சாவித்திரி – காரடையான் நோன்பு
அந்த பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி
அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ தானே மணவாளனை தேடி அலைந்தாள் சாவித்திரி
தேடி அலைந்தபொழுது ஒரு கானகத்தை அடைந்தாள், இக்காலம் அல்ல அக்காலத்திலே சில வனங்கள் பாதுகாக்கபட்டிருந்தன.
அங்கு முனிவர்கள் தவம் செய்வார்கள், வேடவருக்கோ இல்லை உயிர்களை கொடுமை செய்து கொல்பவருக்கோ அனுமதி இல்லை, உயிர்பயமில்லா அக்கானகத்தில் மான்களும் முயல்களும் இன்னும் பல விலங்குகளும் மனிதரின் அருகில் வந்து பயமின்றி உறவாடும்
அந்த வனம் வாழ்வில் ஞானத்தை உணர்ந்த ரிஷிகளுக்காகவும் ஞானத்தை தேடும் மானிடருக்காகவுமானது,
அதை தாண்டும் எந்த அரசனும் முடி துறந்து வாள் துறந்து சாதாரண உடை அணிந்து அங்கிருக்கும் தலமை முனிவரை கண்டு வணங்கிவிட்டு செல்லுதல் மரபு
அப்படித்தான் அங்கிருந்த மகா முனியிடம் ஆசி வாங்க சென்றாள் சாவித்திரி, அங்கே பல நாட்டு மன்னர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அவளின் சுயம்வர கணக்கும் அதில் இருந்தது
நல்லோனை ஞானமும் அறிவும் பக்தியும் இருக்குமிடம் அன்றி எங்கே தேடமுடியும், அவ்வகையில் சாவித்திரியின் கணக்கு மகா சரியானது, அவளுக்கு அதை கணக்கிடும் அளவு அறிவும் இருந்தது
சாவித்திரி அங்குதான் அவனை கண்டாள், அழகும் அறிவும் தெளிவும் பக்தியும் நிரம்பிய சீடனாக அவன் அங்கு வலம் வந்தான்
அவள் அரசவையின் ராணி என்பதால் பார்த்ததும் உணர்ந்தாள், “இவன் சாமான்யன் அல்ல, ராஜகளையும் அதற்குண்டான ரேகைகளும் உடலெங்கும் படர்ந்திருக்கின்றன” என்றவள் நெடுநேரம் அவனையே நோக்கிகொண்டிருந்தாள்
விதி தன் வேலை தொடங்க வேண்டிய நொடியில் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பினை ஏற்படுத்திற்று, ஆம் விதிபலன் அன்றி காதல் மலராது
வயதான தந்தையினையும் தாயினையும் இப்படி கவனிப்பவன் தன் மனைவியினை எப்படி எல்லாம் கவனிப்பான் என எண்ணியவளுக்கு காதல் கூடிற்று
பொதுவாக பெண்கள் விரும்புவது பாதுகாப்பும் அன்புமே, அன்பு ஒன்றே அவர்களை வீழ்த்தும் ஆயுதம், அன்பு கொடுக்கும் காவலே அவர்களுக்கான வாழ்வென கருதுவார்கள், அந்த அன்பை பலமடங்கு திருப்பி கொட்டியும் கொடுப்பார்கள்
சத்தியவான் தனக்கு சரியானவன் என்ற அவளின் உறுதி கூடிற்று, நிலைபெற்றும் விட்டது
முனிகளுக்கான கானகத்தில் ராஜமுனிக்கு சேவை செய்பவன் நிச்சயம் மகா நல்லவனாக இருக்க வேண்டும் என விசாரித்ததில் மேற்கொண்டு அவளுக்கு உகந்த தகவல் வந்தது
