சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09
வைகாசி விசாகம் நெருங்க நெருங்க சாணக்கியன் மிகுந்த பரபரப்பானான், காரணம் அன்று படைகள் சென்று போரை தொடங்காவிட்டால் ஜீவசித்தியின் வாக்குமேல் அந்த ராஷசனுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும், அது பெரும் ஆபத்து.
இதனால் அவன் அவசரமாக ஆலோசனைகளைச் செய்தான்.
ஒரு பக்கம் எப்படியாவது நந்தர்களை ஒழித்துச் சந்திரகுப்தனுக்கு முடிசூட்ட வேண்டும் என்பது சாணக்கியனின் திட்டம், அவன் இலக்கு அது ஒன்றே.
அதே நேரம் யாரையும் முழுக்க நம்பாதே, இந்த உலகில் யாரும் பிரதிபலன் இல்லாமல் உதவமாட்டார்கள், அதுவும் அரசர்களை ஒருகாலமும் நம்பக் கூடாது, ஒரு அரசன் மனதை யாரும் கணிக்க முடியாது, அவன் எப்போதும் தன் ஆட்சி தன் நலம் இதற்கே முன்னுரிமை கொடுப்பான், அவனிடம் நட்பும் அன்பு கருணை எதிர்பார்ப்பு இதற்கெல்லாம் இடமே இல்லை என்பது அவன் அறிந்தது.
இதனால் பர்வதேஸ்வரனையும் அவன் முழுக்க நம்பவில்லை, நிச்சயம் அவனிடமும் உள்நோக்கம் இருக்கலாம் என்பதை ஊகித்தவன் கவனமாகக் கையாண்டான்.
சாணக்கியன் நிதானமாக அந்த உண்மையினை உணர்ந்திருந்தான், நிச்சயம் நந்தர்களை ஒழிப்பதே அவன் இலக்கு என்பதால் நிச்சயம் போரை முடிக்கும் வரை அவனால் ஆபத்தில்லை, நந்தர்களை ஒழிக்கத் தன் தயவு அவசியம். ஆனால், நந்தர்கள் இல்லாத இடத்தில் சுயரூபம் காட்டலாம் அதுதான் அரசியல் என்பதை எளிதாக அனுமானித்தான்.
பர்வதேஸ்வரனுக்கும் அதே எண்ணம் இருந்தது, ஒருவன் தன் திட்டத்தை ஒருகாலமும் வார்த்தைகளில் காட்டவே கூடாது. மாறாக, செயல்களில் மட்டும் செய்து காரியம் சாதிக்கவேண்டும், மனம் என்பதன் ரகசியபக்கம் யாருக்கும் திறக்கப்பட கூடாது என்பது ராஜநீதி.
அதனால் அவனும் முதலில் நந்தர்களை ஒழித்துக்கட்டுவது எப்படி என்பதிலே சிந்தனையாய் இருந்தான்.
சாணக்கியன் வெறும் அரசியல் ஞானி, ஆன்மீக ஞானி மட்டுமல்ல இந்துக்கள் வாழ்வியலில் ஒன்றான அரச யுத்தம் அவனுக்கு எளிதாக வரும்.
படைகளை நிறுத்துதல், வியூகம் அமைத்தல், தாக்கும் கலை, அப்படியே சூழலுக்கு ஏற்றதுபோல் படை நடத்தும் வித்தை என எல்லாம் அவன் அறிந்த ஒன்று.
இதனால் அவனும் பர்வதேஸ்வரனும் போருக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார்கள்.
சாணக்கியன் போர் தவிர வேறு எதுவும் பேசவில்லை. அவசியமற்ற பேச்சுக்களே ஆபத்தை கொண்டுவரும் என்பதால் அவன் காரியம் மட்டும் பேசினான்.
“பர்வதேஸ்வரா, அந்தக் குஸ்மபுரத்தை நாம் வைகாசி பௌர்ணமி அன்று தாக்க போகின்றோம், நான்கு வாசல்களில் நம் படைகள் நான்காய் பிரிந்து நின்று முற்றுகையிடும்.
இப்படி செய்வதால் அந்த நந்தர்களின் படை நாலா பக்கமும் பிரிந்துவரும், அப்போது முக்கிய தலைவர்களைக் கொல்வது எளிதாகும்.
