சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08
சாணக்கியன் அடுத்தக் கட்டத்துக்குச் சிந்தித்தான். அதன்படி இனி ராஜ்ஜியம் ஒரு குழப்பத்தில் சிக்க வேண்டும், அப்போது நந்தர்களைக் கொல்ல வேண்டும்.
ராஜ்ஜியம் குழப்பத்தில் தானாக சிக்காது. அப்படிக் குழம்பும்படி ஒரு காரியம் நடக்க வேண்டும், உள்நாட்டு குழப்பத்தை எளிதில் தூண்டலாம். ஆனால், அது வேற்றுநாட்டு அரசன் பாய்வதற்கு காரணமாகிவிடும்.
இப்படிப் பலவகையில் அவன் யோசித்தான். நந்தர்கள் கொல்லப்பட்டு, ஆட்சிமாற்றம் ஏற்பட அரசு தோற்க வேண்டும். நந்தர்கள் அழிய வேண்டும்.
அப்படியானால் ஒரு போர் அவசியம், பெரும் போர் அவசியம். அந்தப்போரில் அவர்களை கொன்றுவிடலாம்.
போர் என்றால் யார் செய்வார்கள்? இப்போதைக்கு அவர்களின் எதிரி பர்வதேஸ்வரன். அவன் வருவானா?
மாட்டான். அவனுக்கு மகதப் பேரரசு மேல் கண் உண்டு. அதே நேரம் சந்திரகுப்தன் மேல் ஒரு அச்சமும் உண்டு, அவனிடம் சில தந்திரங்களுடன் பேசிப்பார்க்கலாம்.
அரசியல் என்பது என்ன? தன் பலத்தை தக்கவைப்பதும், வாய்ப்பு கிடைத்தால் தன் அதிகாரத்தைப் பரவலாக்குவதும்? எப்படியாவது எதிரிகளை ஒழித்துக் கட்டி தன்னைப் பெரிதாக்குவது அல்லவா?
நல்ல அரசியல்காரன் எவனும் நல்ல வாய்ப்பை விடுவதில்லை, கிடைக்கும் வாய்ப்பை அலசி ஆராய்ந்து அது நல்ல வாய்ப்பாக இருந்தால் பிடித்துக் கொள்வதுதானே அரசியல்?
நாம் இருவரும் சேர்ந்து இப்படிச் செய்யலாம், இப்படிச் செய்தால் உனக்கு இந்த லாபம், எனக்கு இந்த லாபம் எனச் சுட்டிக்காட்டி இருவருக்கும் தேவையானதைப் பெற்றுக் கொள்வதுதானே அரசியல்?
அவனிடம் பேசிப் பார்க்கலாம். எந்த மனிதனுக்கும் அவன் நெடுநாள் கனவு, ஆசை ஒன்று இருக்கும், ஒரு ஏக்கம் இருக்கும், அங்கே அடித்தால் விழாதவன் எவனுமில்லை.
சாணக்கியன் தயாரானான், தானே பர்வதேஸ்வரனிடம் செல்ல முடிவெடுத்தான்.
மகதத்துக்கு அவனும் எதிரி, தானும் எதிரி எனும் வகையில் அவன் சரியான தேர்வாய் இருந்தான். அதனால் அவன் தேசம் சென்றான் சாணக்கியன்.
பர்வதேஸ்வரனுக்கு மலையகேது எனும் மகனும், வைரோதகன் எனும் தம்பியும் இருந்தார்கள். அவர்கள் பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தான் பர்வதேஸ்வரன்.
சாணக்கியன் அங்கே சென்றான். தான் ஒரு அரசியல் காரணத்துக்காக அரசனை சந்திக்க வேண்டும் என்றும் கோரினான்.
விரித்துப்போட்ட தலையுடன் அவன் நிற்கும் கோலம் அரசனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது, அரசன் அவனை உடனே வரவழைத்து உபசரித்தான்.
சாணக்கியன் தன் தேர்ந்த ராஜதந்திரத்தில் பேசினான்.
“பர்வதேஸ்வரா, நீ மகதப் பேரரசுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றாய், அதில் உனக்கு விருப்பமில்லை, ஒருமுறை அங்கே பொம்மை சிங்கத்தை அனுப்பி நீ சோதித்தபோதே ஒரு முடிவுக்கு வந்திருந்தாய்.
