சித்திரை பவுர்ணமியும் முருகப்பெருமான் வழிபாடும்
பசுமலை, முக்குணம் மற்றும் ஈசூர் முருகன் ஆலயங்கள்
சித்திரை பௌர்ணமி என்பது இந்துக்களுக்கு மகா விசேஷமானது, அது ஆகர்ஷன சக்திகள் சூட்சும சக்திகள் நிறைந்த நன்னாள்.
அந்நாளில் மலைமேல் இருக்கும் தங்களை தரிசித்தல் நன்று, முன்பு மலையில் இருக்கும் கண்ணகி தேவியின் ஆலய கொண்டாட்டமெல்லாம் அப்படித்தான் உருவானது, இன்றும் கேரள எல்லையில் அந்த கொண்டாட்டம் உண்டு
சித்திரை பவுர்ணமி அன்று சித்தர்கள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடும் அவசியம், முருகப்பெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்களும் இருப்பார்கள் அதனால் அந்த வழிபாடு மகா அவசியம்.
குன்று இருக்குமிடமெல்லாம் குமரனும் இருப்பான் அவனோடு சித்தர்களும் இருப்பார்கள், இந்நாளில் அப்படியான முருகன் கோவிலுக்கு செல்லுதல் மிக்க பலனளிக்கும்
முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உண்டு, அது போக பிரசித்தியான ஆலயங்கள் உண்டு, அப்படியே சில மகா அருட்தலங்கள் சில அடையாளமில்லாமல் இருப்பதும் உண்டு
அப்படியான ஆலயத்தில் மூன்று ஆலயங்கள் முக்கியமானவை
அது செஞ்சி பக்கத்தில் இருக்கும் பசுமலை, முக்குணம் மற்றும் ஈசூர். இந்த ஆலயங்களின் வரலாறுகளும் அவற்றின் தாத்பரியங்களும் மிக மிக முக்கியமானவை, ஆதார பகவத்யம் கொண்டவை
முருகப்பெருமானுக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் எனப்படும் மலைகளில் திருத்தலங்கள் உண்டு, அவற்றில் திருத்தணியும் வள்ளிமலையும் முக்கியமானது
அந்த திருத்தணிக்கு வள்ளியினை தேடி வரும் முருகன், தன் வேல் மயில் சேவல்கொடி என மூன்றையும் ஒவ்வொரு இடத்தில் நிறுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்க சொன்னதாக ஐதீகம்
அவகையில் அவர் வேல் நிறுவபட்ட இடம் பசுமலை, மயில் நிறுவபட்ட இடம் அருகிருக்கும் முக்குணம், சேவல் கொடி நிறுவபட்ட இடம் ஈசூர்.
இவை மூன்றும் அருகருகே அமைந்த மலைகளும் தலங்களுமானவை
முதலில் அந்த பசுமலையினை காணலாம் இது செஞ்சிக்கும் அன்மித்து திருவண்ணாமலை அருகே அமைந்துள்ளது, மேல் மலையனூரும் இதற்கு சமீபம்
வேல், மயில், சேவல்கொடி என மூன்றும் தனி தனி தத்துவம் கொண்டவை. அவற்றை தனி தனியே வணங்கவேணடும் என முதலில் சொன்ன இடம் இவைகள்தான்
இங்கிருந்துதான் வேல் வழிபாடு தொடங்கிற்று, வேல் விருத்தம் போன்றவை பாடபட இதுதான் மூல காரணம்
வேல் வழிபாடுதான் முதல் வழிபாடாக இங்கு இருந்தது பின் காலவோட்டததில் கோவில் எழும்பி பக்தர்கள் கூட்டமும் கொண்டாட்டமும் அதிகரித்தபின் அது மாறிற்று
