும் எனச் சிரித்துக்கொண்டு உண்ணத் தொடங்கினார்கள்.

சாணக்கியன் தலைகொண்டையினை அவிழ்த்துவிட்டான், தன் மேலாடையினைக் கழற்றி உதறினான்.

“மகதமே, உன் புதிய அரசனுக்காக காத்திரு…சாணக்கியன் என்றால் யார் என்பதை இனி உலகம் காணும்” எனச் சொல்லிப் புயலாய் நடந்தான்.

சினம் கொண்ட சிம்மம் நடப்பது போல் அவன் நடை இருந்தது, அவன் ஆட்கள் ஓசைபடாமல் நடப்பதைக் கவனித்தார்கள், கொடிய சினத்தோடு நடந்த அவன் சந்திரகுப்தனை கடக்கும் போது யாரும் அறியா ரகசிய புன்னகை ஒன்றை வீசிச் சென்றான்.

அதன் அர்த்தம் புரிந்துகொண்டான் சந்திரகுப்தன்.

சாணக்க்கியன் தனியே சென்றான், பார்ப்பதற்கு ஆண்டி ஒருவன் ஒற்றை பிராமணன் தனியே செல்வது போல் இருந்தது.

ஆனால், ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்த ரகசிய இடத்துக்கு அவன் செல்கின்றான் என்பதை அங்கே அமர்ந்திருந்த அவன் ஆட்கள் மட்டும் அறிந்திருந்தார்கள், ஆனால் ஏதும் அறியாதவர் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சந்திரகுப்தனும் ஒன்றும் அறியாதவன் போல் வந்து அமர்ந்து கொண்டான், உணவு முடித்த அந்தணர்கள் ஒவ்வொருவராக கிளம்பும்போது ஒரு அந்தணன் நன்றி சொல்லும் சாக்கில் சந்திரகுப்தன் அருகில் வந்து காதோரம் கிசுகிசுத்துச் சென்றான்.

“எங்கள் குருநாதர் வேத்பாடசாலையில் காத்திருப்பார், யாரும் அறியாமல் நாளை வரவும்”

சாணக்கியன் சாபமிட்டு குடுமி அவிழ்த்துவிட்ட காட்சி நந்தர்களைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை, அவர்கள் ஆணவத்தின் உச்சியில் இருந்தார்கள், ஆணவக்காரர்கள் எதையும் சிந்திப்பதே இல்லை.

ஆனால் அந்த ராஷசன் அஞ்சினான், அவன் நடந்தது நல்ல அறிகுறி அல்ல என்பதை உணர்ந்து பதறினான்.

“சந்திரகுப்தனை உணவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் அமர்த்தியதே அவன் அந்தண சாபம் வாங்கி அழியவேண்டும் எனும் நோக்கில்தானே, ஆனால் அவனோ அந்தண சாபத்தை நந்தர்கள் மீதே திருப்பிவிட்டிருக்கின்றான்.

எப்படி அவன் இப்படிச் சிந்தித்தான்? எந்த அடிப்படையில் சிந்தித்தான் ஒன்றும் புரியவில்லை.

வந்தவன் சாணக்கியன் என்கின்றார்கள், அவனைப் பற்றி கொஞ்சமல்ல நிறைய கேள்விபட்டதுண்டு. அவனெல்லாம் பல்லக்கில் வைத்து வரவேற்கப்படவேண்டிய வித்வான்.

ஆனால், எப்படி வந்தான்? ஏன் யாரும் அறியாமல் தனியாக வந்தான், ஏன் நந்தர்களோடு சண்டையிட்டான்?

அவனைப்போன்ற அறிவாளிகள் உணர்ச்சிவசப்படுபவர்கள் அல்ல, அறிவாளி தன்னைத் தாழ்த்துவான், தன்னை வெளிகட்டமாட்டான், அங்கீகாரத்துக்கு அலையமாட்டான்.

அவன் நிச்சயம் ஒருபிடி உணவுக்காக அல்லது அங்கீகாரத்துக்க்காக வரவில்லை, அவன் ஏதோ திட்டமிட்டிருக்கின்றான் என்ன என்பது தெரியவில்லை.

ஒருவேளை பர்வேஸ்வரன் ஆளாக இருப்பானோ. இல்லை எதிரி நாட்டு ஆளாக வந்திருப்பானோ? வந்தவனுக்கு எப்படி அந்த ஆசனத்தில் அமரும் சீட்டை சந்திரகுப்தன் கொடுத்தான்?

இங்கு எல்லாமே சந்தேகம், எல்லாமே ஏதோ அறிகுறி. அவன் ஏதோ திட்டத்தோடு வந்திருக்கின்றான், நாமேதான் மோப்பம் பிடிக்காமல் விட்டுவிட்டோம்.

நிச்சயம் ஆபத்து பெரும் ஆபத்து.. ஏதோ பெரிதாக நடக்கப் போகின்றது.

அவன் ஏன் குடுமியினை அவிழ்த்தான், என்ன காரணம்? ஒரு அந்தணன் காரணமில்லாமல் அவிழ்க்கமாட்டான், ஏதோ பெரும் அடையாளம் இருத்தல் அவசியம்.