உனக்கு மகதப் பிடியில் இருந்து வெளிவந்து வலிமையான தனி ராஜ்ஜியம் அமைக்கும் ஆசை உனக்கு உண்டு, அதற்கான வாய்ப்பினை நானே உருவாக்கித் தருவேன்.
அங்கே பெரும் அநீதி நடந்துவிட்டதும், அநீதிகளின் பிறப்பிடமும் அதர்மத்தின் அரண்மனையுமாகிவிட்ட அந்த மகதம் ஒழிக்கப்பட வேண்டும்.
சந்திரகுப்தன் தெய்வதீனமாக தப்பிவிட்டான், அவன் குடும்பம் அழிக்கப்பட்டிருக்கின்றது. அவனுக்கு நீதி வழங்குவதாக நான் முடிவு செய்திருகின்றேன்.
இங்கே பெரும் பலமான அரசு இல்லாவிட்டால் பாரத கண்டம் என்னாகும் என்பதை மன்னனாக நீர் அறிந்திருப்பீர், மகதம் இன்னும் வலிமையான அரசாக நீடிக்கும் சக்தியினை இழந்தே விட்டது.
அதனால் நீர் அந்த இடத்தை பிடிக்க நான் வழிசெய்து தருவேன். சந்திரகுப்தன் என்னோடு இருக்கின்றான், நீங்கள் படை தரவேண்டும். போரை நாங்கள் நடத்துவோம்.
நந்தர்கள் வீழ்த்தப்பட்ட பின் பாதி ராஜ்ஜியம் உங்களுக்கு, பாதி ராஜ்ஜியம் எங்களுக்கு”
சாணக்கியன் தூண்டிலை வீசினான். ஆனால், எதிரில் இருப்பது திமிங்கலம் என்பது அவனுக்குத் தெரியும்.
பர்வதேஸ்வரன் ஒரு அரசனாக யோசித்தான், அவனுக்கு மகதத்துக்கு கட்டும் பெரும் கப்பம் பிடிக்கவில்லை, அது நாட்டின் செல்வத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டிருந்தது. ஆட்சிக்கு சிக்கலாய் இருந்தது.
இதனால் போருக்குத் தயாராக சிந்தித்தான், சந்திரகுப்தன் அங்கே இல்லாதது அவனுக்குப் பெரும் பலமாய் இருந்தது. ஆனாலும், இதனால் இந்தப் பிராமணனுக்கு என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.
அதைப் புரிந்து சாணக்கியன் சொன்னான், “நான் ஒரு தவசி, எனக்கு அரசப் பதவி முக்கியம் அல்ல. சொந்த பங்காளியினையே இப்படி வதைப்பவர்கள் யாரை ஒழுங்காக நடத்துவார்கள்?
நான் ஒரு வேதம் அறிந்த தவசி. என்னையே அவமதித்தார்கள். பசியுடன் இருந்த என்னை விரட்டிவிட்டு சிரித்தார்கள். இப்படிப்பட்ட அகந்தை கொண்டோர் வாழும் நாடு சிறக்காது, அது நிலைக்காது.
அது நிச்சயம் அழியும். ஆனால், அந்நேரம் வேறு அரசன் பாய்ந்துவிடுவான். இதனால் ஆபத்து இருவருக்குமே வரும்.
வருபவன் மகதத்தோடு நிற்க மாட்டான், அவன் உங்களையும் அழித்து உன் ராஜ்ஜியத்தையும் பறித்துக் கொள்வான், இழப்பு எல்லோருக்கும் உண்டு.
நான் இந்த ஆபத்தில் இருந்து தப்பி நாமெல்லாம் வாழும் வகை சொல்கின்றேன், எங்களுக்கு நீர் உதவினால் இருவரும் வாழ்வோம். இல்லையேல் அழிவு மகதத்தோடு நில்லாது. உங்களுக்கும் வரும்.
சொல்லிவிட்டுப் புன்னகைத்தான் சாணக்கியன்.
“ஓ.. நீங்கள் உதவவில்லை என்றால், இன்னொரு மன்னனிடம் செல்ல நேரமாகாது என்பதைச் சொல்லவருகின்றான் சாணக்கியன், சாமார்த்தியசாலி இவன், இவனை விட்டுவிடக் கூடாது” எனச் சிந்தித்த பர்வதேஸ்வரன் படை தரச் சம்மதித்தான்.
பாதி ராஜ்ஜியம் தனக்கு என அவன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சம்மதித்தான், கடைசியாக கேட்டான்.
