சிவ வாக்கியார் பாடல்கள் : 41 to 49

சிவ வாக்கியார் பாடல்கள் : 41

“வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர்

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ

வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்

வாயிலே குதப்பும் வேதம் எனப் பட கடவதோ?

வாயின் எச்சில் போகவென்று நீர்தனை குடிப்பீர்காள்

வாயின் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே”

மாந்தர்களே, உங்கள் வாய் பட்ட நீரை எச்சில் நீர் என்கின்றீர்கள், ஆனால் அதே வாயிலிருந்து வரும் வேத மந்திரங்களை என்ன சொல்வீர்கள்?

வாயின் எச்சில் சுத்தமாக வேண்டி நீரை அருந்துவீர்கள், கழுவுவீர்கள். ஆனால், அதனால் உடலில் உள்ள எச்சமெல்லாம் நீங்கிவிடுமா? சொல்லுங்கள் என்பது பாடலின் பொருள்.

ஆச்சாரம் சுத்தபத்தம் என ஆச்சாரத்துக்கு கொடுக்கும் முக்கியவத்தை விட மனதால் செய்யும் வழிபாடே சிறந்தது, பக்தி இல்லாமல் செய்யப்படும் ஆச்சாரம் சரியான பலனைத் தராது என்பது இங்கே சிவவாக்கியாரின் போதனை.

சுத்தபத்தமாக ஆச்சார விதிகளுடன் வழிபடுதல் இந்து மரபு, எச்சில் செய்யபட்ட எதுவும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

நைவேத்தியம் எனும் சாமிக்குப் படைக்கப்படும் உணவைக் கூட மிகுந்த சுத்தமாக ஆச்சாராமாக படைப்பதும், நந்தவனத்துப் பூவினைக் கூட சாமிக்கு மிக மிக ஜாக்கிரதையாக எடுத்துவருவதும் ஆச்சார இயல்பு.

இப்படிச் செயலில் சுத்தமாக இருந்துவிட்டு மனதால் பக்தியில்லை என்றால் அதன் பலன் என்ன எனச் சாடுகின்றார் சிவவாக்கியார்.

அதனால் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்கின்றார்.

எச்சில் நீர் எனச் சொல்லி வாய்பட்ட நீரை ஒதுக்கும் நீங்கள், அதே வாயால் வரும் மந்திரங்களை மட்டும் புனிதமானது என்கின்றீர்களே அது எப்படிச் சரியாகும்? வாயின் எச்சில் பட்டால் கழுவினால் சரியாகும் என்கின்றீர்கள் ஆனால் எச்சில் தொடர்ந்து வருமே என்ன செய்து தடுப்பீர்கள், அப்படியானால் நீங்கள் அசுத்தமில்லையா, அசுத்தமான ஒன்றில் இருந்து சுத்தமான ஒன்று வெளியில் வரும் என நம்புகின்றீர்களா?

மானுடரே, இந்த உடலே அசுத்தமானது உள்ளே எல்லாமே அசுத்தம், நீங்கள் ஒரு மாமிச பிண்டம் என்பதை மறந்து சுத்தத்தை வெளியில் தேடுகின்றீர்கள்.

இப்படிச் சுத்தம் சுத்தம் என நீங்கள் வெளியே தேடுகின்றீர்கள், உங்கள் உடலோ அசுத்தமாய் இருக்கின்றது என்பதை மறக்கின்றீர்கள்.

மானுடரே, தெய்வம் சுத்தம் அசுத்தம் எல்லாம் கடந்தது, மனம் எனும் வெளியில் அது உங்களுக்குள்ளே இருக்கின்றது, முழு அசுத்தமான உடலில்தான் எல்லாம் கடந்த அந்தப் பரம்பொருள் மனம் எனும் வெளியில் தங்கியிருக்கின்றது.

அதை உணர்ந்து நிற்கப் பாருங்கள், அங்கே கவனம் செலுத்துங்கள், ஆச்சாரங்களில் மட்டும் பக்தி இல்லா வழிபாட்டை செய்தால் அவனை அடையமுடியாது என்கின்றார்.

சித்தர்கள் உடலை வெறுத்து உடலின் தன்மையினை வெறுத்து அதனால் ஆசாபாசங்களை வெறுத்து இறைவனை தேடுபவர்கள்.

பட்டினத்தார் அதனைத்தான் பாடுவார்.

“நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது

பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்;

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;

ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;

சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;

காற்றில் பறக்கும் கானப் பட்டம்;

விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;

சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;”

என உடலின் அழுக்கை, அசுத்தத்தைப் பாடுவார்.

அப்படியான உடலை வைத்துக்கொண்டு என்ன ஆச்சாரம் காக்கப் போகின்றீர் மானுடரே, மனதால்  இறைவனைத் தேடுகள் எனப் பக்தி இல்லா ஆச்சாரத்தினைக் கண்டிக்கின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 42

“ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்

மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்

மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்

எதிலெச்சி லிலதில்லை யில்லையில்லை யில்லையே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்

மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்

மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்

எதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே”

இப்பாடல் கடந்த பாடலின் தொடர்ச்சியே.

எச்சில் பட்டதை இறைவனுக்குப் படைத்தல் என்பது இறை நிந்தனை அதனால் பலனில்லை எனும் மாந்தர்களே, அதே வாயில்தானே மந்திரமெல்லாம் சொல்கின்றீர்கள், அப்படியானால் எந்த வாயின் எச்சில் அசுத்தமோ அந்த வாயினால் வரும் மந்திரங்களும் அசுத்தம் அல்லவா?

