சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்
வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது.
கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன.
பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி என்று உண்டு.
இக்காலகட்டம் மிகப் பழையது.
அப்படி செம்பழஞ்சி என்றொரு ஊர் நம்பியாற்றின் தென் கரையில் இருந்தது. சேர மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்ட காலத்தில் அங்கொரு சாஸ்தா கோவில் இருந்தது. அது அந்த மன்னர் பரம்பரைக்கும் பலருக்கும் குலதெய்வமாய் இருந்தது.
அதன் பழமை ஆதிச்சநல்லூர் காலத்துக்கும் முந்தையதாக இருக்கலாம் என்கின்றது ஆய்வு. அதை தன் குலதெய்வமாக வணங்கி வந்தது மன்னர் குடும்பமும் மக்களும்.
இந்நிலையில் பாண்டிய எழுச்சிக்குப் பின் சேரநாடு சுருக்கப்பட்டு அந்த பந்தள மன்னர் குடும்பம் மேற்கு மலைக்கு அப்பால் நிறுத்தப்பட்டது, இப்பகுதி பாண்டியரோடு வந்தது.
பந்தள அரச குடும்பத்தில் அவதரித்த ஐயப்பன் காலத்தில் சில சிக்கல்கள் வந்தன.
ஐயப்பன் சபரிமலைக்கு சென்றபின் இளையவர் அண்ணனுக்கு இல்லாத அரசு எனக்கு வேண்டாம் என கிழக்கு நோக்கி வந்தார். அந்த அரச குடும்ப இளவரசர், வந்தவர் அவர்களின் மூதாதையரின் ஆலயமான இந்த சாஸ்தா கோவிலில் அமர்ந்தார்.
அதிலிருந்து அந்த ஆலயம், நம்பியாற்றின் தென்கரையில் மகாராஜாவும் வந்து சேர்ந்ததால் தென்கரை மகராசா வழிபட்ட ஆலயமாயிற்று. அந்த பெயரே நிலைத்தும் விட்டது.
இப்படி இது பாண்டியருக்கு முக்கிய தெய்வம். அதுவும் சேரநாடு சென்றுவிட்ட மக்கள் அனைவருக்கும் குலதெய்வம் என்பதால் பங்குனி உத்திரம் அங்கு நடக்கும் அளவு இன்னொரு ஆலயத்தில் நடக்காது, மீனாட்சி திருக் கல்யாணம் போல பெரும் கூட்டத்துடன் நடக்கும் விழா அது.
அந்த ஊர் இப்பொழுது சித்தூர் என அழைக்கப்படுகின்றது. வள்ளியூரில் இருந்து சில கல் தொலைவு.
இந்நிலையில் நெடுங்காலத்துக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு கொடிமரம் வைக்க மரங்களை மேற்கே நம்பியாறு புறப்படும் இடத்தில் வெட்டினார்கள். அப்பொழுது மிக நல்ல மரம் ஒன்று நம்பியாற்றில் விழுந்து இந்த ஆலயம் பக்கம் ஒதுங்கியது.
அதை யாராலும் அசைக்க முடியவில்லை. முடிவில் அதன் கேரள தொடர்புபடி பிரசன்னம் பார்த்ததில் தான் காலத்தால் மூத்த தெய்வமென்றும் தனக்கு திருவிழா முடிந்த பின்பே திருச்செந்தூரில் கொடியேற வேண்டும் எனவும் சாஸ்தா உத்தரவு வந்தது.
அப்படியே தேர் செய்து திருவிழா நடத்தினார்கள். இன்றும் தேர் உள்ள ஒரே ஒரு சாஸ்தா கோவில் அதுதான்.
திருச்செந்தூர் முருகன் போல சாஸ்தா கையில் வேலும் கொடுத்தார்கள், வேல் கொண்ட ஒரே சாஸ்தா அவர்தான்.
இன்று கால மாறுதலில் இங்கு மாசியிலே அதாவது திருச்செந்தூர் ஆலய மாசித் திருவிழா தொடக்கம் அன்றே கொடியேற்றி மரியாதை செய்வார்கள், ஒரு மாதம் கழிந்து பங்குனி உத்திரம் அன்று திருவிழா நடந்தாலும் சாஸ்திரபடி திருச்செந்தூர் விழாவுக்கு முந்தைய மரியாதை இங்கேதான் கொடுக்கப்படும்.
