தசமஹாவித்யா 02 : தாரா தேவி.
தசமஹாவித்யா 02 : தாரா தேவி.
இந்தத் தாரா தேவி என்பவள் சிவனுக்கு அன்னை பத்து தேவதையாகக் காட்சிக் கொடுத்த போது வானமெல்லாம் பரந்து நின்ற அந்தத் தாரா வடிவம்.
தாரா என்றால் தாரகை, அதாவது நட்சத்திரம் எனப் பொருள். வானமெல்லாம் நட்சத்திரமாக எங்கும் வியாபத்திருப்பது இவளே என்பதில் இருந்து இவளின் புராணம் தொடங்குகின்றது. அவள் வானமெல்லாம் வியாபித்து நிற்கும் மகா சக்தி என்பதைச் சொல்லி அவளின் மகத்துவத்தை வேதமும் புராணமும் போற்றுகின்றன.
அவள் காளியினைப் போலவே தோற்றம் கொண்டவள். ஆனால், சற்றுப் பெரிதாக வயிற்றினைக் கொண்டவள். அது இந்தப் பரந்த ஆகாயத்தை அதிலுள்ள எல்லாவற்றையும் அவள் தன்னுள் கொண்டிருக்கின்றாள் என்பதைக் காட்டுகின்றது.
இவள்தான் வானத்தின் எல்லா நட்சத்திரத்தின் சக்தியாகின்றாள், அவ்வகையில் 27 நட்சத்திரங்களின் ஆற்றலும் சக்தியும் அவளேதான். பூலோகத்தின் எல்லா மானுடர்க்கும், உயிர்க்கும் இந்த நட்சத்திர சம்பத்து உண்டு. மானுடரை இயக்கும் சக்தி இந்த நட்சத்திரங்களுக்கு உண்டு. அவ்வகையில் மானுடர்க்கு அறிவும் ஞானமும் தந்து இயக்குபவள் இவளே.
இவளின் காட்சி சிவன் ஆலகாலம் உண்ட இடத்திலிருந்து துவங்குகின்றது. சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு உயிர்களைக் காக்க முயன்றபோது அவரின் தொண்டையில் விஷம் இறங்காமல் இருக்க அன்னை பார்வதி பிடித்துக் கொண்டாலும் சிவன் மயங்கிச் சரிந்தார்.
அப்போது இந்தத் தாராதேவிதான் வந்து சிவனைக் குழந்தையாக்கி அவருக்குப் பால்கொடுத்து விஷயத்தினை முறித்து அவரை எழுப்பிவிட்டாள், சிவனுக்கே மறுஜென்மம் கொடுத்தவள் அவள்.
இது புராணகதையின் காட்சி என்றாலும் ஏதோ ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் ஆபத்தால் சூழப்பட்டதையும், அதனை அன்னையே வந்து தன் குழந்தைபோல் கருதி காத்து விடுவித்துக் கொடுத்ததையும் சூட்சுமமாகச் சொல்கின்றது. எளிதில் மானுடர்க்குப் புரியும் வகையில் இதனை அப்படித் தாய் உருவமாக அவளைச் சொல்லி வைத்தனர் இந்துக்கள்.
இந்தத் தாரை சிவனுக்கே தாயாக வந்தவள் என்பது இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றது. அதாவது, உலகைக் காக்க வேண்டும் என்ற வேகத்தில் அந்த விஷத்தை சிவன் எடுத்து உண்டாரே தவிர பின் விளைவுகள் பற்றி அவர் கருதவில்லை, அப்படியான சிவனைக் காத்து எல்லா ஞானத்தையும் ஞானப்பாலாக ஊட்டியவள் அவளே, சிவபிரான் அன்பானவர் அந்த அன்பில் ஞானமும் பெரும் தெளிவும் தந்தவள் அவளே.
கையில் குழந்தையுடன் வரும் பெண் தெய்வம் தாராவினைக் குறிப்பது, அது சிவனை அன்னை குழந்தையாக்கிய அருட்காட்சி.
இந்தத் தாரா தேவிதான் அறிவும் ஞானமும் தரும் தெய்வம், சரஸ்வதி எனும் அறிவுக்கும் கல்விக்குமான தெய்வம் இவளின் அம்சமன்றி வேறல்ல.