அதுமட்டுமா அசுத்தம் உள்ளே செல்லும் போது உணவு அசுத்தம், உண்ணும் பிரசாதம் தீர்த்தம் அசுத்தம், பெண்களிடம் விடும் விந்தும் அசுத்தம், சப்தங்கள் அசுத்தம், ஏழு உலகங்களும் அசுத்தம், சப்தங்கள் அசுத்தம் எல்லாமே அசுத்தமல்லவா?

எச்சில் என்பது நீர், அந்த நீர்தான் உங்களில் உள்ளது, அதுதான் எல்லா இடத்திலும்  உள்ளது, நீர் என்பது என்ன?

அது பஞ்ச பூதவடிவங்களில் ஒன்று.

ஆக எல்லாமே சிவ வடிவம், எல்லாமே சிவவடிவம் எல்லாமும் எங்கும் நிறைந்திருக்கும் சிவமே எல்லாவற்றிலும்

இருக்கின்றான் அதை உணருங்கள் என்கின்றார்.

ஆச்சாரங்கள் என்பது பக்தியின் தொடக்க நிலை. அதைத் தாண்டிச் சென்று எல்லாம் கடந்த ஞானநிலைக்குச் செல்லும் பெருஞானத்தை போதிக்கின்றார் சிவவாக்கியார்.

சரியை கிரியை என்பதில் இந்த ஆச்சாரமெல்லாம் அடங்கிவிடுகின்றது, அதைத் தாண்டி ஞானம், யோகம் என இருபெரும் நிலைகள் உண்டு.

அந்த நிலைக்குச் செல்ல, உருவவழிபாட்டில் இருந்து அரூப வழிபாட்டுக்குச் செல்வதைப் போதிக்கின்றார்.

கோவில் கருவறை சந்நிதியில் செய்யப்படும் அபிஷேக நீரின் புனிதமும் ஆச்சாரமும் எல்லோரும் அறிந்தது, அந்த நீர் மாசுபடக் கூடாது, எச்சில் படக்கூடாது என்பது ஆச்சாரம்.

அந்த நீரில் காட்டும் கவனத்தை, அபிஷேக நீர் தீர்த்த நீரெல்லாம் எவ்வளவு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் காட்டும் அதே கவனத்தை சிரத்தையினை மனதில் கொண்டிருக்க வேண்டும்.

இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகத்துக்கு இவ்வளவு கவனம் எடுக்கும் மாந்தரே, அவன் உங்கள் மனதில் இருக்கின்றானே, அப்படியானால் எவ்வளவு கவனமாக சுத்தமாக உங்கள் மனதை வைத்து அங்கே தியானித்து அவனை அடைதல் வேண்டும் என்பதை உணருங்கள் என்பதே சிவவாக்கியாரின் போதனை.

சிவயோகியாக்கும் சிவவாக்கியர் பாடல் (தொடர்~09)

                 (ஆழமாக ஆயிரமாயிரம் யோக ஞான ரகசியங்கள் கொண்ட வரிகள். திரும்ப திரும்ப படியுங்கள். இந்த ஆழமான தத்துவ வரிகளை)

சிவ வாக்கியர் பஈடல்கள் : 43

“பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே

பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாற தெங்ஙனே

குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே

அறுப்பனே செவியிரண்டும் அஞ்செழுத்து வாளினால்”

அதாவது மானிடராய் நாம் பிறப்பதற்கு முன் எங்கிருந்தோம், பிறந்து வாழ்ந்து முடிந்தபின் எங்கே செல்கின்றோம் இதனை எந்த மானிடராவது சொல்ல முடியுமா?

            இது குறித்து ஏதும் அறியாத மானிடர்களே வாருங்கள், என்னிடம் உங்கள் காதுகளைக் கொடுங்கள், அதில் நான்  ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுகின்றேன். அதனால், உங்கள் பிறவி அறுபடும், மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் சிக்க மாட்டீர்கள் என்பது பாடலின் பொருள்.

இப்பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவத்தை சொல்கின்றது;

         இந்த மானிடப் பிறவி என்பது மிக மிக குறுகியது, பிறப்புக்கு முன் எங்கிருந்தோம், பிறப்புக்கு பின் எங்கே செல்கின்றோம் என்பதை அறிய முடியாதது. மாய வாழ்வில் சிக்கி இதுதான் வாழ்வெனக் கருதி வந்த இடம் செல்லுமிடம் தெரியாமல்  குழம்பி தவிப்பது மானுட இயல்பு, அது மாயையின் இயல்பு.

                இந்த மாயையில் இருந்து வெளிவந்து அற்ப காலம் வாழும் மனிதனின் மூலம் என்ன? செல்லுமிடமென்ன? வாழும் சொற்பகாலம் அவன்படும் பாடு என்ன? இப்பிறவியில் வீழாமல் அவன் மீளச் செய்யவேண்டியது என்ன என உணர்ந்து போதித்தவர்கள் சித்தர்கள்…

பட்டினத்தார் மானிட வாழ்வின் அவலத்தை அழகாகப் பாடுவார்.

“நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல

புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்

கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல

அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே”

ஆம், எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கின்றோம் எனத் தெரியாமல் பந்த பாச வலையில் சிக்கி அதிலே கர்மா பல சேர்த்து ஆப்பில் சிக்கிக்கொண்ட குரங்கு போல மாட்டிகொண்டீர்களே மக்களே என்கின்றார்,

“ஆப்பசைத்த குரங்கு” என்பது பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்ட மக்களைக் குறிப்பது,   

எல்லா மனிதனும் பரம்பொருளின் அம்சமே, ஆனால் மாயை அவனைக் குழப்பி கர்மங்களைச் செய்ய வைக்கின்றது. அந்த மாயையின் கர்மத்தில் அவன் நல்ல கர்மா, தீய கர்மா செய்து கணக்கு சரியாக மீண்டும் மீண்டும் பிறக்கின்றான்,

            கர்ம கடனை தீர்க்க மறுபடி பிறந்து கடனாளியாகின்றான் அல்லது சேர்த்த கர்மத்தை தீர்க்க மறுபடி ஏதோ ஒரு வடிவில் பிறக்கின்றான்.