அப்படிப்பட்ட மிகப் பெரும் வரலாறுகளும் சக்தியும் கொண்ட ஆலயம் அது. இப்பொழுதும் லட்சக்கணக்கான மக்களுக்கு சித்தூர் சாஸ்தா குலதெய்வம். திருச்செந்தூர் செல்லும் பக்தர் எல்லோரும் இங்கு வராமல் சென்றால் முழு பலன் கிட்டாது என்பதும் நம்பிக்கை.
அப்படிப்பட்ட சித்தூரில் 7 வீடுகள்தான் உண்டு. ஏன் அப்படி என்றால் அங்கே இருக்கின்றது ஒரு வரலாறு.
அந்த சாஸ்தாவிடம் பிள்ளைவரம் கேட்டாள் ஒரு தாய். அவள் நெல்லை மாவட்டம் வள்ளிக்களந்தை ஊரை சேர்ந்தவள் என்கின்றார்கள். சங்கரன் கோவிலில் அவள் குழந்தை வரம் கேட்ட பொழுது அவளுக்கு சித்தூர் சாஸ்தாவிடம் சென்று வணங்க குறிப்பு வருங்கின்றது. அங்கே வருகின்றாள் அப்பெண், வந்து மன்றாடுகின்றாள்.
சாஸ்தாவும் வரம் கொடுத்து, தான் வழங்கும் பிள்ளைகளில் ஒன்றை ஆலயத் திருப்பணிக்கு விட வேண்டும், அக்குடும்பம் இந்த ஊரிலே இருந்து தன் கோவிலை காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் சாஸ்தா.
ஒரு குழந்தை என்ன எல்லா குழந்தைகளும் உமக்கே என சத்தியம் செய்தாள் அப்பெண், சாஸ்தா ஏற்றும் கொண்டார்.
ஆனால் வரம் பெற்றதோடு அதை மறந்தாள். அவளுக்கு 6 ஆண்களும் 1 பெண்ணுமாக 7 குழந்தைகள் கிடைத்த பின் சாஸ்தாவும் அவர் கொடுத்த வரமும் அவளுக்கு மறந்து விட்டது, தாய்ப்பாசம் என்பது அப்படித்தான்.
தான் தவமிருந்தது சங்கரன்கோவிலில் என்பதால் அவள் பற்று அங்கேயே திரும்பிற்று. சித்தூர் சாஸ்தாவினை அவள் மறந்தாள். ஆனால் சாஸ்தா மறக்கவில்லை.
6 ஆண்களும் 1 பெண்ணுமாக வளர்ந்து ஆளானார்கள். அவர்கள் மரபு படியும் தங்கை திருமணம் தொடர்பாகவும் நிரம்ப பணம் அவர்கள் 6 பேருக்கும் தேவை ஏற்பட்டது, கொள்ளை அடிக்க திட்டமிட்டார்கள்.
அவர்களுக்கு சித்தூர் கோவிலில் ஏகப்பட்ட செல்வம் இருப்பதாகத் தெரியவர அங்கே கன்னம் வைக்கின்றார்கள், எல்லாம் சாஸ்தாவின் விளையாட்டு.
ஒரு நாள் சித்தூரை அடைகின்றார்கள். இரவில் கொள்ளை அடிக்க வழிபார்த்துவிட்டு ஆற்றுக்கு அப்பக்கம் அமர்ந்து கிளியாந்தட்டு எல்லாம் ஆடுகின்றார்கள். அதற்கு 8 பேர் தேவை என்பதால் அப்பக்கம் நடந்து சென்ற ஒருவனை அழைக்கின்றார்கள், அவனும் விளையாடி அவர்களோடு உறவாகின்றான்.
நன்கு பழகியதால் கோவில் பற்றி கேட்கின்றார்கள். அவன் பொன்னும் மணியும் நிரம்ப இருப்பதாகவும் தானும் அவர்களுக்கு வந்து வழி காட்டுவதாகவும் சொல்கின்றான், மகிழ்ந்த அவர்கள் இரவானதும் அவனையும் அழைத்து செல்கின்றார்கள்.
உள்ளே புகுந்ததும் உடன் வந்தவன் விஸ்வரூபமெடுக்கின்றான், ஆம் அது சாஸ்தா, அவரேதான்.
