தசமஹாவித்யா – முன்னுரை.
தசமஹாவித்யா – முன்னுரை.
நவராத்திரி காலங்களில் வணங்கப்பட வேண்டிய ஆதிபராசக்தியின் வடிவங்கள், அந்த மஹாலட்சுமியின் வடிவங்கள் பத்தும் முக்கியமானது, தசமஹா வித்யா என அவை இந்துதர்மத்தால் பெரிய இடத்தில் வைத்துப் போற்றப்படும் வழிபடப்படும் அம்மன் அம்சங்கள்.
இந்துமதம் தொன்மையானது, ஆழமானது மட்டுமல்ல அது முழு ஞானமுமானது, அதில் இல்லாத விஷயம் எதுவும் எங்குமில்லை, இங்கு இல்லாதது எங்குமில்லை எனும் அளவு அற்புதமான புதையல் அது.
அம்மதத்தின் சிறப்பே அதனைப் புதையல் போல் தேடி தேடி அடையவேண்டும் என்பதே, தேடல் ஒன்றுதான் இந்துமதத்தின் அடிப்படை, அப்படிப் பிரபஞ்ச ரகசியங்களை வாழ்வின் நுணுக்கங்களை, கர்மத்தின் பலனை முழு இறைவடிவினை தேடி தேடி அடைய சொன்ன மதம் இந்துமதம்.
அப்படிப்பட்ட ஞானதேடலுக்குத் துணைவந்து பெரும் சூட்சுமங்களைப் போதிப்பவை இந்தப் பத்து தேவதை அம்சங்கள். இதில் ஆன்மீகம் உண்டு, அறிவியல் உண்டு, பிரபஞ்ச ரகசியம் உண்டு, உடல் இயக்கம் உண்டு, ஞானதர்ம போதனையும் உண்டு.
இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லாமும் படைக்கப்பட்டு இயக்கப்படும் ரகசியம் முதல் அந்தப் பிரபஞ்ச தத்துவம் உடலில் எப்படி உண்டு என்பதையும் சொல்லி, இந்த உடலில் மறைந்திருக்கும் அந்தச் சக்தியினைப் பிரபஞ்சத்தோடு இணைத்து மாபெரும் வரங்களை பெறுவது எப்படி அல்லது குறைந்தபட்சம் மிக நிம்மதியாக வாழ்வது எப்படி எனப் போதிப்பதே இந்தத் தசமஹா வித்யா தத்துவம்.
ஒரு மனிதனுக்கு மிகக் குறைந்த தேவை நிம்மதி, ஆத்மார்த்தமான தேவை அதுதான், அதனை முழுக்கத் தந்து நல்வாழ்வும் முக்தியும் தருவது இந்தத் தசமஹா வித்யா வழிபாடு.
ஆண் தெய்வங்களுக்கான வழிபாட்டுமுறையினை மந்திரம் என்றும், பெண் தெய்வங்களுக்கான வழிபாட்டை வித்யை அல்லது வித்யஹை என்றும் சொன்ன இந்துமதம் இந்த 10 பேரையும் வித்யைகள் என்றது.
பத்துவகையான பெரும் வரங்களைத் தந்து வாழவைப்பவர்கள் என அது மக்களுக்குப் போதித்தது, இந்தப் 10 பேரையும் வழிபடவும் நெஞ்சில் நிறுத்தவுமே அது நவராத்திரி காலங்களையும் சொன்னது.
இந்த பத்து அம்சங்களும், பத்து மகா தேவதைகளும் எப்படி வெளிபட்டார்கள், எந்தச் சூழலில் இவர்கள் வெளிப்பட்டார்கள் என்பதையும் புராணமே சொன்னது.
தட்சன் செய்த யாகத்தில் இருந்து இந்தத் தசமஹா வித்யை காட்சி தொடங்குகின்றது, தக்கன் அல்லது தட்சனின் மகளாகப் பார்வதி அவதரித்ததும் அவள் சிவனை மணந்ததை தட்சன் அவமானமாக கருதினான் என்பதும் எல்லோரும் அறிந்தது.
