சிவ வாக்கியார் பாடல்கள் 11 to 20
சிவ வாக்கியார் : 11
‘நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“நான் ஏது நீ ஏது நடுவில் நின்றது ஏதடா
கோன் ஏது குரு ஏது கூறிடும் குலா மரே
ஆனது ஏது? வழிவது ஏது? வப்புறத்தில் அப்புறம்
ஈனது ஏது ராம ராம ராம என்ற நாமமே”
பாடலின் பொருள் இதுதான்.
நான் என்பது ஏது?, நீ என்பது ஏது? நமக்கு இடையில் இருக்கும் பந்தமோ உறவோ இல்லை எந்த பினைப்பும் ஏது? மானுடன் எனும் உறவும் ஏது?
அரசன் எது? குரு எது சொல்லமுடியுமா அறியாமை மிக்கவர்களே (குலாமாரே), ஆதியாய் இருப்பது ஏது? உடலின் அழியாப் பொருளாய் இருப்பது ஏது? அப்புறம் அப்புறமாய் நின்ற பொருள் ஏது?
இழிவு (குறை) ஏது? எந்தக் குறையும் அறியாமையும் ஏது? ராம ராம ராம எனும் மந்திரத்தை சொல்லும்போது என்பது பாடலின் பொருள்.
குறையுள்ள மாந்தரே, ராம ராம ராம எனும் மந்திரத்தை மனமொன்றி ஜெபித்தால் நான் ஏது? நீ ஏது? பந்தபாசம் ஏது? அரசன் ஏது? குரு ஏது? அழிவது ஏது? அழியாதது ஏது? எப்போதும் நிற்கும் ஜோதி ஏது, குறைகள் எது, நிறைகள் ஏது? என்பது பாடலின் பொருள்.
ராம நாமத்தின் மகிமையினை மீண்டும் சொல்கின்றார் சிவாக்கியார்.
ராம ராம ராம எனும் மந்திரத்தை சொல்ல சொல்ல பெரும் ஞானம் வாய்க்கும், அந்த ஞானத்தில் நான் என்பது ஒன்றுமில்லை, நீ என்பதும் ஒன்றுமில்லை, அரசனின் அதிகாரம் பற்றி வியக்க ஒன்றுமில்லை, குருவின் அறிவினைப் பற்றி ஆச்சரியபட ஒன்றுமில்லை.
அழிவது பற்றியோ, குறையுள்ள மானுடர் பறறியோ அச்சப்பட எதுவுமில்லை. எது நிரந்தரமானதோ அதை உணரவும் அடையவும் தயக்கமுமில்லை என்கின்றார்.
ராம ராமம் எல்லாம் கடந்த ஞான நிலையினைக் கொடுக்கும், அதைச் சொல்ல சொல்ல அறியாமை அகன்று ஞானம் பெருகும், அந்த ஞானத்தில் நான், அவன், அது, பந்தபாச மயக்கம், லௌகீக உலகின் அதிகாரம் அறிவு என எல்லாம் கடந்து எல்லாமே பரம்பொருளின் வடிவம், எல்லாமே பரம்பொருள் எனும் ஞானம் வாய்க்கும் என்பது பாடலின் பொருள்.
“ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்”
இந்த உடலும், ஆன்மாவும், மனமும் அதனால் உண்டாகும் ஆசை ஆகியவைகளில் சிவம் தானேயாகிக் கலந்து நிற்கும். எங்கும் சிவம். எதிலும் சிவம். அதாவது நீயும் சிவம் நானும் சிவம். விருப்பு வெறுப்பு சிவம். இன்பம் துன்பம் சிவம். உணர்ந்தால் அதுவே சிவமாகும் என்பது ஒளவை குறளின் பொருள்.
அந்தப் பொருளைத்தான் இங்கே சொல்கின்றார் சிவ வாக்கியார்.
ராம நாமம் என்பது எல்லா மாயைகளில் இருந்து ஒருவனை விடுவிக்கும், ஒருவனுக்கு எல்லாத் தெளிவையும் கொடுத்து எல்லாமும் பரம்பொருளே, இங்கே எல்லா வடிவிலும் அவனே நிற்கின்றான் , காணும் காணாதவை இருப்பவை இல்லாதவை, அதிகாரம் ஞானம் என எல்லாம் அவனே எனும் தெளிவினைக் கொடுக்கும் என்கின்றார் சிவ வாக்கியார்.
‘ஹஸ்தே க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி”
“கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம், நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்கும் சிவனை மஹா பாகவதனாக நினைக்கிறேன்” என்பது ஸ்லோகத்தின் பொருள்.
சிவன் என்பது யோக தத்துவ வடிவம், அந்த யோக தத்துவத்தின் ஆதார மந்திரமாக ராமநாமம் உள்ளது, ராம நாமமே முழு ஞானமும் அறிவும் முக்தியும் கொடுக்கும் மந்திரம் என்பது ஸ்லோகத்தின் பொருள்.
புராணத்தில் மிகச் சிறப்பான வரி ஒன்று உண்டு.
” ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர-நாமதத் துல்யம் ராம-நாம வரானனே”
இந்த ஸ்லோகம் சிவபெருமான் பார்வதியிடம் சொல்லிய ஸ்லோகம்.
அதன் பொருள் என்னவென்றால் “தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்தத் திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்குச் சமமானதாகும்”
இந்தப் பொருளைத்தான் மிக எளிய சொற்களுடன் ஆழ்ந்த பெருஞானத்துடன் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.
சிவ வாக்கியார் : 12
“சாத்திரங்கள் ஓதுகின்ற ச(த்த)ட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே”
இந்தப் பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரை போது உளம் மறித்து ஒக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே”
சாத்திரங்கள், மந்திரங்கள், வேதங்கள் என இடைவிடாமல் ஓதுவோரோ, சாஸ்திரம் அறிந்தவர்களே. எமன் வந்து நிற்கும் போது வியர்த்து வழிந்து உடல் இழுக்குமே, கடைசி மூச்சுக்குப் போராடும் நிலை வருமே, அப்போது உங்கள் சாஸ்திரமும் வேதமும் கூட வருமே?
ஒரு இமை பொழுதேனும் (மாத்திரை) உங்களுக்குள்ளே இருக்கும் சக்தியினை அறிந்து கொள்ள முயற்சி செய்தால், சாத்திரங்களைச் சுமக்கும் பையான உங்கள் உடலுக்கு நோய் ஏது? சக்திகள் பெருகி பெருகி சித்தி அடைவீர்கள் என்பது பாடலின் பொருள்.