இதனாலே அவரும் நீர் தெய்வம் என்றே கருதப்படுகின்றார். நீர் என்பது தான் இருக்குமிடத்தைச் சுத்தமாக்கும், எல்லா உயிரையும் வளர்க்கும், அது அன்றி வாழ்வில்லை என்பதாலே இந்துக்களின் தெய்வம் பல நீர்மேல் தாமரையில் இருப்பதாக அம்மதம் போதித்தது, அதனால் இந்த அன்னையும் வெள்ளைத் தாமரையில்தான் நிற்கின்றாள்.
தாமரை என்றாலே ஞானமலர் என அது சொன்னது. அப்படி இந்த அன்னையினைத் தாமரை மலர், அல்லிமலர் என நீரில் பூக்கும் பூக்களைக் கொண்டே அர்ச்சனை செய்யலாம், பலன் உண்டு.
அவள் பரிசுத்தமானவள், எல்லோரையும் தாய்போல் தூய்மைபடுத்துபவள் என்பதாலே அவள் நீர்தெய்வம் எனச் சொல்லப்பட்டாள், எல்லா உயிர்களையும் பரிசுத்தமாக்குபவள் அவளே.
இவளை வாழைமரத்தின் அடியில் இருந்து வழிபடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது, வாழைமரம் நீர் நிறைந்த பகுதியில் வளர்வது, அதன் சில அம்சம் காரணமாக அது இவளின் விருட்சமானது, எல்லாப் பாகமும் பயன்படும் வாழைமரம் போல வம்சம் வம்சமாகத் தழைக்கும் வாழைபோல அன்னை பெரும் வரம் தந்து வாழவைப்பதாலும் அவள் அந்த வாழையின் அம்சமானாள்.
இந்துக்கள் மரபில் வாழை, திருமணம் முதல் வழிபாடுகள் வரை நீங்கா இடம் பிடித்திருப்பதில் மறைமுகமாக இந்தத் தாராவின் தாத்பரியமும் உண்டு.
மானிட உடலில் இவளே ஞானசக்தியின் ஆதாரமான மூலாதார சக்கரத்தின் தெய்வம். அங்கிருந்து சுவாதிஷ்டானத்தைத் துலக்குபவளும் அவளே, இதுதான் எல்லா ஞானத்துக்கும் அறிவுக்கும் உணர்வுக்கும் அடிப்படை ஆதாரம்.
அப்படியே இது மனோமய கோஷத்தின் துலக்கத்தைக் கொடுக்கும், பிராணமய கோஷமும் அதனால் சீராகும். அன்னை இந்த வரத்தைத் தருவாள்.
இவளை நான்கு உருவில் ஞானியர் சொல்கின்றார்கள். அவள் லஷ்மி, உக்ர தாரா, மகா உக்ர தாரா, நீல சரஸ்வதி எனப் போற்றபடுகின்றாள்.
இந்த நீல சரஸ்வதிதான் விநாயகப் பெருமானோடு அமர்ந்து ஞானம் தருபவள், இந்தக் காட்சி ஆழமாகக் காண வேண்டியது.
கணபதி வடிவங்களில் பிரசித்தியானவர் உச்சிஷ்ட கணபதி, அவர் தன் மடியில் நீல சரஸ்வதி எனும் தாராவினை மடியில் வைத்தபடி அமர்ந்திருப்பார்.
தாரா, தாரீ எனும் சொல்லுக்குப் படகு அதாவது கடந்து செல்ல உதவுபவள் எனப் பொருள், அப்படி இவளும் பிறவிக் கடலை கடந்து செல்லும் ஞானத்தைத் தருவாள்.
இந்தத் தேவியின் பெருமை ரிக் வேதத்தில் 99 ஆம் பகுதியில் கூறப்பட்டுள்ளது. அறிவு ஞானம் இவற்றின் இருப்பிடமும் ஊற்றும் அவளே. நீல சரஸ்வதி என இவளை வேதம் வணங்குகின்றது, உலகைப் படைக்குமுன் பிரம்மன் இவளை வணங்கித்தான் காரியங்களைத் தொடங்குவான்.
