சாஸ்தாவின் அறுபடை வீடு
கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர்
கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள்
அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் கார்த்திகையில்தான் திருகார்த்திகை எனும் பவுர்ணமி கொண்டாடபடும், அப்படி இம்மாதம் விரதமிருந்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என சொன்ன இந்துமதம் யோக கைகூடவும் ஒருஏற்பாட்டினை செய்தது
முருகபெருமான் போலவே மலைமேல் அமர்ந்திருக்கும் சாஸ்தாவினை காட்டியும் அது ஞானம்பெற வழி செய்தது
ஒருவகையில் முருகனுக்கும் அய்யப்பனுக்கும் சில அடிப்படை தொடர்புகள் உண்டு, இருவருமே சாஸ்தாக்கள். சாஸ்தா என்றால் மூலவர், பல வரங்களை சேர்த்து அருள்பவர் என்றும் பொருள் உண்டு
சபரிமலை நோன்பும் யாத்திரையும் அப்படியானது
சபரிமலை என்பது சுவாமி அய்யப்பன் அருளாசி வழங்கும் மலைதலம் அங்கே செல்ல நோன்பும் விரதமும் கடும் கட்டுப்பாடும் அவசியம் என்பது எல்லோரும் அறிந்தது
ஆனால் சபரிமலைக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு மட்டும் சென்றுவரவேண்டுமா அதுதான் மரபா என்றால் அல்ல, அதன் மரபு கொஞ்சம் ஆழமானது
சேர,சோழ, பாண்டி தேசங்களாக பிரிந்திருந்த காலத்தில் யோகம் கைகூடும் தலமாக மூன்று நாடுகளிலும் ஆறு அறு ஆலயங்கள் இருந்தன
அவைதான் முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளாக இருந்தன, இவற்றில் நான்கு தலங்கள் பாண்டிநாட்டில் இருப்பதை அவதானிக்கலாம், பின்னாளில் சோழர்கள் பாண்டியரையும், பாண்டியர் சோழரையும் ஆளும் போது அவை பொதுவான ஆறு ஆலயங்களாயின
அதற்கு முன் அவரவர்க்கு ஆறு ஆலயங்க்ளே இருந்தன
இவற்றின் தாத்பரியம் உடலின் ஆறு சக்கரங்களையும் துலங்க வைப்பதே, உடலின் சக்திமையம் எனும் சக்கரங்கள் துலங்கினால் ஒருவன் ஞானமும் தெளிவும் பிரபஞ்ச தத்துவமும் அறிவான், அப்படி அறிந்துகொண்டவர்கள்தான் ஞானியர், மஹான்கள், ரிஷிகள்
குறைந்தபட்டம் அவனவன் கர்மாவினையாவது செய்யும் தெளிவு கிடைக்கும் அதனால் ஆறு சக்கரங்களும் துலங்குதல் நன்று
முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளும் தமிழகத்தில் இப்படித்தான் அமைக்கபட்டிருந்தன
உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மனிப்பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்கினை அல்லது ஆஞ்ஞா
இந்த ஆறு சக்கரம் துலங்கத்தான் முருகபெருமானின் அறுபடை வீடுகளை ஆலயமாக அமைத்தார்கள், ஒவ்வொரு ஆலயமும் ஒரு சக்கரத்தினை தூண்டி இயக்கிவிடும் ஆற்றல்மையங்கள்
திருபரங்குன்றம் ஆலயம் மூலாதாரத்தினை தூண்டும் இடம், திருச்செந்தூர் ஆலயம் சுவாதிஷ்டானத்தை தூண்டும், பழனிமலை மணிபூரகத்தை துலக்கும், சுவாமிமலை அனாதஹ சக்கரத்தை துலக்கும், விசுத்தி சக்கரம் திருத்தணியிலும் ஆஞ்ஞா சக்கரம் பழமுதிர்ச்சோலையிலும் துலங்கும் என்பது ரிஷிகளின் வாக்கு
இதனாலே இந்த ஆலயங்களுக்கு அடிக்கடி சென்றுவர சொன்னார்கள், ஒவ்வொரு அறுபடை வீடும் உரிய சக்கரத்தை துலக்கி ஞானமும் ஆரோக்கியமும் கொடுக்கும்
நோய்களை தீர்த்துவைப்பது முதல் அருணகிரியார், குமரகுருபரர் என ஏகபட்ட ஞானியரெல்லாம் இந்த தலங்களில் வழிபட்டபின்பே உருவாகி வந்திருப்பார்கள், அந்த ஆலயத்தின் சக்கரங்கள் துலங்கியதால் ஏற்பட்ட ஞானம் இது
ஆறு சக்கரங்களை தாண்டி ஏழாவது துரிய சக்கரம் என ஒன்று உண்டு, தமிழகத்தில் அதுபற்றிய தகவல் தெளிவாக இல்லை ஆனால் அது குன்றகுடி என்போரும் இல்லை மருதமலை என்போருமாக வாதங்கள் நீள்கின்றன