உண்மையில் அது வேல் முதலில் பதிக்கபட்ட ஆலயம்
அந்த அழகிய பசுமையான மலையில் முருகப்பெருமானே தன் வேலை ஸ்தாபித்து வழிபட சொன்னார், அந்தவேல் அன்னை கொடுத்த ஞானவேலின் அம்சம்
முருகப்பெருமானின் வேல் என்பது ஞானத்தின் அடையாளம், அது ஞான ஜோதியின் வடிவம், அந்த ஞானசக்தியின் வடிவமே வேல் என வடிவமானது
அது அறியாமை அசுரனை அகற்றும், பொல்லாரின் குணங்களை அகற்றும் ஞானமிக்கது
அந்த வேல்தான் அங்கு நின்று அருள்வழங்குகின்றது, இன்றும் ஞானமும் ஆத்மாவுக்கு அருளும் பலமும் கொடுக்கும் ஆலயம் அது
வேல் என்பது யோக தத்துவம் அதன் வடிவம் அடியில் இருந்து இரு கோடுகள் எழுந்து நுனியில் சங்கமிப்பதை காணலாம், அது இடகலை பிங்கலை எனும் இரு மூச்சுக்களும் சுழுமுனை நாடியாக இணைந்து ஞானநிலையினை தூண்டுவது என்பதை சொல்வது
ஆம், வேலை வழிபட்டால் ஞானமும் யோகமும் கைகூடும், முருகப்பெருமான் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் இப்படித்தான் உருவாகி வருவார்கள், அவனே ஞானபண்டிதன், யோகராஜன்
இது திருசெந்தூர் போல மகா தொன்மையான இடம், காலமெல்லாம் மாறி மாறி வந்த அந்த மலையும் ஆலயமும் இப்போது சிறிய ஆலயமாக காட்சியளிக்கின்றது
பசுமலை மிக அழகான மலை அங்கே, 400 படிகள் தாண்டி மேலே அமர்ந்திருக்கின்றார், வள்ளி தெய்வானையோடு அமர்ந்திருக்கின்றார் முருகப்பெருமான், அங்கேதான் வாயில் பாம்பினை கொத்தும் மயில் சிலையும் உண்டு
அது ஆத்மா தன் குண்டலி சக்தியினால் ஆசைகளை வென்றது என்பதன் பொருள்
மலையடிவாரத்தில் ஸ்தாபிக்கபட்டிருக்கும் வேல் அது வேல் ஆலயம் என்பதை காட்டுகின்றது, மேலே சில குகைகளும் உண்டு அங்கெல்லாம் சித்தர்கள் ஞானம் பெற்றார்கள், இன்னும் அந்த மகான்களின் சூட்சும வாசமும் அருளாசியும் அங்கு வலுவாக உண்டு
அவர்களில் நாராயண சித்தர் ஸ்வாமிகள், லலிதானந்த சத்குரு சித்தர் போன்றோர் பிரதானமானர்கள் அதனால் அவர்களுடன் எண்னற்ற சித்தர்கள் முக்கியமானவர்கள்
நாராயண சித்தர் எனும் ஜடாமுடி சித்தர் இன்றும் இங்கு வாசம் செய்கின்றார் , அவரை சூட்சுமமாக கண்டோர் உண்டு
இங்கே தேவர்கள் வழிபட வருவார்கள் , பவுர்ணமி அன்று அவர்கள் வந்து வழிபடுவார்கள்
சப்த கன்னியர் இங்கு வந்து வணங்கி செல்லும் நிகழ்வும் உண்டு, அப்படியான மிக மிக விஷேஷமான தலம் இது
எல்லா முருகப்பெருமான் அடியார்களும் ஓடிவந்த தலம் அது, இங்கு வழிபட்டபின்புதான் திருபுகழை அருணகிரி நாதர் பாட தொடங்கினார் என்பது ஐதீகம்
அவர் இந்த மலையினை “கோ கிரி” அதாவது அரசன் எனும் பெரும் இறைவன் வசிக்கும் மலை என பொருள்