உக்ரதாரா, ஏக்ஜடா என்றெல்லாம் வணங்கப்படும் இவள்தான் வாக்குத்திறமை, கவித்திறமை எல்லாம் அள்ளி அள்ளி தருவாள், ஞானமும் யோகசித்தியும் தருவாள்.
காளிகாண்டம் எனும் நூலின் 12ஆம் அத்தியாயம் தாராவின் பெருமை அனைத்தையும் சொல்கின்றது.
இந்த நீல சரஸ்வதியினை வணங்குதல் இந்துக்கள், நவராத்திரி கொண்டாட்டத்தில் இவளுக்கும் முக்கிய இடம் உண்டு. சாரதா என்பதும் இவள் சாயலே.
இந்த வழிபாடு நீல சரஸ்வதி வழிபாடு பாரத கண்டத்தின் எல்லா இடங்களிலும் அன்று இருந்தது, இந்துக்களின் சாஸ்திர தலைமைபீடமாக இருந்த காஷ்மீரின் சாரதா பீடத்திலும் இருந்தது.
இந்த நீல சரஸ்வதிக்குப் பெரும் ஆலயம் இருந்த ஆற்றின் பெயர் தான் “நீலம்”, இன்றும் அது நீலம் நதி என ஓடிக் கொண்டிருக்கின்றது.
காஷ்மீரில் அன்று பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் முதல் மூன்றுநாள் தாராவின் மந்திரம் சொல்லி தேன் தொட்டுவைக்கும் சம்பிரதாயம் இருந்தது.
இதே சம்பிரதாயம் இந்துக்கள் மரபில் உண்டு, பிறந்த குழந்தைக்கு தாரா மந்திரம் சொல்லித்தான் தேன் தொட்டு வைப்பார்கள், பின்னாளில் அது காரணம் மறந்த சம்பிரதாயமாயிற்று.
ஆக, சாரதா நவராத்திரி எனும் இந்த நவராத்திரியே இந்தத் தாராவின் முக்கிய வழிபாட்டில் இருந்துதான் துவங்குகின்றது.
இந்த அன்னையினை வழிபட்டு பல ரிஷிகள் ஞானியர் பெரும் இடம் பெற்றனர் என்றாலும் அவளின் வரம்முழுக்கப் பெற்றவர் அசோக்கிய மகரிஷி, அவர்தான் மிக மிக சிரமப்பட்டு தாரா வழிபாட்டினை மக்களுக்குத் தந்தவர்.
அசோக்கிய மகரிஷிதான் தாரா வழிபாட்டில் கரை கண்டவர், பல வழிகளில் தாராவின் அருளை அடைய முயன்று தோற்ற வசிஷ்ட மகரிஷிக்குத் தாராவின் வழிபாட்டைப் போதித்தவர் அவரே.
அசோக்கிய மகரிஷியின் வழிகாட்டலில்தான் வசிஷ்டர் அன்னையின் அருளை அடைந்தார். இதனாலே அவர் எல்லாக் கலைகளிலும் ஞானத்திலும் தேர்ந்து பிரம்மரிஷி எனும் மகத்தான இடத்தை அடைந்தார்.
இந்த அன்னையின் வழிபாடு தேசம் முழுக்க இருந்தது, நீர் நதிகரைகளில் அவள் வழிபடப்பட்டாள். அதில் காரணமும் இருந்தது. நீர்தான் விளைச்சலைத் தரும், விளைச்சல்தான் நிறைவினைத் தரும், நிறைவில்தான் அடுத்தக்கட்ட ஞானத்தை மனம் தேடும்.
அப்படி இந்தத் தாரையின் வழிபாடுகள் நிறைந்த இடமாக இமாலயம் இருந்தது. அங்கே காஷ்மீரம் போலவே திபெத்திலும் இவளுக்குப் பெரும் அடையாளம் இருந்தது, இன்று பௌத்தம் சீனாவினை, திபெத்தை ஆக்கிரமித்தாலும் காஷ்மீரம் வங்கம் இமாலய தொடர்ச்சியாக அவள் வழிபாடு உண்டு.