அவன் துயுமத்சேனன் எனும் அரசனின் மகன், துயுமத்சேனன் பெரும் அரசன் எனினும் எதிரிசதியால் நாடிழந்து கண் இழந்து அபலையாய் அகதியாய் இந்த கானகத்தில் மனைவியும் குழந்தையோடும் அடைக்கலமானான், ஆம் இங்கு யாரும் வந்து அவனையோ அவன் மகனையோ கொல்லமாட்டார்கள், அதைவிட பாதுகாப்பு இல்லை
அந்த சத்தியவானை மணமுடிக்க தனக்கு தடையேதுமில்லை என்பதை உணர்ந்தவள் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மன்றம் ஏற தயாரானாள்
அந்த அசுபதி மன்னன் பலரோடும் கூடி பேசினான், தனக்கு மகளை வாரிசாக அளித்த தேவர்களிடம் அவன் மன்றாடி அனுமதிபெற பிரார்த்தித்தபொழுது நாரதர் தோன்றினார்
அவர் வந்த இடம் என்னாகும் கலகமே மிஞ்சும், ஆனால் பின்னாளில் நிச்சயம் நல்லதில் முடியும்
நாரதர் வந்த வேலையினை சரியாக செய்தார்
“அசுபதி அந்த சத்தியவான் நல்லவன், ஆனால் அவன் கர்ம வினையும் முன்னோர் செய்த பாவமும் அவனை விடாது, இன்னும் ஒரு ஆண்டுதான் அவன் வாழ்வு, யோசித்து மகளை முடிவெடுக்க சொல்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்
இதை கேட்டதும் அசுபதிக்கு வியர்த்துகொட்டிற்று, சாவித்திரியினை அழைத்து விவரத்தை சொல்லி, திருமணத்தை நிறுத்த கெஞ்சினான். எந்த தகப்பனுக்கு தன் மகளை விதவை கோலத்தில் பார்க்க பிடிக்கும்? தந்தை மகள் மேல் கொண்ட பாசம் கொஞ்சமா?
சாவித்திரி கொஞ்சமும் அஞ்சவில்லை “ஒருவேளை மணமான பின் இது தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? அவன் என் கணவன் என பார்த்த நொடியிலே முடிவு செய்துவிட்டேன், இனி இன்னொருவனை மணந்தால் குல அவமானம், இந்து பெண்ணுக்கே அவமானம், உங்கள் வளர்ப்புக்கும் தாய்க்கும் அவமானம்”
அசுபதி மன்னனால் பதில் பேசமுடியவில்லை, அரசன் வாழ்வு என்றுமே நெருப்புமேல் ஆடும் ஊஞ்சல்,
ஆம் போரில் சாகலாம், சூழ்ச்சியில் சாகலாம், ஏன் உறவுகளே கொல்லலாம். எந்த அரசன் வாழ்வும் தன் மகளின் மாங்கல்யத்துக்கு உத்திரவாதம் அல்ல
விதிபடி நடக்கட்டும் என அனுமதி கொடுத்தான்
அசுபதியும் சாவித்திரியும் மட்டும் அறிந்த ரகசியத்துடன் திருமணம் மகா விமரிசையாக நடந்தது
சாவித்திரி முடி துறந்தாள், நகை துறந்தாள், கந்தல் உடையுடன் கணவனுடன் அதே கானகம் சென்றாள்
அந்த அன்பு அவளை குடிசையில் வாழ வைத்தது, விறகு பொறுக்க வைத்தது, காய் கனி கந்த மூலங்களில் சமைக்க வைத்தது, அந்த அன்பு கண் தெரியா மாமனாரையும் வயது முதிர்ந்த மாமியாரையும் கவனிக்க வைத்தது
சத்தியவானை சந்தித்த மறு நொடியில் புதிதாய் ஏழையாய் பிறந்தாள் சாவித்திரி, அரசும் கொற்றமும் குடையும் ரதமும் அரண்மனையும் சேடியரும் நொடியில் மறைந்தனர்