இன்னும் பாம்பன் சுவாமிகள், திருகோவிலூர் ஞானந்த சுவாமிகள், நாமானந்த சுவாமிகள், முருகாஸ்ரம ஸ்வாமிகள் என வந்து வணங்கிய சித்தர்கள் மகான்கள் ஏகபட்டோர் உண்டு
மகா முக்கியமாக யோகிராம் சுரத்குமார் எனும் மகா யோகி இங்கு தரிசனம் செய்தார், திருவண்ணாமலைக்கு வந்து நீண்ட நாள் அமர்ந்திருந்த அவர் இங்கு வந்துசென்றபின்பே பெரு ஞானநிலையினை அடைந்தார்
அவர் வாழ்வில் இந்த ஆலயம் மகா முக்கிய இடம் பெற்றது
யோகிராம் சுரத்குமார் திருவண்ணாமலையினை விட்டு சென்ற இடங்கள் வெகு சொற்பமே, அதில் ஒன்று இந்த பசுமலை
திருமுருக கிருபானந்தவாரியார் இதன் பெருமை அறிந்தே திருபுகழ் திருப்படி எனும் திருப்புகழ் பாடும் பெரும் விழாவினை இங்கே உருவாக்கினார்
இந்த முருகன் சக்திவாய்ந்தவர் பக்தர்கள் கேட்கும் வரத்தை தருபவர், அங்கே வேல் குத்தி வணங்கினால் வேல் சாற்றி வணங்கினால் கிடைக்காத பாக்கியமே இல்லை
நோய் நொடி நீங்க, வம்சம் தளைக்க, மணவாழ்வு பெருக., கடன் தீர இன்னு எதிரிகள் தொல்லையெல்லாம் தீர அங்கு வேல்சாற்றி வழிபட்டு பலன் பெற்றோர் உண்டு
கார்த்திகை மாத கந்த சஷ்டியும், பங்குனி உத்திரமும் அங்கு வெகு பிரசித்தம் என்றாலும் சித்ரா பவுர்ணமிக்கு வணங்குதல் கூடுதல் சிறப்பு
அங்கே உங்களுக்கு ஞானம் வாய்க்கும், பார்க்கும் பார்வையும் சிந்தையும் சரியாகும், எது சரியான தெளிவோ அது உங்களுக்கு கிடைக்கும், அதனால் பாதைகள் செம்மையாகும் எல்லா காரியமும் சித்தியாகும்
வேலை அங்கு வழிபட்ட பின் அடுத்து செல்லவேண்டிய ஆலயம் முக்குணம் முருகன் அலயம்
அதுதான் முருகப்பெருமான் தன் மயிலை நிறுத்திய இடம், முக்குணம் என்பது ஆன்மம் கண்மம் மாயை எனும் மூன்று மலங்களையும் அப்படியே ரஜோ குணத்தையும் சொல்வது
இந்த மூன்று நிலைகளையும் மூன்று குணங்களையும் கடந்தால் மோட்சம் அடையலாம், இந்த மூன்று குணங்களை ஒழித்தால் எல்லாம் கடந்த நிலைக்கு செல்லலாம் என்பதே அங்கே முக்குணம் என பெயரிட்டு மயிலை முருகப்பெருமான் நிறுத்திய தத்துவம்
மயிலை முருகப்பெருமானின் வாகனமாக வைத்ததில் அர்த்தம் ஆழமானது
மயில் முருகனை சுமந்தது என்பது ஆத்மா முருகனை மனதில் சுமக்க வேண்டும் என்பதை குறிப்பது
பறவைகளில் அழகானதும் ஈர்ப்புமிக்கதுமான மயில் , உயிர்களில் சிறந்ததான மானிடரின் ஆன்மாவுக்கு குறியீடானது. விரிந்த தாமரையினை ஞானத்தின் குறியீடாக்கிய இந்துமதம் விரிந்த மயில் தோகையினை மனிதனின் ஞான விரிதலின் தன்மைக்கு காட்டிற்று
யோகத்தில் சக்கரங்கள் துலங்கி ஞானதாமரை மலர்வது போல ஞான தோகை என மயிலை காட்டிற்று
முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் அவர் கயிலாயத்தில் இருந்து ஞானபழத்துக்கு சண்டையிட்டு மயிலில் பழனிக்கு வந்தார் என்பது ஆத்ம ரகசிய தாத்பரியம்