அந்த வெளிச்சத்திலும் உக்கிரத்திலும் 6 பேரும் பார்வை இழந்து விழுகின்றார்கள், அந்நேரம் அக்கோவிலின் பாதுகாவலர்கள் தங்கும் “வில்வ வனம் பூரு” எனும் பாசறையில் இருக்கும் மறவர் அதிபதிக்கு கனவில் சில அறிகுறி தெரிந்து அவர்கள் ஆலயம் விரைந்து 6 பேரையும் கட்டி வைக்கின்றார்கள்.
பின் தகவல் அந்த அன்னைக்கும் அவள் மகளுக்கும் தெரியவர இருவரும் விரைந்தோடி வருகின்றார்கள்.
அவர்கள் வந்து சேரும் முன்பே விசாரணையில் இவர்கள் கொள்ளை அடிக்க வந்த உண்மை தெரிகின்றது.
அவர்களுக்கு என்ன தண்டனை என சாஸ்தாவிடம் கேட்க, இவர்கள் கொல்லப்பட்டு அவர்கள் 6 பேரும் இவர்களை தேடிவரும் தங்கையுமாக 7 பேரும் இக்கோவிலுக்கு காவலாக இங்கே நிற்க வேண்டும் என உத்தரவு வந்தது.
6 பேரும் தலை வெட்டப்பட்டனர், தாமதமாக வந்த தாயும் மகளும் அதைக் கண்டு மயங்கி விழ அந்த இடத்திலேயே உயிர் விட்டாள் மகள்.
பின் 7 பேரும் காவல் தெய்வமாக அங்கே சாஸ்தாவால் நிறுத்தப்பட்டனர், அவர்கள் பீடங்கள் இப்பொழுதும் உண்டு.
தான் கொடுத்த வாக்கை மறந்துவிட்ட அந்தத் தாய், சாஸ்தா கொடுத்த குழந்தைகளை அவரே அவர் சொன்னது போல் எடுத்துக் கொண்டார் என்பதை உணர்ந்தாள், ஆலயத்தில் பதிலேதும் சொல்லவில்லை.
மெல்ல வெளியே வந்தாள், ஆயினும் அவள் தாயுள்ளம் துடித்தது. என் பிள்ளைகளை கொல்வதை வேடிக்கைப் பார்த்த இந்த ஊரில், என் 7 பிள்ளைகளும் சாகக் காரணமான இந்த ஊரில் 7 வீடுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என சாபமிட்டுச் செத்தாள்.
அந்த சாபமோ என்னமோ மிகப்பெரும் சக்தி வாய்ந்த கோவிலும், மிக மிகப் பழமையான கோவிலும் கொண்ட அந்த ஊர் பெருகவில்லை.
சபரிமலைக்கும் திருச்செந்தூருக்கும் சற்றும் குறையாத வல்லமையும் பெருமையும் அருளும் கொண்ட சாஸ்தா அமர்ந்திருக்கும் அந்த ஊர் பெருகவில்லை.
காலம் மாற மாற எவ்வளவோ மாறின, ஆனால் அந்த ஆலயம் அப்படியே இருக்கின்றது. அந்த ஊரும் 7 வீட்டுக்கு மேல் பெருகவில்லை.
இவ்வளவுக்கும் சபரிமலை, சூரசம்ஹாரம் போல மிகப்பெரும் கூட்டம் திருவிழாவில் கூடும் ஆலயம் அது. அனுதினமும் கூட்டத்துக்கு குறைவில்லை.
நெல்லை, குமரி என மதுரைக்கு தெற்கே முதல் பந்தளம் வரை மிகப்பெரும் மக்கள் கூட்டத்தின் குலதெய்வமாய் அவர் வீற்றிருந்தாலும் அந்த ஊர் பெருகவில்லை.
காலமாற்றத்தில் இப்பொழுதுதான் 7 வீடுகளைத் தாண்டி சில வீடுகள் வந்தன என்றாலும் மக்கள் வசிக்கும் வீடு 7 வீட்டைத் தாண்டாது.
ஆக அந்த பெண்ணின் சாபம் அப்படியே இருக்கின்றது என்பதும், அந்த தென்கரை மகராசாவும் 7 வீடுகளுக்கு மேல் அங்கு இருக்க விரும்பாமல் தனிமையினை விரும்புவார் என்பதும் புரிகின்றது.
அந்த வல்லமையான சாஸ்தா இருக்குமிடம் சாபத்தால் தாக்கப்படுமா? சாஸ்தா எனும் பெரும் தெய்வத்தால் அந்த சாபத்தை நிவர்த்தி செய்ய முடியாதா?