அதனால் அதற்கேற்றபடி போர் வியூகத்தை வகுக்க வேண்டும்”
பர்வதேஸ்வரனும் அதை ஆமோதித்தான். கோட்டையின் நான்கு வாயில்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட வேண்டும் என்றவன் தன் வஞ்சகத் திட்டம் ஒன்றைச் சொருகினான்.
அவனும் மன்னன், அவன் உளவாளிகளும் அக்கோட்டையின் எல்லாப் பலம் பலவீனங்களையும் சொன்னார்கள். அவ்வகையில் மேற்குவாசல் பலமானதாக இருந்தது. அந்தப் பலமான வாசலில்தான் நந்தர்கள் வரக்கூடும் என்பது அனுமானம்.
அந்த வாசலில் சந்திரகுப்தனை நிறுத்த திட்டமிட்டான் பர்வதேஸ்வரன், அதன் பொருள் யார் செத்தாலும் தனக்கு நல்லது என்பது.
அதாவது நந்தர்கள் அழிந்தால் பின் சந்திரகுப்தனை நாம் அழிக்கலாம், சந்திரகுப்தன் அழிந்தால் நந்தர்களை அழிக்கலாம், நமக்கு இருவருமே எதிரிகள் என்பது போல் கணக்கு இருந்தது.
சந்திரகுப்தன் மேல் அவனுக்கோர் அச்சம் எக்காலமும் இருந்தது, ஒருவேளை மகத அரசை கைப்பற்றி பாதிராஜ்ஜியம் கொடுத்து அவனை அரசனாக்கினால் கொஞ்ச நாளில் அவன் வலுத்து தன்நாட்டை கைப்பற்றிவிடுவான்.
முரட்டு நந்தர்களை விட புத்திசாலி சந்திரகுப்தனும் இந்தப் பிராமணனும் மகா ஆபத்தானவர்கள் என்பது அவன் கணக்கு.
அவன் சந்திரகுப்தனே நந்தர்களை எதிர்க்கட்டும் என ஆலோசனை சொன்னதைக் கேட்டு சாணக்கியனின் உள்மனம் எச்சரித்தது. அதை அவன் வெளிகாட்டாமல் நிதானமாய்ச் சொன்னான்
“பர்வதேஸ்வரா, சந்திரகுப்தன் ஒப்பற்ற வீரன். ஆனால், அங்கே அவனும் நந்தர்களோடேதான் வளர்ந்திருக்கின்றான், ஒரே குருவிடம் வித்தை படித்தவர்கள் அவர்கள்.
இதனால் அவனின் பலவீனங்களும் அவர்களுக்கு தெரியும், எல்லா வீரனுக்கும் ஒரு பலவீன பக்கம் இருக்கும், அதை மறைத்து ஆடுவதில்தான் வெற்றி உண்டு.
இங்கே அவன் பலவீனம் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் உன் பலம் பலவீனம் அவர்களுக்குத் தெரியாது, உன்னிடம் இதுவரை அவர்கள் மோதியதில்லை. அதனால் நீயே மேற்குவாசலுக்குச் செல், கிழக்கு வாசலுக்கு நாம் சந்திரகுப்தனை அனுப்பலாம்”
பரவதேஸ்வரன் யோசித்தான், இதற்குமேல் அதை வலியுறுத்தினால் சந்தேகம் வரலாம் என்பதால் ஒப்புக்கொண்டான்.
அடுத்து வியூகம் தொடங்கிற்று, சாணக்கியன் தன் பிரசித்தியான வழிகளைச் சொன்னான்.
இன்றுவரை ஒவ்வொரு ராணுவமும் பின்பற்றும் வார்த்தை அது.
“ஹேய் பரவதேஸ்வரா, போரை நாமே முதலில் தொடங்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தபடி போர் செல்லும். எதிரிகள் நம் வழிக்கு வருவார்கள்.
நாம் தாமதித்தால் அவர்கள் தொடங்குவார்கள். அப்போது அவர்கள் வியூகத்தில் நாம் சிக்கிக்கொள்வோம், அவர்கள் வழியில் சென்று போராடினால் அது சிக்கல்.
இதனால் நாமே போரைத் தொடங்கி நடத்தும்போது அவர்கள் நம் வியூகத்தில் சிக்குவார்கள், போர் நமக்கு எளிதாகும்”
பர்வதேஸ்வரன் அதையும் ஒப்புக்கொண்டான், பெரும் சேனை ரகசியமாகத் திரட்டபட்டது.