சட்டநாதரே என்றால் சாஸ்திர விதிகள் சட்டம் அறிந்த மக்களே எனப் பொருள்.
சிவவாக்கியார் இங்கே தேர்ந்த ஞானத்தைச் சொல்கின்றார், வேதம் சொல்லும் மக்களே கடைசி காலத்தில் வேதம் வந்து காக்குமோ எனப் பட்டவர்த்தனமாக கேட்கின்றார்.
அதற்காக வேதங்கள், மந்திரங்களெல்லாம் அவசியமில்லை எனச் சித்தர் சொல்லிவிட்டார் அவை எல்லாம் கைவிடப்படவேண்டும் என்பது கொஞ்சமும் சரியான பொருள் அன்று.
சித்தர்கள் எப்போதும் மறைமொழியில் ஞானப்பாஷையில் பேசுபவர்கள், அதனால் சித்தர் என்ன சொல்கின்றார் என ஆழமாக கவனிக்க வேண்டும்.
வேதங்கள், மந்திரங்கள், புராணங்கள் என எதை ஓதினாலும் அதன் பொருளை அறிந்து இறைவனை அறிந்து ஓதுங்கள், அந்த வேதங்களும் மந்திரங்களும் உங்களில் இறைவனைக் காண ஏற்படுத்தப்பட்டவை. அதனால் வேத மந்திரங்களை வாய் வடிவில் மட்டும் முணுமுணுக்காமல் நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து அதன் உண்மை பொருளோடு சொல்லுங்கள்.
அதைச் சொல்ல சொல்ல உங்களுக்குள் இருக்கும் இறைசக்தியினை நீங்கள உணர்வீர்கள், மரண காலம் வந்தபோதும் அஞ்சமாட்டீர்கள், பெரும் ஞான நிலையில் எதிர்கொள்வீர்கள் என்கின்றார்.
சித்தர் சொல்லும் ஞானம் அபாரமானது.
இங்கு எவ்வளவு பெரிய வேத சாஸ்த்ரி என்றாலும், எவ்வளவு பெரிய பண்டிதர் என்றாலும் மரணத்துக்கு அஞ்சுவார்கள், மானுட சுபாவம் அவர்களையும் ஆட்டிவைக்கும்.
இறந்தபின் என்னாகுமோ பகவானிடம் செல்வோமோ? இதுவரை பகவானைக் காணவில்லையே? இவ்வளவு நாள் வழிபட்டும் அவர் தென்படவில்லையே, இந்நிலையில் மரணம் வந்தால் என்னாகுமோ? எனும் கலக்கம் அவர்களிடம் இருக்கும்.
மிகத் தேர்ந்த வேத ஞானியர் கூட இப்படிக் குழம்புவது உண்டு.
சித்தர் அவர்களைத்தான் சொல்கின்றார், வேதம் மந்திரமெல்லாம் இறைவனை வழிபடும் ஏற்பாடு, அதன் பொருளை உணர்ந்து நெஞ்சார தியானித்தால், வேதம் சொன்ன வழிகள் படி மூச்சை அடக்கித் தியானித்தால் ஒருவனால் இறைவனை உணரமுடியும், அப்படிச் செய்தால் வாழ்வு செம்மையாகும், உடலும் நோயற்றுப் போகும்.
இந்துக்களின் வேதமும் உபநிஷதங்களும் என்ன போதிக்கின்றன என்றால் “அகம் பிரம்மாஸ்மி” என்பதையே போதிக்கின்றது அதனால் தெய்வம் உங்களில் இருப்பதை உணருங்கள் என்கின்றார்.
“ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” என்பது மாணிக்க வாசகர் வாக்கு.
இந்தப் பொருளை திருமூலரும் பாடுகின்றார்.
“எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே”
கண்ணாடியில் தெரியும் சுடர் போல் சிவன் தன்னுள் கலந்து நிற்கின்றார் என்கின்றார் திருமூலர்.
கைவல்ய நவநீதம் எனும் பாடல்தொகுப்பின் 2 ஆம் அதிகாரம் 11 ஆம் பாடல் இக்கருத்தைத் தெளிவாகச் சொல்கின்றது.
“உன்முகம் போல்கண் ணாடிக் குள்ளொரு முகம்கண் டாற்போல்
சின்மய வடிவின் சாயை சித்துப்போல் புத்தி தோன்றும்
நின்மனோ விருத்தி அந்த நிழல்வழி யாய்உ லாவும்
தன்மநன் மகனே இத்தைத் தானன்றோ ஞானம் என்பார்”
ஆம், கண்ணாடியில் சுடரைக் காணுதல் போல யோக நிலையில் தன் ஆத்ம சுடரைக் காணுதலே ஞானம் என்கின்றது இப்பாடல்.
இதைத்தான் தன்னுள் ஞான சுடரைக் காண வேண்டும் என்பதைத்தான் போதிக்கின்றார் சிவவாக்கியார்.
“சிவ சிவ” என்பதும் “ராம ராம ராம” என்பதும் “ஓம் நமசிவாய” என்பதும் “ஓம் நமோ நாராயணாய” என்பதும் வெறும் வாயளவில் சொல்லும் வார்த்தைகள் அல்ல.
அவற்றை மனதால் மனதின் ஆழத்தில் இருந்து தியானத்தில் சொன்னால் இறைவனை உள்ளே தரிசிக்கலாம் என்பது அவரின் போதனை.
சிவ வாக்கியார் : 13
“தூரதூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தவிப் பராபரம்
ஊருகாடுநாடுதேடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“தூர தூரந் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இப்பராபரம்
ஊரு காடு நாடு தேடி உழன்று தேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே”
அதாவது, எங்கோ காடும் மலையும் கடந்து இறைவன் இருப்பதாக சொல்வார்கள், அவன் எங்கோ தொலைவில் அன்று, இந்த உலகாக விண்ணாக எங்கும் பரந்த பிரபஞ்சமாக என விரிந்திருக்கின்றான், அதை அறியாமல் அவனைத் தேடும் ஊமைகளே, அவன் நேராக உங்களுக்குள் இருக்கின்றான் என்பதைக் கொஞ்சமேனும் அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள் என்பது சிவ வாக்கியாரின் போதனை.