ஆம், அன்புக்கு அந்த சக்தி உண்டு, தூய்மையான பாசம் எதையும் துறக்க வைக்கும். அது காதல் என்றும் சொல்லலாம் பதிபக்தி என்றும் சொல்லலாம்
ஆனால் எந்நிலையிலும் சத்தியவான் ஒருவருடத்தில் இறப்பான் என்பதை அவள் சொல்லவே இல்லை, தனக்குள்ளே மறைத்திருந்தாள். அழுவாள் கண்களை துடைப்பாள்
அந்த ஒருவருடத்தில் ஓராயிரம் வருடம் வாழ்ந்த சந்தோஷத்தை கொடுக்க நினைத்து கொடுத்து கொண்டும் இருந்தாள்
சத்தியவான் வாழ்வு முடியும் நேரம் வந்தது, அவனின் விதிப்படி அவனை அழைத்து செல்ல வந்தனர் எமனின் தூதர்கள்
அவர்கள் வகையில் அவனும் கடமையாளன். கொடுவாள் வெட்டி தண்டனை நிறைவேற்றுபவன், தூக்கு மேடையில் கயிரை சொருகுபவன் போல அவன் கடவுளின் ஊழியன்
அவன் பாசம் அன்பு கருணை எல்லாம் பார்க்கமுடியாது, எந்த கதறலுக்கும் அவன் காதை மூடி கொள்ள வேண்டும்
தலையின் உறுப்புகளில் ஆச்சரியமானது காது, ஆம் கண்ணுக்கு இமை உண்டு, வாய்க்கு உதடு உண்டு, மூக்குகும் அடைப்பு உண்டு, ஆனால் காதுக்கு பூட்டு இல்லை
சக உயிரின் கதறலின் வலிமையினை காது மனதுக்கு கொண்டு செல்ல வேண்டும் அது பூட்டபட கூடாது என்பது கடவுளின் கணக்கு
ஆம் கண்ணீரை விட கதறலுக்கு வலி அதிகம்
ஆனால் தூதர்கள் அதையும் கடந்துதான் உயிரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவனுக்கான விதிப்பு
அந்த தூதர்கள் சத்தியவானை நெருங்கினான், தொழுநனை தவிர யாரையும் தொழா சாவித்திரிக்கு அவன் கண்ணில் தெரிந்தான்
தூதர்கள் சும்மா வருவானா, அவன் வரும்பொழுது அதற்கேற்ற சூழலும் வருமல்லவா?
எமன் காலன் தூதன் என்பார்கள் அல்லவா? அப்படி தூதர்கள் வந்ததும் காலமும் கூடிற்று
காட்சிகளும் அரங்கேறின
தலை சுற்றுவதாக சொல்லி சாவித்திரி மடியில் சாய்ந்தான் சத்தியவான், அத்தோடு அவன் உயிரை எடுக்க வந்தனர் எமனின் தூதர்கள்
ஆனால் சாவித்திரி சத்தியவானை சுற்றி நின்ற அக்கினி அவர்களை உள்ளே விடவில்லை, அவர்கள் எமனை அழைத்தனர்
அங்கு வந்தான் எமன்
எமன் தேவர்களில் ஒருவன் என்பதால் வழிவிட்டது அக்கினி, பாசத்தை வீசி சத்தியவானின் உயிரை கட்டினான் எமன், ஆம் பாசம் என்றால் கயிறு என்று பொருள்
குடும்பம், பிள்ளை, சொத்து, உலகம் என ஒவ்வொரு மனிதனையும் கட்டியிருப்பது கண்ணுக்கு தெரியாத கயிறான பாசம், அதிலிருந்து விடுவித்து இழுத்து செல்வது எமனின் கயிறு
சாவித்திரி அலறினாள், துடித்தாள் ஆனால் வழியுண்டா? கானத்து தலமை ரிஷியும் இது விதியம்மா தடுப்பது யார் என அமர்ந்திருந்தனர், பொருள் என்றால் தகப்பன் நொடியில் மீட்டு தருவான், உயிரென்ன்றால் யார் மீட்க முடியும், ஆயினும் தடுத்து அலறி துடித்து நின்றாள் அவள்.