சுதாரித்த ராஷசன் தனக்கு வேண்டப்பட்ட அந்தணர்களை ரகசியமாக அழைத்து விசாரித்தான். அவர்கள் சொன்னார்கள், “அமைச்சரே, உச்சிக்குடுமி என்பது சாதாரணம் அல்ல. அது உடலின் சக்கரங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் இடம்.

ரிஷிகள் கொண்டை முதல் அரசனின் கிரீடம் வரை இந்தத் தத்துவம் உண்டு, துரிய சக்கரத்தை உடலோடு சேர்க்கும் ஒரு இணைப்பு இது.

பிரபஞ்ச சக்தியினைப் பெற்றுக் கொடுக்கும் புள்ளி அது.

இந்தக் கொண்டைதான் சிவலிங்கத்தின் வடிவமுமாகும், சனாதான மரபில் இந்தக் கொண்டை ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு.

இந்த உச்சிக்குடுமி ஒழுங்காக பின்னப்பட்டு பூச்சுடப்பட்டு இருந்தால் அது காக்கும் சக்தி, அதாவது நான் என் மகா சக்தியினைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றேன், இங்குக் காவல் செய்கின்றேன் எனப் பொருள்.

உச்சிக்குடுமி சரியாக கட்டப்பட்ட யாரையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை, அவர்கள் இயல்பானவர்கள். கட்டுக்குள் காவலுக்குள் இருப்பார்கள், அவர்கள் கட்டுப்பாடானவர்கள் காவல் தருபவர்கள் என்பது அடையாளம்.

ஆனால், உச்சிகுடுமியினைப் யார் கலைத்தார்களோ அவர்கள் அழிவு சக்தி, இனி எந்தக் கட்டுக்கும் நான் அடங்கமாட்டேன் அழிக்க முடிவு செய்துவிட்டேன், இனி எந்தக் கட்டுக்குள்ளும் நான் செல்லவில்லை, பிரபஞ்சமே எதிர்த்தாலும் நான் என் சபதத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன் எனும் அந்த நிலை.

சிவலிங்கம் எப்படி வணங்கதக்கதோ காக்கும் சக்தியோ அப்படி உச்சிக்குடுமி காக்கும் சக்தி, சிவன் ஊழி தாண்டவமாடும்பொது எப்படித் தலை விரித்து ஆடுவாரோ அப்படி விரிந்த தலை என்பது அழிக்கும் சக்தி.

இதைத்தான் பாஞ்சாலி செய்தாள், தெற்கே கண்ணகி அம்மன் செய்தாள். இன்னும் புராணமெங்கும் அந்தக் காட்சி உண்டு.

சாஸ்திரம் அறிந்த ஞானி அதைச் செய்வானாகில் அவன் எதையோ அழிக்கத் தயாராகிவிட்டான், இனி எந்தக் கட்டுக்கும் அவன் அடங்கமாட்டான், எதையோ அழிக்க அழித்து முடிக்க அவன் நெஞ்சக் கொதிப்போடு இருக்கின்றான் எனப் பொருள்” எனப் பணிந்து சொன்னார்கள்.

ராஷசன் அவர்களைப் போகவிட்டு அமைதியாக யோசிக்க தொடங்கினான். அப்போதும் சாணக்கியனின் சவால் நந்தர்களுக்கே அன்றி அந்தச் சாபம் தன்னைப் பாதிக்காது என்பதை மெல்ல உணர்ந்தான். ஆனால், நந்தர்கள் இல்லாமல் தன் அதிகாரம் செல்லுபடியாகாது என்பதையும் சேர்த்துக் கணக்கிட்டான்.

அவன் சாணக்கியனை எண்ணி அஞ்ச ஆரம்பித்தான், அப்போது சாணக்கியன் என்ன செய்யபோகின்றான் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை, எனினும் பெரும் எச்சரிக்கை கொண்டான்.

அதே நேரம் அந்த வேதபாடசாலையின் பின் பக்கம் தலைவிரி கோலமாய் ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தான் சாணக்கியன்.

அவனைக் காண யாரும் அறியாதபடி வந்தான் சந்திரகுப்தன்.

அவனை உற்றுநோக்கி புன்னகைத்தான் சாணக்கியன், சந்திரகுப்தன் அவன் காலை தொட்டு வணங்கினான்.

“சந்திரகுப்தா நான் இங்கே அழிக்கும் நோக்குடனே வந்தேன், நீ சரியான வழியினைச் சாதுர்யமாக செய்தாய். நந்தர்களின் செய்கையாலே நாம் அவர்களைச் சபிக்கும்படி செய்தும் விட்டார்கள்.

இங்கே எனக்குத் தேவை ஒரு காரணம், அந்தக் காரணத்தை எளிதாக்கி கொடுத்த நீ புத்திசாலி. உன்னை இனி நான் எந்த இடத்தில் வைக்கப்போகின்றேன் என்பதை மட்டும் பார்” எனச் சொல்லி தன் மேலாடையினை சரி செய்து கொண்டான்.