அத்வைத தத்துவத்தின் சிகரத்தில் இருந்து பாடுகின்றார் சிவவாக்கியார், அதனால் கோவில்கள் காடு மலைகள் தாண்டி இருக்கும் புண்ணியஸ்தலமெல்லாம் செல்லவேண்டாம் எனச் சொல்கின்றார் எனத் தவறாக பொருள் எடுத்துவிடக் கூடாது.
அவை ஆன்மீகத்தின் படி நிலைகள், அவற்றைக் கடக்காமல் இறைவனை உணர அடைய முடியாது, காடு மலைகள் எனத் தேடித்திரிவதில் உடலுக்கும் மனதுக்கும் நன்மைகள் மிக அதிகம் எனச் செய்யப்பட்ட ஞானமான ஏற்பாடு அவைகள்.
சிவ வாக்கியார் என்ன சொல்கின்றார் என்றால் இதனோடு நின்றுவிடுதல் கூடாது அதைத் தாண்டி இறைவனை அடையவேண்டும், அந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கின்றார்.
“ஊமை காள்” என்பது அவர் சொன்ன சரியான வார்த்தை.
பக்திமார்க்கம், ஞானமார்க்கள் இரண்டும் ஒரு கட்டத்தில் வார்த்தையின்றி நிற்கும். அடுத்து என்ன எனத் தெரியாமல் ஒருவித நிறைவடையாமல் தவிப்பில் நிற்கும்.
அந்த இடத்தை “ஊமை” எனச் சொல்லி, அந்த இடத்தை கடந்துவாருங்கள், தெய்வம் உங்களில் உண்டு என்பதை உணருங்கள் என தங்கிச் சொல்கின்றார் சிவ வாக்கியார்.
“அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்”
அதாவது, சிவம் எல்லா வடிவிலும் எல்லா உயிரிலும் காண்பவை காணாதவை என எங்கும் வியாபித்திருக்கின்றது, அதனை உணராமல் அதனை அறிந்து கொள்ளாமல் சிவனைத் தேடினால் ஒருகாலமும் அந்தப் பரம்பொருளை அடைய முடியாது என்பது பொருள்.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே” என்கின்றார்.
தன்னை அறிந்தவன் தன்னிலே அர்ச்சிக்க கூடிய சிவனைக் காண்கின்றான் என்பது பொருள்
” அர்ஜூனா உன்னை அறிந்தால் என்னை அடைவாய்” எனக் கீதையில் சொல்கின்றான் கண்ணன், இது கீதையில் கண்ணன் கூறியது.
ஆம், தன்னில் இருக்கும் தெய்வதன்மையினை உணர்தலே தன்னை அறிதல், அப்படித் தன்னையே அறிந்து கொள்ளல் வேண்டும்.
விநாயகர் அகவலில் “என்னை எனக்கே தான் அறிவித்து” என்பார் ஒளவையார், ஞானத்தின் பரிபூரண நிலை தன்னை அறிதல், தன் ஆத்மாவினை அறிதல், தன் கர்மத்தை உணர்தல், தான் வெறும் சதைபிண்டம் என்றும் இயக்கமெல்லாம் சிவனே என்பதை உணர்தல் தன்னுள் இருக்கும் தெய்வீக சக்தியினை உணர்தல்.
இந்தத் தத்துவத்தைத்தான் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.
சிவ வாக்கியார் : 14
“நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுநெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலும்ம தில்லையே”
இப்பாடல் இப்படிப் பிரியும்.
“நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலமுண்ட கண்டன் அகரத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலும் இம்மது இல்லையே”
நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் ஓதுகின்றீர்கள், ஆனால் இறைவன் ஞானத்திருப்பாதம் அறியும் வழியினை நீங்கள் அறிந்திருக்கவில்லை.
அவன் பாலுக்குள் நெய் போல உங்களில் கலந்தே இருக்கின்றான், ஆலகால விஷம் குடித்த அந்தச் சிவன் உங்களுக்குள்ளே இருக்கின்றான், அதை அறிந்து கொண்டால் காலனைப் பற்றி கனவிலும் கூட அஞ்சமாட்டீர்கள் என்பது பாடலின் பொருள்.
சிவ வாக்கியார் தன் ஞான உச்சத்தில் மக்களைப் பார்க்கின்றார், அவர்கள் வேதங்களைக் கசடற கற்று ஓதுகின்றார்கள், ஆனால் அது சொல்லும் இறைவனை உணரவில்லை, இறைவனை அவர்கள் வேதம் வழியாக அடையும் வழியினை முயற்சிக்கவில்லை.
அப்படி இறைவனை உணராத மந்திரமும் வேதமும் பலனற்றது, வேதம் இறைவன்பால் ஒருவரைக் கூட்டிச் செல்லவேண்டும், அதைச் செய்யாமல் அவர்கள் வார்த்தையால் மட்டும் வழிபடுவதைக் கவனிக்கின்றார்.
அம்மக்கள் மரணபயத்தில் வாழ்வு பயத்திலே இறைவனைத் தேடி ஓடுவதையும் ஒரு அச்சம் அவர்களிடம் இருப்பதையும் காண்கின்றார்.
அதைபாபற்றி பாடுகின்றார், சிவம் அதுவும் ஆலகாலமெனும் கொடிய விஷத்தை தான் குடித்து உலகைக் காத்த அந்த நீலகண்டம் எனும் சிவம் உங்களுக்குள்ளே உள்ளார், பாலுக்குள் நெய் போல மறைந்திருக்கின்றார்.
பாற்கடலை கடைந்து அமுதம் எடுப்பது போல், உங்களைக் கடைந்து அந்த நெய்போன்ற சிவனை அறியுங்கள்.
அப்படி அறிந்துகொள்வீர்களென்றால் நீங்கள் காலனுக்கு அஞ்சமாட்டீர்கள், கனவில் கூட அவனைப் பற்றிய அச்சம் வராது என்கின்றார்.
இதைத்தான் ஒளவையார் தன் ஞானக்குறளில் பாடுவார்.
“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து”
பாலுக்குள் நெய்யானது எமது கண்களுக்குத் தெரியாதவாறு கலந்திருப்பதுபோல எல்லா உயிரினங்களிலும் சிவன் கலந்திருக்கிறான் என்கின்றார் ஒளவையார்.
அதைத்தான் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.
பால் உறைமோரினால் தயிராவது போல மனம் ஞானியர் தொடர்பால் உறையவேண்டும், அந்த உறைந்த மனதை யோகத்தால் கடைந்தால் வெண்ணை திரள்வது போல ஞானம் திரளும், அந்த ஞானம் சிவம் எனும் பரம்பொருளைக் காட்டும் என்பது அவரின் போதனை.
