சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07
சாணக்கியன் சந்திரகுப்தனுக்கு அபிஷேகம் செய்து நீதான் இனி இந்த நாட்டின் அரசன் என அறிவித்தபின் அந்த வேதபாடசாலையின் அறையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
சாணக்கியன் அவிழ்த்தவிட்ட தலைமுடியுடன் தீர்க்கமான சிந்தனையுடன் அமர்ந்திருந்தான், அவன் முன்னால் சந்திரகுப்தன் தலையில் கொண்டை கட்டி அமர்ந்திருந்தான்.
சாணக்கியன் திடீரென தன் மடியில் இருந்த சோழியினை எடுத்து உருட்டினான், சோழி உருண்டு வீழ்ந்தது. அதைப் பார்த்தபடியே சந்திரகுப்தனை நோக்கினான்.
தயங்கிய பார்வையினைப் பார்த்தவனை நோக்கிக் கேட்டான்.
“என்ன பார்க்கின்றாய் சந்திரகுப்தா?
இல்லை, இந்தக் காரியம் நடக்குமா இல்லையா என்றுதானே பார்க்கின்றீர்கள்?”
சாணக்கியன் சிரித்துச் சொன்னான் “அந்தக் காரியம் நடந்தே தீரவேண்டும், நான் இப்போது காரியத்தை இன்றே தொடங்கலாமா நாளை தொடங்கலாமா என்றுதான் சோழியிட்டு பார்த்தேன்” எனச் சொன்னான்.
சந்திரகுப்தன் பதிலேதும் பேசவில்லை.
“சந்திரகுப்தா, நீ வழமையான பணியில் வழக்கம் போலிரு, உன் மேல் எந்தச் சந்தேகமும் வராதபடி உன் வேலையினை மட்டும்பார், நான் தென் திசைபோய் பல ஏற்பாடுகளைச் செய்கின்றேன், இன்றே கிளம்புகின்றேன்” என்றான்.
“இங்கே இருந்து காரியங்களைச் செய்தால் என்ன?” என்றான் சந்திரகுப்தன்.
கைகளை உயர்த்திச் சொன்னான் சாணக்கியன், “ஒரு வீட்டில் பிரச்சினை என்றால் அதை வீட்டுக்கு வெளியில் இருந்து பார்க்கவேண்டும், குடும்பத்தில் சிக்கல் என்றால் அதைக் குடும்பம் சாரா ஒருவனாக வெளியில் இருந்து பார்க்கவேண்டும்.
இங்கே இந்த அரசை அகற்றும் காரியத்தையும் அதற்கான ஏற்பாடுகளையும் வெளியில் இருந்துதான் செய்யவேண்டும், சிங்கத்தின் குகையில் இருந்தே அதை முடக்க நினைப்பது ஆபத்து, வெளியில் இருந்துதான் வலை பின்னல் வேண்டும்” என்றவன் கிளம்பத் தயாரானான்.
சாணக்கியன் அவனிடம் ஆசிபெற்றான், ஆர்வமிகுதியால் “அடுத்தகட்டம் என்ன?” என்றான்.
“எல்லாமும் உனக்குச் சொல்லவேண்டும் என என்ன இருகின்றது சந்திரகுப்தா? மகா முக்கியமான காரியங்கள் ஒருவன் மனதில்தான் அங்கு மட்டும்தான் இருக்கவேண்டும்.
உனக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் தெரிவிக்க வேண்டிய வழியில் தெரிவிப்பேன்” சொன்னவன் நல்ல நேரம் நிமித்தம் பார்த்துத் தெற்கு நோக்கிக் கிளம்பினான்.
சாணக்கியன் பெரும் அறிவாளி, பாரத கண்டத்தின் அறிவாளிகளும் ராஜதந்திரிகளும் அவனை அறிவார்கள், எவ்வளவோ சிக்கல்களை எத்தனையோ இடத்தில் தீர்த்தான், எவ்வளவோ ஆலோசனைகளைத் தேவைப்படும் இடத்தில் விதைத்தான்.
ஆயிரகணக்கானோர் அவன் நட்புக்குக் காத்திருந்தார்கள், சீடனாக்கிக் கொள்ள எத்தனையோ பேர் காலில் விழுந்தார்கள்.
ஆனால், அவனோ அவனிலும் அறிவில் சிறந்தோர் தனக்கு நிகரான அறிவுடையோர் யார் எனத் தேடினான், அப்படித் தேடி தேடி மிகச் சிலரையே தன் சீடர்களாகவும் நண்பர்களாகவும் வைத்திருந்தான்.