முடியும், ஆனால் செய்யவில்லை ஏன்? அதிலும் விஷயம் இல்லாமல் இல்லை.
அந்த தென்கரை மகராசா என்பவர் ஐயப்பனோடு வளர்ந்த சகோதரர், ஐயப்பனின் அனைத்து இயல்புகளும் அவருக்கும் உண்டு.
உண்மையில் அந்த ஆலயம் இருக்கும் பகுதி சபரிமலை போல மகா புனிதமானது என்றும், அங்கு தங்க மிக மிக சுத்தமான ஆச்சாரங்களும், பூஜைகளும் புனஸ்காரமும் தேவை என்பதுமே விஷயம்.
அப்படி ஒரு குடும்பம் தன்னை கவனித்துக் கொள்ள பிள்ளை வரம் கொடுத்து இருக்கின்றார். அவர்கள் கொள்ளையாரான பட்சத்தில் காவல்காரராய் நிறுத்திக் கொண்டார்.
எப்படி சபரிமலை தனிமையினை தனித்துவத்தை விரும்புமோ அதைத்தான் இந்த சித்தூர் ஆலயமும் விரும்புகின்றது, அதுதான் விஷயமே அன்றி வேறல்ல.
சபரி மலைக்கு இருக்கும் விரதத்துடன், அந்த கடும் விரத பூஜையுடன் தவமிருந்து இந்த சாஸ்தாவினை தரிசித்தால் சபரிமலைக்கு சென்ற பலன் அப்படியே கிடைக்கும்.
சித்தூர் சாஸ்தா ஆலயமும், சபரிமலை சன்னிதானமும் இரட்டை கோவில்கள், சபரிமலைக்கு இன்னும் கட்டுப்பாடு நீடிக்கின்றது, சித்தூர் ஆலயத்தினை அதன் சாஸ்தாவே கட்டுப்பாடுகளை விதித்து வழி நடத்தி தனிமை தவமிருக்கின்றார்.
திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இந்த சாஸ்தாவினை சந்திக்காமல் திரும்பினால் உங்களின் யாத்திரையில் எக்காலமும் குறைவு உண்டு. வள்ளியூருக்கு மிக அருகில் இருக்கும் இந்த தென்கரை மகராசா ஆலயத்தில் சாஸ்தாவினை வணங்கிவிட்டு அப்படியே வள்ளியூர் முருகனை வணங்கிவிட்டு திருச்செந்தூர் ஏகுங்கள், எல்லா பலன்களும் கேட்ட வரங்களும் உங்களை வந்தடையும்.
குழந்தைவரம் முதல் எல்லா வரமும் அருளும் கோவில் அது..
அந்த சாஸ்தா கோவில் மிக சுவாரஸ்யமானது. தன்னை வணங்கிவிட்டு பந்தளம் சென்றாலும் அந்த ராஜவம்சத்து மன்னனை தானே அழைத்து கொண்டார்.
தனக்கு நேர்ந்துவிட்ட பிள்ளைகளை அந்த அன்னை கொடுக்க மறந்தபோதும் தானே ஈர்த்தும் கொண்டார்.
ஆற்றில் ஓடிய நீரில் மிதந்த மரத்தை இழுத்து வைத்து திருச்செந்தூர் ஆலய மரியாதையில் தனக்கான பங்கை எடுத்தும் கொண்டார்.
தனக்கான குடும்பமோ வாரிசோ பொருளோ உரிமையோ எங்கிருந்தாலும் அவர் விடுவதே இல்லை என்பதுதான் அக்கோவிலின் உண்மையும், சத்தியமுமாகும். இன்றும் கூடும் லட்சகணக்கான கூட்டம் அதைத்தான் சொல்கின்றது.
பங்குனி உத்திரம் மிக பிரம்மாண்டமாக நடக்கும் ஊர் அது. ஏழே வீடுகளைக் கொண்ட அந்த ஊருக்கு லட்சகணக்கான மக்கள் வந்து பங்குனி உத்திரத்தை கொண்டாடுகின்றார்கள் என்பது இந்துக்களின் வரலாறும் தெய்வங்களும் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதையும் யுகங்கள் கடந்தாலும் அவற்றின் சக்தியும் வரலாறும் மாறாது என்பதையும் அழகாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.