ஒருவகையில் பாற்கடலில் அமிர்தம் கடைந்த அந்தப் புராணமும் யோக தத்துவத்தைச் சொல்வதே, நம் மனதை யோகத்தால் கடைந்தால் நன்மை தீமைகள் இடையே மனதை கடைந்தால் முதலில் கெட்டவை எல்லாம் மேல் எழும் அதை இறைவனே ஏற்று நம்மைக் காப்பார், அதைத் தாண்டி இன்னும் ஆழமாகக் மனதைக் கடைந்தால் ஞானம் வெளிப்படும் அந்த ஞானத்தில் முழு முக்தி நிலையினை அடையலாம்.
இந்தப் பாற்கடல் தத்துவத்தைத்தான், யோகத்தால் சிவனை அடையலாம் எனும் தத்துவத்தைப் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.
அப்படித் தெய்வத்தை உணர்ந்துவிட்ட ஒருவர்க்கு மரணத்தைப் பற்றி, காலனைப்பற்றி அச்சமே வராது, அவர்கள் அதனை ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள், இறைவன் தன்னில் இருக்கும் போது அழியக் கூடிய இந்த உடல் பிரிந்தால் என்ன என்பதுபோல் மிக மிக இயல்பாக இருப்பார்கள் , அச்சமின்றி இருப்பார்கள்.
அதை அபிராம்பிபட்டர் பாடினார்.
“வ்வ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே”
அதாவது, அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும் என்கின்றார்.
பட்டினத்தார் பாடினார்.
“காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு”
என்பது பட்டினத்தார் பாடல், அதாவது எமன் வருவதன் மரணம் வருவதன் அறிகுறியாக கண்கள் மங்கி, பால் ஊற்றப்படும் முன் இறுதி காரியங்களுக்கு முன் மனம் குற்றால சிவனைத் தேடி முக்தி அடையவேண்டும் எனப் பாடுகின்றார்.
“எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
எற்றி நமன்-தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை
நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே”
என தன் இறுதிக்காலத்தில் அரங்கன் வந்து தன்னைக் காக்கவேண்டும் என மன்றாடுகின்றார் பெரியாழ்வார்.
இந்த நிலை அடைய, எமன் வர அவசியமில்லாத அளவு சாகா நிலை அடைய, அப்படியே முக்தி நிலை அடைய வேண்டுகின்றார்.
ஆண்டாள், வள்ளலார், நந்தனார், திருஞானசம்பந்தர் போன்றோர் எமன் வராமலே இறைவனிடம் கலந்து இப்படித்தான்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம் சில பாடல்களைச் சொல்லும், அது இங்கு சரியாகப் பொருந்தும்.
“க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபாத்
தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் ||
“மரண காலத்தில் எம தூதர்கள் என்னைக் கொல்ல வேண்டும் என்று வெஞ்சினத்துடன் அதட்டி துன்புறுத்தும் நேரம் செந்தூரனே நீ வந்து “பயப்பட வேண்டாம்” என உன் சத்திவேலினை ஏந்திக்கொண்டு மயில் மீதேறி வந்து எனக்குக் காட்சி கொடுத்துக் காத்தருளல் வேண்டும்.” என்பது பொருள்.
ஞானியர், இறைவனை உணர்ந்தோர் எமனுக்கு அஞ்சுவதில்லை.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை (எமனை) அஞ்சோம்” எனத் தைரியமாகச் சொன்னார் அப்பர் சுவாமிகள்.
அதைத்தான் சித்தன் பாரதியும் சொன்னான் “காலா உன்னை சிறுதுறும்பென மதிக்கின்றேன், என் காலடியில் வாடா உன்னை மிதிக்கின்றேன்”
இதுதான் இந்தத் தத்துவம்தான் இங்கே சிவ வாக்கியாரால் போதிக்கப்படுகின்றது.
சிவ வாக்கியார் : 15
“வித்திலாத சம்பிரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாத மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசீவ நில்லையில்லை யில்லையே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.
“வித்திலாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாத மாளிகை சமைந்த வாறு எங்ஙனே?
பெற்றதாயை விற்று அடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே”
வித்து என்றால் மூல உயிர் எனப் பொருள், ஒரு விதை இல்லை என்றால் தரைக்கு மேல் மரமில்லை தரைக்கு கீழ் வேருமில்லை. வித்துதான் முளைத்து செடிகொடி மரம் அவற்றின் கிளைகள் என்றும் மண்ணுக்குக் கீழே வேர் என்றுமாகின்றது.
தச்சன் இல்லாத மாளிகை, அஸ்திபாரம் முதல் எல்லா வகைகளும் இல்லா மாளிகை கட்ட முடியாது.
அப்படி மானுட பிறப்புக்குச் சிவனே மூல வித்து. இந்த உடல் அவன் தங்கியிருக்கும் ஆலயம். ஆனால், அதையெல்லாம் நினைவில் கொள்ளாமல் பெற்ற தாயினை மனைவி மகளுக்கு சேவகம்செய்யும்படி அல்லது வேலைக்காரி போல் வைதிருப்பது போல சிவனை மறந்துவிட்டு வாழ்வது கொடியது, அது பேதைத்தனமான வாழ்வு என்பது பொருள்.
இங்கே ஒரு ஆழ்ந்த போதனையினைச் சொல்கின்றார் சிவ வாக்கியார், இயல்பான ஒன்றைச் சொல்லிச் சூட்சுமமாக ஒன்றைப் போதிக்கின்றார்.
ஒவ்வொருவரும் தாயிலிருந்து பிறக்கின்றார்கள், தாயே ஒருவனுக்கு மூலம். ஆனால் பிரிதொரு நாளில் தாயிடம் இருந்து வந்ததை மறந்துவிட்டு சம்சார சாஹரம் எனும் இல்வாழ்வில் மனைவி மக்கள் எனத் திசைமாறி, பாசபந்தத்தில் தடுமாறி தாயினை மறந்துவிடுகின்றார்கள், அவளைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்.
எந்தத் தாயிடம் இருந்து ஒருவன் வந்தானோ?, எந்தத் தாயால் இந்த உடலும் உயிரும் வந்ததோ அதை மறந்து இந்த உடலால் யார் வந்தார்களோ அவர்களுக்குத் தன் தாயினை வேலைக்காரிபோல் வைப்பது பேதமை மடமை.