தட்சன் என்றால் ஆட்டுத்தலையன் எனப் பொருள். அதாவது, முன்யோசனை அற்றவன் அகங்காரமிகுந்தவன், அப்படியானவன் தன் 27 மகள்களைத் திருமணம் செய்த சந்திரன், தேவர்கள் விஷ்ணு பிரம்மன் என எல்லோரையும் யாகத்துக்கு அழைத்து அவர்களுக்கான அவிர்பாகத்தை கொடுக்கத் தயாரானான்.
ஆனால் தன்னை மீறி சிவனை மணந்த மகளையும் சிவனையும் அழைக்க அவன் அகங்காரம் இடம் கொடுக்கவில்லை, ஆணவமிக்க மனம் அப்படித்தான்.
இன்னும் மிக மிக மோசமாக சிவனை இழிவுப்படுத்த எருக்கை இலையில் யாகத்துக்கு ஒவ்வாத ஆட்டுப்பாலில் அவிர்பாகமிடுவேன் என்றெல்லாம் எக்காளம் செய்து கொண்டிருந்தான்.
அந்த யாகம் மிகப் பிரமாண்டமாக நடந்தது, கருடயாகம் எனும் சக்தியான யாகம் அது. தேவர்களெல்லாம் வான்வெளில் தங்கள் மனைவியரோடு சென்றார்கள், அதைக் கண்ட தாட்சாயணி தானும் அதில் கலந்து கொள்ள விரும்பினாள்.
பெண்களுக்கு எப்போதுமே பிறந்த இடத்தின்மேல் பாசம் அதிகம், அதே நேரம் தன் கணவனை விட்டுக்கொடுக்காத குணம் அதிகம். இவற்றின் இடையே போராடியவள் கடைசியில் செல்ல முடிவெடுத்தாள்.
அவள் செல்ல விரும்பியதில் காரணமும் இருந்தது, அந்தப் பெரும் யாகத்தால் தனக்கும் தன் கணவனுக்கும் நல்ல விஷயம் நடக்கும் என்றும், அந்தப் பலன் தங்களுக்கும் வேண்டும் என்பதை விரும்பினாள். அது தன் உரிமை அதை விடக்கூடாது என்றே முடிவெடுத்தாள்.
சிவனிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள், அவர் தட்சனின் குணம் அறிந்து தடுத்தார், அவள் பெரிதாக அதைக் கருதவில்லை.
யாகம் தொடங்கும் நாள் அன்று அவள் செல்லத் தயாரானாள், முதலில் மெதுவாக விஷயத்தை எடுத்துச் சொன்னார் சிவன், அவளோ அதைக் காதில் வாங்காமல் வாசல் வரை சென்றுவிட்டாள்.
ஆத்திரமடைந்த சிவபெருமான் அவளை மறித்துக் கொண்டு சிவந்த விழிகளுடன் கண்டார், தன் மனைவி அவமானப்படுவதை நல்ல கணவனால் ஏற்கமுடியாது என்பதால் அவர் கடமையால் தடுத்தார்.
அவள் வழிவிட சொன்னாள். அவர் கேட்கவில்லை, கெஞ்சினாள் அவர் அசரவில்லை, பலமுறை கெஞ்சியவள் கடைசியாய் உறுமிச் சொன்னாள் “என்னை விடமுடியுமா? முடியாதா?”
அவள் அப்படி ஆத்திரப்பட்டு சிவன் கண்டதே இல்லை, தனக்காகத் தவமிருந்தவள் தன்னில் பாதியாக இருப்பவள், பெரும் வசதியும் பராக்கிரமசாலியுமான தட்சனை விட்டு சுடுகாட்டில் இருக்கும் ஆண்டியான தன்னை தேடிவந்து பசுபோல் ஒட்டிக் கொண்டவளிடம் அப்படி ஒரு மாற்றத்தை அவர் அப்போதுதான் கண்டார்.