“வென்றால் சரி, ஒருவேளை நாம் பின் வாங்கிவிட்டால் என் நிலை?”
சாணக்கியன் சொன்னான், “என்னை மதித்து நம்பியவர்கள் கெட்டதில்லை, அப்படி ஒரு சூழல் வராது, உங்கள் படைகள் கூடுதல் பலமே தவிர முழுப் போரும் இதை நம்பி மட்டுமல்ல’
பர்வதேஸ்வரன் சாணக்கியனைக் கௌரவித்து அனுப்பினான், எல்லா உதவியும் செய்ய சம்மதித்தான்.
சாணக்கியன் புன்னகைத்தான். ஒன்றுமில்லாத அந்தப் பிராமணனுக்கு இப்போது சந்திரகுப்தன் எனும் தளபதியும் பர்வதேஸ்வரனின் படையும் கிடைத்துவிட்டது.
சாணக்கியன் உடனே போர் எனக் கிளம்பிவிடவில்லை, ஒரு பலம் கிடைத்துவிட்டால் அதனை உடனே பிரயோகிக்கக் கூடாது. எதிரியின் பலம், படை எண்ணிக்கை என எல்லாம் கலந்து யோசித்து மிக முக்கிய முடிவெடுக்க வேண்டும்.
காரணம், இதெல்லாம் ஒருமுறை ஒரே ஒருமுறைதான் முயற்சிக்கமுடியும். அந்த ஒரே முயற்சி வெற்றிபெற எல்லா வகையிலும் 100 சதவீதம் உறுதி செய்தல் வேண்டும்.
சாணக்கியன் மகத அரசின் படை எண்ணிக்கையினை இந்தப் படைகளோடு ஒப்பிட முனைந்தான். ஜீவசித்தி, ராஷசனுடன் நெருக்கமாக இருந்ததால் மகத அரசின் சேனை எண்ணிக்கை அவனுக்குத் தெரிந்தது.
இது சாதாரண எண்ணிக்கை வித்தியாசம் அல்ல. பர்வதேஸ்வரன் படையினை விட மகத அரசின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம், ஒருவேளை தோற்றுவிட்டால் மறுபடி முயற்சிக்க முடியாது.
இனி தந்திரம்தான் காரியம் சாதிக்கும் என்றவன் அழகான திட்டம் ஒன்றை வரைந்தான். அதாவது, மகதப்பேரரசின் படைகள் பெரிதுதான், அங்கிருக்கும் தளபதிகளும் அவர்கள் ஆயுதமும் பயிற்சியும் உயர் ரக குதிரைகளும் இமயத்தில் இருந்து வந்த யானைகளும் அங்கே பெரிய பலம்.
சாணக்கியன் நிரம்ப யோசித்தான். அங்கே பலம் அதிகம். ஆனால், மொத்த பலமும் சேர்ந்துவந்தால்தானே சிக்கல்? அங்கே பலத்தை குறைத்து பெரும் சிக்கலை செய்து, எதிர்தரப்பை ஒரு அச்சத்தில் வைத்து போரைத் தொடங்கினால் என்ன?
(இன்றைய இஸ்ரேல் செய்யும் உளவியல் போரை அன்றே திட்டமிட்டான் சாணக்கியன்)
ஒரு அரசனோ, அவன் சேனையோ எந்த நோக்கில் போரிட வருவார்கள், வெற்றி ஒன்றே இலக்கு, எதிரிகளை அழிக்க வேண்டும் எனும் ஒரே ஒரு சிந்தனையில் போராட வருவார்கள்.
அதாவது, எதிரி ஆயுதம் ஏந்தி எதிரே வருகின்றான். அவனைக் கொல்வதே நாம் வாழும் வழி என ஒரே சிந்தனையில் வருவார்கள்.
அந்த ஒருமுகத்தன்மையினைக் குழப்பினால், எதிரி எல்லா வடிவிலும் வருவான் என மனதை குழப்பினால் மனதில் அச்சம் விளைவித்தால்?
ஆம். மனமே பிரதானம். ஒருவனின் வீரமோ, பலமோ அவன் ஆயுதத்தில் அல்ல, அவன் மனதிலே உண்டு.
ஒரே நோக்கில் வருபவன் மனதை பலவகை அச்சங்களால் குழப்பினால் அவன் குழம்புவான். மனதால் அவனைக் குழப்பி அவன் களத்துக்கு வராமலே ஓடும்படி செய்துவிட்டால் போதும், எளிதில் வெல்லலாம்.