அப்படிச் சிவன் வித்தாக இருக்கும் போது, சிவன் நம்முள் கலந்திருக்கும் போது, சிவனால் அமைந்த உடல் சிவனால் எழுந்த இந்த உடல் ஆலயம் இது என்பதை மறந்துவிட்டு வாழ்வது ஏதைகள் வாழ்வு அறியா வாழ்வு என்கின்றார் சிவ வாக்கியார்.
சித்தமெல்லாம் அந்த மூலப் பரம்பொருளைப் பற்றி நிற்கவேண்டும், அதுதான் அர்த்தமுள்ள வாழ்வு எனப் போதிக்கின்றார், ஜீவன் எனும் ஆத்மாதான் சிவன் அவன் இல்லையென்றால் இந்த வாழ்வில்லை அதனால் சிவனைப் போற்றுங்கள் என்பது அவரின் போதனை.
“பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு”
“பொய்க்கெல்லாம் பாசமாம் உள்ளதற்கு ஓர் வித்தாகும்
மெய்க்குள்ளாம் மாய உடம்பு”
பொய்களுக்கும், சிற்றின்பங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற சரீரத்திற்கு, ஆன்மாவானது ஆதாரமாக இருக்கிறது. பொய்யாகிய தூலசரீரத்திற்கு சூட்சும சரீரமானது ஆதாரமாக உள்ளது. ஆன்மா இன்றி உடல் இயங்காது.
மெய்யாகிய மூல வித்து உடலுக்கு ஆதாரமாக உள்ளது, அதை அறிந்து பொய்மை மாயை விலக்கி மெய்பொருளை உணர்ந்து அதன் தாத்பரியத்தை உணர்ந்து வாழவேண்டும் என்கின்றார் ஒளவையார்.
இப்படி நேரடியாக பொருள் கொண்டாலும் மறைமுகமாக அவர் போதிக்கும் பெரும் தத்துவம் ஒன்று உண்டு, அது சூட்சுமமானது.
இங்கே வித்து என அவர் சொல்வது மூச்சுக்காற்று, இந்த மூச்சினை மிகச் சரியாகப் பயிற்சிச் செய்து அதனை அடக்கி யோகம் செய்து சிவனில் கலக்க வேண்டும்.மாறாக, அந்த மூச்சினை மோகத்திலும் இதர சினம், ஆத்திரம், வன்மத்திலும் லௌகீக மயக்கத்திலும் செலவழித்து வீணாகச் சென்று முடிந்துவிடக் கூடாது என்பது அவர் சொல்லும் பொருள்.
சுவாச மூச்சுத்தான் ஒருவனுக்கு தாய் என்கின்றார் சிவவாக்கியார்.
அதனால் பெற்றத் தாயை அதாவது காற்றை வெளியே விற்று செலவழித்து உலக வாழ்வுக்கு அடிமையாகின்ற பேதைகளே என்கின்றார், மூச்சு என்பதைப் போற்றி பாதுகாத்துச் சீர்படுத்தினால் இறைவனை உணரலாம், அதை மாயைகளுக்கு விற்று வீணாக போகக்கூடாது அது பேதமை என எச்சரிக்கின்றார்.
“உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்
உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே”
என்பது திருமூலர் பாடல்.
சிவ வாக்கியார் : 16
“அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“அஞ்சும் மூணும் எட்டதாய அனாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறு உரு செபிப்பீரேல்
பஞ்சமான பாதங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே”
அதாவது, ஐந்தும் மூன்றும் சேர்ந்து எட்டு எழுத்தாக வரும் “ஆ+உ+ம் (ஓம்) நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நினைந்து கொண்டு நூறுமுறை பிரார்த்தித்தால் எவ்வளவு கொடிய பஞ்சமா பாதகங்கள் எனும் பெரும் பாவங்களை நூறுமுறை செய்திருந்தாலும் அவை ஏல்லாம் பஞ்சுபோல் பறந்தோடுமென நான்குமறைகள் சொல்கின்றது என்பது பாடலின் பொருள்.
“ஓம் நமசிவாய” எனும் மந்திரத்தின் பெருமையினை, சக்தியினை அளப்பரிய ஆற்றலைச் சொல்கின்றார் சிவ வாக்கியார்.
“சிவனருள் ஆய சிவன் திருநாமம்
சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன் முதலாக சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே”
“அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் ஐந்தெழு த்தாமே”
என்பது திருமூலர் வாக்கு.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவயவே “
என்பது திருஞான சம்பந்தர் பாடல்.
“நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’ எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!”
என்பது மாணிக்கவாசகர் உருகிப் பாடும் பாடல்.
இன்னும் ஏகப்பட்ட ஞானியரும் அடியார்களும் இந்த நாமத்தின் அதாவது “ஓம் நமசிவாய” மந்திரத்தின் பெருமையினைச் சொல்லியிருக்கின்றார்கள், பாடியிருக்கின்றார்கள், அவர்களே அதன் பலனைப் பெற்று முக்தி அடைந்திருக்கின்றார்கள்.
“ஓம் நமசிவாய” எனும் மந்திரம் ஆறு சக்கரங்களைத் துலக்கக் கூடியது, அந்நேரம் எல்லாப் பாவங்களும் கரைந்து ஒருவன் ஞானநிலையினை அடைவான், அவன்செய்த எல்லாப் பாவங்களும் கரைந்து கர்மா தீரும் என்பது சிவ வாக்கியாரின் போதனை, ஞானியர் அனுபவமும் போதனையும் அதுதான்.
சிவ வாக்கியார் : 17
“அண்டவாச லாயிரம்ப்ர சண்டவா சலாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரியும்.
“அண்ட வாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்
ஆறு இரண்டு நூறுகோடி ஆன வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே”
இந்த அண்டத்துக்கு ஆயிரம் வாசல் உண்டு, 1008 அண்டகள் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தின் அண்டங்களுக்கு ஆயிரம் வாசல் உண்டு என்பது இன்றைய விஞ்ஞானமும் சொல்ல முடியாத ஆனால் தேடிக்கொண்டிருக்கும் கேள்வி.
இந்தப் பிரபஞ்சத்தில் 1008 அண்டங்கள் உண்டு, இந்த அண்டங்களுக்கு இடையே பாதைகள் உண்டு, வாசல்கள் உண்டு.
இந்த அண்டங்களையே சரியாகத் தெரிந்துகொள்ள முடியாத விஞ்ஞானம் தெரிந்த ஓரிரு அண்டங்கள் இடையே வேகமாக செல்லச் சில பாதைகள் இருக்கலாம் என அனுமானிக்கின்றது.