ஏழாம் சக்கரத்தினை பற்றிய தெளிவான தமிழக முருகபெருமான் ஆலயம் இல்லையே தவிர அறுபடை வீடுகளுக்கும் ஆறுசக்கரம் துலங்கமும், இந்த ஆறுசக்கரம் துலங்கினாலே ஏழாம் சக்கரம் உரிய நேரம் துலங்கும் என்பதால் அதுபற்றி பெரிதும் சொல்லாமல் விடுபட்டிருக்கலாம்
மதுரையில் இருக்கும் சோமஸ்கந்தரை உற்சவராக கொண்ட இம்மையில் மறுமை தருவார் ஆலயம் அந்த ஏழாம் தலம் என்பாரும் உண்டு
இதெல்லாம் அனுமானங்களே
முன்பு பாண்டிய நாட்டிலே ஏழு சக்திமையங்களும் ஏழு அறுபடை வீடுகளாக இருந்திருக்கலாம் பின் பவுத்த குழப்பம் சமண குழப்பம் சோழ எழுச்சியில் எல்லாம் மாறியிருக்கலாம் என்பதும் ஒரு ஆய்வு
பாண்டிய நாட்டில் இப்படி ஏற்பாடு இருந்தது, சோழ நாட்டிலும் இது இருந்தது சுவாமிமலை, திருத்தணி என இன்று இருமலை மட்டும் காட்டபட்டாலும் அங்கும் முன்பு ஆறு சக்திமையங்கள் முருகன் அறுபடை தலமாக இருந்திருகலாம் என்பதும் செய்தி
குன்றக்குடி , வயலூர் என ஏகபட்ட ஆலயங்கள் அதற்கு சாட்சி
பாண்டியநாடும், சோழ்நாடும் எப்படி இப்படி அறுபடை வீடுகளை யோக ரகசியங்களுக்காக வைத்திருந்ததோ அப்படி சேர நாடும் வைத்திருந்தது
அதில் ஆறாம் சக்கரத்துக்கானதுதான் சபரிமலை
அப்படியானால் மீதமெல்லாம் எங்கே என்றால் அதெல்லாம் அங்கேதான் இருக்கின்றது, ஆனால் சபரிமலை என ஒரே ஒரு தலத்தை நோக்குகின்றார்களே தவிர, அதன் முறையான வழிபாடும் திருபயணமும் இந்த மீதி ஐந்து தலங்கள் வழியாகத்தான் செல்லவேண்டும் என்பதை மறக்கின்றார்கள்
சபரிமலை யாத்திரை என்பது காலகாலமாக இருந்தது, பின்னாளில் தொடர்ச்சியான அன்னிய படையெடுப்பில் கேரளம் துண்டிக்கபட்டது, பிரிட்டிசார் காலம் வரை அது ஆப்கானியர் ஆட்சிக்குள் வரவில்லை அதனால் அதன் வழமை தொடர்கின்றது
தமிழகம் ஏகபட்ட அந்நியரால் ஆளபட்டதால் அது குழம்பி கிடக்கின்றது, இனி தெளியும்
கேரள மரபுபடி சபரிமலை யாத்திரை என்பது மற்ற ஐந்து தலங்களை வழிபட்டு ஆறாம் தலமான சபரிமலையில் முடிதல் வேண்டும், அப்படியே பொன்னம்பல மேட்டில் ஜோதியினை காணுதலும் வேண்டும்
இப்போது சபரிமலையும் மஹரஜோதி காலங்களில் பொன்னம்பலமேடும் நோக்கபடுகின்றதே தவிர மீதி தலம் பற்றியோ அங்கு செல்லவேண்டிய அவசியம் பற்றியோ பெரிதாக தெரிவதில்லை
சபரிமலை திருபயணம் விரதகாலம் முடிந்து செல்வதல்ல, அக்காலங்களில் ஒரு தலத்துக்கு எட்டு நாள் வீதம் ஆறுநாள் செலவழிக்க 48 நாட்களாகிவிடும், ஆக தொடக்கமே யாத்திரையாகவே இருந்தது
முதலில் வழிபடவேண்டிய தலம் பாபநாசம் சொரிமுத்தையனார் சாஸ்தா, இன்று அது தமிழகத்தில் இருந்தாலும் முன்பு வரை அது மலையாள பகுதியாகத்தான் இருந்தது
அங்கிருக்கும் சாஸ்தா ஆலயம் பிரசித்தியானது, இன்றும் சித்திரை விசு எனும் கேரள பாரம்பரியம் அங்குதான் விமரிசையாக நடைபெறும், கேரள ஆலயம் அது என்பதன் சாட்சி அவ்விழா
அந்த சொரிமுத்தையனார் சாஸ்தா ஆலயமே மூலாதார சக்கரத்தை துலக்கும் சக்தி மையம், அதனால் அங்குதான் முதல் வழிபாட்டை செய்ய வேண்டும்
அந்த ஆலயம் அகத்தியர் காலத்தில் உருவானது, அந்த பொதிகை மலையில் இருந்த அகத்திய பெருமான் தான் தன் தரிசனத்தில் பொன்வடிவில் கண்ட சாஸ்தாவினை கண்டு அதை ஸ்தாபித்தார், “பொன் சொரியும் முத்து அய்யனார்” என்பதே சொரிமுத்து அய்யனார் என மருவிற்று
அய்யனார் என்பது அய்யப்பபன் எனும் தமிழ் பெயரின் மரியாதை விகுதி.