அவனுக்கு 64 சீடர்களும் 32 சிறந்த அதிபுத்திசாலி நண்பர்களும் இருந்தார்கள், பெரிய மந்தையினை அவன் வைத்திருக்கவில்லை.
ஆயிரம்பேர் அவனுக்காக வர இருந்தும் தான் தன்னைவிட அறிவாளி என நம்பும் இந்த 96 பேரை பாரதம் முழுக்கத் தேடி அலைந்து சேர்த்திருந்தான்.
அதிலும் 32 பேரை மட்டும் தன் நண்பர்கள் எனக் கொண்டான். ஆனால், அவர்களுக்கும் தன் மனதின் ஓட்டம் முழுக்க அவன் சொல்வதில்லை.
அவர்கள் சாணக்கியனைப் பற்றி தெரிந்திருந்ததால் ஏதும் கேட்பதுமில்லை.
சாணக்கியனின் சாமார்த்தியம் இந்த 96 பேரையும் ஒருவர்க்கு ஒருவர் அறியா வண்ணம் வைத்திருந்தான், தான் சாணக்கியனின் சீடர் அல்லது நண்பர் என்பது இன்னொருவருக்குத் தெரியாது.
அதுதான் சாணக்கியன், அவன் வைத்திருந்த வலை அமைப்பு அப்படி.
சாணக்கியன் சில நாட்கள் பயணத்தில் தெற்கே காஞ்சிபுரம் வந்தான். தன் முக்கிய நண்பனான “இந்து ஷர்மா” என்பவனைச் சந்தித்தான்.
“இந்து ஷர்மா” சாணக்கியனின் நண்பன், சக சாஸ்திரமும் அறிந்தவன், புராணம் முதல் எல்லாமும் அறிந்தவன், வேதம் ஓதுபவன், நால்வகை வேதத்திலும் கரை கண்டவன்.
64 கலைகளிலும் கரை கண்டவன், மகா மேதை, மகாபாரத்தில் வரும் துரோணரின் சாயல், கூடுதலாக சூட்சுமச் சக்திகளைத் தொடர்புகொண்டு வேலை வாங்கும் வித்தையெல்லாம் தெரிந்தவன்.
கொடுத்த காரியத்தை மிகக் கச்சிதமாக நிறைவேற்றும் அத்தனை வழிகளையும் அறிந்தவன்.
அவனே தன் திட்டத்துக்குச் சரியானவன் என மனதால் ஊகித்த சாணக்கியன் அவனிடம் சொன்னான்.
“நண்பனே, நீ அறியாததல்ல. இந்தப் பாரதகண்டம் ஆபத்தில் இருக்கின்றது. ஒரு பக்கம் கிரேக்க மிரட்டல், ஒரு பக்கம் பௌத்த மிரட்டல் என இந்த தேசமும் மதமும் ஆபத்தில் இருக்கின்றது.
இங்குப் பெரிய அரசாக நந்தர்களின் அரசு அமைந்துவிட்டது, ஆனால் நந்தர்களோ கொஞ்சமும் சரியில்லை, முரடர்களாகவும் பெரும் அகங்காரம் கொண்டவர்களாகவும் பேராசை பிடித்தவர்களாகவும் உள்ளார்கள்.
அந்த ராஷசன் வேறு அமைகச்சர்களாக இருந்து இவர்களை ஆட்டிவைக்கின்றான், அவனுக்குத் தன்னைப் பற்றிய கவலையில் அக்கறையில் அவன் மூளை சரியாக வேலை செய்கின்றதே அன்றி இந்தப் பாரத கண்டம் பற்றி சனாதான தர்மம் பற்றி துளி கவலையில்லை.
அவன் ஒட்டுண்ணி , நரிவகையறா. எந்த அரசன் வந்தாலும் ஒட்டிக்கொண்டு வாழ்ந்துவிடவே முனைவான். அவனுக்குத் தன் சுயநலம் தவிர எதுவும் பெரிதல்ல.
இப்படிப்பட்டவர்கள் ஆபத்தானவர்கள், எதிரியின் நயவஞ்சக திட்டத்துக்குத் துணை செல்வார்கள்.
அங்கே அவன் மூலம் அந்நியர் ஊடுருவலாம் இல்லை, ஒன்பது நந்தர்களில் ஒருவன் மூலமாக நுழையலாம்.