இந்தப் பிறவி சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். அந்தப் பிறப்பை அறுப்பது இறைவனை முழுக்க புரிந்து, ஆன்ம தத்துவத்தை புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம்.

சிவவாக்கியர் அதைத்தான் சொல்கின்றார், ஐந்தெழுத்து மந்திரம் ஓத ஓத மனம் செம்மைப்படும். ஆத்ம தத்துவம் புலப்படும், அதனை அறியும் போது இறைத்தன்மை கைக்கூடும், மாயை அகலும் ஆத்மா ஒளிரும் அது பரமாத்வோடு இணையும் அதன்பின் பிறப்பு அறுபடும் என்பது சிவவாக்கியரின் போதனை

இதனையே திருமூலரும் பாடுவார்…

“மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத்

தன்வாய அந்தக் கரணம் அகிலமும்

எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற்

கைவாயி லாநிறை எங்குமெய் கண்டதே”

இந்த உடல் கண் மூக்கு காது எல்லாம் நீ அல்ல, அது மாயை. அந்த மாயையினை நீ என நம்பிவிடாதே. அந்த மாய உடலை இயக்குவது ஒரு சக்தி. அந்தச் சக்தியினை உணர்ந்து அதனோடு கலந்துவிடு அதுவே நித்திய பேரின்பம், உடலை மெய் என நம்பாதே, மெய் சக்தி எது எனஎனத் தேடி அடைந்துகொள் என்கின்றார்.. . 

இதையே பட்டினத்தார் தன் பாடல்களில் பாடுவார்….

“என் செயலாவது யாதொன்றும் இல்லை

இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்

இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப்

பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙன் வந்து மூண்டதுவே”

“அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ

முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடி யேனும் அறிந்திலேன்

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே”

நான் யார் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கின்றேன் எனத் தெரியவில்லையே, எத்தனை ஜென்மத்தில் எத்தனை தாய்க்கு மகனாக பிறந்தேனோ, எத்தனை பெண்களை எத்தனை பிறவியில் மணந்தேனோ, எத்தனை ஜென்மத்தில் எத்தனை பிள்ளைகள் பெற்றேனோ, எப்போது பிறவிச் சுழலில் இருந்து வெளியேறுவேனோ எதுவும் அறியாத மடையனாக போய்விட்டேனே, இன்னும் பிறப்பேனோ இந்த மூடனுக்கு கச்சி ஏகாம்பரனே நீயே கைகொடுத்து பிறப்பறுப்பாய் என்பது பாடலின் பொருள்.

சுருக்கமாகச் சொன்னால் “தத்வமசி” அதாவது தன்னை அறிதல் எனும் உண்மையினைப் போதிக்கின்றார் சிவவாக்கியர், நீ உடல் அல்ல நீ ஒரு ஆத்மா, உடல் அழியும் ஆத்மா அழியாதது அதனால் ஆத்ம ஈடேற்றத்துக்கான வழிகளைத் தேடு அது பஞ்சாட்சர மந்திரத்தில் உள்ளது எனப் போதிக்கின்றார் சிவவாக்கியர்.

சிவ வாக்கியர் பாடல்கள் ; 44

“அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் ஆசையுமோ

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ

இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ

செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே”

அதாவது வானத்தை அம்பு வீசி உடைந்து போ என்றால் உடையுமா? பாற்கடலை ஒரு கம்பம் கொண்டு கலக்கினால் கலங்குமா?

         அப்படி இன்பங்களை துறந்து ஞானம் பெற்ற முழு யோகியினை இருளோ துன்பமோ வந்து அணுகுமா? அணுகாது.

ஏ மாந்தர்களே, ஏன் எப்போதும் கலங்கி தவித்து அழுது புலம்பி ஏதோ தேடி தேடி வாழ்வை தொலைக்கின்றீர்கள், பொன்னம்பலத்தில் ஆடும் சிவனை நினைத்து “சிவாய நம” என மந்திரத்தைச் சொல்லித் தியானியுங்கள்; அதனால் யோக நிலை அடைவீர்கள் அழியா நித்திய நிம்மதி பேரானந்தமும் அடைவீர்கள் என்பது பொருள்.

வானம் கலங்காது, கடல் கலங்காது என்பது போல ஞானம் பெற்ற மனம் எந்தத் துன்பத்துக்கும் கலங்காது, அப்படியான மனதை அடைவது சுலபமல்ல, பொன்னம்பலத்தில் ஆடும் சிவனைத் தியானித்து “சிவாயநம” எனும் மந்திரத்தைச் சொல்லி சொல்லி, மனதை அடக்கி இந்திரியங்களை அடக்கி உலகமாய இன்பங்களை துறந்தால் அந்த வைராக்கிய ஞானநிலை அடையலாம், அதை அடைந்தவன் யோகி, அந்த யோகியினை எதுவும் பாதிப்பதில்லை என்பது சிவவாக்கியரின் போதனை.

“சிவாய நம எனச் சித்த ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாகிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே”

               என்பது திருமூலர் பாடல்…..