அந்த சொரிமுத்து அய்யனார் எனும் பொன் சொரியும் அய்யப்பன் அமர்ந்திருக்கும் கோலம் ஒரு யோகம் செய்யும் கோலம், யோக கலையின் ஒரு அங்கத்தை விளக்கும் முறை, அதை குறிப்பால் சொல்லும் தோற்றம் அது
இரண்டாவது கேரளாவின் அச்சன்கோவில் ஆலயம், இங்கிருக்கும் சுவாமியின் பெயர் மணிகண்ட முத்தைய்யன், இக்கோவில் பாம்புகடிகளுக்கும் இன்னும் பல விஷ முறிவுக்குமான பிரசித்தியான ஆலயம்
இந்த ஆலயவழிபாடு சுவாஸ்திதானத்துக்கு துலக்கத்தை கொடுக்கும், இந்த ஆலயத்தின் சாஸ்தாவும் யோகத்தை கற்றுகொடுக்கும் கோலத்திலே அமர்ந்திருப்பார்
மூன்றாம் ஆலயம் ஆரியங்காவு ஆலயம், இங்கு சாஸ்தாவின் பெயர் அய்யப்பன், காவு என்றால் வனம் ஆரிய என்றால் சிறந்த, உயர்ந்த என பொருள், அந்த இடம் பின்னாளில் ஆரியங்காவு என்றாயிற்று
தமிழகத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் தொடர்பு உண்டு, மதுரை மக்கள் கண்ணகி நடந்தவழி என இதனை சொல்வார்கள், மதுரைக்கும் இந்த இடத்துக்குமான தொடர்பினை இப்போது சவுராஷ்ட்ரா இன மதுரை மக்களே முன்னெடுக்கின்றார்கள், காலவோட்டத்தில் வந்த மாறுதல் இது
இந்த ஆரியங்காவு அய்யப்பன் ஆலயம் மணிப்பூரகம் சக்கரத்தை துலங்க வைக்கும், இங்கும் வழிபாடுகள் அவசியம்
நான்காம் ஆலயம் குழத்துபுழை ஆலயம், இங்கிருக்கும் அய்யப்பன் பெயர் வீரமணிகண்டன், புழா என்றால் ஆறு என பொருள். குளம்போல் ஓடும் ஆற்றினால் அந்த பெயர் உண்டு, அங்கே மீன்களுக்கு பொரியிட்டு புண்ணியம் தேடும் சாங்கியம் உண்டு
இந்த வீரமணிகண்டனை வணங்கினால் அனாதஹ சக்கரம் துலங்கும் என்பது ஐதீகம், தியானம் செய்யவும் தியானம் கைகூடவும் அருமையான கோவில் என்பதால் அங்கு அமர்ந்து தியானிப்பது பெரும் வழிபாடு
ஐந்தாம் ஆலயம் எருமேலி எனும் எருமை கொல்லி
அன்னை தேவி எருமை தலையுடன் அலைந்த மகிஷன் எனும் அரக்கனை அங்கே வதம் செய்தாள் என்பது நம்பிக்கை, விசத்தி சக்ரா துலங்கும் இடம் அது
எருமேலி தலத்தில் வணங்கும் போது விசுத்தி சக்கரம் துலங்கி ஒரு ஆனந்தம் கைகூடும், அந்த ஆனந்தத்தில் நடனமாட தோன்றும், அந்த நடனம்தான் இன்றும் பேட்டை துள்ளல் என எருமேலி பக்கம் கொண்டாடபடுகின்றது
இந்த ஐந்து ஆலயங்களும் கண்டு ஐந்து சக்கரமும் துலங்கியபின் ஆறாம் சக்கரம் துலங்குமிடம்தான் சபரிமலை அய்யப்பன் சன்னதி
அந்த அய்யப்பன் அமர்ந்திருக்கும் கோலமே ஒரு யோக கோலம், யாராலும் அமரமுடியாத ஒரு யோக தத்துவ போதனை, அந்த வடிவ யோகாசனம் சக்கரங்களை துலக்கும்
அந்த வடிவில் அமர்ந்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருளும் யோக தத்துவமும் கொட்டி கொடுக்கின்றான் சுவாமி அய்யப்பன்