அழுதவளை கண்ட எமன் தத்துவத்தை சொன்னான் “மகளே, உலகில் முதலில் மரித்த மனிதன் நானே, என் கடமை உயிரினை அழைத்து செல்வது என் கடமை எனக்கு வழிவிடு”
தள்ளி நின்றாள் சாவித்திரி, எமன் சத்தியவானோடு நடக்க பின் தொடர்ந்தாள், அவள் வந்து கொண்டே இருக்க எமன் பரிதாபபட்டு கேட்டான் “மகளே எங்கே வருகின்றாய், நீ வரமுடியாத இடம் இது, எல்லா மனிதருக்கும் பொதுவானது, உண்மையினை உணர்ந்து திரும்பி செல்”
“இது என் கணவனின் உயிர் மட்டுமல்ல என் உயிரும் அதுதான், அது இருக்குமிடத்தில்தான் நான் இருப்பேன் அது மனைவியாகிய என் உரிமை கடமை” என்றாள்
“மகளே இது தெய்வ கணக்கு உனக்கு புரியாது, என்னை பின் தொடராதே இவன் திரும்ப மாட்டான்” என்றான் எமன்
“என் உயிரையும் எடுத்து செல் தேவனே, அவர் இல்லா உலகத்தில் நான் இனி இருக்கமுடியாது” என்றாள் சாவித்திரி
“மகளே, உனக்கான நேரமும் விதியும் வராதபொழுது உன் உயிரை என்னால் இழுத்து செல்லமுடியாது, நீ என்னை பின் தொடராதே” என்றான் எமன்
அவளோ அவன் பின்னாலே சென்றாள், அவளின் உறுதியில் அதிசயித்த எமன் மறுபடியும் சொன்னான் “மகளே என் கடமை இது, நானாக இவனின் உயிரை எடுத்து எனக்கொன்றும் ஆகபோவதில்லை, படைப்பின் நோக்கத்தை இயக்கும் பரமனின் கட்டளைபடி நான் ஒரு வேலைக்காரன், என்னை தொடர்வதால் உனக்கொன்றும் நடக்காது, கண்ணீரும் கதறலும் எதையும் மாற்றாது, திரும்பி போ”
சாவித்திரி சொன்னாள் “அவர் உயிர் இருக்குமிடத்தில்தான் என் உயிரும் இருக்கும், அன்பின் பிணைப்பு அது, அதை யாராலும் உடைக்க முடியாது, என் உயிருடன் என் உடல் கூட வருகின்றது, நான் என்ன செய்வேன்?”
மெல்ல புன்னகைத்த எமன் “மகளே ஒருவரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே அவன் திரும்ப முடியாது”.
சாவித்திரி தனக்காக கேட்கவில்லை அப்பொழுதும் கணவனின் நோக்கத்திற்காக கேட்டாள் “என் மாமனாரின் கண்பார்வை திரும்ப வேண்டும், அவர் ராஜ்யம் அவருக்கு கிடைக்க வேண்டும்”
தேவர்களில் ஒருவனாகிய எமன் அதற்கு மகிழ்ந்து வரமளித்தான், “உனக்கு ஏதும் கேட்காமல் உன் கணவனின் குடும்ப கஷ்டம் உன் கஷ்டமாக நினைத்து வேண்டியதற்கு இரங்கி அந்த வரத்தை அளித்தோம், நீ போகலாம்” என்றான்
அவளோ தொடர்ந்து வந்தாள் “மகளே சொல்வதை கேள், மானிடர்கள் எம்மோடு வரமுடியாது, வாழ்வின் அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து, விதியினை முடித்த அனுபவத்தோடே வரமுடியும் நீ கிளம்பு” என்றான்
“தேவனே, என் வாழ்வும் விதியும் அவரன்றி வேறு யார், நான் வேறு எங்கு செல்வேன்” என்றாள் சாவித்திரி
“அவன் நரகத்துக்கு போனால் அங்கும் போவாயோ? முடியாதல்லவா திரும்பி செல்” என்றான் எமன்
“அவருக்கு விதிக்கபடுவது நரகமானாலும் எனக்கென்ன தயக்கம், அவர் இருக்குமிடமே எனக்கு சொர்க்கம் அல்லவா?”
அந்த பதிலே அதிசயித்த எமன் “மகளே இன்னொரு வரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே, இறந்தவன் திரும்ப முடியாது”
“எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், அவர்கள் மாமனாரின் ராஜ்யத்தை ஆளவேண்டும்”
இவ்வளவுதானே மகளே, உன் பூரண அன்பிற்காய் அதை அருளினோம் , இனி எம் தேவலோக கடமையில் குறுக்கிடாதே, மங்கலம் உனக்கு உண்டாகட்டும்” என நகர்தான் எமன்
அவ்வளவுதான், அவன் முன்னால் சென்று மறித்து நின்றாள் நின்றாள் சாவித்திரி
“மானிடபெண்ணே, இனி எம்மால் பொறுக்கமுடியாது. அழுது புரண்டாலும் உலகே அழிந்தாலும் இறந்தோர் எழமாட்டர். எம் வழியினை தடுப்பது படைப்பின் சக்கரத்தை நிறுத்துவதற்கு சமம், சூரியனை கட்டி வைப்பாயோ, நிலவை மறைப்பாயோ, திரும்பி செல்
“தேவனே என்னை மன்னித்து கொள்ளுங்கள், வரம் கொடுத்தது நீங்கள், கொடுத்த வாக்குபடி வரத்தை கொடுங்கள்”
“எல்லாம் கொடுத்தாயிற்றே பெண்ணே, இனி என்ன?”