பௌத்தர்கள் இவளை வணங்குகின்றார்கள், புத்தனுக்கு ஞானம் கொடுத்தவள் இவளே என அவர்கள் வழிபாட்டில் அவளுக்கும் இடம் உண்டு. பௌத்தம் இந்துமதத்தில் இருந்தே உருவானது என்பதற்கு தாரா வழிபாடு பெரிய சாட்சி.
போதிசத்துவர் எனும் பௌத்த ஞானியின் வழிபாடு தாரா வழிபாடாகவே இருந்தது, இன்றும் இந்த மரபு பௌத்தர்களிடம் உண்டு.
ஒருவகையில் அசோக்கிய மகரிஷி போதித்தபடிதான் இன்றும் திபெத்திய பௌத்தர்களின் வாழ்வு உண்டு, அன்னைக்கான பானம் என அவர்தான் கசப்பான தேயிலை, பசுந்தேயிலையினை, கசப்பான பானமாக உணர்ந்து படைக்கத் தொடங்கினார், இன்றும் திபெத்திய சீன பௌத்தமரபில் அது தவிர்க்கமுடியா இடமாயிற்று
அந்த ஹிமாசலமெங்கும் அன்னைக்குப் பல ஆலயங்கள் இருந்தன, அதன் தொடர்ச்ச்யாக அசாமின் காமாக்யா ஆலயம் அருகே தாராதேவிக்கும் ஆலயம் உண்டு, உக்ரதாரா தலமாக அது அறியப்படுகின்றது.
இன்றும் வங்கத்தில் காஷ்மீரின் சாராதா பீடம் போல் தாராபீடம் என்பது தாராபீட் என ஒரு பிரசித்தியான ஆலயம் உண்டு, அது சக்தி பீடங்களில் ஒன்று, அன்னை சதி தேவியாக வந்து துண்டாடப்பட்டபோது அவளின் நெற்றிக்கண் விழுந்த இடமே தாரா பீடம்.
நெற்றிக்கண் என்பது ஞானத்தின் அடையாளம். ஞானக்கண் எனும் அகக்கண்ணைத் திறப்பது, இதனாலே வங்கம் காளிபூமி எனும் பெரும் அடையாளத்தைப் பெற்றது, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சுவாமி யோகானந்த பரமஹம்சர் என எல்லோரும் வழிபட்டது தாராவின் அம்சமான காளியே.
இந்தத் தாரா நவகிரகங்களில் குருவின் அம்சமாக அறியப்படுகின்றாள், குரு பகவான் அறிவுக்கும் ஞானத்துக்கும் அதிபதி அவரிடமிருந்தே எல்லா அருளும் வரும். குருவருள் இன்றி திருவருள் இல்லை என்பது எல்லோரும் அறிந்தது.
அந்தக் குருவின் ஞானமாக இருப்பவள் அவளே, அவளின் அறிவும் ஞானமுமே குருபகவான் மூலம் மக்களுக்கு ஞானமாகக் கிடைக்கின்றது.
இராம அவதாரத்தில் அவள் அம்சம் உண்டு, அவளுக்கான திதி இராமபிரானைப் போலவே நவமி, இராமபிரானுக்கு எல்லா அறிவும் ஞானமும் கொடுத்து மேற்கொண்டு வசிஷ்டர் எனும் தன் சீடன் மூலம் பெரும் விஷயமெல்லாம் போதித்தவளும் அவளே.
அவளின் அருளாலே அவள் அம்சமாக இராமன் நின்றான், அவள் இயல்பிலே நின்றான்.
அவள் தோற்றத்தைக் கவனித்தால் அது புரியும், தாரா தேவிக்கு நான்கு கைகள். ஒரு கையில் வாள், இன்னொன்றில் தாமரைப் பூ, மூன்றாவதில் கத்தரி மற்றும் நான்காவதில் கமண்டலம் எனக் காட்சி தருவாள்.
அதாவது, அதர்மத்தை ஒழிக்க வாள், ஞானத்தை தர தாமரை, பந்த பாசங்களை வெட்டி கர்மத்தைச் செய்ய வைராக்கியம், முக்தியினை நிறைவாய் அடைய கமண்டலம் என அவள் தன் தோற்றத்திலே தன்னை வெளிப்படுத்தினாள்.