அந்த சபரிமலையில்தான் ஆக்ஞா சக்கரம் துலங்கும், அதுதான் அந்த சக்தியின் மையம்
இந்த ஆறு சக்கரங்களும் துலங்கியபின்புதான் துரிய சக்கரத்தில் ஒளிவடிவில் , ஜோதிவடிவில் இறைவனை தரிசிக்கலாம்
சபரிமலை வழிபாட்டில் ஏழாம் நிலையமாக கந்தமலையினை சொல்வது உண்டு, ஆனால் இப்போது கந்தமலை என்றால் யாருக்கும் தெரியாது
அந்த கந்தமலைதான் பொன் அம்பல மேடு என அழைக்கபடுகின்றது, இறைவன் பொன்னிற ஜோதிவடிவில் தோன்றும் இடம் அதுஅதான்
மகரஜோதி வழிபாடு அதுதான்
சபரிமலை திருயாத்திரை வழிபாட்டால் ஆறுசக்கரமும் துலங்கி ஏழாம் நிலையில் ஜோதியினை தரிசிக்க வேண்டும் என்பதை குறியீடாக சொல்லும் விஷயங்கள் போதனைகள் இவை
சபரிமாலிக்கு விரதமிருக்கும் பக்தர்கள் இந்த ஆறு ஆலயங்கள் வழி தங்கள் திருயாத்திரையினை வகுத்து கொண்டால் கூடுதல் பலன் உண்டு, முன்னோர்கள் காட்டிய வழி இதுதான்
முன்னோர் காட்டிய வழியில் விரதமும் வழிபாடும் தவமும் அவசியம் என பின்பற்றும்போது, இருமுடி முதல் எல்லா ஆச்சாரங்களையும் பின்பற்றும் போது வழிபாட்டின் யாத்திரையும் இப்படி முறையாக இருத்தலே சரி
முடிந்தோர் பின்பற்றுவார்கள் என எதிர்பார்ப்போம்
இந்துமதம் என்பது ஞானத்தை நோக்கி ஒருவனை நகர்த்துமதம், மானிட நிலையில் இருந்து தெய்வநிலை நோக்கி அழைத்து செல்லுமதம்
ஒருவன் ஞானநிலை அடைய பிரபஞ்சத்தோடு அவன் தொடர்புபடவேண்டும், பிரபஞ்ச தொடர்பை அடைய அவனுக்கு ஆறு சக்கரங்கள் துலங்கவேண்டும் என சூட்சுமமாக போதித்தது
அதை பெற பல ஏராளமான ஆலயங்களை அமைத்து வகை வகையாக வழிகாட்டியது
சக்தி பீடங்கள் என்றும், திவ்ய தேசம் என்றும், ஜொதிர்லிங்கம் என்றும், சிவாலயம் என்றும், அறுபடை வீடுகள் என்றும் அது ஏராளமான வழிகளை கொடுத்தது
இந்துக்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள், இதுதான் வழி என இல்லாமல் ஏகபட்ட வழிகளை திறந்து ஏதோ ஒருவழியில் சென்று ஞானம் அடைந்துகொள் என போதித்த மதம் அவர்களுடையது
அதில் ஒன்றுதான் அய்யப்ப சுவாமி வழிபாடும் யாத்திரையும் கார்த்திகை விரதமும்
அந்த அய்யப்ப பக்தர்கள் இந்து ஞானியர் காட்டிய பாரம்பரியபடி இந்த சாஸ்தாவின் அறுபடை வீடுகள் வழி வழிபட்டு சபரிமலையினை அடைந்து அய்யனின் அருளை முழுவதுமாக பெறட்டும்
சுவாமியே சரணம் ஐயப்பா என்பது சபரிமலையில் மட்டும் கேட்க வேண்டிய குரல் அல்ல, அது பொன் சொரியும் முத்து அய்யன் ஆலயம் தொடங்கி எல்லா முக்கிய ஆலயங்கள் வழி சொல்லிக்கொண்டே சொல்லவேண்டிய மந்திரம்.