“ம்ம், தேவனே எனக்கு வாரிசுகள் கணவனன்றி எப்படி வருவார்கள்? கணவனை தவிர வேறு யாரையும் மனதாலும் என்னால் நினைக்க முடியாது, என் கணவன் திரும்பி வருவதே உம் வாக்கு நிறைவேற ஒரே வழி , கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாவிட்டால் உம் தேவர் பகுதியே பறிக்கபட்டு, சாபத்து நிலை அடைவீர் மறக்க வேண்டாம்..”
கையறு நிலையில் நின்றான் எமன், அவனுக்கு அவன் வரத்தையும் காக்க வேண்டும் அந்த உயிரையும் கொண்டு செல்ல வேண்டும். இது முடியாது என்பது விளங்கிற்று
தன் கடமையில் இருந்து அவசரபட்டு தவறி வாக்கு கொடுத்துவிட்டோமோ என் அஞ்சினான், தயங்கினான், இனி தான் நகரமுடியாது என்பது தெரிந்து மேல் உலகுக்கு தன் நிலை அறிவித்தான்
அன்னை சக்தி தோன்றினாள், ஒரு பெண்ணின் பாசம் கணவனுக்கு வாழ்வாகும், தெய்வத்தின் விதியினை மீறி அவனின் ஆயுளை கூட்டுமளவு, விதியினையே மாற்றுமளவு அதற்கு சக்தி உண்டு என உலகுக்கு சொல்லும் வாழ்வு இவளது என ஆசீர்வதித்தாள்
எமனும் சத்தியவானை விடுவித்து திரும்பி சென்றான்
அன்று பங்குனியும் மாசியும் கூடும் மாலை , அப்பொழுதுதான் சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டெடுத்தாள்
கார் என்றால் அரிசி, அந்த அரிசிமாவில் அடை செய்து தன் விரதத்தை முடித்து அன்னைக்கு படைத்து அவள் உண்டாள், கார் அடை எனும் பெயர் வந்தது இப்படித்தான்
சாவித்திரி கதையினை படித்து அன்று நோன்பிருந்து அன்னை காமாட்சியினை வழிபட்டால் அவளின் கணவனுக்கு ஒரு கெடுதலும் நிகராது என்பது ஐதீகம்
காரடையான் நோன்பு இதற்காகத்தான் கொண்டாடபடுகின்றது
இந்த நோன்பு சொல்லும் தத்துவம் இதுதான், அன்பு தூய்மையான அன்பும் அதில் இருக்கும் உறுதியான உண்மையும் விதியினையும் வெல்லும்
வாசுகி கதை, அனுசுயா கதை எல்லாம் இந்த தத்துவமே
பெண்ணின் தூய்மையான உண்மையான அன்புமுன் பிரபஞ்சமும் அதன் விதியுமே மண்டியிடும்
, அந்த அன்பு அதிசயங்களை நிகழ்த்திகாட்டும்
சாவித்திரி வாழ்வில் அது நிகழ்த்தி காட்டியதைத்தான் காரடையான் நோன்பு என கொண்டாடுகின்றார்கள் இந்து பெண்கள்
வடமாநிலத்தில் இவ்விழா பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ என கொண்டாடபடுகின்றது
தென்னகத்தில் இந்நாளில் இந்து பெண்கள் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைப்பார்கள், அதில் தேங்காய், பூ, மாலை சாத்தி பட்டுத்துணி சுற்றி மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைப்பார்கள்
இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு காமாட்சி அம்மனை வழிபட்டு, விரதத்தை முடிப்பார்கள். பின்னர் மஞ்சள் சரடு அணிவார்கள்.