இதைத்தான் சொல்கின்றார் சிவ வாக்கியார்.
அப்படியே அணுவுக்குள் வெற்றிடம் நிரம்ப உண்டு, ஒரு அணுவுக்குள் நுழைய வாசல்கள் பல உண்டு, அண்டத்திலும் அணுவிலும் நுழைய வாசல்கள் உண்டு என்பவர் தொடர்கின்றார்
பிரசண்ட வாசல் ஆயிரம் என்கின்றார். ‘பிரசண்டம்’ என்றால் காவல் நிறைந்த வாசல்கள் பல உண்டு. எமலோகம் போன்ற பல காவல் நிறைந்த உலகங்கள் நாகலோகம், யட்சலோகம், கந்தவர்லோகம் எனப் பலவற்றுக்கு பல உண்டு.
அப்படியே மறுபிறப்பாக ஒருவன் பிறக்க உயிர்களாக ஜெனிக்க மரம் செடி கொடி முதல் விலங்குகள் பறவைகள் வரை பல்லாயிரம் கோடி உடல் வாசல்கள் உண்டு.
இப்படி ஏகப்பட்ட வாசல்கள் இருக்கும் உலகில் எம்பெருமான் எந்த வாசலில் இருக்கின்றான் என அறிவீர்களா? அதனை அறிந்துகொள்ளுங்கள் என்கின்றார்.
மிகத் தேர்ந்த போதனையினைச் சொல்கின்றார் சிவாக்கியார்.
அண்டமெல்லாம் ஆயிரம் வாசல் உண்டு, அங்கெல்லாம் தேடுகின்றீர்கள், கடுமையான காவல் கொண்ட பல உலக கதவுகளைத் தட்டித் தேடுகின்றீர்கள்.
பிறவி முடிந்தாலும் இன்னொரு உடலின் கதவைத் திறந்து உள்ளே போய் அமர்ந்து தேடுகின்றீர்கள்.
ஆனால், உண்மையாக இறைவன் இருக்கும் வாசல் எது என்றால் அது ஏகபோக வாசல் அதை நீங்கள் அறியவில்லை என்பது.
ஏகபோக வாசல் எனச் சித்தர் சொல்வது கபால வாசல் எனும் உடலின் பத்தாம் வாசல், உச்சந்தலை எனும் துரிய சக்கர வாசல்.
இந்த உடலில் நவதுவாரங்கள் உண்டு, பத்தாம் துவாரம் உச்சந்தலையில் உண்டு அதுதான் துரிய சக்கரம் இருக்கும் இடம்.
இந்த வாசல் மூடப்பட்ட நிலையில் இருக்கும், யோகத்தில் சிறந்தவர்கள் இந்தச் சக்கரத்தை துலங்க வைத்து இந்த வாசலை திறந்து வெளியேறும் வழி அறிந்தவர்கள்.
இந்த கபால மோட்சம் எனும் உச்சந்தலை வழியாக வெளியேறும் ஆன்மாவுக்குப் பிறப்பில்லை.
யோகிகள் ஞானியர் இந்த வாசல் வழியே இறைவனில் கலந்திருப்பர், பின் இந்த வாசல் வழியே ஆன்மாவினைப் பிரிந்து பிறவி முடிப்பார்கள்.
இந்தக் கபால துவாரத்தை , பிரம்மேந்திரியம் துரிய சக்கரம் எனப்படும் உச்சந்தலை வாசலைச் சொல்லி, இந்த வாசலில்தான் இறைவன் இருக்கின்றான் உங்கள் உடலில் உங்கள் தலையின் வாசலிலே இருக்கின்றான், அவனை அங்கேதேடாமல் எந்தெந்த வாசலிலோ தேடுகின்றீர்கள் எனப் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.
காகபுகண்டர் பாடல் ஒன்று உண்டு.
“அறிவான கண்ணெதென்றால் புருவவாசி
அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால்
முறிவான பூட்டுடைத்து புருவமத்தி
மூக்கோடும் வாசியது நெற்றியேறில்
தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல்
சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல்
குறியான மணிவாசல் – குருவின் வாசல்
கோபுர வாசல் தெரிவாயானால் பாரே”
மூச்சை அடக்கி சரியாக பயிற்றுவித்தால், புருவத்துக்கு இடையே கருத்தை வைத்து தவம் செய்தால் மூச்சுக்காற்று எழுந்து குண்டலியினை எழுப்பி உச்சந்தலை தொட்டால் அங்கே பத்தாம் வாசல் திறக்கும் அது சிறியவாசல், ஆனால் அறிவும் யோகமும் கொண்ட வாசல், குரு போதித்த வாசல், கோபுரம் கொண்ட கோவிலில் இருக்கும் இறைவனை அறியும் வாசல் என்கின்றார்.
“மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்(கு)
ஒன்பது காட்சி யிலைபல வாமே
வாசல் உலை நலமாமே”
என்பது திருமூலர் பாடல்.
சிவ வாக்கியார் பாடல்கள் : 18
“சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதிலுஞ் சிவனேநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்
“சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலுஞ் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின்
ஊனமற்ற காயமா இருப்பன் எங்கள் ஈசனே
நான்கு சாமத்திலும் தவறாது நான்கு வேதங்களையும் ஓதி, சகல சாஸ்திரங்ளையும் மிகச் சரியாக பின்பற்றி வந்தாலும் எல்லா வழிபாடுகளையும் சரியாகச் செய்து நின்றாலும் மனதால் சிவனை நினையாதவரை, மனதால் வழிபடாதவரை நீங்கள் சிவனை அறியமாட்டீர்கள்.
காமம் எனும் உலக இன்பங்கள், சிற்றின்பங்கள், நிலையில்லா இன்பங்களை எல்லாம் விரட்டிவிட்டு, அந்த நிர்மலமான மனதில் சிவனைத் தியானித்தால் அங்கே பழுதில்லா ஞானபாபழமாக , ஞானஜோதியாக ஈசன் வீற்றிருப்பதைக் காணலாம் என்கின்றார் சிவ வாக்கியார்.
ஆசை வயபட்ட மனம் மாயையில் சிற்றின்பங்களில் மூழ்கியிருக்கும், அந்த மயக்கமிக்க மனத்தோடு இறைவனைத் தொழுதால் இறைவன் தரிசனமாக மாட்டான், ஆசைகளை லௌகீக மாய மயக்கங்களை அறுத்தெறிந்து மனதில் பரம்பொருள் ஒருவனையே நினைத்து தியானித்தால் அந்த ஜோதிபிம்பம் தெரிவான் என்பது அவரின் போதனை.