அங்கே அறிவாளிகளுக்கு மதிப்பில்லை, தவசிகளுக்கு பெருமை இல்லை அப்படியான இடத்தில் சாபம் மூளும், அதை இன்னும் அதிகரிக்க சந்திரகுப்தனின் தந்தை மௌரியனை அவன் பிள்ளைகள் 99 பேருடன் கொன்றிருக்கின்றார்கள், எப்படிப்பட்ட பாவம் இது?
இந்தச் சாபமெல்லாம் அவர்களைச் சூழும்போது குழப்பம் வரும், அப்படி வரும் போது வளமான கங்கை கரைக்குக் காத்திருக்கும் அந்நியர்கள் வருவார்கள்.
இதை நாம் முறியடிக்க வேண்டும் நண்பனே, காரணம் மகதம் அந்நியர் கையில் விழுந்த மறுநொடி தென்னகமும் வீழும் எல்லாமே அழியும், பின் யார் மீட்டெடுப்பார்கள்?
நாம் தவசிகள், சாஸ்திரம் அறிந்த வேதம் ஓதும் பண்டிதர்கள். இங்குச் சாஸ்திரமும் வேதமும் சனாதன தர்மமும் நிலைக்க அரசுவேண்டும், காவல் வேண்டும், அது அல்லாவிட்டால் இவை எல்லாமே அழிந்துவிடும்.
நம் உடலில் கடைசி மூச்சு இருக்கும்வரை இதைக் காக்க பிறப்பெடுத்தவர் நாம், அந்த உணர்வில் இந்தப் போராட்டத்தை ஆபத்து வருமுன்பே நாம் தொடங்குகின்றோம்” என்றான்.
இந்து ஷர்மா முழுக்க சாணக்கியனை அறிந்தவன், அவன் என்ன சொன்னாலும் அது அவன் சுயநலமின்றி பாரத கண்டம்,ச னாதன தர்மம் பற்றியதாகவே இருக்கும். இந்துஸ்தானம் பற்றியதாகவே இருக்கும். அங்கே சிந்திக்க ஏதுமில்லை என்பதை முழுக்க அறிந்தவன்.
அதனால் நேரடியாகக் கேட்டான், “நண்பா, நான் என்ன செய்யவேண்டும் அதை மட்டும் சொல்”
சாணக்கியன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான், ஒரு காலை மடித்து அமர்ந்து கொண்டான், கலைந்து கிடக்கும் கூந்தலை கொஞ்சம் ஒதுக்கிக் கொண்டான்.
பின் சொன்னான், “இந்து ஷர்மா, அங்கே பௌத்த துறவிகள் நடமாட்டத்தை அவதானித்தேன், அவர்கள் ஆங்காங்கே நோய்க்கு மருந்து, கல்வி எனக் கிளம்பியிருக்கின்றார்கள்.
இவர்களின் உள்நோக்கம் மக்கள் பணி அல்ல, தங்கள் சித்துவிளையாட்டுக்களால் மெல்ல மெல்ல அரசனை நெருங்குவது, பின் அவர்களை பௌத்தமாக்கி நாட்டை பிடிப்பது.
ஒரு நாட்டை கைபற்றுவதில் யுத்தம் என்பது ஒரு முகம், இப்படி கல்வி மருத்துவம் எனச் சொல்லி மக்களை குழப்பி மக்கள் பணி, மருத்துவம் என அடிமக்களை குழப்பி பின் மெல்ல மெல்ல சாந்த முகம் காட்டி அரசனை நெருங்கி ஆட்சியினைப் பிடிப்பார்கள்.
முதலாவது, வாள் ஏந்தி ரத்தம் கண்டு ஆட்சியினைப் பிடித்து கிரேக்கர் பாணியில் நாட்டையும் மக்களையும் அவர்கள் மதத்துக்கு கத்தி முனையில் மாற்றுவது.
இரண்டாவது, விஷம் போல் கலந்து யாருக்குக்கும் தெரியாமல் கலந்து கொல்வது இன்னொரு முகம்.
இந்த பௌத்தம் அப்படிச் சாந்தமான முகத்தில் இருக்கும் கொடிய முகம்.
அவர்கள் மகதத்தை கைபற்றுமுன் நாம் முந்திக்கொள்ளல் அவசியம், நீ அங்கே செல், முக்கியமாக பௌத்த துறவிபோல் மாறுவேடத்தில் செல், அங்கே சென்று பௌத்தர்கள் அரசனை நெருங்குமுன் நீ உள்ளே சென்றுவிடு, பின் நான் உனக்கு விஷயங்களை அனுப்புவேன்.