அவள் ஆங்காரரூபிணியாளாள், அப்படியே விஸ்வரூபமெடுத்தாள். என்னையா தடுத்தாய் இதோ நீ என்னைத் தாண்டி செல் பார்க்கலாம் என்றபடி சிரித்தார், மிக மிக ஆங்காரமாய்ச் சிரித்தாள்.
சிவனுக்கு என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை, அவர் சுதாரிப்பதற்குள் அவள் 10 வடிவமாய்ப் பிரிந்தாள்.
அவள் சிவனுக்கு நேர் எதிரில் வடதிசையில் காளியாக நின்றாள், ஆகாயத்தில் தாராவாக நின்றாள். தரையில் பைரவியாக நின்றாள்.
அப்படியே கிழக்கில் சின்னமஸ்தாவாக, தெற்கில் பகுளாமுகியாக, மேற்கில்புவனேஸ்வரியாக நின்றாள். சிவன் நாலுபக்கமும் ஓடி ஆகாயமும் பூமியும் அவளாய் நாலு திசையும் அவளாய் நிற்பதைக் கண்டு திகைத்தார் எனினும் அந்தத் திசைகோணங்களை நோக்கி ஓடினார்.
அங்கே தென்கிழக்கே தூமாவதியும், தென்மேற்கே திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் ஷடாசியுமாக நின்றாள்.
சிவன் ஓட வழியின்றி சிக்கிக் கொண்டார், அவள் ஆங்காரமாய்ச் சிரித்தாள் “என்னையா தடுத்தாய், இதோ நீ என்னை மீறிச் செல் பார்க்கலாம்” என இன்னும் இன்னும் சிரித்தாள்.
சிவனுக்கு எல்லாமே புரிந்துபோனது, இவள் ஏதோ திட்டத்தோடுதான் அங்குச் செல்ல விரும்புகின்றாள், இவள் மகா சக்தி கொண்டவள், மகா மகா வடிவம் கொண்டவள், இவளைத் தடுக்கும் சக்தி தனக்கில்லை என்பதால் அவள் விருப்பப்படி அவள் எதனை நடத்த விரும்புகின்றாளோ அதை நடத்தட்டும் என விட்டுவிட்டார்.
அதன்பின் நடந்ததெல்லாம் அன்னையின் திருவிளையாடலே.
இந்தப் பத்து வடிவங்களை அன்னை சிவனுக்கே முதலில் காட்டினாள், பின் அவை ரிஷிகளுக்கும் ஞானியர்க்கும் அன்னையால் தெரிவிக்கப்பட அவற்றை அவர்கள் தொகுத்துத் தந்தார்கள்.
இந்தத் தசமஹாவித்யை எனும் அன்னையின் வடிவங்களையும் அவர்களின் மகா சக்தியினையும் அவளை வழிபடும் முறையினையும் அவர்கள் ஒவ்வொருவரின் சூட்சும பலன்களையும் அவர்கள் அருளால் கிடைக்கும் பெரும் பலன்களையும் சொல்லித் தந்தார்கள்.
இந்த நவராத்திரி காலங்களில் இவர்கள் 10 பேரையும் காணலாம், மிக மிக முக்கியமான இந்துமத போதனை இது, நவராத்திரி காலத்தில் இது பெரும் சிறப்பும் வரமும் தருவது.
10 பேரும் பத்து வானம், பத்து கடல் என்பதால் முழுக்க காண்பது யாராலும் முடியாது. அதன் ஒரு துளியினை எடுத்து முடிந்தவரை பருகி அன்னையின் பெரும் அருளை அடைய முயற்சி செய்வோம்.
“காளீ தாரா வித்யா ஷாடசீ புவனேச்வரீ
பைரவீச் சின்னமஸ்தா ச வித்யா தூமாவதீ ததா
மாதங்கீ ஸித்தவித்யா ச கவிதா பகளாமுகி
ஏதா தச மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா “
என அந்தப் பத்து பேரையும் போற்றும் ஷியாமளா ரகசிய துதியுடன் தொடங்குவோம்.