ஆம், சூட்சுமமான ஆத்ம ரகசியங்களை இது சொல்கின்றது, விநாயகர் பழம் வாங்கினார் முருகன் மயிலோடு ஊர் சுற்றினார் என்பதல்ல விஷயம், நுணுக்கமான ரகசியங்களை கொண்ட காட்சி அது
அந்த திருவிளையாடல் காட்சி மயிலை நம் ஆத்மாகவும் முருகன் ஞானபழத்தை தேடி உலகெல்லாம் சுற்றுவதை நம் பிறவியாகவும் காட்டுகின்றது
ஆம், கயிலாயத்தில் இருந்து மயில் கிளம்பிற்று என்பது ஜீவாத்மா அந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து பூமிக்கு வந்ததை காட்டும்
ஒவ்வொரு ஆன்மாவும் பரமாத்மாவில் இருந்து வருகின்றது, அது ஞானம் தேடி அலைகின்றது அது கிடைக்காமல் பிறவி முடியாது என்பதே அந்த காட்சியின் தத்துவம்
இந்த காட்சியில் மயில் முருகனை சுமப்பதாக சொல்லபடுவது முருகனை சுமந்தால் நம் பிறவி பிணி அகலும், ஞானம் கிடைக்கும்
அந்த மயில் முருகனோடு சுற்றி மறுபடியும் கயிலாயம் அடைந்தாலும் ஞானபழமில்லை என மறுபடி வெளியேறியது அதன் கர்மா முடியவில்லை என்பதை குறிக்கின்றது
அந்த கர்மா பின் முருகன் தன் கடமைகளை எல்லாம் முடித்து அவதார நோக்கம் முடிந்தபின்பே நிறைவேறிற்று, எல்லா காட்சியிலும் மயில் அவரை சுமந்தது
சூரன் மயில் வடிவாகி முருகனை பணிந்தான் என்பது ஆத்மா லவுகீக மாயைகளை களைந்து முருகனை ஏற்றுகொண்டால் ஜெயம் என்பதை சொல்வது
எந்த ஆத்மா முருகனை சுமந்து தன் கர்மங்களை செய்யுமோ அந்த ஆத்மா கயிலாயம் ஏகும், முருகன் இல்லாத ஆத்மா தன் பிறவியினை முடித்து முக்தி அடையாது
மயில் தோகை விரிப்பது போல மானிட ஆத்மாவின் ஞானம் துலங்க வேண்டும், அந்த ஞானத்தில் முருகனை அந்த ஆத்மா சுமக்க சுமக்க அது தன் பிறவி கடமை அல்லது கர்மாவினை எல்லாம் முடித்துவிட்டு பரமாத்வாவோடு இணையும்
மனமே நீ முருகனை சுமப்பாயாக, உலகின் எல்லா ஈர்ப்புகளையும் இழுக்கும் மயில் போல எல்லா ஆசைகளிலும் வீழும் மனமே நீ முருகனை சுமப்பாயாக, அந்த முருகனை சுமந்தால் உன் கர்மா தீரும் முக்தி பாக்கியம் கிட்டும் என்பதே அந்த ஆலயத்தின் தாத்பரியம்
அங்கே முருகப்பெருமான் ஆத்மாவுக்கு அருள்பாலிக்கின்றார், அங்கே ஆத்மாவுக்கு ஒரு திருப்தி கிடைக்கும், ஆத்ம திருப்தி கொண்டவனை விட நிறைவானவன் யாருமில்லை
அந்த முக்குணம் ஆலயம் சென்றுவழிபட்டு ஆத்ம நிறைவினை பெற்றுகொள்ளலாம்
கடைசியாக ஈசூர் எனப்படும் சேவல் கொடிக்கான ஆலயம், இதுவும் அதன் அருகில்தான் அமைந்துள்ளது
ஈசனூர் என்பது ஈசூர் என திரிந்துவிட்டது என்பார்கள், மிக மிக தொன்மையான முருகப்பெருமான் ஆலயம் இது, இங்கே சேவல் கொடி விஷேஷம்
ஏன் சேவலை முருகப்பெருமான் கொடியில் வைத்தார்கள்?