ஒரு உளவாளி எப்படியானவன் என்பதை நீ அறிவாய், உளவுப்படை இல்லாமல் வெற்றி இல்லை என்பதும் நீ அறியாததல்ல, உளவுப்படையின் வெற்றிதான் ராஜவெற்றியினைத் தீர்மானிக்கும் என்பதால் அதன் முக்கியத்துவம் உனக்குத் தெரியும்”
இந்து ஷர்மா எழுந்தான், “நண்பா, நீ எளிதில் திட்டம் வகுக்கமாட்டாய், நீயே அவிழ்ந்த கூந்தலுடன் கிளம்பி என்னிடம் வந்துவிட்டாய் என்றால் எனக்கு எல்லாமே புரிகின்றது.
இதோ நான் கிளம்புகின்றேன், என் குடுமி இழந்து பூணூல் இழந்து, கடுங்காவி உடுத்திக் கையில் மணிமாலை ஏந்தி பௌத்தனைபோல் கிளம்புகின்றேன். விரைவில் உனக்கு நல்ல செய்தி வரும்” சொன்னவன் பல பூஜைகளைச் செய்தான், பின் பௌத்த வேடத்துக்குத் தயாரானான்.
கொண்டை மழித்து பூணூல் அகற்றி அச்சு அசல் ஒரு பௌத்தனாக அவன் மாறினான், சாணக்கியனை வணங்கி விடைபெற்றான்.
மகத நாட்டின் எல்லையில் புகுந்தான் இந்து ஷர்மா, தன் பெயரை ஜீவசித்தி என மாற்றிக்கொண்டான்.
நீதிசாஸ்திரம், பாதுகாப்பு கலை, மாந்தீகம் , வைத்தியம் எனத் தனக்குரிய திறமையினை ஒவ்வொரு இடத்திலும் காட்டினான். குறிப்பாக எங்கெல்லாம் அரச உளவாளிகள் இருப்பார்களோ அங்கெல்லாம் தன் தனிப்பட்ட சக்தியினைக் காட்டி நோய்களைக் குணமாக்குவது, மக்களுக்கு நல்வழி சொல்வது எனச் செய்து கொண்டிருந்தான்.
அதையே சில நாட்கள் வாரங்களாக தொடர்ந்தவன் தலைநகரை அடைந்தான், அங்கு அவனே நோயை பரப்பினான், அவனே தன் சக்தியால் நோய்களைக் குணமாக்கினான்.
அவனே சூட்சும சக்திகளை ஏவிவிட்டான், பின் அவனே தீர்வும் கொடுத்தான்.
சிறிய சிறிய கலவரங்களை யாருக்கும் தெரியாமல் உருவாக்கியவன், அந்தச் சர்ச்சைகளைத் தீர்ப்பது போல் காட்டிக் கொண்டான்.
அரச பதவியில் இருப்போர், முக்கியஸ்தர்களுக்கு தன் சக்தியினால் வயிற்றுவலி, தலைவலி, தீரா நோய் என ஏவிவிடுபவன் பின் அவர்கள் தன்னிடம் வந்ததும் தானே குணப்படுத்தி பெயர் பெற்றான்.
மெல்ல மெல்ல அவன் பெயர் ராஷசனை அடைந்தது.
மிகச் சக்திவாய்ந்த பௌத்தன், மருத்துவம், நீதி, போர்க்கலை அறிந்தவன், பல வகை வித்தை தெரிந்தவன், பெரிய அறிவாளி என அவனைப் பற்றிச் செய்திகள் சென்றது.
ராஷசன் ஏற்கனவே கலங்கியிருந்தான், நந்தர்கள் சாணக்கியனை அவமானப்படுத்தி அனுப்பியிருந்தது அவனுக்குப் பெரும் கவலையளித்தது.
சாணக்கியன் நிச்சயம் ஏதோ செய்வான், அப்போது தன்னிடம் ஒரு அறிவாளியும் சக்திமிக்கவனும் இருந்தால் நல்லது என நினைத்துக்கொண்டிருந்தவன். ஜீவசித்தி தனக்கு அவசியம் என உணர்ந்து சிந்தித்தான்.