சிவ வாக்கியார் பாடல்கள் ; 45

“சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே

சக்தி ஏது சம்பு ஏது சாதிபேதம் அற்றதேது

முக்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது

வித்திலாத வித்திலே இன்னதென்று இயம்புமே”

இது ஆன்மீகத்தின் கடை நிலைக்குச் சவால்விடும் பாடல், அதாவது ஒரு முழு உண்மையினைச் சொல்லும் பாடல்.

இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? தெய்வத்தின் நோக்கம் என்ன? பரம்பொருளின் மூல வடிவம் மூல இயக்கம் என்ன? என்பதை எந்த மகான்களாலும் சொல்லமுடியாது. அப்படி ஒருவன் முழுக்க அறிந்து கொண்டதாக கூறினால் அது பொய், மகான்களும் ஞானியரும் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாக அறிந்தார்களே தவிர முழு இறைதன்மையினை அறிந்தவர் புரிந்தவர் எவருமில்லை எனச் சொல்வார் திருமூலர் பெருமான்.

அதையே விஞ்ஞானம் சொல்லும். இந்தப் பிரபஞ்ச இயக்க விதியினை அறியலாமே தவிர இதெல்லாம் ஏன் படைக்கபட்டது? எந்தச் சக்தி இயக்குகின்றது? ஏன் இயக்குகின்றது என்பதை எக்காலமும் அறிய முடியாது.

                இந்தத் தத்துவங்களின் பின்னணியில் இப்பாடலை புரிந்து கொள்வது சுலபம். தன்னை மகான் என்றும், ஞானியர் என்றும் சொல்பவர்களை நோக்கி அல்லது அதுதான் ஞானம் இவர்தான் அவதாரம் எனச் சொல்பவர்களை நோக்கிச் சொல்கின்றார்.

                     அதாவது சித்தம் அதாவது முழுக்க சித்தன் எனச் சொல்வதன் வரையறை என்ன? சிந்தனை எங்கிருந்து வருகின்றது? சீவன் எங்கே உலாவுகின்றது அல்லது எங்கே இருக்கின்றது? சக்தி என்றால் என்ன எனச் சொல்லமுடியுமா அல்லது சம்பு (சம்போ) எனும் ஈசனைப் பற்றி முழுக்க தெரியுமா?

              வகை வகையாக பிரித்து பார்க்கமுடியாதது எது? முக்தி என்றால் என்ன? மந்திரங்களின் மூலம் எது? எனச் சொல்லமுடியுமா?

எவனாலும் முடியாது…

              அதனால், எந்த ஆதாரமும் தொடக்கமும் முடிவும் இல்லாமல் நிற்கும் அந்தப் பெரும் சக்தி பற்றி, வித்து இல்லாமல் எல்லாவற்றுக்கும் மூல வித்தான இறைவன் பற்றி உங்களால் சொல்லமுடியாது அல்லவா?

அப்படியான நிலையில் ஏன் வீணாக எல்லாம் அறிந்தவர்போல் பிதற்றி திரிகின்றீர்கள், யாராலும் முழுக்க அடைய உணரமுடியா இறைசக்தியினைச் சரணடைந்து அப்படியே பணிவதே மானுடக் குலத்தினால் முடிவது அதைச் செய்யுங்கள். மாறாக, வீண் ஆராய்ச்சி அர்த்தமற்றது என்பது பாடலின் பொருள்.

இந்தப் பாடல்

“அவனருளாலே அவன்தாள் வணங்கி”

            எனும் அந்த திருவாசக வரியின் சாயல்….

விஷ்ணும் பிரம்மனுமே அடிமுடி காணமுடியாச் சிவனை, அந்தப் பரம்பொருளை முழுக்க மானிடரால் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

அந்த மகா பரம்பொருளை வாலை குமரியின் ஞானமோ, சித்த நிலையோ, பெரும் மந்திரங்களோ முழுக்க அறிய உதவாது, முடியாது. அந்த மகா பரம்பொருளின் ஒரு துளி ஆன்மாவாக நம்முள் உள்ளது.

அந்தப் பரம்பொருள் யாருக்குக் கருணை கொள்ளுமோ அவர்கள் மானிட நிலையினை விட சற்று மேம்பட்ட ஞான நிலையினை அடைவார்களே தவிர அவர்களாலும் முழு இறைநிலை அடையமுடியாது புரியமுடியாது. அந்த மகா சக்தி யாராலும் புரிந்துகொள்ள உணர்ந்து கொள்ள முடியாதது, மாறாக அப்பரம்பொருளை அண்டி பணிந்து வணங்கினால் மனிதனும் அடுத்த ஞான நிலை அடையலாம் பிறப்பில் இருந்து உய்யலாம் என்பது சிவவாக்கியரின் போதனை.

மானுடரே பூலோக வாழ்வு என்பது கர்மம் கழிப்பது, பிறப்பு சுழலில் இருந்து விடுபட பாடுபடுவது, அந்தப் பூலோக வாழ்வில் இருந்துகொண்டு முழுக்க இறைவனை அறிந்தவர்போல் பேசுவது கூடாது. மாறாக, அவன் பாதம் பணிந்து பிறப்பறுந்து கர்மம் தீர்ந்து செல்லும் வழியினைக் காணுங்கள். அந்தப் பரம்பொருளை ஆராய்ந்தால் ஒரு நாளும் முழுக்க புரிந்துகொள்ள முடியாது, யாராலும் முடியாது என்கின்றார் சிவ வாக்கியர்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 46

“சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்

சக்தியற்று சம்புவற்று சாதிபேதமற்று நன்

முத்தியற்று மூலமற்று மூலமந்திரங்களும்

வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே”

தியானத்தில் மூழ்கி முழு மௌன நிலைக்குச் சென்று நினைவினை அகற்றி மனத்தை குவித்து, தான் தன் அறிவு தன் மனம் தன் சக்தி, தன் ஞான நிலை, சிவன் சக்தி என வேறுபடுத்தி வணங்கும் வழிபாடு, மூலமந்திரம், முக்தி பற்றிய சிந்தனை, தன் வித்தை கல்வி தனிப்பட்ட திறன் என எல்லாம் மறந்து, தன்னை மறந்து பரம்பொருளில் கலக்கும் நிலையே சிவயோக நிலை எனப்படும் என்பது பாடலின் பொருள்.

