ஜல்லிகட்டு காளை
சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை
எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு
பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை.
அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும்.
களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் தன் வீட்டு பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னால் தலைகுனிந்து வந்து பணிவாக நிற்பதும், அவர்களுக்கு கட்டுபட்டு பின்னால் நடப்பதும் ஒரு வித அழகு மற்றும் ஆச்சரியம்.
அந்த அழகான காட்சிகளை தமிழகம் கண்குளிர கண்டு கொண்டிருக்கின்றது.
எல்லோரையும் சிதறடித்துவிட்டு மைதானத்தில் அடுத்தவன் எவன்? என சில காளைகள் மைதானத்தில் நிற்கும் அழகு முன்னால் எந்த குத்துசண்டை வீரனும், கால்பந்து வீரனும், கிரிக்கெட் வீரனும் வரமுடியாது.
அந்த கெத்தும் தைரியமும் ஒரு வித ஆக்ரோஷமும் கவனுமாக அக்காளைகள் நிற்கும் கம்பீர அழகு ஆயிரம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் கம்பீரத்துக்குச் சமம்.
ஜல்லிகட்டு என்பது உலகெல்லாம் பண்டைய காலத்தில் இருந்தே வேறு வேறு சாயலில் உண்டு, அது கிருஷ்ண பரமாத்மா வாழ்வில் உண்டு , பாரதம் முழுக்க முன்பு இருந்திருக்கின்றது.
இன்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் உண்டு. ஆனால் அங்கெல்லாம் காளைகளை கொன்று விடுவார்கள், பீட்டா இது பற்றியெல்லாம் பேசாது.
பின்னாளில் புத்தகாலத்தில் இந்த விளையாட்டு இந்தியாவில் முடக்கப் பட்டாலும் தென்பாண்டி மண்ணில் நீடித்தது.
நிச்சயம் இது பாண்டிய மண்ணின் விளையாட்டு, பிற்காலத்தில் பாண்டியர் இன்றைய இந்தோனேஷிய பகுதிகளை ஆளும் பொழுது , அதாவது சுப மதுரா எனும் சுமத்ரா பகுதிகளை ஆளும்பொழுது அங்கும் இந்த விளையாட்டு பரவிற்று, இன்னும் அப்பக்கம் உண்டு.
இந்தோனேஷியா என்ன, சிந்து சமவெளி காலத்து பொருட்களில் இருக்கும் காளை அடையாளமே அது தமிழனின் கலாச்சாரம் என உலகுக்கு சொல்கின்றது.
நாம் மதுரை பக்கம் நடக்கும் ஜல்லிகட்டினை ரசித்து பார்க்கின்றோம், அந்த காளைகள் களத்தில் தொட்டுபார் என மல்லுகட்டி நிற்பதும், கோட்டை கடந்துவிட்டால் சிறுமியருக்கும் கட்டுபட்டு நடப்பதும் மகா மகா ரசனையான காட்சிகள்.
அன்றைய இந்துக்கள் காளையும் பசுவும் மானிட வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தார்கள், மாடுகள் பெருக பசுவும் பலமான ஆரோக்கியமான காளையும் அவசியம் என்பதை உணர்ந்தார்கள்.
இதனால் காளைகளில் சிறந்ததை கோவில் காளை என்றும் சிவ வாகனம் என்றும் காத்தார்கள், ஜல்லிகட்டு போன்ற விளையாட்டின் மூலம் பலமிக்க காளைகளை உருவாக்கினார்கள்.
இதனால் மாடு எனும் செல்வம் பலமாக ஆரோக்கியமாக பெருகிக் கொண்டே இருந்தது.
ஆட்டு மந்தையிலும் கோழி மந்தையிலும் கடாவும் சேவலும் கோவிலுக்கு என நேர்ந்துவிடும் வழக்கம் இதுவே, அது ஆரோக்கியமான மந்தையினை உருவாக்கும்.
மிக அருமையான சூட்சுமமும் வாழும் ரகசியம் இந்துமதம் எனச் சொல்லி பிணைக்கப்பட்ட அந்த சனாதான தர்மம் அக்காலத்தில் ஞானமிகு வழியினை சமூகத்துக்கு கொடுத்தது.
கோவில் காளை, கோவில் ஆடு, சாமிக்கு நேர்ந்த சேவல் போன்றவை இவ்வகையே.
ஜல்லிகட்டு இப்பொழுது உற்சாகமாய் நடக்கின்றது, இப்பொழுதெல்லாம் சேவல் சண்டைகளும் அதிகம் நடத்தபடுகின்றன, அவைகளும் அதே குணமே. களத்தில் ஆக்ரோஷமாக நிற்கும் சேவல்கள் களத்தை கடந்ததும் கோழிகுஞ்சு போல் கைகளில் அடங்குகின்றது.
ஆங்காங்கே ஆட்டு கிடா சண்டையும் நடக்கின்றது என்கின்றார்கள்.
யோசித்துப் பார்த்தால் அன்றில் இருந்தே தமிழக இந்துக்கள் யானை, காளை, சேவல், கடா என எல்லா உயிர்களையும் பழக்கும் மொழி தெரிந்திருக்கின்றது, அவன் வாழ்வு அப்படி இயற்கையோடு இணைந்திருக்கின்றது.
இயற்கையோடு இணைந்து வாழ இந்துதர்மம் இப்படியான அழகான வழிகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்பு முத்துகுளிக்கும் பொழுது சுறாக்கள் ஒதுங்கி செல்லும் அளவு சில வகையான மொழிகளை வைத்திருந்தானாம் தமிழக இந்து.
எல்லா உயிரையும் சக உயிராக நினைத்து வளர்த்து வாழ்ந்திருக்கின்றான், அவைகளோடு பழகியிருக்கின்றான், பேசியிருக்கின்றான்.
அதன் தொடர்ச்சிதான் இந்த விளையாட்டுக்கள், எக்காரணம் கொண்டும் இவற்றை தவறவிடாதீர்கள், குடும்பத்தோடு பாருங்கள் மனம் அதில் லயிக்கும்.
ஆம், பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் கலந்துவிட்ட உணர்வுபூர்வமான காட்சிகள் இவை.
பல அறங்களை போத்தித்த சனாதன தர்மத்தின் ஒரு அறம் இது, அதை ஒவ்வொரு இந்துவும் கண்டு உணர்ந்து களித்தல் நன்று.