இந்த நான்கு விஷயங்களுக்கும் பெரும் உதாரணமாக இருந்தவர் இராமபிரான், அவர் அப்படியே அவள் அருளில் எல்லாக் கலைகளிலும் தேர்ந்திருந்தார், மிகச் சிறந்த நீதியினை வழங்கினார், எந்தப் பந்த பாசத்திலும் ஒட்டாமல் கடமையினைச் செய்தார், அப்படியே எல்லா மாந்தர்க்கும் உதாரண புருஷனாக இன்றுவரை திகழ்கின்றார்.
ஆட்சி என்றாலும், அண்ணன் என்றாலும், அரசன் என்றாலும் வீரன் என்றாலும், தர்மம் என்றாலும் இராமனே கண்முன் வருவார். அந்த அளவு அவர் அன்னையின் அருளால் நின்றிருந்தார்.
அதனாலே இன்றுவரை யாரெல்லாம் இராமபிரானை மனமார வணங்குவார்களோ அவர்களெல்லாம் கவிபாடுதல் முதல் பல விஷயங்களில் பெரும் தேர்ச்சிப்பெற்றிருப்பார்கள். ஏதோ ஒரு அருளில் நிறைந்திருப்பார்கள்.
அது வால்மீகி, கம்பன், துளசிதாசர், ராம் ராம் என போதித்த ராமதாசர், திருவையாற்றின் தியாகராஜர் என எல்லோரும் அப்படியே. தாராவின் அருளை நிரம்பப்ஒ பெற்றிருந்தார்கள். இராமனை வணங்குவோர்க்கெல்லாம் அன்னையின் அருள் தானாக வந்து பெருகும், அது அக்காலம் முதல் இக்கால மோடி வரை சாட்சிப் பல கொண்டது.
இப்படியான பெரும் தாத்பரியம் அற்புதமான வரலாற்றைக் கொண்டவள் தாரா, எல்லா ஞானமும் அறிவும் அவளிடமிருந்தே வருகின்றன.
அவள் ஆகாயத்தைத் திசையாகக் கொண்டவள், அவள் விண்மீன்களைப் போலவே வெண்மை நிறம் கொண்டவள், எல்லா இயக்கமும் அவற்றின் உணர்வுக்கும் அவளே மூலம்.
தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணீரூபா, ஸத்வரூபா, மஹா ஸாத்வீ, ஸர்வ ஸஜ்ஜன பாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹா மாயா, கோர ரூபா, பயானகா, கால ரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸ காரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞான ப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்த வஸ்த்ரா, ரக்தமாலா ப்ரசோபிதா, சித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என்னும் இந்த முப்பது திருநாமங்களும் அவளுக்கு உண்டு.
அன்னையின் பெருமையினை “லலிதோ பாக்யானம்” , “ம்ந்திர மகோதரி”, “காளி கண்டம்”, “தாரா கல்பம்”, “ஸ்ரீவித்யா நர்வ தந்த்ரம்”, “தோடர தந்திரம்”, “ருத்ர யாமளம்”, “பைரவி தந்த்ரம்” எனப் பல நூல்கள் சொல்கின்றன.
இராமாயணமும் வேதங்களும் வசிஷ்ட முனியின், அசோகமுனியின் பல இடங்களும் சூசகமாக அன்னையின் பெரும் அருளைச் சொல்கின்றன.
அன்னையின் வழிபாடு ஒரு காலத்தில் தேசமெல்லாம் இருந்தது, பின்னாளில் அது பல குழப்பங்களால் மறைந்து போனாலும் இன்றும் கையில் குழந்தையுடன் நிற்கும் அம்மன் அவளேதான்.
திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தது முதல் காளமேகத்தை, கம்பனை உருவாக்கியது வரை எல்லாம் அவளே.
தமிழகத்தில் கைக்குழந்தையுடன் நிற்கும் அம்மன் மாரியம்மன், பேச்சியம்மன் என இன்று மாறிவிட்டாலும் அவற்றின் மூலம் இந்தத் தாரா தேவியே.