சிவவாக்கியர் சொல்வது இங்குத் தன்னை மறந்த நிலை.

                 யோகத்தின் உச்சநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை, இறைசக்தியோடு கலக்கும் அந்த மகா உன்னத உச்சி நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்கின்றார் சிவவாக்கியர்.

தான் எனும் மனம் அகன்று, சிந்தை அகன்று, இந்த உடல் மனம் எல்லாம் கடந்து, உடலுக்கான பந்தங்களை பூலோக எல்லைகளைக் கடந்து இன்னும் அழுத்தமாகச் சொன்னால் ஒரே பரம்பொருளை பல வகை வடிவங்களில் வணங்கும் அந்த வேறுபாடுகளை மறந்து, மந்திரங்கள் எல்லாம் கடந்து, தன் வித்தை தன்னைப் பற்றிய எல்லாப் பெருமையும் சிறப்பும் இழிவும் அவமானமும் கடந்து தான் எனும் எண்ணமே இன்றி இறையில் கலத்தலே சிவயோக நிலை என்கின்றார்.

யோகத்தின் உச்சியில் தன்னை மறந்து சிவனோடு கலக்கும் மிக உன்னதமான சமாதி நிலை ஏற்படும் அப்பொழுது பேச்சும் சிந்தனையும் வராது. மனம் முழுக்க இறைவனில் கலந்துவிடும்

அந்த ஞான நிலையினைத்தான் இங்கு அழிவில்லா பெருநிலை என்கின்றார் ஒளவையார்.

இதனைத் தன் விநாயகர் அகவலிலும் அவர் சொல்வார்…

“வாக்கும் மனமும் இல்லா மனோலயம்”     

           என்பார் ஒளவை சித்தர்….

வாக்கு என்றால் பேச்சு, மனம் என்றால் சிந்தனை. யோகத்தில் பேச்சு வரா நிலை, சிந்தனையினைக் கடந்த நிலை என்பது உச்சம். அந்த ஞானப்பெருநிலையில் பேசவோ அல்லது சிந்திக்கவோ வராது அல்லது அவசியமே இல்லை.

              எப்பொழுது பேச்சும் சிந்தனையும் கடந்த நிலை வரும் என்றால் அதற்கு அவசியமற்ற நிலை வருமென்றால் முழுக்கத் திருப்தி அடைந்த நிலையில்தான் எல்லாம் பூர்த்தியான பரிபூரண நிலையில்தான் அந்த நிலை வரும்.

யோகத்தால் எல்லாம் கடந்த ஒரு நிலை வரும். விநாயகப் பெருமான் அதை அருள்வார் என்பதைத்தான் பேச்சற்ற நிலை, சிந்தனையற்ற நிலை கொடுத்த எம்பெருமானே என்கின்றார் ஒளவையார். அதாவது பரிபூரண நிலையினை எட்டியதைச் சொல்கின்றார்.

மனதை அடக்கி அதில் இருந்து எழும் வார்த்தைகளை அடக்குதல் என்பது யோகத்தின் வெற்றி. காரணம் மனம் இடையறாது சிந்தித்தபடியே இருக்கும் அந்த சிந்தனைகள் வாக்காக வெளிவரும்.

இதை அருணகிரி நாதரும் சொல்வார். “கந்தர் அனுபூதியில்” அதைப் பாடுகிறார் அருணகிரியார்….

“செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மாயிரு சொல்லற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே”

“சொல்லற” என்பது வாக்கு எனும் பேச்சினைக் கடந்த நிலை சொல்ல ஒன்றுமில்லா நிலை என்பதை அங்கே குறிப்பிடுகின்றார். அந்த அடங்கிய மனதோடு அதாவது மன லயத்தோடு தொடர்கின்றார் ஒளவையார்.

“பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே”

பேச்சற்ற நிலை எனும் பேரானந்த நிலையில் மாசற்ற சிவநிலையினை அடையலாம் எனச் சிவவாக்கியர் சொன்னதை தன் இன்னொரு பாடலில் சொல்கின்றார் திருமூலர்.

“வாக்கு மனமும் இரண்டு மவுனமாம்

வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம்

வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே

ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே”

இன்னும் ஒரு சித்தர் பாடல் உண்டு….

“மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்

மோனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்

மோனம்கை வந்தூமை யாம்மொழி முற்றும் காண்

மோனம்கை வந்தைங் கருமமும் முன்னுமே”

சிவ வாக்கியார் பாடல்கள் : 47

“சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ

பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே”

நமது மத மாபெரும் தாத்பரியப்படி சாதி என்பதோ, சாதிய வேறுபாடு என்பதோ ஒருகாலமுமில்லை. அப்படி ஒரு நிலை ஆட்சி தந்திரம், சில சமூக குழப்பங்களால் வந்த போது நமது தாத்பரியம், நமது மதத்தின் மகா மேன்மையான ஞானம் அறிந்தோர் அதை கண்டித்தனர். நமது மதத்தில் சாதி எனும் விஷம் கலந்தபோது  அதை ஒழிக்கவும் போராடினார்கள். அதை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் செய்தனர், அன்றைய காலத்தில் செய்தவர் சிவவாக்கியர்….