யானை நெருப்புக்கு அஞ்சி ஓடும். அப்படி ஒரு வீரனின் மனதில் அச்சம் எனும் நெருப்பை வைத்துவிட்டால் போதும் அவன் பலமிழப்பான். சேனை பலமிழக்கும்.
போர் தொடங்குமுன் முக்கிய தளபதிகளையும், பலரையும் ஒரு அச்சத்துக்குள் தள்ள வேண்டும். அவர்கள் மனதால் குழம்பித் திகைத்து அச்சமுற்று போர் பற்றிய கவனத்தை சிதறவிட வேண்டும்.
மிக நிதானமாகச் சிந்தித்தவன் இதுபற்றி செய்தியினை ஜீவசித்தி எனும் இந்துசர்மாவுக்கு அனுப்பினான்.
இந்து சர்மா அந்தத் திட்டத்தை கற்பூரம் போல பற்றிக்கொண்டான். தனக்கு நெருக்கமான ராஷசனிடம் சொன்னான்.
“ஐயா, வரும் வைகாசி பௌர்ணமி அன்று பெரும் அழிவு நடக்க இருப்பதுபோல் நான் என் தியானத்தில் உணர்ந்தேன். கனவும் சரியில்லை.
அந்த வைகாசி பௌர்ணமியில் நீங்கள் சாகப்போகின்றீர்கள், உங்களோடு சிலர் சாகப் போகின்றார்கள். ஏதோ பகைவன் வருவான், அன்று நீங்கள் போருக்குச் சென்றால் செத்துவிடுவீர்கள், கவனமாக இருங்கள்.
இது ரகசியம். நமக்குள்ளான ரகசியம்”
ஜீவசித்தி எது சொன்னாலும் பலிக்கும், எது செய்தாலும் தவறாகாது, அவர் சக்திமிக்கவர் என நம்பிக்கொண்டிருந்த ராஷசன் அவன் சொன்னதில் அதிர்ந்தே போனான்.
வைகாசி பௌர்ணமி வரும் நாளை எண்ணி நடுங்க ஆரம்பித்தான் ராஷசன்.
இதே வழியில் பல தளபதிகளைக் குழப்பி அச்சுறுத்தி வைத்திருந்தான் ஜீவசித்தி. அங்கே மேல்மட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் ஒரு பயம் அப்பிக்கொண்டது.
அதே நேரம் பர்வதேஸ்வரன் தன் அமைச்சரோடு சத்தமாக சிரித்துச் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அமைச்சரே, நம்படை கொடுத்து போர் நடத்தி வெற்றிபெற்று இந்த ஏழை பிராமணனுக்குப் பாதிநாட்டை கொடுத்து, சந்திரகுப்தனை அரசனாக்க வேண்டுமாம்.
நம்மை என்ன நினைத்துவிட்டான் அந்தப் பிராமணன்?
நமக்குச் சந்திரகுப்தன் மேல்தான் அச்சம், அவன் நம்மோடு இருந்து வெற்றிபெற்றபின் அவனைக் கொன்றுவிட்டால், பின் முழு ராஜ்ஜியம் நம்முடையது.
நான் பதுங்குகின்றேன் அமைச்சரே, போர் முடியட்டும் இவனையும் அந்தச் சந்திரகுப்தனையும் ஒழித்துவிட்டு முழு மகதப் பேரரசை நான் கைப்பற்றி ஆளப்போகின்றேன்.
அந்தச் சந்திரகுப்தன் ஒருவனுக்கே அஞ்சினேன், அவனை இவனே பிடித்து என்னிடம் தருகின்றான், எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது அமைச்சரே.
ஏ பிராமணா, நீ என்னைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாயா? நான் உன்னை எப்படிப் பயன்படுத்துகின்றேன் பார்”
சாணக்கியன் போர் பற்றி சிந்திக்க, ராஷசன் வைகாசி பௌர்ணமி கண்டு அஞ்சி திகைக்க, அங்கே பர்வதேஸ்வரன் போரில் வென்று நந்தர்களையும், சாணக்கியனையும் சந்திரகுப்தனையும் ஒழிக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.
யார் வெல்வார்கள் என்பதை பார்க்க அனுதினம் சூரியன் வந்தான், கடைசியில் அந்த வைகாசி பௌர்ணமியும் நெருங்கிற்று.
(தொடரும்)