பின் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது கூடுதல் சிறப்பாகும்
இந்நாளுக்கான அடை செய்து, நல் வெண்ணெய் எடுத்து அதை சிவனுக்கும் பார்வதிக்கும் படைத்து
‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிப்பார்கள்
‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள்.
அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது அசைக்க முடியா நம்பிக்கை
குடும்பத்திற்கு பெண்களே ஆதாரம், அதுவும் மனைவி ஸ்தானமே மகா மகா முக்கியமானது, அந்த மங்கையர்கள் பங்குனி பிறக்கும் நேரம் இந்த நோன்பை நூற்று, அந்நேரம் சாவித்திரி கதையும் படித்து தேவியின் எல்லா அருளையும் பெறட்டும்
சத்தியவான் சாவித்திரி கதை ராமாயணம் மகாபாரதம் போலவே இந்நாட்டின் பெரும் அடையாளமாக இருந்தது
அன்று சினிமா இல்லை, டிவி இல்லை எதுவுமில்லை
கோவில்களில் இந்த கதை போதிக்கபட்டது, தெரு கூத்துக்களிலும் இதர கலைகளிலும் சொல்லபட்டது
ராமாயணம் மகாபாரதம் போலவே இந்துமதம் பரவியிருந்த இடத்திலெல்லாம் இருந்தது, அங்கெல்லாம் மனைவியின் உறுதியின் அடையாளமாக போதிக்கபட்டது
நவராத்திரி உட்பட இதர கொண்ட்டாங்களில் இந்நாட்டின் எல்லா மூலை முடுக்கிலும் சாவித்திரி கதையும் சொல்லபட்டது
இன்று காலங்கள் மாறிவிட்டன, டிவியும் சினிமாவும் கண்ட கருமாந்திரங்களை எல்லாம் போதித்து கலாச்சாரத்தையும் இன்னும் பலவற்றையும் மாற்றி திணிக்கின்றன
அந்த நுனிமரத்து பறவைகள் எதையும் செய்யட்டும்
சாவித்திரி கதையும் அந்த நோன்பும் இம்மாபெரும் மரத்தின் வேர்களில் ஒன்று, இந்துமதம் போதிக்கும் அன்பே கடவுள், சத்தியமே தெய்வம் எனும் பெரும் வேர்களில் ஒன்று
இத்தேசமும் இந்துமதமும் அம்மத மங்கையரும் இருக்குமட்டும் அது உலகில் எக்காலமும் நிலைபெற்று மனைவி அன்பின் மகத்துவத்தை அதற்கு இருக்கும் சக்தியினை சொல்லிகொண்டே இருக்கும்
அதில் கண்ணுக்கு தெரியாத சாவித்திரிக்கள் தங்கள் அன்பினாலும் அது கொடுக்கும் சத்தியத்தின் உறுதியிலும், அன்பையே தெய்வமாய் கொண்டு தங்கள் கணவனை எல்லா ஆபத்திலும் மீட்டு காத்து கொண்டே இருப்பார்கள்..
அந்த அன்புக்கு தெய்வமும் பிரபஞ்சமும் எக்காலமும் தலைவணங்கி கொண்டே இருக்கும்
ஸ்ரீமத் வேதாந்த தேஸிகன் ஸ்வாமி அருளிய ஸ்ரீ பாதுஹாஸஹஸ்ரம் எனும் க்ரந்தத்தில் வரும் ஸ்லோகத்தைச் சொல்லி சரடு கட்டிக் கொள்ளவும்.
வஹந்தி ரங்கேஸ்வர பாதரஷே
தீர்க்காயுஷாம் தர்ஸித பக்தி பந்தா.
ஆஸாதிபாநாம் அவரோத நார்ய
த்வந் முத்ரிகாம் மங்கள ஹேமஸுத்ரை||
ஹே பாதுகையே..திக்பாலகர்கள் தீர்க்காயுஸு உள்ளவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களது பத்னிகள் ஸ்ரீரங்கனின் பாதுகையாகிய உன்னை நினைத்தே பொன் சரடினால் ஆன மங்கள ஸூத்ரத்தை அணிகின்றனர். அதனால் அவர்கள் தீர்க்க ஸுமங்கலிகளாக உள்ளனர்.
முடிந்தால் மேற்கண்ட ஸ்லோகத்தை தியானிக்கவும்.