அதைத்தான் இப்பாடலில் சொல்கின்றார், பாடலின் விளக்கம் அதைத் தெளிவாகச் சொல்கின்றது…

               அதாவது சாதி என்பது ஏது? அப்படி ஒன்று இருக்கத்தான் முடியுமா? ஆறு குளம் கடல் எனப் பிரித்தாலும் அடிப்படையில் அது நீர் அல்லவோ?  நீர் எனப் பிரிக்கத்தான் முடியுமா? அது பஞ்ச பூதத்தில் ஒன்றல்லவோ? பஞ்சபூதம் சிவவடிவம் அல்லவா?

               காதில் கம்மலாகவும், மூக்கில் மூக்குத்தியாகவும், இன்னும் கையில் தண்டம், வளையல்.  பாடகம் (கொலுசு) என வகை வகையாக நகை செய்தாலும் தங்கம் ஒன்றுதானே. அப்படி மானுடரைச் சாதி எனப் பிரிக்கமுடியுமா? அடிப்படையில் எல்லோரும் ஒரே மனிதர்கள் அல்லவா? என்பது பாடலின் பொருள்.

இங்கே சிவ வாக்கியார் மிகத் தேர்ந்த சூட்சுமத்தைப் போதிக்கின்றார்.

              எப்படி நீரை வேறுபடுத்த முடியாதோ, தங்கத்தை வேறுபடுத்த முடியாதோ அப்படி மானுடரையும் சாதி என வேறுபடுத்த முடியாது. காரணம் நீர் எல்லாம் பூமியில் ஒன்று என்பது போல மானுடரின் ஆத்மா சிவ வடிவம். எல்லா மனிதரின் ஆத்மமும் அவன் வடிவம், சிவனே எல்லா மனிதருள்ளும் இருக்கின்றான். அப்படி இருக்கையில் எப்படிச் சாதிபேதம் பார்க்க முடியும்? எப்படி உயர்ந்தோர் தாழ்ந்தோர் சொல்லமுடியும்?

             அந்த மகா பெரிய சக்தி எனும் பரமாத்மாவின் சாயலிலே அம்சத்திலே எல்லோருள்ளும் ஒரே ஆத்மா குடிகொண்டிருக்கின்றது. அவ்வகையில் எல்லா மனிதரும் ஒன்றே எனத் தேர்ந்த ஞானத்தில் சொல்கின்றார் சிவவாக்கியர்.

இதையே ஒளவை சித்தர் சொன்னார்…

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி”

“‘சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்” “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” “சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே”

            என்பது சித்தர்கள் வாக்கு…..

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே”

           என்பது வள்ளலார் வாக்கு…..

இந்தச் சித்தர் பரம்பரை வழிவந்த ஞானமகன் பாரதி அதையே சொன்னான்…

“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்”

சிவ வாக்கியார் பாடல்கள் : 48

“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணைய் மோர்புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டு போய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”

அதாவது, பசுவில் இருந்து பாலை கறந்து விட்டால் மீண்டும் அதன் மடிக்குள் செலுத்த முடியாது. தயிரை கடைந்து வெண்ணை எடுத்தபின் மீண்டும் அதனைப் பழையபடி மோரில் புகுத்த முடியாது. சங்கு உடைந்தால் ஓசை வராது, சங்கு பூச்சியினைப் பிரித்துவிட்டால் மீண்டும் சங்கினுள் சேராது.

           மரத்தில் இருந்து உதிர்ந்து விட்ட காயும் மலரும் மீண்டும் மரத்தில் போய் ஒட்டாது. அப்படியே இறந்தவர் எக்காலமும் திரும்ப வருவதே இல்லை, அது நடக்காத ஒன்று என்பது பொருள்.

வாழ்க்கை என்பது ஒரு வழிப்பயணம் எனச் சொல்லும் சிவவாக்கியர் இங்கு அழுத்திச் சொல்லும் விஷயம். அந்த வாழ்க்கையில் சிவனை பற்றித் தியானித்துப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது.

              வாழும் காலமே இறைவனைத் தேடவேண்டும். மாய சந்தோஷங்களில் வெற்று மயக்கங்களில் ஓடியாடி தேடியபின்பு கடைசிக் காலத்தில் வந்து விழுவதில் அர்த்தமில்லை. சாவு எப்போது வரும் எப்படி வரும் எனத் தெரியாத வாழ்விது.

ஒருமுறை பிறக்கும் வாழ்வு, ஒரே ஒருமுறை கிடைக்கும் இவ்வாழ்வு நிச்சயமற்றது நிலையற்றது அடுத்த நொடி அறியபடாதது எனும் நிலையில் வாழும்போதே இறைவனைத் தேடி பற்றிக் கொள்ளல் வேண்டும் மாந்தர்களே. ஒருமுறை பிறக்கும் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் முக்கியம் அதை வீணாக்காமல், மாயைகளில் சிக்காமல் இறைவனைத் தேடி அடைய பாடுபடுங்கள் என்பது சிவவாக்கியர் இப்பாடலில் சொல்லும் போதனை.

இதைத்தான் பட்டினத்தாரும் பாடினார்.

“வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்

போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்

தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே”

இன்னும் பாடுவார்.

“நினைமின் மனனே! நினைமின் மனனே

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை

நினைமின் மனனே! நினைமின் மனனே!