சந்திரகுப்தன் தனக்கு நாடாளும் ஆசை இல்லை என்பதையும் தன் குடும்பத்துக்கு ராஷசனும் நந்தர்களும் செய்த கொடுமை எல்லாம் சொல்லி அதற்குப் பழிவாங்கவேண்டும் என்றுமட்டும் சொன்னான்.

“சந்திரகுப்தா, நந்தர்கள் எனக்குப் பொருட்டே அல்ல, ஒரே மாதத்தில் அவர்களை அழித்துக்காட்ட என்னால் முடியும்.

ஆனால், இங்கு சவால் நந்தர்கள் அழிவது அல்ல, இங்கு மிரட்டல் கிரேக்கர் வடிவில் உள்ளது, அவர்கள் இங்குப் பலவீனமான அரசு அமைந்தால் எந்நேரமும் பாய்வார்கள், அவர்களால் நம் சனாதன தர்மம் முதல் பாரத பண்பாடு வரை எல்லாம் அழியும்.

நான் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் உருவாக்கி சனாதனதர்மம் காக்க வழிசெய்யும் யாகத்தில் இறங்கியிருக்கின்றேன், அங்கே நந்தர்கள் என்பவர்கள் அதில் இடும் பலி.

சந்திரகுப்தா மற்ற விஷயங்களை அப்புறம் பேசலாம், இது அற்புதமான தருணம், கோள்களின் சஞ்சாரம் மிகச்சரியாகப் பொருந்தியிருக்கின்றது.

இந்நேரம் என்னால் அபிஷேகம் செய்யப்படும் ஒரு அரசன் அசைக்கமுடியா இடத்துக்குச் செல்வான்.

வா, கிழக்கு நோக்கி அமர்ந்துகொள், நான் உனக்கு மன்னனாக அபிஷேகம் செய்கின்றேன்” என்றவன் அவனை அப்படி அமரச் செய்தான்.

சில குடம் நீர் வைக்க உத்தரவிட்டான், அதன்படி வைக்கப்பட்டது.

அவன் அமர்ந்தான். அவனோடு அவன் சீடர்களும் அமர்ந்தார்கள், அவன் குறிப்பறிந்து காரியம் ஆற்றினார்கள்.

சட்டென அரணிக்கட்டையினை கடைந்து நெருப்பை ஏற்படுத்தினார்கள், அங்குச் சமித்துகள் இடப்பட்டு நெய் ஊற்றப்பட்டது, யாக குண்டம் எரிய ஆரம்பித்தது.

“எரிவது நெருப்பல்ல என் மனம், இது நந்தர்களை அழிக்கும் வரை ஓயாது ஓயாது” என உள்மனதில் வன்மம் வைத்தபடி உக்கிரமாக யாகம் செய்தான் சாணக்கியன்.

யாகம் நடக்க நடக்க மேலே சூரியனைப் பார்த்துக்கொண்டான், காற்று வீசும் அசைவை உணர்ந்தான்.

குறிப்பிட்ட நேரம் தன் சீடர்களுக்குக் கைகாட்டினான். அவர்கள் தயாரானார்கள்.

குடம் குடமாய் நீர் அவன் கையில் கொடுக்கப்பட்டது, “சந்திரகுப்தா, உன்னை மகத தேசத்தின் அரசனாக இந்த நொடி அபிஷேகம் செய்கின்றேன், இனி இன்றில் இருந்து நீதான் அரசன், மகத தேச அரசன்” எனச் சொல்லி அபிஷேகம் செய்து திருநீறு பூசி ஆசீர்வதித்தான்.

அவன் முழு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான். “சந்திரகுப்தா, பொறுப்பை என்னிடம் விட்டுவிடு, நான் இங்கிருந்து அகன்று என் நண்பர்கள் மூலம் பல திட்டங்களை அரங்கேற்றுவேன்.

நமக்குத் தேவை அரசகுடும்பத்தில் முதலில் ராஷசனுடன் உறவாடும் நல்ல உளவாளிகள், உளவாளிகள்தான் போரின் முதல் வீரர்கள்.

நான் மிகச்சரியான உளவுப்படையினை அனுப்புவேன், அதை மிகச் சரியான ஆட்களோடு அனுப்புவேன், அவர்கள் நந்தர்கள் அவையில் புகுந்துவிடுவார்கள், அதன் பின் ஒவ்வொரு நடவடிக்கையாக நான் வகுத்துத் தருவேன்” என்றான்.

அதை ஆமோதித்தான் சந்திரகுப்தன்.

ஒரு பக்கம் மாபெரும் சேனைகள், படைகள் அதிகாரம் மாபெரும் தேசம் என நின்றிருக்கும் நந்தர்கள். இன்னொரு பக்கம் ஒரு அறிவாளி அந்தணனும் அவனோடு ஒரு சாதுர்யமான வீரனும் நின்றிருந்தார்கள்.

அறிவு வெல்லுமா? அதிகாரமும் படையும் வெல்லுமா எனும் பெரும் மோதல் அங்கே தொடங்கியிருந்தது.

(தொடரும்..)