காரணம், எப்போதும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, அவர்கள் ஒற்றர்கள் நாடெங்கும் இருக்கலாம். இதனால் படை பகிரங்கமாக திரட்டப்பட்டால் விஷயம் கசிந்துவிடும், காரியம் ரகசியமாக நடத்தல் வேண்டும்.
அப்படி ரகசியமாக வீரர்களுக்குத் தகவல் போனது, பயிற்சிகள் ரகசியமாக நடந்தன.
சாணக்கியனுக்கும் ஜீவசித்திக்குமான தொடர்பு மிக மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்தது, அடிக்கடி செய்திகளை ரகசியமாக அனுப்புதல் என்பது மடமை, அபூர்வமாக மட்டும் அல்லது அவசரம் என்றால் மட்டும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அப்படி “எல்லாம் தயார் வைகாசி பௌர்ணமி அன்று திட்டம்” என அனுப்பிவிட்டு போர் தயாரிப்பைக் கவனித்தான் சாணக்கியன்.
அது வெட்டவெளி சமர் அல்ல, கோட்டைகளை உடைக்கும் போர் என்பதால் முன்னால் யானைப்படைகள் அவசியம், அந்த யானைபடைக்கு உதவ காலாட்படைகள் அவசியம்.
அங்கே நந்தர்கள் முதலில் தற்காப்பை செய்வார்கள், கோட்டை கதவை பூட்டி வைத்துவிட்டு மேலிருந்து ஈட்டி எறிவார்கள். அம்புமழை பொழிவார்கள்.
அதைத் தாக்குபிடித்து முன்னேறி சட்டென கோட்டை கதவை உடைத்தல் அல்லது பலகீனமான பக்க சுவரை உடைத்தல் என வியூகத்தை வரைய யானைப் படை அதன் துணை படைகளைத் தயார் செய்வதில் அவன் கவனம் செலுத்தினான்.
குதிரைப்படை பின்னால் வரும் கோட்டை கதவுகள் உடைக்கப்பட்டு எதிரிகள் தயாராகும் போது அது பாயும்.
இப்படிப் பலவிதமான வியூகங்கள் இருந்தாலும் அவர்கள் வகுத்த முக்கிய இலக்கு நந்தர்களைத் தொடக்கத்திலே கொல்வது.
இது பழிவாங்கும் போர், இங்கே நிபந்தனை, போர், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கனவிலும் இல்லை, நந்தர்கள் அழியவேண்டும், அவர்கள் அழிந்தால்தான் ராஜ்ஜியம் கைமாறும் என்பதால் இலக்கு நந்தர்களாகவே இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது, தொடக்கத்தில் வைகாசி பௌர்ணமி பற்றி அச்சுறுத்தல் செய்த ஜீவசித்தி பின் அமைதியானான். ஆனால், பௌர்ணமிக்கு முந்தையநாள் தனக்குச் சகுனம் சரியில்லை என மீண்டும் அதே அச்சச் சூழலை உருவாக்கினான்.
இந்துமரபில் அமாவாசை பௌர்ணமி என்பதெல்லாம் சிறப்பான நாட்கள், அதனால் மனதளவில் அந்த அச்சம் ராஷசனுக்கும் நந்தர்களின் தளபதிகளுக்கும் இன்னும் அச்சம் கொடுத்தது.
அங்கே சாணக்கியன் அங்கே பெரும் யாகங்களை ரகசியமாக செய்தான், யுத்தத்தில் வெற்றிதரும் காளிக்கான பெரும் பூஜைகளைச் செய்தான்.
அதற்கான பெரும் யாகமும் பலியும் கொடுத்து, வேண்டிக்கொண்டான் “தாயே மகா காளி, இந்தப் பாரத கண்டத்தை காக்கும் மகா சக்தி நீ, உன்னால் காக்கப்படும் தர்மம் இந்தச் சனாதன தர்மம்.
என் அன்னையே, இந்தப் போர் நாங்கள் நாடாளும் ஆசையில் அல்ல, இன்பங்களைச் சுவைக்க அல்ல, எங்கள் ஆட்சி எங்கள் குல ஆட்சி எனும் பெருமைக்கு அல்ல.
இது இந்தச் சனாதன தர்மம் நிலைக்க பாடுபடும் போர், இங்குப் பௌத்தமும் கிரேக்கமதமும் தலையெடுக்காமல் அவை இந்துமதத்தை அழிக்காமல் காத்து இந்த மதம் வாழ நடத்தும் போர்.