அலகைத் தேரின் அலமரு காலின்

உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்”

“காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே

பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானையே கூறு”

பெரியாழ்வார் மிக உருக்கமாக இந்த தத்துவத்தைப் பாடுவார்.

“எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

      எற்றி நமன்-தமர் பற்றும்போது

நில்லுமின் என்னும் உபாயம் இல்லை

      நேமியும் சங்கமும் ஏந்தினானே

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்

      சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்

அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்

      அரங்கத்து அரவணைப் பள்ளியானே”

எனத் தன் இறுதிகாலத்தில் அரங்கன் வந்து தன்னைக் காக்கவேண்டும் என மன்றாடுகின்றார் பெரியாழ்வார்.

ஆதிசங்கரரின் ஸ்லோகம் ஒன்று உண்டு, சுப்பிரமண்ய புஜங்கத்தில் பாடுவார்…

“ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் |

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா||”

அதாவது “உயிர் மங்கும் பொழுது உனது தாள்களை நினைக்கச் சத்தியற்றவனாகி விடுவேன். ஓ! செந்திலாய்! எனச் சொல்ல இயலாதவனாகி விடுவேன். கைகள் குவியேன். அயர்வடைகின்ற அவ்வேளையில், ஐயா! அடியேனைக் கை விட்டுவிடாதே. இன்றே உனக்கு நான் அடைக்கலமானேன்” என்பது பொருள்.

வாழும்போதே இறைவனைத் தேடிப் பற்றிக்கொள்ளல் வேண்டும். மாயைகளில் சிக்காமல் இளமையிலே பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை எல்லா ஞானியரையும் போல இப்பாடலில் விளக்குகின்றார் சிவவாக்கியர்.

சிவ வாக்கியார்  பாடல்கள் : 49

“அறையினில் கிடந்தபோது அன்று தூமை என்கிறீர்

துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்

பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்

புரை இலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே?”

இங்கே தூமை என்பது  தூய்மை எனும் பொருளில் வருகின்றது. அன்று தூமை என்றால் தூய்மை அல்ல எனப் பொருள்.

பொதுவாக தூமை என்பதன் பொருள் பெண்கள் தொடர்பானது, அவர்களுகென பரம்பொருள் படைப்பின் தத்துவப்படி விதிப்படி கொடுக்கப்பட்ட சிறப்பான ஒரு வரத்தை அந்த வார்த்தையில் குறிப்பது தமிழக நாகரீக மரபு. அது தூய்மை, வெண்மை, சுத்தம் எனும் பொருளிலும் வரும். அதைக் கொண்டு பாடலைக் காணலாம்.

இப்பாடலின் பொருள் இதுதான்;

             “தரையில் பெண்ணோடு கூடிய பின் தீட்டு என்கின்றீர்கள். பெண் பூப்படைந்த நாள் தொடங்கி மாதாந்திரம் தீட்டு என்கின்றீர்கள். குழந்தை பிறந்த நாளை தீட்டு என்கின்றீர்கள். இறந்த வீட்டில் பறை அடித்து சடலத்தை எடுத்துச் செல்லும் நாட்களை தீட்டு என்கின்றீர்கள். இப்படியெல்லாம் தீட்டு தீட்டு எனச் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி இறைவனை அனுதினமும் பூஜித்து இறைநிலை அடைவீர்கள்”

ஒரு மூட நம்பிக்கை ஒன்றை ஓங்கி அடிக்கின்றார் இங்குச் சித்தர் சிவவாக்கியர்.

             அதாவது நமது சமூகம் மக்களின் மனம் அறிந்த, உடல் இயக்கம் அறிந்த, நோய் தடுப்பு சமூகம். அது எல்லாவற்றையும் எல்லாக் கோணங்களிலும் யோசித்தது ஆண் பெண் கலப்பு என்பது இயல்பு. அது பிரபஞ்ச படைப்பு விதி. ஆனால் அதன் பின் சுகாதார விஷயங்களுக்காக அவர்கள் நீராட வேண்டும் என வலியுறுத்திற்று, அப்படி நீராடிய பின்னும் சில மணிநேரம் கிருமிகள் இருக்கலாம் என்பதால் அது கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லிற்று.

               பெண்களுக்கான வழிபாட்டு நாட்களில் அவர்களுக்கு மனம் உளைந்திருக்கும். ஒருவித பதற்றம் இருக்கும். உடலாலும் மனதாலும் அவர்களுக்கு ஓய்வு அவசியம். அந்த ஓய்வில் சுகாதாரமும் அவசியம் என்பதால் தள்ளி இருந்து ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.

குழந்தை பிறக்கும் போதும் அதே மனநிலை பெண்களுக்கு உண்டு. சிருஷ்டிகர்த்தா அப்படித்தான் எல்லா உயிரையும் படைத்திருக்கின்றான். ஒரு உயிர் தன்னில் ஜனிக்கும் போது அதைப் புதிதாக தன்னோடு சேர்த்து அணைக்கும் போது பசு, முதல் கோழி வரை ஒரு பொறுப்புணர்ச்சியில் ஆக்ரோஷமாக காணப்படும் இது மானிச் சாதியிலும் உண்டு. அதனால் அந்நாட்களில் அவர்களைத் தள்ளி இருந்து ஓய்வெடுக்கச் சொன்னார்கள். இதில் மருத்துவ சுகாதாரமும் உண்டு. உடலால் அவர்கள் தேறிவர அது அவசியம்.