“மூன்றுள குற்ற முழுது நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே”
அதாவது காமம், வெகுளி, மயக்கம் அல்லது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எனும் மூன்று மயக்கங்களில் மனம் சிக்கிக் கிடக்கின்றது , அந்த மூன்று மயக்கத்தையும் நீக்கினால் என்றும் நீங்காத இறைவனைக் காணலாம்.
அதை நீக்காவிட்டால் ஏதோ ஒரு ஆசையில் சிக்கி அவர்கள் அமிழ்ந்துபோவார்கள் என்பது பாடலின் பொருள்.
“தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் ஏற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி “
எனப் புலம்பி வேண்டுகின்றார் மாணிக்க வாசகர்.
வாழ்க்கை கடலில் துன்பமாகிய பேரலைகள் நடுவில் ஆசை அலைகளும் தோன்றி அடிக்கின்றன, அது உயிர்களை அலைகழிக்கின்றன.
அந்தக் கடலில் ஒரு பிடிமானமுமின்றி தனியாக தவிக்கும் மானுடரை அதுவிடுமா? விடாது. அதுவும் மாதர்பால் எழும் மயக்கம் பெரிய பெரிய அலைகளாக தாக்கிக் கொந்தளிப்பான அலையில் இழுக்கப் பார்க்கின்றது. அந்த அலை ஊடே ஆபத்தான சுறாக்கள் போன்ற ஆபத்தான மயக்கங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.
இதனில் சிக்கிவிட்டால் கடைசிவரை துன்பமன்றி இன்பமில்லை என்பதால் அந்த அலைகளில் விழுந்துவிடக் கூடாது, பதமாக சிவனைப் பற்றி லௌகீக கடலைக் கடக்க வேண்டும் என்கின்றார் திருமூலர்.
“பிறவிக் பெருங்கடல் நீந்துவர்” என வள்ளுவன் சொன்னது இதுதான்.
“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.”
“முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளைஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவாகச்சி ஏகம்பனே.”
என வருந்தி வருந்தி புலம்பி மானுடப் பலவீனத்தில் தன்னை கைவிடாதபடி மாய மயக்கத்தை வெல்ல காஞ்சிவாழ் ஏகாம்பரேஸ்வரரைப் பட்டினத்தார் பாடிக் கேட்பதும் அதுதான்.
எல்லா விதமான ஆசைகளையும் ஒழித்தல் அதுவும் பெண்ணாசையினை ஒழித்தலே இறைவனை அடையும் முதல் வழி, அந்த ஆசைகளோடு வேதமும் சாஸ்திரமும் வழிபாடும் செய்வது பலனற்றது, அது ஓட்டைப் படகில் கடலைக் கடக்க முயல்வதற்கு சமம் என்கின்றார் சிவ வாக்கியார்.
சிவ வாக்கியார் பாடல்கள் : 19
“சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லீரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கு இரண்டையும் தவிர்ந்து தாரைஊத வல்லீரேல்
கொங்கை கொங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே”
சங்கு என்றால் வழி, காற்று செல்லும் வழி எனப் பொருள் உண்டு. கழுத்தை சங்கு எனச் சொல்வதில் அப்படியும் ஒரு பொருள் உண்டு.
தாரை என்றால் தொடர்ந்து வரும் மூச்சுக்காற்று.
ஆக மூக்கின் இருபாதை வழியாக செல்லும் காற்று , இடகலை பிங்கலை எனும் காற்று சன்னல் பின்னலாக கலந்து கிடக்கின்றது, அப்படிப் பக்குவப்படாத மூச்சினால் சுவாசத்தின் சக்தி வீணாகி உடல் நலிந்து உறுப்புகள் மங்கிச் சாகும் மாந்தர்கள் கோடான கோடி பேர்.
அப்படி அல்லாமல் மூச்சினை இடகலை பிங்கலை என இருபக்க மூச்சினை முறைப்படுத்தி, முறையாக ரேசகம், பூரகம், கும்பகம் செய்து அதனால் சுழுமுனை நாடியினை உந்தி மேலே ஏற்றினால், அதனைச் சக்கரங்கள் வழி மேலே ஏற்றினால், அந்த அனலை மேலே ஏற்றி உச்சியில் இருக்கும் ஜோதியுடன் கலக்கச் செய்தால் பெரும் யோக நிலை வாய்க்கும்.
அந்நிலையில் கொங்கை கொண்ட தேவியோடு கலந்துவாழும் ஈசன் காலடியில் இருக்கும் நிலை கிடைக்கும், பேரின்ப நிலை உருவாகும் என்பது பாடலின் பொருள்.
மூச்சு என்பது பிராண சக்தி, வெறும் உடல் இயக்கத்துக்காக மட்டும் மூச்சு மனிதனுக்குக் கொடுக்கபடவில்லை. அந்த மூச்சு நதிவெள்ளம் கடலுக்குச் செல்வது போல் தன் போக்கில் என்றால் எல்லாம் வீணாகும்.
மாறாக, வெள்ளத்தை முறைப்படுத்தி பாசனம் செய்தால் உலகம் பயனடைவது போல, அந்த மூச்சினை சரியாக முறைப்படுத்தி அதனைப் பிரணாயாமம் செய்து முறைப்படி அடக்கினால் யோக நிலை கிட்டும், அது பரம்பொருளோடு சேர்க்கும் என்பதுபாடலின் பொருள்.
மூச்சு என்பது பெரும் சொத்து, பெரும் வளம், அதனை வீணடித்து சாகாதீர்கள் மாண்டு போகாதீர்கள் மானுடர்களே, அதை முறைப்படுத்தி பயிற்சி செய்து இறைவனுடன் கலக்கப் பாருங்கள், அதுதான் வாழ்வின் அடிப்படை தத்துவம் என்கின்றார் சிவ வாக்கியார்.
இதையே கம்பளி சட்டை சித்தர் பாடுகின்றார்.
“காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்”
பிராண யோகம் செய்ய தாமரையில் நூல் போல் உள்ள குண்டலினியையும், அதில் ஆடும் பிராண அபான வாயுவையும் அறியலாம். அதன் இயக்கங்களை உற்று நோக்கி அறிந்து கொண்டால் அது ஞானமும் யோகமும் ஆகும் என்கின்றார்.