என் அன்னையே சனாதான தர்மம் காக்க நடக்கும் இப்போரில் நீயே இறங்குவாய்.
இந்த யுத்தத்தில் எதிரிகளின் உடல் ரத்தம் என எல்லாம் உனக்கே ஆகுதி செய்கின்றேன், பெற்றுக்கொள். பெற்றுக்கொள். பெற்றுக்கொண்டு இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் சனாதன அரசை நிறுவித்தருவாய்”
அப்படிப் பெரும் வேண்டுதல் செய்தான், விரதமிருந்து செய்த வேண்டுதலை யாகமாய் நிறைவேற்றி அதன் சக்திகளைப் பெற்றுக்கொடுத்தான்.
அதன் பின்பே படை கிளம்ப அனுமதி கொடுத்தான். உரிய நாள் நட்சத்திரம் பார்த்து அவன் அனுமதி கொடுத்ததும் படைகள் கிளம்பிச் சென்று கும்சபுரம் எனும் பாடலிபுத்திரத்தை வளைத்துக் கொண்டன.
சாணக்கியன் மிக நுணுக்கமாக அந்த வியூகத்தை வகுத்திருந்தான்.
மேற்கு வாசலில் பர்வதேஸ்வரன், கிழக்கு வாசலில் சந்திரகுப்தன், தெற்கு வாசலில் மலயகேது வடக்கு வாசலில் வைரோதகன் என நாலு பக்கமும் வலுவான தளபதிகளைக் கொண்டு தாக்கத் தயாரானான்.
அதே நேரம் எதிரிப்படைகள் கோட்டையினைச் சூழ்ந்து கொண்டன எனும் தகவல் எங்கும் பரவிற்று.
ஏற்கனவே ஜீவசித்தியால் அச்சுறுத்தப்பட்ட ராஷசன் தனக்கு உடல்நிலை சரியில்லை என முடங்கிக் கொண்டான், நந்தர்களின் முக்கிய தளபதிகள் அப்படியே ஆளுக்கொரு காரணம் சொல்லி விட்டு ஓடினார்கள்.
சிலர் தலைமறைவானார்கள்.
நந்தர்கள் சேனை கலங்கிற்று. முக்கியத் தளபதிகள் கைவிட்ட நிலையில் நந்தர்களே ராஷசனை தேடிவந்தார்கள்.
அவர்கள் வந்து தங்கள் கையறு நிலையினைச் சொன்னார்கள், தளபதிகள் கைவிட்டார்கள், எதிரிகள் சூழ்ந்துவிட்டார்கள், இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்புவதாக அலறினார்கள்.
ராஷசன் சொன்னான், “மன்னர்களே அஞ்சவேண்டாம், நானும் ஆயுதம் ஏந்துகின்றேன் அதற்கு முன் நாம் ஜீவசித்தியாரிடம் ஒரு ஆலோசனை கேட்டுவிடலாம்”
அவர்கள் வருவார்கள் என முன்பே உணர்ந்திருந்த ஜீவசித்தி தியானம் பூஜை என்பது போல் அமர்ந்திருந்தான், கொஞ்சநேரம் அவர்களைக் காக்க வைத்தவன் பின் என்ன என்பது போல் கண் திறந்தான்.
“ஐயா நீங்கள் சொன்னது போலவே வைகாசி பௌர்ணமியில் நாட்டை ஆபத்து சூழ்ந்துவிட்டது, எதிரிபடைகள் வந்து நாலாபக்கமும் சுற்றிக் கொண்டார்கள்.
இப்போது எங்கள் தளபதிகளும் கைவிட்டுவிட்டார்கள், நானும் அரசனுமே யுத்தம் செய்வதாக முடிவு செய்துவிட்டோம், தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.”
ஜீவசத்தி கண்களை மூடிச் சொன்னான், ‘ராஷசரே நீர் கிழக்கு வாசலுக்குச் செல்லும், அரசர்கள் மேற்கு வாசலுக்குச் செல்லட்டும், இருப்பதில் சிலரை வடக்கும் தெற்குமாக அனுப்பலாம்.