மிக மிக தேர்ந்த தந்திரசாலியான ராஷசன் அவனைச் சோதித்தான், மதம் கொண்ட யானையினை ஓடவிட்டான், அதை அவன் அடக்கும் விதத்தைக் கண்டான், நோய் என நன்கு உறுதிபடுத்தப்பட்ட சிலரை அனுப்பி அவன் குணப்படுத்துவதை உறுதி செய்தான்.
தன் ராணுவ வீரர்களை மாறுவேடத்தில் அனுப்பி ஒன்றுமறியாதவர்கள் பயிற்சி பெறவேண்டும் எனக் கேட்டு அவனின் நுணுக்கமான வித்தையினை உறுதிப்படுத்தினான்.
சாஸ்திரிகளை அனுப்பி அவனின் சாஸ்திர ஞானத்தை சோதித்தான்.
இப்படிப் பலவகையான சோதனைகளைச் செய்தபின் தானே நேரில் வந்தான்.
விரித்த வலையில் புலி தானே வந்து சிக்குவதை கண்டும் காணாமலும் இருந்து பௌத்த துறவியின் புன்னகையில் இருந்தான் ஜீவசித்தி.
ராஷசன் அவனிடம் சொன்னான், “ஐயா நீர் எந்த நாட்டவர் எனத் தெரியாது, ஆனால் அரண்மனையில் இருந்து மக்களுக்கு வழிகாட்டினால் நல்லது, நாங்களும் மக்களும் உங்கள் அறிவிலும் ஆற்றலிலும் நலமாய் இருப்போம்.
அரண்மனையில் வேண்டியன செய்வொம், எங்களோடு இருப்பீராக” என்றான்.
ஜீவசித்தி சொன்னான்.
“நாங்கள் துறவிகள், காற்றைப் போல அலைந்து கொண்டே இருப்பவர்கள், சரி நான் சீன தேசம் செல்லும் திட்டத்தில் இருந்தேன், உங்கள் தேவைக்காக சில காலம் இங்கே தங்கி உங்கள் நாட்டு மக்களை வாழவைத்துவிட்டு செல்கின்றேன்.
இங்கே நோயும் மிகுந்திருக்கின்றது. மக்களுக்கும் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன, அரண்மனை என்பது மக்களை வாழவைக்கும் இடமல்லவா? அதனால் உங்கள் கேள்வி நியாயமானது.
ஆனால், நானோ பிட்சு, அரச சுகபோகங்களில் என்னால் சிக்க முடியாது, நான் பிட்சை எடுத்தே உண்ண வேண்டும், அதனால் அரண்மனை எனக்கு எப்படி சரிவரும்?” என்றான்.
அந்தக் கேள்வியில் ராஷசன் வீழ்ந்தான்.
“ஐயா உம் பௌத்த வாழ்வுக்குச் சிக்கலே வராது, நீர் அரண்மனையில் தங்கிக் கொண்டு நினைத்தபடி நினைத்த இடம் செல்லலாம், உங்கள் பௌத்த வாழ்வை தொடரலாம்.
எப்போதாவது உங்கள் ஆலோசனை உதவி என்றால் மட்டும் தந்தால் போதும், மற்றபடி யாரும் தலையிடப் போவதில்லை” என்றான்.
அங்கே புனகைத்தான் ஜீவசித்தி, மெல்ல அரண்மனை நோக்கி நடந்தான்.
தன் ஆத்ம நண்பனை உளவாளியாக மகத நாட்டின் தலைமை அரண்மனைக்குள்ளே சாதுர்யமாக அனுப்பிவைத்த சாணக்கியன் அடுத்து என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டான்.
அங்கே ஒன்றுமே அறியாதவன் போல பௌத்த துறவிவேடத்தில் தியானம் தவம் பிட்சை சேவை என இருந்தாலும் அரசின் பலம் பலவீனம் என நிதி, ராணுவம் என ஒவ்வொன்றாய்த் தகவலை திரட்டினான் ஜீவசித்தி.
இங்கே சந்திரகுப்தனாலும் ஏதும் ஊகிக்கமுடியவில்லை, ஜீவசித்தியும் சந்திரகுப்தனைப் பற்றி விசாரிக்கவுமில்லை. சந்திக்கவுமில்லை.
சாணக்கியன் எதைச் சொன்னானோ அதை மட்டும் சரியாகச் செய்தான்.
இப்படிச் சாதுர்யமாக தன் ஆயுதத்தை அங்கே செலுத்திப் பதித்த சாணக்கியன் அடுத்தடுத்த திட்டங்களில் விரிந்த கூந்தலோடு இறங்கினான்.
(தொடரும்..)