பறவை இனங்களில் தனித்து நிற்பது சேவல்
அது விழிப்பானது, அதிகாலையிலே எழுந்து எல்லோரையும் எழுப்பும் குணம் கொண்டது, போர்குணம் அதிகமானது, எளிதில் பின்வாங்காதது, தலமையேற்று செல்லும் சக்தி கொண்டது, மறைந்திருக்கும் விஷயங்களை கிளறி வெளி கொண்டுவரும் இயல்பு அதனுடையது
அந்த சேவலின் குணத்தை கவனமாக படித்த ரிஷிகள் முருகனின் கொடியின் அடையாளமாக அதை வைத்தார்கள்
ஆன்மாவுக்கு இருக்க வேண்டியவை வைராக்கியம், விழிப்பு, மறைந்திருப்பதை தேடுதல், தைரியம் என சில குணங்கள் அந்த குணங்களை கொண்ட ஆத்மா ஞானத்தை அடைந்து முக்தியடையும்
அதைத்தான் சேவல் கொடி தத்துவம் சொல்கின்றது
முருகப்பெருமானை நினைத்து தவமிருப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல்கள் வரும், முக்தி என்பது எளிதில் கைகூடமுடியாதபடி பெரும் சிக்கல்களெல்லாம் வரும், அந்த சிக்கல்களை எதிர்கொள்ள வைராக்கியம் வேண்டும்
முருகனை வழிபட்டால் அந்த வைராக்கியம் எனும் உறுதி இடைக்கும்
அந்த நிலையினை வைராக்கியமான தவம் கொடுக்கும் முருகன் அருள் அந்த உறுதியினை அருளும்
முருகப்பெருமானிடம் வேண்டினால் அந்த மாயைகளை வெல்லும் வைராக்கியமும் தைரியமும் ஆற்றலும் நமக்கு கிடைக்கும்
முருகனை வழிபட்டு சரணடைந்தால் ஆத்மாவுக்கு பெரும் வைராக்கியம் வரும் , வைராக்கியமும் உறுதியும் பின்வாங்காத குணமும் விழிப்பும் கொண்ட ஆத்மா எல்லா இடையூறுகளையும் உடைத்து முக்தி அடையும்
ஆம், சேவல் போல விழிப்பும் வைராக்கியமும் போராடும் உறுதியும் முருகப்பெருமான் தருவார், அதுதான் சேவல் கொடியின் தாத்பரியம்
ஆக இந்த சித்ரா பவுர்ணமியில் இந்த முருகன் தலங்களில் வணங்குதல் சிறப்பு
இவை மிக மிக பழமையான தலங்கள், அறுபடை வீடுகளை போல மிக மிக தொன்மையானவை, மிக சக்தியும் வல்லமையும் அருளும் கொண்டவை
முருகப்பெருமானே தானே தன் வேல், மயில், சேவல் கொண்டு நேரடியாக ஸ்தாபித்த ஆலயங்கள் இவை
ஆனால் அதிகம் வெளிதெரிவதில்லை, மிக சிறிய வழமையான ஆலயங்களாக அவை எண்ணபடுகின்ற்து அது தவறு
இந்த ஆலயங்கள் மகா சக்தி மிக்கவை, முருகப்பெருமானும் அவரின் சித்தர்களும் அருளாசியும் எல்லா பலமும் வளமும் ஆசியும் தரும் ஆலயங்கள்
முடிந்தவர்கள் இங்கே சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம், முடியாதவர்கள் திருவண்ணாமலை செல்லும் போது கட்டாயம் காணவேண்டிய முருகப்பெருமானின் தலங்கள் இவை
இவை முருகப்பெருமானால் உருவாக்கபட்டு, தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் ஒடி வந்து வணங்கி வரம் பெற்ற இடம், அவர்கள் குறை தீர்ந்து அப்படியே அங்கு கையேந்தி வரும் மக்களுக்கு வரமருள காத்து நிற்கும் புனித ஸ்தலம்