முக்கியமான் விஷயம் மன்னர்கள் பிரிந்துவிடக் கூடாது. அவர்கள் ஒரே பிண்டத்தில் உருவானவர்கள் என்பதால் ஒன்றாக இருந்தால்தான் வலிமை”
உயிர் ஆபத்தில் இருக்கும் ஒருவன் யார் என்ன சொன்னாலும் நம்புவான், அதுவும் ஜீவசித்தி எனும் நம்பிக்கைகுரியவன் சொன்னால் உடனே நம்புவான்.
அப்படிச் சந்திரகுப்தனை எதிர்க்க ராஷசனும் , பர்வதேஸ்வரனை எதிர்க்க நந்தர்களும் கிழக்கும் மேற்குமாக நகர்ந்தார்கள்.
சாணக்கியனின் திட்டம் சரியாக வேலை செய்யத் தொடங்கிற்று, சாணக்கியன் உரிய நாழிகைக்காக காத்திருந்தான், உரிய நேரம் வந்த போது விசாக நட்சத்திரம் உதித்து வந்தபோது சொன்னான்.
“போருக்கு அதிபதியான அந்தக் கந்தவேள் நம்மைக் காக்கட்டும், அவனுக்கான நட்சத்திர நாளில் நிறைந்த பௌர்ணமியில் நமக்கு வெற்றியினைத் தரட்டும்.
அவன் வேல் நம்மோடு இருந்து பாயட்டும், வெற்றி கிட்டட்டும்”
முதல் தாக்குதலைச் சாணக்கியன் தரப்புத் தொடங்கிற்று, கடும் யுத்தம் வெடித்தது, சாணக்கியன் ஒரு தேரில் ஏறி மின்னல் வேகத்தில் நாலா பக்கமும் சுற்றிவந்து நிலைமையினை அவதானித்தான்.
அவனுக்கு நந்தர்களின் பலம் தெரியும். அதனால் பல தந்திரங்கள் மூலம் அவர்களைப் பலவீனபடுத்தினாலும் வலிமையான மகத அரசின் பலம் யுத்தத்தில் பெரிதாகத் தெரிந்தது.
பர்வதேஸ்வரன் தரப்பும், சாணக்கியனும் கடுமையாக போரிட்டாலும் கோட்டையினை உடைக்க முடியவில்லை, இந்நிலை நீடித்தால் அவர்கள் சட்டென பாய்ந்து வந்து இவர்களைச் சுற்றிவளைத்துவிடும் ஆபத்து உண்டு.
கோட்டையின் பலம் பலவீனம் சுரங்கப்பாதை என எல்லாமும் சந்திரகுப்தனுக்குத் தெரியும் என்றாலும் நந்தர் தரப்பு மதயானை கூட்டமாக வலுவோடு நின்றது.
இது ஒருவாய்ப்பு, ஒரே ஒரு வாய்ப்பு, இங்கே வெற்றிப்பெறாவிட்டால் மகத அரசை காலத்துக்கும் அசைகமுடியாது, இங்கே வெற்றிப்பெற்றாக வேண்டும். இல்லை இங்கே மடியவேண்டும். இரண்டில் ஒன்றைத் தவிர வேறு வாய்ப்பில்லை.
முடியினை விரித்துப் போட்ட தலையுடன் நின்றிருந்த சாணக்கியன் கண்களைச் சுருக்கி சிந்தித்தான்.
யுத்தம் என்பது வெறும் வீரத்தால் நிர்மாணிக்கபடுவது அல்ல, அங்கே தந்திரமும் அவசியம், மனதளவில் எதிரிகளைக் குழப்பும் வித்தை மிக அவசியம்.
நந்தர்கள் கை கொஞ்சமல்ல நிறைய ஓங்குவதைக் கண்ட சாணக்கியன் இடம் பார்த்து தன் தந்திரத்தை அரங்கேற்றினான், போரின் போக்கை அந்தத் தந்திரம் மாற்றிற்று.
நான்கு பக்கம் நான்கு சிங்களை நிறுத்தி இந்தப் போரை நடத்துகின்றேன், இந்த நான்கு சிங்ககங்களையும் கொண்டே சனாதன அரசை ஸ்தாபிப்பேன் என அவன் மனதுக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்.
அந்த நான்கு சிங்கங்கள் தான் பின்னாளில் ஒரு உருவமாகி இந்துஸ்தானின் அடையாளமாக உலகில் மிளிரும் என்பதை காலம் மட்டும் குறித்துக் கொண்டு புன்னகைத்தது.
(தொடரும்..)