விநாயகப் பெருமான் இந்தத் தாராவுடன் அதாவது நீல சரஸ்வதி கோலத்துடன் நின்று அருள்பாலிப்பதும், அவர் அடியார்களெல்லாம் ஒளவையார் போல அவள் ஞானத்தை பெற்றுக்கொண்டார் என்பதன்றி வேறல்ல.
அவ்வகையில் ஒளவையார் ஆதிக்கம் செலுத்தும் ஆலயமெல்லாம் அம்மனாக நிற்பது இந்தத் தாரா எனும் மகா சக்தியே.
இந்தியத் தமிழகம் தென்முனையில் இந்தத் தாராவே இசக்கி அம்மனாக கையில் குழந்தையுடன் நிற்கின்றாள், மலையாளத்தில் அவ்வடிவில் நிற்கும் தேவியும் அவளே.
இயக்கும் அம்மன் எனும் அழகான வார்த்தையே பின்னாளில் இசக்கி எனத் திரிந்துபோனது, அவ்வகையில் தாராதேவிதான் அந்த அம்மனாக இன்றும் அருள்பாலிக்கின்றாள், என்றும் பாலிப்பாள்.
இந்த நாள் அவளுக்கானது, அஷ்டமி திதி கண்ணனைப் போல் காளிக்கு உகந்தது என்பது போல நவமி திதி அன்னைக்கு உகந்தது மாதமாதம் அந்த வழிபாடு உண்டெனினும் இந்த நவராத்திரியின் இரண்டாம் நாள் முழுக்க அவளுக்கானது.
இன்று அவளுக்கான தாரா அஷ்டக மாலை முதல் எல்லா மந்திரங்களும் ஸ்லோகங்களும் சொல்லிப் பாடலாம், அவளுக்கான காயத்திரி மந்திரம் சொல்லி வழிபடலாம்.
“ஓம் தாராயை வித்மஹே உக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”
என்ற அவளின் காயத்ரி மந்திரம் மிக முக்கியமானது. அதையெல்லாம் முடியாவிட்டால் கூட “ஓம் தாராயை நம” என்ற மந்திரத்தை 108 முறை சொன்னால் பலன் உண்டு.
அவளை வாழைமரத்தடியில் வணங்கினால் விசேஷம் என்பதால் இன்றைய நாளில் வாழை சம்பந்தமான ஒன்று அவளுக்கு முன் இருக்கட்டும், நீரில் மலர்ந்த மலர்கள் ஒன்றும் இருக்கட்டும். அது மகத்தானது.
இந்த இரவில் வானத்தை நோக்கியபடி அந்த நட்சத்திரமாக ஆகாயமெங்கும் பரந்துகிடக்கும் அந்த மகா சக்தியினை நோக்கி வணங்குங்கள், தீபமேற்றி துதிச் செய்து வணங்குங்கள்.
அந்த நட்சத்திர கூட்டத்தாலே நீங்கள் இயக்கபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள், உங்கள் வாழ்வு உங்கள் எண்ணப்படி, எண்ண அலைகள்படி இயக்கப்படும் ஒன்று, அந்த எண்ணங்களெல்லாம் அவளிடமிருந்தே வருபவை, அவளை நோக்கி இன்று மனமார வேண்டுங்கள். நிச்சயம் அவள் உங்களுக்கு எல்லா நல்லனவற்றையும் வரங்களையும் எண்ண அலைகளாக அனுப்பிவைப்பாள்.
இந்து முன்னோர்கள் எப்படி இந்தப் பிரஞ்சத்தின் நட்சத்திர மண்டலத்தில் இருந்து எல்லா வரமும் வளமும் பெற்றுக் கொண்டார்களோ, அப்படி நீங்களும் பெற்றுக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு, அவள் தன் மாபெரும் வரத்தைப் பொழிந்து கொண்டே இருக்கின்றாள். அதை உங்கள் பாத்திரத்தில் சேமிக்க வேண்டிய நாள் இது, அதை முயற்சிப்போர்க்கு எல்லா நல்லனவும் ஐஸ்வர்யமும் ஞானமும் அறிவும் அவளால் அருளப்படும். இது சத்தியம்.