இங்கெல்லாம் சென்று வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் பாடி வழிபட வழிபட பெரும் பெரும் பலன்கள் உண்டு, அருணகிரியார் மிக மிக சூட்சுமமாக இந்த ஆலயங்களை பற்றித்தான் அதை பாடினார்
அந்த தலங்களில் சென்று அவற்றை பாட பாட நல்ல பலன்களை பெறலாம்
மனதார இந்த தலங்களை நினையுங்கள், வணங்குங்கள் அந்த முருகப்பெருமானே உங்களை அங்கு அழைத்து சென்று அருளாசி வழங்குவார் இது சத்தியம்
( இந்த மூன்று தலங்களும் வள்ளிமலைக்கு முருகப்பெருமான் வள்ளியினை மனம்புரிய வந்தபோது உருவானவை
முருகப்பெருமான் சில திருவிளையாடல்களை செய்யும்போது இந்த அடையாளங்களை அவர் விட்டுசென்றார், அதுவும் ஒரு திருவிளையாடல், பக்தர்கள் தன் அடையாளங்களை வழிபட செய்த ஏற்பாடு
முருஜபெருமானின் மயில் துள்ளி விளையாடிய இடம் அந்த முக்குணம், அதனால் பாறையில் மயிலை பொறித்துவைத்து அன்றே வழிபட்டார்கள் ரிஷிகள்
அம்மலை ஏகபட்ட ரிஷிகளும் ஞானியரும் யோகியரும் வந்து தியானம் செய்து ஞானம் பெற்று உலாவுமிடம், சூட்சுமமாக ஏகபட்ட ரிஷிகள் அங்கு இன்றும் உண்டு
இங்கே மயில் விருத்தம் பாடுவது மகா விஷேஷமானது
இந்த மூன்று ஆலயங்களிலும் நடக்கும் விழா, அதுவும் அந்த பங்குனி உத்திர விழா சிறப்பானது
அதிலும் இந்த முக்குணம் மகா முக்கியமானது
இன்றும் அங்கே பங்குனி உத்திர திருவிழாவில் அப்பகுதி மக்கள் கிராம மக்கள் முருகன் சார்பாகவும், மலைவாழ் பழங்குடி மக்கள் வள்ளிசார்பாகவும் அந்த திருகல்யாணத்தை முடித்து வைப்பார்கள்
ஆம், கிராம மக்களில் எல்லா சாதியும் உண்டு அவர்கள் ஆதிவாசி இன்னும் பழங்குடி மக்களை தேடி சென்று பெண்கேட்கும் காட்சி உண்டு
ஆண்டுதோறும் உண்டு, எல்லா சாதியினரும் ஒன்றாக முருகப்பெருமானுக்கும் வள்ளிக்கும் திருமணம் செய்துவைப்பார்கள்
கவனிக்கவேண்டியது, இந்துமதம் சாதிரீதியான மதம் எனும் பெரும் பொய் இங்கே அடிபடுகின்றது, கோவில் அர்ச்சகர் பிராமணர் உள்பட எல்லோரும் மலைவாழ் மக்களிடம் சென்று பெண் கேட்பதும் அவர்கள் எல்லோரும் ஆலயத்துக்கு வருவதும் என்றோ இந்துமதம் கண்ட சமூக நீதி, சமத்துவம்
ஆம், இந்துமதமே உலகில் முதல் சமத்த்துவத்தை சமூகநீதியினை சொன்னது, முருகப்பெருமான் வள்ளி திருமணம் எனும் பெயரில் அது இன்றும் அங்கே சாட்சியாக நிற்கின்றது என்பதை இந்த மூன்று ஆலயங்களும் அங்கே நடக்கும் வள்ளிதிருமணமும் கண்முன் காட்டிகொண்டே இருக்கின்றது)