இதனையே திருமூலர் ஒரு பாடலில் சொல்கின்றார்.
“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே”
தானே முறைகெட்டு அலையும் மூச்சினை முறைப்படுத்தி உள்ளே அடக்கி மாசில்லா (நின்மலம்) நிலையினை அடைந்தால் ரத்த ஓட்டம் சரியாகி உறுப்புகள் சிவந்தே இருக்கும், முடி கருத்தே நரைக்கா நிலையின் எட்டும், உயிர் உடலைப் பிரியாது.
ஒளவையார் தன் ஞானக்குறளில் சொல்கின்றார்.
“எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற துணர்வு”
அதாவது தொடர்ந்து மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்துவர அகமானது உள்ளுணர்வு பெற்று இறையை உணரும் தகைமையை அடையும் என்கின்றார்.
மூச்சினை வீணாக்காதீர்கள், அதை முறைப்படுத்தி யோகத்தில் நிலைத்து இறைவனை அடைய பாருங்கள் என யோகியர் ஞானியர் சொன்னதையே சித்தர் சிவ வாக்கியாரும் சொல்கின்றார்.
சிவ வாக்கியார் பாடல்கள் : 20
“தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.
“தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம் இந்த நாமமே”
அதாவது தங்கம் என்பது ஒன்றுதான், ஆனால் அது ஆபரணமாக செய்யப்படும் போது வளையல், கம்மல், மோதிரம், சங்கிலி, அட்டிகை எனப் பல பெயர்களைப் பெறுகின்றது, அந்தப் பொருட்களின் பெயரால் அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றதே தவிர தங்கம் என்பது ஒன்றே.
அப்படிச் செங்கண் திருமால் (பவளச் செங்கண் என விஷ்ணுவினை நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கின்றது) , சிவன் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றே, அது நம்முள் உண்டு.
அதை அறியாத மாதர்கள் சிவன் பெரிது விஷ்ணு பெரிது என வாதமிட்டு கொள்வார்கள், இந்த வியாக்கினங்கள அறிவில்லா மடமை.
பரம்பொருள் ஒன்றே அது எல்லோரிடமும் எல்லா உயிர்களிடமும் எல்லாப் படைப்பிலும் உள்ளது, அது சிவனாகவும் விஷ்ணுவாகவும் வேறு வேறு வடிவங்களில் தெரிகின்றதே அன்றி அவை வேறல்ல.
எல்லாமும் ஒரே பரம்பொருளின் வடிவங்களே என்பது சிவ வாக்கியாரின் போதனை.
நீரானது உறைந்தால் பனிகட்டி, கொதித்தால் ஆவி, ஓடினால் நதி ஆனால் அது அடிப்படையில் நீர். அப்படி ஒரே சக்தி வடிவங்கள் பல என்கின்றார் சிவ வாக்கியார்.
இதனை விஞ்ஞானத்தை கொண்டும் விளக்கலாம், இன்றைய விஞ்ஞானம் என்பது இந்துமதத்தை விளக்க வந்த சாட்சி.
ஆம், ஒரே மின்சாரம் அடிப்படையில் ஒரே மின்சாரம் மின் விளக்காக பிரகாசிக்கின்றது, குளிர்சாதன பெட்டியில் குளிர்கின்றது, குளிரூட்டிகளில் குளிர்கின்றது, மின்சார அடுப்பில் நெருப்பாகின்றது.
அதே மின்சாரம் வெப்பமூட்டிகளில் வெப்பமாகின்றது, காற்றாடிகளில் காற்றாகின்றது, இன்னும் கணிப்பொறி திரையில் அது பல வடிவமாகின்ரது, கைபேசியில் அது குரலும் படமாகின்றது, தொலைகாட்சியில் அது படமாகின்றது, வானொலியில் குரலாகின்றது,மின்சார கார்களில் அது எரிபொருளாகின்றது
அடிப்படையில் மின்சாரம் என ஒன்று ஒரே ஒரு விஷயம் எப்படியெல்லாம் கண்முன் பல்வேறு வடிவம் எடுப்பதை காணமுடியும், எல்லாமும் அடிப்படையில் மின்சார மயமே.
அப்படி ஒரே ஒரு பரம்பொருள் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றார், எல்லாமும் அவன் வடிவமே , அந்தப் பரம்பொருள் நம்மிலும் உண்டு! நாம் காணும் காணாதவை எல்லாவற்றிலும் உண்டு என்பது, எல்லாமே பரவடிவம் என்பது போதனை.
மிக அழகான உண்மை இது.
இந்த உண்மையினை அறிந்துகொண்டால் மத சச்சரவுகள், மதத்துக்குள் சச்சரவுகள், மனிதருக்குள் சண்டை என எதுவும் வராது.
ஒளவை இதனைத் தெளிவாக சொல்கின்றாள்.
“அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்”
எல்லா உருவமாகவும் விளங்கும் சிவத்தை அறிந்துகொள்ள முடியாமல் சிவனைத் தேடினால் அந்தச் சக்தியினை அடையவோ உணரவோ முடியாது என்பது பாடலின் பொருள்.
வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்”
அதாவது காற்றாய் உயிராய் மற்றவற்றின் எல்லா உட்பொருளாய் இருப்பது சிவமே, ஆழ ஆராய்ந்தால் இதை உணரலாம் என்கின்றார் ஒளவையார்.
அப்படி அசையாத உயிர்கள் மட்டுமல்லாமல் அசையும் எல்லா உயிருக்கும் சுவாசமும் உயிரும் முக்கியமானது, இவை இரண்டும் இல்லாமல் உயிரகள் இயக்கம் இல்லை, அப்படியான சுவாசம் எனும் பிராணயாமமும் உயிர் எனும் சக்தியும் இன்னும் எல்லாமும் சிவமே என்கின்றார் ஒளவையார்.
இதனாலே ஞானியர் எல்லா உயிரையும் நேசித்தனர், எல்லா உயிர்களிலுமே சிவனைக் கண்டனர், பாரதி ஞானச் சுடராக “தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம்” எனச் சொன்னதும் இதன் தத்துவமே.
“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே”
என அபிராமி பட்டர் அதனைப் பாடினார்.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
என மாணிக்கவாசகர் அந்தத் தத்துவத்தைச் சொன்னார்.
“யாதுமாகி நின்றாய் காளி” என ஒரே ஒருவரியில் அதனைத் மிகத் தெளிவாகச் சொன்னான் சித்தன் பாரதி.