இறக்கும் வீட்டிலும் சில விஷயங்களைக் கவனித்தார்கள் முன்னோர்கள். அந்த உடலில் கிருமி இருக்கலாம். அது, வீட்டில் உள்ளோரிடம் பரவியிருக்கலாம். இன்னும் மனதாலும் உடலாலும் அவர்கள் தளர்ந்திருக்கலாம். அவர்கள் செய்யவேண்டிய லௌகீக கடமைகள் நிறைய இருக்கலாம். ஒருவர் வீட்டில் இருந்து பிரியும் போது உடலாலும் மனதாலும் கடமைகளாலும் ஒரு குடும்பம் மீண்டுவர நாளாகும். அந்நாட்களில் தள்ளி இருந்து ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.

இப்படி ஓய்வுகளை மருத்துவ மற்றும் மனநல காரணங்களுக்காக அன்றே நமது மதம் அனுமதித்தது. பின் அது தீட்டு என மாறிப் போனது. நமது மதம் எதையும் திணிக்காது, கட்டாயப்படுத்தாது. அது பரிந்துரை மட்டுமே செய்யும். நல்ல ஆலோசனை வழங்கும். ஆனால் பின்னாளில் கடும்போக்கில் பரிந்துரைகள் கட்டாயமாயின. அந்தக் கட்டாயத்தில் தீட்டு எனும் சொல் மிக மிக கடுமையாயிற்று.

அப்படிக் கட்டாயமான பின், பொது வழிபாட்டு இடமான ஆலயத்துக்குத் தீட்டானவர்கள் வரக்கூடாது என்றாகி பின் தீட்டு நாட்களில் வழிபடக் கூடாது. அது தெய்வத்துக்குப் பிடிக்காது எனும் அளவில் நிலைமை தீவிரமானது.

இதைத்தான் சாடிச் சொல்கின்றார் சிவவாக்கியர்.

தீட்டு என்பது ஒரு ஓய்வெடுக்கும் விஷயம். அந்த ஓய்வில் இறைவனை நினைக்காமல் இருந்தால் நினைக்க கூடாமல் இருந்தால் அது எப்படிச் சரியாகும்?

         உடல் வேறு ஆன்மா வேறு மனம் வேறு அல்லவா? உடலால் ஒரு ஓய்வோ சில மாறுதலோ வந்தால் அது பூலோக வாழ்வுக்காக வந்த இந்த உடலின் தன்மை, ஆன்மா தங்கியிருக்கும் கூட்டின் தன்மை.

அதற்காக அந்நாளில் இறைவனைத் தியானிக்காமல் வழிபடாமல் இருந்தால் எப்படி, இறைவன் தீட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அல்லவா/ அதனால் தீட்டு தீட்டு எனச் சொல்லி நாட்களை வீணாக்காமல் அந்தப் பரமனை எந்நேரமும் போற்றி மனதால் வணங்குங்கள். அவன் மானிட பூலோக தன்மைகளுக்கு அப்பாற்பட்ட சக்தி, அந்தப் பரமனுக்கு எந்த தீட்டும் இல்லை எனப் போதிக்கின்றார் சிவவாக்கியர்.

சோமாசி மாற நாயனார் முதல் நந்தனார் வரை சொல்வது இந்தத் தத்துவத்தையே, காரைக்கால் அம்மையார் முதல் மாயம்மா வரை இன்னும் ஏராளமான பெண் சித்தர்கள் வரை சொல்வது இதுதான்.

இறைவன் மானுட உடல் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவன். ஆத்ம ரீதியான மனம் ஒடுங்கிய பக்தி ஒன்றே அவனுக்குக் கட்டுப்படுவான். தீட்டு என்பது உடல் சார்ந்தது. பறவைகள் எச்சம் கோபுரத்தில் இருப்பதற்காக தெய்வம் கோவிலுக்கு வராமல் செல்வதில்லை அப்படி இதெல்லாம் ஈசனுக்கு ஒரு பொருட்டே அல்ல அதை மனதில் கொண்டு தீட்டு எனச் சொல்லிகொண்டிராமல் மனதால் வழிபடுங்கள். விடாமல் வழிபடுங்கள் அப்பரமன் அருள் கிடைக்கும் என்கின்றார் சிவவாக்கியர்

ஒரு சித்தர் பாடல் உண்டு அதன் பொருள் இப்படி வரும்..

             உயிர்களைக் கொல்லக் கூடாது என்பவர்கள் மான் தோலில் அமர்வது ஏன்? மீன்கள் உண்ணக் கூடாது என்பவர்கள் மீன் வாழும் குளத்தின் மீன் எச்சில் செய்யும் நீரை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவது ஏன்? புனுகு என்பது பூனையின் கழிவுதானே என்றெல்லாம் கேள்விகளை எழுப்புவார்கள்….

அதாவது தீட்டு என எதுவுமில்லை, எல்லாமே சில உடல் மன காரணங்களுக்காக ஏற்படுத்தபட்டவை. அந்தக் காரணங்களை அறியாமல் அதைக்காட்டி இறைவழிபாட்டில் இருந்து ஒருவனை விலக்குதல் கூடாது என எக்காலமும் நல்லோர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். காலத்தால் சில இந்துமத பரிந்துரைகள் கடுமையான விதியாக்கபட்டபோது, இந்துக்களில் நல்லோர் யோகியர் அறிவில் சிறந்தோர் உருவாகி அதை எதிர்த்து உடைத்துக் கொண்டே இருந்தனர். அவர்களில் அன்றே வந்த சிவவாக்கியர் இந்த விதிகளைக் கண்டித்து, கடும் கட்டுப்பாட்டைக் கண்டித்து தன் பாணியில் பாடிப் போதிக்கும் பாடல் இது.